Search This Blog

Friday, February 23, 2018

கமல், கட்சி, கோட்பாடு, கொள்கை…


Kumaresan Asak

கருத்துகளில் மாறுபடலாம். ஆனால், காட்சிகளை மறுப்பதற்கில்லை. மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த கூட்டத்தினர், அதில் கணிசமாகத் தெரிந்த இளைஞர்கள், பெண்கள் என்ற காட்சிகள் மறைக்க முடியாதவை. அவர்களின் முகங்களில் வெளிப்பட்ட மாற்றத்துக்கான எதிர்பார்ப்பு, அதன் பின்னால் இருக்கும் நீண்ட காலக் காத்திருப்பு என்ற காட்சிகளிலும் கேள்விக்கு ஏதுமில்லை. ஆம், அய்யம் இன்றிச் சொல்லத்தக்க வகையில் திட்டவட்டமாக மய்யம் உருக்கொண்டுவிட்டது. பெயரில் மட்டுமல்லாமல், தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா, புதுவை ஆகிய தென் மாநிலங்களை அடையாளப்படுத்தும் ஆறு கைகள், அவற்றின் நடுவில் நம்பிக்கை நட்சத்திரமாக மக்கள் என்ற விளக்கத்துடனான கொடி அமைப்பிலும் ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கமல்ஹாசன்.
அகில இந்தியப் பொறுப்பாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், தனது செயற்களம் இந்த ஆறு மாநிலங்கள்தான் எனக் காட்டியிருப்பதோடு, அதன் மூலம் திராவிடம் என்ற அடையாளத்தையும் பதிவு செய்திருக்கிறார். திராவிட இயக்கத்திலிருந்து புறப்பட்ட கட்சிகளேகூடப் பெயரில் அந்தச் சொல் இருந்தாலும், நடைமுறையில் தமிழக எல்லைக்குள்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்துக்கு, திராவிடம் என்ற பெயரைப் பயன்படுத்தாமலே இப்படியொரு அடையாளத்தைச் சூட்டியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. நடைமுறையில் இதுவும் தமிழகத்துக்குள் மட்டுமே இயங்கப்போகிறதா அல்லது இதர ஐந்து மாநிலங்களிலும் விரிவாகச் செயல்படப்போகிறதா என்பது கவனிக்கப்பட வேண்டியது.
இதே தமிழகத்தில், இதே மதுரைக்கு அருகில், தூத்துக்குடி நகரில் பிப்ரவரி 17 முதல் 20 வரையில் நடைபெற்ற, மதுரைக் கூட்டத்தில் கமல் பெருமிதத்துடன் தனக்குக் காணொளிப் பதிவு மூலம் வாழ்த்துத் தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக உள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 22ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டுத் தொடக்க விழா, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், நிறைவு நாளில் காவல் துறையின் மூர்க்கத் தாக்குதலை எதிர்கொண்ட செம்படைப் பேரணி, பொதுக்கூட்டத்தில் புதிய செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உரைகள்... இவற்றுக்கு ஊடக நிறுவனங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தன? கமல் ராமேஸ்வரம் வந்தது முதல் மதுரை மேடையில் ஏறியது வரையில் ஒவ்வொரு நொடி நகர்வையும் செய்தியாகச் சொன்னவர்கள், முத்துநகர் மாநாட்டுச் செய்திகளை ஒரு தொகுப்பாக மட்டும் வெளியிட்டு முடித்துக்கொண்டார்கள். இதுபற்றி ஆதங்கத்தோடு பேசிய ஒரு தோழரிடம், “இந்த ஊடக அரசியல் புதிய அனுபவமா என்ன? அதை விமர்சித்துக்கொண்டே, அவர்களால் புறக்கணிக்க முடியாத, குறைத்துக்காட்ட முடியாத பெரும் மக்கள் சக்தியாக இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதில் செயல்முனைப்பைக் கூர்மைப்படுத்துங்கள்” என்று கூறினேன்.
இரு மேடைகள், இரு பண்பாடுகள்
------------------------------------------------------
இக்கட்டுரை அந்த ஊடகப் பாகுபாடு பற்றியதல்ல; தூத்துக்குடி மாநாட்டின் உள்ளரங்கம், தியாகிகள் நினைவுச் சின்னம், பொதுக்கூட்ட மேடைப் பின்னணி… இவை ஒவ்வொன்றிலும் தோழர்களின் வியர்வை இருந்தது. மக்களுக்காகப் போராடுவதில் பங்கேற்கிற உணர்வு கலந்த கலைப் படைப்பாக்கம் இருந்தது. சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பாக மாநாட்டு நிகழ்வுகள் தரப்பட்டதிலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள தோழர்களின் முயற்சி இருந்தது.
ஆனால், மதுரைக் கூட்டத்தின் மைதான வளாகம், பொதுக்கூட்ட மேடையின் ஒளிப்பட நுட்பங்கள், செய்தியாளர் சந்திப்புக்கான அரங்கம் என ஒவ்வொன்றிலும் பெரும் தனியார் நிறுவனத்தின் வடிவமைப்பு, அவர்களது தொழில்நுட்பத் திறன் ஆகியவைதான் முன்னால் நின்றன. கமல் பேசத் தொடங்கியதும் அவரது கருத்துகள்தான் முன்னுக்கு வந்தன என்பது உண்மையே. ஆனால், வரிக்கு வரி “நீங்கள்... நீங்கள்” என்று தொண்டர்களைக் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பமும் கலைத்திறனும் கலந்த மேடையாக்கத்தில் அவர்களை எந்த அளவுக்கு ஈடுபடுத்தினார்? தொடக்கத்திலேயே அவர்களை வெறும் பார்வையாளர்களாக மட்டும் உட்கார வைத்துவிட்டு, கார்ப்பரேட் நிறுவனத்திடம் மேடைப் பொறுப்பை ஒப்படைத்ததன் தொடர்ச்சியாகத்தான் இனி மய்யத்தின் நிகழ்ச்சி நிரல்களும், கொள்கை முடிவுகளும் அமையுமா? காலம் அதையும் கவனத்தில் கொள்ளும்.
பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம். அது தொடர்பான சிந்தனை ஏதாவது வெளிப்படுகிறதா என்று கவனித்தால்... ஹூகும். கொடியில் அடையாளப்படுத்தப்படும் ஆறு மாநிலங்களின் மொழிகள் மீது மத்திய அரசால் தொடுக்கப்படும் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் மய்யத்தின் பார்வை என்ன என்று சொல்வதற்கு, கட்சியைத் தொடங்கிடத் தேர்ந்தெடுத்த இந்தத் தேதி எவ்வளவு பொருத்தமானது. மேடையில் கமல் பேசியது போல, அவரது “நேரமின்மை” காரணமாக விடுபட்டவற்றில் இதுவும் ஒன்று என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். மேலும், சொல்லாதது எது என்று தேடுவதை விட சொன்னது எப்படி என பார்ப்பதே முக்கியம்.
‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயர் ஒரு கட்சி அல்லது இயக்கத்தின் பெயர் போல இல்லாமல் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் (என்ஜிஓ) பெயர் போல இருக்கிறதே என்று சமூக ஊடகங்களில் சிலர் கேட்டிருக்கிறார்கள். கழகம், கட்சி என்று பெயரிலேயே அமைப்பை அடையாளப்படுத்திவந்துள்ள வழக்கத்திலிருந்தே இக்கேள்வி எழுகிறது. அடிப்படையில் கட்சி ஈடுபாடு என்பதே ஒரு தன்னார்வத் தொண்டுதான். மற்ற கட்சிகளைப் போலவே புதிய கட்சியும் இருக்க வேண்டிய தேவையில்லை என்பதால், அவற்றுக்கு மாற்று என்று சொல்லிக்கொண்டுதான் புதிய கட்சி புறப்படுகிறது என்பதால், பெயரிலும் அந்த மாறுபாடு வெளிப்படுவதில் தவறில்லை. மக்கள் பக்குவமும், முன்போலப் பெயரிலேயே கட்சி என்ற சொல் இருந்தாக வேண்டும் என்ற நிலையைக் கடந்து வந்துவிட்டது. பெயரில் தெரிகிற மாற்றம் கட்சியின் செயல்களில் தெரிகிறதா என்றே மக்கள் உற்று நோக்குவார்கள்.
இடதுக்கும் வலதுக்கும் நடுவில்?
----------------------------------------------------
ஆனால், கட்சியின் சித்தாந்தம் (இஸம்) எப்படிப்பட்டதாக இருக்கும்? இடதா, வலதா என்று கேட்கிறார்கள் என்று தெரிவித்த கமல், “அதனால்தான் பெயரிலேயே மய்யம் என்று வைத்திருக்கிறோம்” என்று கூறினார். “கொள்கை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள், செயலில் இறங்குங்கள்” என்று ஆந்திர முதல்வரும், தனது முன்னுதாரணங்களில் ஒருவருமான சந்திரபாபு நாயுடு சொன்னதாகவும் கூறினார். கொள்கை பற்றிக் கவலைப்படாமல் செயல்படச் சொல்வது நல்ல முன்னுதாரணம்தானா? கேரள முதல்வர் அப்படிக் கொள்கையின்றிச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்தானா?
கட்சியின் தொடக்க விழா சிறப்பு விருந்தினர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால். டெல்லியில் பாஜக, காங்கிரஸ் இரண்டையும் வீழ்த்திய தமது ஆம் ஆத்மி கட்சியின் சாதனையை, தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டையும் வீழ்த்துவதன் மூலம் மக்கள் நீதி மய்யம் பின்னுக்குத் தள்ள வேண்டும் என்று அவர் வாழ்த்தினார். அப்படியான ஒரு மாற்றுக்கு இங்கே உண்மையாக உழைத்துக்கொண்டிருக்கிற இயக்கங்களோடு கமல் கட்சி எப்படிப்பட்ட உறவுகளை வளர்த்துக்கொள்ளப் போகிறது என்ற கேள்வி ஒருபுறம் எழுகிறது. அதை விடவும், ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டபோது, இதே போன்ற கேள்வி கேட்கப்பட்டதும், அதற்கு அவர்கள் அளித்த பதிலும் இங்கே நினைவுகூரப்பட வேண்டியவை.
அக்கட்சியின் இணையதளத்தில், “கட்சியின் சித்தாந்தம் பற்றிக் கேட்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி விஷயங்களில் வலதுசாரி, மக்கள் பிரச்னைகளில் இடதுசாரி என்ற நிலைப்பாடு மேற்கொள்ளப்படும். முன்னுக்கு வருகிற பிரச்னையின் தன்மையைப் பொறுத்து அதை எப்படிக் கையாள்வது என்ற அணுகுமுறை வகுக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களின் பிரச்னைகளே அடிப்படையில் வலதுசாரிக் கொள்கைகளால் ஏற்படுவதுதானே, மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவது என்பதே அடிப்படையில் வலதுசாரிக் கொள்கைகளை எதிர்ப்பதுதானே?
அப்படியான கொள்கைத் தெளிவற்ற நிலையைத்தான் மையமாக இருப்பது என்கிறாரா கமல்? நட்சத்திரமாக இருந்து வந்த தன்னை இனி மக்கள் தங்கள் குடும்பங்களில் ஒரு விளக்காக வைத்துக் கொள்ளட்டும் என்று பேசிய கமல், தனது கட்சியின் இந்தக் கொள்கை இருட்டு மீது கொஞ்சம் வெளிச்சம் பாய்ச்சுவது நல்லது. கட்சியின் உயர்மட்டக் குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல தரப்பினரும் அதில் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் இது பற்றிப் பேசி, எரியாமலிருக்கிற விளக்குத் திரியில் சிறு நெருப்பையேனும் பற்ற வைப்பார்களா அல்லது கமல் பேசுவதற்கு விளக்கமளிக்கும் தொண்டில் மட்டும் ஈடுபடுவார்களா?
‘பிக் பாஸ்’ விமர்சனங்களைத் தொடர்ந்தும், ரஜினிகாந்த் தனது அரசியல் நுழைவு பற்றி அறிவித்ததைத் தொடர்ந்தும், அரசியல் கருத்துகளை முன்னைக் காட்டிலும் திட்டவட்டமாகக் கூறத் தொடங்கினார் கமல். அப்போது, நரேந்திர மோடி அரசின் பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகளை வரவேற்று ட்விட்டினார். ஆளுக்காள் பிடிபிடியெனப் பிடித்தார்கள். பின்னர் அவரே, தமது முந்தைய கருத்துகள் தவறு என வெளிப்படையாகவே அறிவித்தார். எந்தப் பிரச்னையிலும் கருத்தே சொல்லாத அரசியலை விடவும், ஏதோவொரு கருத்தைச் சொல்லிவிட்டுப் பின்னர் அதைத் திருத்திக்கொள்கிற அரசியல் நல்லதுதானே?
அதே வேளையில் பேட்டிகளிலும் பேச்சிலும் தமிழக அரசியல் நிலவரம் பற்றிய விமர்சனத்தைத்தான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். மத்திய பாஜக அரசு மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டுள்ள கார்ப்பரேட் சேவை நடவடிக்கைகள், அதற்குக் கவசமாகப் பயன்படுத்துகிற மதவெறி சர்ச்சைகள் பற்றியெல்லாம் அவரிடமிருந்து குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் வெளிப்படவில்லை. கட்சியின் உயர்மட்டக் குழு முறைப்படி உட்கார்ந்து நடத்தக்கூடிய விவாதத்துக்குப் பிறகாவது இந்த அரசியல் நிலைப்பாடுகளும் மக்கள் முன்பாக வைக்கப்படுமா?
அடிப்படை பலம் எது?
----------------------------------
நாத்திகவாதியான தன் பின்னால் திரண்டுள்ளவர்கள் பல்வேறு இறை நம்பிக்கை உள்ளவர்கள்தான் என்று அங்கீகரித்துப் பேசிய கமல், தனக்குப் பிறகு அவர்கள்தான் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லப் போகிறார்கள் என்றும் அறிவித்த கமல், அவர்களைக் கொள்கை இருட்டில் வைத்திருக்கக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டாக வேண்டும். தான் என்ன பேசினாலும், தனது கட்சியில் யார் என்ன பேசினாலும் அது கட்சியின் அடிப்படைக் கொள்கை பலத்திலிருந்தே வருகிறது என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும். உயர்மட்டக் குழுவைக் கூட்டி, தெளிவான கொள்கை அறிக்கையை உருவாக்கி வெளியிட்டாக வேண்டும். இதில் பினராயி விஜயனைப் பின்பற்றப்போகிறாரா அல்லது சந்திரபாபு நாயுடு அல்லது கேஜ்ரிவாலைப் படியெடுக்கப் போகிறாரா?
மதுரைக் கூட்டத்தில் கொள்கை என எதுவுமே சொல்லாமல் விட்டுவிட்டதாகக் கூற முடியாது. எல்லோருக்கும் தரமான சிறந்த கல்வி கிடைக்கச் செய்தல் ஒரு கொள்கை என்று அறிவித்தார். இதில் வேறு எந்தக் கட்சியாவது மாறுபடுகிறதா? எந்தக் கட்சியாவது தரமற்ற, சிறப்பற்ற, எல்லோருக்கும் சமமாகக் கிடைக்காத கல்விதான் தனது கொள்கை என்று கூறியிருக்கிறதா? இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பேசுவது கல்விக் கொள்கையாகுமா? பொதுப்பள்ளி, அருகமைப் பள்ளி, ஏற்றத்தாழ்வற்ற பாடத்திட்டம், சந்தை சக்திகளின் பிடியிலிருந்து கல்வி மீட்பு, தாய்மொழி வழிக் கல்வி, உயர் கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழி வழியில் பாடங்கள், கல்விச் சாலைகளில் சமூகநீதிக்கான இட ஒதுக்கீட்டு நியாயங்களைத் தகுதி என்ற போர்வையில் மறுக்கும் நவீனப்படுத்தப்பட்ட மநுவாதம்... இவற்றைப் பற்றியெல்லாம் பகுத்தறிவாளர் கமல் என்ன நிலைப்பாடு மேற்கொள்ளப்போகிறார்?
அரசியலில் சாதி, மத விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று மேடையில் இன்னொரு கொள்கை அறிவிப்பையும் வெளியிட்டார். அவையிலிருந்து எழுந்த வலுத்த கரவொலி, சாதியவாத அரசியலுக்கும் மதவாத அரசியலுக்கும் எதிரான தமிழக மக்கள் மனநிலையின் எதிரொலிதான். இன்றைய இந்தியச் சமூகக் களத்தில் திட்டமிட்ட முறையில் மதவெறி அரசியல் எப்படி கோரத் தாண்டவமாடுகிறது என்ற கூர்மையான விமர்சனத்தை முன்வைப்பதிலிருந்தே மதவாத, சாதிய அரசியல் விளையாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி என்ற கொள்கை தெளிவுபெறும். தமிழகத்திலும் இதர ஐந்து மாநிலங்களிலும் மதவாத, சாதிய அரசியல் சக்திகள் ஊடுறுவ முயல்வது பற்றிய எச்சரிக்கை வெளிப்படையான அறைகூவலாக ஒலித்தால்தான் இந்தக் கொள்கை நம்பகமானதாக இருக்கும். சாதி ஆணவக்கொலைகளை வன்மையாக எதிர்ப்பது, மதப் பிரச்னைகளைக் கிளறிவிட்டு மக்களைக் கூறுபோட முயல்வதை ஆவேசத்தோடு சாடுவது, மக்கள் ஒற்றுமைக்காகக் களம் காணும் முற்போக்கு சக்திகளோடு கரம் கோப்பது என்று விரிவடைந்த செயல்பாட்டில்தான் இந்தக் கொள்கை பொலிவுபெறும்.
கட்சியை அறிவிப்பதில் இத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொண்ட நிதானம், கட்சியின் கொள்கைகளை வகுப்பதில் இருக்கக் கூடாது. மக்களைத் தாக்குகிற அத்தனை பிரச்னைகளையும் அணுகுவதற்கான அடிப்படைக் கொள்கைத் தளம் தேவை. மய்யம் என்ற பெயரில் அந்தத் தளத்திலிருந்து விலகி நிற்பது, கட்சியின் பயணத்தில் பெரும் பள்ளமாகக் குறுக்கிடும். அதில் விழாமல் இருக்க இப்போதே மரபணு நீக்கப்படாத சித்தாந்த விதையை ஊன்றட்டும். கொள்கை உரத்தைச் சேர்க்கட்டும். ஆன்மிக அரசியல் என்ற விற்பனை முத்திரையோடு இன்னொருவர் கிளம்பவிருப்பதால், தனது பயணத்தில் நேச சக்திகள் யார் என்பது உள்ளிட்ட கோட்பாட்டுச் சுவரை மக்கள் நீதி மய்யம் வலுவாக எழுப்பட்டும்.
மதுரை கூட்டத்தில் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாக ஒளிர்ந்த அந்த முகங்களுக்குச் செய்யப்படும் நியாயம் இதுவாகத்தான் இருக்க முடியும்.


Wednesday, February 21, 2018

இளையராஜாவும் மலேசியா வாசுதேவனும். ...


இளையராஜா "அன்னக்கிளி" படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற நண்பரான மலேசியா வசுதேவனுக்கு தனது "16 வயதினிலே" படத்தில் ஒரு வாய்ப்புத்தர அவரால் முடிந்தது. அதுவும்கூட தற்செயலாக நடந்ததுதான் என்றாலும் பொருத்தமாக நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடுவதாக இருந்த பாடலை அவருக்குத் தொண்டை சரியில்லாமல் போகவே மலேசியா வாசுதேவனைப் பாடவைத்தார் இளையராஜா. "ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு" என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் முட்டி எதிரொலித்தது அந்தப் பாடல். மலேசியா வாசுதேவன் என்றொரு பாடகரை அழுத்தமாகத் தமிழ் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்ட பாடல் அதுதான். அந்தப் பாடல் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது என்றே சொல்லவேண்டும். முன்னெப்போதும் கேட்டிராத முற்றிலும் ஒரு புதிய அழுத்தமான குரலை அவர்கள் கேட்டார்கள். தங்களது கிராமிய இசை வடிவிலேயே கேட்டார்கள். தமிழ் ரசிகர்களின் மனங்களில் இந்தப் பாடல் வாயிலாக அழுத்தமாக அமர்ந்துகொண்டார் மலேசியா வாசுதேவன்.
நாற்பத்தாண்டுகள் ஓடிவிட்டன. மலேசியா வாசுதேவன் 8 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாகப் பாடிவிட்டார். அதிலும் குறிப்பாக இளையராஜாவின் இசையமைப்பில் அதிகபட்சமான பாடல்கள். எல்லா வகையான பாடல்களையும், எல்லா தரப்பினருக்காகவும் அவர் பாடியிருக்கிறார். வாசுதேவனின் முழு ஆளுமையையும் வெளிக்கொணர்ந்த பெருமை இளையராஜாவையே சாரும், அவர் பல இசையமைப்பாளரிடமும் பணியாற்றியிருந்த போதிலும். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பாடிப் பெருமை சேர்த்திருக்கிறார் மலேசியா வாசுதேவன்.
இளையராஜா அவருக்கு மென்மையான காதல் மெலடியில் நிறைய வாய்ப்பளித்திருக்கிறார். "இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது..." (சிகப்பு ரோஜாக்கள்), "வான் மேகங்களே வாழ்த்துங்கள், பாடுங்கள்..." (புதிய வார்ப்புகள்), "கோடைக் காலக் காற்றே..." (பன்னீர்ப் புஷ்பங்கள்), "பூவே இளைய பூவே... வரம் தரும் வசந்தமே... மடிமீது தேங்கும் தேனே... எனக்குத்தானே..."(கோழி கூவுது), "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ..."(தூரல் நின்னு போச்சு) இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். பட்டியல் முடியாது. அத்தனையும் அழகுப் பாடல்கள், அத்தனையும் தேனாக இனிக்கும் பாடல்கள்.
இவற்றுக்கு இணையாக எம்.எஸ்.விஸ்வநாதனும் பல பாடல்களை அவருக்குத் தந்திருக்கிறார். "எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை"(சரணாலயம்), "எண்ணியிருந்தது ஈடேற..."(அந்த ஏழு நாட்கள்) போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகள்.
முரட்டுக்காளையில் அவர் பாடிய "பொதுவாக எம்மனசு தங்கம்" பாடல் இன்று வரையில் வரும் எல்லாக் குத்துப் பாடல்களையும் வென்றுகொண்டேயிருக்கிற அதிசயத்தைப் பார்க்கமுடிகிறது. உணர்ச்சி ததும்ப பாசம் இசைக்கும் "ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு"(தர்ம யுத்தம்) பாடல் தங்கைகளுக்காக அண்ணன்களின் அன்புக்குரல். "பட்டு வண்ண ரோசா வாம்..."(கன்னிப்பருவத்திலே), "பொன் மானத் தேடி நானும் பூவோடு வந்தேன்..."(எங்க ஊரு ராசாத்தி) போன்ற பாடல்கள் நாட்டுப்புற இசையின் நளினத்தோடு அன்பையும் சோகத்தையும் அள்ளி அள்ளி வழங்கும் பாடல்கள்.
மலேசியா வாசுதேவனுக்கு 16 வயதினிலேயில் வாய்ப்பளித்த அதே இயக்குநர் பாரதிராஜாதான் தனது "ஒரு கைதியின் டைரி" படத்தில் வில்லன் வேடம் தந்து நடிக்கவும் வைத்தார். தமிழ் சினிமாவின் மிக நல்ல குணச்சித்திர நடிகராக அவர் இன்னொரு அவதாரமெடுத்தார். 85 படங்களில் பல்வேறு பாத்திரங்களில் அவர் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். "எண்ணம் தோன்றியது எழுதத் தூண்டியது" என்பது அவர் எழுதி 2010 வெளிவந்த கவிதை நூல். ஆமாம், கவிஞராகவும் அவர் வெளிப்பட்டிருக்கிறார். படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக் கிறார். அவருடன் நெருக்கமாக இருந்த சகாக்களுக்கு அவரது இன்னொரு முகமும் தெரியும். விளம்பரமின்றி பிறருக்கு உதவும் முகம்தான் அது.
சாதாரணப் பின்னணியிலிருந்து வந்தவர்தான் அவர். தன்னை உயர்த்திக்கொள்ள அவர் தனது திறமை ஒன்றையே நம்பியிருந்தார். தனது குரலால் அவர் தமிழ் ரசிகர்களை பலகாலம் கட்டிப்போட்டிருக்கிறார். கலைக்கும், இப்படிப்பட்ட கலைஞனுக்கும் எங்காவது மரணம் உண்டா?
மலேசியா வாசுதேவன் பாடவந்த காலம் குறித்துக் கொஞ்சம் பரிசீலித்தால் அவரது பங்களிப்பு எத்தகைய மகத்தானது என்பதையும் நாம் உணரமுடியும். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசை மேதை கே.வி.மகாதேவன் கோலோச்சிய காலத்தில் டி.எம்.சௌந்தரராஜன் கொடிகட்டிப் பறந்தார். மெல்லிசைக்கு செவ்வியல் இசையே அடிப்படையாக இருந்தது. சினிமாவுக்குக் காவியத் தன்மை வழங்குவதில் போட்டி நிலவிய காலம் அது. அதற்கேற்ப செவ்வியல் தன்மைகொண்ட கவித்துவமான பாடல்கள் உருவாகின. அவற்றுக்கு இசை வடிவம் தந்தபோது டி.எம்.எஸ்.ஸின் குரல் அதில் பெரும் பங்காற்றியதை மறுப்பதற்கில்லை. ஏனைய பிரபலப் பாடகர்கள் பெண்தன்மை கலந்த குரலில் பாடிக் கொண்டிருக்க, சௌந்தரராஜன்தான் முழு ஆணின் குரலை முன்வைத்தார். காலம் மாறியது. இசைஞானி இளையராஜா முன்னணிக்கு வந்த காலம் சினிமாவின் உள்ளடக்கமும் மாறத் தொடங்கிய காலம். கிராமங்களை நோக்கி காமிராக்களைத் தூக்கிக்கொண்டு போகத் தொடங்கியபோது சினிமாவின் உள்ளடக்கமும் மாறத் தொடங்கியது.
செவ்வியல் மரபிலிருந்து வந்த பழைய இசையமைப்பாளர்களுக்கு மாற்றாக நாட்டுப்புற மரபிலிருந்து வந்துசேர்ந்த இளையராஜாவின் இசையில் மண் மணம் தூக்கலாக இருந்தது இந்த மாற்றத்தைக் கட்டியம் கூறியது. இந்தப் புதிய நிலைமைக்கு ஏற்ற குரலுடன் இளையராஜாவின் தேவைக்கேற்ப வந்துசேர்ந்தவர் மலேசியா வாசுதேவன் மட்டுமே. அதாவது, காலத்தின் தேவையாக வந்தவர் மலேசியா வாசுதேவன் என்றே சொல்வேன். எத்தனை பாடகர்களைப் பாடவைத்த போதிலும் இளையராஜாவின் புதிய சூழலின், புதிய அணுகுமுறையின் தேவையை நிறைவுசெய்த ஒரே பாடகர் மலேசியா வாசுதேவன்தான்.
முன்னமே குறிப்பிட்டதுபோல, டி.எம்.சௌந்தரராஜனை ரசித்துப் பழகியிருந்த ரசிகர்களின் ஏக்கத்தைப் பூர்த்திசெய்யும் விதமாக அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடியவராகவும் மலேசியா வாசுதேவன் ஒருவரே இருந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எவருடைய இசையமைப்பில் பாடினாலும் அது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலாக மட்டுமே தோன்றும். இசையமைப் பாளரை இனங்காண்பது கொஞ்சம் சிரமமானதாக இருக்கும். மாறாக, மலேசியா வாசுதேவன் பாடுகிறபோதுதான் அது இளையராஜா இசையமைத்த பாடல், எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல் என்று இனம் காணஇயலும்.
அதே நேரம் அந்தப் பாடலில் மலேசியா வாசுதேவனின் முகமும் தெரியாமல் போகாது. தான் பாடும் பாடலின் இசையமைப்பாளரின் அடையாளத்தை மறைக்காமலேயே தன்னையும் வெளிக்காட்டிக்கொள்ளக்கூடிய நுட்பமான இயல்பு மலேசியா வாசுதேவனின் குரலின் தனிச் சிறப்பாக இருந்தது. இதுவே அவர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நிலைத்து நின்றதற்கான பிரதான காரணமாகப் படுகிறது. இந்தத் தனித்துவக் குரல் வளத்தோடு அவரது நல்ல தமிழ் உச்சரிப்பும் அவருக்குக் கூடுதல் பலம் தந்தது.
பின்னாளில் மலேசியா வாசுதேவனுக்கு இணையான தனித்திறன் கொண்ட இன்னொரு பாடகர் தனக்குக் கிடைக்காத நிலைமையில்தான், தானே நாயகர்களுக்கு டூயட் பாட இளையராஜா துணிந்தாரோ என்னவோ. இதற்கு முன்பெல்லாம் இசையமைப்பாளர்கள் காட்சிப் பின்னணியில் தத்துவம் ததும்பும் சோக கீதம் இசைப்பதுதானே வழக்கம்? அப்படித்தானே எம்.எஸ்.விஸ்வநாதன் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். .
இந்தப் பின்னணியில்தான் மலேசியா வாசுதேவன் நமக்கெல்லாம் வியப்பளிக்கிறார். தமிழ் சினிமாவின் வரலாற்றுத் தேவையெனவே அவர் இங்கு வந்துசேர்ந்தார். அந்தத் தேவையைத் தன்னால் இயன்றளவு நிறைவேற்றினார். இளையராஜா எனும் இசைஞானியின் உள்ளத்துக்கு நெருக்கமாக அமைந்திருந்தது அவரது குரல் வலிமை. தமிழில் எல்லா நாயகர்களுக்காகவும் அவர் பின்னணி பாடியிருக்கிறார். எல்லா வகையான கதை அமைப்புகளிலும் அவரது தெளிந்த கணீர்க் குரல் கச்சிதமாகவே பொருந்திப்போயிருக்கிறது. முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அவர் பாடியவை இவை எல்லாவற்றின் உச்சமாக உயர்ந்து நின்று இசையின் பேரின்பப் பிரவாகமாகவே பெருக்கெடுக்கிறது.
அதிலும் குறிப்பாக "பூங்காற்று திரும்புமா" பாடல் கேட்கிற ஒவ்வொரு பொழுதிலும் மனசைப் பிழிந்து ஏதேதோ செய்கிறது. இனம் தெரியாத உணர்வொன்று அப்பிக்கொள்ள நாம் செய்வதறியாது தவிக்கிறோம். உள்ளே அழுது, வெளியே சிரிக்கிற ரசவித்தையை இந்தப் பாடல் தனக்கேயுரிய வீரிய ஆற்றலின் துணைகொண்டு நிறைவேற்றிக் களிப்புறுகிறது. டி.எம்.எஸ். இல்லாத இடம் வெற்றிடமாகி விடவில்லை என்பதைச் சொல்லாமல் உணர்த்தி நிற்கிறது இந்தப் பாடல். இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் தூண்டிவிட்ட நெருப்பைக் கொளுந்துவிட்டு எரியச் செய்து கேட்போரைச் சூடேற்றி, அவர்களது எண்ண ஓட்டங்களைச் சாம்பலாக்கிப் போடுகிறது பாடுகிற இந்தப் பாட்டுக்காரனின் கிறங்கடிக்கும் குரல் இனிமை.
எத்தனைக் காலமானாலும் இறவா வரமல்லவா அந்தப் பாடல்கள் வாங்கி வந்திருக்கின்றன? பாடிவிட்டுச் சென்றவரை காலம் தின்று, ஏப்பமிட்டபோதிலும், அவர் விட்டுச்சென்ற அவரது குரலை காற்றும், காதுகளும் எப்படி மறுதலிக்கும் சொல்லுங்கள்? கலைஞன் எப்படிக் காலமாவான்? ஆமாம், காற்றிருக்கும் காலம் வரையில் மலேசியா வாசுதேவனுக்கும் மரணம் என்பது இல்லவே இல்லைதானே?.!!
நெகிழ்ச்சியுடன்...கிறிஸ்டினா......!


Thursday, February 15, 2018

புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி


நீண்ட நாட்களின் பின் புதிய கலப்பு தேர்தல் மூலம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான் தேர்தல்கள் முடிவடைந்து முடிவுகளும் வெளி வந்துள்ள சூழ் நிலையில் தமிழர்களின் தாயக நிலத்தில் நடந்த தேர்தல் புதிய மாற்றங்களுக்கான கட்டியமாக அமைந்துள்ளமை நம்பிக்கை தரும் மாற்றங்களை முன் மொழிந்துள்ளமை ஒரு வெற்றிடத்துக்கான சிந்தனை ஓட்டத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது பாசிச மனோபாவத்துக்கு மக்கள் கொடுத்த பதிலாகவே பார்க்க முடியும்.
1989ஆம் ஆண்டு தேர்தலைத் தவிர தமிழ் மக்களது பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட மேட்டுக் குடி மிதப்பு மிக்க சர்வாதிகார தன்னிச்சையான முடிவுகளுக்கு கட்டுப் பட வேண்டும் என்ற அரசியல் அதிகார நிகழ்வுகளின் வழியே பயணித்தது.மக்கள் அதிகாரம் துஸ் பிரயோகம் பண்ணப் பட்ட ஒரு பகைப் புலத்தில் இன்றைய தேர்தல் சில எதிர்வு கூறல்களுக்கு இடம் தந்துள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மையான இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைந்த போதிலும் ஒரு சில இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் ஏனைய கட்சிகளின் அல்லது சுயேச்சைக் குழுக்களின் ஆதரவை கோர வேண்டிய நிலமை காணப் படுகிறது.பல இடங்களில் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு சபைகளில் அதிகாரத்தை கைப்பற்ற முடியாத திரி சங்கு சொற்க நிலை காணப் படுகிறது.
வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விழுந்த வாக்குகளே அதிகம்.உதாரணத்துக்கு கட்டைபறிச்சான் வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட காருண்யா எழுநூறுக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழ் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகள் 1200க்கும் அதிகம் .இந்த நிலமையே அனேகமாக எல்லா இடங்களிலும் காணப் படுகிறது.
இம் முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகளில் பெரும் பகுதி வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்குக்கு கிடைத்த வாக்குகள் என பல அவதானிப்புகள் தெரிவிக்கின்றன.
எந்த ஒழுங்கான நகர கிராமிய கட்டமைப்புகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லையென்றே சொல்லலாம் வெறும் பழய பெருங்காய பானை மணத்தோடு மக்களின் மறதியில் பயணிக்கும் கோடி முகமுடையோர் வாக்குகளைப் பெறலாம் என்றால்.
முறயான நகர கிராமிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி முற்போக்கு சிந்தனையும் தெளிந்த அரசியல் ஞானமும் கொண்ட புத்திஜீவிகள் பெண்கள் என ஒரு புதிய சிந்தனை மயப் பட்ட அணிக்கான தேவையயை உணர்த்தி நிற்கிறது இத் தேர்தல்
பல கட்சிகள் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கில் 150 இடங்களை கைப்பற்றி சபைகளை நிர்வகிக்க பெரும் பான்மைப் பலமில்லாமல் இருக்கும் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 81 இடங்களை கைப்பற்றி மூன்று சபைகளில் அறுதிப் பெரும் பான்மை பெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 88இடங்களை கைப்பற்றி மக்களின் மாற்றுத் தேர்வுக்கான ஒரு இடத்தை தெளிவுறுத்துகிறது.
தேசிய கட்சிகள் கணிசமான இடங்களைப் பெற்றுள்ளன குறிப்பாக மட்டக் களப்பில் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிடத் தக்க வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.சுயேட்சைகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் சிந்திக்க வைக்கக் கூடிய வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
இந்த முடிவுகள் எதிர் காலத்தில் மக்களை முதன்மைப் படுத்தும் மக்கள் ஜனாயக முற்போக்கு அரசியலுக்கு உள்ள தேவையயை வலியுறுத்துகிறது.
அணி சேர்வோம் புதிய சிந்தனைகளுடனும் சமூக கலாசார விழுமியங்களை முன்னெடுக்கும் அரசியல் கலாசாரம் நோக்கி
பாலசுகுமார்
மேனாள் முதன்மையர்
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக் கழகம்