Search This Blog

Wednesday, February 14, 2018

ஆப்பிள் நிறுவ்னத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உலகைப் பிரிவதற்கு முன்பாக விட்டுச் சென்ற செய்தி

"வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது.
நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன்.
பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.
உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம்.
உங்களுக்காக சம்பாரிக்க எத்தனைப் பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்.
ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.
எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும்.
ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டால்?
திரும்ப கிடைக்கவே கிடைக்காது.
வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது.
நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.
நாம் பக்குவமடையும்போதுதான் சில விஷயங்கள் புரியும்.
முப்பது ரூபாய் கடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும்.
செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான்.
ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான்.
நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும் 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.
ஆகவே..!
உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள்.
அதுதான் உண்மையான மகிழ்ச்சி..!!
நன்றி 🙏
படித்ததில் பிடித்தது

Sunday, January 7, 2018

நாம் நல்ல வாக்காளர்களா?

வேட்பாளருக்கான தகுதிகளை எதிர்பார்ப்பதைப் போல், வாக்காளருக்கும் தகுதிகள் உள்ளன என்பதை என்றாவது உணர்ந்திருக்கிறோமா?
நல்ல வேட்பாளர்களே இல்லை, எல்லா வேட்பாளருமே ஊழல் பெருச்சாளிகளாக இருக்கிறார்கள், எனவே நான் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கவில்லை, 49ஒ க்கு வாக்களித்தேன், கட்சி வேறுபாடு இல்லாமல் நல்ல வேட்பாளர் இருந்தால் நாங்கள் வாக்களிக்கத் தயார் என்று எப்பொழுதுமே அரசியலை சாடும், கட்சிகளை சாடும் குரல்கள் தேர்தல் காலங்களில் ஒலிக்கும்.

நல்ல வேட்பாளர்கள் நள்ளிரவு தாமரை போல் திடீரென்று முளைத்து எழுவார்களா என்ன? வேட்பாளர் எங்கிருந்து வருகிறார்? நம்முடைய ஊரைச் சேர்ந்த, நம்முடைய சாதியை சார்ந்த, நம்முடைய வட்டாரத்தில், நம் கண்முன் தொழில்செய்து கொண்டு நடமாடும் யாரோ ஒருவர்தானே நம்முடைய வேட்பாளராகிறார். நீரளவே ஆகுமாம் நீராம்பல் என்ற வரிதான் நினைவுக்கு வருகிறது. நம் தகுதி அளவிற்குத்தான் நம்முடைய வேட்பாளர்களையும் கட்சிகள் தேர்வு செய்கின்றன.
ஒரு தேர்தலில் அடுத்து வர இருக்கும் ஐந்தாண்டுகளில் நமக்கான ஆட்சியாளர்களாக, நம் பகுதிக்கான நலத் திட்டங்கள், முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களாக நாம் நம் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும், அதற்காகவே இந்தத் தேர்தல் என்பதை நாமும் வேட்பாளர்களைப் போலவே வசதியாக மறந்துவிடுகிறோம். அதிகாரப் போட்டியில் ஒருவரை ஒருவர் முந்தும் சாகச விளையாட்டில் நாம் நம்மை அறியாமல், யார் கையையோ பிடித்து உயர்த்திக் கொண்டிருக்கிறோம்.
வாக்காளர்களாகிய நாம் எவ்வளவு விழிப்புடன் இருக்கிறோம், வேட்பாளர்களை நல்லவர்களா, கெட்டவர்களா? என்று பார்க்கிறோமா?
தகுதியுடைய வேட்பாளர்கள் நமக்கு வேண்டும் என்றால், நாம் முதலில் தகுதியுடைய வாக்காளர்களாக மாறுவோம்.
குடி உயர கோல் உயரும். மக்கள் எவ்விதமோ அரசு அவ்விதம். ஜனநாயகத்தில் மக்களே தங்களுக்கான அரசை தீர்மானிக்கிறார்கள்.
தேர்தலில் மாற்றத்தின் நாயகர்கள் நாம்தான்.
( - அ. வெண்ணிலாவின் கட்டுரையிலிருந்து)

கருணாகரன் சிவராசா