Search This Blog

Tuesday, December 12, 2017

அரசியல் உரிமை

இந்த எண்ணக்கரு தொடர்பில் நிறைய வாதப் பிரதிவாதங்கள் உண்டு பெரும்பாலும் அரச அலுவலர்களது வாய்களில் நர்த்தனமாடும் வார்த்தையாக காணப்படும் எண்ணக் கருவானது உண்மையில் அரசியலுடன் தொடர்புடைய கட்சிகள், நபர்களிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பதை தவறு என்பதனை குறித்து நிற்கின்றது.
ஒரு பொது மகனாக மக்களை தெளிவுபடுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு அவ்வகையில் நானும் எனது கருத்துக்களை இங்கு முன் வைத்துக் கொண்டிருக்கின்றேன் எனது பதிவுகள் எந்த ஒரு கட்சிக்கோ நபருக்கோ ஆதரவானவை அல்ல மாறாக சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யக்கூடிய வகையில் மக்களது சிந்தனை மற்றும் செயல்களில் மாற்றம் வர வேண்டும் என்பதே அவா...
தற்பொழுது இலங்கையில் முற்று முழுதாக வட்டார முறையான தேர்தல் முறைமையாக காணப்படவிட்டாலும் பெருமளவில் வட்டாரமுறையை சார்ந்ததாக காணப்படுகின்றது எனவே தங்களது பிரதேசத்திற்கு சேவையாற்றக் கூடிய நபரை தெரிவு செய்வதற்கு இத் தேர்தல் முறைமை வழி சமைத்துக் கொடுத்துள்ளது..
இங்கு வாக்களிக்க தகுதியுடையவர்கள் பின்வரும் இரண்டு விடயங்கள் தொடர்பில் கடப்பாடுடையவர்கள்...
1. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கை கட்டாயம் செலுத்துவதற்குரிய கடப்பாடு
(தனது வாக்கை செலுத்தாது கடமையிலிருந்து தவறியவராவதுடன் பிழையான தெரிவுகள் தெரிவு செய்யப்படுவதற்கு காரணமானவராகவும் ஜனநாயகத்தை மறுதலிப்பவராகவும் அமைவார்)
2. வாக்காளர்கள் சரியான நபரை தெரிவு செய்தல்.
பெரும்பாலும் தேர்தல் காலங்களில் மக்களை மூளைச் சலவை செய்வதற்கு பலர் முனைவர் எனினும் பகுத்தறிவுள்ளவர்கள் என்னும் எடுகோளின் அடிப்படையில் மக்கள் பின்வரும் காரணங்களின் அடிப்படையில் சரியான பிரதிநிதியை தெரிவு செய்ய வேண்டியது அவசியம்
1. தான் தேர்தலில் போட்டியிடும் பிரதேசம் தொடர்பான குறிப்பிடத்தக்க அறிவு (பிரதேச அமைவு, காணப்படுகின்ற வளங்கள், மக்களது அடிப்படை பிரச்சனைகள், பொதுவான விடயங்கள் தொடர்பான அறிவு)
2. தான் போட்டியிடுகின்ற தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டால் மக்களுக்கு எவ்விதமான சேவை செய்யலாம் என்பது தொடர்பான குறிப்பிடத்தக்க அறிவு (குறிப்பாக ஒருவர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவாராயின் பிரதேச சபை சட்டம், அப்பிரதேச சபை வருமானம், வளங்கள் பற்றிய அறிவு நிறைந்து அவற்றின் அடிப்படையில் சேவையாற்றக்கூடிய வகையில் குறிக்கோள்கள் அமைய வேண்டும் அதை விடுத்து பிரதேச சபைக்கு போட்டியிடும் நபர் தான் வெற்றி பெற்றால் பிரதேச சபை மூலம் பிரதான 'அ' வகை வீதிகளை புனரமைப்பேன் என்பது கேலிக்கூத்தாகவே அமையும் ஏனெனில் அது பாராளுமன்ற, அமைச்சரவை தீர்மானங்களுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றமை ஆகும் ஆயினும் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவ்வாறான கோரிக்கையை அரசிற்கு விடுக்கலாம் அது தொடர்பில் கூறி அவர் மக்களை பிழையாக நடாத்த வேண்டிய அவசியம் இல்லை)
3. மேலும் தனது பிரதிநிதித்துவத்தால் மக்களிற்கு சேவையாற்றக்கூடிய வகையில் வெளி வளங்களை பெற்றுத் தரக்கூடிய ஆற்றல் ( பிரதேச சபை உறுப்பினராயின் மாகாண சபை மூலம் நிதி, வளங்களை பெற்று பிரதேசத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய ஆற்றல்)
பெரும்பாலும் மக்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தங்களது ஆதரவை தெரிவிக்கும் பண்பு காணப்படுகின்றது விகிதாசாரமுறைமைக்கு இது ஓரளவு பொருந்தினாலும் வட்டார முறையைப் பொருத்த வரை பிரதிநிதி மற்றும் அவரது பிண்ணனி முக்கியமாக உள்ளது
நீங்கள் ஆதரவளிக்கும் நபர் சமூகத்தில் உயர் தொழிலில் உள்ளவராக நற்பண்புகள் நிறைந்தவராக காணப்படலாம் ஆனால் அவர் வினைத்திறமை அற்றவராக அடையாளம் காணப்பட்டவராயின் அவரை தெரிவு செய்வதனால் பயன் ஏது?
நீங்கள் குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கின்றீர்கள் அதன் பிரதிநிதிக்கே ஆதரவளிக்க வேண்டும் எனக் கடப்பாட்டுடன் திகழ்கின்றீர்கள் என வைத்துக் கொள்கின்றோம் அவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துபவர் வினைத் திறமை அற்றவராகவோ அல்லது சமூக விரோதியாகவோ காணப்படின் நிலையைச் சற்று சிந்தித்து பாருங்கள் கடந்த கால கசப்பான அனுபவங்களினால் தான் மேற்கூறிய கருத்தை கூற வேண்டியுள்ளது கடந்த காலத்தில் A என்ற கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய X என்ற நபர் தான் தவிசாளராக இருந்த சபையில் தற்காலிக ஊழியராக இருந்த பெண்ணை நிரந்தரமாக்க பாலியல் லஞ்சம் கேட்டு நியமனத்தை இடை நிறுத்தி கௌரவ ஆளுநர் தலையீடு செய்த வரலாறுகள் உண்டு...
எனவே அன்பார்ந்த மக்களே பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பொழுது சரியான பிரதிநிதியை தெரிவு செய்யுங்கள் ஏனெனில் மக்களின் அறிவின் அடிப்படையிலேயே அவர்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளும் அமைவர், கட்டாய வாக்களிப்பின் மூலம் ஜனநாயகப் பண்புகளைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் எமக்குண்டு சிந்தித்துச் செயல்படுங்கள் நாளை_நமதே.

Thanks 
Pragash Sinnarajah

இயக்குனர் எல்லிஸ் ஆர் .டங்கன்

இசைக்குயில் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களும் திரு. சதாசிவம் மற்றும் இயக்குனர் எல்லிஸ் ஆர் .டங்கன் . ராதாவுடன் . தமிழில் ஒரு வார்த்தையைக்கூட அறியாத எல்...லிஸ் ஆர். டங்கன் 1936 தொடங்கி 1950 வரை தமிழ் சினிமா உலகின் தனித்தன்மைகள் நிறைந்த கலைஞராக வலம்வந்தார்.முத்திரை பதித்தார்.இந்தியாவின் தரம்மிக்க கலைப்படைப்பான மீரா மற்றும் சகுந்தலை ஆகிய படங்களில் இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியை நடிக்கவைத்த அரும் பெருமை அவரையே சாரும்.எம்.எஸ்.மொத்தம் நான்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.படமாக்கப்பட்ட விதத்திலும் மீராவில் பல புதிய தொழில்நுட்ப உத்திகளை டங்கன் கையாண்டார். ஒளியமைப்பில் அன்றைக்கே பல புதிய சோதனைகளை முயன்றார் டங்கன். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இயல்பான அழகை அவரது காமிரா விதம் விதமாக படம்பிடித்து ரசிகர்களுக்கு வழங்கியது.
துவாரகையில் மீரா படப்பிடிப்பு.துவாரகை கிருஷ்ணன் கோயிலில் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருந்தபோது ஒரு சிக்கல் வந்தது. டங்கன் இந்துமதத்தைச் சேர்ந்தவரில்லை என்பதால் கோயிலுக்குள் நுழையமுடியாத நிலை.ஆனால் சுப்புலட்சுமியோ படப்பிடிப்பின்போது டங்கன் தன்னோடு இருக்கவேண்டும் என்று விரும்பினார்.அப்போது ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. அதன்படி டங்கனுக்கு காஷ்மீர் பண்டிட் போல வேடம் அணிவிக்கப்பட்டது. அவருக்கு இந்தியில் சலோ, ஜல்தி, காம்கரோ போன்ற வார்த்தைகள் மட்டுமே தெரியும். அவற்றை வைத்துக்கொண்டு சமாளித்தார் டங்கன்.
ஒரு இந்து அல்லாத ஐரிஷ் அமெரிக்கரான டங்கன் மாறு வேடத்தில் இந்துக் கோயிலுக்குள் சென்று படப்பிடிப்பை நடத்தினார். கூடியிருந்த மக்களுக்கு அவரின் அடைபட்ட மூக்கினால் பேசிய ஆங்கிலம் வித்தியாசமாகத் தெரியவில்லை, சந்தேகத்தையும் உண்டாக்கவில்லை. காஷ்மீர் பண்டிட்டுகள் இப்படித்தான் மூக்கால் பேசுவார்கள்போல என்று அவர்கள் நினைத்தார்களாம்.
இந்து அல்லாத வேற்று மனிதன் ஒரு இந்துக் கோயிலுக்குள் நுழைந்துவிட்டதால் தெய்வக் குற்றமாகி,அங்கே எந்தவிதமான பூகம்பமும் வந்துவிடவில்லைதான்.ஆனால் அதற்கு மாறாக டங்கனின் படைப்புத் திறனால் இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் குறிப்பிட்டு நினைவுகூரத் தக்க கலைப்படைப்பாக இந்த மீரா திரைப்படம் இன்றளவும் பேசப்பட்டுவருகிறது.
1945ல் வெளியான மீரா படத்தைப் பார்த்த பண்டித ஜவகர்லால் நேரு, மௌண்ட்பேட்டன், சரோஜினி நாயுடு போன்றவர்களெல்லோரும் சுப்புலட்சுமியின் பரம ரசிகர்களாகிப்போயினர். இந்தப் படத்தால் எம்.எஸ். உலகப்புகழ் எய்தினார். எல்லாமே டங்கனின் கலைத்திறனாலும் படைப்பு மனதாலும் விளைந்தது என்றால் மிகையாகாது.
.
- சோழ.நாகராஜன்

கல்லூரியில் டங்கனுடன் மாணிக் லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் படித்தார். (டாண்டன் பின்னாளில் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆனார்). டாண்டனின் குடும்பம் இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது. இந்திய திரைப்படங்களைத் தயாரிக்க மேற்கத்திய தொழிற்நுட்ப வல்லுனர்களைப் பயன்படுத்த விரும்பிய டாண்டன் தனது கல்லூரி நண்பர்களாகிய டங்கனையும் மைக்கேல் ஓர்மலேவையும் தன்னுடன் இந்தியா வரும்படி அழைத்தார். 1935 ஆம் ஆண்டு டங்கன், டாண்டனின் அழைப்பை ஏற்று இந்தியா வந்தார். அப்போது டாண்டன் கல்கத்தாவில் நந்தனார் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாளராக சேர்ந்த டங்கன் அப்படத்தின் சில காட்சிகளையும் இயக்கினார். அப்போது ஏ. என். மருதாசலம் செட்டியார் என்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர், தனது அடுத்த படத்தை இயக்கித் தரும்படி டாண்டனிடம் கேட்டார். நந்தனார் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால், தனது அமெரிக்க நண்பரை இயக்குனராக்கிக் கொள்ளும்படி டாண்டன் பரிந்துரைத்தார்.
இவ்வாறு டங்கன், செட்டியார் தயாரித்த சதி லீலாவதி (1936) படத்தின் இயக்குனரானார். இப்படத்தில் தான் எம். ஜி. ராமசந்திரன் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அவர் இயக்கிய சீமந்தினி (1936), இரு சகோதரர்கள் (1936) , அம்பிகாபதி (1937), சகுந்தலை (1940) ஆகியவை வெற்றி பெற்றன. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி ஒரு வருடத்திற்கும் மேல் தொடந்து ஓடி சாதனை படைத்தது. தமிழ் மொழி தெரியாவிட்டாலும், தனது ஆங்கிலம் அறிந்த இந்திய உதவியாளர்களின் மூலம் நடிகர்களிடமும், தொழிற்கலைஞர்களோடும் டங்கனால் எளிதாக உரையாட முடிந்தது. இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்க கொள்கைகளைப் பரப்பும் சில படங்களையும் இயக்கினார்.
இவர் இயக்கிய சதிலீலாவதி திரைப்படம் எடுக்கப்பட்ட விதம் பற்றி எடுக்கப்பட்ட குறும்படம் 1936 ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது.
எம். எஸ் சுப்புலட்சுமியின் நடிப்பில் டங்கன் இயக்கிய மீரா (1945) அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, அதே படத்தை 1947 இல் இந்தியிலும் இயக்கினார். புதிய ஒளி உத்திமுறைகள், நவீன ஒப்பனை முறை, நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவை டங்கன் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய சில மாற்றங்கள். அக்காலத்தில், இவரது நெருக்கமான காதல் காட்சிகள் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அமெரிக்கக் கலாச்சாரத்தைத் தமிழகத்தில் பரப்புகிறார் என்று சிலர் குறை கூறவும் செய்தனர். டங்கன் இயக்கிய கடைசித் தமிழ்ப்படம் மந்திரிகுமாரி. 1950 ஆம் ஆண்டு டங்கன் அமெரிக்கா திரும்பினார்.

டங்கன் 1958 இல் மேற்கு விர்ஜீனியா மாநிலத்தில் வீலிங் என்ற ஊரில் குடியேறினார். எல்லிஸ் டங்கன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்தியாவில் படப்படிப்பு நடத்திய அமெரிக்கப் படங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். முப்பதாண்டுகள் ட்யூக் கோல்ட்பர்க் என்ற ஹாலிவுட் தயாரிப்பாளருக்காக செய்திப் படங்களைத் தயாரித்தார். 90களின் ஆரம்பத்தில் அவர் தமிழ்நாடு வந்த போது அவருக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.[9] டங்கன் டிசம்பர் 1, 2001 இல் வீலிங் நகரத்தில் மரணமடைந்தார். அவர் தனது திரையுலக அனுபவங்களைத் தொகுத்து எ கைட் டு அட்வன்ச்சர் என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதியுள்ளார்.[


வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டியது...


"நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம்."
...
பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை.
எப்போதாவது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் போது மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடு செல்வதோ, வங்கிகளில் கடன்பெற்று பூப்புனித நீராட்டு விழா, ஐம்பதாவது பிறந்ததினம் ஆலயத்திருவிழாக்கள் போன்றவற்றைக் கொண்டாடுவதோ புலம்பெயர் நாடுகளில் மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்கள் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுகின்றனர்.
மனிதர்களோடு மனிதர்கள் உறவாடாத சிறை ஒன்றை விலைகொடுத்துத் தாமே வாங்கிக் கொண்டு அதற்கு முடங்கிப் போகின்றனர். எலும்பை உறையவைக்கும் குளிரில் சுமக்கமுடியாத உடையணிந்து சிறையிலிருந்து வெளியேவரும் மனிதன், நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்காக சில வேளைகளில் பதினைந்து மணி நேரங்கள் வரை வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.சில குடும்பங்களில் கணவன் மனைவி பிள்ளைகள் ஒன்றாக சந்தித்து கொள்வது ஒன்றாக உணவருந்துவது சில நாட்களில் மட்டும் என்ற கசப்பான உண்மையும் உண்டு
இரண்டாயிரம் யூரோ வரை ஊதியம் பெறுகின்ற ஒரு குடும்பத்திற்கு வேலையையும் பணத்தையும் தவிர வேறு எந்த உலக அறிவும் கிடைக்காது. பிட்சா உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு கோதுமை மாவை எப்படி எல்லாம் ஊதிப் பெருக்கலாம் என்று தெரிகிற அளவிற்கு தான் வாழும் நாட்டின் வரலாற்றில் சிறு பகுதியாவது தெரிந்திருக்காது. தனது இரண்டாயிரம் ஊதியத்தில் வீட்டு வாடைகைக்காகவோ, வங்கிக் கடனுக்காகவோ 1200 யூரோக்கள் வரை தொலைந்துபோக மிகுதி 800 யூரோவில் ஒருபகுதி மின்சாரக் கட்டணம் தொலைபேசி எனச் செலவழிந்து போக எஞ்சிய பணத்தில் உணவு உடை என்ற எஞ்சிய செலவுகளை முடித்துக்கொள்கிறார்.
இவை அனைத்திலும் சிக்கனமாக வாழ்ந்தால் ஒரு வருடத்தின் முடிவில் இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ செல்வதற்கான பயணச் சீட்டிற்குப் பணத்தைச் சேமித்துக்கொள்கிறார்.
இவற்றுள் அனைத்து உண்மைகளும் இலங்கையிலிருப்பவர்களுக்கு மறைக்கப்படுகின்றது. தாம் புலம்பெயர் நாடுகளில் மன்னர்கள் போல வாழ்வதாக பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன்மூலம்தங்களை தாங்களே பெருமைப்படுத்தும் அறிவீனமும் மறைந்த நிற்கின்றது
இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பா என்பது செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரி என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாழ்பவர்கள் மன்னர்கள் போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புனைவுகளின் கனவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அதற்காக தாம் வாழும் வாழ்கையை மறைத்து ஒரு நாடக வாழ்வியலை தெரிந்தே செயல்ப்படுத்துகின்றனர் விடுமுறைக்குச் செல்லும் ஒருவருக்கும் இலங்கையிலிருக்கும் சாமானிய மனிதனுக்கும் இடையே தவறான புரிதல்களை அடிப்படையாககொண்ட போலியான உறவு ஒன்று ஏற்படுகிறது. தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய் இந்த இருவருக்கும் இடையே ஒரு இரும்புத் திரையை ஏற்படுத்துகின்றது.
பயணச்சீட்டிற்கே ஒருவருடம் வருந்தும் ஒருவர் வங்கிக்கடனிலோ, கடன் அட்டையிலோ இலங்கையில் தனது நாடகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். முதலில் இலங்கை சென்று மற்றவர்களுக்குத் தனது நிலையை மறைப்பதற்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த ஆடையணிகளை வாங்கிகொள்கிறார். பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார். இலங்கை சென்றதும் உறவினர்களுக்குப் பண உதவி, கடா வெட்டி விருந்துவைத்தல் ,கோவில் திருவிழாக்களைப் பொறுப்பெடுத்தல் போன்றவற்றைக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கிறார்.
துப்பரவுத் தொழிலாளியாக புலம்பெயர் நாடுகளில் வேலைசெய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் ‘கலரால்’ பிரமித்துப்போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். மண்ணோடு பற்றற்ற ஐரோப்பியக் கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று வட-கிழக்கிலும் உருவாகிவிடுகின்றது.
தாய் நாட்டில் விடுமுறையை முடித்துப் புலம்பெயர் நாடுகளை நோக்கித் திரும்பும் ஐரோப்பியத் தமிழன் தனது கடனட்டைக் கடனைத் திருப்பிச் செலுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றது. இதனாலேயே பல குடும்ப உறவுகளே சிதைவடைகின்றது.
தமது வாழ்க்கை தொடர்பான உண்மை நிலையை இலங்கைக்குச் செல்லும் ஒவ்வொரு ஐரோப்பியத் தமிழனும் தமது உறவினர்களுக்குச் சொல்லவேண்டும். அவர்களைக் கனவுலகத்திலிருந்து விடுவித்து சொந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் சமூகமாக உருவாக்க வேண்டும். வாழ்வதற்காக அடிமைகளாகும் கடன் சமூகத்தை நோக்கி தவறான விம்பத்தை அழிக்க வேண்டும். எங்கள் சொந்த மண் எல்லா வளங்களையும் கொண்டது, வானமும் வையகமும் ஒத்துழைக்கும் செல்வம் கொழிக்கும் பிரதேசங்கள் அவை.
( நயினை அன்னைமகன் )