Search This Blog

Monday, August 29, 2011

உலகத்தை உணர முடியுமா?




  • தவறு செய்தல் மனித குணம், மன்னித்தல் தேவகுணம். - போப்

  • உலகிலேயே பெரிய சுமை மூடநம்பிக்கையே. - மல்டன்

  • அளவு கடந்த ஆசை, அளவற்ற துவேசமாக மாறுகிறது. -சாக்ரடீஸ்

  • மனசாட்சி செய்யும் சித்திரவதையே ஆன்மாவின் நரகம். - கார்லைல்

  • வாழ்நாளைப் பெருக்க உணவைச் சுருக்கு. -பெஞ்சமின்

  • இதயக்குமுறலை மூழ்கடிக்கும் கலை இதமான சிரிப்பு. -ஹார்ட்லி

  • சந்தேகத் திரையை கேள்விகளால் கிழித்தெறிய வேண்டும். -காப்பர்

  • சிரமப்பட்டுப் பெறுவதே நீண்ட காலம் நீடித்து நிற்கும் -சார்லஸ் கேப்டன்.

  • மகத்தான காரியங்களைச் செய். நீண்டகாலம் அது பற்றி கனவு காணாதே. -சார்லஸ் கிங்ஸ்லி

  • வேலையும் ஓய்வும் மருத்துவர் கதவை மூடுகிறது. -புல்லெர்

  • தொல்லைகளை எளிதாக்குகிறது பொறுமை. -தாம்சன்.

  • கவிஞர்கள் கஷ்டத்தில் கற்றதைக் கவிதையில் போதிக்கிறார்கள். -ஷெல்லி

  • செல்வத்தை உண்டாக்காமல் நுகர உரிமை கிடையாது. -பெர்னாட்ஷா

  • உடல்நலமே எல்லா உரிமைகளிலும் மேலானது. -அமியல்

  • உன்னால் முடிந்தவரை உன் பணியினை இனி நன்றாய் செய். -நியூட்டன்

  • நாணயத்தை இழந்தவன் இழப்பதற்கு வேறொன்றும் இல்லாதவன். -விலி

  • செயல் புரிபவர் அனைவரும் சிந்திப்பவர்களின் அடிமையே. -ஹின்

  • துன்பத்தை அனுபவித்தால் அறிவு வளரும். -ப்ரவுனிங்

  • ஒற்றுமையின் விளக்கமாகி விடுங்கள். அன்பின் நாக்காகி விடுங்கள். -லாங்பெல்லோ

  • குழந்தைப் பருவம் பகுத்தறிவின் உறக்க நிலை. -ரூஷோ

  • ஆழ்ந்த சிந்தனைக்கு அதிக பலன் உண்டு. -ஆல்பர்ட்

  • ஒரு பிழையை நீ திருத்த மறுக்கும் போதுதான் அது தவறாகிறது. -ஆர்லாண்டோ

  • கூலி கொடுப்பவனை ஊனமாக்கி கூலி வாங்குபவனுக்கு உதவமுடியாது. -லிங்கன்

  • கனவின் லட்சியம் மனிதனின் விருப்பங்களைப் பூர்த்தி செய்து வைப்பதுதான். -ப்ராய்டு.

  • பல அறிஞர்களுடன் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய். -எபிக்டெட்ஸ்

  • இளமை என்னும் பக்குவமான வயதில்தான் எவ்வித பண்பும் உருப்பெறுகிறது. -இங்கர்சால்

  • பொதுப்பணியில் நாணயமும் நேர்மையும் வேண்டும். -நேரு

  • கண்ணால் காணப்படும் உலகம் வேறு. அறிவால் உணரப்படும் உலகம் வேறு. -பிளாட்டோ

  • நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும் போதே காணும் கனவு. -பிளினி

  • எவ்வித தியாகமும் செய்யாமல் எவ்வித நன்மையும் பெறமுடியாது. -ஹெல்ப்ஸ்

தொகுப்பு: தேனி. எஸ். மாரியப்பன்.

துணிவு கொள்!



                                                           -முனைவர். வி. தேன்மொழி.
சில மாதங்களுக்கு முன்பே அம்மா இந்தியாவிலிருந்து வாங்கி அனுப்பிய புடவையை இளையநிலா அன்றுதான் உடுத்தினாள். கண்ணாடி முன்பு நின்று தன் பிம்பத்தையே உற்றுப் பார்த்தாள். அவளுக்கே அவள் மேல் ஆசை வரும் போல் இருந்தது. பிறகு, அறிவழகன் அவள் மேல் ஆசை வைப்பதற்குச் சொல்லவா வேண்டும். நீளமாகப் போட்ட பின்னல் அவள் பின்னழகைத் தொட்டு நின்றது. தலையில் சூடிய மல்லிகைப் பூ கமகமத்தது. கைப்பையை எடுத்துத் தோளில் போட்டாள்.
வாசலுக்கு வந்து செருப்புக்குள் காலை நுழைத்தபடியே கைப்பைக்குள் எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டாள். பிறகு கிளம்பும் முன் ஒரு நிமிடம் நின்று பிரார்த்தனை செய்து விட்டு மாடிப்படியை விட்டிறங்கி மின்தூக்கியை அடைந்து பொத்தானை அழுத்தி விட்டுக் காத்திருந்தாள்.
சிறிது நேரத்தில் மின்தூக்கியின் கதவு திறந்தது. உள்ளே நுழைந்து மீண்டும் பொத்தானை அழுத்தினாள். மின்தூக்கி பதினோறாவது மாடியில் இருந்து கீழ் நோக்கிச் செல்லத் தொடங்கியது. கண்களை மூடிக்கொண்டு அன்றைக்குச் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளை மனதிற்குள் ஒருமுறை மீண்டும் அவசரமாக அசை போட்டாள். அவள் மனதிற்குள் ஏதோ ஒன்று குறுகுறுத்தது. கண்களைத் திறந்தாள். அருகில் நின்று கொண்டிருந்த இளைஞன் அவளை அப்படியே விழுங்கி விடுவதைப் போலப் பார்த்தான்.
‘‘நீங்க இங்க புதுசா வந்திருக்கீங்களா?’’
"ஆம்" என்பதைப் போல் அந்த ஆடவனின் கேள்விக்கு எரிச்சலுடன் தலையாட்டி வைத்தாள்.
‘‘இதுக்கு முன்னாடி எங்க இருந்தீங்க?’’
‘‘வுட்லண்ட்ஸ்’’
அதற்கு மேல் அவனுக்கு அவளிடம் என்ன கேட்பது என்று தெரியவில்லை. ஆனால் அவன் விழிகள் மட்டும் அவளுடைய கொடியிடையை அவ்வப்போது தொட்டுச் சென்றது. அதை இளையநிலாவும் கவனித்தாள். அவளுக்கு அவன் பார்வை என்னவோ போலிருந்தது. சற்று நேரத்தில் மின்தூக்கி தரைத்தளத்தைத் தொட்டது.
மின்தூக்கியிலிருந்து வெளியே வந்ததும் அவள் பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்தாள். அவள் காத்திருந்த பேருந்து வந்ததும் ஜன்னலோர இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டாள். பேருந்திற்குக் காத்திருக்கும் போது இளையநிலாவுக்கு அறிவழகனின் நினைவுதான் வந்தது. அவள் ஒரு தனியார் பொறியியல் நிறுவனத்தில் வேலை பார்ப்பவள். பைப்பிங் சம்பந்தமான திட்டவேலை ஒன்றினை முடித்துத் தருவதற்கான ஒப்பந்தத்தில் அவள் வேலை பார்க்கும் நிறுவனம் இணைந்திருந்தது. ஏற்கனவே மெக்கானிக்கல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவள். இருந்தாலும் பைப்பிங் தொடர்பான விஷயங்கள் அவளுக்குப் போதுமான அளவு தெரியாததனால் அவளுடைய நிறுவனமே பணம் செலுத்தி டி.பி.எஸ் என்ற பட்டயப்படிப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
கிட்டத்தட்ட அந்தப் படிப்பு முடியும் நிலையை எட்டி இருந்தது. அதிலும் ஒரு பிரச்சனை. அவளுக்குப் பாடம் சொல்லித் தருபவன்தான் அறிவழகன். அவள் பாடம் படித்தாள். அறிவழகன் அவளைப் படித்துக்கொண்டிருந்தான். அன்று வகுப்பறையை அடைந்து கணினி முன்பாக அமர்ந்ததும் இளையநிலா தான் குறித்து வைத்திருந்த சந்தேகத்தை மறக்காமல் அவனிடம் கேட்டாள்.
‘‘பைப்பின் உள்ளே வாஷர் -ஐப் பொருத்தினால் எத்தனை இன்ச் இடைவெளி விடவேண்டும்?
மூன்று அங்குலமா? அல்லது நான்கு அங்குலம் விட வேண்டுமா?’’ என்று கேட்டபடி நிமிர்ந்த போது கிட்டத்தட்ட அறிவழகனின் கண்கள் அவள் கழுத்தை விட்டுக் கீழே இறங்கி நிலையாக நங்கூரமிட்டிருப்பதைப் பார்த்து விட்டாள்.
இந்தக் கதை அடிக்கடி நடப்பதுதான். அவன் பார்வை அவளுக்கு உடம்பெல்லாம் கம்பளிப் பூச்சி ஊர்வதைப் போல் இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டாள். அவள் தன் பொறுமையின் எல்லையைக் காத்துக் கொண்டிருப்பது எப்போதும் போல் இன்றும் வாடிக்கையானது. இந்த ஆண்களுக்கு ஏன் இவ்வளவு குரூரமான புத்தி? அவளுடைய சிந்தனைத் தடைபட்டது.
பக்கத்து இருக்கையிலிருந்து சூசன் அறிவழகனை அழைத்துச் சந்தேகம் கேட்டான். அவனுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைத்து விட்டு அறிவழகன் தன்னுடைய அறைக்குத் திரும்பினான். சற்று நேரத்தில் அறிவழகனிடமிருந்து இளையநிலாவுக்கு அழைப்பு வந்தது.
இளையநிலா சற்று நேரம் யோசித்தாள். பிறகு, தன் அலைபேசியை (செல்போன்) எடுத்துக் கொண்டு அறிவழகனின் அறையை நோக்கி நடந்தாள். கதவை மெதுவாகத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள். அறிவழகனின் முகம் தென்பட்டது. எதிரே இருந்த இருக்கையைக் காட்டி அமரும்படி புன்னகையுடன் சைகை காண்பித்தான். அவள் உட்கார்ந்த நளினத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அறிவழகனுக்கும் இளையநிலாவுக்கும் இடையே ஒரு கனத்த அமைதி நிலவிக் கொண்டிருந்தது. அறிவழகன் மெல்ல கனைத்து அந்த நிசப்தத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.
‘‘நல்லாருக்கியா? ம்...? ‘’என்றான் அறிவழகன்.
மெல்லத் தலையாட்டினாள் இளைய நிலா.
‘‘நேத்து உன் ஆபீஸ்ல வேலை பார்க்கிற அருணைப் பார்த்தேன். ம்......பாப்புலர் புக் ஷாப்ல தான். கொஞ்ச நேரம் உன்னைப் பத்திதான் பேசிகிட்டு இருந்தோம். உன்னை ரொம்ப புத்திசாலின்னு சொன்னாரு.’’
‘‘அப்படியா? அவரை எனக்கு நல்லாத் தெரியும். அவர் எனக்கு நல்ல நண்பர்’’ என்றாள் இளையநிலா.
‘‘வேற ஒண்ணும் இல்ல இளையநிலா. நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். நீ ரொம்ப அழகாயிருக்க.’’
‘‘ம்.....எனக்கும் தெரியும் சார்’’ என்றாள் நக்கலாக.
‘‘நீ ஏன் எங்கூட நாலு நாள் தங்கக் கூடாது. பிரச்சனையெல்லாம் வராது. ரொம்ப பாதுகாப்பா இருக்கலாம். ஒண்ணும் பிரச்சனையாகாம நான் பாத்துக்கிறேன்.’’
‘‘இல்ல.........நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு இல்ல சார் நான்.’’
‘‘இளையா! எல்லா பொண்ணுங்களும் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னு எனக்குத் தெரியும். முதல்ல தயக்கமாத்தான் இருக்கும். பயப்படாத எல்லாம் சரியாயிரும்மா.’’
அவன் சொல்லி முடித்த சற்று நேரத்தில் இடி ஒன்று கன்னத்தில் இறங்கியது. அவன் கண்களுக்குள் இருட்டு பரவி கலர் கலராக பட்டாம்பூச்சி பறந்தது.
சரேலென அறையை விட்டு வெளியே வந்தாள் இளைய நிலா. சற்றுநேரத்தில்.........
******
‘‘உங்கள் பெயர்?’’ ஆங்கிலத்தில் வினவினார் அந்த சீனப் போலீஸ்காரர்.
‘‘இளைய நிலா’’
‘‘எப்போ இப்படி நடந்தது?’’
‘‘பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான்.’’
‘‘இதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?’’
‘‘ம்.....வச்சிருக்கேன்.’’
கைப்பையிலிருந்த அலைபேசியை எடுத்து, பதிவு செய்திருந்ததை போலீஸ்காரர் முன்பாக ஒலியேற்றினாள்.
‘‘வேற ஒண்ணும் இல்ல இளையநிலா. நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். நீ ரொம்ப அழகாயிருக்க..  ........ ........ ......  பேசிக் கொண்டிருந்தான் அறிவழகன்.

பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்


பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
-முனைவர். சி. சேதுராமன்.

 மழை

மழை மண்ணுயிர்க்கெல்லாம் வாய்த்த நல் அமுது; அது உயிரின் ஊற்று; உலகின் இயக்கம்; அனைத்திற்கும் மூலகாரணம். அது இன்றேல் உலக இயக்கம் முற்றிலும் நின்றுவிடும். இதன் சிறப்பை உணர்ந்தே வள்ளுவர், ‘‘வான் சிறப்பு’’ என்ற அதிகாரத்தை வைத்துள்ளார். மழையின் சிறப்பையும் அதன் இன்றியமையாமையையும் உணராதவர்கள் உலகில் யாருமில்லை எனலாம்.
மழை பற்றிய கருத்துக்கள் நம்முன்னோர்களின் முதுமொழியாகிய பழமொழிகளில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மழையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று இப்பழமொழிகளில் கூறியுள்ளனர்.
மழை பெய்யும் காலம்
இன்று வானிலை அறிக்கை கூறுவதற்கு என்று தனியாக அறிவியல் தொழில் நுட்பத்துறை இயங்கி வருகின்றது. இவ்வானிலை மையம் தட்ப வெட்ப நிலையை ஆராய்ந்து எப்போது மழைப் பருவம் தொடங்கும்? எப்போது சுழற்காற்று வீசும்? என்பன போன்ற பல்வேறு தகவல்களை அறிவிக்கின்றது. இவ்வறிவிப்புகள் பொய்ப்பதும் உண்டு. ஆனால் இன்றுள்ள தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் நமது முன்னோர்கள் மழை எப்போது நன்கு பெய்யும் என்பதையெல்லாம் இயற்கை நிகழ்வுகளை வைத்துக் கணித்தனர்.
மழை பெய்யப் போவதை துல்லியமாக யாரும் கணித்துக் கூற இயலாது. இயற்கையாக எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் என்பதை,
‘‘மழைப்பேறும் பிள்ளைப் பேறும் மகாதேவனுக்குக்கூடத் தெரியாது’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
மழை பெய்வதும், நிறைமாத கர்ப்பிணிக்கு எப்போது மகப்பேறு நிகழும் என்பதும் துல்லியமாகக் கணித்துக் கூற இயலாது என்ற கருத்தைத் தங்கள் அனுபவத்தின் மூலமாக நமது முன்னோர்கள் தெளிவுறுத்துகின்றனர். இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், இந்த நாளில் குழந்தை பிறக்கும் என்றும் கூறினாலும் அந்தத் தேதியில் அந்நிகழ்வு நிகழ்வதில்லை.
நமது முன்னோர்கள் மழையைப் பேறு என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது. ‘பேறு’ என்பது செல்வத்தைக் குறிக்கும். குழந்தைச் செல்வம் போன்று மழையும் கிடைத்தற்கரிய செல்வமாகும். பேறு என்று மழையினைக் குறிப்பதால் மழையின் முக்கியத்துவம் புலப்பட்டு நிற்பதை நன்கு உணரலாம்.
இயற்கை நிகழ்வு
நமது முன்னோர்கள் இயற்கையாக நிகழும் நிகழ்வுகளை வைத்து மழை பெய்வதைக் கணித்தனர். அவர்களது கணிப்பு சரியாக இருந்தது. எறும்புகள், மாடுகள், பூனைகள் உள்ளிட்ட உயிரினங்களின் இயக்கங்களை வைத்தே மழை பெய்வதைக் கணித்தனர்.
எறும்புகள் நுட்பமானவை. சுறுசுறுப்பானவை. பள்ளப் பகுதியில் புற்றுக் கட்டியிருந்தால் திடீரென்றுஅங்கிருந்து மேட்டுப் பகுதியினை நோக்கித் தங்களது முட்டைகளை எடுத்துக் கொண்டு வரிசையாகச் சென்று நீர் புகாத இடத்தில் தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளும். பள்ளமான பகுதியில் இருந்து மேட்டுப் பாங்கான பகுதிக்கு எறும்புகள் முட்டைகளைக் கொண்டு சென்றால் உடன் ஓரிரு நாட்களில் மழை பெய்யப் போகிறது என்று மக்கள் அறிந்து கொண்டனர். இவ்வாறு தாங்கள் அனுபவத்தால் கண்டுணர்ந்த உண்மையைப் பிறரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில்,
‘‘எறும்பு முட்டை கொண்டு திட்டை றினால் மழை பெய்யும்’’
என்ற பழமொழியில் புகுத்திக் கூறினர்.
இயற்கை நிகழ்வை உன்னிப்பாக நன்கு கவனித்தால் மட்டுமே மழை பெய்யப் போகும் அறிகுறிகளை உணர முடியும். ஆதனால் மனிதன் இயற்கையைத் தெளிவுற உணர்ந்து வாழ வேண்டும் என்ற பண்பாட்டுப் படிப்பினையையும் இப்பழமொழி வழங்குகின்றது.
அகல் வட்டம்
நிலவைச் சுற்றியோ அல்லது சூரியனைச் சுற்றியோ வெண்மையான வட்டம் போன்று காணப்படுவது அகல் வட்டம் என்று குறிப்பிடுவர். அகன்ற வட்டம் என்றும் இதனைக் கூறலாம். கிராமத்தில் இதனை, ‘‘கோட்டை கட்டுதல்’’ என்றும் கூறுவர். ‘நிலவைச் சுற்றி கோட்டை கட்டியிருக்கிறது, சூரியனைச் சுற்றிக் கோட்டை கட்டியிருக்கிறது என்பர். இவ்வட்டம் வெண்மையானதாகக் காணப்படும். இவ்வாறு கட்டியிருப்பது பகலில் மழை பெய்யப் போவதைக் காட்டும் அறிகுறியாகும். இதனை,
‘‘அகல் வட்டம் பகல் மழை’’
என்ற பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
மின்னல்
பகலில் திடீரென்று வானில் மின்னல் மின்னும். இம் மின்னல் தொடர்ந்து வானத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறு தொடர்ந்து மின்னல் மின்னினால் அதிக மழை பொழிய வாய்ப்பு உள்ளது என்பதை,
‘‘மின்னுக் கொலலாம் மழை’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
வானத்தில் நிகழும் மாற்றங்களைக் கண்டுணர்ந்து அதன் மூலம் கிடைத்த அனுபவத்தால் மழை பெய்வதை, நமது கணித்ததையே இப்பழமொழி நமக்கு உணர்த்துகின்றது எனலாம்.
காற்று
சித்திரை, ஆடி ஆகிய மாதங்களில் அதிக அளவு காற்றுச் சுழன்று சுழன்று அடிக்கும். சித்திரையில் காற்று வீசுவதைச் சித்திரைச் சுழி என்று வழக்கில் குறிப்பிடுவர். ஆடி மாதத்தில் வீசும் காற்றை ஆடிக்காற்று என்று கூறுவர். ஆடி மாதத்தில் அடிக்கும் காற்று மிக வேகமாகச் சுழற்காற்றைப் போல சுழன்று அடிக்கும். அங்ஙனம் காற்று ஆடி மாதத்தில் வேகமாக வீசினால் அடுத்து வரக்கூடிய ஐப்பசி மாதத்தில் கனமழை பொழியும். இவ்வாறு ஐப்பசியில் மழை பெய்யப் போவதை ஆடிக்காற்றை வைத்தே முன்னோர்கள் கணிப்பர் என்பதை,
‘‘ஆடியில் காத்தடிச்சா (காற்றடித்தால்)
ஐப்பசியில் மழை வரும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
மழை நிற்கும் காலம்
மழை பெய்யப் போவதை அறிந்ததைப் போன்று மழை நிற்கும் காலத்தையும் நமது முன்னோர்கள் அறிந்து அதனைப் பழமொழிகளில் பதிவு செய்து வைத்தனர். ஐப்பசியில் அடைமழை பொழியும். அதன் பின் மழையின் அளவு குறைந்து கொண்டே வந்து கார்த்திகை மாத இறுதிக்குள் மழை பெய்வது நின்றுவிடும். அதற்கு மேல் மழை பொழியாது. இத்தகைய மழை நிற்கும் காலதத்தை,
‘‘கர்ணனுக்கு மேலே கொடையும் இல்லை
கார்த்திகைக்கு மேல் மழையுமில்லை’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.
உலகில் மிகச் சிறந்த கொடையாளி கர்ணனே ஆவான். அவனை மிஞ்சும் அளவிறகு யாரும் கொடையில் சிறந்து விளங்கவில்லை. அவனைப் போல் சிறந்த கொடையினை யாரும் அளிக்கவுமில்லை. அது போன்று கார்த்திகை மாதம் முடிந்து விட்டால் மழைக் காலம் முடிந்து விடும். மார்கழியில் பனிக்காலம் தொடங்கி விடும். இதனையே இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.
மழையின் தீமை
மழை கொடுக்கவும் செய்யும்; கெடுக்கவும் செய்யும். மழை அளவுடன் பெய்தால் உலகம் செழிக்கும். அனைத்து வகையான உயிரினங்களும் மிகழ்ச்சியாக வாழும். ஆனால் அளவுக்கு அதிகமாக மழை பொழிந்தால் பல உயிரினங்களும் துன்புறும். இதனையே,
‘‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை’’
என்ற குறளில் வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
சில நேரங்களில் மழை பொழியாமல் போய் அனைத்து உயிரினங்களும் துன்புற நேரிடுவதும் உண்டு. மழை பொய்த்துப் போனால் உலக உயிரினங்கள் அனைத்தும் வாடிப் போய் இறப்பின் விளிம்பிற்குச் செல்வர். இதனை,
‘‘மழை பெய்தும் கெடுக்கும்
பெய்யாமலும் கெடுக்கும்’’
என்ற பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
மேலும் கோடை காலத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்து விடும். அப்போது மழை தேவைப்பட்டாலும் பொழியாது. மழை பெய்யப்போகிறது போல் வானில் மின்னல், இடி தோன்றும். ஆனால் மழை பொழியாது. அனைவரது எதிர்பார்ப்பையும் கெடுக்கும். இத்தகைய இயற்கை நிகழ்வை,
‘‘கோடை குமுறிக் கெடுக்கும்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
கோடை காலத்தில் மழை பொழிவது போல் வானத்தில் அறிகுறிகள் ஏற்பட்டாலும் மழை பொழியாது என்ற முன்னோரின் அனுபவத்தை உள்ளீடாகக் கொண்டு இப்பழமொழி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மனிதன்-வானம்
வானத்திலிருந்து பொழியும் மழை கெடுத்தாலும் உலக உயிர்கள் அனைத்தின் வாழ்விற்கும் ஆதாரமாக விளங்குகின்றது. வானம் என்றும் பழி வாங்காது. ஆனால் மனிதன் பழிவாங்கும் குணம் உடையவன். ஆவன் சக மனிதனுக்குத் தீய வினைகளைச் செய்வான். ஆனால் இயற்கைக்கு மாறாக மனிதன் செயல்பட்டாலும் அதற்குப் பதிலாக வானம் மழையைத் தருகின்றது. வானத்தின் செயலையும் மனித குணத்தின் இயல்பையும் ஒப்பிட்டுக் கூறுவதாக,
‘‘வானம் நினைத்தால் மழை
மனிதன் நினைத்தால் வினை’’
என்ற பழமொழி அமைகிறது.
இயற்கையை உணர்ந்து மனிதன் வாழ்ந்தால் சிறப்பாக வாழலாம். இயற்கையே மனிதனுக்கு ஆசிரியனாக அமைந்து அனைத்தையும் தெரியப்படுத்துகின்றது. இயற்கையை உணர்ந்து வாழ்ந்து அதற்கேற்றாற்போன்று நமது வாழ்வை அமைத்துக் கொள்ள நமது முன்னோர்கள் கூறிய மழை பற்றிய பழமொழிகள் நமக்குப் பண்பாட்டுப் பெட்டகங்களாக பயன்படுகின்றன எனலாம்.