Search This Blog

Tuesday, April 14, 2020

டாக்டர்.ஆபிரகாம் கோவூரின் சவால்கள்:

ஏப்ரல் 10, 1898 -ஆபிரகாம் கோவூர் என அழைக்கப்பட்ட பகுத்தறிவாளர், உளவியலாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல பரிமாணங்கள் கொண்ட டாக்டர் கோவூர் பிறந்த நாள்.
ஆழ் மனதில் பதியப்படும் நம்பிக்கைகள் ஒரு மனிதனை அவற்றின் பால் கட்டிப் போட்டு ஆட்டிப் படைக்கவல்லவை!
பேய் பிசாசு பில்லி சூனியம் என சில மனிதர்கள் நம்பும் மூட நம்பிக்கைகளால் அவர்களின் தன்னம்பிக்கை தகர்க்கப்பட பலவீனமான சிந்தனைகளுக்கு மனிதன் அடிமையாகி மடமைச் சிந்தனை, சொல் செயல் வடிவம் கொள்கின்றான்!
எதை நம்புகிறோமோ அதுவாகவே நாம் மாற எம் ஆழ் மனதின் ஆற்றல்கள் காரணமாகின்றன!
இதையே அறிவியலில் வைத்தியர் கோவூர் நிரூபித்தார்.
பலரை மூட நம்பிக்கைகளில் இருந்து மீட்டுக் காத்தார்!

இவர், கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 1898ஆம் ஆண்டு ஏப்பிரல் 10ஆம் நாள், மார் தொம்மா சிரியன் திருச்சபையின் தலைவரான கோவூர் ஈய்ப்பெ தொம்மா காத்தனாரின் மகனாகப் பிறந்தார்.
கொல்கத்தாவில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரிவுரையாளராக இருந்த கோவூர், தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைக் கொழும்பில் கழித்தார்.
இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து 1959 இல் பணி ஓய்வு பெற்றார்.
கல்லூரிப் பணி ஓய்வு பெற்ற பின்னரே, ஆவிகள் அவற்றின் விந்தை நிகழ்வுகள் தொடர்பான தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கி இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார்.

தான் கடவுளின் அவதாரம், அல்லது தெய்வீக ஆற்றல் உள்ள மகான் என்று சொல்லும் அனைவருமே பொய்யர்கள், ஏமாற்றுவாதிகள் என்பதை நிறுவுவதே கோவூரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.
Rationalist Association of Sri Lanka என்னும் சங்கத்தைத் தோற்றுவித்து, வெகு காலம் அதன் தலைவராக இருந்தார்.
அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்டவர் கோவூர்.
ஆவி, பேய் ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்று ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவரின் உறுதியான கருத்தாகும்.
அவை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டாருள், அத்துறைப் பணிக்காக மின்னசோட்டா மெய்யறிவு நிலையம் (இப்போது இந்நிறுவனம் செயல்பாட்டில் இல்லை) கவுரவ முனைவர் பட்டம் வழங்கியது -- இத்தகைய பட்டங்களை முதலில் இருந்தே எதிர்த்து வந்த கோவூர், முனைவர் பட்டத்தைத் திருப்பி அனுப்பினார்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்முறைகள் மூலம், அவர்கள் திறமைகளை மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலட்ச சிறீலங்க ரூபாய் பரிசளிக்க அவர் தயாராக இருப்பதாக அறைகூவினார்.
தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். இறுதி வரையில் எவருமே அப்பரிசை வெல்லவில்லை.
டாக்டர்.கோவூரின் சவால்கள்:
முத்திரையிடப்பட்டுள்ள உறையின் உள்ளே ஒரு கரன்சி நோட்டின் வரிசை எண்ணைப் படித்துக் காட்டுக.
ஒரு கரன்சி நோட்டினைப் போன்று மற்றொரு கரன்சி நோட்டினை உண்டாக்கிக் காட்டுக.
கடவுள் துணையால் பாதத்தில் எவ்விதப் புண்ணோ, கொப்பளமோ ஏற்படாமல் அரை நிமிட நேரம் எரியும் தணலில் அசையாமல் நின்று காட்டுக.
நான் கேட்கும் ஒரு பொருளை ஒன்றுமில்லாமல் (சூனியத்தில்-வெற்றிடத்தில்) இருந்து உண்டாக்கிக் காட்டுக.
மனோபலத்தைப் பயன்படுத்தி ஒரு திடப் பொருளை அசைத்தோ, வளைத்தோ காட்டுக.
தொலைவில் உணர்தல் ஆற்றலைப் பயன்படுத்தி மற்றொருவன் நினைப்பதை வெளியில் எடுத்துக்கூறுக.
பிரார்த்தனை, ஆத்மபலம், புனித தீர்த்தம், விபூதி, ஆசீர் வாதம் இவை போன்றவற்றின் மூலம் துண்டிக்கப்பட்ட ஒர் உடல் உறுப்பை ஓர் அங்குல நீளம் வளரச் செய்து காட்டுக.
யோக சக்தியால் ஆகாயத்தில் எழுப்பிக் காட்டுதல் அல்லது மிதப்பது போல் செய்து காட்டுக.
யோக சக்தியால் ஐந்தே மணித்துளி ஐந்து நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுக.
நீரில் நடந்து காட்டுக.
உன் உடலை ஓர் இடத்தில் இருக்க வைத்துவிட்டு வேறு ஓர் இடத்தில் இவ்வுடலை உருவாக்கிக் காட்டுக.
யோக சக்தியால் அரை மணி நேரம் சுவாசிப்பதை நிறுத்திக் காட்டுக.
ஆழ்நிலை தியானத்தாலோ, வேறு எவ்வகை தியானத்தாலே
படைப்பாற்றல் மிக்க நுண்ணறிவையோ, பேரறிவையோ பெருக்கிக் காட்டுக.
நிழற்படம் பிடிப்பதற்காக ஓர் ஆவி அல்லது ஒர் பேயினை நேரில் தோன்றச் செய்க.
நிழற்படம் பிடிக்கும்போது படத்தாளில் பதிவாகாதவாறு உன்னை மறைத்துக் காட்டுக.
மறுபிறவியின் விளைவாலோ, நல்ல அல்லது கெட்ட ஆவிபிடித்து இருப்பதாலோ உனக்குத் தெரியாத மொழியினைப் பேசிக்காட்டுக.
பூட்டப்பட்ட அறையிலிருந்து தெய்வீக ஆற்றலால் வெளியே வந்து காட்டுக.
மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளைக் கண்டுபிடித்துக் காட்டுக.
வெறும் நீரை பெட்ரோலாகவோ, ஒயினாகவோ மாற்றிக் காட்டுக.
ஒயினை ரத்தமாக மாற்றிக் காட்டுக.
எனக்கு சாவைக் கண்டு அச்சமில்லை; எனவே, என்னை புதைக்க வேண்டாம்” என்று தன் உயிலில் எழுதி வைத்த கோவூர், தன் கண்களை ஒரு கண் வங்கிக்குத் தானமாக அளித்தார்; தன் உடலை மருத்துவக்கல்லூரிக்கு ஆய்வுக்காகவும் தன் எலும்புக்கூடு தற்சுட்டன் கல்லூரியின் அறிவியல் ஆய்வகத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்.
கோவூரின் நூல்களிலுள்ள நிகழ்வாய்வு (case study) உண்மை நிகழ்ச்சிகளை பல்வேறு நாடுகளில் பல பத்திரிகைகளும், செய்தித் தாள்களும் தொடர்ச்சியாக வெளியிட்டன.
அக்கதைகளுள் ஒன்று, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அவருடைய நூலின் மற்றொரு உண்மைக்கதை, 'நம்பிக்கை' என்ற பெயரில் தமிழ் நாடகமாகப் பலமுறை அரங்கு நிறைந்த அவையோர் முன் நடித்துக் காட்டப் பட்டது.

Saturday, April 11, 2020

சங்கடஹர சதுர்த்தி.


விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். வருடம் முழுவதும் வரும் சங்கடஹர சதுர்த்தியை விட, மஹா சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானது.
விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடியது மஹா சங்கடஹர சதுர்த்தி. இந்த விரதம் இருந்தால் ஆனந்தத்தை அடைவதோடு சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.

விரதம் இருக்கும் முறை

மஹா சங்கடஹர சதுர்த்தியன்று நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப் பெருமானின் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.
ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்துப் பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து சந்திரனை தரிசித்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். பிறகு இரவு உணவு எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் மாலையில் விநாயகப் பெருமானின் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். விநாயகர் துதி பாடல்கள், விநாயகர் அகவலை சொல்லி வழிபடலாம். 

விரதத்தின் பலன்கள்

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நோய்கள் குணமடைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் துன்பங்கள் விலகி மகிழ்ச்சியான நிலையை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் சனியின் தாக்கம் குறையும். நினைத்ததை நிறைவேற்றும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை மனமுருகி வழிபட்டு கணபதியின் அருளைப் பெற்றிடுங்கள்.

படித்துப் பாருங்கள் உருசிக்கும் சின்னஞ் சிறுகதை !

”விமலா… ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி; அப்புறம், சூடா ஒரு கப் காபி கொடு.”
தண்ணீரையும், காபியையும் கொண்டு வந்து வைத்தாள் விமலா.
“விமலா… அப்பா ஏன் கொல்லைப் புறத்தில் உட்கார்ந்து இருக்கார்?”
”ம்… நீங்களே கேளுங்க அந்த கண்றாவியை.”
காபியை ஒரே மடக்கில் குடித்தவன், தந்தையின் அருகில் வந்தான். அவரது தோளை ஆதரவாக பற்றினான்.
“அப்பா… எழுந்திரிச்சு உள்ளே வாங்க.” தந்தையின் கையை மென்மையாக பிடித்து அழைத்து வந்து, சோபாவில் அமர்த்தினான்.
“ஏம்பா என்னமோ மாதிரி இருக்கீங்க?”
அவர் சொல்லத் தயங்கினார்.
“எதுவா இருந்தாலும் சொல்லுங்கப்பா.”
“அவர் சொல்ல மாட்டார்… நானே சொல்றேன்… கரன்ட் பில்லும், ஸ்கூல் பீசும் கட்டிட்டு வாங்கன்னு குடுத்த, பத்தாயிரம் ரூபாயை தொலைச்சுட்டு வந்து நிக்கறார்.
கேட்டா, “எங்கே வெச்சு தொலைச்சேன்னே தெரியலைமா…’ ன்னு சொல்றார்.”
அவர் முகத்தைப் பார்க்க பாவமா இருந்தாலும், 10 ஆயிரம் ரூபாய் போனதில், அவனுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
விமலா மேலும், அவனை சூடேற்றினாள்…
“இந்த அளவுக்கு அஜாக்கிரதையும், பொறுப்பில்லாமையுமா ஒருத்தர் இருப்பாங்க. இவர், பேங்கில வேறெ கேஷியரா இருந்தாரு. எப்படித்தான் இத்தனை காலம் கேஷியர் வேலை பார்த்தார்னே தெரியலை.”
”விமலா… நீ கொஞ்சம் பேசாம இரு. நான்தான் விசாரிச்சிட்டு இருக்கிறேன்ல்ல.”
”எங்க வெச்சுப்பா தொலைஞ்சிச்சு?” தந்தையிடம் கேட்டான் கதிரேசன்.
”அதுதாம்பா எனக்கும் புரியலை. விமலா கிட்டே பணத்தை வாங்கிட்டு, ஈ.பி., ஆபீசுக்கு போயிட்டு இருக்கும் போது, நம்ம எதிர்த்த வீட்டு ரிட்டையர்டு போஸ்ட் மாஸ்டர் சேஷாத்ரியை வழியில பார்த்தேன்.
அவரும், ஈ.பி., ஆபீசுக்கு தான் போறேன்னு சொன்னதும், நானும், அவருமா பேசிட்டே நடந்து போனோம். அங்க ஒரே கூட்டமா இருந்தது.
கூட்டம் குறையட்டும்ன்னு, நானும், அவருமா ஒரு மர நிழல்ல உட்கார்ந்தோம். தாகமா இருக்குன்னு, ரெண்டு பேரும், ஆளுக்கு ஒரு இளநியை குடிச்சிட்டு, நானே காசைக் குடுக்கலாம்ன்னு திரும்பிப் பார்த்தா, “பேக்’கை காணோம். கடைசியில, இளநீருக்கு போஸ்ட் மாஸ்டர் தான் காசை கொடுத்தார்.”
”அந்த இளநீர்க்காரன் எடுத்திருப்பானோ!"
“இல்லப்பா… அவன் என் முன்னாலதான் இருந்தான். பின்னால, இருந்த வேற யாரோ தான், எனக்குத் தெரியாம எடுத்திருக்காங்க.”
விமலா குறுக்கிட்டாள்…
”பணப் பைய யாராச்சும் பின்னால வைப்பாங்களா? சுத்த கோமாளித்தனமா இருக்கு. சொந்தமா சம்பாத்தியம் இருந்தாத்தானே, காசோட அருமை தெரியும். என்னோட புருஷன் சம்பாதித்ததை, வேறெ எவனோ திங்கணும்ன்னு விதி.”
”இந்த ஒரு தடவை தானம்மா இப்படி நடந்திச்சு. ரிட்டையர்டு ஆனதுக்கப்புறம், இத்தனை நாளா, நான்தானே கஷ்டப் பட்டுட்டு வர்றேன். அப்பெல்லாம், ரொம்ப ஜாக்கிரதையாத்தானே இருந்தேன்.”
”ஒரு தடவை தொலைத்தாலும், மொத்தமா, 10 ஆயிரம் ரூபா… சர்வ ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். அங்க, என்னோட வேலை பார்த்தவங்க நின்னுட்டு இருந்தாங்க. இங்க, என்னோட சிநேகிதனை பார்த்தேன்னு சொல்லி, நாள் முழுக்க வெட்டிப் பேச்சு பேசிட்டு நிற்கக் கூடாது,” என்று பொரிந்து தள்ளினாள் விமலா.
”விமலா… கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு. என்ன இருந்தாலும், அவர் என்னோட அப்பா.”
”ஆமா நீங்க தான் மெச்சிக்கணும். சும்மாதானே வீட்டில இருக்காரு. காலைலயும், சாயந்தரமும் குழந்தைகள ஸ்கூல்ல கொண்டு விடச் சொன்னா, “வயசான காலத்தில என்னால முடியலை…’ன்னு வயசை ஒரு சாக்கா வெச்சிட்டு, ஜகா வாங்கிக்கிறது; உருப்படியா பண்ணிட்டு இருந்தது, ரேஷன்ல பொருள் வாங்கறதும், கரன்ட் பில், ஸ்கூல் பீஸ் கட்டறதும் தான். இனி, இந்த ஒரு காரணத்தை வெச்சு, இந்த வேலையிலிருந்தும் ஜகா வாங்கிக்கலாம்ல்ல.”
கதிரேசன் குறுக்கிட்டான்.
“விடு விமலா… அவருக்கு முடியலைன்னா, நானோ, நீயோ போயி கட்டிட்டு வந்திடலாம். இதுக்குப் போயி…”
“ஆமா, நானோ, நீங்களோ போயி எல்லா வேலையும் செஞ்சிட்டு வந்திடலாம். இங்கே, இந்த பெரிய மனுஷன், நல்லா சாப்பிட்டுட்டு, அந்த கோவில், இந்த கோவில்ன்னு சுத்திட்டு வரட்டும். நேரத்திற்கு சமைச்சுப் போடத்தான் நான் இருக்கேன்ல.”
”ஏய் இப்ப என்ன பண்ணனும்ங்கற?” எரிச்சலுடனேயே கேட்டான் கதிரேசன்.
“எம்மேல ஏன் எரிஞ்சு விழறீங்க? கொஞ்ச நாள், உங்க தங்கச்சி வீட்டில கொண்டு போயி விடுங்க. அப்பத்தான்; நம்ம வீட்டோட அருமை தெரியும்.”
”என்ன மாப்பிள்ளே… ஏதோ, சூடான விவாதம் போல தெரியுது… சிவபூஜைல கரடி நுழைஞ்சிருச்சோ கேட்டபடியே வீட்டினுள் நுழைந்தார், விமலாவின் தந்தை சிவராமன்.
”அப்பா வாங்கப்பா… இந்த, வேகாத வெயில்ல ஏம்பா நடந்து வந்தீங்க? ஒரு ஆட்டோ புடிச்சா, பஸ் ஸ்டாண்டிலிருந்து, நம்ம வீட்டிற்கு மிஞ்சிப் போனா, நாற்பதோ, ஐம்பதோ கேட்பான்.”
”நடக்கிறது உடம்புக்கு நல்லதுதானேம்மா. சரி…சரி… இந்த பையில பழங்களும், சிப்சும் இருக்கு. குழந்தைகள் வந்தா குடு. மொதல்ல, இதை போயி உள்ளே வெச்சிட்டு வா.”
பையை கிச்சனில் வைத்து விட்டு, தந்தைக்கு லெமன் ஜூசை எடுத்து வந்தாள் விமலா.
”அப்பா இந்தாங்க, “ஜில்’லுன்னு குடிங்க.”
“அதை இப்படி வெச்சிட்டு இந்தப் பக்கம் வாம்மா!”
ஜூஸ் நிரம்பிய கிளாசை, மேஜையின் மேல் வைத்து விட்டு, தந்தையின் அருகில் வந்தாள் விமலா.
“என்னப்பா?”
இரண்டு உள்ளங்கையையும் ஒன்றோடு ஒன்று நன்றாக தேய்த்து சூடாக்கி, “பளார்’ என்று, தன் மகளின் கன்னத்தில் அறைந்தார் சிவராமன்.
சிவராமனின் ஐந்து விரல்களும், விமலாவின் கன்னத்தில், அச்சு பதித்தாற்போல் பதிந்தன.
விம்மி அழுது கொண்டே, ”என்னப்பா…” என்றாள் விமலா.
கதிரேசனும், ராமநாதனும் அதிர்ச்சியுடன் சிவராமனையே பார்த்தனர்.
”மாமா… வந்து…” என்று வார்த்தை கிடைக்காமல் திக்கினான் கதிரேசன்.
” நான் வந்து இருபது நிமிஷம் ஆச்சு மாப்பிள்ளே.. பொண்டாட்டி பேச்சுக்கு மதிப்பு குடுக்க வேண்டியதுதான். தப்பில்ல..
ஆனா, எந்த காலத்திலேயும், எந்த நேரத்திலேயும், தன்னைப் பெத்தவங்களையும் விட்டுக் குடுக்கக் கூடாது. குடும்பத்தில் முதல் மரியாதை அவங்களுக்குத்தான். அதுவும் அவுங்க மனைவிய இழந்தவங்க.. அதுக்கப்புறம்தான் பொண்டாட்டி, குழந்தைகள்..
நீங்களோ, சம்பந்தியோ அவளை அடிச்சா, புருஷன் வீட்டில எல்லாருமா சேர்ந்து, என்னை கொடுமை பண்ணறாங்கன்னு இவ போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்கலாம். ஆனா, நானே ரெண்டு சாத்து சாத்தினா, எவன் கேட்கப் போறான்?😳
நான் வர்றேன் மாப்பிள்ளே,
வர்றேன் சம்பந்தி.
காத்தால நடக்கும் போது, அப்படியே நம்ம வீட்டுக்கும் அடிக்கடி வாங்க. கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருக்கலாம்,” என்று கூறியபடியே, நடையைக் கட்டினார் சிவராமன்.
”அப்பா…” என அழுதபடியே கூப்பிட்டாள் விமலா.
”என்னம்மா?”
“இந்த ஜூசையாவது குடிச்சிட்டு போங்கப்பா”
இந்த வீட்டை கட்டிக் காத்து உன் கணவனை வாழ வைத்து விட்டு,இப்போது மனைவியை இழந்து நிக்கும் மாமனார, எப்போ நீ நல்ல மனசோட அப்பான்னு நினைக்கிறீயோ..அப்போ என்னைக் கூப்பிடு, சாப்பாடே சாப்பிட்டுட்டு போறேன்.” சரியா...
கம்பீரமாக நடந்து செல்லும் தன் சம்பந்தியை, வாஞ்சையுடன் பார்த்தார் ராமநாதன்..
Thanks 
Abdul Majeed