Search This Blog

Friday, March 20, 2020

தமிழர்களிடம் சாதி இருந்ததில்லை | மா.சோ. விக்டர்,மொழி ஆய்வாளர்



 மொழி ஆய்வுத்துறையின் முக்கிய பிரிவுகளில் முதன்மையானது சொல்லாய்வுத் துறை. ஒரு சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிந்து விளக்கிக்கூறும் சொல்லாய்வு மூலம் ஒரு மொழியின் செவ்வியல் தன்மையை உணர முடியும். சொல்லாய்வுத் துறையில் தன்னிகரற்றுத் திகழ்ந்து தமிழுக்கு அணி சேர்த்தவர் பாவாணர். பாவாணருக்குப் பிறகு மொழி ஆய்வை மிக நுட்பமாக முன்னெடுத்துச் சென்றவர்கள் சிலரே. அவர்களில் தனித்துவமான கோணத்தில் தமிழின் தொன்மையை ஆய்ந்து வருபவர் மொழியறிஞர் .சோ. விக்டர். இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவரது தமிழறிவு மிகப் பரந்தது என்றால் மிகையில்லை.

அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டையைச் சேர்ந்தவர் விக்டர். இவரது முதல் ஆய்வு நூலான "எபிரேயத்தின் தாய்மொழி தமிழே' நுட்பமான கவனம் பெற்றது. இந்த நூலைத் தொடர்ந்து தற்போது வெளிவந்திருக்கும் பத்தொன்பது தமிழாய்வு நூல்கள், தமிழ்மொழியின் தொன்மையை ஆணித்தரமான தரவுகளோடு முன்வைக்கின்றன. இவரது ஆய்வின் தெளிந்த குரல், தமிழ்மொழி தனது தாக்கத்தை உலக மொழிகளில் செலுத்தியிருப்பதை நிறுவுகிறது.

""எனது சொந்த ஊர், இன்றைய அரியலூர் மாவட்டத்தின், ஆண்டிமடம் அருகேயுள்ள வரதராஜன்பேட்டை. ஒரு எளிய கத்தோலிக்க கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எனது பெற்றோர் கடலூரில் உள்ள தூய வளனார் உயர்நிலைப்பள்ளியில் என்னைச் சேர்த்து விட்டார்கள். முதல் வகுப்பு தொடங்கி பள்ளி இறுதி வகுப்பாகிய பத்தாம் வகுப்பு வரை அங்கேயே பயின்றேன். அது மிகச்சிறந்த பள்ளி. அந்தப் பள்ளியில் எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர்- புலவர் நற்குணம் என்ற தமிழறிஞர். எனக்குள் தமிழுணர்வை விதைத்தவர் அவர்தான். இன்னொரு பக்கம் நான் பள்ளியிறுதி வகுப்பு படிக்கிற காலகட்டத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சி என்னை வெகுவாகப் பாதித்தது. அண்ணாவின் பேச்சும், அவர் எழுத்தும் என்னைக் கவர்ந்தன. அவர் மொழிநடை அந்தக் காலகட்டத்தின் புதுமை, எழுச்சி ஆகியவற்றின் கலவையாக இருந்தது. அண்ணா வைத் தொடர்ந்து கலைஞரின் பேச்சும் எழுத்தும் என்னைக் கவர்ந்தன. பதினைந்து வயது இளைஞனாக, முப்பது கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் சென்று, சிதம்பரத்தில் அவரது பேச்சைக் கேட்கச் சென்றேன். தமிழ் இலக்கியம் குறித்து அவர் பேசியவை என்னை சங்க இலக்கியம் வாசிக்க வைத்தது. அத்தனை சிறிய வயதில், நமது சங்க இலக்கியத்தில் தமிழரின் வாழ்வும் வரலாறும் இருப்பதை எண்ணி ஆச்சரியப்பட்டேன்.
       இன்னொரு பக்கம் எனது பள்ளியில் நடத்தப்பட்ட மறைக் கல்வி வகுப்புகளில் பைபிள் வாசிப்பு என்பது மிக முக்கியமான ஒரு பகுதியாக இருந்தது. அந்த வயதில் பைபிளின் மொழியும், அதில் கூறப்படும் வரலாறுகளும், அந்த வரலாறுகள் நிகழ்ந்த தாகக் கூறப்படும் நாடுகளும் பற்றிய ஒரு சித்திரம் எனக்குள் எழுந்தது. பின்னர் பைபிளில் குறிப்பிடப்படும் இடங்கள் இன்றைய உலக வரைபடத்தில் எந்த நாடுகளில் இருக்கின்றன, அங்கே வசிக்கும் மக்கள் யார், பேசும் மொழி, அவர்களது வழிபாடு, பண்பாடு பற்றி நூலகங்களில் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித் தேன். பத்தாம் வகுப்பு முடித்த கையோடு வேலைக்குச் செல்ல வேண்டிய குடும்பச் சூழல் இருந்ததால், திருச்சியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து இரண் டாண்டுகள் பயின்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். மழைக்குக்கூட கல்லூரியில் ஒதுங்க முடியாத வாழ்க்கைச் சூழல். ஆனால் ஆசிரியர் பணி அமைதியாகச் சென்று கொண்டிருந் தது. எனக்கு ஒரு வகையில் அது சாதகமாக அமைந்து விட்டது.
             தமிழ் இலக்கியங்களை ஒன்றுவிடாமல் வாசிக்கத் தொடங்கினேன். இந்த நேரத்தில் பெருஞ்சித்திரனார் நடத்தி வந்த தனித்தமிழ் இதழ்கள் எனக்குக் கிடைத்தன. அவர் வெளியிட்ட "தென்மொழி' இதழின் தொடர் வாசகனாக மாறினேன். அந்த இதழில்தான் தேவநேயப் பாவாணர் எனக்கு அறிமுகமானார். "தென்மொழி'யில் அவரது கட்டுரைகள் அவ்வப்போது வெளிவரும். அந்த கட்டுரைகள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இறுதியாக பாவாணர் எழுதிய இரண்டு நூல்கள் பற்றி "தென் மொழி' மூலம் அறிந்து, அவற்றை வாங்கிப் படித்தேன். அந்த இரண்டு புத்தகங்களும் எனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டன என்றுதான் சொல்ல வேண்டும். "தமிழ் வரலாறு', "தமிழர் வரலாறு' ஆகிய இரண்டு புத்தகங்கள்தான் அவை. இவற்றைப் படித்து முடித்த தும், பாவாணரின் அத்தனை ஆய்வு நூல்களையும் தேடிப்பிடித்துப் படித்தேன். கடற்கோளால் அழிந்து போன குமரிக்கண்டம் குறித்தும், தமிழர்கள் உலகெங்கும் சென்று பரவி வாழ்ந்தது குறித்தும் தனது ஆய்வில் கோடிட்டுக் காட்டுகிறார். அதே நேரம் தமிழ் மொழியின் சொற்தொகுதியில் எவை தமிழ்ச் சொற்கள், எவை பிறமொழிச் சொற்கள், அவற்றை எப்படிக் கண்டறிவது என்று தமிழுக்கு ஒரு புதிய பரிணாமத்தை- புதிய கண்ணோட் டத்தை பாவாணர்தான் முதலில் வகுத்தார். விரிவான மொழி ஆய்வுக்கு வித்திட்டவர் பாவாணர்தான். பாவாணர் வழியில் நான் சொல்லாய்வைத் தொடங்கக் காரணமாக அமைந்தது பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் உள்ள "ஊர்' என்ற சொல். ஆபிரகாம் குடியேறி வாழ்ந்த பகுதியின் பெயர், எபிரேய மொழி எனப்படும் ஹீப்ரு மொழியிலும் "ஊர்' என்றே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஊர் என்பது தூய தமிழ்ச் சொல்லாயிற்றே! இது எப்படி அங்கே போனது என்ற கேள்வியோடு ஆய்வில் இறங்கினேன். இப்படித் தான் கடந்த இருபது ஆண்டுகளாக சொல்லாய்விலும் மொழி யாய்விலும் எனது வாழ்வைச் செலுத்தி வருகிறேன்.''