Search This Blog

Thursday, January 30, 2020

''அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும்'' பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்.

*''அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும் ''எனும் தலைப்பில் ''சைவ சித்தாந்தம் '' இணையபக்கத்தில் அன்பர் பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம் அவர்கள் எழுதிய கட்டுரையினை அன்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.*
''அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும்''
பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்.
நாற்பத்து இரண்டே ஆண்டுகள் வாழ்ந்தாலும் தமிழுக்கும், தமிழ் நாடகவியலுக்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அளித்த கொடை அளப்பரியது. அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியரல்லர். தத்துவத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மலையாள மண்ணின் மைந்தனாகப் பிறந்திருந்தாலும், அவரின் தமிழ்ப் பற்றுக்கு நிகர் அவரே.
மனோன்மணியம் நூலுக்கு அவர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாகத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால், அன்றைய தமிழக அரசின் சார்பாக தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கியவர்கள், சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் இரண்டாம் பத்தியின் அனைத்து வரிகளையும் மிகக் கவனமாக நீக்கிவிட்டு கடைசி வரியை மட்டும் வெட்டியெடுத்து, முதல் பத்தியோடு ஒட்ட வைத்துப் புதிய தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கினர். இப்போது அந்த இரு பத்திகளையும் காண்போம்:
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து நீக்கப்பட்ட அவ்வரிகள் சுந்தரம் பிள்ளையவர்களின் தமிழுணர்வையும், மெய்யுணர்வையும் பறைசாற்றுபவை.
“பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்”

என்ற இரண்டு வரிகள் தரும் பொருள்: அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் படைத்து, காத்து, முடிவில் அவைகளைத் தன்னுள் ஒடுக்கும் ஓர் எல்லையற்ற பரம்பொருளாம் இறைவன் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் எப்போதும் இருந்தபடி நிலைப்பேறாக இருப்பதைப் போல, என் தமிழ்த்தாய் என்றும் மாறாத சீரிய இளைமையோடு நிலைத்திருப்பாள் என்பதாகும்.
இந்த இரண்டு வரிகள் சொல்லும் செய்திகள் மிகமுக்கியமானவைகள்; ஒன்று, சுந்தரம்பிள்ளையவர்கள் இறைக்கொள்கை உடையவர் என்பது; இரண்டு, தமிழ்மொழியும் இறைவனைப் போல் என்றும் மாறாத இளமையுடன் இருக்கின்றது என்பது.
தமிழன்னையின் பெருமை சாற்றும் இந்த இரண்டு வரிகளை ஏன் நீக்கவேண்டும்?
இந்த வரிகளில் ‘உயர்வு நவிற்சி’யாக தமிழன்னை என்றுமுள்ள பரம்பொருளுக்கு இணையாக உயர்த்திப் புகழப்பட்டாள்; இவை பெருமைக்குரியவை அல்லவா? எந்தமதத்தையும் குறிக்காமல் பொதுவாகப் ‘பரம்பொருள்” என்று குறித்திருப்பது ‘மதச்சார்பின்மைக்கும்’(secular) ஒத்துவருகிறதே! பின் ஏன் நீக்கினார்கள்?
உங்களுக்குக் குழப்பமாக இருக்கிறதா? குழம்பத் தேவையில்லை! நீக்காவிட்டால், கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் தமிழக அரசு, பரம்பொருளாம் ‘இறைவனின்’ இருப்பை ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ? தமிழக சூழலில் secular என்றால் ‘இறைமறுப்பு’ என்பதாகவே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
கவியுள்ளத்தைப் புறம்தள்ளி வசதிக்காக வரிகளை நீக்கியது அறமற்ற செயல்.
தமிழ்த்தாய் வாழ்த்து நாம் அரசு விழாக்களில் பாடுவோம் என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடவில்லை. அவரின் ஒப்பற்ற காவியத்தில் தமிழைப் போற்றித் தொடங்கவே பாடினார். அவரின் பாடலின் கருத்துப் பிடிக்கவில்லையா? விட்டுவிட வேண்டியதுதானே!
அதை விடுத்துக் கவியுள்ளத்துக்குப் புறம்பாக வெட்டி-ஒட்டுவது அறச்செயலுக்கு மாறானது.
அக்காலச் சொல் வழக்குகள், நம்பிக்கைகள், வரலாறு போன்ற உணர்வுகளை உள்ளடக்கிப் பாடியுள்ள கவிஞரின் கருத்துக்கு மாறாக, போற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பிக் கவிதையைச் சிதைப்பது எவ்விதத்தில் அறமாகும்?
திராவிடக் கொள்கைகளுக்கு வலுவூட்டும் பின்னுள்ள மூன்று வரிகளை ஏன் நீக்கவேண்டும்?
திராவிடம் திராவிடம் என்று ஒட்டுமொத்த தமிழர்களுமே திராவிடக் கருத்தியலை தங்கள் பண்பாடு என்று ஏற்கும்படிக்கு மூளைச்சலவை செய்தவர்களுக்கு, “தமிழ்த் தாயே, நீ நான்கு திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய நான்கு குழந்தைகளை உன் வயிற்றிலே சுமந்து பெற்ற பின்பும் என்றும் நீங்காத இளமையுடன் திகழ்கின்றாயே! உன்னை எங்ஙனம் வாழ்த்துவேன்?” என்னும் பொருள்படும்
“கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்”
என்ற வரிகள் தேனினைப் போல அல்லவா இனித்திருக்க வேண்டும்? பின் என் நீக்கினார்கள்?

தமிழின் பெயராலும், அடுக்கு மொழிச் சொற்களாலும் ஆட்சிக்கட்டிலைப் பிடித்தோர்களில் பெரும்பான்மையினர் தமிழரல்லர் என்பதால் அவர்களுக்கு இவ்வரிகளால் தமிழுக்குப் பெருமை சேர்வதை ஏற்றுக் கொள்ள இயலவில்லையோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
“ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து”
தமிழன்னையே! பேச்சு வழக்கு ஒழிந்தமையால் உலக வழக்கு அழிந்து ஒழிந்த வடமொழியான ஆரியம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே! என்ற வரி தமிழுக்குப் பெரும் பெருமை சேர்க்கும் விடயமல்லவா? பின் ஏன் நீக்கினார்கள்? தமிழரல்லாத அவர்களின் உள்ளீடான ஆரியப்பற்று இவ்வரி சொல்லும் செய்தியின் உண்மையைப் பொறுத்துக் கொள்ள விடவில்லையோ என்ற ஐயம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை..

பேசாப் பொருளைப் பேச . . .
முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்ற அணி அமைப்புகள், உட்பொருள்கள், நயங்கள், செம்மைகள் அனைவரையும் வியப்படையச் செய்பவை. இதுவரை முழுவதுமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை உள்வாங்கிச் சுவைக்க வாய்ப்புக் கிட்டாத தமிழன்பர்களுக்காகவும், தமிழ்த்தாய் வாழ்த்தின் ‘கண்’ பற்றியும் ‘காது’ பற்றியும் மட்டும் சிந்தித்துவிட்டு, சுந்தரனார் ‘உணர்த்த விழைந்த’ செய்தியைப் பேசாமல் போவது முழுமையான பார்வையாகாது என்பதாலும், தமிழன்னையை வணங்கி இதுவரை யாரும் பேசாப் பொருளைப் பேசத் துணிகின்றேன்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், இவ்விரண்டு பத்திகளுக்குப் பின்வருபவை எல்லாம், தமிழ்த்தாயின் பெருமையை, இரண்டு அடிகளில் ஒருபொருள் குறித்து பாடப்பட்ட பன்னிரண்டு பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன.
கடலும் தமிழ்த்தாய்க்கு ஒப்பாகாது--
கடல் குடித்த குடமுனி உன் கரை காணக் குருநாடில்
தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே!
“முன்னர் ஒரு காலம் பெருங்கடலையே குடித்துத் தன் வயிற்றில் அடக்கிய குறுமுனி அகத்தியர் தமிழ்மொழியின் கரை காண்பதற்காக இறைவனையே குருவாக நாடினார் என்பதால், என் தாயே! தமிழே!! தொடுகடலை உவமையாகச் சொல்லுவதுவும் உனக்குப் புகழ் ஆகாது!!!” என்று பாடிப் பரவசமடைகின்றார் கவிஞர். என்னே சுந்தரனாரின் தமிழ்ப் பெருமை! வியந்தல்லாவா போகிறோம் நாம்?

தமிழ் இலக்கணம் எம் இறைவனுக்கே எட்டாதது!--
ஒரு பிழைக்கா அரனார் முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே.

பாண்டிய மன்னனின் ஐயத்தைத் தீர்க்குமாறும், வறுமையில் வாடும் தருமிக்குப் பொற்கிழி பெற்றுத் தருவதற்காகவும் இறையனாரே பாடல் இயற்றிக் கொடுக்க, அப்பாடலில் ஒரு பொருட்பிழை நேர்ந்தது. அப்பிழையை தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவன் நக்கீரன் சுட்டிக்காட்ட இறைவன் பேச்சற்றுத் விழித்தார் (சிலேடையாக-தன் நெற்றிக்கண்ணை விழித்து நின்றதாக) என்று கூறப்படும் புராணக் கதையை உயர்வு நவிற்சிகொண்டு உவமித்து, தமிழின் இலக்கணத்தின் அருமை பெருமையைப் பறைசாற்றுகின்றார் சுந்தரனார்.
தமிழ்மொழி உலகின்மொழி! தோற்ற–நாசம் அற்ற முதுமொழி!!
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.

நம் இந்தியத் துணைக் கண்டத்துள் ஆரிய நான்மறை சாற்றும் வடமொழி ஆரியம் நுழைவதற்கு முன்பு வரை தமிழே பேச்சு மொழியாக எங்கும் இருந்தமையால், தொன்மொழியாகிய தமிழைத் ‘தோற்ற-நாசம்’ அற்றது என்று சொல்வது ஒன்றும் வியப்புக்குரியதல்ல என்கின்றார் சுந்தரனார். வடமொழியாம் ஆரியம் இங்கு வந்தேறிய மொழி என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளுறையாக உள்ளது.
காலத்தை வென்றவள் எம்தமிழன்னை!
வைகைநதி வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கடந்த தமிழேடு சொல்லும் செய்தி காலநதியால் தமிழுக்கு ஒரு அழிவும் நேராது என்பதே!!
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.

தமிழ்ஞானசம்பந்தப் பெருமானைப் ‘புனல்வாதம்’ என்னும் போருக்கு அழைத்த ‘வடமொழி விற்பன்னர்’களாம் சமணர்களின் “अश्थि नाश्थि – அஸ்தி நாஸ்தி” என்று எழுதப்பட்ட வடமொழி ஓலைச்சுவடி வைகைநதி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது;
அஸ்தி என்றால் உண்டு என்று பொருள். கடவுள் உண்டு என்று சொல்பவர்களை ஆஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது. நாஸ்தி என்றால் இல்லை என்று பொருள். கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நாஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது.

இந்த அத்தி நாத்தி எழுதிய ஏட்டைத்தான் சமணர்கள் மதுரையில் சம்பந்தருடன் செய்த புனல் வாதத்தில் வைகை ஆற்றில் விட்டார்கள். சமணர்களின் ‘அத்தி நாத்தி’ ஏடு வைகை ஆற்றின் போக்குடன் அடித்துச் செல்லப்பட்டது.
சம்பந்தர் ” வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் பதிகம் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டார். சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றில் எதிரேறி கரையையும் அடைந்தது. இவ்வாறு ஏடு எதிரேறிக் கரையை அடைந்த தலமே சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் ஆகும்.
சம்பந்தப் பெருமானால் எழுதப்பட்ட இறைவனைப்புகழும் ஏடு – திருஏடு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்திக்கரையேறி அடைந்த அகம் என்ற காரணப்பெயரால் திருவேடகம் எனப்பட்டது. இது மதுரையில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த ” வாழ்க அந்தணர்” என்ற திருப்பாசுரத்துக்கு பல தனிச்சிறப்புகள் உள்ளன.
இது ஒன்றே பன்னிரண்டு பாடல்களை உடையது. மற்றைய பதிகங்கள் எல்லாம் பதினொரு பாடல்கள் கொண்டவை.

இந்தப் பாசுரத்தை சம்பந்தர் தன் கையாலேயே எழுதினார். சம்பந்தரின் மற்றைய பாடல்களை ஏட்டில் எழுதி வந்தவர் அவருடைய தாய்மாமன் சம்பந்த சரணாலயர்.
சைவத்தின் கொள்கை விளக்கம் செய்த பாடலும், சைவ சமயத்தை மெய்ச்சமயம் என்று நிறுவிய பதிகமும் இதுவே.
இவ்வொரு பதிகத்துக்கு மட்டுமே சேக்கிழார் 22 பாடல்களில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
முதல் ஒன்பது பாடல்களின் யாப்பு வேறு; கடைசி மூன்று பாடல்களின் யாப்பு வேறு.

அஸ்தி நாஸ்தி அல்லது அத்தி நாத்தி என்பது சமண மதக்கொள்கை. அருகனை முதல்வனாக ஏற்ற சமணரின் ஆருகத மத மந்திரம் ” அத்தி நாத்தி”. ஒரே முடிவு என்றில்லாது பல முடிவாகக் கூறுதல். உண்டாம்-இல்லையாம், உண்டு-இல்லையாம், உண்டாம்-ஆயின் சொல்ல இயலாதாம், இல்லை-ஆயின் சொல்ல இயலாதாம், உண்டும்-இல்லையுமாம் ஆயின் சொல்ல இயலாதாம் என்பது போன்ற ஏழு பகுதிகள் உள்ளன. அதனால் இதை ஸப்த பங்கி வாதம் என்பர். ஸப்த என்றால் ஏழு. இது சமற்கிருதமொழி அல்ல; அர்த்த மகத மொழி என்னும் வடமொழி. மகதம் என்பது இன்றைய இந்தியாவின் பீகார் மாநிலம். சமணமும் வடமொழியும் இங்கிருந்துதான் வந்தது. பல திராவிடவாதிகள் சமணம் திராவிட மதம் என்றும், திருவள்ளுவர் சமணர் என்றும், சமணம்தான் தமிழை வளர்த்தது என்று எண்ணியும், எழுதியும், பேசியும் வருவது வேறு கதை.
மெய்யுணர்வினும் ஓங்கிநிற்கும் தமிழுணர்வு!
ஆனால், தமிழ்ஞானசம்பந்தப் பெருமானால் தமிழில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி வைகை நதியின் வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரை சேர்ந்தது என்பது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தில் வரும் தொன்மம். அத் தொன்மத்தையே சான்று காட்டி, காலமாகிய நதியின் ஓட்டம் தமிழுக்கு ஒருக்காலும் ஊறு விளைவிக்க இயலாது என்பதற்கான அறிகுறியே அந்நிகழ்வு என்கின்றார் சுந்தரனார். இதுவல்லவா மனோன்மணியம் சுந்தரனாரின் மெய்யுணர்வினும் ஓங்கி நிற்கும் தமிழுணர்வு! வார்த்தை வணிகர்களுக்குப் புரியாத நுண்நுண்ணுணர்வு!
இறைவனே தன் கைப்படத் தமிழன்னையின் திருவாசகத்தின் படி எடுத்து எழுதிவாங்கிக்கொண்டது இறைவனின் கடையூழிக் காலத் தனிமையைக் கழிப்பதற்கே! எம் மொழிக்கும் கிட்டாத மேன்மை! ஆயின், தமிழன்றோ இறைமொழி?
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே.
‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது தமிழ்ப் பழமொழி. நம்மை யெல்லாம் உருக்கும் திருவாசகம், அன்புருவாம் இறைவனை உருக்காதிருக்குமா? திருவாசகத்தில் உருகிய இறைவன் அவ் வாசகத்தைத் தன் திருக்கரங்களால் படி-எடுக்க விரும்பினான்; ஒரு வயோதிக அடியவரின் உருவில் தோன்றி, மணிவாசகரிடம் திருவாசகத்தை மீண்டும் சொல்லுமாறு வேண்டித் தன் கைப்படவே படியெடுத்துக் கொண்டான் சிற்றம்பலமுடையான்.

‘மாணிக்கவாசகன் சொல்ல, அழகிய சிற்றம்பலம் உடையான் கைப்பட எழுதியது’ என்ற அழகிய சிற்றம்பலம் உடையானின் திருவாசகப் பிரதியைச் சிற்றம்பலப் படியில் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள், மாணிக்கவாசகரிடம் சென்று, திருவாசகத்தின் பொருள் கூறுமாறு விண்ணப்பித்தனர்; ‘திருவாசகத்தின் பொருள் அம்பலக்கூத்தனே’ என்று கூறிவிட்டு, மணிவாசகர் இறைவனுடன் கலந்தார் என்பது தொன்மம்.
இங்கும் மெய்யுணர்வினும் ஓங்கியது தமிழுணர்வல்லவா?
இத்தொன்மத்தின் அடியாகப் பிறந்தது இவ்விரண்டு வாழ்த்து வரிகள்; என்ன அற்புதமான உயர்வு நவிற்சி!
கடையூழிக் காலத்தில் அனைத்தும் ஒடுங்க, இறைவன் மட்டுமே தனித்திருப்பான்; அவன் மீளவும் இப் பிரபஞ்சத்தைப் படைக்கும் முன்பு, ஒரு சிறிய இடைவேளை, ‘Small Break” வருமல்லவா? அப்போது, எம் தமிழன்னையின் திருவாசகத்தின் துணைகொண்டே அத் தனிமையை இறைவன் போக்கிக் கொள்வான்; அத்துணை பெருமை கொண்டது எம்தமிழ் என்று இறுமாக்கின்றார் சுந்தரனார்; இவ் வுணர்வெல்லாம் மெய்யுணர்வினும் ஓங்கிய தமிழுணர்வல்லவா?
சங்கப் பலகை – தமிழின் உண்மை வரலாற்றுக்குச் சான்று .
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.

தகுதியுடைய நூலுக்கே மதுரைச் தமிழ்ச்சங்கப் பலகை விரிந்து இடம் கொடுக்கும் என்பது மிகுந்த பெருமை கொண்ட உன் உண்மை வரலாற்றிற்கு ஒரு அடையாளம் என்று தமிழ் மொழியின் மெய்ச் சரிதத்தை வியந்து போற்றுகின்றார் கவிஞர். இங்கு “வியஞ்சனம்” என்ற சொல் “குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம்” என்ற பொருளாகும்.
வடமொழி உயர்வென்றும் தமிழ் மொழி அன்றென்றும் கூறுவோர் மதியிலாரே.
வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.
வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.

ஆரியமொழியே உயர்வென்ற, மனோன்மணியம் சுந்தரனாரின் காலத்திலிருந்த மக்களின் மனநிலையை மேற்கண்ட பாடல்கள் பதிவிட்டிருக்கின்றது. தமிழ்மொழியின் மேன்மை அறியாதவரே நிறைந்திருந்த காலம் என்பதை உணர்த்தும் பாடல்கள் இவை. சுந்தரம் பிள்ளையவர்களின் பின் கா.சு.பிள்ளை, மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் போன்றோரின் அரும்பணிகளால் தமிழன்னையின் பெருமை மீட்டெடுக்கப் பட்டது எனினும், இன்னும் அச்சப்பாடுகள் முற்றிலும் நீங்கிவிடவில்லை.
பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் – ஒருகுலத்துக்கு ஒரு நீதி : குறள் நீதியும் மநுநீதியும்
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி
அனைத்து உயிர்களும் பிறப்பினால் ஒருவரே!

அவரவர் செய்யும் தொழில் காரணமாகவே சிறப்புகள் வேறு வேராகக் காணப்படுகின்றன என்னும் குறள் கூறும் அறநெறியையும், நீதியையும் உணர்ந்தோர்கள் குலப் பிறப்பின் காரணமாகவே அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர் என்று மனிதகுலத்திற்குள் வேற்றுமை பாராட்டும் மநுநீதியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நீதியாம் குறள்நீதியின் மேன்மையையும், வடமொழி நீதிநூலாம் மநுநீதியின் மானுடத்திற்குப் புறம்பான தீமையையும் தமிழர்களுக்கு இனம் காட்டுகின்றார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள்.
திருவாசகத்தில் கரைந்தோர்கள் பிறவொன்றையும் கருதார்
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.

‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று பழமொழி கண்டவர் தமிழர். மனித மனங்களைக் கரைத்து, மனமாசுகளை நீக்கும் திருவாசகத்தில் கரைந்துபோனவர்கள் வேறு எந்த மந்திர உருவேற்றும் கண்மூடிக் கதறும் வழிபாடுகளை இயற்றமாட்டார்கள் என்று உறுதிபடக் கூறுகின்றார். திருவாசகத்தில் கரைந்துபோன அனுபவத்தையல்லவோ மேலை ஆரியரும் உணரும் வண்ணம் அருட்தந்தை ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உணர்த்துகின்றது. தமிழ்த் திருவாசகம் போலன்றி, ஆரியமொழி ஆரவார மந்திரங்கள் சடங்குகளே அன்றி உள்ளம் ஒன்றி வழிபாடியற்ற துணைபுரியா என்பது இங்கு தமிழின் மேன்மை குறித்து வலியுறுத்தப் பெறுகின்றது.
இறுதியாக,
மலையாள மண்ணில் ஆலப்புழை என்ற ஊரில் பிறந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழ் மொழியையே தாயாகப் பாவித்து வந்தவர்; அவரல்லவோ உண்மையான தமிழர்?

இச்செய்தியைப் பறைசாற்றும் அவர்தம் தமிழ்த்தாய் வாழ்த்தின் நிறைவுப் பகுதி இதோ:
நிற்புகழ்ந்து ஏத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின் பெரும் பழம்பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்
ஆயினும் நீயே தாய் எனும் தன்மையின்
மேய பேராசை என் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதி என்று இழைத்த இந் நாடகம்
வெள்ளியது எனினும் விளங்கு நின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறு விரல் அணியாக்
கொள் மதியன்பே குறியெனக் குறித்தே.
-மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை

நிறைவாக,
யாம் பெற்ற இன்பமாம் இவ்வுணர்வரிய தமிழ்த்தாய் வாழ்த்தின்பத்தை தமிழர் அனைவரும் பெற்று, எம் ஊன் பற்றி நின்ற தமிழ் உணர்வது ஓங்கி, அன்பால் அனைவரும் இன்புறப் பணிசெய்து, நிலமிசை தமிழால் இசைபட வாழ்ந்து, மறைத்தமிழ் கொண்டு வான் பற்றி நின்ற மறைப்பொருளோடு இரண்டறக் கலந்து இன்புற்று வாழ்க. (இந்நிறைவுரை, திருமூலதேவ நாயனாரின் திருமந்திரத்தில் உள்ள
‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும்தானே.’ என்ற ஊன் கலந்த பாடலால் நிறைந்தவை)

பெறர்க்கரிய இத் தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழராம் யாம் அனைவரும் பெற்றின்பமுறத் தந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்களுக்கு நன்றி கூற இவ்வொரு பிறவி போதுமா? நும் தமிழ் நுகர, நும் தமிழ் வாழ்த்த, யாம் பல்லாயிரம் மனித்தபிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே! தமிழ்த்தாய்க்கும், நுமக்கும் யாம் கூறுதும் பல்லாண்டு!!
தமிழால் இணைவோம்! தமிழாய் வாழ்வோம்!!
நன்றி ~ சிவம்

Tuesday, January 28, 2020

கங்காவதரணம் என்ற சிவபெருமானின் நூற்றியெட்டாவது தாண்டவம்


இந்த படத்தில் உள்ள நடராசர் மஹா தாண்டவம்.


கங்காவதரணம் என்ற சிவபெருமானின் நூற்றியெட்டாவது தாண்டவம். இக்கரணம் பரதநாட்டி யத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர்.

தாண்டவம் ஆடும் முறை

ஆகாயத்திலிருந்து கங்கை கீழே இறங்குவது போல இரு கைகளையும் பூமியில் ஊன்றி, உடலைப் பின்புறமாக வளைத்து,கால்களை இடுப்பு வரை நேரே தூக்கி ஆடுதல் கங்காவதரணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த அற்புதமான சிற்பம் கும்பகோணம் ஸ்தபதி ஒருவரிடம் இருந்ததாகவும் பின்னர் Honesty Engineers &contractors என்பாரிடம் விற்கப்பட்டு அயல் நாடு சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் மூலம் கிடைத்த படம் இது. நுட்பமான யோகக்கலையை விளக்கும் கடினமான தாண்டவம்.

ஒரு கையில் தீ, ஒரு கையில் உடுக்கை, ஒரு கை அபயமாகவும் மற்றொன்றை மல்லாந்து கிடக்கும் முயலகன் மார்பில் ஊன்றி தலைகீழாக இரண்டு திருவடிகளையும் இடுப்பிற்கு மேல் உயர்த்தி ஆடுகின்ற அற்பத நடனம்..

திருச்சிற்றம்பலம்.

கருடபுராணம் சொல்லும் பலவகை தானத்தின் நன்மைகள்.!


ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா

1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.*
2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்*
3 பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு*
4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்*
5 தாமிரம்,; நெய், கட்டில்,; மெத்தை, ஜமுக்காளம், பாய்,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்*
6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்*
7 இரத்தம்,; கண்,; உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்*
*8 ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்*
*9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 ஆண்டு இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்*
*10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன்னன் வாழ்ந்தகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்*
*11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்*
*12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை*
*13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்*
*14 தீர்த்த யாத்திரை புரிகின்றனர் சத்தியலோக வாசம் கிட்டுகிறது*
*15 ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 ஆண்டு இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்*
*16 பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்*
*17 பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்*
*18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்*
*19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்*
*20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்*
*21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.*
*22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.*
*23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்*
*24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்*
*25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்*
*26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்*
*27 விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 ஆண்டு இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்*
*28 சுதர்சன ஹோமமும்,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்*
*29 ஷோடச மகாலெட்சுமி பூஜையை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.*
*30 இதைப் படிப்பவரும், கேட்பவரும், புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் பித்துர்களும் முக்தி பெறுகின்றனர்.
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா
Thanks 


JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம்