Search This Blog
Friday, February 6, 2015
Wednesday, February 4, 2015
சித்திர எழுத்துக்கள்
வேலூர் மாவட்டம் குடியேற்றம் (குடியாத்தம்) தாலுக்கா பேரணாம்பட்டு அருகில் சாத்கர் என்ற ஊருக்கு வடக்கு புறமாக காட்டுக்குன்று பகுதியில் சுமார் 4 கி.மீட்டர் தூரம் நடந்து சென்றால் “ஜெரடான் கல்” என்று அழைக்கப்படும் இடம் பாறைகள் நிறைந்த பகுதி.
50 அடி உயரத்தில் 15 அடி உயரம், 10 அடி அகலம் உடைய பாறை உள்ளது. அதில் 3 அடியிலிருந்து 8 அடி உயரம் வரை பரவலாக 40-க்கும் மேற்பட்ட சித்திர எழுத்துக்கள் தீட்டப்பட்டுள்ளன. இதற்கு கீழ் வற்றாத நீர் நிலை உள்ளது. அங்கிருந்து 200 அடி தூரத்தில் வற்றாத நீர் ஓடை செல்லுகிறது. பரந்த இடவசதி உள்ளது.
சித்திர எழுத்துக்கள்
அங்கிருந்து கால்நடையாக நடந்து சென்றால் தரைபகுதியிலிருந்து 175 அடி உயரத்தில் சரிவான பகுதியில் “யானைகுண்டு” என்று அழைக்கப்படும் மிகப்பெரிய பாறை உள்ளது. அந்தப்பாறை 125 அடி நீளம், 35 அடி உயரம் உள்ளது. அந்தப் பாறையின் அடிப்பகுதியிலிருந்து 3 அடி முதல் 8 அடி உயரம் வரை சுமார் 125 சதுர பரப்பில் பாறை சமன் செய்து ஏறக்குறைய 100 சித்திர எழுத்துக்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் சில எழுத்துக்கள் சிதைவடைந்து உள்ளன. அதன் அருகில் 15அடி தூரத்தில் வற்றாத நீர் நிலை உள்ளது. யானை குண்டுக்கு அடுத்த 50 அடி தூரத்தில் பல நூற்றுக்கணக்கான பலகை கற்களால் ஆன 8அடி உயரம், 20 அடி நீளம் கல் திட்டு உள்ளது. பாறையின் சரிவுபகுதியை மேடாக்கி போக்குவரத்திற்கு பயன்படுத்தி உள்ளனர். தீட்டப்பட்ட எழுத்துக்களுக்கு மத்தியில் மயில் உருவமும் ஐந்து (அ) ஆறு மனித உருவங்களும் தீட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு பகுதியில் இரண்டு வரிகளில் உள்ள எழுத்தை நான் உணவு, உ.உணவு என்று படித்தேன். பரவலாக இதன் மத்தியில் பெரும் கற்படைச் சார்ந்த சட்டி, பானை, கறுப்பு, சிவப்பு நிறம் உடைய மண் பாண்டங்களிலும் பொறித்து இருப்பது போன்ற குறியீடுகள் இதில் நிறைந்து காணப்படுகிறது.
ஆரியர் வட இந்தியாவை கைப்பற்றிய பிறகு சிந்துவெளி திராவிட இனமக்கள் தென்னிந்திய பகுதியில் குடியேறி நிலை கொண்ட பிறகு இச்சித்திர எழுத்துக்கள் தீட்டி இருக்கவேண்டும். இதன் காலம் கி.மு.1500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. சிந்து சமவெளி மக்கள் மனிதர், புச்சி, மிருகங்கள், இலைகள், சக்கரங்கள் போன்றவற்றிலிருந்து உயிர்மெய் எழுத்துக்களை கி.மு.5000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து அதை பயன்படுத்தி இருக்கிறார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்
யானை குண்டு
சிந்து சமவெளி சித்திர எழுத்துக்களைப் பற்றி மதிவாணன் ஆய்வு செய்து இந்தியா முழுவதும் எழுத்துக்களை பற்றி புத்தகம் வெளியிட்டுள்ளர். அவருடைய புத்தகத்தில் இல்லாத சில சித்திர எழுத்துக்களும் மயிலும் யானை குண்டு பகுதியில் உள்ளன.
கற்கால் ஆயுதம்
யானை குண்டு தெய்வ வழிப்பாட்டு தலமாகவும், குடியிருப்பு பகுதியாகவும் இருந்து இருக்கவேண்டும். இந்த எழுத்துக்கள் தீட்ட சுண்ணாம்பு, கரி, இனம் புரியாக கலவை கொண்டு வெண்மை நிறத்தில் தீட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதி பெரும் ஆய்வுக்குரியது. இரும்பாலான ஈட்டிகள் இரண்டும், பழைய கற்கால ஆயுதங்கள், இடை கற்கால ஆயுதங்கள், புதிய கற்கால ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மனிதர்கள் கைகளால் இணைந்து மல்யுத்தம் செய்வது போலவும் உள்ளனர். மனிதன் ஒருவன் தன் இரண்டு கைகளால் சூலாயுதம் போன்ற ஆயுதத்தை வைத்து இரண்டு கால்களையும் விரித்து போருக்கு தயார் நிலையில் இருப்பதை போலவும் சித்தரிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு கைகளிலும்
ஒரு மனிதன் நின்ற நிலையில் தன் இரண்டு கைகளிலும் ஆயுதத்துடன் நிற்பதை போலவும் காணப்படுகிறது.
ஒரு மனிதன் நின்ற நிலையில் உடற்பயிற்சிக்கு (தயார் நிலையில்) மவுன நிலையில் இருப்பதை போலவும் உள்ளது. மேலும் இரண்டு கைகளும் சரிசமமான நிலையிலும் காலகள் இரண்டும் ஒன்று சேர்ந்து இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்றும் இருபுறமும் விரித்த நிலையிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
குரங்கு குண்டு
யானை குண்டிலிருந்து கரடு முரடான பகுதியை நோக்கி கிழக்கு புறமாக சுமார் 4 கி.மீட்டர் கால் நடையாக சென்றால் பூங்குளம் என்ற ஊருக்கு மேற்கு புறத்தில் குன்றின் அடிவாரத்தில் குரங்கு குண்டு என்ரு அழைக்கப்படும் இரண்டு பிளவுபட்ட பாறையில் இடது புறத்தில் பாறையின் அடிவாரத்தில் 3 அடி முதல் 15 வரை பரவலாக 14 எழுத்துக்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் சில எழுத்துக்கள் சிதைந்து உள்ளன. பாறையின் உயரம் சுமார் 45 அடி உள்ளது. உட்புறத்தில் குகை ஒன்று உள்ளது. எழுத்துக்கள் அமைந்து இருக்கும் இடத்திற்கு இடது புறமாக 7 அடி உயரம் உடைய கல்குண்டு உள்ளது. அதில் மதுரையை ஆண்ட மருதநாயகம் என்கிற யூசுப்கான் என்று தெலுங்கு கல்வெட்டு உள்ளது. கல்வெட்டின் நீளம் 51 அங்குல நீளம் 3 அடியிலிருந்து 13 அங்குல அகலமுடையது. யூசுப்கான் ஆட்சி புரிந்த ஐந்தாவது ஆண்டில் ஆங்கிலேயர்கள் அவரை தூக்கிலிட்டு கொன்ற பிறகு உடலின் ஒரு பகுதியை இந்தப்பகுதியில் அடைக்கலம் செய்யப்பட்ட பிறகு கல்வெட்டை பொறித்து இருக்க வேண்டும். மேலும் இந்த இடத்தில் தெய்வ வழிபாடு, உடலின் ஒரு பகுதியை இந்த பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு பலியிடல் நடந்து இருப்பதாக பூங்குளம் மக்கள் கூறுகின்றனர். மேலும் இந்த பகுதியை ஆராய்ச்சி செய்தால் பல வரலாற்று உண்மைகள் வெளிவரலாம்.
வேலூர் மாவட்டத்தில் சிந்து சமவெளி சித்திர எழுத்துக்கள் பற்றி சிவநாதபுரம், பெத்தூர், ஆலங்காயம், இரத்தினகிரி, சின்ன பாலப்பாக்கம், பையனபள்ளி, அப்புக்கல் ஆகிய இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அப்புக்கல் என்ற இடத்திலுள்ள சித்திர எழுத்துக்கள் கல் உடைத்து அழிந்துவிட்டது.
ஆர். சுந்தரம்
மேற்கண்ட சித்திர எழுத்துக்கள் பற்றி தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மைய உறுப்பினர் ஆர். சுந்தரம் நேரில் சென்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளார். இவர் குடியேற்றம் நெல்லூர்பேட்டையை சேர்ந்தவர்.
Subscribe to:
Posts (Atom)