1990 களில் புதிய கவனிப்பைப் பெற்ற கதைகளோடு, அறிமுகமாகியவர் திருக்கோவில்
கவியுவன். இயற்பெயர், இராசையா யுவேந்திரா. இலங்கையின் செறிவடர்த்தி மிக்க
இலக்கியப் பிரதேசமான கிழக்கு மாகாணத்தின் - திருக்கோவிலில் 24 ஜனவரி 1971
இல் பிறந்தவர். புடவைத் தொழில் நுட்பத்தில் பொறியியல் பட்டதாரியான
கவியுவன், 2001 ல் இலங்கை மத்திய அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட நிர்வாக
சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தி எய்திருந்த போதும் 68
நாட்கள் வயது அதிகம் என்ற காரணத்தால் நேர்முகத்தேர்வில் நிராகரிகப்பட்டு,
கல்முனையில் கட்டிடத் திணைக்களத்தில் பணியாற்றுகிறார். பிரத்தியேகமாக
உவெஸ்லி பாடசாலையில் பௌதீகவியல் வருகை தரு ஆசிரியராகத் தற்போது (2013)
கற்பிக்கிறார்.
தொண்ணூறுகளில் இலங்கையின் சமூக வாழ்நிலையை, சனங்களின் மனநிலையை
கவனப்படுத்திய கதைகளை எழுதியதன் மூலமாக கவியுவன் பரவலான அறிமுகத்தைப்
பெற்றார். “உமா வரதராஜன், ரஞ்சகுமார் என்ற வரிசையில் திருக்கோவில்
கவியுவனும் கவனத்திற்குரிய ஒரு சிறுகதைப் படைப்பாளியாக வந்துள்ளார்“ என
பேராசிரியர் கா. சிவத்தம்பி இவருடைய கதைகளைக் குறித்து எழுதியிருந்தார்.
இருபது ஆண்டுகளாக கவியுவன் எழுதி வருகின்ற போதும் இதுவரையில் “வாழ்தல்
என்பது“ என்ற ஒரு சிறுகதைத்தொகுதியே வெளியாகியுள்ளது. சிறுகதை தவிர, கவிதை,
கட்டுரை, நாடகம் என்ற பிற துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார். கவியுவன் ஒரு
முன்னணி விளையாட்டு வீரரும் கூட. (உதைபந்து, கிறிக்கெற்).
குடும்ப விபரம்: மனைவி.... , 3 பிள்ளைகள். 5ஆண் மற்றும் 3 பெண்
சகோதரங்களுடன் கடைசியாகப் பிறந்த போதும் இப்போது 1 ஆண் சகோதரமும் 2 பெண்
சகோதரங்களும் மத்திரமே உள்ளனர் என்று வேதனையுடன் சொல்லும் கவியுவன்
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றைச் சேர்ந்தவர்.
கிழக்கிலங்கையில் முஸ்லிம் - தமிழ் முரண்பாடுகளிடையே ஒரு பாதுகாப்பான
எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்கும் முக்கியமான படைப்பாளியாகவும்
சிந்தனையாளராகவும் உள்ளார். இந்த விசயங்களைக் குறித்த நேர்காணல் இது. இணைய
வழியாகப் பெறப்பட்டது.
00
1. நீங்கள் எழுதத் தொடங்கியது? அந்தச் சூழல், பின்னணி, எழுதும் ஆர்வம் வந்தமை பற்றிச் சொல்லுங்கள்?
முதன் முதலில் 1990 ஆம் வருடம் என்று நினைக்கின்றேன்...நான் எழுத ஆரம்பித்த
சூழலையும் பின்னணியையும் கூறுவதாயின் நமது போராட்டத்தின் ஆரம்ப
காலங்களுக்கு நான் செல்ல வேண்டியுள்ளது. 83 கலவர நிகழ்வுகள் பற்றி
வீடுகளில் கூடியிருந்து வானொலியில் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்த
காலத்தில் நான் வெறுமனே 12 வயது நிரம்பியிருந்த விடலைப் பையனாய் இருந்தேன்.
இருந்தும் அப்பாவின் வழியாக எனக்குள் இறங்கியிருந்த தமிழுணர்வின் காரணமாக
இச் செய்திகள் எனக்குள் சமூகம் பற்றியதும் இனம் பற்றியதுமான ஒரு தாக்கத்தை
உருவாக்கத் தொடங்கியிருந்தன. அண்ணாமார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயக்கத்தின்
கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு போராட்டம் பற்றி சிலாகித்துப் பேச
ஆரம்பித்தனர். எங்கள் ஊரில் ஏதாவது ஒரு இயக்கத்தில் சேராத ஒரு இளைஞனைக்
காண்பது அபூர்வம். அந்த அளவிற்கு நிலைமை மாறத் தொடங்கியது.
மிக அமைதியாய் இருந்த ஊரினை இராணுவச் சுற்றி வளைப்பு, தப்பியோட்டம்,
வெடியோசை,மரணம், கைது என பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்கொள்ளத்
தொடங்கியது. அந்த நாட்களில் “ சின்னக் கீர்த்தி” என்னும் நண்பன் ஒருவன்
என்னுடைய வகுப்பில் இருந்தான். என்னை விட அவனுக்கு இரண்டு அல்லது மூன்று
வயது அதிகமிருக்கும் என நினைக்கின்றேன். அவனுடைய தோற்றம் மலைக்க
வைப்பதுபோலிருக்கும். திடீரென்று பாடசாலைக்கு வருவதை நிறுத்திக் கொண்டான்.
விசாரித்தபோது குறித்த ஒரு இயக்கத்தில் முழுமையாய் அவன் இணைந்து கொண்டதாகச்
செய்தி பரவியது. சில மாதங்களுக்குள்ளாகவே விசேட அதிரடிப்படை பனங்காட்டைச்
சுற்றி வளைத்தபோது உடைத்துக் கொண்டு முனைப்பாற்றில் பாய்ந்தான். அவன் உடல்
பருத்தவனாய் இருந்ததாலோ என்னவோ அவர்கள் இலகுவாய் அவனை இலக்கு வைத்தார்கள்.
முனையாற்றில் அவனுடைய பருத்த உடல் இன்னும் பருத்து மிதந்து வந்தது. ஓவென்று
கதறி அழுதேன். போராட்ட வரலாற்றில் என்னை உலுக்கிய முதல் மரணம் இதுதான்.
அவனின் மரணம் அர்த்தமுள்ளதாயும் எனது இருப்பு அர்த்தமற்றதாயும் தோன்றத்
தொடங்கவே அப்போது பிரபலாமாயிருந்த இயக்கமொன்றின் மாணவர் அமைப்பில் என்னை
இணைத்திருந்தேன்.
இதற்கிடையில் காலம் 3-4 வருடங்களைக் கடத்தியிருந்தது. நிறையவே காட்சி
மாற்றங்கள் நிகழ்ந்து முடிந்திருந்தன. யோகண்ணாவும் கயண்ணாவும் (என்னுடைய
இரண்டு சகோதரர்கள்) ஒரே நேரத்தில் பூசா முகாமில் சிறை வாசம் அனுபவித்தனர்.
ஒரே இலக்கை அடைவதற்காக தோள் கொடுக்க வேண்டியிருந்தவர்கள் தம் சகாக்களின்
பாதைகளிலேயே குழி பறிக்கத் தொடங்கினார்கள். நான் எந்த அமைப்பின் மாணவர்
அமைப்பைப் பிரதிநிதிப்படுத்தினேனோ அந்த அமைப்பே இயங்க முடியாத முடியாத நிலை
தோன்றியபோது மிகுந்த ஏமாற்றமடைந்தேன். இந்தச் சூழ்நிலைகள் அப்போதே
எனக்குள் பெரிய பெரிய ஏக்கங்களை உண்டு பண்ணியிருந்தன. இருந்தும் அவற்றை
தாக்கம் மிக்கதாய் எழுதும் ஆற்றல் அப்போது கை கூடியிருக்கவில்லை. (பின்
நாட்களில் இவையெல்லாம் நனவிடை தோய்தல் போல் என் படைப்புகளில் ஆங்காங்கே
வெளிப்படத் தலைப்பட்டன) நெருக்குவாரம் மிக்க வாழ்வினை அனுபவித்துக்
கொண்டிருந்த மக்களுக்கு மூச்சு விடும் இடைவெளியாக இந்திய இலங்கை
ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்து யுத்த நிறுத்தமும் வந்தபோது வெகுவாய்
மகிழ்ந்து போனோம். இருந்தும் எமது மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்கவில்லை.
ஒப்பந்தம் கிழிந்து காற்றில் பறக்கும் நிலைக்கு உள்ளான ஒரு கட்டத்தில்தான்
திலீபனின் உண்ணா நோன்பும் மரணமும் என்னை வெகுவாக பாதித்தது.
என்னுடைய முதலாவது கவிதையை திலீபனின் தியாகத்தை வெளிப்படுத்தவே எழுதினேன்.
அந்தக் கவிதை எங்கும் பிரசுரமாகாத ஒன்றாக இருந்த போதும், கவிதைக்கான
கட்டமைப்பில் கலைத்துவம் மிகுந்த நேர்த்தியை உடையது என்று கூற முடியாத
போதும் அது என் கவிதை வாழ்விற்கான பிள்ளையார் சுழியாய் அமைந்தது. சிறுகதை
எழுதத் தூண்டியது நான் முன்பு ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் சொன்னது போல்
எனக்குள் இருந்த உயிர்களின் மீதான காருண்யமாகும். 90 ம் ஆண்டில் என்னுடைய
19 வது வயதில் மட்டக்களப்பு நகருக்கு நான் நண்பர் ஓருவருடன் ஒரு
வீட்டிற்குச் சென்றிருந்த வேளை கழிப்பறைக் கதவினை அடைத்தபோது ஏதோ ஒரு
உயிரினத்தின் ஓடு உடைபடும் சத்தம் கேட்டது. கவனித்துப் பார்த்தபோது நான்
கதவை அடைத்ததில் கதவிடுக்கில் இருந்த நத்தையின் ஓடு உடைந்துள்ளது என்பது
தெரிய வந்தது. அந்த நத்தை கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருந்தது. என்னை
அறியாமல் நான் செய்த இந்த உயிர் வதையின் உறுத்தலுடனே “ விடையைத் தொடுத்த
விடுகதை” என்னும் கதையை எழுதினேன். நான் எழுதிய முதற் கதையே வீரகேசரி வார
வெளியீட்டில் நவரசக் கதையாக வெளிவந்திருந்தது என்னை மேலும் எழுத
ஊக்குவித்தது.
2. நெருக்கடிச் சூழலில் நெருக்கடிகளின் விளைவாகவே எழுதத் தொடங்கிய நீங்கள்
இலக்கிப் பிரதிகளை எதன் அடிப்படையில் உருவாக்க வேண்டும் என்று
தீர்மானித்தீர்கள்?
ஏற்பட்டிருந்த பிறழ்வுகளுக்கும் சிதைவுகளுக்கும் அப்பால் என்னுடைய
படைப்புகள் போரட்டத்தின் அவசியத்தன்மையையும் தமிழுணர்வு மீதான மக்களின்
கவனத்தையும் வெளிப்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்திருந்தேன். அதே
நேரத்தில் அவற்றை வெளிப்படையாக பிரச்சார வாடையில் கூற முனைவதை விட அன்றாட
வாழ்வியலின் இயல்பான போக்குகளைப் பதிவு செய்வதன் மூலமாக கலைத்துவத்திற்கும்
கருத்தியலிற்கும் இடையில் ஒரு சமரசத்தைப் பேணிக்கொண்டு வலிந்து திணித்த
புனைவுகளுக்கு இடம் அளிக்காது உணர்வுகளின் ஆழமான வெளிப்பாடுகளாக அவை அமைய
வேண்டும் என்பதில் கவனமாய் இருந்தேன்.
அது மட்டுமல்லாது பல்வேறு இயக்கங்களிலும் பரிசுத்தமான இனவிடுதலை உணர்வோடு
தமது வாழ்வின் மிக முக்கியமான இளமைப் பருவத்தை அர்ப்பணித்த இளைஞர்கள்
பின்நாளில் திசைமாறிப்போன போராட்டச்சூழலில் பொது வாழ்வில் இயங்க முடியாத
நிலை தோன்றி ஏக்கத்துடன் எல்லாத் தியாகங்களையும் தாரைவார்த்து விட்டு ஊமை
வலிகளுடன் ஒதுங்கிக் கொண்டதும் என்னைப் பிசைவதாய் இருந்தது. தாங்கள் கண்ட
கனவுகளை நோக்கி நகர முடியாமல் காலத்தின் மாயச் சுழலுக்குள் சிக்கிக் கொண்டு
மறுகித் தவித்த இவர்களுக்காகவும் என் பேனா குனியவேண்டியது கடமையென்று
நினைத்திருந்தேன். அதேசமயம் அது சரி பிழைகளுக்கப்பால் ஏதோ ஒரு விதத்தில்
தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்டத்திற்கு எந்த வகையிலும் ஊறு
விளைவிப்பதாய் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன்.
3. இப்படிப் பொதுவாக நீங்கள் சொன்னாலும் தமிழுணர்வு பற்றிய பல வேறுபாடுடைய
வழிகள் சமகாலத்தில் காணப்படுகின்றன. முஸ்லிம்களின் உணர்வு, தமிழ் மக்களின்
உணர்வு, கிழக்குப் பிராந்திய மக்களின் நெருக்கடிகள், ஒட்டுமொத்தமாக தமிழ்
மக்களின் உணர்வுகள், மலையகம் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்கள் என்போரின்
உணர்வுகள் என்று இது ஒரு சொல்லுக்குள் நிற்காமல் விரிகிறது. போராட்டம்
என்று சொல்லும்போதும் இப்படித்தான். பல வழிகள் பற்றி இன்று
விவாதிக்கப்படுகின்றது. இந்த நிலையில் உங்களுடைய தெரிவு எத்தகையது?
நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒன்றுதான்.
தமிழை தாய் மொழியாகவும் வெளிப்பாட்டு மொழியாகவும் கொண்டுள்ள பல சமூகக்
குழுமங்கள் இலங்கை முழுவதும் பரவிக் கிடக்கின்றன. அந்தந்த சூழலில் அவரவர்
எதிர்நோக்கும் சவால்கள் அழுத்தங்கள் என்பவற்றின் அடிப்படையில் அவரவர்
கொண்டிருக்கும் தமிழுணர்வு வேறு வேறு பரிமானங்களைக் கொண்டதாய் இருக்கின்றது
.
யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும்
புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் பொருளாதார உதவியில் தங்கியிருப்பதால்
அவர்களினால் வேறு விடயங்கள் பற்றிய சிந்தனை செய்யாது தமது தமிழுணர்வு
பற்றிய சிந்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடியதாக இருக்கின்றது.
ஆனால் வன்னியிலோ அல்லது கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான
தமிழ்க்கிராமங்களிலோ மக்கள் வாழ்க்கைச் சுமையோடு வெகுவாகப் போராட
வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
சோமாலியா போன்று பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை இங்கு பெரும்பாலும் இல்லை.
ஆயினும் மாறி வரும் பொருளாதார சூழ்நிலையில் அதிகரித்து வரும் தமது தேவைகளை
நிறைவேற்றிக் கொள்வதற்காக யாது செய்யலாம் என்பதிலேயே அவர்களின் கவனம்
குவிக்கப்படுகின்றது. ஆகையால் தமிழுணர்வு தொடர்பான அவர்களின் சிந்தனைகள்
ஒப்பீட்டளவிலே குறைந்தளவினைக் கொண்டிருந்தாலும் தமது வாழ்வின் இத்தகைய சிரம
நிலைக்கு அடிப்படைக் காரணம் இந்த நாட்டிலே தாம் இரண்டாந்தர அல்லது
மூன்றாம்தர பிரஜைகளாக நடாத்தப்படுவதுதான் என்பது அவ்வப்போது
அவர்களுக்குள்ளும் உறைக்க அவர்களும் தமது தமிழுணர்வை வெளிப்படுத்தியே
வந்திருக்கின்றார்கள்.
இதனால், இலங்கையின் இனப்பிரச்சனை ஆயுதப்போராட்டமாகக் கூர்மையடையத் தொடங்கிய
காலத்திற்கு முன்னிருந்து நந்திக் கடலோரக் காலம் வரையும் பல்வேறு பட்ட
அமைப்புக்களில் தம்மை இணைத்துக் கொண்டு போராடியிருக்கின்றார்கள்.
தமிழ் உணர்வுகளை கிளறக்கூடிய பல உணர்ச்சி பூர்வமான கவிதைகளை எனது தந்தையார்
கூட அந்நாட்களில் எழுதியிருக்கின்றார். அண்மையில் மதுரை மாநாடு ஒன்றிலே
உரையாற்றிக் கொண்டிருந்த கவிஞர் காசியானந்தன் அவர்கள் “ இலங்கையின்
மட்டக்களப்புப் பிரதேசத்தில் திருக்கோவில் என்னும் ஊரில் வாழ்ந்த
கொமினியூஸ்ட் இராசையா போன்றோரின் கவிதைகளைக் கேட்டுக் கேட்டு நாம் எமது
தமிழுணர்வை வளர்த்துக் கொண்டோம்” எனக் குறிப்பிடும் அளவிற்கு தனது
ஆக்கங்களால் தாக்கம் செலுத்திய ஒருவராய் என் தந்தை திகழ்ந்திருக்கின்றார்.
இப் பேச்சை நேரில் கேட்டுக்கொண்டிருந்த எங்கள் ஊர் உறவினர் ஒருவர் என்னிடம்
இதைச் சொன்னபோது என் மயிர்க்கால்கள் சிலிர்த்து சில்லிட்டு நின்றன.
எனது குடும்பம் என்று மட்டுமல்ல குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித்
தரக்கூடிய ஒற்றைப் பிள்ளையாய் இருந்தும் குடும்பத்தை வறுமைக்குள்
தள்ளிவிட்டு தேசத்திற்காகப் புறப்பட்டுப்போன எண்ணற்றவர்களை நான்
கண்டிருக்கின்றேன். சில குடும்பங்களில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்டவர்களும்
அடுத்தடுத்து வீட்டை விட்டு வெளியேறிப் போன சம்பவங்களும் நிறையவே உண்டு.
இதே விகிதத்தில் இல்லையாயினும் ஓரளவிற்கு இத்தகைய ஒரு நிலை மலையகப்
பிரதேசத்திலும் காணப்பட்டது. குறிப்பாக எண்பதுகளின் நடுப்பகுதியில் 83
யூலைக் கலவரம் கொடுத்த ரணங்கள் வடகிழக்கிற்கு அப்பாற்பட்ட தமிழர்களையும்
இனம் பற்றிய சிந்தனைக்கு உந்தித் தள்ள உணர்ச்சி வசப்பட்ட நிலையில்
பழிவாங்கும் நோக்கோடு பலர் பலவித அமைப்புகளில் இணையத் தொடங்கினர்.
உண்மையில் இனத்தின் விடுதலைக்கான அல்லது உரிமைக்கான போராட்டத்தினை எந்த
வடிவில் கொண்டு செல்வது என்பதை நிதானமாக தலைமைகள் யோசித்து
முடிவெடுத்திருக்க வேண்டிய கால அவகாசத்தை இந்த யூலைக் கலவரமே அள்ளிக்
கொண்டு போனது எனலாம். மித வாதத்தில் நம்பிக்கை கொண்டிருந்த பலரும் கூட தமது
நம்பிக்கைகளைக் கைவிடுவதற்கு அல்லது மீளப் பரிசீலிப்பதற்கு இந்தக் கலவரமே
அடிப்படையாய் அமைந்தது. என்னுடைய தமிழுணர்வை இந்தக் கலவரத்தின்
அடிப்படையிலேயே நான் பார்க்கின்றேன்.
பல இனங்களைக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டிலே குறித்த ஒரு இனம் மட்டும் ஏன்
வஞ்சிக்கப்பட்ட இனமாக இருக்க வேண்டும்? மற்றொரு இனத்தின் குடிமகன் ஒருவன்
அனுபவிக்கும் அத்தனை உரிமைகளையும் ஏன் நான் மட்டும் அனுபவிக்க முடியாதவனாய்
இருக்கின்றேன்? இந்த சமத்துவமற்ற தன்மை ஏன் தொடரப்பட வேண்டும்? சமத்துவமான
தன்மையை அடைவதற்கு மக்களை இன்னலுக்கு உட்படுத்தாது முன்னெடுக்கக் கூடிய
வழிகள் என்ன? இந்த வகையிலேயே எனது தமிழுணர்வு விரிந்து செல்கின்றது.
4. ஆனால், இந்த உணர்வானது சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு வேறாகவும்
தமிழர்களுக்கு வேறாகவும் உள்ளது. அதிலும் வடக்குக் கிழக்குத் தமிழருக்கு
வேறாக உள்ளது. அதிலும் யாழ்ப்பாணத்தமிழரின் உணர்வு இன்னும் வித்தியாசமானது.
அரசியலும் வாழ்களமும் அனுபவப் பிராந்தியமும் இந்த வேறுபாட்டை
நிர்ணயிக்கிறது என நினைக்கிறேன். அதைப்போலவே தமிழ் மொழியைப் பேசும்
சமூகங்களின் அரசியலும் வேறுபட்டிருக்கிறது. கிழக்கில் முஸ்லிம்களுக்கும்
தமிழர்களுக்கும் இடையில் காணப்படும் மொழி மற்றும் அரசியல் உணர்வு -
நிலைப்பாடுகள் குறித்து...? அதில் உங்களுடைய நிலைப்பாடு மற்றும் அனுபவம்
என்ன?
இது மிகவும் கவனமாகப் பதில் கூற வேண்டிய கேள்வி என்று நினைக்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் அதிலும் எனது மாவட்டமாகிய அம்பாறை மாவட்டத்தில் இந்த
விடயம் மிகவும் கூர்மையான ஒன்றாகவே காணப்படுகின்றது. ஈழத்தில்
ஆயுதப்போராட்டம் ஒன்று உருவான ஆரம்ப காலத்தில் கணிசமான முஸ்லிம்
இளைஞர்களும் அதில் தம்மை இணைத்திருந்தார்கள்.
ஆனால் எப்படி தமிழ் மக்களை சிங்கள மக்களும் அதன் அரசும் ஒரு இரண்டாந்தரக்
கண்ணோட்டத்துடனே நோக்கியதோ அதேபோன்று தமிழ் மக்களும் அதன் தலைமைகளும் தம்மை
இரண்டாந்தர கண்ணோட்டத்துடன் நோக்குவதாக முஸ்லிம் மக்கள் நம்பும்படியான ஒரு
தோற்றப்பாட்டை உருவாக்குவதற்கு அப்போதிருந்த அரசாங்கமும் அதனோடு இணைந்த
சில நாடுகளும் மிக நுட்பமான சதிவலையை பின்னின.
இந்த வலைப்பின்னலில் ஈடுபட்டவர்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றார்கள் என்றே கூற
வேண்டும். இவர்களின் இந்த வெற்றிக்கு இருபக்கத்துத் தலைமைகளினதும் தீர்க்க
தரிசனமற்ற சில தவறான செயற்பாடுகளும் உதவியனவாய் மாறின.
அதன் ஆரம்பக் கட்டங்களிலேயே பேசித் தீர்த்திருக்கக் கூடிய சில பிரச்சனைகள்
பூதாகரமாக்கப்பட்டு,எண்ணற்ற உயிர்களையும் ஏராளமான சொத்துக்களையும் காவு
கொண்ட பல கலவரங்கள் எமது பூமியிலே இடம்பெறவும் காரணமாய் அமைந்திற்று.
இந்தக் கலவரங்களின் மோசமான பலாபலன் யாதாய்போனதெனில் இவ்விரு சமூகங்களும்
என்றென்றைக்குமே இணைந்து ஒரு அரசியல் பாதையை வகுத்துக் கொள்ள முடியாத
அளவிற்கு மன இடைவெளி ஒன்று இரு சமூகங்களுக்குமிடையில் நிலைபெற்றிற்று
என்பதுதான்.
இதனை அண்மையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவிலே சிறீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைமைப்பீடம் எடுத்த முடிவினைக் கொண்டு நாம் உணர்ந்து
கொள்ளலாம்.
ஆக இந்த இடைவெளியானது முஸ்லிம் மக்களை எதிரிக்கு எதிரி நண்பன் என்கின்ற
அடிப்படையில் அரசை நோக்கிச் செல்வதற்கு வழி கோலியது. இதன் மூலம் முஸ்லிம்
மக்கள் தமது உரிமைகளை வென்றெடுத்தார்களா என்பது கேள்விகுரியதாக இருந்த
போதிலும் தமது பிரதேச அபிவிருத்திகளை விரைவாக (ஒப்பீட்டளவில் சிங்களப்
பிரதேசங்களையும் விட விரைவாகவும்) அடைந்து கொண்டார்கள் என்பது யாராலும்
மறுக்க முடியாத உண்மை.
இந்த விடயத்தில்தான் எமது பிரதேசத்து தமிழ்மக்களின் உணர்வு நிலையானது வட
மாகாண அல்லது யாழ்ப்பாண தமிழ் மக்களின் உணர்வு நிலையை விட சற்று
வேறுபாடனதாக அமைய விழைகின்றது. காரணம் என்னவெனில் எமது பிரதேசத்து மக்கள்
முஸ்லிம் மக்களுடன் அடுத்தடுத்த கிராமங்களில் வாழ்கின்றனர். எனவே அவர்கள்
முஸ்லிம் பிரதேசத்தில் இடம்பெறும் துரித அபிவிருத்தித் திட்டங்களையும்
முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்பின் அதிகரித்த
தன்மையினையும் கண்கூடாகக் கண்டு கொண்டு இருக்கின்றார்கள்.
உரிமைகளுக்கு முதன்மை கொடுக்காது சலுகைகளுக்கு முதன்மை கொடுக்கும் ஒரு
சமூகத்தின் வாழ்க்கைத் தரம் முன்னேறிக் கொண்டு போக சலுகைகளுக்கு முதன்மை
கொடுக்காது உரிமைகளுக்கு முதன்மை கொடுக்கும் ஒரு சமூகம் மேலும் மேலும்
பின்னோக்கிக் கொண்டு சென்றதுடன் என்றாவது தமது உரிமைகள் பெறப்பட்டு தமது
வாழ்வும் மேம்படும் என்ற கனவுகளுடன் பொறுமை காத்ததாயும் இருந்தது.
இருந்தும் நந்திக் கடலோரம் கரைந்த உடல்களோடு அவர்களது கனவும் கரைந்து போனது
என்பதுதான் உண்மை. அதுவமற்று இதுவுமற்று எதுவுமற்று தண்ணீரில்
தத்தளிக்கும் எம் மக்களுக்கு சர்வதேசத்தின் பார்வை,தமிழ்நாட்டில்
ஏற்பட்டுள்ள எழுச்சி,இந்தியா அழுத்தம் கொடுக்கும் என இன்னும் நம்பிக்
கொண்டிருக்கும் குருட்டு நம்பிக்கை என சில மிதப்பிகள் ஆங்கங்கே
தோன்றினாலும் அவை அவர்களின் கரங்களில் இருந்து வெகு தூரத்திலேயே
தோன்றுவதுபோல்தான் தோற்றம் காட்டுகின்றன. என்னுடைய பிரார்த்தனையெல்லாம்
அவர்கள் மூச்சுத் திணறி முழுவதுமாய் அமிழ்ந்து போகுமுன் ஏதாவது ஒரு மிதப்பி
அவர்களின் கரங்களைச் சேர்ந்து விடவேண்டும் என்பதே ஆகும்.
இத்தகைய அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் இங்குள்ள தமிழ்
மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இலக்கியங்களையும் வாழ்வுச்
சூழ்நிலைகளையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. மொழி என்ற அடிப்படையில்
இப்பிரதேசத்தில் இருபாலாருமே தமிழ் மொழிக்கு நிறையவே சேவை செய்துள்ளனர்.
எமது மாவட்டத்தின் இலக்கியத்தின் அடைவு மட்டம் உச்ச அளவில் காணப்படுவதற்கு
இங்குள்ள இரு சாராருமே உழைத்திருக்கினறார்கள். கருத்தியலில் ஒன்றித்துப்
போகாத தனித்தனிப் படைப்புகளாக அவை இருந்தபோதும் கலைத்துவம் என்கின்ற
அடிப்படையிலும் வெளிப்பாட்டு முறைமையிலும் சிறந்து விளங்குபவைகளாக அவை
இருக்கின்றன.
இரு சாராருக்கும் பொதுவாயிருக்கும் இந்த மொழிக்குக் கூட இரு சமூகங்களையும்
இணைத்துக் கொள்ளக் கூடிய வலிமை இல்லாமல் போனது என்பதுதான் வரலாற்றுச்
சோகம்.
இரு சாராரும் ஒருமித்துச் செல்ல வேண்டும் என்கின்ற கருத்து நிலை சாதாரண
மனிதர்களைவிட படைப்பாளிகளுக்கு சற்று முனைப்பாகவே பொதுவில்
காணப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரை இந்த இரு சமூகங்களும் தத்தமது
தனித்துவத்தைப் பேணிக்கொண்டு தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதில் இணைந்து
போகவேண்டியது அவசியம் என்றே எப்போதும் நம்புகின்றேன், விரும்புகின்றேன்.
ஒவ்வொரு சமூகத்திற்கும் அடைவதற்கான உரிமைகள் அபிலாஷைகள் நிறையவே உள்ளன.
அவற்றை அடைவதற்கு ஒரு சமூகம் இன்னமொரு சமூகத்திற்கு பரஸ்பரம் ஒத்தாசைகளை
வழங்கும் ஒரு நிலை வர வேண்டும். கடந்த காலத்தில் இரு சாராருமே தவறுகளைப்
புரிந்திருக்கின்றோம் என்பதனை ஏற்றுக்கொள்ளும் ஒன்றோடு மட்டும் கடந்த
காலத்தை மறந்து விட்டு வருங்காலத்திலாவது இணைந்தபடி அவரவர் இலக்கினைத் தொட
முனைய வேண்டும். இன்று இந்த நாட்டிலே நிகழ்ந்து கொண்டிருக்கும்
நிகழ்வுகளைப் பார்க்கும்போது எனது இந்த விருப்பு நிறைவேறுவதற்கான
சாத்தியப்பாடுகளும் ஆங்காங்கே தெரிகின்றன. என்னுடைய இந்த கூற்றை தமது
இனத்தை உண்மையிலே நேசிக்கும் ஒவ்வொரு தமிழரும் முஸ்லிமும் ஏற்றுக் கொள்வார்
என்றே நம்புகின்றேன்.
5. இன்றைய சூழலில் தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியற் தலைமைகளும் கட்சிகளும்
இந்தச் சமூகங்களைப் பிரித்துத் தங்கள் அரசியல் மூலோபாயங்களை வகுத்துள்ளன.
அதன்படி இந்தச் சமூகங்களை எதிரெதிர் நிலைகளில் வைத்துப் பேணுகின்றன. இதற்கு
இலங்கையின் ஊடகங்களும் குறிப்பிட்ட சமூகங்களின் படித்தவர்களிற்
பெரும்பாலானோரும் ஒத்துழைக்கின்றனர். ஆகவே சனங்கள் இனமுரண்களால்
வரையறுக்கப்பட்டு, வழிநடத்தப்படுகின்றனர். இந்த நிலையில் எப்படி
இணைப்புக்கான முளைகள் துளிர்க்கும்?
இணைப்புக்கான முளைகள் துளிர்ப்பது என்கின்ற விடயம் இயல்பாகவே நிகழ்ந்து விடப்போவது இல்லை.
நீங்களே குறிப்பிட்டவாறு நமது மக்கள் இனமுரண் என்கின்ற இருண்ட குகைக்குள்
தத்தமது தலைமைகளின் சுயநலம் மிகு அரசியற் செயற்பாடுகளினால்
தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இது ஜெயமோகனின் “பார்த்தீனியம்” என்கின்ற
கதையில் வரும் விஷச்செடிபோல் ஆழமாகவும் அகலமாகவும் பரவிக்கிடக்கின்றது.
அதன் வேர்கள் மிக ஆழமானவை. நீண்ட காலங்களுக்குரியவை. எல்லாளன் துட்டகைமுனு
மோதல், 1815 ம் ஆண்டில் கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம் சிங்களக் கலவரம் என
அதன் காலங்கள் நீண்டு செல்கின்றன.
தொடர்ச்சியாக உறங்கு நிலையில் இருந்து கொண்டு வரும் இந்த முரண்,எரிமலைகள்
அவ்வப்போது குமுறுவது போல் கலவரங்களாக வெடித்திருக்கின்றன. அற்பமான
காரணங்களுக்காகக் கூட எத்தனையோ உயிர்களைப் பலி கொள்ளும் கலவரங்கள் நடந்து
முடிந்திருக்கின்றன.
பியதாசவிற்கும் சோமதாசவிற்கும் இடையில் இருக்கும் பிணக்கு அல்லது
ரஞ்சனுக்கும் நாதனுக்கும் இடையில் இருக்கும் பிணக்கு அல்லது மஜீத்திற்கும்
சியாமிற்குமிடையில் இருக்கும் பிணக்கு வெறும் பிணக்குகளாகவே பார்க்கப்பட
பியதாசவிற்கும் ரஞ்சனுக்குமிடையில் அல்லது நாதனுக்கும் மஜீத்திற்குமிடையில்
அல்லது சோமதாசவிற்கும் சியாமிற்குமிடையில் உருவாகும் பிணக்கு ஒன்று
குழுக்களுக்கிடையிலான மோதல் அல்லது இனங்களுக்கிடையிலான மோதலாக உரு
மாறியிருக்கின்றன.
எனவே இந்நிலைமையைச் சரி செய்வதற்கான மாற்றம் என்பது வெறுமனே அரசியல்
நிலைப்பாட்டில் எடுக்கும் மாற்றங்களினால் மட்டும் வந்துவிடப்போவதில்லை.
பொதுவாக, இருக்கின்ற (Existing) நிலைமைகளின் மாற்றம் என்பது இரு வகையினிலே
அடையப்படலாம். ஒன்று உயர் மட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு
அடிமட்டதிற்கு அது கை மாற்றப்படுவது. மற்றது அடி மட்டத்தில் மாற்றம் ஒன்று
கொண்டு வரப்பட்டு அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலைக்கு உயர்
மட்டங்களை நிர்ப்பந்திக்க வைப்பது. உண்மையில் இணைப்புக்கான முளைகள்
துளிர்ப்பது என்கின்ற விடயம் அர்த்தபுஷ்டியாக அமைவது என்றால் அது
அடிமட்டத்திலிருந்தே முன்னெடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு முன்னெடுக்கப்படுவதற்கு இங்குள்ள சகல இன மக்களிலும் அரசியல்
விழிப்புணர்வு என்பது ஏற்படுத்தப்பட வேண்டும். இன முரண் என்கின்ற
திரைக்குப் பின்னாலே நாட்டு மக்கள் அனைவரையும் பாதிக்கக் கூடிய வகையில்
குறிப்பாக ஏழை மக்களைப் பாதிக்கக் கூடிய வகையில் முன்னெடுக்கப்படும்
திட்டங்களிற்கும் கொள்கைளுக்கும் எதிரான குரலை ஒன்றாக உயர்த்துவதை
இணைப்புக்கான முளையின் மையப் புள்ளியாகக் கொள்ளலாம். உதாரணமாக மருத்துவத்
துறையில் பிரத்தியேக பல்கலைக் கழகங்களுக்கான அனுமதி போன்ற தீர்மானங்கள்
நிறைவேற்றப்படும் பொழுது ஒட்டு மொத்த இலங்கையரின் ஆட்சேபனைக் குரல் ஒன்றாக
ஒலிக்க வேண்டும்.
உண்மையில் இந்த இன முரண்பாட்டின் மூலம் செல்வம் படைத்தவர்கள் பல வழிகளிலும்
இலாபம் அடைந்து கொண்டு போக வறுமைப்பட்டவர்களே அதிகம் பாதிப்பை எதிர்
கொள்கின்றனர். இன முரண் தொடர்பாக சிங்கள மக்கள் விரும்பக் கூடியதாகக்
கருதப்படும் ஒவ்வொரு அறிவிப்பும் வெளியாகும் அதே நாளில் ஏதோ ஒரு
அத்தியாவசியப் பொருளின் விலை அதிகரிக்கின்றது என்பதை சிங்கள மக்கள்
சரியாகப் புரிந்து கொள்வார்களாயின், இன முரண் என்கின்ற புதை குழியின்மேல்
தம் அரசியல் மேடையை அமைத்திருக்கும் தலைமைகள் மீள முடியாத அதல
பாதாளத்திற்குச் சென்று விடுவார்கள்.
அத்தோடு ஒவ்வொரு இனமும் மற்ற இனங்களின் பிரச்சனைகளையும் பண்பாட்டு
விழுமியங்களையும் கலாசாரத் தனித்துவங்களையும் புரிய முயற்சிப்பதோடு மற்ற
இனங்களின் பிரச்சனைகளுக்காக தமது குரலைப் பதிவு செய்யும் முனைப்பும்
முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்த விடயத்திலேதான் படைப்பாளிகளினதும் கலைஞர்களினதும் ஊடகங்களினதும்
தொழிற்பாடு முக்கியத்துவமாகின்றது. துரதிஷ்டவசமாக எமது நாட்டிலே இன
முரணுக்குத் தூபமிடும் படைப்பாளிகள் கலைஞர்கள் ஊடகங்கள் என்பவற்றோடு
ஒப்பிடுகையில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்காக பாடுபடுபவர்களின் எண்ணிக்கை
மிகச் சொற்பமாகவே காணப்படுகின்றது. முழுமையான மனச் சாட்சியுடன் இதய
சுத்தியாக செயற்படும் மிக அரிதானவர்களின் குரல்வளைகள் கூட வெவ்வேறு
சக்திகளால் நசுக்கப்படுகின்றன அல்லது தாமாகவே அவர்கள் மௌனித்துப் போகும்
புறச் சூழ்நிலைகள் வலிந்து உருவாக்கப்படுகினறன. இவ்வாறு இவர்கள்
நசுக்கப்படுவதற்கும் மௌனிக்கச் செய்யப்படுவதற்கும் அவர்கள் எண்ணிக்கையில்
மிகக் குறைவானவர்களாக இருப்பதே பிரதான காரணமாகின்றது. அவர்களின் எண்ணிக்கை
விரிவடைந்து செல்லும்போது அவர்களின் சுய பாதுகாப்பிற்கான பலமும்
அதிகரிக்கின்றது. முரண் அரசியல் மூலம் வாக்குகளைச் சேகரித்துக் கொள்ளும்
அரசியல் சாணக்கியம் இன்னும் உயிர்ப்பு நிலையில் இருப்பதன் மூல காரணமே இந்த
எண்ணிக்கை விரிவடைந்து செல்லாமல் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில்
சுருங்கிச் செல்வது.
கால அடிப்படையில் நோக்கும்போது இணக்கமொன்றை ஏற்படுத்துவதற்கான மிகச் சரியான
கால மொன்றாக இன்றைய காலகட்டத்தைக் கருதுகின்றேன். காரணம் யுத்தம் ஒன்று
இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது இணக்கத்தை விரும்பும் தரப்பினரால் மெதுவாக
மெதுவாக மக்களின் மன நிலையில் மாற்றம் ஒன்றைக் கொண்டு வர முனையும் போது
தேசத்தின் எங்கோ ஒரு மூலையில் இடம்பெறும் ஏதோ ஒரு விரும்பத்தகாத சம்பவம்
எல்லா முயற்சிகளையும் அடித்துக் கொண்டு செல்லும் ஒன்றாக அமைந்திருந்தது.
அந்த நிலைமை இன்று இல்லை. யுத்தம் கொடுத்த தாக்கங்களும் அதன் ஊனங்களும்
இன்றும் எம் மனதில் ஒட்டிக் கொண்டிருந்தாலும் இணக்கத்திற்கான ஒரு
முயற்சியைக் குழப்பிவிடக் கூடிய சம்பவம் ஒன்று புதிதாய் இடம்பெறுவதற்கான
வாய்ப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தை நாம்
முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக அரசியல் தலைமைகளின்
உத்தரவிற்காகக் காத்திராமல் அந்தந்தப் பிரதேசங்களிலேயே சாதாரண மனிதர்கள்
தொடக்கம் இது ஆரம்பிக்கப் பட வேண்டும். இது மிகக் கடினமான பணிதான். ஆனால்
எல்லாக் கடினமான பணிகளும் ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பித்தே
வெற்றியடைகின்றன என்பதுதான் வரலாறு. அந்தப் புள்ளியாய் ஏன் நாம்
ஒவ்வொருவரும் மாறி விடக் கூடாது?
6. அப்படியென்றால், அரசியற் சக்திகளையு்ம விட, அரசியற் கட்சிகள், அரசியற்
தலைவர்களையும் விட சமூகத்திலுள்ள படித்தவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள்,
இளைய தலைமுறையினர், படைப்பாளிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் பங்கும்
பாத்திரமும் முக்கியம் என்கிறீர்கள். ஆனால், அவர்களும் இந்த இனமுரண்
அரசியலில் ஊறித்தானே பெருமளவுக்கும் இருக்கிறார்கள்? இந்த நிலையில் ஒரு
மாற்று அலையை எப்படி நடைமுறையில் உருவாக்க முடியும்?
முதலில் இனஉணர்வு அல்லது இனப்பற்று,இனவாதம் அல்லது இனதுவேஷம், இனமுரண்
என்கின்ற இந்த மூன்று சொற்பதங்களும் எவ்வாறு அர்த்தப்படுத்தப்படுகின்றன,
எவ்வாறு ஒன்றுடன் ஒன்று சம்பந்தமாகின்றன, எப்படி ஒன்றிலிருந்து ஒன்று
வேறுபடுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் தன்னுடைய இனம் முன்னேற வேண்டும் அவர்கள் மகிழ்வான வாழ்க்கையை
அனுபவிக்க வேண்டும் என நினைப்பது இன உணர்வு அல்லது இனப்பற்றாகும். அதேவேளை
தன்னுடைய இனம் மட்டும்தான் முன்னேற வேண்டும் மகிழ்வாய் இருக்க வேண்டும் என
நினைப்பதும் மற்ற இனத்தின் முன்னேற்றங்களுக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாய்
இருப்பதும் இனவாதம் அல்லது இனத்துவேஷம் ஆகும்.
இதில் இனமுரண் என்பது என்ன பாத்திரத்தை வகிக்கின்றது என்றால் ஒரு இனத்தின்
கடும்போக்காளர்களினது அல்லது இனவாதிகளினது செயற்பாடுகள் அத்துமீறிச்
செல்லும்போது மற்ற இனத்தில் உள்ள சாதாரண இனப்பற்றாளர்களும் இனவாதியாக மாற
வேண்டிய ஒரு சூழ்நிலையும் முரண்பட வேண்டிய சூழ்நிலையும் உருவாகின்றது.
இப்படித்தான் இந்த நாட்டிலே இனமுரண் என்கின்ற பெரும்பாறை இலகுவில்
தகர்த்தெறிய முடியாதபடிக்கு எழுந்து நிற்கின்றது.
ஒரு சாதாரண மனிதன் எப்படி இனவாதியாய் மாறுமளவிற்கு தள்ளப்படுகின்றான்
என்பதற்கு நேற்றிரவு எனது புகைவண்டிப் பணயத்தில் நடந்த சம்பவம் ஒன்றைக்
கூறுகின்றேன் பாருங்கள். ஆசனங்கள் முன்பதிவு செய்யப்படும் பெட்டியொன்றிலே
நான் புகைவண்டியில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்து
கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் பரிசோதகர்கள் எங்கள் பெட்டிக்குள்
வந்தார்கள். அங்கே 6 நபர்கள் இரண்டாம் வகுப்பு சாதாரண அனுமதிச் சீட்டுடன்
பிழையாக எங்கள் பெட்டியினுள் பயணித்ததைக் கண்டுபிடித்தார்கள். அவர்களில்
இருவர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இணை ஒன்று. மற்ற நால்வரும் தமிழராகிய
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50-55 வயது மதிக்கத்தக்க தாயும் தந்தையும்
25-30 வயதிற்குள் இருக்கக் கூடிய இருமகள்மாரும். வந்த பரிசோதகர்கள்
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். அடுத்து வந்த புகைவண்டி நிலையத்திலே
அந்தக் குடும்பத்தை மட்டும் இரண்டாம் வகுப்பு சாதாரண பெட்டிக்குச்
செல்லும்படி விரட்டினார்கள். புகைவண்டி நிற்பாட்டப்பட்டிருக்கும் அந்த
சொற்ப நிமிடங்களுக்குள் தங்களின் பெரிய சுமைகளைத் தூக்கிக் கொண்டு அது
இழுபட இழுபட இறங்கி அவர்கள் பரிதாபமாக ஓடிப்போனதைக் கண்டேன். இணை உல்லாசமாக
பரிசோதகர்களுடன் அளவளாவியபடி பயணத்தைத் தொடர்ந்தார்கள். குடும்பம் இருந்த
இருக்கைகள் நான்கும் மட்டக்களப்பு வரைக்கும் வெறுமையாகவே கிடந்தது. ஒருவேளை
அந்தக் குடும்பத்திற்கு அங்கே இரண்டாம் வகுப்புப் பெட்டியில் இருக்க இடம்
கிடைத்ததோ கூடத் தெரியவில்லை.
இப்போது கூறுங்கள் இந்தச் சம்பவத்தைப் பார்க்கும் ஒரு சாதாரண மனிதனின்
பார்வையில் அந்த அதிகாரிகளின் செயற்பாடுகள் இன முரணைத் தூண்டுமா இல்லையா?
ஒவ்வொரு இனத்தையும் ஒவ்வொரு விதமாய் கையாளும்படி பிரமாணங்கள் கூறவில்லை.
ஒரு இனத்திற்கு மட்டும் சலுகை கொடுக்கும்படி பிரமாணங்கள் கூறவில்லை.
ஆனாலும் அது நடக்கின்றது. இதைத்தான் நான் ஆரம்பத்தில் கூறினேன் உண்மையான
இணக்கம் ஒன்று வருவதென்றால் அது அடிமட்ட மக்களின் மனநிலையிலும்
அதிகாரிகளின் மனநிலைகளிலும் மாற்றம் ஒன்று வந்தால் மட்டுமே
சாத்தியமானதாகும். அவ்வாறு மனநிலையில் மாற்றம் வராத நிலையில்
இணக்கத்திற்காக இனங்களின் தலைமைகள் என்னதான் முயற்சி எடுத்தாலும் அது
கைகூடி வரப்போவதில்லை. காரணம் நீங்கள் குறிப்பிட்டது போல அந்த அளவிற்கு
இனமுரணில் மக்கள் ஊறிக்கிடக்கின்றார்கள். இதிலிருந்து மெல்ல மெல்ல
மீள்வதென்பது மிகக் கடினமான ஒன்று.
ஆனால் நாம் எதுவுமே செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் மட்டும் அதை
அடைந்து விடவும் முடியாது. ஆகவே எங்கள் எங்கள் வரையறைக்குள் இருந்து
கொண்டு முடியுமான வரை அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். ஒன்றுக்கு மேற்பட்ட
இனங்கள் ஒருமித்து வாழும் பிரதேசங்களிளே இன நல்லினக்கக் குழு ஒன்றை
அமைத்து அந்தக் குழுவினரை சகல அரச அலுவலகங்கள், விளையாட்டுக் கழகங்கள்,
வேறு பல சங்கங்கள் என எல்லாத் தரப்பினரிடமும் அனுப்பி இன உறவிற்கான
அவசியத்தையும் அது உருவாகாதவிடத்து ஏற்படும் பாதிப்புக்களையும் கூறி இன மத
பேதங்களுக்கு அப்பால் சக மனிதனை மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டிய
பொறுப்பு யாவருக்கும் உள்ளது என்பதை வெளிப்படுத்தலாம். கடந்த காலங்களைப்
பார்த்தால் எங்கெல்லாம் கலவரங்கள் தோன்றியதோ அங்கெல்லாம் கலவரம் முடிந்த
பின் அல்லது கலவரத்தை தணிக்கும் முகமாக சமாதானக் குழு ஒன்றை
அமைத்திருக்கின்றோமே தவிர மக்கள் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்
காலத்தில் அந்த இயல்பு நிலமையை குழப்பி விடக் கூடிய எந்த சம்பவமும்
இடம்பெறாத வகையில் ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு குழுவை நாங்கள் ஒரு போதுமே
நியமித்துக் கொண்டதில்லை. சுருக்கமாகச் சொன்னால் காயங்களுக்கு மருந்து
இட்டே பழகி வந்த நாம் காயமே ஏற்படாமல் இருக்க எந்தவொரு முயற்சியும்
எடுக்கவில்லை.
இந்த இடத்தில்தான் இலக்கியச் சூழலும் விளையாட்டுச் சூழலும் கூட இன உறவினை
வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றக் கூடியவையாக இருக்கின்றன. எனது
தலைமையிலே ஒரு கிறிக்கட் கழகம் இருக்கின்றது. அதிலே தமிழ் பேசும் இரு
சமூகங்களையும் சார்ந்த வீரர்கள் பங்கு கொள்வார்கள். அதனால் இனவாதத்தில்
ஊறிப்போன ஒரு சிலர் மட்டும் எங்களின் கழகத்தை வஞ்சக நோக்குடன் பார்க்க
ஏனையவர்கள் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு ஒரு முன்னுதாரணமாய்ப்
பார்க்கின்றார்கள். இப்படியான சிறு சிறு அசைவுகளின் ஊடேதான் இந்த ஒற்றுமை
என்பது கட்டி எழுப்பப் படவேண்டும்.
அதனை விடுத்து இலங்கையில் உள்ள சகல மக்களும் தமிழ், சிங்களம் என்னும் இரு
மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று கொள்கை
வகுப்பதாலோ அல்லது எல்லா இனங்களும் பூகோள ரீதியில் பிரிந்து பிரிந்து
இருக்காமல் ஒன்றாக ஒருமித்து இருக்க வேண்டும் எனக் கூறிக்கொண்டு இன ஒற்றுமை
என்ற போர்வைக்குள் சிங்கள் மக்களை வடகிழக்கெங்கும் குடியமர்த்துவதாலோ
ஒற்றுமையை ஒரு போதும் கொண்டு வர முடியாது. அது நிலைமைகளை மேலும் மேலும்
சிக்கலானதாகவே மாற்றும்.
இரு இனங்களுக்கும் இடையில் பரஸ்பரம் புரிந்துணர்வு ஏற்படாமல் இருப்பதன்
பிரதான காரணம் அவர்களுக்கிடையில் இருக்கும் மொழித் தடையும் பூகோள ரீதியாக
அவர்கள் பிரிந்திருப்பதும்தான் என்றால் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்
மக்களுக்கும் இடையில் ஒருபோதுமே பிரச்சனை வந்திருக்க முடியாது. இரு
சமூகங்களுமே ஒரே மொழியையே பேசுகின்றன. அடுத்தடுத்து வாழ்கின்றன. ஆனாலும்
பிரச்சனைகள் தோன்றித்தான் இருக்கின்றன. ஆகவே புரிதல் என்கின்ற விடயத்தில்
மொழி எதுவித சம்பந்தமும் கொண்டிருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. அது மனசு
சம்பந்தப்பட்டது. தமிழ் தெரியாத காரணத்தினாலா அந்த புகைவண்டி அதிகாரி
அவர்களை விரட்டி விட்டார்;? இல்லை. அவரது மனம் சுத்தப்படுத்த வேண்டியதாய்
இருக்கின்றது. காலகாலமாக உள்வாங்கிக் கொண்ட நச்சுக் கருத்துகளால் அவர் மனது
குப்பையாகிக் கிடக்கின்றது. அதுதான் காரணம். மேலும் மேலும் மனசு
குப்பையாகக் கூடிய சம்பவங்கள் ஏற்படாமல் பாரத்துக் கொள்வது என்பதில்
மட்டும்தான் அரசியற்கட்சிகளும் அதன் தலைமைகளும் தமது பங்களிப்பை நல்க
முடியும். அந்த அதிகாரிபோல் நிறைய படித்த வேலை பார்க்கும் மக்கள் ஏனைய
இனங்களிலும் இருக்கின்றார்கள். தமிழ் நாட்டிலே தனது கற்கை நெறிக்காகச்
சென்ற பௌத்த பிக்கு தாக்கப்பட்டமை ஒரு மனிதாபிமான செயற்பாடு அல்ல. அது
வெட்கத்திற்குரியது. ஆனால் ஒரு ஒற்றை மனிதனை தனியே பலர் சேர்ந்து தாக்கிய
இந்த வீரப்பிரதாபத்தை தலையில் வைத்துக் கொண்டாடும் அலுவலக ஊழியர்களையும்
நான் கண்டிருக்கின்றேன். முரண்பட்டு விவாதித்திருக்கின்றேன்.
இவர்களுக்கெல்லாம் நான் சுருக்கமாயச் சொல்வது இதுதான். நாம் இனப்பற்று
மிக்கவர்களாக இருப்போம். அதைவிட மனித நேயம் மிக்கவர்களாக இருப்போம்.
எப்போது ஒருவரின் மனதில் மனித நேயத்தை விட இன உணர்வு மேலெழுகினறதோ அப்போதே
அவர் ஒரு இனத் துவேஷியாக மாறுகின்றார்.
7.ஆனால், இந்தக் காலத்தையும் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும்
எதிர்காலத்துக்கான பேறாக மாற்றும் சிந்தனை பெரும்பாலனவர்களிடத்தில்
காணப்படவில்லையே?
பெரும்பான்மையானவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள தயாராக
இல்லையே என நீங்கள் கேட்பதில் உள்ள ஆதங்கம் எனக்குப் புரிகின்றது. ஆனால்
நாம் எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 30 வருட காலமாய் இந்த
நாட்டிலே நீடித்த கோர யுத்தம் எல்லோர் மனதிலும் ஒரு வடுவை,
ஏமாற்றத்தை,வெறுமையயை சக மனிதனின் மீதான நம்பிக்கையின்மையை
உருவாக்கியிருக்கின்றது.
இந்த 30 வருட யுத்த வாழ்வை ஒரு நெடிய கயிறாக எடுத்துக் கொள்வோமென்றால் அதன்
ஆரம்பப் புள்ளியை இலகுவில் அடைய முடியாத அளவிற்கு சம்பவங்களிலான
முடிச்சுகள் பெரும் பெரும் தடைகளாக இருக்கின்றன. ஒரே இழுப்பின் மூலம் இந்த
முடிச்சுக்கள் எல்லாவற்றையும் நீவி விட்டு தொடக்கப் புள்ளியை அடைந்து விட
முடியாது. இந்த முடிச்சுக்கள் மிகச் சிக்கலானவை. அவிழ்ப்பதற்கு மிகவும்
கடினமானவை. தனி மனித உணர்வுகளோடு சம்பந்தமானவை. தனிப்பட்ட ரீதியில்
பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சமூகங்களின் ஒற்றுமை , அமைதி என்பதை விட தனது
பாதிப்புக்களே துருத்திக் கொண்டு நிற்கும். அவ்வாறானவர்களின் கசப்புணர்வை
நாம் குற்றத்திற்குரியது என்று நோக்க முடியாது.
ஆனாலும் அந்தக் கசப்புணர்வுகள் வளர்க்கப்படுவதிலோ அல்லது பத்திரமாகப்
பாதுகாக்கப்படுவதிலோ எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்கின்ற உண்மை
அவர்களுக்குப் புரிய வைக்கப்பட வேண்டும். அதிகம் ஏன்? சுமாதானத்தையும் ,
ஒற்றுமையையும், மனித நேயத்தையும் விரும்பும் எனக்கே கூட அத்தகைய
கசப்புணர்வு ஏற்படக் கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதை இந்த
இடத்தில் நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதைக்குறிப்பிடுவதன் மூலம் அந்த
நபரை (அவர் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) விமர்சிக்கின்றேன் என்பது
அர்த்தம் அல்ல. அவர் மூலம் கிடைத்த கசப்புணர்வையும் தாண்டி அவர்களின்
சமூகத்தோடு எப்படி நான் இணைந்து பழகுகின்றேன் என்பதுதான் முக்கியம்.
ஆண்டு சரியாக ஞாபகத்தில் இல்லை. அநேகமாக 97 அல்லது 98 ஆக இருக்கலாம்.
அக்கரைப்பற்று முஸ்லிம் பகுதியில் ஒரு கணனிக் கடைக்கு அலுவல் ஒன்றின்
நிமித்தம் சென்றிருந்த போது இலங்கை வங்கி அருகாமையில் குண்டு ஒன்று வெடித்த
பாரிய சத்தமொன்று கேட்டது. சிறிது நேரத்திற்கெல்லாம் அக்கரைப்பற்று
கல்முனை பிரதான வீதியில் வாகனங்கள் விரைந்து பறக்கத் தொடங்கின. மக்கள்
பரபரப்புடன் வீதியில் குழுமத் தொடங்கினர். நான் கணணிக் கடைக்குள்ளே
பதற்றத்துடன் இருந்தபோது கடைக்காரத் தம்பி என்னிடம் வந்து “ சேர்
வேங்கடியில குண்டெறிஞ்சு போட்டானுகளாம். எங்கட ஆக்கள் 4-5 பேருக்கு
ஆபத்தாம். ஒரே ரென்சனாய் இரிக்கி. இங்கால உங்களுக்குத் தெரிந்தவர்கள் ஆரும்
இரிக்காங்களா?” என்று கேட்டான். (கவனிக்க:அந்தத் தம்பிக்கும் எனக்குமான
தொடர்பு அன்றைய நாளுக்கு மட்டுமேயான வர்த்தக தொடர்பு மட்டும்தான்) உடனே
நான் என் நெருங்கிய நண்பன் மஜீத்தின் வீட்டின் இலக்கைச் சொல்லி அங்கே
கொண்டு விடுமாறு கூறினேன். அன்றைக்கு என்று நான் சைக்கிளும் கொண்டு
சென்றிருக்கவில்லை. அந்தத் தம்பி தனது மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக்
கொண்டு மஜீத்தின் வீட்டுக்கு முன்னால் பத்திரமாக இறக்கி விட்டான். என்னைக்
கண்ட மஜீத் வழக்கம் போலவே முகம் மலர “வா கவி” என்று வரவேற்று “ மதியம்
சாப்பிட்டிற்றுப் போகலாம்” எனக் கூறி என் வருகையைப் பற்றி உள்ளிருந்த
மனைவிக்குத் தெரிவித்தான். மஜீத்தின் வீடு பிரதான வீதியில் இருந்து சற்றுத்
தொலைவில் கடற்கரைப் பக்கமாக இருந்தமையினால் பிரதான வீதியின் பதற்றம்
இன்னும் அவன் வீட்டைத் தொட்டிருக்கவில்லை. இருந்தும் அவனும் காத்திரமான ஒரு
கவிஞன் என்பதனால் என் கண்களில் தெரிந்த கலவரத்தை இலகுவாய்க் கண்டு
கொண்டான். “ என்ன கவி வீட்டில ஏதும் புறொப்ளமா? ” எனக் கேட்டபோது நான்
நகரத்தின் நிலைமையைச் சொன்னேன். உடனே மஜீத் “ஒண்டுக்கும் யோசிக்க வேணாம்
கவி வீட்ட இருந்திற்று ரென்சன் குறைந்தவுடன் போகலாம்” எனக் கூறியபோது என்
பதற்றம் பாதி குறைந்தது போலிருந்தது. என்னை உள்ளே இருக்கச் சொல்லி விட்டு
நிலைமைகளை அறிந்து வருவதாக வெளியேறிச் சென்றான். சில நிமிடங்களில் திரும்பி
வந்தான். திரும்பி வரும்போது முகம் இருண்டு கிடந்தது. எனக்கருகில் வந்தவன்
என் காதிற்குள் ரகசியமாக “ நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கி. எடு கவி
நான் உன்னை கடற்கரை றோட்டால கூட்டிக் கொண்டு கேம்படி மட்டும் விடுறன்.
அங்கால உங்கட ஏரியாதானே நீ போய்க் கொள்ளுவாய்” என்றான். அந்த நாட்களில்
அவன் பலத்த இதய நோயாளியாய் இருந்தமையினால் சைக்கிள் மிதிக்கக் கூடாது என
மருத்தவரின் ஆலோசனை வேறு. “ நீ எப்பிடி மச்சான் என்னை விட்டிற்று சைக்கிள்
மிதித்து திரும்பி வருவாய்” எனக் கேட்டேன். சிறிது யோசித்தவன் “ வா நாம
……….இடம் போவோம். அவன் எப்படியாவது உன்னை வோடருக்கு கொண்டு விடுவான் என
எனக்கும் அவனுக்கும் பொது நண்பரும் கவிஞரும், இலக்கியச் செயற்பாட்டாளருமான
நான் முன்பு குறிப்பிட்ட நபரின் பெயரைக் குறிப்பிட்டான். எனக்கும் அது சரி
எனத் தோன்றவே அவரின் பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றோம். (அந் நாளில்
அவர் ஒரு பத்திரிகை நடாத்திக் கொண்டிருந்தார்.)
நாங்கள் போகும்போது முழங்காலுக்கு மேலே சாரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு
மண்டபத்தைக் கூட்டிக் கொண்டிருந்த அவர் என்னைக் கண்டதும் மிகக் கோபமாக
“ என்னடாப்பா உங்கட ஆக்கள் எங்கட ஆக்களை வெட்டிறாங்கள் குத்திறாங்கள் “ என
என்னைப் பார்த்துக் கேட்கவும் நான் திகைத்து மௌனித்துப் போனேன். யார்
என்னைப் பாதுகாப்பாய் கொண்டு விடுவார் என நம்பி நான் வந்தேனோ அவரே என்னைக்
குற்றவாளிபோல் , வங்கியருகில் குண்டை எறிந்து விட்டு இளைக்க இளைக்க ஓடி
வந்து அவர் முன்னே நிற்கும் ஒருவரைப் போல் என்னிடம் கேட்ட கேள்வி என்னை
நிலை குலைய வைத்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட மஜீத்,
அங்கிருந்த பெடியனிடம் சைக்கிள் ஒன்றை பெற்றுக் கொண்டு என்னிடம் வந்து “
எடு கவி சைக்கிளை. உன்னை உள் றோட்டால கொண்டு வந்து வேதக்கோயில் வோர்டர
மட்டும் விட்டிற்று திரும்பி வாறன். திரும்பி நான் வரக்கொள்ள மௌத்தானாலும்
பரவாயில்ல” என்று கூறி என் கைகளில் சைக்கிளைத் தந்தான். கண்கள் பனிக்க ஒரு
கடவுளைப் பார்ப்பது போல் அவனை நன்றியுடன் பார்த்தேன்.
கனத்துப் போன மனத்துடன் அவனை ஏற்றி சைக்கிளை நான் மிதித்து வருகையில் அவன்
சொன்னான் “………. இன் நடவடிக்கை எனக்குக் கொஞ்சமும் பிடிக்கல்ல கவி. இன்னும்
கொஞ்ச நேரம் இருந்திருந்தால் ……….ரே உன்னை ஏதும் செய்தாலும்
செய்திருப்பான்” என அந்தக் கவிஞரின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி விட்டு
என்னை வேதக்கோயில் வோடர் வரை கொண்டு வந்து விட்டு விட்டு மூச்சு வாங்க
மூச்சு வாங்க சைக்கிளை மிதித்துச் சென்றான்.
இந்தச் சம்பவத்தை ஏன் நான் இவ்வளவு விரிவாய்ச் சொன்னேன் என்றால் ஒரே
சம்பவத்துடன் தொடர்புடைய ஒரே சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேரின் மன நிலைகள்
எப்படி இருந்திருக்கின்றன என்பதைப் பாருங்கள்.
தன்னிடம் வந்த வாடிக்கையாளரை பாதுகாப்பாக தன்னை விட்டு நீங்க வைக்க
வேண்டும் என அந்தக் கடைக்காரத் தம்பியும், தன்னை நாடி வந்த நண்பனை
தன்னுயிருக்கு அச்சுறுத்தல் வந்தாலும் பரவாயில்லை கொண்டு விட வேண்டும் என
என் நண்பன் மஜீத்தும்,உதவி கேட்பதுபோல் வந்த நண்பனை மாற்று சமூகத்தைச்
சேர்ந்த ஒருத்தர் என்பதால் எதிரிபோல் நினைத்து மனம் நோகடிக்கச் செய்த
அந்தக் கவிஞரும் ஒவ்வொரு மனோ நிலையைக் கொண்டிருக்கின்றார்கள். அது முஸ்லிம்
சமூகத்திடம் மட்டும் என்றில்லை தமிழ், சிங்களம் என்று எல்லாச்
சமூகங்களிலுமே இந்த மனோ நிலை வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே ஒரு மனிதன்
நமக்கு தவறிழைப்பவனாக இருப்பானாயின் அதை அவனது குணவியல்பில் உள்ள
குறைபாடாகப் பார்க்க வேண்டுமே தவிர அவன் சார்ந்திருக்கும் சமூகத்தின்
குறைபாடாகப் பார்க்கக் கூடாது. அந்தக் கவிஞர் எனக்குக் கொடுத்த கசப்புணர்வை
அவர்கள் சமூகத்தின் மீது காட்டியிருந்தால் இன்றைக்கு எனக்கு ஏராளமான
நண்பர்கள் அவர்கள் பக்கமிருந்து இருக்க மாட்டார்கள். உண்மையைச் சொன்னால்
அந்தக் கவிஞர் கூட உணரச்சி வசப்பட்ட நிலையில் தான் நடந்து கொண்டதை மறந்து
விடுமாறு பின்னொரு நாளில் என்னிடம் கூறியிருந்தார் . அவருடனான
கசப்புணர்வைத் தவிர்த்து இப்போதும் அவருடன் நட்புடனான தொடர்புகளை
அவ்வப்போது வைத்திருக்கின்றேன்.
ஏற்பட்டிருக்கும் இந்த புதிய சூழலில் இத்தகைய ஒரு புரிந்துணர்வே
இனங்களுக்கம் சமூகங்களுக்கும் இடையில் பிணைப்பை வலுப்படுத்தும்.
மன்னியுங்கள் நண்பரே ஒரு நல்ல நோக்கத்தை எடுத்துக் காட்ட நமது சம்பவத்தை
பொது வெளிக்குக் கொண்டு வர வேண்டியதாயிற்று. உங்களைக் காயப்படுத்துவதற்காக
அல்ல.
8. நீங்கள் சொல்வதைப்போல நல்லிணக்கம், நெருக்கம், சமூக உறவு, புரிந்துணர்வு
போன்றவற்றை நாம் இலகுவாகக் கண்டடைந்து விடமுடியாது. ஆனால், அவற்றை
உருவாக்குவதற்குப் பதிலாக அவற்றை வளர்ப்பதிலேயே அரசியற் கட்சிகளும்
தலைவர்களும் அரசாங்கத்தைச் சேர்நவர்களும் ஊடகங்களும் இருக்கின்றனவே. இந்த
நிலையில் மாற்று வழி என்ன? சனங்களின் நிலையை மேம்படுத்துவதற்ககுப் பதிலாக
இன்னும் மோசமாக்கும் நடவடிக்கைகளும் அவற்றை வைத்துப் பிழைக்கும் நிலையும்
வளர்த்தெடுக்கப்படுகின்றனவே?
இதற்கான மாற்று வழி என்ன என்பதன் சுருக்கமான பதில் மக்களுக்கு ஏற்பட வேண்டிய அரசியல் விழிப்புணர்வாகவே இருக்க வேண்டும்.
தேர்தலையும் வாக்குப் பலத்தையும் நோக்கியே தமது நடவடிக்கைகளை
முன்னெடுத்துச் செல்கின்ற அரசியற் கட்சிகளும் தலைமைகளுமே நமது நாட்டில்
இருக்கின்றன என்பதை மக்கள் இப்போது மெல்ல மெல்ல புரிந்து கொண்டு
வருகின்றார்கள்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கின்ற நோக்கம் கூட தாம் சார்ந்திருக்கும்
சமூகத்தின் நலன் கருதியன்றி தனது சொந்த நலனுக்காக அல்லது தன்னைச் சுற்றி
இருப்பவர்களின் நலனுக்காக அல்லது தனது பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின்
நலனுக்காக என்கின்ற அடிப்படையிலான அரசியல் இப்போது சுய நலமாகி விட்டது.
இப்படிச் சுயநலம் மிக்கதான தலைமைகள், பிச்சைக்காரனுக்கு தன்னுடைய புண் ஒரு
போதும் ஆறிவிடக் கூடாதே என்கின்ற வேண்டுதல் இருப்பது போல
சமூகங்களுக்கிடையிலான விரிசல் அல்லது பிளவு என்கின்ற புண் இருந்து கொண்டே
இருக்க வேண்டும் என்றே வேண்டிக் கொள்வதுடன் அதற்கான முனைப்புகளிலும்
அவ்வப்போது இறங்குகின்றன.
இந்த குணாம்சங்கள் அரசியற் தலைமைகளிடம் இருந்து கொண்டேதான் இருக்கும். அது மாறப்போவதில்லை.
எனவே இன முரண்பாடுகளை வளர்க்கும் அரசியற் சக்திகளையும் தலைமைகளையும் மாற்ற
முனைவதை விட இதய சுத்தியுடன் தனது சமூகத்தையும் அயற் சமூகத்தையும்
நேசிக்கும் ஒரு புதிய சக்தியொன்றை நாம் கண்டடைய வேண்டியிருக்கின்றது.
தனது சமூகத்தை உண்மையிலே நேசிக்கும் ஒருவர் அயற் சமூகத்துடன் ஒரு போதும்
பகை கொண்டிருக்க விரும்ப மாட்டார். அயற் சமூகத்துடன் நட்புக் கொண்டிருப்பதே
தனது சமூகத்திற்கான உண்மையான பாதுகாப்பு என்பதைப் புரிந்து கொள்வார்.
இதை எளிமையாக இப்படி விளக்கலாம். தனது குடும்பம் பாதுகாப்பாக இருக்க
வேண்டும் என நினைக்கின்ற ஒரு குடும்பத் தலைவன் அயல் வீட்டாருடன் அன்புடனும்
நட்புடனுமே பழகி வருவார். அப்போதுதான் ஆபத்து நேரங்களில் அயலவர் ஓடி
வருவார்.
எனவே சக சமூகத்துடன் அன்பாகவும் நட்பாகவும் பழகக்கூடிய அவர்களி;டம் தமது
பிரச்சனைகளை விளக்கிச் சொல்லக் கூடிய ஒரு புதிய சக்தியின் கீழ் ஒவ்வொரு
சமூகமும் அணி திரள வேண்டும்.
பல நாடுகளில் வரலாற்றை மாற்றி அமைத்த இத்தகைய புதிய சக்திகளின் பாத்திரத்தை
இடதுசாரிக் கட்சிகள் ஏற்று திறம்படச் செய்திருக்கின்றன. இன உணர்வுகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்காமல் சமத்துவத்திற்கு முன்னுரிமை கொடுத்த
இடதுசாரிகளாகவே அவை இருந்திருந்தன.
ஆனால் துரதிஷ்டவசமாக நமது நாட்டிலே இடதுசாரிகள் கூட சமத்துவத்தைக்
கிடப்பில் போட்டு இனவாத அரசியலிலே ஊறிக்கிடக்கின்றன. அதனால்தான் புதிய
சக்தி என்கின்ற பூனைக்கு இதுவரை யாராலுமே மணி கட்ட முடியாமல் இருக்கின்றது.
நமது இளைய தலைமுறையினரின் கவனம் இந்த நாட்டிலே நிலவும் பொருளாதார
ஏற்றத்தாழ்விலே குவிக்கப்படுமாயின் அதன் பின்ணணியிலே இருக்கும் இனவாத
அரசியலின் கறுப்பு விம்பம் துலக்கமாகத் தெரிய வரும்.
எல்லா மக்களின் முன்னேற்றத்தையும் எல்லா மக்களின் வாழ்வின் சுபீட்சத்தையும்
எல்லா மக்களிடமும் சமத்துவத்தையும் தமது தொலை நோக்காகக் கொண்டு ஒரு புதிய
சக்தியொன்று எல்லா சமூகங்களின் பங்குபற்றுதலுடனும் உருவாகுவதே இந்த
நல்லிணக்கத்தை அடைவதற்கான மிகச் சரியானதும் பயனுள்ளதுமான மாற்று வழியாக
அமைய முடியும்.
சுருக்கமாகக் கூறினால் இனப்பிரச்சினை என்ற ஒன்று தலை தூக்கும் முன்
முனைப்பில் இருந்த வர்க்கப் போராட்டம் மீண்டும் முனைப்புப் பெறும்போது இன
நல்லிணக்கம் என்பது இயல்பாகவே துளிர்விடத் தொடங்கும். ஆனால் துயரம்
என்னவெனில் நமது நாட்டில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய சோசலிச
வாதிகள் அருகிப்போனார்கள் அல்லது அவர்களும் இனவாத சகதிக்குள் ஊறிப்
போனார்கள் என்பதே.
9. நீங்கள் குறிப்பிடுவதைப்போல இலங்கைச் சூழலுக்கு புதிய சக்தியின்
தொழிற்பாடு அவசியமாகவே உள்ளது. ஆனால், பாரம்பரியமான செயற்பாடுகளும்
சிந்தனைகளும் புதிய விளைவுகளை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது.
புதிய சக்திகளை எதிர்பார்த்தல் என்பதில் எத்தகைய பார்வை உங்களுக்குண்டு?
அதாவது, இலக்கியம் மற்றும் அரசியல் ரீதியாக...?
அரசியல் ரீதியாக புதிய சக்தியொன்று உருவாதல் என்பது ஒரு படிமுறையான
செயற்பாட்டைக் கொண்டதாக இருக்க வேண்டுமென கருதுகின்றேன்.முதலில் இன, மத
பிரதேச ரீதியாகப் பிளவு பட்டுச் சிந்திக்காது எதிர்கால சந்ததியின்
மகிழ்ச்சிகரமான வாழ்வைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரே சிந்தனைப்
போக்குடையவர்கள் எல்லா சமூகங்களில் இருந்தும், எல்லாப் பிரதேசங்களில்
இருந்தும் அடையாளம் காணப்பட வேண்டும். பின்பு அவர்கள் ஏதோ ஒரு விதத்தில்
மனித நேயத்துடனான சமத்துவ வாழ்வு என்ற பொது நோக்கின் பால் ஒருங்கிணைக்கப்பட
வேண்டும். அப்படி ஒருங்கிணைந்த கலந்துரையாடல் ஒன்றிலே இந்தச் சிந்தனைப்
போக்கிலிருந்து விலகி அல்லது முரண்பட்டு இருக்கும் ஏனையவர்களையும் இந்தப்
பொது நோக்கின்பால் உள்ளீர்ப்புச் செய்வதற்கு செயற்படுத்தப்பட வேண்டிய
திட்டங்கள் பற்றி ஆராய்ந்து தெளிவானதும், வெளிப்படையானதும் உறுதியானதுமான
தீர்மானங்கள் எட்டப்பட வேண்டும்.
அதன்பின் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய புதிய சக்தியின் அவசியம்
குறித்த விரிவாக்கப் பிரச்சாரம் அதன் இயலளவு சக்திக்குட்பட்டு மெதுவாக
மெதுவாக கொண்டு செல்லப் படுதல் வேண்டும். முக்கியமாக பாரம்பரிய சிந்தனையில்
இருந்து மக்கள் மாறு பட வேண்டியதன் அவசியமும் காலத்தின் தேவையும் நடைமுறை
விடயங்களை சுட்டிக்காடுவதன் மூலம் உணர்த்தப்பட வேண்டும். குறிப்பாக
சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு சென்று கொண்டிருக்கும் மக்கள் மீதான
பொருளாதார நெருக்குவாரங்கள் புரிய வைக்கப் படுதல்வேண்டும். இந்த விடயங்கள்
தொடர்பான மக்களின் கருத்துக்களும், பின்னூட்டங்களும் சேகரிக்கப்பட்டு
அதற்கமைவாக மேலும் இந்த செயற்பாடு செப்பனிடப்பட வேண்டும். இந்த விதத்திலே
அரசியல் ரீதியாக புதிய சக்திக்கான தோற்றுவாயை நாம் உருவாக்க முடியும் என
நம்புகின்றேன்.
இலக்கிய ரீதியாக நோக்கினால், எமது இலக்கியச் செயற்பாட்டாளர்களில்
பெரும்பாலானவர்களின் கருத்தியல், குறித்த ஒரு சக்தியை மித மிஞ்சி ஆதரிப்பது
அல்லது மிகையாக எதிர்ப்பது என்பதாகவே இருக்கின்றது. அவரவர் ஆதரிக்கும்
அல்லது எதிர்க்கும் நிலைப்பாடு என்பதற்கமைய அவர்களிற்குள்ளும்
அரசியல்வாதிகளுக்கு நிகரான குழு உருவாக்கம் இடம் பெற்றுக்
கொண்டிருக்கின்றது. இதனால் உண்மைகள் மறைக்கப்பட்ட அல்லது
திரிவுபடுத்தப்பட்ட அல்லது மிகைப்படுத்தப்பட்ட உள்ளடக்கங்களைக் கொண்ட
படைப்புகளாகவே வந்து விழுகின்றன. முதலில் படைப்பாளிகள் இந்த குழு
மனப்பான்மையில் இருந்து வெளியே வருவதுடன் மாற்றம் ஒன்றின் அவசியம் குறித்து
சிந்திக்க முற்பட வேண்டும். நினைத்துப் பார்க்கும்போது வலி தரும் கடந்த
காலத்தின் கோரத்தருணங்களை மக்களின் மனதில் மீள மீள துளிர்க்கச் செய்யும்
படைப்புகளைப் படைத்தல் என்பதைவிட இருக்கின்ற இந்தச் சூழலில் எந்த வகையில்
மக்களுக்கான மீட்சியை அடையலாம் என்றவாறான சில திரிகளை கொளுத்தி வைக்கும்
முன்னோடிகளாக படைப்பாளிகள் மாற முற்பட வேண்டும். சரி தவறு என்பதற்கு
அப்பால் நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்க அவற்றினூடு நாம் கற்றுக்கொள்ளக்
கூடிய பாடங்களையும் அனுபவங்களையும் முன்னிறுத்தி மனதில் வஞ்சகம் சூது
வன்மம் குடிகொள்ளாத ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதில் தமக்கிருக்கும்
பொறுப்பையும் கடப்பாட்டையும் தட்டிக் கழித்துவிட்டு இலக்கியவாதிகள் தான்
தோன்றித்தனமாக படைப்புகள் படைத்திட முற்படக்கூடாது. அப்படி அவர்கள்
முற்படுவார்களாயின் அவை இலக்கியமாக அமைய முடியாது. இப்படி நான்
குறிப்பிடுவதன் அர்த்தம் கடந்த காலத்தின் உண்மைகள் மறைக்கப்பட வேண்டும்
என்பதல்ல. அவை திரிவு படுத்தப்படாமல், மிகைப்படுத்தப் படாமல்,
இருட்டடிப்புச் செய்யப்படாமல் , பக்கச் சார்பு எடுக்கப் படாமல் உண்மையான
பதிவுகளாக இருக்க வேண்டும் என்பதே.
10. ஆனால், இவையெல்லாம் இலகுவில் எட்டக்கூடிய நடைமுறைகளா? ஏனென்றால் மிகக்
கடினமான நிலையில் எதிர்நிலைச் செயற்பாடுகள் உள்ளன. ஊடகங்கள், கட்சிகள்,
சமூக நிறுவனங்கள், மனப்பாங்கு போன்றவை முற்றிலும் வணிக நன்மைகளையே
பெறத்துடிக்கும்போது நீங்கள் விரும்புகின்ற, புதிய திசையைத் திறத்தல்
நடப்பற்கான சாத்தியங்கள் உண்டா?
நீங்கள் என்னிடம் கேட்ட அதே வினாக்கள் என் மனதிலும் இருக்கவே
செய்கின்றன.மாற்றம் என்ற ஒன்று வரும்போது அதை இலகுவில் யாரும் ஏற்பதற்கு
விரும்புவதில்லை என்பது உண்மைதான்.ஒரு குடும்ப நிர்வாகத்தில் தொடங்கி
நிறுவனம், திணைக்களம் அரச நிர்வாகம் என்று எந்த ஒன்றிலுமே மாற்றம் என்ற
ஒன்றை எடுத்த எடுப்பில் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. அந்த வகையில்
பார்க்கும்போது இதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவானது போலவே தோன்றும்.
ஆனால் இருக்கின்ற சூழ் நிலைகள் தொடர்ச்சியாக வாழ்தலின் மீதான
நெருக்குவாரங்களை அதிகரிக்கச் செய்யும்போது இந்த மாற்றத்திற்கான தேவை
எல்லோராலும் உணரப்படக்கூடிய ஒன்றாக மாறவும் கூடும்.ரைட் சகோதரர்கள் வானில்
பறந்து காட்டும்வரை மனித குலத்தைப் பொறுத்தவரை வானில் பறப்பது என்பது
அசாத்தியமான ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது. எனவே இந்த மாற்றம் கூட சாத்தியம்
இல்லாத ஒன்று என்று முற்று முழுதாக ஒதுக்கிவிட முடியாது. உண்மையில் இதில்
இருக்கும் சவால் யாதெனில் இதனை யார் தொடக்கி வைப்பது என்பதுதான்.
11. மாற்றங்களுக்கான புள்ளிகளை யார் உருவாக்குவது என்ற கேள்விதான் பலருடைய
மனதிலும் உண்டு. இலங்கைச் சூழலில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய தரப்பான
அல்லது சிந்திக்கும் தரப்பான படித்தவர்களிற் பெரும்பாலோர் குறுகிய
மனப்பாங்குடனும் வரலாற்றறிவு இல்லாமலும் அந்தந்தத் தரப்பிலுள்ள
முரணியக்கங்களுடன் தங்களைப் பிணைத்திருக்கிறார்களே! இந்த நிலையில்
மாற்றங்களுக்குரிய ஆளுமைகள் உருவாக முடியாத பரப்பொன்றைப் பேணுவதிலேயே
ஊடகங்கள், அரசியற் தரப்புகள், புத்திஜீவிகள், சமூக அமைப்புகள் எல்லாம்
இருக்கும்போது எத்தகைய நம்பிக்கையை வைக்க முடியும்?
மாற்றங்கள் தொடர்பாக இந்தச் செவ்வியை காணும் உங்களுக்கும் பதில் வழங்கும்
எனக்கும் எப்படி அவாவும் நம்பிக்கையும் இருப்பது வெளிப்படையாய் தெரிகின்றதோ
அதே சிந்தனைப் போக்குடன் கூடிய இன்னும் ஏராளமானவர்கள் இருக்கவும்
கூடும்தானே. அதனால் ஏன் இதனை நாம் முற்று முழுதாக அவ நம்பிக்கையுடன்
பார்க்க வேண்டும்? வரலாறுகளை திரும்பிப் பார்த்தால் மிகப்பெரிய திருப்பு
முனைகளின் தொடக்கங்கள் யாவுமே ஒரு புள்ளியில் இருந்துதான்
ஆரம்பமாகியிருக்கின்றன. ஓடையாய் அருவியாய் நதியாய் மாறி பரந்து விரிந்து
கடைசியில் சமுத்திரத்துடன் சங்கமிக்கும் நீரின் தொடக்கம் ஒரு சிறிய
பரப்பில் இருந்து எழும் சுனையாக இருப்பதில்லையா? ஆக நம்புவோம்.
கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டு கண் மூடித்தனமாக நம்பாமல் நமதளவில் முடிந்த முனைப்புகளுடன் நம்புவோம்.
12. இனி உங்களுடைய எழுத்துகள் தொடர்பாக... “சரிநிகர்“க்காலத்தில்
(1990களில்) தீவிரமாக இயங்கி, துலக்கமாக அடையாளங் காணப்பட்ட நீங்கள்
பின்னர் சற்றுத் தளர்ந்து விட்டதாகத் தெரிகிறது. இடையில் நிகழ்ந்ததென்ன?
ஒரு படைப்பாளனுக்கு படைப்பூக்கம் என்பது எல்லாக் காலத்திலும் ஒரே விதமாய்
இருக்கும் என்று எதிபார்க்க முடியாது எதிர்பார்க்கவும் கூடாது. சரி நிகர்
காலத்தில் நான் முனைப்புடன் செயல்பட்டமைக்கு அப்போது எனக்கிருந்த மொரட்டுவை
பல்கலை கழக வளாக சூழ் நிலையும் எனது ஆழ்மனதில் பதிவு செய்யப்படுவதற்காக
மண்டியிட்டுக் கிடந்த உணர்வுகளுமே மூல காரணம் ஆகும்.
ஒப்பீட்டளவில் மிகச் சின்ன வயதாகிய 22 வயதில் திருமண பந்தத்தில் இணைந்து
கொண்ட ஒருவனாக நான் இருக்கின்றமையினால் வளாகப்படிப்பு முடிவதற்கு முன்பேயே
குடும்பப் பொறுப்பு என்னை அழுத்தத் தொடங்கியது. பொருளாதார ரீதியான
சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதிலும் முறையான வேலை ஒன்றைப் பெற்றுக்
கொள்வதிலும் நேர ஒதுக்கீடுகள் ஆக்கிரமிப்புச் செய்ததால் படைப்பூக்கம் பின்
தள்ளப்பட்டது தவிர்க்க முடியாததாக அமைந்து விட்டது. அது மட்டும் அல்லாது
நண்பர்களாய் தோற்றம் காட்டிக்கொண்டு மறைமுகமாக என்னை இருட்டடிப்புச் செய்ய
முனைந்த பல இலக்கிய நண்பர்களின் செயற்பாடுகளும் படைப்புகளை படைத்தல்
தொடர்பாக இருந்த ஆர்வத்தில் ஒரு தேக்கத்தை தந்தது. 42 வயது முடிந்த இந்த
நீண்ட வாழ்வியல் அனுபவத்தில் இத்தகைய தேக்கம் அர்த்தமற்றது என்பது இப்போது
எனக்குத் தோன்றினாலும் அந்தக் காலத்தில் ஒரு இளைஞனாய் இருந்த எனக்கு இந்த
இருட்டடிப்புக்கள் உள் நோக்கம் கொண்ட மட்டம் தட்டல்கள் ஒருவித விரக்தியை
இலக்கியம் தொடர்பாகத் தந்தது உண்மை. இதை எனது படைப்பாற்றலில் உள்ள ஒரு
தளர்வு நிலையாக ஒருபோதுமே நான் உணர்ந்ததில்லை.
13. ஒரு கதையை எழுதும்பொழுது எதையெல்லாம் கவனிக்கிறீங்கள்? எதெல்லாம் ஒரு கதையை எழுத வைக்கின்றன?
கதை எழுதுவது என்பதை ஒரு கட்டடத்தைக் கட்டுவதுபோல் வடிவமைத்து திட்டங்கள்
தீட்டி முற்கூட்டிய தயாரிப்புக்களுடன் ஒரு போதுமே நான்
மேற்கொன்டதில்லை.அவ்வப்போது அந்தந்த மன நிலையில் எந்த ஒரு விடயம் கதைக்குள்
கொண்டுவரப்பட வேண்டும் என்று என் மனது சொல்கின்றதோ அந்தந்த உள்ளடக்கத்தின்
வழியே கதையின் உருவமும் இயல்பாகவே வந்துவிடுகின்றது. சிறுகதைத் துறையில்
நான் நீங்கள் முன்பு குறிப்பிட்டது போல துலக்கமாக இனம்
காணப்பட்டிருந்தாலும் கவிதைத் துறையிலும் எனக்கிருந்த ஈடுபாட்ட்டினால் எனது
கதைகளிலே படிமங்களும் உத்திகளும் இயல்பாகவே வந்து விடுகின்றன. தவிர,
கதைக்கு பயன்படுத்த வேண்டிய உத்திகள் தொடர்பாகவோ அல்லது வடிவம் தொடர்பாகவோ
படிமங்கள் தொடர்பாகவோ தனியாக என் மூளையை நான் கசக்கியது கிடையாது.(கசக்கும்
அளவிற்கு அங்கு ஒன்றும் இல்லை என்று ரஞ்சகுமார் தனக்குள் முணுமுணுப்பது
கேட்கிறது).ஆனால் பொதுவாக எனது கதைகளின் பாடு பொருள் மலினப்பட்டுப்போன ஒரு
விடயமாக இருக்காமல் வாசகனுக்குள் உள் நுழைந்து வாசகனையும் கதை நகரும்
தளத்தினூடு அழைத்துச் செல்லக்கூடிய விதமாக இருப்பதுடன் நடையும் வாசகனை
ஈர்த்து கதையுடன் இறுக்கமாகப் பிணைத்திருக்க வேண்டும் என்பதில் எப்போதுமே
கவனமாக இருப்பேன். என்னுடைய கதைகள் ஒவ்வொன்றும் சொல்லப்பட்ட விதத்தில்
ஒன்றுக்கொன்று வேறு பட்டு இருக்கின்றன என்று என் நண்பர்கள் என்னிடம்
கூறியிருக்கின்றார்கள். இந்த வேறுபாட்டைக்கூட நான் வலிந்து
புகுத்துவதில்லை. சொல்ல வருகின்ற விடயத்தை பொறுத்து அது தனித்துவமாக வந்து
விடுகின்றது. உதாரணமாக காற்று கனக்கும் தீவு என்கின்ற கதையில் நான் தொட்ட
பாடுபொருள் மிகக் கூர்மையானதும் அதேவேளை வெளிப்படையாக கூற
முடியாததுமானதாகும். எனவே அந்த கதைக்கு என்னுடைய நடைப் பாணியில் இருந்து
முற்றிலும் மாறு பட்ட வெளிப்பாட்டு முறைமை அமைந்து விட்டது. சுருக்கமாகக்
கூறினால் இலக்கியம் படைத்தல் என்பதை நான் இப்படித்தான் பார்க்கின்றேன்.
படைப்பு என்பது எந்த உணர்வை வெளிப்படுத்த முனைகின்றதோ அந்த உணர்வுகள் ஒரு
காட்டாறு போல் வேகமாகவோ அல்லது ஒரு நீரோடை போல் நிதானமாகவோ படைப்பினுள்
பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.உணர்வுகளுக்கு அணை போட்டுவிட்டு மதகினூடு
திறந்துவிடும் ஒன்றாக அது இருக்க முடியாது. முன்னதை இதயம் செய்கின்றது,
பின்னதை மூளை செய்கின்றது. நான் இதயத்தாலேயே எப்போதும் படைப்புகளை படைக்க
விரும்புகின்றேன்.
14. சிறுகதைகளில் உண்டாகியிருக்கும் மாறுதல் அல்லது வேறுபாடுகள்
குறித்து.... புதிய கதை சொல்லிகளாக நீங்கள் அடையாளம் கண்டிருப்பது?
அவர்களின் சிறப்படையாளங்கள்?
ஒரு அஞ்ஞாதவாசம் போல் இலக்கிய உலகைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 14 ஆண்டுகள்
ஒதுங்கி இருந்த என்னால் இந்தக் கேள்விக்கு முழுமையானதும் சரியானதுமான
பதிலைக் கூற முடியுமா என்று தெரியவில்லை.இருந்தும் மீளவும் நான் இலக்கிய
நண்பர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட பிறகு கிடைத்த தகவல்களின்
ஊடாகவும் இந்த குறுகிய காலத்திற்குள் என்னால் படிக்க முடிந்த சில
படைப்புகளின் ஊடாகவும் எனது பதிவுகளை இடுகின்றேன். நான் இடும் பதிவுகளில்
வர வேண்டிய யாரின் பெயராவது வராமல் போனால் அதன் அர்த்தம் உங்கள் எழுத்து
என்னை ஈர்க்கவில்லை என்பது அர்த்தமல்ல. உங்கள் எழுத்தை வாசிக்கும் வாய்ப்பு
எனக்குக் கிடைக்க வில்லயென்றே நினைத்துக் கொள்ளுங்கள். சரி இனி உங்கள்
கேள்விக்கு வருவோம். எனது படைப்புகள் வெளிவந்த காலத்தின் பின் எழுத
ஆரம்பித்தவர்களில் எனக்குத் தெரிந்தவரை பின்வருவோரை முக்கியமான கதை
சொல்லிகளாக என்னல் பதிவு செய்ய முடிகின்றது. திசேரா, ஷோபாசக்தி, யோ.கர்ணன்,
இராகவன், ஹஸின்,அம்ரிதா ஏயெம், சயந்தன் போன்றவர்கள் தனித்துவமான
அடையாளங்களோடு கதை சொல்லிகளாக உலா வருகின்றார்கள். இவர்கள் ஒவ்வொருமே
ஒவ்வொரு பின்புலங்களை கொண்டிருந்து ஒவ்வொரு வகையான கருத்தியல்களுடன்
படைப்புகளை படைத்திருந்த போதும் ஈழத்துச் சிறுகதைகளை இன்னுமொரு
தளத்திற்குக் கொண்டு செல்வதில் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருப்பதை
மறுக்க முடியாது.
15. பொதுவாகவே எல்லாவற்றின் வளர்ச்சியிலும் மாற்றங்களும் ஏற்படுவதுண்டு.
தமிழ் இலக்கியத்திலும் குறிப்பாக சிறுகதைகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
எவை? எதிர்காலத்தில் இன்னும் என்னமாதிரியான மாற்றங்கள் நிகழக்கூடும்?
சிறுகதையில் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றம் மரபார்ந்த ரீதியாக இருந்து
வந்த ஒரு கதையின் தொடக்கம் கதை வளர்வு, முடிவு என்கின்ற கதைக்கான சூத்திரம்
உடைக்கப்பட்டு எக்கணத்திலிருந்தும் ஒரு கதை ஆரம்பிக்கப்படலாம் என்கின்ற
தன்மை அண்மைக் காலங்களில் முக்கியமான ஒரு மாற்றமாக எனக்குத் தோன்றுகின்றது.
மேலும் மிக நீண்ட காலமாகவே வாதப் பிரதிவாதங்களுக்குள்ளாகி வந்த உருவமா
உள்ளடக்கமா என்கின்ற விடயங்கள் எல்லாம் அடிபட்டுப்போய் பிரதியின் மீதான
வாசிப்பு என்றொரு புதிய அணுகுமுறை பின் நவீனத்துவம் என்கின்ற அடைமொழியினூடு
பல இளம் எழுத்தாளர்களைப் பாதித்துள்ளதுடன் நவீனத்தின் பால் அவர்கள்
கொண்டிருக்கும் அதீத கவர்ச்சி சில சமயங்களில் சிறுகதை ஒன்றை சாதரண வாசகன்
உள்வாங்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை மறுப்பதாக கூட நான் உணர்கின்றேன்.
இது எனது தனிப்பட்ட கருத்தாகும். பொதுவாகவே புரிந்து கொள்ளப்படாத
படைப்பிற்கும் வெற்றுத் தாளிற்கும் அதிகமாக வேறுபாடு இருக்கப்போவதில்லை.
நமது நாட்டிலே நவீனத்துவம் அல்லது பின் நவீனத்துவம் சார்ந்து படைப்புகள்
படைக்கும் படைப்பாளிகள் முதலில் அவ்ர்களின் எழுத்துக்களை புரிந்து கொள்ளக்
கூடிய தீவிர வாசகப் பரப்பு எவ்வளவு உள்ளது என்பதைப் பற்றி சிறிது
யோசிக்கவேண்டியிருக்கின்றது. எதுவுமே முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாமல்
எல்லமே புரிந்து கொண்டதாய் போலியாய் நடித்துக்கொண்டு ஆஹா ஒஹோ என மாறி மாறி
முதுகு சொறிந்து விடும் அணுகுமுறையினால் இலக்கியம் ஒரு போதும் வளரப்
போவதில்லை. அடுத்தவருக்கு புரியாமல் எழுதுவதுதான் பின் நவீனத்துவம்
என்கின்ற ஒரு எண்ணப்பாங்கு கூட நமது படைப்பாளிகள் பலரிடம் உண்டு. ஒரு
சுரப்புப் போல சுரந்து வர வேண்டிய கவிதயைக் கூட கவிதைச் செயற்பாடு எனக்
கூறிக்கொள்ளும் பல இலக்கிய வித்தகர்களும் இங்குதான் இருக்கின்றார்கள்.
தங்கள் நிலைப்பாடுகளை நிலை நிறுத்திக் கொள்ள இஸம்களையும் இன்னொரு நாட்டின்
வாயில் பெயர் நுழையாத விமர்சகர்கள் அல்லது படைப்பாளிகளின் பெயர்களையும்
துணைக்கழைத்து மற்றவர்களை மௌனிக்கவும் முனைகின்றார்கள். முதலில் நாம்
எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.ஒரு நாட்டின்
இலக்கியப் போக்கு இன்னும் ஒரு நாட்டிற்கு முழுதுமாய் பொருந்திப் போக
முடியாது. அந்தந்த நட்டு மக்களின் கலாசார, பாரம்பரிய, பண்பாட்டு,பொருளாதார
விழுமியங்களுக்கும் அந்தந்த நாட்டு மக்கள் எதிர்கொள்கின்ற
பிரச்சனைகளுக்கும் அமைவாகவே இலக்கியத்தின் செல் நெறிகளும்
தீர்மானிக்கப்படக் கூடும்.உதாரணமாக மேலைத்தேய நாடுகளில் படைப்புகளுக்குள்
பாலியலின் நுழைவு என்பது சர்வ சாதாரண விடயம்.அவர்களைப் பிரதியெடுத்து
அப்படியே நாமும் செய்து விட முடியாது. அதற்காக நமது நாட்டில் அத்தகைய
பிரச்சனைகள் அறவே இல்லயென்றோ இங்கு எல்லோருமே புனித நீரால் கழுவப்பட்டு
பரிசுத்தமாவர்கள் என்றோ பொருள் கிடையாது. சில சமயங்களில் ஒத்த தன்மையுடைய
பிரச்சனைகளைக் கொண்ட ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள் உள்ளபோது ஒரு தேசத்தின்
இலக்கியப் போக்கு இன்னொரு தேசத்திற்கும் இயைந்து போகலாம். எண்பதுகளின்
தொடக்கத்தில் பாலஸ்தீனிய கவிதைகளை கலா நிதி நுஃமான் அவர்கள் மொழிபெயர்த்து
வெளியிட்ட போது அது மிக வரவேற்பைப் பெற்றதற்கும் அதையொட்டிய கவிதைப்போக்கு
ஒன்று சேரன் ஜெயபாலன் போன்றோரால் முன்னெடுக்கப் பட்டதற்கும் அக் காலத்தில்
இரு தேசங்களிலுமே ஒடுக்கப்பட்டவர்களிடம் இருந்து வருகின்ற இலக்கியம்
என்கின்ற ஒத்த தன்மையை அவை கொண்டிருந்ததுதான். உலக இலக்கியத்துடன்
என்றில்லை தமிழக இலக்கியத்துடன் கூட நமது இலக்கியங்கள் ஒப்புரவு
செய்யப்பட்டு மதிப்பிடப்படுவது அபத்தமானது.ஏனெனில் அவர்கள் வாழ்வை நாம்
வாழவில்லை, நமது வாழ்வை அவர்கள் வாழவில்லை.
16. ஈழத்தில் எழுத்தாளராக இருப்பதிலுள்ள கவால்கள் என்ன?
நிறையவே சவால்கள் இருக்கின்றன. இந்தச் சவாலகள் ஒவ்வொரு கால கட்டங்களைப்
பொறுத்து ஒவ்வொரு வடிவம் கொண்டதாய் இருந்தன. யுத்தம்
இடம்பெற்றுக்கொண்டிருந்த காலமொன்றிலே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்
என்பது இரு முனைகளுக்கிடயில் இலக்காகிக் கிடந்தது. இதனால் படைப்பாளி ஒருவன்
தான் கூற வருகின்ற விடயத்தை பூடாகமாக கூற வேண்டியது அவசியமாக மாறுகின்றது.
இது சில வேளைகளில் படைப்பைச் செழுமைப்படுத்தும் ஒன்றாக மாறிய போதும் பல
சந்தர்ப்பங்களில் படைப்பாளிக்கு விரக்தியை கொடுக்கும் ஒன்றாகவே இருக்கிறது.
கருத்து வெளிப்பாட்டுக்கான அச்சுறுத்தல் இன்றுவரை நீங்கியாதாக கருத
முடியவில்லை.ஈழத்து எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு சவால் பொருளாதார
ரீதியான சவாலாகும். இவ்வளவு நீண்ட கால ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு முழு
நேரப் படைப்பாளி ஒருவரை எம்மால் காட்ட முடியாது இருக்கின்றது என்பதுதான்
தமிழகத்திற்கும் எமக்குமிடையில் உள்ள மிகப் பெரிய வேறுபாடு. இங்குள்ள
படைப்பாளிகள் ஒவ்வொரு பேருமே தமது வாழ்தலுக்கான வருமானத்தை ஈட்டிக்
கொள்வதற்காக வேறு ஒரு பிரதான தொழிலைப் புரியும் அதே வேளை படைப்புகள்
படைத்தல் என்பதை தமது ஆத்ம திருப்திக்கான ஒரு விடயமாகவே புரிகின்றார்கள்
இதனால் அவர்கள் படைப்பதற்காக ஒதுக்கும் நேரம் மட்டுப்பாடானதாக அமைவதோடு
படைப்பு ஒன்று மனதில் உருவாகும் போது அதனை உடனடியாக படைபாக்கிவிடும் கால
அவகாசமும் இல்லாமல் போகின்றது. இந்த விடயம் கவிதைத் துறையை விட
சிறுகதைத்துறையில் மிகவும் தாக்கமாக இருக்கின்றது. அத்துடன் நமது கலாசார
பண்பாட்டு விழுமியங்களும் ஒரு படைப்பாளி தன்னுடைய உண்மையான மன உணர்வை
வெளிக்கொணர்வதில் பல நேரங்களில் அவனது கைகளை கட்டிப்போடுவனவாக இருக்கின்றன.
ஒரு எதிர்மறையான விடயத்தை கருவாகக் கொண்டு படைப்பாக்கும்போது சமூகம் அதை
எவ்வாறு எதிர்கொள்ளுமோ என்கின்ற தயக்கத்தில் இன்னும் எவ்வளவோ விடயங்கள்
படைக்கப்படாமல் படைப்பாளியின் ஆழ்மனதில் தூங்குகின்றன. இதையும் மீறி
துணிச்சலாக ஒரு படைப்பு வரும்போது அது பெற்றுகொள்ளும் காரசாரமான
விமர்சனங்கள் இன்னொரு படைப்பாளியை மௌனிக்கவும் தூண்டுகின்றது. இப்படி
இன்னும் ஏராளமான சவால்கள் விரிந்து செல்கின்றன.
17. இன்றைய இலக்கிய வாசிப்பு எப்படியுள்ளது? உங்களுடைய கதைகளுக்கான எதிர்வினைகள், விமர்சனங்கள், வரவேற்பு எல்லாம் எப்படி?
தற்கால வாசிப்புப் பழக்கம் என்பது இன்றைய தலைமுறையினரிடயே மிகவும் அருகிய
ஒன்றாகவே எனக்கு தோன்றுகின்றது. இணையம் சம்பந்தமான அல்லது முக நூல் போன்ற
சமூக வலைத்தளங்களில் தம்மை அதிக நேரம் ஈடுபடுத்திக் கொள்ளும் இளைஞர்கள்
இலக்கிய வாசிப்புக்கான நேரம் என்று ஒன்றை ஒதுக்குவது இல்லை என்பதோடு
இலக்கியம் படிப்பதனால் எதுவித பயனும் இல்லை என்கின்ற மனப்பாங்கிலேயே
இருப்பதாகத் தெரிகின்றது. அவர்களைப் பொறுத்தவரை வலைத்தளங்களில் கணக்கற்று
வந்து விழும் மலினமான காதல் கவிதைகள் அல்லது தத்துவ பொன்மொழிகள் என்ற
அளவிலேதான் இலக்கியம் தொடர்பான புரிதல் இருக்கின்றது. இக்கால இளைஞர்களுக்கு
தத்தமது பிரதேசத்தில் உள்ள கனதியான இலக்கியவாதிகளைக் கூட இனங்காண
முடிவதில்லை.ஒப்பீட்டளவில் கல்வித்துறை முன்பை விட சவால் மிக்கதாகவும்
வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் போட்டித்தன்மையாலும்
தொலைக்காட்சி கணனி இணையம் போன்றவற்றின் வருகையாலும் முன்னைய காலங்களில்
முக்கிய பொழுது போக்கு அம்சமாக இருந்த இலக்கிய வாசிப்பு அதன் இடத்தை மெல்ல
மெல்ல இழந்து வருகின்றது. இப்போதெல்லாம் வாசகர் பரப்பில் பெரும்பாலானவர்கள்
இன்னுமொரு படைப்பாளியாகவோ அல்லது விமர்சகர்களாகவோ இருக்கின்றார்கள்
என்பதுதான் கசப்பான உண்மை.
இனி எனது படைப்புகளின் எதிர்வினைகள் விமர்சனங்கள் வரவேற்புகள் தொடர்பான
உங்களின் கேள்விக்கு வருவோம். இங்கே முதலில் நான் ஒரு விடயத்தைப் பதிவு
செய்ய விரும்புகின்றேன்.எனது நூல், நண்பர்கள் சிலரின் உதவியுடன் தனிப்பட்ட
முறையில் வெளியிடப்பட்டதாலும், நூல் வெளியிடப்பட்ட காலத்தில் நூலை
வடபகுதி, தமிழகம் மற்றும் எம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்கள் போன்ற
இடங்களுக்கு அனுப்பி வைப்பதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகவும்
இவ்விடங்களில் உள்ள இலக்கியச் செயற்பாட்டளர்கள் கூட அதைப் படிக்க முடியாமல்
போன துரதிஸ்டம் எனக்கும் என் நூலுக்கும். எனவே என்னுடைய நூலுக்கான
எதிர்வினைகள் மட்டுப்படுத்திய அளவிலேயே கிடைத்தன. இருந்தும் நான் எனது
தந்தையின் இடத்தில் வைத்துப் போற்றும் அமரர் பேராசிரியர் கா. சிவத்தம்பி
அவர்கள் செல்லுமிடமெல்லாம் எனது பெயரை உச்சரித்ததன் விளைவாக என்னுடைய
படைப்புகளை தரிசிக்காதவர்களுக்கு மத்தியிலும் கூட என்னுடைய பெயர்
பரிச்சயமான ஒன்றாக மாறியது. பேராசிரியர் என்னை அளவிற்கு மீறித் தலையில்
வைத்துக் கொண்டாடி எனக்குக் கொம்பு சீவி விடுவதாக பல நண்பர்கள்
முணுமுணுத்ததும் உண்டு.( நல்ல வேளை அவர் சீவி விட்ட கொம்பினால் ஒருவரையுமே
குத்திக் குடலெடுத்துக் காயப்பபடுத்தாமல் இலக்கிய வெளியில் இருந்து
சிலகாலம் நான் விரைவாகவே வெளியேறிவிட்டேன்)பல படைப்பாளிகள் பேசப் பயந்த
விடயங்களை நான் துணிச்சலாக பேசியிருக்கின்றேன் என்ற ஒரு விடயம் மற்ற
படைப்பாளிகளிடமிருந்து என்னை வேறு படுத்துகின்றது என்கின்ற சாரப்பட
பேராசிரியர் எனது முன்னுரையிலே குறிப்பிட்ட விடயத்தை பலரும் என்னிடம்
நேரடியாகவும் எனது நண்பர்களிடமும் தெரிவித்திருந்தது நான் நெகிழ்வுறும்
விடயம். எனது நூலை வாசிப்பதற்கு பலர் ஆர்வப்பட்டிருந்த போதும் நூல்
அவர்களுக்கு கிடைக்காமல் போனதை நிவர்த்தி செய்யும் விதமாக அதனை இரண்டாம்
பதிப்புச் செய்யும் முயற்சியிலே இறங்கியிருக்கின்றேன்.
18. படைப்பாளிகளும் படைப்புகளும் சமூக நிலைப்பட்டு, இனரீதியாக அரசியற்
பார்வைக்குள்ளாக்கிப்பார்க்கும் ஒரு போக்கு வளர்ந்துள்ளதே! இந்தப்
போக்கினால் இலங்கையின் எடுத்தாளர்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள்
எப்படியள்ளன? உங்கள் கதைகளை தமிழரல்லாத பிற சமூகத்தினர் எப்படிப்
பார்க்கிறார்கள்?
நீங்கள் குறிப்பிடுகின்ற இன ரீதியான பார்வை பல வாசகர்களிடமும் சில
இலக்கியவாதிகளிடமும் இருந்த போதும் இன மத பிரதேச வேறுபாடுகளையும் தாண்டி
படைப்பை சுகிக்கும் பல உள்ளங்கள் இருப்பதால்தான் நமது நாட்டில் இன்னும்
இலக்கியம் உயிர்ப்புடன் இருக்கின்றது. தனது சமூகத்தை சேர்ந்த ஒருவர் சிறந்த
படைப்புகளைப் படைக்கும்போது அதனையிட்டு ஒருவர் புளகாங்கிதமும்
மகிழ்ச்சியும் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் இன்னொரு சமூகத்தின்
வேறோரு படைப்பாளியின் உன்னதமான படைப்புகளை குறை மதிப்பீடு செய்வதும் கண்டு
கொள்ளாமல் விடுவதும் இருட்டடிப்புச் செய்வதும் தவறானது. என் விடயத்தில்
தமிழரல்லாதவர்களும் எனது படைப்பில் உள்ள தனித்துவங்களை என்னிடமும் எனது
நண்பர்களிடமும் சிலாகித்து கூறியே வருகின்றனர். நெல்மணிகளிடயே அங்கொன்றும்
இங்கொன்றும் பதர்கள் இருப்பதுபோல் படைப்புகளை படைப்புகளுக்காக அல்லாமல்
வேறு அளவீடுகள் கொண்டு மதிப்பிடும் ஒரு சிலர் எல்லா சமூகங்களிலுமே
இருக்கத்தான் செய்வார்கள். காலக்காற்றில் இந்தப் பதர்கள் தாமாகவே
தூற்றப்பட்டு முகவரியற்றுப் போய்விடுவார்கள்.
19. கதைகளுக்கு அப்பால் கவிதைகளும் எழுதி வருகிறீர்கள். கதைகளுக்கும்
கவிதைகளுக்கும் இடையில் ஒரு படைப்பாளி வகிக்கின்ற பாத்திரம், தன்மை, நிலை
என்பதெல்லாம் என்ன? கவிதைக்குப் பதிலாக கதையை எழுதலாம். அல்லது கதைக்குப்
பதிலாகக் கதையை எழுதலாமே?
உண்மையில் நான் எனது படைப்பு வாழ்வில் முதன் முதலில் எழுதியதும்
பிரசுரமானதும் கவிதைகள்தான். ஆனால் பின்னாளில் சரி நிகரில் எனது கதைகள்
மட்டுமே பிரசுரமாகியதன் காரணமாய் நான் தனியே ஒரு சிறுகதை ஆசிரியனாகவே
அறியப்பட்டேன். எனது இலக்கிய மீள்பிரவேசத்தைக் கூட கவிதைகளே அரங்கேற்றி
வைத்திருக்கின்றன. இரு துறைகளிலுமே எனக்கிருக்கும் ஈடுபாடு இரு
துறைகளுக்குமே பரஸ்பரம் உதவுவதாக இருக்கின்றன. எனது தொகுதிக்கு முன்னுரை
எழுதிய பேராசிரியர் அவர்கள் " இந்த அக நிலைச் சித்தரிப்பு கவிதை நிலைக்கு
மிக அண்மியது. இதனால்தான் கவியுவனின் நடையில் ஒரு கவிதைத் தன்மை ஆழமாக
இழையோடுகின்றது" எனக் குறிப்பிட்டிருந்ததன் பின்புலமே நான் கவிதையும்
படைப்பவன் என்பதனால்தான். எனது கதைகளில் கவிதைத் தன்மையும் கவிதைகளில் ஒரு
கதையும் இருப்பதன் காரணமே நான் இரு துறைகளிலும் கொண்டிருக்கும்
ஈடுபாடுதான். தொழில் முறை ரீதியில் எனது அனுபவத்தின் படி கவிதை படைப்பதை
விட சிறுகதை படைப்பது கடினமான ஒன்று. ஆனால் கவிதை படைக்கும்போது சொல்
வீச்சு, மொழியை வசப்படுத்தும் திறன், கட்டிறுக்கம் , போன்றவை மிக முக்கிய
செல்வாக்கை செலுத்துகின்றன. சிறுகதைக்கும் இது பொருந்தும்தான் எனினும்
அங்கே இவற்றில் ஓரளவிற்கு நெகிழ்ச்சியை அனுமதித்துக் கொள்ளலாம். எனவே கவிதை
ஒன்று மனதில் உருவானவுடன் அதனை உடனடியாகவே எழுதி முடித்து விடலாம் என்பது
ஒரு வாய்ப்பாகப் போனாலும் கவிதை அதன் பண்பிற்குரிய அனைத்து அம்சங்களிலும்
சிறப்புற்றிருப்பது என்பதை உறுதிசெய்து கொள்வது சவாலான விடயம். இல்லா
விட்டால் எல்லோரும் இன்னாட்டு மன்னரே என்பதுவாய் எல்லோருமே கவிதை எழுத
முனைந்து விடுவார்கள். பாவம்பூமி மாதா தாங்க மாட்டா.
20. முப்பது ஆண்டுகாலப் போரில் துணையை இழந்த பெண்கள், தமிழ் - முஸ்லிம்
சமூகங்களுக்கிடையிலான முரண்கள், கல்வி வாய்ப்பை இழந்த சிறார்கள்,
வளர்ச்சியடையாத பிரதேசங்கள் என்று ஆழமான பிரச்சினைகளின் மையமாக கிழக்கு
மாகாணம் உள்ளது. இந்த நிலைமையை எப்படி மாற்றியமைப்பது? இதற்கான
செயலூக்கமுள்ள தரப்புகள், ஆளுமைகள் ஏதாவதுண்டா?
மனதிற்கு விரோதம் இல்லாமல் இந்தக் கேள்விக்கான பதிலை சொல்லக் கூடிய,
கருத்தை கருத்தாய் எடுத்துக் கொள்ளக் கூடிய சூழல் இப்போதும் இருக்கின்றதோ
தெரியவில்லை. ஆழமான பிரச்சனைகளின் மையமாக கிழக்கு மாகாணம் மாறியிருந்தது
முப்பது ஆண்டு காலப் போரின் பின்புதான் என்றில்லை. போருக்கு முன்பு கூட அது
ஆழமான கல்வி சார் சவால்களுக்கு முகம் கொடுத்த ஒன்றாக இருந்தது. போர் அந்த
நிலைமைகளை இன்னும் மோசமாகியிருக்கின்றது அவ்வளவுதான். எனது தந்தையாரின்
தலைமுறைக் காலத்தில் கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான அரச அலுவகங்களின்
அதிகார வல்லமை கொண்ட உயரதிகாரிகள் கிழக்கு மாகாணத்திற்கு
அப்பாற்பட்டவர்களாகவே இருந்திருக்கின்றனர். இவ்விடத்தில் இது தொடர்பாக எனது
இலக்கிய வாழ்வில் இடம்பெற்ற முக்கிய சம்பவம் ஒன்றை இங்கு நான் குறிப்பிட
விரும்புகின்றேன். 1996ம் ஆண்டில் திருகோணமலை நிலாவெளி விருந்தினர் விடுதி
ஒன்றிலே கல்விமான்கள், படைப்பளிகள், அதிகாரிகள் சேர்ந்து பங்கு கொண்ட 3
நாள் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில் பங்கு கொள்ள கொழும்பில்
இருந்து சென்ற குழுவிலே நானும் இருந்தேன். கருத்தரங்கின் இரண்டாம் நாளில்
பேராசிரியர் சோ.சந்திரசேகரம் உரையாற்றுகையில் ஒரு இடத்தில்" வடகிழக்கு
மாகாணத்திலே(அக்காலத்தில் வடக்கும் கிழக்கும் இணைந்த வட கிழக்கு மாகாணமாக
இருந்தது) பல்கலைகழக்த்திற்குத் தெரிவு செய்யப்படும் 100 பேர்களில் 70 பேர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்தே தெரிவாகின்றர்கள்" எனக் குறிப்பிடவும்
மண்டபத்தில் பலத்த கரவோசை. பேராசிரியரின் உரை முடிந்ததும் நான் எழுந்து
நின்று " நான் பிரதேச வாதம் பேசுவதாக யாரும் நினைக்க வேண்டாம். பேராசிரியர்
அவர்கள் புள்ளி விபர அடிப்படையில் கூறியது சிந்திக்கப் பட வேண்டிய விடயம்.
கை தட்டப்பட வேன்டிய விடயம் அல்ல.யாழ் மாவட்டத்தில் 70 மாணவர்கள்
செல்லும்போது ஏனைய மாவட்டத்தில் அப்படி ஏன் செல்ல முடியாமல் இருக்கின்றது
என்று யோசிக்க வேண்டும். அவர்கள் அப்படிச் செல்ல முடியாமல் இருப்பதன்
காரணம் வளப்பற்றாக்குறையாகும்.இரு சாராருக்கும் சமனான வளம்
வழங்கப்பட்டபின்னும் இந்த மாற்றம் இருக்குமெனில் நீங்கள் தாராளமாக உங்கள்
கைகளை இன்னும் உரத்துத் தட்டிக் கொள்ளலாம். இதற்கு ஒரு எடுத்துக் காட்டுக்
கூறுகின்றேன் பாருங்கள்.முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அன்ரன் என்கின்ற
எனது நண்பன் 213 புள்ளிகளை மாத்திரமே பெற்று மொறட்டுவைப் பல்கலைக்
கழகத்திற்கு தெரிவாகி வந்திருந்த அதேவேளை ரவி என்கின்ற இன்னும் ஒரு நண்பன்
யாழ் மாவட்டத்தில் இருந்து 272 புள்ளிகளுடன் தெரிவாகி வந்திருந்தான்.
இருவருமே பொறியியலின் திரவியல் பொறியியல் என்னும் ஒரே பிரிவையே
தேர்ந்திருந்தனர். நான்கு வருட முடிவில் அன்ரன் இரண்டாம் வகுப்பு மேல்
பிரிவில் சிறப்புச் சித்தி பெற்று ஐக்கிய ராச்சியத்திலே உள்ள ஒரு பல்கலைக்
கழகத்தில் மேற்படிப்பிற்காக புலமைப் பரிசிலும் பெற்றுக்கொண்டான் .ரவி சாதரண
சித்தியை பெற்றுக் கொண்டான். பாருங்கள் வளங்கள் சமமாகக் கிடைத்த ஒரு
சந்தர்ப்பத்தில் என்ன நிகழ்ந்திருக்கின்றது என்பதை. எனவே இப்படியான புள்ளி
விபரங்கள் கூறப்படும்போது கை தட்டி மற்றவர் மனதை நோகடிப்பதை விட கொஞ்சம்
சிந்தியுங்கள்" என்று கூறி அமர்ந்தேன். அதன் பின் கைதட்டியவர்களில் பலர்
என்னிடம் வந்து தமது வருத்தத்தை தெரிவித்தார்கள். சிலர் என்னை ஒரு
பிரதேசவாதியாகவே நோக்கினார்கள். நான் பல வகையிலும் சிலரால் இருட்டடிப்புச்
செய்யப் பட்டதற்கு அந்த சம்பவமும் ஒரு காரணம் எனலாம். இதனை நான் இங்கு
மீளவும் பதிவு செய்ததன் காரணம் "கிழக்கு மாகானத்தின் இந்த நிலைமையை எப்படி
மாற்றி அமைப்பது என நீங்கள் தொடுத்திருக்கும் கேள்விக்கான பதில்
அதற்குள்தான் அடங்கியுள்ளது. அதாவது கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலைமை
மேம்பட வேண்டும். அது மேம்படும் பட்சத்தில் அரசியல் தொடங்கி பொருளாதாரம்
வரை அனைத்துக் கூறுகளுமே மேம்படும்.அதற்கு கல்வியில் முன்ணணியில் இருக்கும்
ஏனைய மாகாணங்கள் பெற்றுக் கொள்ளும் அனைத்து வளங்களும் இங்கும் கிடைக்கக்
கூடியதாக இருக்க வேண்டும். இந்த வளங்களைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய
தரப்புக்கள் ஆளுமைகள் ஏதும் உண்டா எனக் கேட்பீர்களாயின் இப்போதைக்கு எனது
பதில் மௌனமே.
21. உளவியல் ரீதியாக பாதிப்படைந்த மக்களையே கொண்டிருக்கும் ஒரு நாடாக
இலங்கை இன்றுள்ளது என நினைக்கிறேன். இதை எப்படிக் கடப்பது? இலக்கியத்தில்
இந்த உளவியல் நெருக்கடி எப்படிக் கையாளப்பட்டுள்ளது? எந்த அளவுக்குக்
கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது?
2009.05.20 ம் திகதி காலையில் நான் வேலைக்குப் புறப்படும்போது எனது
நகரத்தின் மையப் பகுதியில் நடு வீதியில் பொங்கல் படைக்கப்பட்டு வீதியில்
செல்வோருக்கும் கடைகளில் இருந்தவர்களுக்கும்
பரிமாறப்பட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது அந்தக் கணத்தில் என் இதயம்
அறுந்து தொங்கி நான் சாகடிக்கபட்ட உயிரோடு இருப்பதாக எண்ணிக் கொண்டது ஒரு
உளவியல் சார்ந்த வெளிப்பாடுதான். யுத்தத்தின் இறுதி நாட்களின் நிகழ்வுகள்
எதையுமே நேரில் பார்த்திராத எனக்கே நான் புதிய ஒரு உலகத்தில் இருப்பதாக
தோற்றம் கொள்ளும் அளவிற்கு உளவியல் தாக்கம் கிடைத்ததென்றால் நேரே அனுபவித்த
உங்களைப் போன்றவர்களின் தாக்கம் பற்றி கேட்கவும் அவசியமா?
இந்த நாட்டில் 30 வருட யுத்தத்தின் பெறுபேறாய் நாம் அடைந்திருப்பதில் இந்த
உளவியல் சிக்கல் முதன்மை இடத்தை வகிக்கின்றது. இதனை எப்படிக் கடப்பது
என்பதைக் கூற நான் ஒரு உளவளவியலாளன் அல்ல. ஆனால் உடைந்து போன இதயங்களில்
இலகுவில் அழிக்க முடியாது. துருத்திக் கொண்டிருக்கும் காயங்கள் இருக்கும்
வரையில் இதனைக் கடப்பது எப்படியென்பதற்கு உளவளவியலாளர் கூட பொருத்தமான
மார்க்கத்தைக் கூற முடியுமா தெரியவில்லை. ஆனால் இலக்கியங்களில் இந்த
உளவியல் சார் விடயங்களை கையாள்வது தொடர்பாக எனக்கு அதிக உடன்பாடில்லை
ஏனெனில் அது இன்னும் அவர்களின் நிலையை மோசமாக்கும். அவர்களுக்கு
நிகழ்ந்திருக்கக் கூடாத அந்தச் சம்பவங்கள் பற்றிய எண்ணம் வராதவாறு
வாழ்க்கையை பரபரபானதாகவும் மகிழ்வானதாகவும் மாற்ற முனைவதே இதனைக்
கடப்பதற்கான முதற் படியாகும் என நினைக்கின்றேன்.
நம்மைச் சூழ நடப்பவைகள் நம்பிக்கை தரும்போது நமது மனது இயல்பாகவே வலிமை
அடையும். மனது வலிமை அடையும் நம்பிக்கைக் கீற்றுக்கள் எந்தத் திசையில்
இருந்தும் தோன்றுவதாகத் தெரியவில்லை. இருந்தும் இருள் மேகங்களைக்
கிழித்துக் கொண்டு ஒரு மின்னல் கீற்றாய் நம்பிக்கை இறங்கி வருமா என இன்னும்
கோழிகள் வானம் பார்த்திருக்கின்றன என்னுடைய "காற்று கனக்கும் தீவு"
கதையில் வருவது போல
நன்றி pulvelii.blogspot.com - குவார்னிகா