Search This Blog

Wednesday, August 20, 2014

வேனல்தெரு-எஸ்.ராமகிருஷ்ணன்

பதினாலாம் நூற்றாண்டு யுத்தத்தில் தப்பிய குதிரை போல வேனல் தெரு வசீகரமாக வாலை ஆட்டி அழைத்துக்கொண்டிருந்தது. நீண்ட உருவங்களாகவும் தோற்றம் கலைவுற்றவர்களாகவும் குடிகாரர்கள் நடந்து கொண்டிருந்தனர். வேனல் தெருவின் இரு பக்கமும் நீண்ட வரிசையாக மதுக்கடைகளே நிறைந்திருந்தன. கண்ணாடிக் குடுவைகளில் தேங்கிய மது தன் நீள் தொடு கொம்புகளால் பார்ப்பவரின் கண்களைச் சுருட்டி அடைத்துக் கொண்டிருந்தது. நகரின் தொல் பழமையான இந்தத் தெருவின் இமைகள் இரவு பகல் பேதமின்றி சிமிட்டிக்கொண்டிருந்தன. வயதை மறந்த குடிகாரர்கள் தங்களை மீறி ஸ்நேகித்துக் கொண்டும், பரஸ்பரம் அன்பில் கட்டுப்பட்டவர்களாய் நேசம் மட்டுமே வழியும் மதுக் குடுவையுடன் விடாது பேசியபடியிருக்க, எரிந்து கொண்டிருக்கும் ஒன்றிரண்டு குண்டு பல்புகளுக்கு ஊடே பெண்களும் கூடி கபடின்றி சிரித்தபடி முக்காடு விலக்கிக் குடித்துப் போகின்றனர். போதை ததும்பியவென் கனவிலோ உருக்கொண்டது போல வியாபித்திருக்கிறது வேனல் தெரு. மனிதர்கள் மதுவுடன் தங்கள்Rkஆகிருதிகளைக் கரைத்துவிட்டு திரவம் போலாகி மதுப்புட்டியினுள் சேகரமாகிவிட முயன்று கொண்டிருந்தனர்.
நீண்ட தாடியும் கருத்த ரம் புட்டியுமாக நிற்கிறாரே… அதோ கட்டத்தின் கடைசியில் – அவரிடம் கேளுங்கள். தனது விநோத கனவுகளில் நூறு நடிகைகளைக் காதலித்துத் தோற்ற கதை அவரிடம் ஒரு சுருள் பூச்சியாய் ஆயிரம் கால்கொண்டு ஊர்ந்துகொண்டிருக்கிறது. என்றோ இறந்துபோய்விட்ட எல்.பி.வனமோகினிக்காகத்தான் அவர் இப்போது மது அருந்திக் கொண்டிருக்கிறார். இருபது வயதிற்குள் எண்ணற்ற நடிகர்களால் காதலிக்கப்பட்டு, எவரையும் வெறுக்கத் தெரியாமல் சுயமரணம் செய்து கொண்ட அந்த நடிகையின் சுருள் கூந்தல் இழையொன்று மதுவின் வழியே தன்மீது படர்வதாகவே அவர் நினைத்துக்கொள்கிறார். எல்.பி. வனமோகினியை அவர் நேரில் கண்டவரில்லை.
யாரோ தந்த சினிமா புகைப்படத்தாளில் சுழித்த உதடுடன் இருந்த அவள், நரி ஒன்றைத் தன்னோடு அணைத்துக் கொண்டிருந்தாள். நரியே அவளைக் காதலிக்கச் செய்தது. இந்த நூற்றாண்டின் இரண்டாம் பத்தில் இறந்து போனாள் வனமோகினி. என்றாலும் என்ன? அவளை உயிருடன் எழும்பும் மதுப்புட்டிகள் அவரிடம் இருந்தனவே. அவரின் மனதில் அன்பின் சிறு துவாரங்களின் வழியே தீர்க்க முடியாத துக்கம் சுரந்துகொண்டிருக்கிறது. அன்பே துக்கத்தின் துளிதானோ? உலகில் வனமோகினியின் காலம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இருக்கும்? அவரிடமிருந்து தேவைப்படுமாயின் மதுவை நீங்களும் பெற்றுக் கொள்ளலாம். இன்று அவரிடமிருந்த மதுப்புட்டியைப் பிடுங்கிக்கொண்டு அவரை மிதித்துத் தள்ளியபடி நகர்கிறானே அந்த இளைஞன், அவன் பெயர் என்னவாகயிருக்கும்?
வேனல் தெருவிற்குள் வருபவர்கள் எவராகயிருப்பினும் பெயர் ஒன்றுதானே? இளைஞன் தன்னிடமிருந்த சில்லறைகளைத் தெருவெங்கும் வீசி இறைக்கிறான். எவனோ ஒரு கடைக்காரன் தன்னிடம் சில்லறையில்லை என எந்த ஊரிலோ மறுதலித்ததின் பதிலாக இங்கே சில்லறைகள் வீசுகிறான். புpன்பு மெதுவாகத் தன்னிடமிருந்த நூறு ரூபாய் தாளை சுருட்டி அதன் முனையில் நெருப்பிட்டுப் புகைக்கிறான். அவனைப் பார்த்து யாரோ சிரிக்கிறார்கள். ஏழாம் நம்பர் கடை மூலையில் இருக்கும் இருவர்தானே சிரித்தது. அவர்களில் ஒருவனுக்கு, பணத்தைப் புகைப்பவனிடமிருந்து ஒரேயொரு தம் அடிக்க ஆசை எழ, கால் பின்னிய நிலையில் எழுந்து வந்து அவனிடம் தம் கேட்கிறான். வந்தவன் உதட்டிலும் பணத்தின் நீல நிறம் ஒட்டிக்கொள்கிறது. இருவரும் புகைக்கிறார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட புதிய நட்பிற்காக இருவரும் ஒரே மதுக்கோப்பையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். கோப்பை காலியானதும் இருவருக்குள் விரோதம் துவங்குகிறது. தனது பணத்தைப் பிடுங்கி சுருட்டிப் புகைத்துவிட்டான் என வந்தவனுக்கு எதிராகக் கூச்சலிடுகிறான் இளைஞன்.
ஏழாம் கடையில் இருந்தவனோ தன்னுடன் இருந்த நண்பன் எவன் என அறியாது மற்றொருவன் தோளில் சாய்ந்துகொண்டு உறவை விளித்து மாப்ளே… மாப்ளே.. என செல்லமிடுகிறான். இத்தனை குடிகாரர்களுக்கும் நடுவில் சிதறிய நாணயங்களைக் குனிந்து அவசரமும் ஒடுக்கமுமாக பொறுக்கிக் கொண்டிருக்கிறாளே அந்த செங்கிழவி, அவளை விடவும் திருடக்கூடியவர் இந்த வேனல் தெருவில் எவரும் கிடையாது. நாணயங்களைக் குனிந்து சேகரித்தபடியே அவள் கால் செருப்புகளைத் திருடி ஒளிக்கின்றாள் பாருங்கள். அவள் உடைந்த குப்பிகளுக்குள் நாணயங்களைப் போட்டுக் குலுக்குகிறாள். அவைதான் எத்தனை இனிமையாகச் சப்தமிடுகின்றன. நாணயங்கள் நிரம்பிய மதுப்புட்டியுடன் வேனல் தெருவில் இருந்த இருள் சந்தில் போகிறாள். அங்கும் சிலர் குடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் நிலத்தோடு உரையாடிக்கொண்டிருப்பது போல முணுமுணுக்கின்றனர்.
விலை மலிந்த சாராய வீதி அந்த இருள் சந்து. தகரக் குவளைகளில் மஞ்சள் சாராயம் மினுக்கிறது. செங்கிழவி தன் மதுப்புட்டியை ஒரு தகரக் குவளையில் கொட்டுகிறாள். மிச்சமான சாராயத்தில் ஊறுகின்றன நாணயங்கள். தங்கத்தைப் போன்ற வசீகரமான அத்திரவத்தை அவள் உதடு தீண்ட விரிகின்றது. ஒரு வான்கோழியைப் போல சப்தமிட்டபடி அவள் குடித்துவிட்டுத் தகரக் குவளையைத் தருகிறாள். அவளுடைய வயது மெல்லக் கரைந்து மீண்டும் பால்யம் கண்டவள் போல தனது மார்புகளை சாராயக்காரனிடம் காட்டி இச்சை மொழியில் பேசுகிறாள். அவனோ கிழட்டு நாயே என ஏசியபடி மீண்டும் தகரக் குவளையில் சாராயம் தருகிறான். இனி இரவு முழுவதற்கும் வேறு கிடைக்காது என்பது தெரியும். நீண்ட கயிற்றால் காலி மதுப்புட்டியை இடுப்பில் சுற்றி நாணயம் தேடி அலையத் துவங்குவாள். வேனல் தெருவிற்கு எல்லா இரவும் மது வாங்க வரும் பக்கீர் வந்திருக்கக்கூடும்.
அவரது மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் ஓசையைக் கேட்டதும் கிழவி ஓடுகிறாள். பக்கீர் என்றைக்கும் போலவே இரண்டாம் கடை முன் நிற்கிறார். அவருக்கு உரியதைப் பெற்றுக்கொள்கிறார். இளம் பெண்ணைப் போல அவரை உரசிச் சிரிக்கிறாள் செங்கிழவி. அவர் வண்டியில் அமர்ந்தபடி எல்லா நாளையும் போலவே தனது இடது காலால் அவளை உதைத்துத் தள்ளிவிட்டு ஐந்து ரூபாயை எறிந்து புறப்படுகிறார். அதை எடுக்க மனம் அற்றவளாக அவரின் மனைவிகளைப் பற்றியவசைகளைப் பெருக்கியபடி நிற்கிறாள். அந்தப் பணம் இரவெல்லாம் எவராலும் எடுக்கபடாமல் அந்த இடத்தில் கிடக்கும். விடிந்த பின்பு அதை அவளே எடுத்துக்கொள்ளக் கூடும். ஆயினும் இரவில் அவள் அதன்மீது மூத்திரம் பெய்வதையோ, காறி உமிழ்வதையோ எவர் தடுக்க முடியும்? வழியற்ற ஒருவன் அப்பணத்தை எடுத்த நாள் ஒன்றில் கிழவி அவன் உடைகளை அவிழ்த்துவிட்டு ஆடையற்ற அவன் உறுப்பில் புட்டியால் அடித்திருக்கிறாள் என்கிறார்கள். எனினும் புறக்கணிக்கப்பட்ட பணம் வெறும் காகிதமாகஇருளில்வீழ்ந்துகிடக்கும்.
வேனல் தெருவிற்குப் புதிதாக வந்த அந்தப் பையனைப் பாருங்கள். இப்போதே மீசை அரும்பத் துவங்கியிருந்த அவன், எதிர் வீட்டில் குடியிருந்து வேறு ஊருக்கு மாற்றலாகிப் போன மாணவிக்காகவும் தன் முதல் காதலுக்காகவும் மதுப்புட்டியைத் திறக்கிறான். அவனிடம் சொல்லவொண்ணாத காதல் இருக்கிறது. தோற்றுப்போன தன் முதல் காதல் பற்றி யாரிடமும் பேச முடியாத தவிப்பில் அவன் கடைசியில் தன்னிடமே பேச முயலுகிறான். தன்னிடம் பேசுவதைவிடவும் வேறு எவர் கிடைக்கக்கூடும் நல்துணை. அவனுக்கு குடிக்கத் தெரியாமல் இருக்கக்கூடும். ஒருவேளை மது அவனை வீட்டிற்குத் திரும்பவிடாமல் ஏதோ ஒரு தெரு இருளில் விழச் செய்யக்கூடும். ஆனாலும் அவனுடன் பேசுவதற்குக் கற்றுத் தரக்கூடும். அவன் கறுப்புத் திரவம் ஒன்றை வாங்கியிருக்கிறான்.
அத்திரவம் அவன் உடலில் கண்ணாடி இதழ் போல நீர்தட்டானின் சிறகை விடவும் மெல்லியதாக இரு சிறகுகளைக் கிளைவிடச் செய்யும். இதை நினைத்தபடியே குடிக்கிறான். பனை விசிறியைப் போல வடிவம் கொண்ட அந்தச் சிறகு அருகில் குடித்துக் கொண்டிருப்பவன் கண்ணுக்;குக்கூடத் தெரிகிறது. அவனுள் மிதந்து கொண்டிருந்த திரவம், மாற்றலாகிப் போன பெண்ணின் சுவடுகளைப் பற்றிச் சென்று, தெரியாத ஊரில் உறங்கும் அவள் வெண்பாதங்களை முத்துகின்றன. அவன் இப்போது அந்தப் பெண்ணையே குடித்துக் கொண்டிருக்கிறான். புட்டியில் ஒரு துளி திரவமும் இல்லாமல் தீர்த்துவிட்டான். நீர்மை படர்ந்த கண்களுடன் தன் முதல் காதலைப்பற்றித் தன்னிடமே பேசிக்கொள்கிறான். விசும்பலும் ஏக்கமும் ஊர்கின்றன உடலெங்கும். சக குடிகாரன் ஒருவன் அவனை நோக்கித் தன் கைகளை விரிக்கிறான். கரங்களின் ஊடே நுழைந்த மாணவனை முத்தமிடுகின்றன பெரு உதடுகள். மாறி மாறி முத்தமிட்டுக்கொள்கிறார்கள்.
பின் இருவரும் தோளில் கைபோட்டபடி அடுத்த மதுக்கடைக்குப் போகிறார்கள். அவர்களை இடித்துக்கெர்ணடு போகும் நபர் பையனின் நல்லாசிரியராக இருக்கிறார். எனினும் என்ன? இரவின் ரகசிய படிக்கட்டுகளின் வழியே உலவும் குடிகாரர் அவரும்தானே. காலி மதுப்புட்டிகளில் விரல் நுழைத்து துழாவும் குருடன் செபாஸ்டியன் புட்டிகளில் மிஞ்சிய மதுவைத் துளிதுளியாக தன் சிரட்டையில் சேகரிக்கிறான் பாருங்கள். எவனோ குடித்து மீதம் வைத்துப்போன பாதி புட்டி ஒன்றால் சிரட்டையே நிரம்பி விடுகிறது. இனி அவனை விடவும் யோகமும் சந்தோஷமும் கொள்ளக்கூடிய மனிதன் எவனிருக்கிறான். வேனல் தெரு இடிந்த மூத்திரப் பிறையின் படிக்கட்டில் அமர்ந்தபடி அவன் இரவு உணவையும் சிரட்டை மதுவையும் ருசித்துக் குடிக்கிறான். பகல் முழுவதும் கூவிப் பெற்ற நாணயங்களையும் மனிதர்களையும் மறந்துவிட்டு, தான் கண் பார்த்து அறியாத வேனல் தெருவின் வாசனையை முகர்ந்தபடி களிப்புறுகிறான். சந்தோஷம் ஒரு சல்லாத்துணி போல உடல்மீது படர்கிறது.
தன்னிடமிருந்த பீடியைப் புகைக்கத் துவங்கியதும் உலகம் ஏன் இத்தனை சந்தோஷமாகவும், இடைவிடாத களிப்பையும் கொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டான். ஸ்திரீகளையும் வீட்டையும் மறந்த வேனல் தெரு மதுக்குடியர்களுக்குள் மட்டும் எப்படி வற்றாமல் களிப்பு பீறிடுகிறதோ என புரியவேயில்லை. கசப்பு முளைத்த நாவுடன் அவர்கள் உலகின் மொத்தக் களிப்பையும் திருடி வந்துவிட்டார்களாயென்ன. வேடிக்கையும் உல்லாசமும் நிரம்பிய அத்தெருவிற்குள் குற்றம் என எதைச் சொல்லிக்கொள்ளக் கூடும். திறந்த இரவினுள் குற்றங்கள் நிழலைப்போலசப்தமிடாதபடியேஉலவுகின்றன.
பண்டிகை நாள் தவிர வேறு காலங்களில் ஒப்பனையற்றுப் போன ஸ்திரீபார்ட்காரன் ஒருவன் மட்டும் குடியில் குரல் உயர்த்திப் பாடாமல் இருந்திருந்தால் உல்லாசத்தில் இந்த லயம் இருந்திருக்கக் கூடுமா? அவனுக்குப் பெண்களைவிடவும் அடர்ந்த கூந்தல். ஸ்திரீ முகம் கொண்ட அவன் வேனல் தெருவிற்குக் குடிப்பதற்கு ஒருபோதும் தனியே வருவதேயில்லை. ஒரு ஆட்டுக் குட்டியை மார்போடு அணைத்து எடுத்துக்கொண்டு வருவான். கற்பனையான உபவனத்தில் தோழியோடு அலையும் ராணியைப் போல நடக்கிறான்.
அவனுடைய தோளில் சரசரக்கும் தலைமயிர் குடிப்பவர்களுக்குள் சரசத்தின் மூச்சைக் கிளப்பிச் செல்கிறது. வேஷமிடாத போதும் அவனால் ஸ்திரீபார்டினின்னு தப்பிக்க முடியவில்லையே. பொய் மார்பகமும், உயர் கொண்டையும் அணியவில்லையே தவிர, அவன் முகத்தில் மஞ்சள் திட்டுகளும், கைகளில் வளையும் சப்தமிட வருகிறான். அவனுடைய ஆட்டுக்குட்டி துள்ளி குடிகாரர்களின் ஊடே அலைகிறது. ஆட்டின் கழுத்தில் புரளும் ஒற்றை மணி சப்தம் கேட்ட குடிகாரன் எவனோ தங்களுக்குக் குடிப்பதற்காக வாங்கிய புட்டியுடன் இருளில் மறைகிறான். ஆட்டின் கண்களில் பழகிய போதையின் சுகிப்பு தெரிகிறது. அவனும் ஆடுமாகக் குடிக்கிறார்கள். இருவரும் இரவெல்லாம் குடிக்கக்கூடும். குடித்த ஆடுகள் எப்போதும் இயல்பிலேயே புணர்ச்சிக்கு ஏங்குகின்றன. அவை மனித பேதமறியாது கால் தூக்கி நிற்கின்றன. நள்ளிரவு வரை அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆடு வேனல் தெருவின்று கிளம்பி அவர்கள் மஞ்சள் அழியும் உலர்ந்த வீதிகளில் காகிதத்தை மென்றபடி அலையத் துவங்குகிறது. மூடிய வீடுகளுக்கு வெளியே முரட்டுக் குடிகாரனைப் போல ஆடு மணியசைத்துச் சுழல்கிறது. தடுக்க யார் இருக்கிறார்கள். உல்லாசம் தெருவில் தனியே நடனமிடுகிறது என்பதைத்தவிர.
வேனல் தெரு மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. கடைகளுக்குக் குடிக்க வருபவர்கள் மட்டுமல்ல, கடையில் இருக்கும் விற்பனை செய்யும் நபர்கள் கூட ஒரே முகச் சாயலில் தானிருக்கிறார்கள். அவர்களுள் நான்காம் கடை சிப்பந்தியின் கண்கள், புட்டிகளை வாங்கும் எல்லா மனித முகத்தையும் துளையிட்டு அறிந்துவிடுகின்றன. மதுக்கடைச் சிப்பந்திகள் சில்லறை தராமல் ஏமாற்றும்போதோ, கள் மதுவை விற்கும்போதோ கூட குடியர்கள் ஏன் எதிர்;ப்பதில்லை. வேனல்தெரு இரவு எப்போதும் அரை மயக்கநிலையே இருக்கிறது. பொருள் வழி அலையும் வியாபாரிகளும் பயணிகளும் இதனுள் நுழையாமல் செல்ல முடிவதேயில்லை. தனது குறிப்பேட்டில் யாரோ பயணியின் கைகள் தெருவின் ஞாபகத்தினை எழத் தாக்குகின்றன. பின் அவனும் களைத்துவிடுகிறான். நேற்றாக இருக்கலாம்.
குடிக்க வந்த இருவர், நெடும் காலத்தின் பின் சந்திப்பு கொண்டு நினைவைப் பரிமாறியபடி குடித்தனர். அவர்கள் பர்மாவிலிருந்து நடந்து வந்தவர்கள் எனத் தெரிகிறது. மதுப்புட்டிகள் காலியாகியபடி இருந்தன. பின் இருவரில் மூத்தவன் மதுப்புட்டியை உயர்த்தி அதனுள் பர்மா மூழ்கியிருப்பதாகக் கூறுகிறான். திரவம் மெல்ல படிய பர்மா நகரம் கண்ணாடி மீறி விரிகிறது. இருவரும் யுத்தத்திற்கு முந்திய மரவீடுகளின் சாலையில் நடக்கின்றனர். ஜப்பானிய விமானங்களின் குண்டு நகர் மீது சிதறுகிறது. தெருக்களுக்குள் ஓடுகிறார்கள். துப்பாக்கி ரவை எட்டாத வெளியில் பயணித்து நடந்தபோது ஒருவன் மற்றவனை நோக்கி துப்பாக்கி நீட்ட, தோட்டா பீறிட்டு முதுகில் பாய்கிறது. விழித்துக் கொண்டவனைப் போல குடிப்பவன் கண்ணாடி புட்டியைத் தூக்கி உடைக்கிறான். பர்மா சிதறுகிறது. சுட்டுக்கொண்டது யார் யாரை என்ற புதிர் விலகாமல் சொந்த துயரத்திற்காக மீண்டுமொரு மதுப்புட்டி வாங்க நடக்கின்றனர்.
இரவு நீள நீள மயங்கிச் சரிந்த சாயைகளின் நடமாட்டம் ஓய்ந்த பின்பும் வேனல் தெரு விழித்தபடிதானிக்கிறது. என்றோ இந்த நகரையாண்ட வெள்ளைப் பிரபுவின் குள்ளமான சிலையைப் பாருங்கள். அதன் கண்கள்கூட இந்தத் தெருவைப் பார்த்தபடிதானிருக்கின்றன. பிறந்த தேசம் விட்டு கனவுக் கப்பலில் மிதந்தபடி அந்தத் துரை இந்நகரை நன்றாக அறிந்திருந்தான். அந்தச் சிலையின் கீழே உளறுகிறானே ஒருவன் அவன் எதைத்தான் பேசுகிறான் – காதில் விழுகிறதா? என்றோ மழை வெறித்த நாள் ஒன்றில் சிவப்புக் குடையுடன் வந்த இரண்டு சட்டைக்காரப் பெண்கள் கண்ணீர் மல்க, அந்தச் சிலையின் முன்பாக மௌனித்து விட்டு ரோஜா மலர்களை அங்குவிட்டுச் சென்றனரே அன்றும் அவன் அங்கு குடித்துக்கொண்டிருந்தான்.
ரோஜா மலர்கள் வேனல் தெரு மதுக்குடியர்களைப் பேச்சற்றுப் போகச் செய்தது. மதுக் கடைக்காரர்களுக்கு அந்த ரோஜாக்களைப் போல குற்ற உணர்வை ஏற்படுத்தும் அந்தப் பொருளும் இதுவரை உலகில் இருந்ததாக நினைவில்லை. இருபத்தி எட்டு மதுக்கடை சிப்பந்திகளும் ரோஜாக்களை எவராவது எடுத்துப் போய்விட வேண்டும் என ஆசைப்பட்டார்களே அன்றி எவனும் கீழ் இறங்கி அந்த ரோஜாக்களை எடுத்து எறிய இயலவில்லை. பதினாலாம் கடைச் சிப்பந்தி ஒருவன் தன் ஆறு வயது மகள் ஞாபகம் பெரு மைல்களுக்கு அப்பால் உள்ள கிராமத்து வீட்டின் கதவுகளைத் தட்டி முகம் பார்க்க ஆசையுற்றுப் புலம்பினான்.
அவனாலும் இந்த ரோஜாக்களை எடுத்து விடமுடியவில்லைதானே. மூன்று நாட்கள் வரை அதே இடத்தில் காய்ந்து சருகாகிய நிலையில் ரோஜாக்கள் இருந்தன. பின் காற்று அதைத் தன்னோடு கூட்டிப் போனது. காற்றில் மறைந்து விட்ட ரோஜா ஏற்படுத்திய வெறுமை கடைச் சிப்பந்தி ஒருவனுக்குத் தாளாமல், அவன் வீதியின்று அழித்து ஓடி, நகரையே விட்டுப் புலம்பி ஓடுகிறானே அது எதற்காம்? விசித்திரம்தான் மனிதர்களாக உருக்கொண்டு இங்கு வருகின்றதாயென்ன?
மழிக்கப்படாத மயிர் படர்ந்த முகத்துடன் ஒருவன் எல்லா மதுக்கடைகளிலும் இரஞ்சும் குரலில் பணத்தை வைத்துக்கொண்டு கேட்டும், எவரும் இல்லையெனத் தலையாட்டுகிறார்களே தெரிகிறதா? அவனுக்கான மதுப்புட்டிகள் உலகில் இல்லாமல் தீர்ந்து விட்டனவா? அவன் குடிப்பதற்காக எதையும் கேட்பதாகத் தெரியவில்லை. அருகில் வந்து அவன் குரலைக் கேளுங்கள். வேறு எதோ ஒரு பொருளிற்காக மன்றாடுகிறான். படர்ந்த மீசையில் கண்ணீர் துளிர்த்து நிற்க அவன் வேதனையுடன் எதைத்தான் கேட்கிறான்? நேற்றுதானோ இல்லை ஒரு வருடத்தின் முன்பாகவோ எதோ ஒரு மதுக்கடையில் அவன் இறந்துபோன மனைவியின் மணநாள் பட்டுப் புடவையொன்றை விற்றுக் குடித்து போயிருக்கிறான். இன்று புடவையின் ஞாபகம் பீறிட, தேடி மீட்டுக் கொள்ள அலைகிறான். அந்தப் புடவையின் ஒரு முனை தீயில் எரிந்து போயிருக்கும் என்பதும் அதைச் செய்தவன் அவன் என்பதையும் யார் அறிவர்? எல்லா மதுக்கடைக்காரர்களும் அவனையறிவர். புடவை என்றில்லை. கடிகாரங்கள், நிலைக்கண்ணாடி என எத்தனையோ விற்றுக் குடித்துப் போயிருக்கிறான்.
அந்தப் புடவையை அடைந்தவன் எக்கடையின் சிப்பந்தி எனத்தான் தெரியவில்i. அவனது பரிதாபம் தாங்காது சக குடிகாரன் ஒருவன் விடாது பேசுகிறான். ஒரு சிப்பந்தி அவனைக் கூப்பிட்டு குடிகாரர்கள் விற்றுப்போன பொருட்களின் சேகர அறையைத் திறந்து காட்டுவதாகக் கூறுகிறான். அந்த அறையினுள் புடவைகள், மரக்கண்ணாடிகள், கடிகாரங்கள், மணல்குடுவைகள், பழம் துப்பாக்கி, இசைத்தட்டுகள், புகை பிடிக்கும் குழல், கோப்பைகள், தைல ஓவியம் எனக் குவிந்து கிடக்கின்றன. தன் மனைவியின் புடவையைத் தேடிச் சலிக்கிறான். என்றோ அடமானத்தில் வைக்கப்பட்டுப் போன சித்திரக்காரனின் இதயம் ஒன்று மிக மெதுவாகத் துடித்துக்கொண்டிருந்தது அறையில். அந்த அறையை விட்டு அகலாது ஆறு நாட்கள் புடவையைத் தேடிக் கொண்டிருந்தான். பின்னொரு நாள் வெளிறிய முகத்துடன் மனைவியின் புடவையை நெருப்பிட்டு எரித்து சாம்பலாக்கிக் குடித்தவன் நானே எனக்கூறி தெருக் கடந்து சென்றான். கடைச் சிப்பந்திகள் அறிந்திருக்கிறார்கள் – குடிகாரர்கள் எதையும் நினைவில் வைத்துக்கொள்வதேயில்லை என்பதை.
வேனல் தெரு என்பதே ஒரு கண்ணாடி கூண்டுதான் போலும். இங்கே வருபவர்கள் மதுவால் மட்டும் போதையாடுகிறார்கள் என எவராலும் தீர்க்கமாகச் சொல்ல முடியாது. விசித்திரம் ஒரு மோதிரமென இவர்கள் விரல் சுற்றிக்கொள்ள, உறக்கமற்று எதைத்தான் அழிந்துவிடக் குடிக்கிறார்கள். வாகனங்கள் ஊர்ந்து அலையும் நகர வீதியில் கூக்குரலிட்டு வெறியுடன் ஒருவன் நீட்டுகிற கத்தியின் பரப்பில் வேனல் தெரு உருக்கொண்டு விடுவதைப் பல கண்களும் அறிந்தே கடக்கின்றன. என்றாலும் நண்பர்களே, மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. மீன்கறிகளையும் மிஞ்சிய மதுவையும் குடித்துப் பெருத்த எலிகளின் கூட்டமொன்று தெருவை கருமி பூமியினுள் இழுத்துச் சென்றுவிட முயல்கின்றன. தன் தலைமயிர் நிலத்தில் வேர்விட நூற்றாண்டுகளாக ஒருவன் இத்தெரு நடுவில் வீழ்ந்து உறங்கிக் கொண்டேயிருக்கிறான். அந்த மனிதன் விடுபட்டுப் போன சீன யாத்ரீகர்களில் ஒருவன் எனச் சொன்னால் நம்புவீர்களா நீங்கள்?
காலச்சுவடு-இதழ்19,1997

இளவேனில் மலைவானில் 1976ஆம் ஆண்டு வெளியான "கோமாளிகள்" திரைப்படத்திலே இடம்பெற்ற பாடல்

ஈழத்து பாடல்கள் வரிசையில் கோமாளிகள், ஏமாளிகள், வாடைக் காற்று, அனுராகம், புதிய காற்று படங்களின் பாடல்கள் மறக்கமுடியாதவை.இந்தப் பாடல் 1976ஆம் ஆண்டு வெளியான "கோமாளிகள்" திரைப்படத்திலே இடம்பெற்ற பாடல்...எழதியவர் "சிலையூர்" செலவராஜன்...
இலங்கையின் ஊர்களின் பெயர்களையும் நதிகளின் பெயர்களையும் இணைத்து ஒரு பெண்ணை வர்ணிப்பதுபோல்எழுதியிருந்தார்....
இசையமைத்தவகள் கண்ணன்-நேசம் (தியாகராஜா) இரட்டையர்கள் இந்தப் பாடல் மிகவும் அற்புதமான பாடல். கவிஞர் சில்லையூர் செல்வராஜனும் கமலினி செல்வராஜனும் இக்காட்சியில் தோன்றி நடித்துள்ளார்கள்.
இது எமது அடையாளச் சின்னங்கள். இன்று நவீன தொழில்நுட்பம் இலங்கையில் இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி எத்தனை பாடல்கள் வந்தாலும் இப்பாடலுக்கு நிகராக எந்தப் பாடலும் இல்லை என்றுதான் சொல்லலாம்.எமது நாட்டு இயற்கை வளங்களை
வர்ணித்த அழகியபாடல்
''மலைநாடு பால்ஆறுமொழிகிறது
மகாவலியாக மூதூரில் இப்படி கவிஞரின்
எண்ணம்
இளவேனில் மலைவானில் எதிர்கால மகாராணியே
இனிய காதலை கிள்ளும் பாடலாகவும் எமது மண்ணின் இயற்கை
வளங்களை ரசித்த பாடலாகவும் அமரராகிவிட்ட "சில்லையூர்"அண்ணன் எழுதியபாடல்,படத்தில் அவரே நடித்தும் இருந்தார்.ஜோடியாக நடித்தவர் அவரது துணைவியார் கமலினி.

Creative Garden Path Ideas





உனக்கு விருப்பமென்றால் என்னை அழை - ரேமண்ட் கார்வர் தமிழில்: சுகுமாரன்.

அந்த வசந்தகாலத்தில் நாங்கள் இருவருமே வேறுவேறு நபர்களிடம் ஈடுபாடு கொண்டிருந்தோம்.ஆனால் கோடைக்காலத்தில், ஜூன்மாதம் வந்து பள்ளிக்கூடமும் மூடிய பிறகு எங்கள் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு பாலோ ஆல்டோவிலிருந்து,  காலிஃபோர்னியாவின் வடக்குக் கடற்கரை கிராமப்பகுதிக்குச் செல்வதாக முடிவு செய்திருந்தோம். எங்கள் மகன் ரிச்சர்ட் வாஷிங்டன் பாஸ்கோவிலிருக்கும் நான்ஸியின் பாட்டி வீட்டுக்குப் போனான். இலையுதிர்காலத்தில் கல்லூரியில் சேரப் பணம் சேர்ப்பதற்காக கோடைக்காலம் முழுவதும் அவன் அங்கே வசிக்க வேண்டும். பாட்டிக்கு வீட்டுச் சூழ்நிலை தெரியும். அதனால் அவன் அங்கே போய்ச்சேர்வதற்கு வெகு முன்பே விசாரித்து ஒருவேலையைக் கண்டுபிடித்து வைத்திருந்தாள். அவளுடைய குடியானவ நண்பர் ஒருவரிடம் பேசி ரிச்சர்டுக்காக களமடிப்பதும் வேலியடைப்பதுமான வேலைக்கு உறுதியும் பெற்றிருந்தாள். கடினமான வேலைதான். ஆனால் ரிச்சர்ட் அதற்குத் தயாராகவே இருந்தான். உயர்நிலைப் பள்ளியின் கடைசி தினத்துக்கு மறுநாள் காலை பஸ்ஸில் புறப்பட்டான்.நான்தான் அவனை பேருந்து நிலையத்துக்கு அழைத்துப் போனேன். காரை நிறுத்திவிட்டு உள்ளேபோய் பஸ் வருகிறவரை அவனுடன் உட்கார்ந்திருந்தேன். அவனுடைய அம்மா ஏற்கனவே கட்டித் தழுவி அழுது முத்தமிட்டு அவனை வழியனுப்பிவைத்திருந்தாள்.போய்ச் சேர்ந்ததும் பாட்டியிடம் கொடுப்பதற்காக ஒரு நீண்ட கடிதத்தையும் அவனிடம் தந்திருந்தாள்.அவள் இப்போது வீட்டில் எங்கள் பயணத்துக்கான கடைசி நேரப் பேக்கிங்குகளை முடித்துக்கொண்டும் எங்கள் வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ளவிருக்கும் தம்பதிகளுக்காகக் காத்துக்கொண்டுமிருக்கிறாள். பயணச் சீட்டை வாங்கி ரிச்சர்டிடம் கொடுத்தேன். பேருந்து நிலையத்தில் போட்டிருந்த பெஞ்சுகள் ஒன்றில் உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்தோம். நிலையத்துக்கு வரும் வழியில் நாங்கள் குறைவாகவே பேசியிருந்தோம்.

‘'நீங்களும் அம்மாவும் விவாகரத்துச்செய்துகொள்ளப் போகிறீர்களா?''என்று கேட்டான்.

சனிக்கிழமை காலை. அங்கே கார்களும் அதிகமில்லை.

”எங்களால் ஒத்துப்போக முடியுமென்றால் அதற்கு அவசியமிருக்காது. எங்களுக்கும் அதில் விருப்பம் கிடையாது. அதனால்தான் கோடைக்காலம் முழுக்க யாரையும் பார்க்காமலிருப்பதற்காக இங்கேயிருந்து புறப்படுகிறோம். நமது வீட்டை கோடைக்கால வாடகைக்கு விட்டிருக்கிறோம். அர்க்கடாவில் வேறு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறோம். நீயும் வெளியே போகிறாய் இல்லையா? அதுவும் ஒரு காரணந்தான். நீ பாக்கெட் நிறைய பணத்துடன் வீட்டுக்குத் திரும்பி வருவாய் என்பதற்காக அல்ல. விவாகரத்துப் பெறுவதில் எங்களுக்கும் விருப்பமில்லை. கோடைக்காலம் முழுவதும் தனியாக இருந்து பிரச்சனைகளை சரி செய்யப் பார்க்கிறோம்''

‘'நீங்கள் இன்னும் அம்மாவை நேசிக்கிறீர்களா? அவள் உங்களை நேசிப்பதாக என்னிடம் சொன்னாள்”

‘'நிச்சயமாக நேசிக்கிறேன்.இதற்குள் உனக்கும் அதுதெரிந்திருக்குமே. எல்லாரையும்போல எங்களுக்கும் சில சிக்கல்களும் பெரும் பொறுப்புகளும் வந்து விட்டன. தனியாக இருந்து பிரச்சனைகளை சரி செய்துகொள்ள எங்களுக்கு இப்போது அவகாசம் தேவையாக இருக்கிறது.ஆனால் நீ எங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நீ அங்கேபோய் கோடைக்காலத்தை நல்லபடியாகக் கழி,பாடுபட்டுக் காசைச் சேர்த்துக்கொள். இதை ஒரு விடுமுறையாக எடுத்துக்கொள். மீன்பிடிக்கக் கற்றுக்கொள்.அங்கே மீன்பிடிப்பு நிறைய நடக்கும்''

‘'நீர்ச் சருக்கும் கூட.நான் நீர்ச் சருக்கும் கற்றுக்கொள்ளப் போகிறேன்''

‘'நான் நீர்ச் சருக்கு விளையாடியதில்லை. எனக்காகவும் சேர்த்து விளையாடு.என்ன செய்வாய்தானே?''

பேருந்துநிலையத்தில் உட்கார்ந்திருந்தோம்.அவன் தன்னுடைய இயர்புக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் என் மடியில் கிடந்த செய்தித்தாளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.அவனுடைய பேருந்துக்கான அழைப்பு வந்தது.எழுந்து நின்றோம். அவனைக் கட்டிக்கொண்டேன் ‘'கவலைப்படாதே, கவலைப்படாதே.எங்கே உன்னுடைய டிக்கெட்?''

அவன் தன்னுடைய கோட்டுப்பாக்கெட்டைத் தட்டிக் காண்பித்துவிட்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டான். பஸ் புறப்படும் இடம்வரை அவனுடன் நடந்தேன்.அவனை மறுபடியும் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்பினேன்.

‘'குட்பை டாட்'' என்றவன் கண்ணீரை நான் பார்க்காமலிருக்க திரும்பிக்கொண்டான்.

வீட்டுக்குத் திரும்ப காரோட்டி வந்தேன்.எங்களுடைய பெட்டிகளும் சூட்கேஸுகளும் கூடத்தில் காத்திருந்தன.எங்கள் வீட்டை கோடைக்கால வாடகைக்கு எடுத்திருந்த இளந்தம்பதிகளுடன் நான்ஸி சமையல் அறையில் காப்பி அருந்திக்கொண்டிருந்தாள். கணிதப் பட்டப் படிப்பு மாணவர்களான ஜெர்ரியையும் லிஸ்ஸையும் சில நாட்களுக்கு முன்பே சந்தித்திருந்தேன்.இப்போது மறுபடியும் கைகுலுக்கிவிட்டு நான்ஸி ஊற்றிக்கொடுத்த
காப்பியைக் குடித்துக்கொண்டிருந்தேன்.நாங்கள் மேஜையைச் சுற்றி உட்கார்ந்து காப்பி அருந்திக்கொண்டிருக்க நான்ஸி அவர்கள் செய்யவேண்டிய காரியங்களின் பட்டியலைப் பூர்த்தி செய்துகொண்டிருந்தாள்.அவர்கள் கவனிக்கவேண்டியவை எவை,மாதத்தில் சில சமயங்கள் செய்யவேண்டியவை எவை, மாத ஆரம்பத்திலும் முடிவிலும் செய்யவேண்டியவை எவை என்பதையும் தபால் வந்தால் அனுப்பவேண்டிய முகவரி எது என்பதையும் பற்றிய பட்டியல்கள்.நான்ஸியின் முகம் இறுகியிருந்தது.காலைநேரம் தாண்டியிருந்ததால் வெயில் திரையைக் கடந்து வந்து மேஜைமீது விழுந்திருந்தது.

கடைசியாக காரியங்கள் எல்லாம் ஓர் ஒழுங்குக்கு வந்ததுபோலத் தென்பட்டதும் அவர்கள் மூன்றுபேரையும் சமையல் அறையிலேயே விட்டுவிட்டு காரில் சாமன்களை ஏற்றத் தொடங்கினேன்.நாங்கள் குடியேறவிருந்த வீடு முழுமையாகப் ஃபர்னிஷ் செய்யப்பட்டது. சாப்பாட்டுத் தட்டு முதல் சமையல் பாத்திரங்கள்வரை இருக்கின்றன.எனவே இந்த வீட்டிலிருந்து அத்தியாவசியமானவற்றைத் தவிர அதிக சாமான்களைக் கொண்டுபோகத் தேவையில்லை.

காலிஃஃர்னியாவின் வடக்குக் கடற்கரையில் பாலோ ஆல்டாவுக்கு முந்நூற்றி ஐம்பதுமைல்கள் வடக்கேயிருக்கும் யூரேகாவுக்கு மூன்றுவாரங்களுக்கு முன்பேபோய் எல்லா வசதிகளுமுள்ள வீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தேன்.நான் இப்போது தொடர்பு வைத்திருக்கும் சூஸனுடன் போயிருந்தேன். நகரத்தின் எல்லையிலிருந்த மோட்டலில் மூன்று இரவுகள் தங்கியிருந்தோம். நாளிதழ்களில் துளாவியும் ரியல் எஸ்டேட் ஏஜண்டுகளைச்
சந்தித்தும் இந்த வீட்டைக் கண்டுபிடித்திருந்தேன். மூன்றுமாத வாடகைக்கான காசோலையை நான் எழுதும்போது அவள் என்னையே கவனித்துக் கொண்டிருந்தாள். மோட்டலுக்குத் திரும்பிய பிறகு, கையை நெற்றிமேல் வைத்தபடி படுக்கையில் படுத்துக்கிடந்த சூஸன் சொன்னாள்: ''எனக்கு உங்கள் மனைவி நான்ஸிமேல் பொறாமையாக இருக்கிறது. ‘இன்னொருத்தி'யைப் பற்றி ஆட்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். சட்டபூர்வமான மனைவிக்குத் தான் உரிமைகளும் நிஜமான அதிகாரங்களும் இருக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த விஷயங்களைப் பற்றி நான் இதற்கு முன்பு புரிந்து கொண்டிருக்கவில்லை. அக்கறை காட்டியதும் இல்லை. இப்போது நானே அதைப் பார்க்கிறேன்.அவள்மேல் பொறாமையாக இருக்கிறது எனக்கு.இந்த வீட்டில் இந்தக் கோடைக்காலத்தில் அவள் உங்களோடு வாழப்போகிற வாழ்க்கைபற்றி பொறாமையாக இருக்கிறது. அது நானாக இருக்கக்கூடாதா என்று ஆசைப்படத் தோன்றுகிறது. நாமாக இருக்கக்கூடாதா என்று ஆசைப்படத் தோன்றுகிறது.ஹூம்.நாமாக இருந்தால்... எனக்கு ஏக்கமாக இருக்கிறது'' நான் அவள் கூந்தலைக் கோதிவிட்டேன்.

நான்ஸி உயரமானவள். நீண்ட மெலிந்த கால்களும் பழுப்பு நிறக் கூந்தலும் கண்களும் கொண்டவள்.பெருந்தன்மையான உற்சாகமும் கொண்டவள். ஆனால் பிற்பாடு பெருந்தன்மையும் உற்சாகமும் எங்களிடையே குறைந்து வந்திருந்தன. அவள் பார்த்துவைத்திருந்த நபர் என்னுடைய சக ஊழியர்களில் ஒருவன்தான்.மிடுக்கானவன்.கோட் சூட் டை அணிபவன். தலை நரைத்தவன். அதிகமாகக் குடிப்பவன். வகுப்பறையிலேயே சிலசமயம் அவனுடைய கைகள் உதறிக்கொள்ளும் என்று என்னுடைய மாணவர்களில் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.நான்ஸி என்னுடைய உறவைக் கண்டு பிடித்து அதிக நாட்களாவதற்குள் விடுமுறைக் காலத்தில் ஒரு விருந்தின்போது அவனுக்கும் அவளுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவை எல்லாம் இப்போது சலிப்பாகவும் விரசமாகவும் தோன்றுகிறது. சலிப்பும் விரசமும் தான். அந்த வசந்த காலத்தில் அது என்னவோ அப்படியாகத்தான் இருந்தது. எங்களுடைய சக்தி எல்லாவற்றையும் முழுமையாக உறிஞ்சியிருந்தது. வேறு விஷயங்களின் மீதான கவனத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டிருந்தது. ஏப்ரல் மாத இறுதியில் எங்கள் வீட்டை வாடகைக்குக் விட்டுவிட்டு கோடைக்காலத்தைக் கழிப்பதற்காக நாங்கள் இருவர் மட்டுமாக எங்காவது தூரமாகப் போயிருந்து காரியங்களை பழையது போல ஒன்றுபடுத்த முடியுமா? - ஒன்றுபடுத்த முடியுமானால் - என்று பார்ப்பதாக முடிவு செய்திருந்தோம்.மற்றவர்களை அழைக்கவோ கடிதம் எழுதவோ வேறு வகையில் தொடர்புகொள்வதோ இல்லையென்று நாங்கள் பரஸ்பரம் ஒப்புக்கொண்டிருந்தோம்.எனவே ரிச்சர்டுக்கான ஏற்பாடுகளைச் செய்தோம். வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் தம்பதியரைக் கண்டுபிடித்திருந்தோம். நான் வரைபடத்தை வைத்துக்கொண்டு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து வடக்கே யூரேகாவுக்குக் காரில் சென்று சகல வசதிகளும் கொண்ட வீட்டை கெளரவமான வயோதிகத் தம்பதிகளுக்கு மட்டும் கோடை வாடகைக்கு விடத் தயாராக இருந்த ஏஜெண்டைச் சந்தித்து வீட்டைப் பெற்றேன். அதற்காக அந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம் இரண்டாவது தேனிலவு - கடவுள் என்னை மன்னிப்பாராக - என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தினேன் என்றும் நினைக்கிறேன். 
அப்போது சூஸன் காருக்கு வெளியில் சிகரெட்டைப் புகைத்தபடி சுற்றுலாக் கையேடுகளை வாசித்துக் கொண்டிருந்தாள்.

சூட்கேஸுகளையும் பைகளையும் அட்டைப்பெட்டிகளையும் காரின் பின்பக்கத்திலும் பின்னிருக்கையிலும் அடுக்கிவைத்துவிட்டு நான்ஸி அவர்களிடமிருந்து இறுதியாக விடைபெற்று வராந்தாவிலிருந்து வரக்காத்திருந்தேன் அவர்கள் இருவரிடமும் கைகுலுக்கிவிட்டு காரை நோக்கி திரும்பினாள் நான்ஸி. நான் அவர்களுக்குக் கையசைக்க பதிலுக்கு அவர்களும் கையசைத்தார்கள். நான்ஸி காரில் ஏறி கதவைச் சாத்தினாள். ''போகலாம்'' என்றாள்.காரைக் கிளப்பினேன்.நெடுஞ்சாலையை நோக்கி முன்னேறினோம்.சாலையில் ஏறுவதற்கு முன்பாக வெளிச்சத்தில் எங்களை முந்திக்கொண்டு ஒரு கார் மப்ளர் உடைந்து தீப்பொறிகள் பறக்க ஓடுபாதையிலிருந்து விலகி வருவதைப் பார்த்தோம்.”அதை பாருங்கள், தீப்பிடித்து எரியப் போகிறது”என்று கத்தினாள் நான்ஸி.அந்தக் கார் சமாளித்துக்குகொண்டு சாலையில் ஏறும்வரை காத்திருந்து பார்த்தோம்.

செபஸ்டோபோலுக்கு அருகில் நெடுஞ்சாலையிலிருந்து விலகியிருந்த சிறிய உணவகத்தில் நிறுத்தினோம். 'ஈட் அண்ட் கேஸ்' (Eat & GAS) என்றது பெயர்ப்பலகை. அதைப் பார்த்து சிரித்துவிட்டோம். உணவகத்தின் முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்து பின்பக்கமாக ஜன்னலுக்கு அருகிலிருந்த மேஜையில் உட்கார்ந்தோம். காப்பிக்கும் சாண்ட்விச்சுகளுக்கும் ஆர்டர் சொன்னோம். நான்ஸி மேஜைப்பலகையின் வரிகளில் அவளுடைய சுட்டுவிரலை ஓடவிட்டுக்கொண்டிருந்தாள்.நான் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு வெளியே பார்த்தேன். ஜன்னலுக்கு அருகில் புதரில் வேகமான அசைவைக் கவனித்துக் கொண்டிருந்தபோதே ஒரு பாட்டுக் குருவியைப் பார்த்துக் கொண்டிருந்ததையும் உணர்ந்தேன்.சிறகுகள் படபடத்துத் துடிக்க புதருக்குள்ளேயிருக்கும் பூவில் அது அலகை நுழைத்துக்கொண்டிருந்தது.

''நான்ஸி, அங்கே பார், ஒரு ஹம்மிங்க் பேர்டு''

ஆனால் நான்ஸி பார்க்கவிருந்த நொடியில் பறவை பறந்துபோனது. நான்ஸி சுற்றிலும் பார்த்துவிட்டு ''எங்கே? எனக்கு எதுவும் தென்படவில்லையே...'' என்றாள்.

''ஒரு நிமிஷத்துக்கு முன்னால்வரைக்கும் அங்கேதான் இருந்தது. இதோ பார் இன்னொன்று,இது வேறு'' என்றேன்.

பணிப்பெண் எங்கள் ஆர்டரைக் கொண்டுவரும்வரை நாங்கள் அதையே பார்த்துக்கொண்டிருந்தோம்.அவள் வந்த கணத்தில் பறவை பறந்து கட்டிடத்தின் சுற்றுப் புறத்தில் மறைந்தது.

''நல்ல சகுனம் என்று நினைக்கிறேன்.ஹம்மிங்க் பேர்ட்ஸ். ஹம்மிங்க் பேர்ட்ஸ் அதிருஷ்டத்தைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறவை'' என்றேன்.

''நானும் எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கே கேள்விப்பட்டேன் என்று ஞாபகமில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். நமக்குத் தேவைப் படுவதும் அதிருஷ்டம்தானே? என்ன சொல்கிறீர்கள்?''

”அவை நல்ல சகுனம்தான்.காரை இங்கே நிறுத்தியதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்'' என்றேன்.

அவள் தலையசைத்தாள். ஒரு நிமிடம் பொறுத்து சாண்ட்விச்சை ஒரு கடி கடித்து விழுங்கினாள்.

**************** 
இருட்டுவதற்கு முன்பே யுரேகாவுக்குப் போய்ச்சேர்ந்தோம். சில வாரங்களுக்கு முன்பு சூஸனும் நானும் மூன்று இரவுகளைக் கழித்த மோட்டல் இருக்கும் நெடுஞ்சாலையைக் கடந்து திரும்பி நகரத்துக்கு நேர்முகமாக நிற்கும் குன்றுக்குப் போகும் சாலையைப் பிடித்தோம். வீட்டுச் சாவி என் சட்டைப்பையில் இருந்தது.குன்றின்மேல் ஒன்றிரண்டு மைல் தூரம் பணிமனையும் பலசரக்குக் கடையும் இருக்கும் நாற்சந்தியை அடையும்வரை வண்டியைச் செலுத்தினேன்.எங்களுக்கு முன்னால் பள்ளத்தாக்கில் மரங்களடர்ந்த மலைமடிப்புகள். சுற்றிலும் பரந்துகிடக்கும் மேய்ச்சல் நிலம். பணிமனைக்குப் பின்னால் நிலத்தில் மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. ''அழகான கிராமம்.எனக்கு வீட்டைப் பார்க்க ஆசையாக இருக்கிறது'' என்றாள் நான்ஸி.

''கிட்டத்தட்ட இங்கேதான். இந்த ரோட்டின் இறக்கத்தில் அந்த மேட்டைத் தாண்டியதும்'' என்றேன்.

''இங்கே'' என்று சொன்ன நிமிஷத்தில் இரண்டு ஓரங்களிலும் வேலிப்புதர்கள் அடர்ந்த நீண்ட ஓடுபாதையில் காரைத் திருப்பினேன்.''இதோ, இங்கே தான்.உனக்கு என்ன தோன்றுகிறது?'' என்று நானும் சூஸனும் இதே ஓடுவழியில் நின்றபோது அவளிடம் கேட்ட அதே கேள்வியை நான்ஸியிடமும் கேட்டேன்.

''அருமை. அற்புதமாக இருக்கிறது நாம் இறங்கலாம்''

அந்த முற்றத்தில் ஒரு நிமிஷம் நின்றோம். சுற்றிலும் பார்த்தோம். பின்னர் வராந்தா படிகளேறினோம்.வாசல் கதவைத் திறந்து விளக்குகளைப் போட்டேன். வீட்டுக்குள்ளே நுழைந்தோம். இரண்டு சிறிய படுக்கையறைகள். குளியலறை. பழைய இருக்கைகளுடன் வசிப்பறை. கணப்பு. பள்ளத்தாக்கைப் பார்க்கும்விதமாக பெரிய சமையலறை. எல்லாமிருந்தன.

''உனக்குப் பிடித்திருக்கிறதா?'' என்று கேட்டேன்.

''அற்புதமாகத் தோன்றுகிறது.நீங்கள் இதைக் கண்டுபிடித்ததில் எனக்கு சந்தோஷம். நாம் இங்கே இருக்கிறோம் என்பதில் சந்தோஷம்'' என்றாள் நான்ஸி.

குளிர்பதனப்பெட்டியைத் திறந்து அதன் மீது விரலை ஓடவிட்டாள். ''கடவுளே நன்றி. இது சுத்தமாக இருக்கிறது. நான் எதையும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமேயில்லை.''

''படுக்கை விரிப்புகள் கூட சுத்தமாக இருக்கின்றன.நான் பரிசோதித்துப் பார்த்துவிட்டேன்.அவர்கள் இப்படித்தான் வாடகைக்கு விடுவார்களாம். நேர்த்தியான தலையணைகள். தலையணை உறைகள் கூட நேர்த்தியானவை''

''நாம் கொஞ்சம் விறகு வாங்கி வைக்கவேண்டும்.'' என்றாள். நாங்கள் வசிப்பறையில் நின்றுகொண்டிருந்தோம். ''இது மாதிரியான இரவுகளில் நமக்கு கணப்பு அவசியம்''

''நாளைக்கு விறகு வாங்கப் பார்க்கிறேன்.அப்படியே நாம் ஷாப்பிங் போகலாம். நகரத்தையும் பார்க்கலாம்''

அவள் என்னை ஏறிட்டுப் பார்த்தாள் ''நாம் இங்கே இருக்கிறோம் என்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது'' என்றாள்.

''எனக்கும் தான்'' என்றேன்.என் கைகளை விரித்தேன்.அவள் என்னை நெருங்கினாள். அவளைத் தழுவிக்கொண்டேன்.அவளுடைய நடுக்கத்தை என்னால் உணரமுடிந்தது. அவளுடைய முகத்தை உயர்த்தி இரு கன்னங்களிலும் முத்தமிட்டேன். ''நான்ஸீ'' என்றேன்.

''நாம் இங்கே இருக்கிறோம் என்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது'' என்றாள் அவள்.

********************

sukumaran-1அடுத்த சில நாட்களை வீட்டை ஒழுங்குபடுத்துவதில் செலவிட்டோம்.சுற்றிப் பார்ப்பதற்காகவும் கடைகளை வேடிக்கை பார்ப்பதற்காகவும் யூரேகாவுக்குப் போனோம். வீட்டுக்குப் பின்னாலிருக்கும் புல்வெளியைத் தாண்டிக் காட்டுக்குப் போகும் வழிகளில் அலைந்தோம்.மளிகைச் சாமான்கள் வாங்கினோம்.செய்தித்தாளில் விறகு கிடைக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவர்களை அழைத்தேன். ஓரிரு நாட்களுக்குப் பிறகு நீளமாக முடி வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் லாரி நிறைய பூவரசமர விறகுகளைக் கொண்டுவந்து கார் நிறுத்துமிடத்தில் அடுக்கிவிட்டுப் போனார்கள். அன்றிரவு உணவருந்திய பிறகு கணப்புக்கு முன்னால் உட்கார்ந்து காப்பி குடித்துக்கொண்டே நாய் வாங்குவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

”குட்டி வேண்டாம். நாம்தான் எப்போதும் எதையாவது சுத்தம் செய்துகொண்டேயிருக்க வேண்டிவரும். இல்லையென்றால் அது எதையாவது கடித்து மென்று கொண்டிருக்கும். நமக்கு அது வேண்டாம். ஆனால் ஒரு நாய் வேண்டும்தான். நாம் நீண்டகாலமாக நாய் வளர்க்கவே இல்லை. இங்கே ஒரு நாயை வைத்துப் பராமரிக்க முடியுமென்று தோன்றுகிறது'' என்றாள் நான்ஸி.

''கோடைக்காலம் முடிந்த பிறகு? நாம் இங்கேயிருந்து போன பிறகு?'' என்று கேட்டேன்.அந்தக் கேள்வியை மாற்றிக் கொண்டேன்.''நகரத்திலும் நாயை வளர்க்கலாமே?''

”பார்ப்போம்.அதற்குள் நாயைத் தேடிப்பார்க்கலாம்.நல்ல ரகமானதாக இருக்கவேண்டும்.அதை பார்க்கும்வரை என்ன ரகம் வேண்டுமென்று எனக்கே தெரியாது. வரி விளம்பரங்களைப் பார்க்கலாம். வேண்டிவந்தால் விலங்குக் காப்பகத்துக்குப் போய்ப்பார்க்கலாம். ''நாள் கணக்காக நாங்கள் நாய்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தும் வீடுகளைக் கடந்துபோகும் போதெல்லாம் அங்கிருக்கும் நாய்களைச் சுட்டிக்காட்டிப் பேசிக்கொண்டிருந்தும் நாங்கள் விரும்பிய மாதிரியான நாய் கிடைக்கவில்லை. நாங்கள் நாயை வாங்கவில்லை.

நான்ஸி அவள் தாயை அழைத்து எங்கள் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்தாள்.ரிச்சர்ட் வேலைக்குப் போகிறான் என்றும் மகிழ்ச்சியாகத்தான் தெரிகிறான் என்றும் அவள் அம்மா சொன்னாள். அவளும் நன்றாக இருக்கிறாளாம். ''நாங்களும் நன்றாக இருக்கிறோம். இது ஒரு நல்ல மருந்து'' என்று நான்ஸி சொல்வதையும் கேட்டேன்.

ஜூலைமாத மத்தியில் ஒருநாள் கடலுக்கு அருகிலிருந்த நெடுஞ்சாலையில் வண்டியில் போய்க்கொண்டிருந்தோம்.ஒரு மேடு ஏறியதும் மணல் திட்டுகளால் கடலிலிருந்து பிரிந்த கடற்கழிகள் தென்பட்டன. கரையிலிருந்தபடியே சிலர் மீன்பிடித்துக்கொண்டிருந்தார்கள். நீரில் இரண்டு படகுகளும் இருந்தன.

காரை சாலையைவிட்டு விலக்கி ஓரமாக நிறுத்தினேன்.”என்ன மீனைப் பிடிக்கிறார்களென்று பார்க்கலாம்”என்றேன்.”நாமே சில மீன்பிடிப்புக் கருவிகளை வாங்கலாம்”'

”கொஞ்ச காலமாக நாம் மீன்பிடிக்கப் போகவேயில்லை”என்று பெருமூச்சுவிட்டாள் நான்ஸி.

''ரிச்சர்ட் சின்னவனாக இருக்கும்போது மவுண்ட் ஷாஸ்டாவுக்கு அருகில் தங்கியிருந்தோம்.உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?''

''ஞாபகமிருக்கிறது.மீன்பிடிப்பதை விட்டுவிட்டதைப் பற்றி இப்போதுதான் யோசித்துக்கொண்டிருந்தேன். இறங்கிப்போய் என்ன மீன்பிடிக்கிறார்கள் என்று பார்ப்போம்''

விசாரித்தபோது 'ட்ரௌட்' என்றான் அந்த ஆசாமி.சதிகார வானவில் 'ட்ரௌட்கள்'.கொஞ்சம் ஸ்டீல் ஹெட்மீன்களும் கோரை மீன்களும் கூட இருக்கின்றன.குளிர்காலத்தில் மணற்திட்டுகள் திறந்து கிடக்கும்போது வரும்.கோடைக் காலத்தில் திட்டுகள் தூர்ந்துபோகிறபோது இவையும் அகப்பட்டுக்கொள்கின்றன.இவற்றுக்கு வருடத்தில் நல்ல பருவம் இதுதான்.இன்றைக்கு நான் எதையும் பிடிக்கவில்லை.ஆனால் போன ஞாயிற்றுக்கிழமை நான்கு மீன்கள் பிடித்தேன். ஒவ்வொன்றும் ஒன்றே காலடி நீளம். உலகத்திலேயே சாப்பிட ருசியான மீன்கள். பிடிப்பதற்குள் போராட்டம் செய்துவிடும். படகிலிருப்பவர்கள் இன்று எதையாவது பிடித்திருப்பார்கள். ஆனால் எனக்குத்தான் இதுவரைக்கும் எதுவும் சிக்கவில்லை''

''தூண்டிலில் எதை இரையாக வைப்பீர்கள்?'' என்று கேட்டாள் நான்ஸி.

''எதை வேண்டுமானாலும்.புழுக்கள்,கோரை மீன்முட்டைகள்,முழுசான சோளம்.எதையாவது மாட்டித் தூண்டிலை ஆழத்தில் வீசிவிட்டுக் காத்திருக்கவேண்டும். தூண்டிலைத் தளர்வாக விட்டு கயிற்றின் மேல்கவனமாக இருக்கவேண்டும்''

நாங்கள் கொஞ்சம் அதிகமான நேரம் அங்கேயே சுற்றியிருந்தோம். அந்த ஆசாமி மீன்பிடிப்பதையும் கழிமுகத்தில் படகுகள் முன்னும்பின்னுமாக ததும்புவதையும் பார்த்துக்கொண்டிருந்தோம்.

''நன்றி.குட்லக்'' என்று அவனை வாழ்த்தினேன்.

''உங்களுக்கும்...உங்கள் இருவருக்கும் குட்லக்''

நகரத்துக்குத் திரும்பும் வழியில் விளையாட்டுக் கருவிகள் விற்கும் கடையில் வண்டியை நிறுத்தி லைசென்ஸ்கள் விலை அதிகமில்லாத தூண்டிற்கோல்கள், கப்பிகள்,நைலான் கயிறு,கொக்கிகள்,இரைகள்,மீன்பிடி கூடை எல்லாவற்றையும் வாங்கினோம்.மறுநாள் காலை மீன்பிடிக்கப் போகவேண்டுமென்று திட்டமிட்டோம்.

ஆனால் அன்று இரவு உணவருந்தி முடித்து பாத்திரங்களைச் சுத்தம் செய்துவிட்டு கணப்பில் நெருப்பு மூட்டிக்கொண்டிருந்தபோது தலையைப் பலமாகக் குலுக்கியபடி இது நடக்கப்போவதில்லை என்றாள் நான்ஸி.

''நீ ஏன் அதைச் சொல்கிறாய்? என்னதான் சொல்கிறாய்?''

”இது சரிவராது என்பதைத்தான் சொன்னேன். நாம் அதைச் சமாளிக்கவேண்டும்”' மறுபடியும் தலையைக் குலுக்கிக்கொண்டாள் அவள்.

''நாளைக் காலை மீன்பிடிக்கப்போக எனக்கு விருப்பமில்லை. நாய் வளர்க்க விருப்பமில்லை. நாயும் வேண்டாம். என் அம்மாவையும் ரிச்சர்டையும் தனியாகப்போய்ப் பார்க்கவேண்டும்.தனியாக...தனியாக இருக்க விரும்புகிறேன். ரிச்சர்டை விட்டுவிட்டு இருக்கமுடியவில்லை. ரிச்சர்ட் என் பையன்...என் குழந்தை... வளர்ந்ததும் என்னைவிட்டு போய்விட்டான்...அவனை விட்டுவிட்டு இருக்கமுடியவில்லை'' என்று அழுது புலம்பத் தொடங்கினாள்.

”அப்புறம் தெல்...தெல் ஷ்ரீடரைக் கூட விட்டுவிட்டு உன்னால் இருக்கமுடியவில்லை இல்லையா? உன்னுடைய பாய் பிரண்ட்...அவனை விட்டு விட்டும் இருக்கமுடியவில்லை?'' என்றேன்.

”இந்த இரவு எல்லாரையும் பிரிந்திருக்கிறேன்.உங்களைக் கூட இழந்திருக்கிறேன்.வெகுகாலத்துக்கு முன்னாலேயே உங்களை இழந்திருக்கிறேன். உங்களை மிக அதிகமாக இழந்து நீங்கள் எப்படியோ காணாமல் போய்விட்டீர்கள். அதையெல்லாம் விளக்க முடியாது. இனிமேலும் நீங்கள் என்னுடையவர் அல்ல''

''நான்ஸீ...'' என்றேன்.

”வேண்டாம்...வேண்டாம்” என்றாள்.தலையை உலுக்கிக்கொண்டாள்.கணப்புக்கு முன்னால் சோபாவில் உட்கார்ந்து தலையைக் குலுக்கிக் கொண்டேயிருந்தாள். ''நாளைக்கே போய் அம்மாவையும் ரிச்சர்டையும் பார்க்கவேண்டும். நான் போன பின்னால் நீங்கள் உங்கள் தோழியை அழைத்துக்கொள்ளலாம்''.

''நான் அதைச் செய்யமாட்டேன்.அப்படிச் செய்கிற உத்தேசமும் இல்லை'' என்றேன்.

''நீங்கள் அவளைக் கூப்பிடுவீர்கள்''

”நீயும்தான் தெல்லைக் கூப்பிடுவாய்”என்றேன்.அதைச் சொல்லும்போது அருவருப்பாகவும் உணர்ந்தேன்.

''உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்துகொள்ளுங்கள்'' என்று சொல்லியபடி சட்டையின் கைப்பகுதியில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.”உண்மையாகத்தான் சொல்கிறேன்.ஹிஸ்டீரியா வந்ததுபோல கத்த விரும்பவில்லை.நாளைக்கு நான் வாஷிங்டன் போகிறேன்.இப்போது படுத்துக் கொள்ளப் போகிறேன். சோர்ந்துபோய் விட்டேன். வருத்தப்படுகிறேன்,டான், நம் இரண்டுபேருக்காவும் வருத்தப்படுகிறேன்.நம்மால் இதைச் சரிசெய்து கொள்ளவே முடியாது. இன்றைக்கு அந்த மீன்காரன் நமக்கு குட்லக் சொன்னானே...'' என்று தலையை உலுக்கினாள். ''நமக்காக நான் குட்லக் சொல்லிக் கொள்கிறேன். நமக்கும் அது அவசியம்''

குளியறைக்குப் போனாள் அவள். தொட்டியில் தண்ணீர் விழுவது கேட்டது. நான் வெளியே வந்து முற்றத்துப் படிகளில் உட்கார்ந்து சிகரெட்டைப் புகைத்தேன். வெளியில் இருட்டும் அமைதியுமாக இருந்தது. நகரமிருந்த பக்கம் பார்த்தேன். ஆகாயத்தில் மங்கலாக விளக்குகளின் வெளிச்சம்  படர்ந்திருப்பதையும் பள்ளத்தாக்கில் கடற்பனியின் படலம் மிதப்பதையும் பார்க்கமுடிந்தது. சூஸனைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன். சிறிது நேரத்துக்குப் பின் நான்ஸி குளியலறையிலிருந்து வெளியே வந்தாள். படுக்கையறையின் கதவு தாளிடப்படுவதைக் கேட்டேன். நான் உள்ளே போய் அடுக்கிலிருந்து இன்னொரு விறகுக்கட்டையையெடுத்து கணப்பில் போட்டேன். அதன் பட்டையில் ஜுவாலைகள் பற்றியெரிவதுவரை காத்து நின்றேன்.இன்னொரு படுக்கையறைக்குள் நுழைந்து ஜன்னல்திரைகளை இழுத்துவிட்டேன். திரைவிரிப்பிலிருந்த பூவேலைகளை வெறித்துப் பார்த்தேன்.பிறகு குளித்து பைஜாமாவை அணிந்து மறுபடியும் கணப்பருகில்போய் உட்கார்ந்துகொண்டேன்.பனிமூட்டம் இப்போது ஜன்னலுக்கு வெளியில் வந்திருந்தது. நெருப்புக்கு முன்னால் உட்கார்ந்து புகைபிடித்தேன். ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது பனிமூட்டத்தில் ஏதோ நகர்வது தெரிந்தது. கூர்ந்து பார்த்தபோது முற்றத்தில் ஒரு குதிரை மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.

ஜன்னல் பக்கமாகப் போனேன்.குதிரை நிமிர்ந்து ஒரு நிமிடம் என்னைப் பார்த்துவிட்டு மறுபடியும் குனிந்து புற்களைக் கவ்விப் பிடுங்கத் தொடங்கியது. இன்னொரு குதிரை காரைத் தாண்டிவந்து முற்றத்தில் மேய ஆரம்பித்தது. முற்றத்து விளக்கைப் போட்டுவிட்டு ஜன்னல் அருகில் நின்று அவற்றைக் கவனித்தேன். நீளமான பிடரியுள்ள பெரிய வெண்குதிரைகள். வேலியைத் தாண்டியோ பக்கத்திலிருக்கிற பண்ணைகள் எதிலிருந்தாவது பூட்டப் படாத கதவைத் தாண்டியோ அவை வந்திருக்கவேண்டும். எப்படியோ வந்து எங்கள் முற்றத்தில் திரிந்துகொண்டிருந்தன. கிடைத்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும் அவை பதற்றத்துடன் இருந்தன. ஜன்னலுக்குப் பின்னால் நான் நிற்குமிடத்திலிருந்தே அவற்றின் கண்களில் வெண்மையைப் பார்க்க முடிந்தது. புல் கொத்துகளைப் பிடுங்கும்போது அவற்றின் காதுகள் உயர்ந்து தாழ்ந்தன. மூன்றாவது ஒரு குதிரையும் முற்றத்தில் திரிந்தது. அதைத் தொடர்ந்து நான்காவதாக ஒன்று. எங்கள் முற்றத்தில் வெண் குதிரைகளின் மந்தை மேய்ந்துகொண்டிருந்தன.

படுக்கையறைக்குப் போய் நான்ஸியை எழுப்பினேன். அவளுடைய கண்கள் சிவந்திருந்தன. கண்களைச் சுற்றியிருந்த ரப்பைகள் வீங்கியிருந்தன. கூந்தலை சுருட்டிவிட்டிருந்தாள். கட்டில் காலுக்குப் பக்கத்தில் தரையில் ஒரு சூட்கேஸ் விரியத் திறந்துகிடந்தது.

''நான்ஸி, ஹனி. முற்றத்தில் என்னவென்று வந்து பார். வந்து பாரேன். நீ கண்டிப்பாகப் பார்க்கவேண்டும். நம்பவே மாட்டாய். சீக்கிரம் வா'' என்றேன்.

''என்ன இது? என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.என்ன இது?''

”அன்பே!நீ கண்டிப்பாகப் பார்க்கவேண்டும்.நான் உன்னைக் கலவரப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள். ஆனால் கண்டிப்பாக நீ வந்து அதைப் பார்க்க வேண்டும்.”

நான் அந்த அறைக்குத் திரும்பி ஜன்னல் அருகில் நின்றேன். சில நிமிடங்களில் இரவு அங்கியின் முடிச்சைப் போட்டபடி நான்ஸி வந்தாள். ஜன்னலுக்கு வெளியில் பார்த்துவிட்டு, ''கடவுளே, எவ்வளவு அழகாக இருக்கின்றன, இவை எங்கேயிருந்து வந்திருக்கும், டான்? அழகாக இருக்கின்றன'' என்றாள்.

''இங்கே எங்கிருந்தாவது அவிழ்த்துக்கொண்டு வந்திருக்கும். பக்கத்திலிருக்கிற பண்ணைவீடுகள் எதிலிருந்தாவது. நான் ஷெரீபின் அலுவலகத்துக்குப் போன் செய்து இவற்றின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கச் சொல்கிறேன். ஆனால் அதற்கு முன்னால் நீ இவற்றைப் பார்க்கவேண்டும் என்று நான் விரும்பினேன்.''

''இவை கடிக்குமா? அதோ அங்கே நம்மையே பார்த்துக்கொண்டு நிற்கிறதே அதைக் கொஞ்சவேண்டும்போல இருக்கிறது. அதன் தோளில் தட்டிக் கொடுக்க ஆசைப்படுகிறேன். ஆனால் கடி வாங்க முடியாது. நான் வெளியே போகிறேன்''

''அவை கடிக்காது என்றுதான் நினைக்கிறேன். கடிக்கிற ரகத்தைச் சேர்ந்த குதிரைகள் மாதிரித் தெரியவில்லை. வெளியே போவதானால் கோட்டைப் போட்டுக்கொள். குளிர் அதிகம்.''

பைஜாமாவுக்கு மேலே கோட்டைப் போட்டுக்கொண்டு நான்ஸிக்காகக் காத்திருந்தேன். வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தோம். முற்றத்தில் குதிரைகளுக்கிடையில் நடந்தோம். அவை எல்லாமும் எங்களை நிமிர்ந்து பார்த்தன. இரண்டு குதிரைகள் மறுபடியும் புல்லை மேயத் தொடங்கின. மற்ற குதிரைகளில் ஒன்று கனைத்துவிட்டு கொஞ்சம் எட்டிநின்றது. பிறகு அதுவும் தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு புல்லைக் கொறித்து அசைபோடத் தொடங்கியது. நான் ஒரு குதிரையின் நெற்றியைத் தடவி முதுகில் தட்டிக்கொடுத்தேன். அது தொடர்ந்து அசைபோட்டுக்கொண்டிருந்தது. நான்ஸி இன்னொரு குதிரையை வருடி அதன் பிடறியைக் கோதி விட்டுக்கொண்டிருந்தாள். ''குதிரையே நீ எங்கேயிருந்து வருகிறாய்?எங்கே இருக்கிறாய்? இன்று இரவு ஏன் வெளியே வந்துவிட்டாய், குதிரையே!'' என்றெல்லாம் கொஞ்சியபடி அதன் பிடறியைக் கோதிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். குதிரை அவளை ஏறிட்டுப்பார்த்து உதடுகளால் ஊதிவிட்டு மறுபடியும் தலையைத் தொங்கப்போட்டது.அவள் அதன் முதுகில் தட்டிக்கொடுத்தாள்.

''நான் ஷெரீப்பைக் கூப்பிடப் போகிறேன்'' என்றேன்.

”இப்போது வேண்டாம்.இன்னும் கொஞ்ச நேரத்துக்குக் கூப்பிடவேண்டாம். இதுபோல ஒன்றை இன்னொருமுறை நம்மால் பார்க்க முடியாது.இனி ஒருபோதும் நமது முற்றத்தில் குதிரைகள் நிற்காது ஒருபோதும். டான் கொஞ்ச நேரம் பொறுங்கள்''

சிறிது நேரத்துக்குப் பிறகும் நான்ஸி ஒவ்வொரு குதிரையாக நகர்ந்து அவற்றின் முதுகைத் தட்டிக்கொடுத்துக்கொண்டும் பிடரியைக் கோதிக் கொண்டுமிருந்தாள். ஒரு குதிரை முற்றத்திலிருந்து நகர்ந்து கார் நிறுத்தும் இடத்துக்கு வந்து காரைச் சுற்றிக்கொண்டு நடந்து சாலையில் இறங்கியது. கூப்பிட்டுச் சொல்லவேண்டியதுதான் என்று புரிந்தது.

சற்று நேரத்தில் ஷெரீப் அலுவலகத்தின் இரண்டு கார்கள் பனிப்படலத்தில் சிவப்பு விளக்குகள் பளீரிடத் தோன்றின. அதற்குச் சில நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டுத் தோல் கோட்டுப் போட்ட ஒருவன் குதிரைகளை ஏற்றிச் செல்லும் டிரெயிலருள்ள பிக்கப் வண்டியுடன் வந்து சேர்ந்தான். குதிரைகள் தயங்கியும் முரண்டு பிடித்தும் ஓடின. டிரெயிலரிலிருந்தவன் கயிற்றைச் சுழற்றி வீசி ஒரு குதிரையின் கழுத்தில் மாட்டினான்.

''அதைத் துன்புறுத்த வேண்டாம்'' என்றாள் நான்ஸி.

வீட்டுக்குள் திரும்பிப்போய் ஜன்னலுக்குப் பின்னால் நின்று உதவியாளர்களும் மேய்ப்பனும் குதிரைகளை வளைத்துப் பிடிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

''நான் காப்பி போடப் போகிறேன். நான்ஸீ...உனக்கும் காப்பி வேண்டுமா?'' என்று கேட்டேன்.

''எனக்கு என்ன வேண்டுமென்று சொல்லவா? டான், எனக்கு மிதப்பது போல இருக்கிறது. நிறைவாக இருக்கிறது. எனக்கு என்னமாதிரி இருக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை. நீங்கள் காப்பி போடுங்கள். நான் ரேடியோவில் நாம் கேட்கக் கூடிய சங்கீதம் ஏதாவது வருகிறதா என்று பார்க்கிறேன். நீங்கள் மறுபடியும் கணப்பை மூட்டுங்கள். பரவசத்தில் என்னால் தூங்கக் கூட முடியாது''

கணப்புக்கு முன்னால் உட்கார்ந்து காப்பி குடித்தோம். யூரேகா வானொலி நிலைய இரவு ஒலிபரப்பில் சங்கீதம் கேட்டோம். குதிரைகளைப் பற்றி அப்புறம் ரிச்சர்டைப் பற்றி நான்ஸியின் தாயாரைப் பற்றி பேசினோம். நடனமாடினோம். தற்போதைய சூழ்நிலையைப் பற்றிப் பேசாமலிருந்தோம். ஜன்னலுக்கு வெளியில் பனிப்படலம் மிதந்துகொண்டிருந்தது.பரஸ்பர நேசத்துடன் பேசிக்கொண்டிருந்தோம். விடியப் போகிற நேரத்தில் வானொலியை அணைத்துவிட்டுப் படுக்கைக்குப் போய் உறவுகொண்டோம்.

மறுநாள் பிற்பகல். அவளுடைய எல்லா ஏற்பாடுகளையும் முடித்துக்கொண்டு சூட்கேசுகளைக் கட்டிவைத்து, அங்கேயிருக்கும் சிறிய விமான நிலையத்துக்கு அவளைக் காரில் கூட்டிப் போனேன். அங்கேயிருந்து போர்ட்லாண்டுக்குப் போகும் விமானத்தைப் பிடித்துப் போனால் இரவில் பாஸ்கோ செல்லும் விமானத்துக்கு மாறலாம்.

''நான் விசாரித்ததாக அம்மாவிடம் சொல். என் சார்பில் ரிச்சர்டை அணைத்து ஒரு முத்தம் கொடு. அவன் ஞாபகமாகவே இருக்கிறேன் என்று சொல். அவனை நேசிக்கிறேன் என்று சொல்.''

''அவனுக்கும் உங்கள்மேல் அன்புதான். உங்களுக்கே தெரியுமே. எப்படியோ இலையுதிர் காலத்தில் நீங்கள் அவனைப் பார்க்கத்தானே போகிறீர்கள்.''

நான் தலையாட்டினேன்.

”குட் பை”என்றபடி என்னை நெருங்கினாள்.இருவரும் கட்டித் தழுவிக்கொண்டோம்.

''நேற்றைய இரவு என்னை சந்தோஷமாக்கியது. அந்தக் குதிரைகள். நம்முடைய பேச்சு. எல்லாம்தான்.இதுவும் உதவுகிறது.அதை நாம் மறக்கமுடியாது'' என்றவள் அழத் தொடங்கினாள்.

''எனக்குக் கடிதம் எழுதுவாயா? நமக்கு இப்படி நடக்கும் என்று நான் யோசித்ததில்லை. இத்தனை வருடங்களில் ஒரு நிமிடம் கூட அப்படி நினைத்ததில்லை. நமக்கு அல்ல''

''நான் எழுதுகிறேன்.பெரிய கடிதங்களாகவே எழுதுகிறேன்.உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது உங்களுக்கு எழுதுவேனே அந்த மாதிரிப் பெரிய கடிதங்கள்''

''நான் அவற்றுக்காகக் காத்துக்கொண்டிருப்பேன்.''

அவள் மறுபடியும் ஏறிட்டுப் பார்த்து என் முகத்தை வருடினாள். திரும்பி தார்ப்பாதையைக் கடந்து விமானத்தை நோக்கி நகர்ந்தாள்.

போய் வா, அன்பே, கடவுள் உன்னோடு இருப்பாராக.

அவள் விமானத்தில் ஏறினாள். இன்ஜின்கள் இயங்க ஆரம்பித்து ஒரு நிமிடத்துக்குள் விமானம் ஓடுபாதையில் நகரத் தொடங்கும்வரை அந்த இடத்திலேயே இருந்தேன். அது உயர்ந்து ஹம்போல்ட் வளைகுடாவுக்கு மேல்பறந்து சீக்கிரமாகவே தொடுவானத்தில் ஒரு புள்ளியாக மாறியது.

நான் காரை வீட்டுக்குத் திருப்பி ஓட்டினேன்.நடைவழியில் நிறுத்தினேன்.கடந்த இரவில் தரையில் பதிந்திருந்த குதிரைகளின் குளம்படையாளங்களைக் கவனித்தேன். புல்தரையிலும் சகதியிலும் அழுத்தமாகப் பதிந்திருந்தன. எல்லா இடங்களிலும் குதிரைச் சாணம் குவிந்து கிடந்தது.வீட்டுக்குள் நுழைந்து கோட்டைக்கூடக் கழற்றாமல் தொலைபேசியை நோக்கிப் போய் சூஸனின் எண்ணைச் சுழற்றினேன்

@

தமிழில்: சுகுமாரன். 

Editor & Publisher of Ladies Special - Girija Raghavan | Women Icons

Respiratory Depression

Drug-induced respiratory disease has a low incidence but is associated with a high mortality when manifest. Patients with COPD, reduced hepatic and renal function, and the elderly are particularly at risk. Additionally, patients receiving combination therapies with other respiratory depressants and/or oxygen supplementation are at even greater risk.

Alcohol is particularly important when consumed in combination with other respiratory depressants, and patients should be counseled to avoid alcohol or alcohol-containing products.

Opioid analgesics are highly associated with respiratory depression, but tolerance develops over time. Additionally, in the non-COPD patient the drug level for pain relief is below the level for respiratory depression. However, pharmacists must be aware that COPD patients may have a much smaller therapeutic range and opioids should be initiated at lower doses and the dosage titrated slowly. Furthermore, complete cross-tolerance from one opioid analgesic to another cannot be assumed, and a 25% (normal patient) to 50% (COPD patient) decrease in initial conversion dose should be sought. Finally, naloxone and nalmefene can reverse the respiratory depression associated with narcotics, but should be dosed until the desired effect is achieved while avoiding precipitation of an acute return of pain.

Tramadol is a reasonable alternative agent to narcotics for the patient at risk. Unfortunately, care must be taken to avoid overdose and/or concomitant use of other respiratory depressants since the respiratory depression that can result is not fully reversible with naloxone or nalmefene. Also, concurrent use of tramadol with phenelzine or tranylcypromine is contraindicated.

ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு ..........

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.
நற்பலன் தரும் கனவுகள்
_____________________________________
1 ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
2 வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
v கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
3 விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.
4 திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
5 ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
6 இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
7 சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
8 நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
9 தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
10 இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
11 திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
12 தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
13 உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.
v கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.
14 ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.
15 மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
16 கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
17 மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
18 வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.
19 மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.
தீய பலன் தரும் கனவுகள்
_______________________ ____
1 பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
2 தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
3 எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
4 எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
5 இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
6 பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
7 புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
8 குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
9 நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
10 ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
11 நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
12 முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
13 முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
14 சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
15 பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
16 காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.