கும்பகோணத்தில் 1-7-1930-இல் பிறந்தவர். 'இ.பா' (இயற் பெயர் - ஆர். பார்த்தசாரதி) டில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர், வைணவ சித்தாந்தம் குறித்த ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர் நாவல், சிறுகதை, நாடகம், இலக்கியத் திறனாய்வு ஆகிய பல துறைகளில் சாதனை புரிந்து 'குருதிப்புனல்'என்னும் நாவலுக்காக 1978-இல் சாகித்ய அகாதமி விருது பெற்றார். நூலுருவில் பதினைந்துக்கு மேல் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. அங்கதச்சுவை பரிமளிக்கும் உரைநடை இவருடைய தனிச்சிறப்பு. ஆங்கிலம் மற்றும் பிற இந்திய, உலக மொழிகளில் இவருடைய படைப்பு கள் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. 'மழை', 'போர்வை போர்த்திய உடல்கள்', 'நந்தன் கதை' ஆகிய இவருடைய நாடகங்கள் தமிழ் மேடைகளில் மட்டும் அல்லாமல் இதர மொழிகளிலும் அரங்கேற்றப்பட்டுப் பெரும் வெற்றியும் பாராட்டும் பெற்றிருக்கின்றன. |
ஜன்பத் போக்குவரத்துத் தீவு. பச்சை ஒளி தந்த அநுமதியில் அதுவரையில் சிலையாய் நின்ற ராட்சஸ பஸ்கள் சீறிக்கொண்டு புறப்பட்டன.
"அப்பா,
அதோ "*ஸ்கூட்டர்..." என்று கூவியவாறே வாசுவின் பாதுகாப்பிலிருந்து
விடுவித்துக்கொண்டு சிவப்பு ஒளியையும் பாரா மல் வீதியின் குறுக்கே ஓடினாள்
கமலி.
"கமலி!" என்று கத்தினான் வாசு.
அவள் ஏமாற்றத்துடன் திரும்பிப் பார்த்தாள். வாசு அவள் கையைப் பற்றி வேகமாகப் பின்னால் இழுத்துக்கொண்டு வந்தான்.
"வாக்'னு வந்தப்புறந்தான் போகணும்னு நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? வயது ஏழாச்சு. இது கூடத் தெரியலியே?"
"அந்த
ஸ்கூட்டர் காலியாயிருக்கு. யாரானும் ஏறிடுவாப்பா." "ஏறிட்டுப் போகட்டும்.
ரோடை இப்போ கிராஸ் பண்ணக் கூடாது." --------------- *தில்லியில் ஆட்டோ
ரிக்ஷாவை "ஸ்கூட்டர்" என்று குறிப்பிடுவது வழக்கம்.
"அதோ எல்லாரும் பண்றாளேப்பா!"
"ஒத்தர் தப்புப் பண்ணினா எல்லாரும் பண்ணணுமா?"
கமலிக்கு
அப்பாவின் பேரில் கோபம் கோபமாக வந்தது. அரை மணி நேரமாக இருவரும்
ஸ்கூட்டருக்காக அலைகிறார்கள். ப்ளாசாவி லிருந்து அவளை இதுவரை நடத்தியே
அழைத்து வந்துவிட்டான் வாசு.
அவர்கள் பஸ்ஸில்
போயிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு பஸ்ஸிலும் கூட்டம் பொங்கி வழிந்தது.
குழந்தையையும் இழுத்துக் கொண்டு முண்டியடித்து ஏற முடியுமா? - வாசுவால் இதை
நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. டாக்சியில் போகலாமென்றால் அதற்கு
வசதியில்லை. லோதி காலனி போவதற்கு நாலு ரூபாய் ஆகும். இடைக்கால நிவாரணம்
கொடுக்கப் போகிறார்கள்; வாஸ்தவந்தான். போன மாதம் அக்காவுக்கு உடம்பு
சரியில்லை என்று அவன் பம்பாய் போய் வரும்படியாக ஆகிவிட்டது. அதற்கு வாங்கிய
கடன் தீர வேண்டும். கடன் வாங்குவது என்பது அவனுக்குப் பிடிக் காத காரியம்.
ஆனால் திடீர் திடீரென்று செலவுகள் ஏற்படும்போது அவற்றை எப்படிச்
சமாளிப்பது?
"அப்பா, அந்த ஸ்கூட்டரிலே யாரோ ஏறிட்டா" என்று அலுத்துக் கொண்டே சொன்னாள் கமலா.
குழந்தையின்
எரிச்சல் அவனுக்குப் புரிந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்? சாயந்திரம்
ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டால் ஒரு ஸ்கூட்டர் கூடக் கனாட் பிளேசில்
கிடைக்காது. கிடைப்பதும், கிடைக்காமல் இருப்பதும் ஒவ்வொருவருடைய
அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.
தனக்கு என்றுமே
அதிர்ஷ்டம் கிடையாது என்று நினைத்தான் வாசு. அவன் மெடிக்கல் காலேஜில்
சேரவேண்டுமென்று ஆசைப் பட்டான். அதற்கு வேண்டிய நல்ல மார்க்கும்
வாங்கியிருந்தான். ஆனால் இண்டர்வியூவில், "மத்திய ஆப்பிரிக்காவில்
இரண்டாண்டு களுக்கு முன் எவ்வளவு அங்குலம் மழை பெய்தது?" என்று கேட்ட போது,
அவனுக்குப் பதில் தெரியவில்லை. ஆகவே, அதற்கு அடுத்த வருஷம், "உலகம் நெடுக
எங்கெங்கு மழை பெய்கிறது? எப்படி வெயில் காய்கிறது?" என்பவை பற்றியெல்லாம்
அலசி ஆராய்ந்து விட்டு, இண்டர்வியூவுக்கு போனான். 'மெக்ஸிகோவில் மத்தியான
வேலைகளில் மக்கள் என்ன செய்கிறார்கள்?" என்று கேட்டார்கள். அந்த வருஷமும்
அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. பி. ஏ. படித்து விட்டுத் தில்லியில் மத்திய
அரசாங்கத்தில் வேலை செய்ய வேண்டு மென்று அவன் தலையில் எழுதியிருந்தது -
அப்படித்தான் அவன் அதை ஏற்றுக்கொண்டான்.
"அப்பா, 'வாக்'னு வந்துடுத்து."
"சரி, கையைப் பிடி. ஓடாதே!" ஸிந்தியா ஹவுஸ் பக்கம் போய் இருவரும் நின்றார்கள்.
"காலை
வலிக்கிறது" என்றாள் கமலை. மரீனா ஹோட்டலருகே நின்று கொண்டிருந்த
ஸ்கூட்டரில் ஏறியிருந்தால் இத்தனை நேரம் அவர்கள் வீட்டுக்குப்
போயிருக்கலாம். அந்த ஸ்கூட்டர்காரனும் லோதி காலனிப் பக்கம் போக
வேண்டியவன்தான் போல் இருக்கிறது. வாசுவை ஏற்றிக்கொள்ள இணங்கினான். ஆனால்
ஒரு பெண் கோபமாக வந்து, அந்த ஸ்கூட்டரைத் தானே முதலில் கூப்பிட்டதாகச்
சொன்னாள். ஸ்கூட்டர்காரன் அவள் எங்கே போகவேண்டுமென்று கேட்டான். அந்த பெண்
கர்ஸன் ரோட் போகவேண்டும் என்றாள். நடந்தே போய்விடலாம் என்று யோசனை சொன்னான்
ஸ்கூட்டர்காரன். அந்தப் பெண் முதலில் கூப்பிட்டிருந்தால் அவள் கோபம்
நியாயமானது என்றே பட்டது வாசுவுக்கு. அவளை அழைத்துப் போகும்படி
சொல்லிவிட்டு விலகிக்கொண்டான். அந்த பெண் நன்றியைச் சொல்லாமல் உரிமைப்
போராட்டத்தில் வெற்றி அடைந்தது போல் ஏறிக்கொண்டாளே என்ற வருத்தம் இல்லாமல்
இல்லை. நியாயத்தைப் பற்றி அப்பொழுது அவன் அவ்வளவு கவலைப்படாமல்
இருந்திருந்தானானால் கமலிக்கு இப்பொழுது காலை வலித்திருக்காது.
வாழ்க்கையில்
அடிப்படையான சில விஷயங்களுக்கு மதிப்பு அளிக்காவிட்டால், சமுகத்தில்
வாழ்ந்து என்ன பிரயோசனம்? சிக்கலாகிக்கொண்டு வரும் சமுதாயத்தில் இது
சாத்தியமா?
பிளாசா அருகே மூன்று ஸ்கூட்டர்கள்
காலியாக நின்றுகொண்டிருந்தன. வாசு கமலியின் கையைப் பிடித்துக்கொண்டு
பரிதாபமாக நின்றான். ஒருவராவது அவனை ஏறிட்டுப் பார்க்கவில்லை. வாசு, கால்
மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த ஒருவனைப்
பார்த்துச் சொன்னான்: "ஸ்கூட்டர் வேண்டும்."
அவன் வாசுவைப் பார்க்காமலே கேட்டான்: "எங்கே போக வேண்டும்?"
"லோதி காலனி."
அவன்
பதில் சொல்லவில்லை. சிகரெட்டைப் பலமாக இழுத்துப் புகையை விட்டான்.
இன்னொருவன் வாசு செங்கோட்டை வருவதாக இருந்தால் அங்கு அழைத்துப் போவதாகப்
கூறினான். லோதி காலனிக்குப் பதிலாகச் செங்கோட்டைக்கு அருகில் தான்
இருந்திருக்கக் கூடாதா என்று வாசுவுக்குத் தோன்றிற்று. அப்பொழுது சுவரருகே
நின்றுவிட்டுப் பைஜாமாவை இருக்கக் கட்டிக்கொண்டே வந்த ஒருவன், நாலு ரூபாய்
கொடுப்பதானால் லோதி காலனிக்கு வருவதாகச் சொன்னான். டாக்ஸிக்கே நாலு
ரூபாய்தான் ஆகும். அந்த வசதி இருந்தால் ஸ்கூட்டருடன் எதற்காகப் பேரம்? -
வாசுவுக்கு மிகுந்த கோபம் வந்தது. யார் மீது என்று அவனுக்கே புரியவில்லை.
"அப்பா, அதோ ஸ்கூட்டர்" என்றாள் கமலி.
மேற்புறம்
திறந்து வெயிலுக்குச் சௌகரியமாய், காற்றோட்டமாய் இருந்தது அந்த ஸ்கூட்டர்.
சார்ட்டைப் பார்க்கவேண்டிய அவசியமில்லாமல் புதிதாகப்
பொருத்தப்பட்டிருந்தது கட்டண மீட்டர். வாழ்க்கையின் லட்சியமே கைகூடி
விட்டாற்போல் ஓடினான் வாசு. ஆனால் இரண்டு தடவை கேட்டும் ஸ்கூட்டர்காரன்
பதில் சொல்லவில்லை. மூன்றாம் தடவை கேட்டும் ஸ்கூட்டர்காரன் பதில்
சொல்லவில்லை. சீறி விழுந்தான். "ரேடியேட்டர் சூடாகிவிட்டது. இன்னும் ஒரு
மணி நேரத்துக்கு எங்கும் போவதாக இல்லை." ரேடியேட்டரைக் காட்டிலும் அவன்தான்
சூடாயிருந்தான் என்று வாசுவுக்குத் தோன்றிற்று.
தனக்கு
மிகவும் பிடித்திருந்த ஸ்கூட்டர் கிடைக்கவில்லையே என்று எரிச்சலாக வந்தது,
வாசுவுக்கு. புதிய கட்டணம் அமலுக்கு வந்து ஆறு மாதமாகிறது. முக்கால்வாசி
ஸ்கூட்டர்களில் சார்ட் தான் தொங்குகிறது; கணக்குப் பார்த்துக் கொடுப்பதற்கு
ஒருவன் தன் சிந்தனை முழுவதையும் ஒருமைபடுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால்
ஏமாற்றி விடுவார்கள். புதிய மீட்டரில் பழைய மீட்டரைக் காட்டிலும் அதிகமாகக்
கொடுத்தாலும் பரவாயில்லை. பழைய மீட்டரில் ஏமாறாமலிருப்பதுதான் தீய எதிர்ச்
சக்திகளினின்றும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது போலாகுமென்று நினைத்தான்
வாசு. தில்லி போன்ற நகரங்களில் ஒருவனுக்குத் தான் ஏமாறாமல்
இருக்கவேண்டுமென்ற ஜாக்கிரதை உணர்வே முழு நேரக் காரியமாக இருந்தால், அவன்
ஆக்கப் பூர்வமாக வளர்வது எப்படி?
"டாக்ஸியிலே
போகலாமாப்பா?" என்று கேட்டாள் கமலி. அவளுக்குக் கால் வலிக்கிறது என்ற
பிரத்தியட்ச உண்மையைத் தவிர, மாதத்துக் கடைசி வாரத்தில் மத்திய சர்க்கார்
அஸிஸ்டெண்டால் இதைப் பற்றி யோசித்துப் பார்க்க முடியுமா என்ற பொருளாதாரப்
பிரச்னையைப் பற்றிக் கவலையில்லை. இப்போது அவனால் அது முடியாது என்பது
இருக்கட்டும்; மாத முதல் வாரத்தில் கூட என்றைக்காவது குற்ற உணர்ச்சி
இல்லாமல் அவனால் டாக்ஸியில் போக முடிவதில்லை. பொருளாதாரத்தை அடிப்படையாகக்
கொண்ட இயந்திர பூர்வமாகிவிட்ட சமுகத்தின் ஒழுக்க நியதிகள், ஒருவனைக் குற்ற
உணர்ச்சியால் அவஸ்தைப்படும் நிலைக்குக் கண்டிஷன் செய்துவிடுகின்றன போல்
இருக்கிறது.
"ஸ்கூட்டரே கிடைக்காது"என்று சாபம் கொடுப்பது போல் சொன்னாள் கமலி.
"அவசரப்படாதே, கிடைக்கும்."
"பஸ்ஸிலே
போகலாமே!" அப்பா தன்னை டாக்ஸியில் அழைத்துச் செல்ல தயாராக இல்லை என்பது
அவளுக்குப் புரிந்து விட்டது.ஸ்கூட்டரே குறிக்கோளாகய் அலைவதைக் காட்டிலும்
பஸ்ஸில் போகலாமே என்று அவளுக்குத் தோன்றிற்று.
"கூட்டத்திலே ஏற முடியுமா உன்னாலே?"
"பின்னாலே என்னதான் பண்றது? ஆத்துக்குப் போகாமலேயே இருக்கலாங்கறேளா?"
இக்கேள்வி
ஒரு பயங்கரமான எதிர்காலத்தை அவன் மனக் கண் முன்பு நிறுத்தியது. ஸ்கூட்டரே
கிடைக்காமல் ஸ்கூட்டரைத் தேடி இருவரும் வாழ்நாள் முழுவதும் கனாட் பிளேஸில்
அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவன் கிழவனாகி விடுகிறான். கமலியும் வளர்ந்து
பெரிய பெண்ணாகி விடுகிறாள். ஸ்கூட்டர்க்காரர்களின் அடுத்த தலைமுறையும்
அவர்களை ஏற்றிச் செல்ல மறுத்துவிடுகிறது.
" அப்பா, இதோ பஸ் காலியா வரது.போயிடலாம்."
வாசு
திரும்பிப்பார்த்தான், பஸ் காலியாகத்தான் இருந்தது. ஆனால் லோதி காலனி
செல்லும் பஸ் அல்ல; அது மதராஸ் ஹோட்டலுடன் நின்றுவிடும். அதனால்தான்
கூட்டமே இல்லை.
" இந்தப் பஸ் லோதி காலனி போகாது" என்றான் வாசு.
"ஏன் எல்லாப் பஸ்ஸையும் லோதி காலனிக்கு விடமாட் டேங்கறா?"
இந்தக்
கேள்விக்கு எப்படிப் பதில் சொல்லுவது? லோதி காலனி ரோம் அல்ல, எல்லா
சாலைகளும் அங்கே செல்ல. அரசாங்கம் பஸ் போக்குவரத்து நடத்துவதன் நோக்கம்
என்ன என்று கமலிக்கு விளங்க வைக்க முடியுமாவென ஒரு கணம் யோசித்தான்.
சமூகத்தைப் பற்றிக் கவலைப்படும் சர்க்காருக்குத் தான் தனி மனிதனைப்பற்றி
அக்கறை இல்லை. தனி மனிதன் தன் உரிமைகளைத் தியாகம் செய்யத் தயாராக
இருந்தால்தான் சமூகம் என்ற கருத்துப் பிறக்கிறது. இது கமலிக்குப் புரியுமா?
அவளுக்கு என்ன, இது யாருக்குத்தான் புரிகிறது?
தனிமனிதன் சமூகத்துக்குள் புகுந்துகொள்வதே, சமூகம் என்ற மானசீகத்தைத்
தனக்குச் சௌகரியமாகப் பயன்படுத்திக் கொள்ளத்தான் என்று தோன்றுகிறது. இதில்
வெற்றியடையும் சிலரே தங்களை அத்தகைய 'ஃப்ராங்கென்ஸ்டீன்' பூதமாக்கிக்கொண்டு
தனி மனிதனை மேய்ந்து வருகிறார்கள்.ஆனால் தன்னளவில் ஒரு
கட்டுப்பாட்டுக்குள் அடங்கி,சமூகத்தில் ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவதே இந்த
ஸ்தாபனத்தின் யந்திரக் குரூரத்தை ஓரளவு எதிர்த்துப் போராடு வது
போல்தானே?ஹரிச்சந்திரன் உண்மையைத் தவிர வேறு பேசுவதேயில்லை என்பதைக்
கண்டதும் விசுவாமித்திரனுக்கு எவ் வளவு எரிச்சல்,ஆத்திரம்!
"அப்பா,அதோ மூர்த்தி மாமா போறா!"
வாசு
திரும்பிப் பார்த்தான்.கமலியின் குரலைக் கேட்டதும், மூர்த்தி காரை
நிறுத்தினான்.அவன் வாசுவோடு படித்தவன்.கல் லூரியில் படிக்கும் போது அவன்
பெயர் கோபாலன்.பெயர் வைத்த தோஷமோ என்னவோ,வெண்ணெய்க்குப் பதிலாக அவன் மற்ற
மாணவர்களின் சைக்கிள்களையெல்லாம் திருடி விற்றுவிடுவது வழக்கம்.ஒரு நாள்
அகப்பட்டுக் கொண்டான்.அவனும் நாதன் என்ற இன்னொரு பையனுமாகச் சேர்ந்து
அந்தக் களவைச் செய்து வந்தார்கள்.இரண்டு பேருக்கும் ஆறுமாதச் சிறைத் தண்டனை
கிடைத்தது.நாதன் இப்போது சென்னையில் பிரபல கிரிமினல் வக்கீல்.கோபாலனோ
மூர்த்தியாகி, தில்லியில் ஒரு கம்பெனியில் லையாசான் ஆபீஸராக இருந்து
வருகிறான்.
இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர்
மூர்த்தியை உத்தியோக் பவனில் வாசு பார்த்தான்."கோபாலன்"என்று கூப்பிட்டதும்
ஓரளவு திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தான்.பிறகு வாசுவைத் தெரிந்த
மாதிரியே அவன் காட்டிக்கொள்ளவில்லை."என் பெயர் மூர்த்தி, கோபாலன் இல்லை;யூ
ஆர் மிஸ்டேக்கன்"என்றான்.வாசுவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.இப்படி உருவ
ஒற்றுமை சாத்தியமா? இரண்டு நாள் கழித்து வாசுவின் வீட்டைத் தேடி வந்து அவன்
சொன்ன பிறகுதான் விஷயம் புரிந்தது."என் பெயர் இனிமேமூர்த்தி தான்;கோபாலனை
மறந்துடு.இங்கே ஏதோ நல்லபடியா இருக் கேன்.கிட்டத்தட்ட காலேஜ்லே
செஞ்சிண்டிருந்த வேலை மாதிரி தான்.ஆனா அப்போ நாதன் பார்ட்னர்.இப்போ
கவர்ன்மென்ட்டு.... கார் வெச்சிண்டிருக்கேன்.சுந்தர் நகர்லே வீடு.ஆத்துக்கு
வாயேன் ஒரு நாள்."
உத்தியோக் பவனில் வேலை
பார்க்கும் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான் என்பது வாசுவுக்கு
அவன் வீட்டுக்குப் போன பிறகுதான் புரிந்தது.போவதை நிறுத்திவிட்டான்.ஆனால்
அவன் வாசுவின் வீட்டுக்கு ஐந்தாறு தடவை வந்து போயிருக்கிறான்.
"ஹல்லோ,வாசு!எங்கே போகணும்,வீட்டுக்கா?"
"ஆத்துக்குத்தான்"என்று சொல்லிக் கொண்டே வாசுவை நம் பிக்கையுடன் பார்த்தாள் கமலி.
ஸ்கூட்டர்
கிடைக்கவில்லையே, இவனுடன் போய்விடலாமா என்று ஒரு கணம் சிந்தித்தான் வாசு.
கூடாது: தான் அவனுக்கு ஒரளவு கடமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு தனக்கு
ஏற்படக் கூடாது. இந்த உணர்வே சால்ஜாப்பாக, அவனிடமிருந்து வேறு பல
சௌகரியங்கள் எதிர்பார்க்கக்கூடிய இச்சை ஏற்படக்கூடும். தனக்கு அப்படி
ஏற்படவேண்டும் என்றுதான் மூர்த்தி எதிர்பார்க்கிறான். ஓருவருடன் ஒருவர்
இணைந்து வாழ்வதுதான் சமுகம் என்ற கருத்து, எப்படி ஒருவரையொருவர்
பயன்படுத்திக் கொண்டு சமுகம் தரும் வாய்ப்புக்களை யெல்லாம் தங்களுக்கு
உரிமையாக்கிக் கொள்வது என்று ஆகிவிட்டது! -மூர்த்தியுடன் போனால் தானும்
இந்தக் கருத்துக்கு உடன்பட்டது போலாகும். உடனடியான சௌகரியத்துக்காகக்
கொள்கையைத் தியாகம் செய்யலாம?- கூடவே கூடாது.
"நான் வல்லே, நீ போ" என்றான் வாசு.
"லோதி காலனிப் பக்கந்தான் நான் போறேன், வா!"
"நீ எதிர்த் திசையிலே போறே, லோதி காலனிப் பக்கந்தான் போறேங்கிறேயே?"
"இங்கே ஒத்தரைப் பார்த்துட்டு, லோதி காலனி போகணும், வா."
"நீ சுந்தர் நகரிலே இருக்கே. லோதி காலனி வழியாச் சுத்திண்டு போகணுமா? - நீ போ. தாங்க் யூ!"
"என்ன
இவ்வளவு 'பிகு' பண்ணிக்கிறே? - உத்தியோக் பவனுக்கு வந்து உன்னைத் தொந்தரவு
பண்ணமாட்டேன், சரிதானே? ஐ நோ லாட்ஸ் ஆஃப் அதர் பீபிள் இன் உத்யோக் பவன்."
எதற்காக
இதைச் சொல்லுகிறான்? - 'நீ உன் ஆபிஸில் அற்ப மானவன். உன் உதவி தேவையில்லை'
என்பதற்காகவா? அல்லது, 'யார் யாருக்கோ நான் பணம் தரத் தயராக இருக்கும்போது
என்னுடன் படித்த நீ ஏன் இப்படி அப்பாவியாய் இருக்கிறாய்?' என்று
சுட்டிக்காட்டவா? பணத்தினால் எதைத்தான் சாதிக்க முடியாது? - இதோ, இப்பொழுது
இவனுடைய அந்தரங்கத்தை ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம்
இருந்திருக்காது. டாக்ஸியில் போயிருக்கிலாம். ஏன், சொந்தக் காரே வைத்திருக்
கலாம்.
"என்ன யோஜிக்கிறே? கம் ஆன், ஏறு."
"நோ... ப்ளீஸ்..." கமலியின் கையை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்து சென்றான் வாசு.
கமலி கோபத்தில் வாசுவின் கைகளை உதறினாள். "எனக்கு நடக்கத் தெரியும்."
வாசு அவள் கோபத்தைப் புரிந்து கொண்டான்.ஒன்றும் சொல்லவில்லை.
'ஸிந்தியா
ஹவுஸ்'எதிரே இரண்டு ஸ்கூட்டர்கள் நின்று கொண்டிருந்தன.ட்ரைவர்களைக்
காணவில்லை.ஒரு ஸ்கூட்டரின் அருகே போய் நின்று சுற்று முற்றும் பார்த்தான்
வாசு.அப்பொழுது கமலி 'ஹார்ன்' அடித்தாள்.
"நோ.அப்படியெல்லாம் அடிக்கக்கூடாது."
எங்கிருந்தோ ஒரு டிரைவர் அப்பொழுது அங்கே திடீரென்று தோன்றினான்."எங்கே போக வேண்டும்?"என்றான்.
"லோதி காலணி."
"திரும்பி வர வேண்டுமா?"
"இல்லை."
டிரைவர் பதில் கூறாமல் பீடியைப் பற்றவைத்துக்கொண்டான்.
"என்ன ஸ்கூட்டர் வருமா? வராதா?"
"என் நம்பர் இப்பொழுது இல்லை.அந்த ஸ்கூட்டர்காரனைக் கேளுங்கள்."
"அந்த ஸ்கூட்டர்காரன் எங்கே?"
"தெரியாது."
இதற்குள் ஐந்தாறு பேர்கள் ஸ்கூட்டருக்காக அங்கு வந்து விட்டார்கள்.எல்லாருக்கும் ஒரே பதில்தான்.
அந்த ஸ்கூட்டர்காரன் கால்மணி கழித்து வந்தான். வாசு அவனிடம் ஓடினான்."லோதி காலனி போக வேண்டும்." என்றான்.
அப்பொழுது ஓர் அழகானப் பெண்.கண்களால் சிரித்துக் கொண்டே கேட்டாள்."காக்கா நகர் போகவேண்டும்.
ஸ்கூட்டர்காரன்
அந்தப் பெண்ணை ஏறச்சொன்னதும் வாசு கூறினான்:"நான் இங்கே கால்மணி
நேரமாகக் காத்துக்கொண் டிருக்கேன்.இந்த ஸ்கூட்டர்காரரைக்
கேளுங்கள்...."
அந்த ஸ்கூட்டர்காரன் தன்னைச்
சாட்சிக்கு அழைத்ததும் வேறு பக்கம் திரும்பிக்கொண்டு விட்டான்.வாசு
விடவில்லை. "யார் முதலில் வந்தார்கள்?"என்று அவனைக் கேட்டான்.
"யார் வந்தால் என்ன?அதோ அவள்* கிளம்பிப் போய்விட் டான்*."என்று சிரித்துக் கொண்டே சொன்னான்,அந்த ஸ்கூட்டர்க் காரன்.
அந்தப்
பெண் 'டாடா,பைபை'சொல்லாத குறை! ஸ்கூட்டர் போய்விட்டது.அவன் உடம்பு
கோபத்தால் ஆடியது. அங்கிருந்த இன்னொரு ஸ்கூட்டரையும்,டாக்சி
ஸ்டாண்டிலிருந்த டாக்சிகளையும்,தெருவில் போய்க்கொண்டிருந்த
கார்களையும், பஸ்களையும் - எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிவிட
வேண்டுமென்ற வெறி வந்தது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குப் போவதற்கு
அவன் பத்து வருஷத்துக்கு முன்னால் பஸ்ஸையோ, ஸ்கூட்டரையோ அல்லது டாக்சியையோ
எதிர்ப்பார்த்துகொண்டா இருந்தான்? - தன்னால் இப்பொழுது கமலியைத்
தூக்கிக்கொண்டு லோதி காலனிக்கு நடந்துபோக முடியாதா?
கமலி
தூக்கக்கூடாது என்று முரண்டு பிடிக்கலாம். அவளைச் சமாதானப்படுத்தித்
தூக்கிக்கொண்டு போகலாம் என்றாலும், அவனுக்குப் பைத்தியக்காரன் என்ற
பட்டந்தான் கிடைக்கும். சிக்கலாகிவிட்ட சமூகத்தில் ஒருவன், 'சமுகம் என்றால்
தன்னைத் தவிர மற்றவர்கள்' என்ற பிரக்ஞையோடு அவர்கள் அபிப்பிராயத்துக்கு
இசைந்து வாழவேண்டியிருக்கிறது. ஆனால் இதை எதிர்த்துப் போராட வேண்டும்.
"கமலி வா, நடந்தே போயிடலாம்" என்றான் வாசு.
"நடந்தேவா?" என்று அவள் திகைத்தாள்.
"நடக்க முடியலேன்னா சொல்லு, தூக்கிண்டு போறேன்" என்றான் வாசு.
வரிசை வரிசையாகக் கார்களும், டாக்ஸிகளும் விரைந்துகொண்டிருந்தன.
வாசுவும் கமலியும் இன்னும் வெகுதூரம் போகவேண்டும்.
--------------------------------
புதிய தமிழ்ச் சிறுகதைகள் ,தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்
நேஷனல் புக் டிரஸ்ட் ,இந்தியா. புது டில்லி. ,1984