ஒரு பார்வை.
முன்னுரை
உலகிற்கே நாகரீகம் கற்றுத்தந்த ஓர் உன்னத நாகரீகத்திற்குச் சொந்தக்காரன் தமிழன். ஈராயிரம் ஆண்டுகளாய் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியும் நாகரீக வரலாறும் கொண்டது தமிழினம். மக்களின் நாகரீகம் பண்பாடு பற்றிய சங்க இலக்கியப் பாடற் செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால் மிகச் சிறந்த அரசியல், பொருளாதார நாகரீகம் கொண்டவன் தமிழன் என்பது தெற்றெனப் புலப்படும்.
“யாதும் ஊரே யாவரும் கேளீர்’’ என்ற உன்னத தத்துவத்தை உலகுக்கு எடுத்தியம்பியதும் தமிழினம்தான்,
‘’சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’’,
என்ற மகாகவி பாரதியாரின் கவிதை வரிகள் அயல்நாடு சென்று அழகு கலைகளைத் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.
மகாகவியின் கூக்குரலுக்கு முன்பே சங்க காலம் முதற் கொண்டே தமிழனின் வெளிநாட்டு உறவுகள், பயணங்கள் குறித்தச் செய்திகள் சங்க காலப் பாடல்கள் வாயிலாக நமக்குத் தெரியவருகிறது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழரிடம் நடைபெற்ற வெளிநாட்டுக் குடியேற்றங்களையும் அவற்றின் விளைவுகளையும் இனி வரும் பகுதிகளில் விரிவாகக் காண்போம்.
புலம்பெயர்வுஅன்றிலிருந்து இன்றுவரை உலக மாந்தரிடையே புலம் பெயர்தல் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு தமிழினமும் விதிவிலக்கல்ல. போர் நடத்தவும், பொருள் தேடவும், வணிகத் தொடர்பாகவும் தமிழர்கள் கடல் கடந்து சென்றதும் தமிழ் இலக்கியங்களில் செய்திகளாத் தொகுக்கப்பட்டுள்ளன.
‘’கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி’’ என்ற பெயரால் கடலில் இறந்த செய்தியும்,
‘’கடல் பிறக் கோட்டியவன்’’ என்ற சிறப்பால் கடலுள் சென்று வென்ற செய்தியும் குறிக்கப்பட்டுள்ளன.
‘’திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’’ என்பதும்,
‘’ முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை’’ என்பது போன்றவையும் தமிழன் கடல் கடந்து சென்ற செய்திகளை நமக்குக் குறிக்கின்றன.
கப்பற்படை, நாவாய் ஓட்டம், நெய்தல் வாழ்க்கை இவையெல்லாம் தமிழரின் கடல் வெல்லும் ஆற்றலைக் காட்டுகின்றன.
‘’அலையோட போன மச்சான்
அலையை மட்டும் அனுப்பி வைச்சான்’’
என்ற நாட்டுப்புறப் பாடல், ஒரு நெய்தல் நிலத் தலைவியின் துயரத்தை இரண்டே அடிகளில் கூறிவிடுகிறது. இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் சோழ நாட்டிலிருந்து சேர நாட்டிற்குப் புலம் பெயர்ந்து செல்வதைக் காணலாம்.
தென்கிழக்காசிய நாடுகளையெல்லாம் தன் குடையின் கீழ் வைத்திருந்த தமிழினம், காலத்தின் வேகத்தில் அனைத்தையும் தொலைத்துவிட்டு, வாழ்வு தேடி கூலிகளாகப் பிற நாடுகளுக்குச் செல்ல வேண்டிய தாழ்நிலை எற்பட்டது. தமிழர்கள், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அடிமைத் தொழிலாளியாக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரிஷியஸ், பீஜி, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு கடல் கடந்து சென்று குடியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
‘’கரும்புத் தோட்டத்திலே...
வீட்டை நினைப்பாரோ நாட்டை நினைப்பாரோ
விம்மி விம்மி அழும் குரலைக் கேட்டிருப்பாய் காற்றே..’’
என பீஜியில் அடிமைத் தொழிலாளியாக வேலை செய்தோரின் துயரைப் பாடினார் பாரதி.
"வினைநவில் யானை விறற் போர் தொண்டையர்! மழைமருள் பல்தோல் மாவண் சோழர்! சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர்! ஒளிறு வாட்தானைக் கொற்றச் செழியர்! இவர்களின் கொடிவழில் வந்தோரெல்லாம் இப்பொழுது எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
- மலேயாவில் ரப்பர் வடிக்கிறார்கள்
- இலங்கையில் தேயிலை கிள்ளுகிறார்கள்
- பர்மாவில் மூட்டைத் தூக்குகிறார்கள்
- கயானாவில் கரும்பு வெட்டுகிறார்கள்
- பாரத கண்டம் எங்கும் பரவி பிச்சை எடுக்கிறார்கள்
என தனது புயலில் ஒரு தோணி நாவலில் பதிவு செய்துள்ளார் திரு ப.சிங்காரம். புயலில் ஒரு தோணி, கடலுக்கு அப்பால் ஆகிய இரண்டு நாவல்களும் தென்கிழக்காசியாவிற்குப் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியலின் பின்னனியில் படைக்கப்பட்ட படைப்புகளாகும்.
எழுத்தாளர் அகிலனும் தனது, ‘’பால்மரக் காட்டினிலே’’ என்ற நூலில், மலேசிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் படும் துன்பங்களையும், அவலங்களையும், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் பதிவு செய்துள்ளார்.
இலங்கையில் அரசியல் நெருக்கடியின் காரணமாக அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக உலகமெங்கும் உள்ள நாடுகளில் குடிபுக வேண்டியதாயிற்று. யாழ்ப்பாணப் பகுதி தமிழர்களே பெரும்பாலும் வெளிநாடுகளில் குடியேறினர். இவர்கள் இலண்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய, பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், நார்வே என பல் வேறு நாடுகளில் புனர் வாழ்வு மேற்கொண்டிருக்கின்றனர்.
காலங்களின் வகையறை
தமிழர்களின் வரலாற்றில் காலந்தோறும் நடைபெற்ற வெளிநாட்டு உறவுகளையும் குடியேற்றங்களையும் நான்கு கட்டங்களாக வகைப்படுத்தலாம்.
1. சங்க காலம்
2. பல்லவர், பிற்காலச் சோழர் காலம்
3. ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சியின் காலம்
4. இன்றையக் காலக்கட்டம்
சங்க காலம்
எகிப்தில் தாமிழி எழுத்திலான வாணிப ஒப்பந்தப் பட்டயம் தமிழ் வணிகனுக்கும் யவன வணிகனுக்குமிடையில் செய்த வாணிப ஒப்பந்தமாகும் . கிறிஸ்துவுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்துக்கும் மேலைநாட்டவர்களுக்கும் வாணிபத் தொடர்பிருந்ததை பிற ஆதாரங்கள் காட்டுவதை இப்பட்டயம் மேலும் உறுதி செய்கிறது. பாபிலோனியாவுடன் தமிழர் நிகழ்த்திய வணிகத்திற்குச் சான்றாக இது அமைந்துள்ளது. அங்கேயே தமிழர்கள் குடியேறியிருந்தனர் என டாக்டர் அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் தனது தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலில் குறிக்கின்றார்.
பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலையில், கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
‘கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்..’
பூம்புகார் நகரில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலையில் என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் பாடுகிறார். இவ்வரிகளில் வருகின்ற காழகம் என்ற வார்த்தை மலாயாவில் உள்ள காடாரத்தைக் குறிப்பதாகும். முற்காலச் சோழ அரசர்களில் ஒருவனான கரிகாற் பெருவளத்தான் சோழன் ஆட்சியில் தென்கிழக்காசியாவரை சோழர்களின் வணிகப் பரப்பு விரிந்துள்ளதைக் காணலாம்.
தென்னிந்தியப் பண்டைத் தமிழர்கள் வீரம் மற்றும் அறிவு நிலைகளில் புதியன காணும் ஆர்வம் உடையவர்கள். புதிய இடங்களைக் காணுத் துடித்த அவர்களின் ஆர்வ நோக்கத்தில், பிற நாடுகளைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் உதிக்கவில்லை. மாறாக புதிய வாணிக நிலையங்களைக் காண்பதே உயரிய நோக்காக இருந்தது என புலவர் கா. கோவிந்தன் தனது தமிழர் தோற்றமும் பரவலும் என்ற நூலில் குறிப்பிடுகின்றார். தமிழர்களின் வாணிகப் பொருள்களுக்கு, அன்று வரை தெரிந்திருந்த உலகில் பெரிய தேவை இருந்தது. அவை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. மிக முக்கியமான நகரங்களில் தமிழர்கள் நிலைத்த குடியினராகி, அங்கு தம் மொழியையும் பண்பாடுகளையும் புகுத்தினர் எனவும் புலவர் கா. கோவிந்தன் விவரிக்கின்றார்.
பல்லவர், பிற்காலச்சோழர் காலம்
தென்கிழக்காசியாவின் பல்வேறு பாகங்களில் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 11 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் மன்னர்களின் ஆட்சி நிலவியுள்ளமை குறித்து மலேசிய தமிழர் என்ற நூலில் பின்வரும் குறிப்புகள் காணப்படுகின்றன.
‘’………இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கெடா, மர்பஸ் நதி, பூஜாங் நதி, பேரா நதி, பெர்ணம் நதி, முவார் நதி ஆகியவற்றின் முகத்துவாரக் குடியிருப்புகளில் தமிழர் ஆட்சி நடைபெற்றதாக டான்ஸ்ரீ உபைதுல்லா என்ற தமிழ்ப் பெரியார் எழுதியிருக்கிறார் . 9ஆம் நூற்றாண்டிலிருந்து 11ஆம் நூற்றாண்டு வரையிலும் சோழ மன்னர்கள் மலாயாவின் பல பகுதிகளை ஆண்டார்கள். அதில் ஒரு பகுதி கடாரம் என அப்பொழுது அழைக்கப்பட்டு இன்றைய மலேசியாவில் கெடா என்ற மாநிலமாக இருக்கிறது. மேலும் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் நிகோபார், அந்தமான், சாவா, இந்தோனேசியா, வட மலேயா போன்றபகுதிகளை தமது ஆட்சிக்குக் கொண்டு வந்தனர்.
இவ்வாறே பல்லவ மன்னர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே ஈப்போ, சுங்கைசிப்புட் பகுதிகளில் வாழ்ந்ததற்கான சான்றுகள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன. பல்லவர்களுடைய கப்பல்கள் தென்கிழக்காசிய நாடுகளுக்கு கடல் மல்லையில் இருந்து சென்று வந்தன என வால்டர் எலிபயட் குறிப்பிடுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் பேரா நதி சங்கமத்திற்கு அருகில் கங்காநகரினை (இன்றைய கோலாகங்சார் – பேரா மாநில அரச நகர்) கங்க பல்லவன் என்ற அரசன் ஆட்சி புரிந்ததாக வின்ஸ்டெட் எனும் அறிஞர் தெரிவிக்கின்றார். (H. Winstedt, A Cultural History of Malaysia, P.P. 48-50) .
காலனித்துவ ஆட்சிக் காலம்சோழப்பேரரசின் காலத்திலிருந்து எட்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் (18 ஆம் நூற்றாண்டின் பின்னர்) உலகின் மேற்கு மூலையிலுள்ள கரிபியன் தீவுகள் முதல் கிழக்கு மூலையிலுள்ள பிஜி தீவு வரை உள்ள பிரெஞ்சு, ஆங்கில ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளிலும் வாழ்வைத் தேடியும், வலுக்கட்டாயமாகவும் குடியேறினர் அல்லது குடியேற்றப்பட்டனர். சோழப் பேரரசு காலத்தில் ஆளும் இனமாகக் குடியேறிய தமிழன் ஐரோப்பியர் காலத்தில் கூலி தொழிலாளியாகப் புலம்பெயர்ந்து வாழும் அளவுக்கு தமிழனின் வரலாறு கறுப்புப் பக்கங்களால் தன்னை நிறைத்துக் கொண்டது.
சுயதேவை பொருளாரத்தை மிக எளிமையான கருவிகளைக் கொண்டே உற்பத்திச் செயலில் ஈடுபட்டிருந்தது தமிழர்களின் கிராமங்கள் சுயேச்சையாக இயங்கிக்கொண்டிருந்தன. நீர்ப்பாசனம் அரசின் நடவடிக்கையாக இருந்ததால் ஒவ்வொரு கிராமமும் தமது பொருளுற்பத்திக்கு அரசைச் சார்ந்தே இருந்தன. இவ்விதத்தில் அரசு சமூக வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. இதனை காலனித்துவ அரசின் வருகை உடைத்தெறிந்ததால் விவசாயம் சீர்குலைக்கப்பட்டு விவசாயிகள் நடுத்தெருவிற்கு வர பிரிட்டன் காரணமாக இருந்தது .
இக்காலக்கட்ட புலம்பெயர்வுக்கு வித்திட்ட முக்கியக் காரணிகள் சிலவற்றை அடுத்துக் காண்போம்.
1. தென்னிந்திய தமிழ் கிராம மக்கள் வேலையின்மை
2. சாதிய அடக்குமுறை
3. நிலப்பிரபுத்துவ பொருளாதாரச் சுரண்டால்
4. தமிழர்களின் வறுமை
5. ஐரோப்பியத் தொழில் புரட்சி
6. பிரிட்டனின் காலனித்துவ ஆதிக்கம்
7. பிரிட்டனின் காலனித்துவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்ட பயிர்ச் செய்கைக்கு தேவைப்பட்ட தொழிலாளர் வர்க்கம்.
8. பிரிட்டனின் ஆட்சிக்குட்பட்ட நாடுகளுக்கு இந்நியக் கைதிகளை நாடு கடத்துதல் அல்லது வேலைக்குக் கொண்டு செல்லுதல்.
தற்காலப் புலம்பெயர்வு
வணிக நோக்கோடும், போர் நோக்கோடும், அடிமைத் தொழில் நோக்கோடும் காலத்தின் தேவைக்கேற்ப உலகநாடுகள் பலவற்றில் குடியேறியத் தமிழினம், இன்றையத் தேவைக்கேற்ப கல்விக்காகவும், தொழிலுக்காகவும், நிபுணத்துவ வல்லுனர்களாகவும், தொலைத்தொடர்பு வித்தகர்களாகவும், கல்விமான்களாகவும், அறிஞர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் தன்னை மேம்படுத்திக் கொண்டு, புலம் பெயர்ந்த நாடுகளில் தலை நிமிர்ந்து வாழ்வதைக் கண்கூடாகக் காண முடிகிறது.
இலங்கையின் அரசியல் காரணங்களினால் 1960 களில் இருந்தே ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு ஆரம்பமாகிறது எனக் குறிக்கின்றார் சு. குணேஸ்வரன். இன்றையக் கணிப்புப்படி ஏறத்தாள ஆறு லட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்வதாகக் கணிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், நோர்வே, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, வட அமெரிக்கா, கனடா மற்றும் அஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறியுள்ளனர்.
நிபுணத்துவ திறனாளர்களாகத் தமிழர்கள் இன்றையக் காலக்கட்டத்தில் உலகம் முழுவதுமாய் வியாபித்திருப்பதும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
இனி வரும் பகுதிகளில் தமிழர்களின் வரலாற்றில் காலந்தோறும் நடைபெற்ற வெளிநாட்டுக் குடியேற்றங்களால் விளைந்த விளைவுகளைக் காண்போம்.
மலேசியா, சிங்கப்பூர்
மலேசியாவில் மலைகள் நிறைந்திருந்தமையால் அக்காலத் தமிழர்கள் மலை நாடு எனப் பெயரிட்டனர். காலப் போக்கில் மலை நாடு என்னும் பதம் திரிந்து மலாயா என வழங்கலாயிற்று என்று சரித்திரச் சான்று கூறுகின்றது. இதனின்றே மலேசியா மலர்ந்துள்ளது. (தமிழ்த் தொண்டன் அ. கந்தன், மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும். பக். 10) . இதன் மூலம் மலாயாவிற்கு பெயர்ச்சூட்டி அழகு பார்த்தது தமிழினம் என அறியமுடிகிறது.
மலேசியாவிலே நிலையாகக் குடியேறி வாழத் தொடங்கிய முதல் தமிழர்கள், தமிழ் முஸ்லீம்களும், மலாக்கா செட்டியார்களும் ஆவார்கள் எனக் கூறலாம் என தனது அயல்நாடுகளில் தமிழர்கள் என்ற நூலில் முனைவர் எஸ். நாகராஜன் குறிப்பிடுகின்றார்.
கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் போதும் மலாக்கா அரசரோடு தமிழக வணிகர்களுக்குத் தொடர்ந்து தொடர்பு இருந்தது. மலாக்காவில் தமிழர்கள் குடியேற்றங்கள் இருந்தன. இவ்வாறு குடியேறிய தமிழர்கள் உள்ளூர் மலாய்க்காரர்களுடன் நெருங்கிப் பழகி, திருமண உறவு கொண்டனர். உள்ளூர் பழக்க வழக்கங்களைத் தழுவினர். முன்பே பல்லவர், சோழப்பேரரசு காலங்களில் தமிழர்களின் மொழி, பண்பாட்டு மலாய்க்காரர்களின் வாழ்க்கை நெறிமுறைகளினால் உள்வாங்கப்பட்டு பின்பற்றப்பட்டு வந்ததால், உள்ளூர் மலாய் மரபு வழிமுறைகளில் தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகள் கலந்திருந்தன. மலேயாவின் வரலாற்றை உற்று நோக்கையில், தமிழ் வழி தோன்றிய இந்து அரசர்களே பிற்காலத்தில் இஸ்லாம் மதத்தைத் தழுவினர் என்ற உண்மை நமக்குப் புலப்படும். மலாக்காவைத் தோற்றுவித்தவன் பரமேஸ்வரன் என்ற இந்து அரசன் பின் இஸ்லாம் மதத்தைத் தழுவினான்.
காலத்தால் முந்திய தமிழ் எழுத்துக் கடிதம் ஒன்றின் படியொன்று உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பொருட்காட்சியில் வைக்கப்பட்டுருந்தது. கி.பி 1527 ஆம் ஆண்டில் எழுதப் பெற்ற இக்கடிதம் மலாக்காவில் கண்டெடுக்கப்பட்டது. இதனைக் கொண்டு நாம் ஆராய்வோமானால், வெகு காலத்திற்கு முன்பே மலாயா மண்ணில் தமிழ்மொழி நடைமுறையில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
மலாய் நவீன இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் முன்க்ஷி அப்துல்லா (1796-1854) அவர்கள் தனது சுயசரிதையில் தமிழ்மொழியைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
‘ தமிழ் மொழி எல்லோராலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பொது வணிக மொழியாக இருந்ததால் என் தந்தை என்னைத் தமிழ் கற்கச் செய்தார். மலாக்காவில் உயர்நிலையில் இருந்த அனைவரும், வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் தமிழ் கற்றிருந்தனர்..’
இத்தகைய தேவையின் பின்னனியில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் பல தோற்றம் பெற்றன. அவ்வகையில் தோன்றிய முதல் தமிழ்ப்பள்ளி 1816 ஆம் ஆண்டில் பினாங்கில் கிறிஸ்துவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, இன்றளவும் தமிழ்ப்பள்ளிகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் வரை தமிழ்க்கல்வி பயிலும் வாய்ப்பும் இருக்கிறது.
இப்படி குடியேறிய தமிழர்கள் வயிற்றுப்பசியைத் தணித்துக்கொண்டதோடன்றித் தாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் வாழ்க்கைக்கு வேண்டிய பண்பாட்டு சமூக விழுமியங்களையும், கலைகளையும் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வகையில் வளர்ந்த கலைகளில் ஒன்று இலக்கியக்கலை. காலத்தின் தேவைக்கேற்ப வெவ்வேறு வடிவங்கொள்வது இலக்கியத்தின் இயல்பு. கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் போன்ற படைப்பிலங்கியங்களும் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் தோன்றியுள்ளன.
சிங்கை நேசன் என்னும் இதழின் ஆசிரியர் மகதூம் சாயது அவர்களின் ‘வினோத சம்பாஷணை’ (1888) என்ற பெயரில் எழுதிய சிறுகதைகள் சிங்கப்பூர் புனைகதைத் துறையில் தோன்றிய முதல் முயற்சி என நா. கோவிந்தசாமி பதிவு செய்துள்ளதை முனைவர் ஸ்ரீலட்சுமி தனது புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை என்ற நூலில் குறிப்பிடுகிறார். தமிழ் சிறுகதையில் முன்னோடி எனக் கருதப்பட்ட வ.வே.சு ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ (1917) என்னும் சிறுகதைக்கும் முன்பே சிங்கப்பூரில் சிறுகதை பற்றிய தெளிவான இலக்கியக் கோட்பாடுகளுடன் சிறுகதை உதயமாகியுள்ளதை நா.கோவிந்தசாமி தக்க ஆதாரங்களுடன் தம் கட்டுரையில் நிறுவியுள்ளார். அயல்நாட்டில் தமிழ் இலக்கியக் குழந்தைகளில் ஒன்றான சிறுதையின் முதல் கதை பிறந்திருக்கிறது என்பது பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். (குறிப்பு – 1965 க்கு முன்பான சிங்கப்பூரின் வரலாறு மலாயாவைச் சார்ந்திருந்ததால் சிங்கப்பூர் பற்றிய தகவல்கள் தனியாகக் குறிப்பிடப்படவில்லை)
சவால்களும் சமாளிப்பும்
அந்நிய நாட்டில் வாழும் தமிழர்களிடையே மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் நேரிடையாகவே ஏற்பட்டுள்ள சில தாக்கங்களை நேரிடையாக நம்மால் இலகுவாக அடையாளம் காண இயலும்.
1. தமிழில் பேச, எழுத ஆர்வமின்மை.
2. மேலைநாட்டின் மோகம் உள்ளதால் நடை, உடை, பழக்கவழக்கங்களில் மாற்றங்கள்.
3. தமிழர் பண்பாடு தொடர்பான அறிமுமின்மையால் வாழும் நாட்டின் கலாசாரத்தைச் சார்ந்து இருத்தல்.
4. உணவு வகைகளில் ‘விரைவு உணவுகளின்’ மோகம். ‘உணவே மருந்து மருந்தே உணவு’ தொலைந்து போனது.
5. தமிழ் மொழி வேலை வாய்ப்புக்கு உரியதாக இல்லை என்ற எண்ணத்தில் கல்வித்துறையில் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுப்பதில்லை.
ஆயினும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் இன்னமும் தங்கள் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை தமிழ்நாட்டினரைப் போலவே போற்றியும் பின்பற்றியும் வருகின்றனர்.
‘தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்’
என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.
‘தமிழ்தான் தமிழருக்கு முகவரி’
எனத் தெள்ளத் தெளிவாக உணர்ந்திருந்த சிங்கப்பூர், மலேசியா தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வாளர்களும், இந்நாடுகளில் தமிழுக்காகப் பல போராட்டங்களில் ஈடுபட்டு தமிழுக்கு ஒரு நிலையான இடம் கிடைப்பதில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர். இதில் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் அரும் பணி இன்றியமையாததாகும். தமிழ் முரசு பத்திரிக்கையின் மூலம் அன்றையத் தமிழர்களின் மனங்களில் தமிழினத்தின் எழுச்சியை ஏற்படுத்தினார். நீலகண்ட சாஸ்திரிகளால் பரிந்துரைக்கப்பட்ட சமஸ்கிருத மொழியை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி, தமிழருக்கு எழுச்சியூட்டி, தமிழ் மொழியை பல்கலைக்கழகங்களில் அலங்கரிக்க வைத்தார்.
சிங்கப்பூரில் தமிழ் மொழி அதிகாரத்துவ ஆட்சி மொழிகளில் ஒன்றாக விளங்குகிறது. ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளைப் போன்று தமிழுக்கும் உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகின் முதல் தர நாடுகளின் ஒன்றான சிங்கப்பூரில் தமிழ் மொழி அதிகாரத்துவ ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருப்பது உலகத் தமிழருக்கெல்லாம் பெருமை தரக்கூடிய ஒன்று. தாய் தமிழ்நாட்டில் சாதிக்க இயலாதவற்றையெல்லாம் அயல் நாட்டில் வாழும் தமிழர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ மறக்கவோ முடியாது.
9.7.1943 இல் சிங்கப்பூர் முனிசிபல் கிரவுன்டில் மாலை நான்கு மணியளவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதன் முதலில் பங்கு கொண்ட ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மலேயா, சிங்கப்பூர் சார்ந்த 60,000 மக்களுக்கு மேல் திரண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில்தான் ‘இந்திய தேசிய இராணுவம்’ (INA ) மற்றும் ‘இந்திய இடைக்கால அரசு’ ஆகியவை நேதாஜியால் பிரகடனப்படுத்தப்பட்டது . இச்செய்தியின் மூலம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் அயல் நாட்டுத் தமிழரின் பங்களிப்பையையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
பர்மா
பர்மாவில் கட்டப்பட்டுள்ள கோயில்கள் திராவிடக் கட்டடக் கலையை ஒத்திருப்பதாகக் கூறப்படுறது. பாகன் என்ற ஊரில் கிடைத்துள்ள கல்வெட்டு மூலம் , அங்கு நானாதேசி வணிகர் கட்டிவைத்த திருமால் கோயில் இருந்தது என்றும் அவ்வூரில் தமிழர்கள் குடியேறியிருந்தனர் என்றும் தெரியவருகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்த வணிக உறவினாலும், பல்லவர் காலம், பிற்காலச் சோழர் காலத்தினாலும் தமிழரகளின் குடிபெயர்ப்புகள் பர்மாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன. 1938 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பிரியும் வரை பர்மா தமிழர்களின் வாணிகப் பகுதியாக பெரும் பங்காற்றியது எனக் கூறப்படுகிறது.
பர்மாவின் அன்றைய தலைநகரான இரங்கூன் பெரிய நகரமாக வளர்ச்சியடைந்ததில் தமிழ்த் தொழிலாளிகளுக்கும், தமிழ் ஒப்பந்தக்காரர்களும் சிறப்பான பங்கு உண்டு என முனைவர் எஸ். நாகராஜன் குறிப்பிடுகிறார். மேலும் இன்றைய பர்மாவை உருவாக்கியதில் குறிப்பாக ஆங்கிலேய ஆட்சியின் போது, தமிழர்களுக்குச் சிறப்பான பங்கு உண்டு என அறுதியிட்டுக் கூறலாம் எனவும் குறிப்பிடுகிறார்.
சாவா
இரட்டைக்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் இந்த சாவா, ‘சாவகம்’ , ‘சாவகத்தீவு’ என்றப்பெயரில் கூறப்பட்டுள்ளது. தமிழர்கள் பழங்காலம் தொட்டே சாவா சென்று குடியேறியுள்ளனர். அகத்தியர் வழிபாடு இங்கும் காணப்படுதாகக் கூறப்படுகிறது. போராபத்தூர் கோயில் மன்றம் பௌத்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் பல்லவர், சோழர் ஆகியோரின் சிற்பக்கலை ஒத்திருப்பதாக வின்சண்ட் சுமித் கூறுகிறார் . அமெரிக்க அதிபர் பாராக் ஓபாமா, அதிபராகப் பதவியேற்றப் போது, இந்தோனிசியாவில் உள்ள அவரின் முன்னோர்கள் அனுமானை வழிபட்டு வந்ததாகக் கூறியுள்ளார். மேலும் இந்தோனிசியாவின் பாரம்பரியமான பாவைக்கூத்தில் (Wayang Kulit) இராமாயணக் கதாபாத்திரங்களே முக்கிய அம்சங்களாக விளங்கியுள்ளன. இன்றளவும் மலேசியாவின் கிழக்குக்கரை மாநிலமான கிளந்தானில் பாவைக்கூத்து இராமாயணக் கதாபாத்திரங்களால் படைக்கப்பட்டு வருகிறது.
தாய்லாந்து (சயாம் )
கி.பி. 6 முதல் 13 ஆம் நூற்றாண்டுகள் வரையுள்ள காலத்தைச் சேர்ந்த சிவன், விஷ்ணு, இந்திரன், பிரம்மா ஆகியோரின் சிலைகள் இங்கு கிடைத்துள்ளன. சயாம் மன்னர்களின் முடிசூட்டு விழாவில் ஒரு தமிழ்ப்பாட்டு பாடப்படுவதாகக் கூறப்படுகிறது. பாங்காக்கிலுள்ள கோயில்களில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இன்றும் பாடப்படுகிறது . கி.பி. 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு ஒன்று சயாமில் கிடைத்துள்ளது அங்கிருந்த தமிழ் வணிகக் குழுவைப் பற்றிய செய்திகள் இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன.
அயல்நாடுகளில் தமிழர்களின் செயல்பாடுகள்
சமய விழாக்கள்
புலம் பெயர்ந்தோர் தம் அடையாளத்தை அழிய விடாமல் பல பாதுகாப்பு முயற்சிகளை எடுத்துள்ளனர். இவர்கள் தம் மொழி, பண்பாடு, வாழ்வியல் அறம் இவற்றைத் தக்க வைத்துக் கொள்ள திருக்கோயில்கள் பல கட்டி, தமிழ்நாட்டைப் போலவே திருவிழாக்கள், வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். கோயில்களில் சமயச் சொற்பொழிவுகள், தமிழிசை நிகழ்ச்சிகள், நடனம், நாடகம் நடத்தி நம் கலை, மொழி, பண்பாடு, கலாச்சாரம், சமயம் போன்றவற்றை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தி அவற்றின் பெருமைகளை உணரச் செய்கின்றனர். மலேசியா, சிங்கப்பூரில் பொங்கல் விழா தமிழர் திருநாளாக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தீபாவளி, தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, ஆடித் திருவாழா, சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை தீபம் போன்ற விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
சடங்கு சம்பிரதாயங்கள்
அயல் நாட்டில் வாழும் தமிழர்களும் மனிதப் பிறப்பிலிருந்து இறப்பு வரை, தமிழ் நாட்டினரைப் போலவே அனைத்து சடங்கு சம்பிரதாயங்களும் முறையாகப் பின்பற்றி வருகின்றனர்.
இயக்கங்கள்
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும், இலக்கியச் சுவைக்காகவும் தமிழ் இயக்கங்கள், மன்றங்கள் பல அயல் நாட்டில் வாழும் தமிழர்களால் வாழும் நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் வளர்தமிழ் இயக்கம் பல்வேறு தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முழுவதும், ‘தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்’ என தமிழ் விழாவை வெற்றிகரமாகக் கொண்டாடி வருகின்றனர். கவிமாலை எனும் கவிதை இலக்கிய நிகழ்வும் ஒவ்வொரு மாதத்தின் கடைசி சனிக்கிழமை நிகழ்த்தப்படுகிறது. தமிழ்நாட்டிலிரிந்து தமிழறிஞர்களையும், பேச்சாளர்களையும் வரவழைத்து இலக்கிய நிகழ்ச்சிகளைப் படைத்து வருகின்றனர்.
மலேசியாவில் தமிழ் எழுத்தாளர் சங்கம், முத்தமிழ் சங்கம், பாரதிதாசன் குழு, கண்ணதாசன் குழு என பல அமைப்புகள் தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளைப் படைத்து வருகின்றன. மலாயாப் பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் சிறுகதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி, அவற்றை நூலாகவும் வெளியிட்டு வருகிறது. தேசிய நில நிதி கூட்டுறவு சங்கமும் ஆண்டு தோறும் சிறுகதைப் போட்டிகள் நடத்தி ஊக்குவித்து வருகின்றது. ‘எஸ்ட்ரோ’ நிறுவனமும் நாவல், கவிதைப் போட்டிகளை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது.
ஊடகங்கள்அயல் நாட்டு தமிழர்கள் ஊடகங்கள் வழியாகவும் தமது மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றைப் பேணி வருகின்றனர். 24 மணி நேரமும் ஒலிக்கும் வானொலி அலை வரிசைகளையும் அயல் நாடு வாழ் தமிழர்கள் நடத்துகின்றனர். சிங்கப்பூரில் ’96.8’, மலேசியாவில் ‘மின்னல் எப்.எம்’, ‘தி. எச். ஆர். ராகா’ எனவும் வானொலி ஒலிபரப்புகள் நடத்தப்படுகின்றன. சிங்கப்பூரில் வசந்தம் தொலைக்காட்சி அலைவரிசையும், மலேசியாவில் டிவி 2, டிவி 3 எனத் தொலைக்காட்சி அலைவரிசைகளும், மேலும் தனியார் தொலைக்காட்சி மூலமாக 24 மணி நேர தொலைக்காட்சி அலைவரிசைகளும் சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி, வண்ணத்திரை எனவும் இங்கு இயங்குகின்றன.
கலை, கலாச்சார இடங்கள்சிங்கப்பூரில் சிராங்கூன் சாலையில், ‘லிட்டில் இந்தியா’ என்ற இடமும், மலேசியாவில் கிள்ளான் எனும்இடத்தில், ‘லிட்டில் இந்தியா’ என்ற இடமும் நமது கலாச்சார, பண்பாட்டு இடங்களாக விளங்குகின்றன. இந்த இடங்களுக்குச் சென்றால், தமிழ் நாட்டில் வாழும் உணர்வே நமக்கு ஏற்படும். மேலும் நமது கலை, கலாச்சார நிகழ்வுகள் அதிகமாகவே நிகழ்த்தப்படுகின்றன.
அயல் நாட்டில் வாழும் தமிழர்கள் தங்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை விட்டுக் கொடுக்காமலும் தம் பாரம்பரிய உணவு வகைகளைத் தயாரிப்பதிலும் உண்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பரதநாட்டிய வகுப்புகளும், அரங்கேற்றங்களும் நிறையவே இந்நாடுகளில் நடக்கின்றன. பொது நிகழ்ச்சிகளில் நம் பாரம்பரிய உடையான சேலை, வேட்டி உடுத்துவதிலும் இவர்கள் ஆர்வம் காட்டி, உலகம்முழுக்க தமிழ்க் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பரப்பி வருகின்றனர்.
பண்பாடும் சமூகமும்
பண்பாடு என்பது ஒரு வாழும் முறை. உண்பது, உடுத்துவது, பேசுவது, நமது பெறுமதிகள், நாம் நடக்கும் முறை எண்ணும் விதம் என பல் வேறு விசயங்கள் அதனுள் அடங்கும். இவை அனைத்தும் காலத்தின் போக்கிற்கேற்பவும், நாம் வாழும் நாட்டின் பண்பாட்டிற்கேற்பவும் மாறும் தன்மை பெற்றவை.
பல இனங்கள் கூடி வாழும் சூழல். இந்நிலையில் பல இனப்பண்பாடுகளும் கலந்து விட்ட ஓர் உலகப்பண்பாடு தோற்றம் பெற்று வருகின்றது. இருப்பினும் ஒரு பண்பாட்டின் அனைத்துக் கூறுகளிலும் மாற்றம் நிகழ்ந்து விடுவதில்லை. இன்றைய உலகின் புதிய கண்டுபிடிப்புகள், நவீனமயமாக்கல், சகல தேவைகளும் தொழில் மயமாதல், நமர மயமாதல், சில குழுமங்கள் தமது மொழி, கலை என்பவற்றை இழந்து வேறு இனவடிவம் பெறல் அல்லது ஓரினமாதல் என்பன உலகின் மக்களை ஒன்றிணைத்து ஒருமித்துச் செயற்பட வைத்துள்ளது.
தம்மினத்தின் அடையாளத்தைச் சுட்டி நிற்கும் தமது மரபுவழிப் பண்பாட்டின் சமூகத்தை மேம்படுத்த வல்ல மற்றைய கூறுகளையும் எந்த இனம் இழக்காமல் இருக்கின்றதோ அந்த இனம் மற்றைய இனங்களால் மதிக்கப்படும். எந்த இனம் அவற்றை இழந்து விடுகின்றதோ அந்த இனம் தனது மதிப்பை இழந்து விடும் என்பது வரலாறு .
முன்னதையற்கு சிங்கப்பூர், மலேசியா வாழ் தமிழர்கள் நல்லதொரு எடுத்துக்காட்டு. பின்னையதற்கு எடுத்துக் காட்டு தென் ஆப்பிரிக்கா, கயானா, மொரிஸியஸ் போன்ற நாடுகளில் குடியேறிய தமிழர்கள்.
முடிவுரைஇவ்வாறாக தமிழர்கள் அக்காலத்திலேயே தமிழர் நாகரிகத்தின் தூதுவர்களாக இலங்கை, மலாயா, சுமத்திரா, சாவா, பர்மா, போர்னியோ, சியாம், கம்போடியா முதலிய தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று தமிழர்களின் நாகரிகத்தையும், கலையையும், அரசியல், சமுதாயம் மற்றும் மதம் பற்றிய சிந்தனைகளையும் , பழக்க வழக்கங்களையும், மொழியையும் பரப்பி வந்தனர். நெடுங்கடலில் கப்பல்கள் செலுத்துவதில் தமிழர்கள் பெற்றிருந்த திறமையே இத்தகையத் தொடர்புகளுக்கு நல்வாய்ப்பாய் அமைந்தது எனக் கூறப்படுகிறது. பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் ஆகிய அனைவருமே வலிமை வாய்ந்த கப்பற்படையை வைத்திருந்தனர். பிற்காலச் சோழர்களின் கப்பற்படை வங்காளக் கடலையே ஆட்சி புரிந்ததாகக் கூறப்படுகிறது . மேலும் அவர்களின் காலத்தில் வங்காள விரிகுடா, சோழர்களின் ஏரியாக மாறிவிட்டது. அதனால்தான் தமிழ் அரசுகளின் பாரம்பரியத்தில் இல்லாத வகையில் சோழர்களால் கடல் கடந்த ஒரு பேரரசை நிர்வகிக்க முடிந்தது. அதனால்தான் தமிழர்கள் அந்நாளில் ஏற்படுத்திய விளைவுகள் இன்றளவும் நம் கண் முன்னே காணும் காட்சிகளாய், சாட்சிகளாய் தென்கிழக்காசிய நாடுகளில் விரிந்தும் பரந்தும் கிடக்கின்றன.
கற்றுக் கொடுத்தது தமிழினம் - அதற்கு
கற்றுக் கொடுக்க நினைப்பது அறிவீனம்.
துணை நூல்கள்
1. தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும், டாக்டர் கே.கே. பிள்ளை, மறு பதிப்பு 2009, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
2. தமிழ்நாட்டு வரலாறு, அ. இராமசாமி, இரண்டாம் பதிப்பு 2010, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
3. தமிழர் நாகரிகமும் பண்பாடும், டாக்டர் அ. தட்சிணாமூர்த்தி, மறுபதிப்பு 2008, யாழ் வெளியீடு, சென்னை.
4. சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள், மலேசிய நண்பன் நாளிதழ் கட்டுரை - 12 . 09. 2011. கோலாலம்பூர். மலேசியா.
5. அயல்நாடுகளில் தமிழர்கள், முனைவர் எஸ். நாகராஜன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
6. தமிழர் தோற்றமும் பரவலும், புலவர் கா,கோவிந்தன், முதற்பதிப்பு 1991, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
7. மலேசிய தோட்டத் தொழிலாளர் வரலாறும் பிரச்சனைகளும், மு. வரதராசு, முதற்பதிப்பு 1990, தமிழ்ப் பண்பாட்டு, சமுதாய அமைப்புக் குழுவினர், சென்னை.
8. மலேசிய தமிழரின் சமகால வாழ்வியல் பரிமாணங்கள்-சில அவதாணிப்புகள், லெனின் மதாவாணம், முதற்பதிப்பு 2008, தமிழோசை பதிப்பகம், கோவை.
9. பண்பாடு-வேரும் விழுதும், சு.இராசரத்தினம், முதற்பதிப்பு 2007, விவேகா அச்சகம், கனடா.
10. புதுமைப்பித்தன் இலக்கியச் சர்ச்சை 1951-52, முனைவர் எம். எஸ். ஸ்ரீலட்சுமி, முதற்பதிப்பு 2006, தருமு பப்ளிகேஷன்ஸ், சிங்கப்பூர்.
11. கடல் கடந்த தமிழன், மலேயா சக்திமோகன், முதற்பதிப்பு 2001, ராணி செந்தாமரை பதிப்பகம், கோலாலம்பூர்.
12. தமிழ்ப் பள்ளி மெல்ல மடியவில்லை, திட்டமிட்டுக் கொல்லப்படுகின்றது ஆட்சியில் இருப்பவர்களால், காத்தையா, பக். 8, செம்பருத்தி இதழ், பிப்ரவரி 2007. கோலாலம்பூர்.
13. புலம்பெயர் இலக்கியம், சு. குணேஸ்வரன், இணையக் கட்டுரை, திண்ணை.
14. புயலில் ஒரு தோணி, கடலுக்கு அப்பால். ப.சிங்காரம். தமிழினி பதிப்பகம், சென்னை.