Search This Blog

Thursday, December 29, 2011

தமிழன் கண்ட நாடு


தமிழன் வாழ்க்கையைப் பார்க்கப் புகுமுன், ‘அவன் நாடு எத்தகையது? எதை அவன் நாடு என நினைத்தான்? என்பதைக் காண வேண்டும். தமிழனுக்கு ஒரு வேதம் தந்த திருவள்ளுவர், நாட்டைப் பற்றிக் கீழ் வருமாறு கூறுகிறார்:
“நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல
நாட வளந்தரு நாடு.” (குறள், 739)

இதன் கருத்தென்ன? முயற்சி செய்யாமல் பலன் தரக் கூடியதே நாடு என்பது மட்டும் அன்று; பெருமுயற்சி செய்து சிறு பயன் தருவதும் நாடு அன்று. வளம் என்பன இயற்கையாகக் கிடைக்கும் நலன்களாம். இதனை வேறு பாடல்களாலும் அறியலாம். மதுரைக் காஞ்சி என்றொரு நூல் உண்டு. மாங்குடி மருதனார் என்ற புலவர்பெருமான், பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுங்செழியனைப் பாடிய பாடலாகும் அது. அதில் பாண்டிய நாட்டைப் பற்றி அவர் கூறுவதாவது:
“மழைதொழில் உதவ, மாதிரங் கொழுக்க,
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,
நிலனும் மரனும் பயனெதிர்பு தந்த
நோயிகந்து நோக்குவிளங்க…” (மதுரைக் காஞ்சி, 10-13)
என்பது.

[உழவுத் தொழில் நன்கு நடைபெறுமாறு வேண்டுங்காலத்தில் மழை உதவவும், ஒரு முறை விதைத்தது ஆயிரமாக விளையவும், நிலமும் மரமும் தம்முள் போட்டி இட்டுக்கொண்டு மக்களுக்கு வேண்டிய பயனைத் தரவும், விளைந்த பயனை நன்கு அனுப்பவித்தலால் நாட்டு மக்கள் நன்கு வாழவும்]
இப்பகுதியிலிருந்து நாம் அறிய வேண்டிய செய்திகள் பல உண்டு. வளத்தைப் புலவர் எங்ஙனம் கூறுகிறார் என்பதைக் காணல் வேண்டும். ‘மழை உதவ’ என்று ஊறியவர். பிறகு ‘வித்தியது’ என்று கூறலினால், இயற்கையின் பயனாகிய மழையும், மனித முயற்சியாகிய விதைத்தலும் ஒன்று கூடலைக் கூறுகிறார். இவ்வரண்டனுள் ஒன்று குறையினும் பயனில்ல; நாடு நாடாய் இராது. அம்மட்டோ? இன்று அரசியலாரின் காட்டிலாக்கா செய்யும் வேலையை நாமறிவோம். ஆனால், அன்று தமிழர் காட்டை போற்றி வந்தனர் என்பதை, மரத்தின் செயலும் மேற்பாடலில் கூறப்படுதலால் அறியலாம். மனித முயற்சி நாட்டின் செம்மைக்கு இன்றியமையாதது.


நீர் வளம்
--------------------------------
இயற்கையினால் உண்டாகும் மழைநீரை மட்டும் நம்பித் தமிழன் வாழவில்லை. அங்ஙனம் வாழ்ந்திருப்பின் நாடு செழிப்புடன் இருந்திருக்க முடியாது. ஆகவே, அவன் ஆறுகள் பலவற்றைத் தனது முயற்சியால் உண்டாக்கினான். குளங்களும் ஏரிகளும் அவனது விடா முயற்சியின் அடையாளங்களாக இன்றும் உள்ளன. இருநூறு வருட ஆங்கில ஆட்சியாற்பெற்ற பயன், நீலில்லாத ஆறுகளும் காய்ந்துபோன குளங்களுமேயாம்! ஆனால், காவிரியும், வைகையும், தாமிரவருணியும் தமிழன் முயற்சியின் சிகரங்கள். காவிரியைப் பற்றிப் பட்டினப்பாலை,
“வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைஇய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்” (ப.பாலை, 5-8)

[மழை பெய்யாவிடினும் தான் தவறாமல் மலையிடத்துப் புறப்பட்டு நஐரப் பெருக்கிப் பொன் சேர்க்கும் காவிரி]
என்று கூறுகிறது. அது மழை வளங்குறையினும் தான் நீர் குன்றது பொன்னை வாரிக் கரையில் எற்றும் தன்மையுடைய ஆறு.
வையை ஆற்றைப் பெண்ணாக உருவகப்படுத்துகிறார், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார ஆசிரியர்:
“விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிர்அறற் கூந்தல்
உலகுபுரந் தூட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி” (சிலம்பு.13:166-170)
[குறுக்கும் நெடுக்கும் ஓடும் கயல் மீனாம் கண் களையும், மணம் பொருந்திய அறலாகிய கூந்தலையும், பொருந்தி உலகைக் காக்க பல பொருளையும் விளைவித்து ஊட்டுபவள் வையை என்ற பெண்]
இத்தகைய நீர் வளமுடைய நாடாய் இருப்பினும், தமிழ் மன்னர் சும்மா இருந்துவிடவில்லை, ஆறுகள் செல்லாவிடங்களில் குளங்கள் வெட்டினர் எனப் பட்டினப்பாலை கூறுகிறது. ‘குளந்தொட்டு வளம் பெருக்கி’ (ப.பா.284) என்பது காண்க. ‘நிலனெளி மருங்கில் நீநிலை பெருகத் தொட்டோர்’ (புறம் 28). என்ற அடியில், ‘நாட்டின் நீர் வளம் மிகும் படியாகக் குளந்தோண்டியவரே சிறப்புடையர்” என மேற்காட்டிய புறப்பாடல் கூறுகிறது. எனவே, இத்தகைய அருமைப்பாட்டோடு தமிழ் நாடு செழித்திருந்தது. இவ்வளவு வளம் பொருந்திய நாட்டில் வறுமை ஏற்படுவதே அரிது. ஒரு வேளை இயற்கையின் கோளாறுகளால் மழைகெட்டுப் பஞ்சம் வந்தால், அதற்கும் அரசரே காரணம் என மக்களும் அரசரும் நினைத்தார்கள். இக்காலத்தில் வாழும் நமக்கு ஒருவாறு இது வியப்பாகவும் இருக்கும். ஆனால், பழந்தமிழ் மன்னன் மழை வளம் முதலியன குறையாதிருப்பது தன் செய்கோல் நலத்தால் என்று நினைத்தான்.
“மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்;
பிழையுயிர் எய்தின் பெரும்பே ரச்சம்;
குடிபுரவு உண்டுங் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதகவு இல்.” (சிலம்பு. காட்சி 96-100)
[நாட்டில் மழை வளங்குறையினும், உயிர்களுக்கு வேறு எத்தகைய துன்பம் வரினும், செங்கோல் பிழையாமல் ஆட்சி செய்யும் மன்னர் குடியில் மகனாய்ப் பிறத்தல் பெருந்துன்பமே அல்லது, விரும்பத்தக்கது அன்று.]
இவ்வடிகள் அரசன் தன் வாழ்க்கையை எவ்வாறு நினைத்தான் என்பதை அறிவிக்கும். மன்னர்களாகப் பிறந்தது பிறர் பொருளைச் சுரண்டிச் சுக மடைவதற்காகவே என்று நினைக்கும் இந்நாளில், இவ்வடிகள் சிறிது மன அமைதியை அளிக்கின்றன. மேலே கூறிய இவை நீங்க ஏனைண துன்பங்களும் வாராமல் தமிழ் மன்னர் காத்து வந்தனர்.

வழிகளில் நிலை
--------------------------------------------------
நாகரிகம் மிகுந்துள்ள இந்நாளில் கொலையும் கொள்ளையும் எல்லையற்று நடைபெறுகின்றன. ஆனால், அந்நாளில் அவ்வாறில்லை என அறிகிறோம். போக்கு வரவு சாதனம் குறைந்திருந்த அப்பொழுது கூட மன்னர் ஆணை மூலை முடுக்குக்களிலும் நடைபெற்று வந்தது. அரசன் எங்கிருப்பினும் அவன் ஆணை எங்குஞ்சென்று உலகைக் காப்பதாக இன்றும் ஏட்டில் எழுதியிருக்கக் காண்கிறோம். அரசனைத் தம் வாழ்நாளில் கண்டிராத பலரும், அவன் ஆணை நன்கு நடைபெறுமாறு உதவி செய்கின்றனர். இக்கருத்தைப் பிற்காலத்து வந்த சிந்தாமணி ஆசிரியர் நன்கு எடுத்துக் கூறுகிறார்.
“உறங்கு மாயினும் மன்னவன் தன்னொளி,
கறங்கு தெண்திரை வையகம் காக்குமால்.” (சிந்.248)
‘அரசன் உறங்கிக் கொண்டிருப்பினும் அரசநீதி வழுவாது நடைபெறும்’ என்பதே இதன் பொருள். இது போலவே பழந்தமிழ் நாட்டில் ஆட்சி நிலவியதெனச் சங்க நூல்கள் முழங்குகின்றன.
தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன் ஆண்ட நாட்டைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படையில் பின் வருமாறு கூறப்பட்டுகிறது.
“அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வெளவுங் களவேர் வாழ்க்கைக்
கொடியோ ரின்றுஅவன் கடியுடை வியன்புலம்;
உருமு் உரறாது; அரவுந் தப்பா;
காட்டும் மாவும் உறுகண் செய்யா.” (பெ.பா.400-4)
[வழியிடைச் செல்வோர் வருந்தப் புடைத்து அவர் கைப்பொருளைத் திருடும் மக்கள் அவன் நாட்டில் இல்லை. மேலும், வனவிலங்குகளும் பாம்புகளுங்கூட அவன் நாட்டில் துன்பம் செய்தலில்லை.]
இம்மட்டோ? ஊர் காவல் செய்யும் பாதுகாப்பு படைஞர், நீண்ட வழிகளிலும் கவர்த்த வழிகளிலும் நின்று வியாபாரப் பொருள்களின் போக்குவரத்துக்குத் துன்பம் ஏற்படாவண்ணம் காவல் புரிக்னறனர். அவர்கள் எத்தகையவர்கள்? ஆசிரியர் அவர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார்:
“கடம்பமர் நெடுவேள் அன்ன மீளி
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கம்
வில்லுடை வைப்பின் வியன்காடு…” (பெ.பா.75-78)
[கடப்பம்பூமாலை அணிந்த முருகனைப் போன்ற எஃகுடலும், நீண்ட கைகளும் உடைய (போலீஸ்) வீரர்கள், சுங்கம் சவூலிக்கும் வழிகளிலும் நீண்ட பெருவழிகளிலும் நின்று காவல் புரிகின்றனர்.]
அவர்களுட்பலர் அரசனைக் கண்டிராவிடினும், அவன் கொற்றம் நன்கு நடைபெற உதவுகின்றனர். இத்தகைய மாட்சிமையுடைய நாட்டில் தமிழன் வாழ்நதான். ஆதலால், இவனது நாட்டில் ஒரு வேலி நிலம் ஆயிரங்கலம் விளைவதாயிருந்தது.

வாணிக எல்லை
--------------------------------------------
இது வரை கூறியவற்றைக்கொண்டு பழந்தமிழன் பயிர்த்தொழில் ஒன்றுமே கொண்டு வாழ்ந்தான் என்று நினைத்துவிடுதலாகாது. அந்நாளில் தமிழ்நாடு வாணிகத்தில் சிறந்த நாடுகளில், தலையாய நாடாயிருந்தது. தமிழரது வாணிகச் சிறப்பைக் குறிக்கத் தமிழ் நூல்களேயன்றி, ஏனைய நூல்களும் சான்று பகரும். பெரிபுளூஸ் (கி.பி.75) என்ற நூலும், கிரேக்க சரித்திரமும், வான்மீகி இராமாயணமும், வேண்டும் அளவு தமிழ் நாட்டின் வாணிகத்தைப் பேசுகின்றன. இன்றும் கொற்கை, காயல் பட்டினம் போன்ற கீழ்க் கடற்கரைப் பட்டினங்களிலும், முசிறி போன்ற மேலைக் கடற்கரைப் பட்டினங்களிலும் பழைய உரோமநாட்டுக் காசுகள் அகப்படுகின்றன. தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியான முக்கியப் பொருள்கள் – முத்து, பவளம், மிளகு, உணவுப் பொருள்கள், அரிசி, மயில் தோகை என்பவையாம். இன்றும் கிரேக்க மொழியில் காணப்படும் ‘ருஷ்’ (orydsa) என்ற சொல்லும் ‘துஹ்’ (taos) என்ற சொல்லும் முறையே அரிசியையும், தோகையையும் குறிக்கும் வடிவுமாறிய தமிழ்ச் சொற்களாம். கி.மு.55 ல் வாழ்ந்த உரோமாபுரிச் சர்க்கரவர்த்தியாரான மார்க்கஸ் அரேலியஸ் என்பார், “உரோமர்கள் தங்கள் ஆட்ம்பரவாழ்க்கையைத் திருத்தி செய்துகொள்வதற்காகத் தமிழ் நாட்டிலிருந்து முத்துக்களை வர வழைக்கிறார்கள், அதற்காக அவர்கள் அனுப்பும் பொன் எண்ணிலடங்காது,” எனக் சகூறியிருக்கிறார். சிறிது காலம் தமிழ் நாட்டிலிருந்து முத்து இறக்குமதி செய்யப்படக் கூடாதென்ற சட்டமும் உரோமாபுரியில் அமலில் இருந்து வந்தது. இம்மட்டோடு அவர்கள் ஆடம்பரவாழ்க்கை நிற்கவில்லை. உயிர்ப் பொருள்களாகிய கிளி, குரங்கு, மயில் முதலியவற்றையும் தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்தனர். முத்துக் குளிப்பதிலும் சிறந்த முத்துக்களைச் சேகரிப்பதிலும் பாண்டி நாட்டார் உலகப் புகழ் பெற்றவர். பிளினியின் வாக்கின்படி, மரக்காலால் அளந்து மூலைகளிற்குவிக்கும் படியான அவ்வளவு முத்துக்கள் பாண்டி மன்னனிடம் இருந்தன். எல்லா நாட்டினரோடும் தமிழர் வியாபாரஞ் செய்யினும், சிறப்பாக யவனர், கிரேக்கர் இவர்களுடன் அதிகத் தொடர்பு கொண்டு வியாபாரஞ் செய்தனர் என அறிகிறோம். காவிரிப்பூம்பட்டினம், மதுரை போன்ற தலை நகரங்களில் யவனர்களும் கிரேக்ககர்களும் குடும்பங்களோடு வந்து தங்கி வாழ்ந்தார்கள் என்பது அறிய முடிகிறது. தங்கி வாழ்ந்த அவர்கள் தங்கள் மொழியையே பேசி வந்தமையின், இப்பட்டினங்கள் பல மொழி வழங்கும் ஊர்களாயின.
“மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்” (ப.பா.215-217)
[பல மொழிகளும் வழங்கும் குற்றம் இல்லாத பட்டினம், வேற்று நாட்டார் கலந்து வாழும் காவிரிப்பூம்பட்டினம்]
என’ற பட்டினப்பாலை அடிகள் இக்கருத்தை வலி (1.பெரிபுளூஜ்: சோமசுந்தரதேசிகர் மொழி பெயர்ப்பு, பக்கம் 62) யுறுத்துகின்றன. யவனர்கள் சிற்பாகக் குதிரைகளையும் சாராயத்தையும் இங்கு இறக்குமதி செய்துவிட்டு, அவற்றிற்குப் பதிலாக அணிகலன்களையும் முத்துக்களையும் ஏற்றுமதி செய்து சென்றாகளென்பது மதுரைக் காஞ்சியால் தெரிகிறது.
“நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டளைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப” (ம.காஞ்சி.322-24)
[இடம் அகன்ற யவனம் முதலிய தேசங்களுக்கு இந்ாட்டுப் பெரிய அணிகலன்களைக் கொண்டு போவான் வேண்டி அங்கிருந்து கொணர்ந்த குதிரைகள்]

உள் நாட்டு வாணிபம்
-------------------------------------------------------------
பழந்தமிழன் வாணிகம் கப்பல் மூலம் நடை பெற்றது ஒரு புறமிருக்க, அவனது உள் நாட்டு வாணிகமும் மிக்க பெருமை வாய்நதிருந்தது. சங்கப் பாடல்களில் எங்கும் இதனைக் சகடம் என்று கூறப்படும் வண்டிகளில் பொருள்களை ஏற்றறிச் செல்லும் வணிகர், பல செளகரியங்களை முன்னிட்டுக் கூட்டமாகவே எங்கும் செல்வர். அந்ததகைய கூட்டத்திற்குச் சாத்து என்ற பெயரும் வழங்கி வந்துளது. பொருள்களை வைத்து வாணிபஞ்செய்யும் கடைத்தெருவிற்கு அங்காடி என்ற பெயர் காணப்படுகிறது. காவிரிப்பூம்பட்டினத்துக் கடை வீதியைப்பற்றிப் பட்டினப் பாலையிலும், மதுரைமாநகரின் கடைவீதிச் சிறப்பைப்பற்றி மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் என்ற நூல்களிலும் பரக்கக் காணலாம்.

இறக்குமதியும் ஏற்றுமதியும்
-----------------------------------------------------------
இவற்றுள் ஒன்றை விரிவாக ஆராய்வோம்: மதுரை மாநகரத்து நாளங்காடியைப் பற்றி மதுரைக் காஞ்சி ஆசிரியர் கூறும் வகையால் பழந்தமிழ் நாட்டின் செல்வ நிலை நம்மால் ஒருவாறு அறிய முடிகிறது. ஒரு நாட்டில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருள்களைப் பொறுத்தே, அந்நாட்டின் பொருளாதார நிலை இருக்கும். எந்த நாட்டில் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிக்கிறதோ, அந்நாடு வறுமையால் வாட நேரிடும். உதாரணமாக, நமது இந்தியாவையே எடுத்துக் கொள்வோம். நமக்குத் தேவையான பொருள்களை குண்டூசி முதல் கப்பல் வரை எல்லாவற்றையும், வேற்று நாட்டிலிருந்து வரவழைக்கிறோம்.
இங்கிலாந்தை எடுத்துக்கொள்வோம். உணவுப் பொருள்களை வேற்று நாடுகளிலிருந்து அந்ாடு வர வழைக்கிறது: ஆனால், அதற்குப் பதிலாக இயந்திரங்கள் முதலியவற்றை ஏற்றுமதி செய்கிறது. மேலும், எவ்விதமாகவேனும் தன் பொருள்களைப் பிறர் வாங்குவதற்காகப் பல வழிகளையும் அந்நாடு கையாளுகின்றது. அந்த நாட்டில் இயந்திரங்கள் உண்டு. ஆனால், வெற்று இயந்திரங்களை ஓடவிட்டால் அவை பொருள்களை உண்டாக்குமா? மூலப் பொருள்களாகிய பஞசும் எண்ணெய் விதைகளும் இருந்தால் தானனே துணியும் சோப்பும் உண்டாக்க முடியும்? இந்நிலையில் நாம் என்ன செய்கிறோம்? நமது நாட்டில் உண்டாகிற பஞ்சையும் எண்ணெய் விதைகளையும் அந்தநாட்டிற்கு ஏற்றுமதி (இந்நிலைமை 1947க்கு முன்னர் இருந்த நிலைமையாகும்) செய்கிறோம்: அவற்றையே மீண்டும் துணியாகவும், சோப்பாகவும் பெறுகிறோம். இவ்வாறு நடைபெற்று வருமானால், நமது பொருளாதார நிலை கீழே போகாமல் எங்ஙனம் இருக்க முடியும்?
இஃதொரு புறமிருக்க, போர் நடைபெற்ற சென்ற சில ஆண்டுகளில் எண்ணற்ற பொருளை ஏற்றுமதி செய்தோம். பணத்தால் நிறைந்த பிரிட்டனைக் கூட நமக்குக் கடன்கார நாடாக்கிவிட்டோம். ஆனால், இந்நிலை எங்ஙனம் முடிந்தது? நமது நாட்டிற்குத் தேவையான பொருள்களை நாமுபயோகிக்காமல் பிறருக்கு அனுப்பி வைத்ததனாலேயே இது முடிந்தது. அப்பொழுது நாம் அனுபவித்த வறுமை சொல்லிலடங்காது. இன்று நாமடைந்த பயனென்ன? நமது கடனை அத்தேசம் திருப்பித்தர இயலுகிறதா? சாதாரண மக்கள் ஒருவர்க்கொருவர் கடன்படுவதும் கொடுப்பதும் போலத் தேசங்கள் செய்ய முடியாது. சாமான்கள் மூலமாகவேல கடனைத் தீர்க்க இயலும். இன்று நமக்கு வேண்டும் பொருள்களை பிரிட்டன் அனுப்பத் தயாராய் இல்லை. காரணம், அப்பொருள்கள் அவர்களுக்கும் இப்பொழுது தேவையாயிருப்பதே. மேலும், அப்பொருள்களைத் தரக்கூடிய அமெரிக்காவைப் போன்ற பிற தேசங்களிலிருந்துகூட நாம் பெறவில்லை.
இவற்றிலிருந்து நாம் அறிவதென்ன? சாதாரணமாக ஒரு நாட்டின் பொருளாதார நிலைகேடு அடையாமல் இருக்கவேண்டுமேயானால், அந்நாட்டின் இறக்குமதி ஏற்றுமதி என்ற இவ்விரண்டும் தம்முள் ஒத்த அளவுடையனவாய் இருக்கவேண்டும். இன்றோல், தீங்கே விளையும், அமெரிக்காவைப் போன்ற தேசம் பணச் செல்வத்தோடு பொருட்செல்வத்தையும் பெற்றிருப்பதால், மேற் கூறிய இரண்டனுள் ஒன்று மிகினும் குறையினும் நாட்டின் செல்வ நிலை இடர்ப்படுவதில்லை. எனவே, எந்த ஒரு நாடு பொருட்செல்வம் மிக்கு விளங்குகிறதோ, எந்த நாடு தன் தேவைக்குப் பிறர் கையை எதிர் பாராமல் இருக்கிறதோ, அந்த நாடே செல்வ நாடு என்று கூறப்படும். மேலே கூறிய கருத்துக்களை மனத்திலிருத்திக்கொண்டு பழைய தமிழ் மதுரையைக் காண்போம்.

மதுரையில் வாணிக நிலவரம்
----------------------------------------------------------------
மதுரையம்பதியை
‘மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்’ (ம.காஞ. 429)
என்று மதுரைக் காஞ்சி ஆசிரியர் கூறுகிறார். வானை முட்டுங் கட்டடங்கள் உலகின் பலவிடங்களிலும் தம் புகழைப் பரப்பி நிற்கின்றன. கடைத்தெரு மிகவும் அகன்றது. பணியாரம் விற்கும் பாட்டி முதல் மணியும் பொன்னும் விற்கும் பெருங்குடி வாணிகர் வரை அனைவரும் நிறைந்துள்ளனர். இவர்கள் விற்கும் பொருள்களைப் பெரிதும் விரும்பி வாங்குகிறவர் வேற்று நாட்டினர் என்பதும் தெரிகிறது. இங்ஙனம் வந்த வேற்று நாட்டவர் தங்கள் பொருள்களை இங்குக் கொணர்ந்து விற்று, இவற்றிற்குப் பதிலாக இப்பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இற்றை நாளில் இங்ஙனம் பெருவாணிகம் நடை பெறுகிற இடங்கிளல் தீடீதென மாறுதல்கள் ஏற்படுவது கண் கூடு. பொருள்களின் விலைகளை திடீதென ஏறியும் இறங்கியும் பலரைப் பெருஞ் செ்வராகவும் ஓட்டாண்டிகளாகவும் செய்தல் நாம் அறிந்ததொன்றே.
ஆனால், இவ்வளவு பெருவியாபாரம் நடந்தும் (வாணிக) நிலை மாறாது இருந்ததாம் மதுரை மாநகரில், இதனை ஆசிரியர் இக்காலப் பொருளாதார சாத்திரத்திற் குறிக்கப்படுஞ் சொற்களாற் குறிக்கவில்ல; ஆனால், அதனைவிடச் சிறந்த முறையிற் குறிக்கிறார்; வியாபாரப் பெருக்கிற்கு ஓர் உவமை தருகிறார். அவ்வாறு உவமிக்கும் பொருள் கடல் ஆகும். அக்கடலுக்குக் கொடுக்கிற அடைமொழிகளால் முதற்பொருளையுஞ் சிறக்க வைக்கிறார். அதெங்ஙனம் என்பதைக் காண்போம். கடலுக்குப் பல இயல்புகள் உண்டு. அவற்றுள் சிறந்த ஒன்றை அவர் எடுத்தாளுகிறார். கடல் தன்பால் எவ்வளவு நீர் வந்துங்கூட உயருவதில்லை; மேலும் எவ்வளவு நீர் ஆவியாகப் போனாலும் தன்னளவில் ஓது அங்குலமும் குறைவதில்லை. இவ்வியல்பை ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். இவ்வியல்பை மதுரையின் வியாபாரத்திற்கு வைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.
வேற்று நாட்டிலிருந்து எவ்வளவுதான் கப்பல் க்பபலாகப் பொருள்களைக் கொண்டு வந்து குவிததாலும், அல்லது கப்பல் கப்பலாக இங்குள்ள பொருள்களை அள்ளிச் சென்றாலும், அவற்றால், மதுரை நகர நாளங்காடி (பகற்கடை) நிலவரம் மாறுபடுவதில்லையாம். அதாவது, நாட்டின் பொருளாதார நிலையில் வேற்றுமை காணப்படுவதில்லை. இது ஆச்சரியப்படத்தக்கது ஒன்றல்லவா? ஓர் உவமானத்தால் ஆசிரியர் இந்தப் பொருளாதாரக் கருத்தை விளக்கிக் கூறிவிட்டார். இதோ, பாடலைக் காணுங்கள்,
“மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொருது இரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
மாடம் பிறங்கிய மலிபுகழ்க கூடல்
நாளங் காடி” (ம.காஞ. 425-30)
[கரை பொருது இரங்கு முந்நீர் – கரையை மோதி ஒலிக்குங் கடல், கொளக்கொள – வேற்று நாட்டவர் பலமுறை அள்ளிச்செல்ல, தரத்தர – அவரது பொருளைப் பல முறை கொண்டு வந்து சேர்க்க.]

பண்டமாற்று வாணிகம்
------------------------------------------------
தமிழ் நாட்டு வாணிகம் சிறந்த முறையில் நடைபெற்றது. அவ்வாறு நடந்தும் பொருளாதார நிலையைக் குலைக்கக் கூடிய அளவில் நடைபெறவில்லை என்பதும் சில பாடல்களில் அறிகிறோம். ஏற்றுமதி செய்யப்ட்ட பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டட பொருள்களும் வெவ்வேறானவை. ஆனால், அவற்றின் மதிப்பு ஒன்றாகவே இருந்தது என அறிகிறோம். இன்றும் அதே நிலையிலேதான் வெளிநாட்டு வாணிகம் நடைபெற்று வருகிறது. இதனைப் பழங்காலத்தில் ‘பண்டமாற்று’ என்று கூறுவர். வெளி நாட்டிலிருந்து வருகிற பொருளுக்கு ஒரு விலையுண்டு. ஆனால், அவ்விலையை நேரடியாக நம் நாட்டில் வழங்குகிற பணத்தால் கொடுக்க முடியாது. ஏனென்றால், நம் நாட்டில் வழங்குகிற நாணயத்துக்கும் வேற்று நாட்டில் வழங்குகிற நாணயத்துக்கும் வேறுபாடு உண்டு. எனவே, வருகிற பொருள் எவ்வளவு விலை மதிப்புள்ளதோ, அவ்வளவு விலை மதிப்புள்ள மற்றொரு சாமானை அவர்கள் நாட்டுக்கு அனுப்புவதன் மூலம் வாணிகம் இன்றும் நடைபெறுகிறது; அன்றும் நடைபெற்றது. இம் முறையில் இரண்டும் ஒத்த மதிப்புள்ள பொருள்களாக இருக்கவேண்டும் என அறிகிறோம். இக்கருத்தைப் பட்டினப்பாலை ஆசிரியர் நன்கு காட்டுகிறார். அவரும் மழை நீரையே உவமையாகக் காட்டுகிறார். ஆனால், அவர் அவ்வுவமையைக் கையாளுகிற முறையே வேறு. மழையின் உற்பத்தி நாமறிந்ததேர. கடலிலுள்ள நீரைச் சூரிய வெப்பம் ஆவியாக மாற்றிப் பிறகு மேகமாக்குகிறது. இம்மேகம் நிலப்பரப்பில் நெடுந்தூரம் செல்கின்றது. மலைகள் நிறைந்த பிரதேசங்களில் மேகம் தன் பாலுள்ள நீரை மழையாகப் பொழிகிறது. அம்மழை நீர் மீண்டும் சிறுகால்களாகத் தொடங்கிப் பெரிய ஆறாக மாறி, இறுதியில் புறப்பட்ட கடலுக்கே வந்து சேருகிறது. கணக்கெடுத்தால், வரவும் செலவும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கும். வேறு வழியாகவும் இதனைக் கூறலாம். நீர் கடலிடத்திலிருந்து ஆவி வடிவாகச் சென்றது; நீர் வடிவாகத் திரும்பி வந்தது. இரண்டும் தன்மையால் மாறுபடினும், மதிப்பால் ஒத்தே உள்ளன அல்லவா? இம்மாதிரியே காவிரிப் பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் நடைபெறுகின்றன. தன்மையால் இரண்டு சரக்குகளும் மாறுபடினும், மதிப்பால் அவை ஒத்தவையே. இதனை அவ்வாசிரியர் கூறும் முறை நோக்கற்பாலது:
“வான்முகந்தநீர் மலைப்பொழியவும்
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நலத்தேற்றவும்
நிலத்தின்று நீர்ப்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி” (ப.பா.126-32)
[மேகம் முகந்த நீரை மலையில் பொழியவும், மலையில் பொழியப்பட்ட நீர் கடலில் சேரவும் உள்ள நலை போல, நீரிலிருந்து மூட்டைகளைக் கரையிலேற்றவும் கரையிலிருந்து கப்பலில் ஏற்றவும் நிறைந்த பொருள்கள் உள்ளன.]
இத்தகையை நிலையை இக்காலப் பொருளாதாரச் சொற்களால் கூறவேண்டுமானால், ‘சமன் செய் வாணிகம்’ (Balanced Trade) என்று கூறலாம்.

சுங்கவரியும் பயனும்
----------------------------------------------------
இதனைப் பார்க்கும் பொழுது எல்லா நாட்டினரும் அவரவர் விருப்பம் போல வேண்டுவனவற்றைக் கொணர்ந்து தமிழ் நாட்டில் வாணிகம் செய்யலாம் போலும் என்று நினைத்துவிடுதல் ஆகாது. அவ்வாறு செய்கின்றதை இக்காலத்தார் ‘கட்டுப்பாடற்ற வாணிகம்’ (Free Trade) என்று கூறுவர். இத்தகைய ஒரு வாணிகமே நாட்டின் பொருளாதாரத் திட்பத்திற்கு ஏற்றது என்று வாதாடுகிறவர்களும் உண்டு. ஆனால், இத்தகைய ஒரு நிலை, நாட்டின் பொருளாதாரத்துக்கும் தொழில் வளர்ச்சிக்கம் கேடு விளைப்பதாகும் என்று நினைக்கிறவர்களும் உண்டு. இவ்விரு கட்சியாரும் இன்றுங்கூட ஒரு முடிவுக்கு வரவில்லை. ஆனால் பழந்தமிழர் இதனைப் பற்றி என்ன நினைத்தனர் என்பதைக் காணலாம்.

பழந்தமிழர் வேற்று நாட்டினருடன் செய்த வாணிகத்தை வரையறுத்தே செய்தனர் என்பதை அறிகிறோம். அதனை எவ்வாறு வரையறுத்தனர் என்பதை அறிவது மிக இன்றியமையாதது. இன்றும் வேற்று நாட்டிலிருந்து அதிகமான பொருள்கள் வரக்கூடாதெனக் கருதினால், அரசாங்கத்தார் அதனைத் தடுப்பதற்கு ஒரே முறையைத்தான் கையாளுகின்றனர். அப்பொருளின் மேல் சுங்கவரியை உயர்த்திவிடுவதே (Higher Tariff) அம்முறை. அங்ஙனம் செய்வதால் பொருளுக்கு இயற்கையாக வைக்க வேண்டிய விலைக்குமேல் இந்தச் செலவையும் ஏற்றி வைத்து விற்க நேரிடுகிறது. அவ்வளவு விலை கொடுத்து வாங்க அப்பொருள் தகுதியற்றதாகிவிடுமேயானால், அதனையாரும் வாங்கமாட்டார். வாங்காத பொருளை யாரும் இறக்குமதி செய்யமாட்டார். எனவே, இம்முறையினால் வேற்று நாட்டு வாணிகத்தைக் கட்டுப்படுத்தலாம். இம்முறையிலேயே அன்றைய தமிழ் நாட்டில் வாணிகம் நடைபெற்றதெனப் பட்டினப்பாலை குறிக்கிறது. பட்டினப்பாலை கரிகாற்பெருவளத்தான் என்ற சோழ அரசன்மேல் பாடப்பட்ட அரிய பாடல். அவன் இமயஞ் சென்று புலிக்கொடி நாட்டி மீண்டவன். எனவே, அவன் காலத்தில் தமிழ்நாடு செல்வம் கொழித்திருக்குமென்பதில் ஐயமில்லை. அவனுடைய முக்கியத் துறைமுகப் பட்டினம் காவிரிப்பூம்பட்டினம்.
காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் பொருள்கள் வந்து இறங்குகின்றன. அவற்றைச் சுங்க இலாக்காவைச் சேர்ந்த அலுவலர் வந்து பார்வையிடுகின்றனர்; அவற்றின் மதிப்பை அளவிடுகின்றனர். பொருளின் மதிப்பென்பது எப்பொழுதும் ஒரு நிலையாக இருப்பதில்லை. அங்ஙனம் இருக்கவும் இயலாது. அப்பொருளுக்கு இருக்கும் அவசியத்தைப் (demand) பொறுத்து அதன் மதிப்பும் (value) மாறுபடும் என்பது நாமறிந்த தொன்று. எனவே, அதன் அவசியத்தை, அப்பொழுதுள்ள நாட்டின் நிலையைச் சீர் தூக்கிப் பார்த்து அச்சுங்க அலுவலர் மதிப்பிடுகிறார்; ஏற்ற முறையில் சுங்கம் விதிக்கிறார்; இங்ஙனம் விதிக்கின்ற முகத்தாலேயே வெளிநாட்டு வாணிகத்தைக் கட்டுப்பாடு செய்கிறார்: இதனை ஆசிரியர் நன்கு விளக்குகிறார். தினந்தோறும் இசசெயல் ஓய்ச்சல் ஒழிவின்றி நடைபெறுகிறது. இதனைச் செய்பவரும் மனத்தாலும் உடலாலும் வலிமை பெற்றவர். அங்ஙனம் சுங்கம் வசூலித்தமைக்கு அடையாளமாக மூட்டைகளின் மேல் சோழநாட்டு இலச்சினையாகிய புலிக் கொடியைப் பொறித்து, அவை மற்ற மூட்டைகளோடு கலந்துவிடாதபடியும், கொடீ பொறிக்கப்படாதவை நாட்டினுள் நுழையாமலும் கண்காணித்துக் கொடி பொறித்த மூட்டைகளை மிகவும் காவம் பொருந்திய பாதுகாவலான இடங்களில் அடுக்குகிறார்.
“வைகல்தொறும் அசைவின்றி
உல்குசெயக் குறைபடாது
* * *
அருங்கடிப் பெருங்கப்பின்
வலியுடை வல்லணங்கிறோன்
பலிபொறித்துப் புறம்போக்கி” (ப.பா.124-1250
[வைகல்தொறும் – தினந்தோறும்; அசைவின்றி -சோம்பல் இல்லாமல்; உல்கு- சுங்கவரி]சுங்க அலுவலர்
-----------------------------------------
இவ்வடிகளிலிருந்து அறியவேண்டும் பொருள்கள் இரண்டுண்டு. அச்சுங்க அலுவலர் ‘வியுடைய வல்லணங்கினேன்’ என்று கூறப்படுகிறார். ஏன்? சுங்கம் வசூலிப்பவருக்கு வலிமை எதற்காக? ஈண்டு வலிமை என்றது மனவலிமையை. அம்மன வலிமை இல்லாதவன் சுலபமாகக் கைக்கூலி வாங்கிக்கொண்டு அரசனை ஏமாற்றுபவன் ஆகிவிடலாமல்லவா? இந்நாளில் வாழும் நமக்கு இது ஒன்றும் புதுமையன்று. ஆனால், பழந்தமிழ் நாட்டில் அரச நீதியை நடாத்துபவர் எங்ஙனம் மனத்திட்பம் வாய்ந்தவராய் இருந்தனர் என்பதை இவ்வடிகள் அறிவுறுத்துகின்றன. மேலும், இன்று நோக்க வேண்டும். அவர் வெறுஞ்செம்மையுடையவராக மட்டும் இருத்தல் போதாது. பிறர் அவரை ஏமாற்றுவர். அவர் அங்ஙனம் செய்யாதிருக்க, அலுவலர் தமது அதிகாரத்தைச் செலுத்தக் கூடியவராய் இருக்க வேண்டும். இது கருதியே ஆசிரியர் அவர் படை வலியாலும் தம் அதிகாரத்தைச் செலுத்தக் கூடியவராய் இருந்தார் என்பதை அறிவிப்பதற்காக ‘வல்லணங்கினேன்’ (பிறரை வருத்தக்கூடிய பலமுடையவன்) என்று கூறுகிறார். இம்மட்டோடு இல்லை. இவையெல்லாம் இன்றுங்கூட இருக்கக் காண்கிறோம். ஆனாலும், திருட்டுத்தனமாச் சரக்கை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் ‘கள்ளக் கடத்தல்’ (Smuggling) இன்றும் நின்றபாடில்லை. அத்தகைய செயல் அந்நாளில் இல்லை என்பதை ஆசிரியர்’அருங்கடிப் பெருங்காப்பின்’ பொருள்கள் இருந்தனவெனக் கூறுமுகத்தால் கூறுகிறார்.
இவ்வளவு சிறப்புடன் காவிரிப்பூம்பட்டினத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் எவை எவை எ்பதை அவ்வாசிரியரே குறிக்கிறார்:
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்”
*****(ப.பா.185 91)
[பரி-குதிரை, கறி-மிளகு, ஆரம்-சந்தனம், கங்கைவாரி-யானைத்தந்தம், ஈழத்துணவூஇலங்கையிலுண்டான உணவுப் பொருள் (தேங்காய் போலும்!), காழகத்தாக்கம்-பர்மாவில் ஆக்கப்பட்ட நுகர்ச்சிப் பொருள்]
இவற்றால் அரேபியா, பர்மா முதலிய வெளிநாட்டு வாணிகத்தோடு கங்கை வெளி, இலங்கை முதலிய இடங்களுடன் உள் நாட்டு வாணிகமும் நன்கு கடந்தமை அறியப்படுகிறது.

உடையார் இல்லார் வேற்றுமை
ஒரு நாட்டை எடுத்துக்கொண்டால் அந்நாட்டில் சிலரே பொருள் படைத்தவராய் இருப்பர்: ஒரு சிலர் ஒன்றுமற்ற ஏழைகளாய் இருப்பர்: பொரும்பான்மையோர் நடுத்தர மக்கள என்று வழங்கப்படும் நிலையிலிருப்பர். இவர்கள் வாழ்க்கை தான் நாட்டின் செல்வ நிலைக்கு அறிகுறியாகும். இத்தகைய மக்கள் பெரும்பாலும் உழைப்பையே நம்பி வாழ்கின்றவர்கள். உழைத்த உழைப்புக்கேற்ற பயன் கிடைக்கின்ற பொழுது இவ்வகை மக்கள் நல்ல பண்பாடு உடையவர்களாய் இருப்பார்கள். மேலும், தம்மினும் மேம்பட்ட பொருளாளர் நிலைமையைத் தாமும் அடைவதற்கேற்ற வழிகளை முனைந்து தேடுவர். ஆனால், இத்தகைய எண்ணம் மக்களுக்கு எல்லாக்காலத்தும் இருந்து வந்ததென்று கூற முடியாது. செல்வமுடையார் செம்மையாய் வாழ்ந்து, செல்வத்தின் பயன் ஈதலே தவிர இறுக்கிப்பிடித்தலன்று என்று நினைக்கின்ற வரை, இடையிலுள்ள மக்கள் அவர்கள் மேல் பொறாமையோ வெறுப்போ கொள்ளமாட்டார்கள். இந்நிலை இந்த நாளில் மாறிவிட்டமையாலே தான் பெருந்துன்பங்கள் தோன்றுகின்றன. இந்த நடுத்தர மக்கள் மேலும் பொருள் சேர்த்து அப்பொருளாளர் கூட்டத்தில் சேர முனைகின்றார்கள். அப்பொருளாளர்களோ, இவர்கள் உழைப்புக்கு ஏற்ற கூலியைக் கொடாமல் இவர்களை மேலும் வறுமையடையச் செய்ய முயல்கின்றர்கள். இதனால், ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமை பெரிதாகிப் பூசல் முற்றுகிறது.


பழந்தமிழ் நாட்டின் நிலை
----------------------------------------------------
பழந்தமிழ்நாட்டில் ஒரு சிலர் பணம் படைத்தவராய் இருந்தனர் என்பதும், பெரும்பான்மையினர் நடுத்தர மக்களாகவும், ஒரு சிலர் மிகவும் ஏழ்மை வாய்ந்த மக்களாகவும் இருந்தனர் என்பதும் மறுக்கமுடியாது உண்மை. இன்றும் இத்தகைய நிலையே தமிழ் நாட்டில் நிலவுகிறது. ஆனாலும், இரண்டுக்கும் எவ்வளவு வேற்றுமை! அன்று இம்மூவகை மக்களுக்கும் இடையே இருந்த மனப்பான்மை இன்று அறை்தொழிந்தது. மறைந்ததோடு மட்டும் அல்லாமல் வெறுப்பு முதலிய தவறான குணங்களும் நிரம்பிவிட்டன. இதன் காரணம் என்னவென்று ஆராய வேண்டும். நாளாவட்டத்தில் மக்கள் தங்கள் தங்கள் வாழ்க்கையில் திருத்தி அடையாமல் இருக்கப் பழகினார்கள். இயற்கையோடு வாழ்ந்து, எளிய வாழ்க்கையைக் கொள்ளுகிற வரையில் திருத்தி மனத்தில் குடிகொண்டிருக்கும்: மனத்தில் அமைதி நிலவும். திருத்தியடைந்த ஒருவன் மனத்தில் பொறாமை முதலிய தவறான எண்ணங்களுக்கு இடமில்லை. அதே போலப் பெருஞ்செல்வம் படைத்தவனும், அச்செல்வத்தை வைத்துக்காபாற்றி வேண்டியவர்க்கும் வழங்கும் பொறுப்பை மேற்கொண்டவனாகத் தன்னைக் கருதினான்: அச்செல்வம் தான் மட்டும் அனுபவிப்பதற்காக ஏற்பட்டதன்று என்று நினைத்தான். எப்போதாவது ஒருவர் இருவர் அங்ஙனம் நினைக்க முற்பட்டாலும், அவ்வெண்ணம் தவறானது என்று எடுத்துக்காட்டப் பெரியோர் இருந்தனர். தகுந்த அறவுரைகளால் இத்தகைய மனநிலைகளை அவர் அகற்றினர். உதாரணமாக நக்கீரர் கூறுவதைக் காண்க:
“செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே த்பபுந பலவே.” (புறம் 189)
[செல்வத்தின் பயன் பிறருக்குத் தருதலேயாம். அவ்வாறல்லாமல் ‘யாமே அனுபவிப்பேம்’ என்று நினைத்துச் சேர்த்து வைத்தால், அது அழிவது உறுதி]
பாரியை ஒத்த வள்ளல்கள் தோன்றி வளர்ந்த நாடாகும் இது. இததகைய வள்ளல்கள் செல்வத்தின் பயன் எது என்பதை வாழ்ந்து காட்டினர். இரண்டு பிரிவாரும் மன அமைதியோடு வாழ்ந்தமையால் நாடு நல்ல நிலையில் இருந்தது. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரிவினையும், அப்பிரிவினையால் ஏற்படும் துன்பங்களும் இருக்கவில்லை. செ்வர் வாழ்க்கைக்கு ஓர் உதாரணம் காண்போம். கோவலன் பெருஞ்செல்வர் குடும்பத்தில் பிறந்தவன்; மணம் ஆன பிறகு தனிக்குடும்பம் நடத்தி வந்தான்; தானே வாணிகமும் செய்தான். மாதவியோடு சேர்ந்து “குலந்தரு வான்பொருட்குன்றம் தொலைத்தான்”. மலையத்தனை செல்வத்தை அழிப்பினும், அவனை வெறுத்து வந்த பின்னர்த் தந்தையைக் கண்டிருப்பானேயாகில் மறு படியும் மலையத்தனை செல்வத்தைப் பெற்று மீண்டும் வாணிகம் தொடங்கியிருக்கலாம். ஆனால், மானமுடைய அவன் அவ்வழியை மேற்கொள்ளவில்லை. மீண்டும் தனது உழைப்பால் பொருள் தேட வேண்டும் என்று நினைத்தானே தவிர, எளிமையாக மானத்தை இழந்து பொருளைப் பெற வேண்டும் என்று எண்ணவில்லை. இன்று கள்ளச் சந்தையில் பொருள் தேடும் பெரியோர் நிறைந்த நம் நாட்டில் இத்தகைய உதாரணம் எங்ஙனம் வரவேற்கப்படுமோ அறியோம்! ஏழையாயினும், நடுத்தர வகுப்பாராயினும், பணக்காரராயினும் உழைப்பையே அணிகலமாகக் கொண்டு வாழ்ந்தனர் பழந்தமிழர். உழைப்பு அல்லது முயற்சியைத் ‘தாள்’ என்ற சொல்லால் குறித்தனர் பழந்தமிழர். முயற்சியற்ற அரசரைக் கூடப் பழந்தமிழர் எள்ளி நகையாடினர்.

நடுத்தர மக்கள் பொருளாதாரம்
-------------------------------------------------
இனி, நடுத்தர வகுப்பில் உள்ள ஒரு குடும்பத்தைக் காண்போம். மாடுகள் வைத்துப் பால், மோர், நெய் முதலியவற்றை விற்று வாழ்க்கை நடத்தும் இடையர் குடும்பம் அது. குடும்பத்தை நடத்தும் பொறுப்புப் பெண்ணுக்கேயன்றி ஆண் மகனுக்கு இல்லை. இது கருதியே வீட்டை ஆளுகின்றவன் என்று பொருள் தரும் ‘இல்லாள்’ என்ற ஒரு சொல் தமிழில் இருக்கிறது. ஆனால், அதற்கு மறு தலையாக ‘இல்லான்’ என்ற சொல்லை உண்டாக்கவில்லை. இவ்வாறு குடும்பத்தை நடத்தும் பெண் ஒருத்தி, மிகு விடியற்காலத்தில் எழுந்துவிடுகிறாள்; பெரியதொரு பானையிலுள்ள தயிரைக் கடைகிறாள். கடையும் பொழுது புலி உறுமுவது போன்ற ஓசை உண்டாகிறது. மோரைக் கடைந்து எடுத்துக்கொண்டு சென்று வியாபாரம் செய்கிறாள். அங்ஙனம் மோர் விற்பதோடு மட்டுமல்லாமல், தனியாக நெய்யையும் வியாபாரம் செய்கிறாள். நெய்யின் விலை மோரைவிட மிகுதியாக இருக்மென்பதற்கு ஐயமில்லை. இவ்விரண்டினாலும் பெற்ற பொருளை என்ன செய்கிறாள் என்பதைக் காண்போம். மோர் விற்கு வந்த பொருளால் குடும்பத்தை உண்பிப்பதோடு சுற்றத்தாரையும் காப்பாற்றுகிறாள். பட்டினி கிடந்தாவது பொருளைச் சேகரிக்க வேண்டும் எனற் பேதைமை தமிழ்நாட்டில் இல்லை. ஆனால் வருமானம் முழுவதையும் செலவிட்டுவிட்டுக் கடனாளியாகிற வழக்கமும் இல்லை. அறிவுடைய ஒருவன் அளவறிந்து செலவு செய்வான். இது கருதியே வள்ளுவப் பெருந் தகையார்,
“ஆகாறு அளவுஇட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.” (குறள், 478)
என்று கூறினார். ‘வருமானம் குறைவாயிருப்பினுங் கெடுதலில்லை, செலவு அதனைவிட மேற்போகாதவிடத்து,’ என்பதே இதன் பொருள். மோர் விற்ப பொருளால் குடும்பத்தைக் காப்பாற்றிய நம் ஆயர் குல மடந்தை, நெய் விற்ற பொருளை என்ன செய்கிறாள் என்பதை ஆசிரியர் கூறுகிறார்; இன்னது செய்யவில்லை என்றும், இன்னது செய்தாள் என்றும் கூறுகிறார். அப்பொருளால் பொன்னை வாங்கவில்லையாம். அதற்குப் பதிலாகக் கறவை எருமைகளையும் பசுக்களையும் வாங்கினாளம். இங்ஙனம் கூற வேண்டிய இன்றியமையாமை யாது? கறவை மாடுகளை வாங்கினாள் என்று கூறினாலே வேறு ஒன்றும் வாங்கவில்லை என்ற பொருள் தானே பெறப்படுமே! அங்ஙனமிருக்க, இவ்வாறு கூறவேண்டிய காரணமென்ன? இக்காலத் தமிழ்நாட்டில் வாழும் நம்மை இவ்வடிகள் கண் திறந்து விடுதல் கூடும். எத்தனை கோடி ரூபாய் பெறுமானமுள்ள தங்கம் நமது மிழ்ச் சகோதரிகள் உடலை அலங்கரிக்கின்றன! ‘தங்கமும் பொருள் தானே? அத்தங்கத்தை வாங்குவதால் நேரமு் குறைவென்ன?’ என்று கேட்கலாம். ஆனால், தங்கத்துக்காகச் செலவிடும் முதல் பயனற்ற முதலாகும் (dead capital). முதல் என்றாலே அது மேலும் பொருளைச் சம்பாதிக்கக்சுடியதாகும் என்ற பொருளுமுண்டு. தங்கத்துக்காகச் செலவழிக்கப்படும் முதல் பயனற்றது என்றாலும், இன்று நம் நாட்டில் எத்தனை பெண் மணிகள் இதனை உணர்ந்திருக்கினறார்கள்? ஆனால், பழந்தமிழ்ப் பெண்கள் இதனை அறிந்து அனுபவத்திலும் நடத்தினர். அதனாலேயே ஆசிரியர் அவள் பொன்னை வாங்கவில்லை என்று கூறினார். பொன்னை வாங்காமற்கூட இருக்கலாம். அதற்கு மறுதலையாக அப்பொருளைக் கலயத்தில் இட்டு மண்ணில் புதைத்து வைக்கும் வழக்கம் அதைவிடத் தீமையானதாகும். ஆகவே அம்முதலை வைத்து அதனால் பயனடையும் பண்பாடே சிறந்ததாகும். தனது தொழிலுக்கு ஏற்ற முறையில் பயன்படக் கூடியவையான கறவை மாடுகளை வாங்கினாள்; வகையறிந்து, பயன் தரும் வழியில் பொருளை முதலீடு செய்து பயன் அடைநதாள்.
பெரும்பாணாற்றுப்படை என்ற பாடலில் இக் கருத்துக் கூறப்படுகிறது. ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்,’ என்ற பழமொழிப்படி பழந்தமிழ் நாட்டில் வாழ்நத நடுத்தர மக்களின் பொருளாதார நிலைக்கு இந்த உதாரணம் ஒன்றே சாலும். இக் கருத்துள்ள அடிகளைக் காண்க.

‘நள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
--------------------------------------------
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளைவிலை உணவின் கிளையுடன் அருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறுஉம்
மடிவாய்க் கோவலர்,” (பெ.பா.155-66)
[குறுநெறிக் கொண்ட கூந்தல்-வளைந்துள்ள கூந்தல்; அளை-மோர்; நல்லான்-பசுக்கள்; கருநாகு – எருமைக் கன்றுக்குட்டி.]

தகவலுக்கு நன்றி - @சீனுவாசன்

இலக்கியத்தில் வரலாறு by அகரமுதலி



‘இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தமிழ் நாட்டில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறிவது அவசியமா?’ எனச் சிலர் கருதலாம். சரிதம் மீண்டும் மீண்டும் திரும்புகிறதென ஓர் ஆங்கிலப் பழமொழியுண்டு. உலகின் பல்வேறு இடங்களிலும் வாழும் மக்கள், எவ்வளவு சிறிய நாட்டினராயினும், தங்களது பழமையைப் போற்றிக் கலையையும் பண்பையும் வளர்க்க வேண்டுமென்று விரும்புகின்றனர். அங்ஙனம் விரும்புகிற நாட்டினர் பலருக்குப் பழமையான கலைச் செல்வமோ, பண்பாடோ இல்லை. எனினும், என்ன? அவர்கள் ஏதானும் ஒன்றைக் கற்பித்துக்கொண்டு அதனைப் போற்றுகின்றனர். தமிழ்நாட்டில் வாழும் நமக்கு ஒரு சிறந்த பழமை உண்டு. அதை கண்ணுந்தோறும் மனத்தில் ஒரு பெருமிதம் உண்டாகிறது; நாமும் தமிழரெனத் தருக்கித் திரியலாம் எனத் தோன்றுகிறது.
‘பழங்கதைகள் பேசுவதிற் பயனில்லை,’ எனச் சிலர் கூறக்கேட்கிறோம். அதுவுண்மையே. ஆனால் பழமை பேசுவதால், ஓர் ஊக்கம் பிறக்குமேல், சோம்பர் ஒழியுமேல், ஆண்மை விளங்குமேல், புதிய வாழ்வு தோன்றுமேல், பழமை பேசுவதால் இழுக்கொன்றுமில்லை. நாம் இருக்கும் நாடு நமதென்று அறியவும், இது நமக்கே உதிமையாம் என்பதுணரவும், பழங்கதைகள் வேண்டத்தான் வேண்டும், அதுவும் தமிழரைப் பொறுத்தவரை மிகுதியாக வேண்டும்.


தமிழ் இலக்கியப் பழமை
-------------------------------
கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னரும், தோன்றி ஒரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் தமிழ் நாட்டில் தோன்றிய நூல்களைப் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை எனப் பகுத்தனர். பதினெண்கீழ்கணக்கு என்னும் தொகுதியுள் குறள் நீங்கலாக ஏனைய அனைத்தும் கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகட்குப் பின்னர்த் தோன்றியவையே. இம்மூன்று தொகுப்புள்ளும் சில புறப்பொருள் பற்றியன; பல அகப்பொருள் பற்றியன. அகம் என்பது ஒத்த பண்பினராகிய தலைவனும் தலைவியும் தம்முள் மனமொத்து இல்லறம் நடத்தும் இயல்பினை இயம்புவது. இதனையொழிந்த வாழ்க்கையெயை முற்றுங் கண்ட தமிழன், வீட்டினுள் வாழும் வாழ்க்கை, வெளியே வாழும் வாழ்க்கை என இரண்டு பெரும்பிரிவுகளை வகுத்தான். வாழ்வு முழுதும் இவற்றில் அடங்கி விடுதல் காண்க.
முதலாவதாக உள்ள வீட்டு வாழ்க்கை என்று கூறப்படும் ‘அகத்திணை’யை ஏழு சிறு பிரிவுகளாகப் பிரித்தான் தமிழன். இனி, அவனது அக வாழ்க்கையைப் பின்னர்க் காணவிடுத்துப் புற வாழ்க்கையில் அவன் எங்ஙனம் வாழ்ந்தான் என்பதை ஈண்டுக் காண்போம்.

புறவாழ்வின் அடிப்படை
--------------------------------
மனிதனது புற வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படுபவை, நாடு. ஊர். அரசன், சமுதாயம் என்பவையேயாம். பல ஊர்கள் சேர்ந்த ஒரு பெரு நாட்டை அரசியல் பிழையாது ஓர் அரசன் ஆட்சி செய்வானேயாகில், அங்குச் செம்மையான ஒரு சமுதாயம் ஏற்பட வழியுண்டு. நாடு, ஊர் என்ற இரண்டும் மனிதன் உடல் உரம் பெற்று வாழவும், அரசன் சமுதாயம் என்ற இரண்டும் அவன் மனம் உரம் பெற்று வாழவும் பயன்படுகின்றன. இவை நான்கும் செம்மையாயிருப்பின், தனி மனிதன் வாழ்க்கை செம்மைப்படும். செம்மை தனித்தனியே ஏற்படின், சமுதாயம் செம்மையடையும். எனவே, இவை ஒன்றை ஒன்று பற்றி நிற்பவை என்பது தெள்ளிதின் விளங்கும்.

கவிஞன் தோன்றும் நாடு
------------------------------------------------------------------
நாடு சிறந்ததென்று சொல்லும் பொழுது நாம் அதில் வாழும் மக்களையே குறிக்கிறோம். இக் கருத்தை ஒளவையார் புறநானூற்றுப் பாட்டு ஒன்றில் பின் வருமாறு அழகாகக் குறிக்கிறார்.
“நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை, வாழிய நிலனே!” (புறம்.187)
[நிலமே, நீ நாடாக இருப்பினும், காடாக இருப்பினும் சரி; பள்ளமாக இருப்பினும், மேடாக இருப்பினும் சரியே; எங்கே நல்லவர்கள் உண்டோ அங்கேதான் நீயும் நல்லை.]
எனவே, தமிழன் வாழ்க்கை அன்று நன்றாயிருந்ததென்றால், அதற்குப் பல காரணங்கள் இருந்தன. தமிழ்நாடு தமிழனுடையதாயிருந்தது. தமிழ் மொழி அரசு வீற்றிருந்தது. நாட்டில் வேளாளரும், வணிகரும் செல்வங்கொழிக்கச் செய்தனர். வறுமை என்பதே தலை காட்டாத நாட்டில் அறிவு வளமும், ஏனைய வளங்களும் கொழித்தல் இயல்பு. எலிசபெத்து மகாராணியார் காலத்தில் இங்கிலாந்து செழிப்புற்றிருந்தமையின், பற்பல கவிஞர் தோன்றி வாழ்ந்தனர் எனச் சரிதங்கூறுகிறது. அதேபோலத் தமிழ்நாட்டில் அற்றை நாளில் பல புலவர் தோன்றி வாழ்ந்தனர். காரணமென்ன? புலவனுடைய உயிரும் மனமும் மிக நுண்மையானவை. அவை அடிமை நாட்டில் தோன்றுவதில்லை. ஒரோ வழத் தோன்றினாலும், நிலைத்து வாழ்வதில்லை. கலைஞன் மனம் பரந்தும் விரிந்தும் இருப்பதாகும். அத்தகையை மன நிலையை அடிமையாக வாழ்பவர்கள் போற்றுவதில்லை. குறுகிய மனப்பான்மையும், பிளவுபட்ட மனமுமே அடிமை நாட்டின் அடிப்படை. இதில் எவ்வாறு கவிஞன் தோன்றமுடியும்? இன்றைய நிலையில் தமிழனுடைய உயர்ந்த மனப்பான்மையும் குறிக்கோளும் காணப்படவில்லை. தமிழன் படைய நிலைக்கு வர வேண்டுமானால் நாட்டில் அறிவு வறுமையும், பொருள் வறுமையும் ஒருங்கே தொலைய வேண்டும். இங்ஙனம் கூறுவதால் உலக சகோதரத்துவத்துக்கு எதிராகக் குறுகியகொள்கையைப் பேசுவதாக யாரும் நினைக்க வேண்டுவதில்லை. தம்முன் ஒற்றுமை இல்லாத இருவர் சகோதரராக இருக்க முடியாது. அதேபோல, சுதந்தரம் உடையராய் உலகத்தில் வாழும் ஏனைய மக்களோடு உரிமையற்ற தமிழன் எங்ஙனம் சகோதரத்துவம் கொண்டாட முடியும்? ஆகவே, தமிழன் உரிமை பெற்று ஏனைய ரோடு சம நிலைக்கு வந்த பிறகுதான் உலக சகோதரத்துவத்தை நினைக்கக் கூடும். பழந்தமிழன் அங்ஙனம் வாந்து, நினைத்து, செயலிலும் அதனைச் செய்து காண்பித்தான்.

தமிழ் நாகரிகத் தொன்மை
----------------------------------------------------------------------
உலகின் பிற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கூடிவாழும் நாகரிகத்தைக் கூட அடையாத அந்தப் பழைய காலத்திலேயே இத்தமிழர் நாகரிகத்தில் முதிர்ந்திருந்தனர். அப்பகுதிகளில் உள்ளவர்கள் தனித்து வாழ்ந்து வட்டையாடி உயிர் வாழும் குறிஞ்சி நாகரிகத்தில் இருக்கும்போதே தமிழர் சமுதாய வாழ்வின் அடிப்படையான மருத நாகரிகத்ததை அடைந்துவிட்டனர். குறிஞ்சி நாகரிகத்திலிருந்து மருத நாகரிகத்திற்கு வர எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்குமோ, நாம் அறியோம். அவ்வளவு பழைய காலத்திலேயே இத்தமிழினம் நாடாளும் நாகரிகம் பெற்றுவிட்டது என்பதை உறுதியாக்க கூறலாம். பிற நாடுகளிற்போல எழுதி வைக்கப்பட்ட சரித்திரம் தமிழர்க்கு இல்லை என்பதும் மெய்ம்மையே. ஆனால், எத்தகைய சரித்திரம் தமிழரிடம் இல்லை? தேதிவாரியாக எழுதப்பட்ட அரசர்கள் கதைகள் தாமே இன்று சரித்திரம் என்ற பெயரால் வழங்கப்படுகின்றன? இக்கதைகளே சரித்திரம் என்று கூறினால், தமிழர் சரித்திரம் இல்லைதான். “சரித்திரம் என்பதற்குத் தேதிகளே கண்கள்,” என்று கூறினால், தென்னாட்டுச் சரித்திரம் என்றுமே குருடாக இருக்க வேண்டுவதுதான். ஆனால், ‘சரித்திரம் என்பது மக்கள் வாழ்க்கை, நாகரிகம், குறிக்கோள் என்பவை பற்றிக் கூறுவதுதான்,’ என்று கூறினால், தென்னாட்டின் பழங்கால வரலாற்றை ஆயப் பல குறிப்புக்கள் பழந்தமிழ்ப் பாடல்களில் நரம்ப உண்டு.” என எழுதினார் சரித்திரப் பேராசிரியர் பி.டி. சீனிவாச ஐயங்கார். இவை எவ்வளவு உண்மையான சொற்கள்!

எது சரித்திரம்?
------------------------------------------------------
இன்று நாம் சரித்திரம் என்ற பெயரில் எதனைப் படிக்கிறோம்? எலிசபெத்துக் காலத்து இங்கிலாந்து தேச சரித்திரத்தை அறிய விரும்பி ஒருவன் சரித்திரத்தைக் கையிலெடுத்தால், அவன் அங்குக் காண்பது யாது? அந்த நாளைய ஆங்கிலர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், எவற்றை உண்டார்கள். எவற்றை நினைத்தார்கள், எவற்றைக் குறிக்கோள்க்ள என மதித்தார்கள், ஸ்பானியர்களைத் தோற்கடித்தமையின் அவர்கள் வாழ்வில் என்ன மாறுதல்கள் ஏற்பட்டன என்பவை பற்றி அறிய ஆடியுமா? இவை பற்றி அறிய வேண்டும் என்ற கருத்துடன் ஒருவன் இங்கிலாந்து தேச சரித்திரத்தைத் திறந்து பார்த்தால் என்ன இருக்கும்? மேற்கண்ட வினா ஒன்றுக்காவது விடை கிடைக்குமா? உறுதியாக் கிடையாது. அதன் மறுதலையாக எலிசபெத்தின் வாழ்நாளில் அவள் எத்தனை கையெழுத்துக்களிட்டாள், எத்தனை சூழ்ச்சிகள் நடைபெற்றன என்பன பற்றியே எழுதப்பட்டிருக்கும். இவற்றைப் படித்து விட்டு இங்கிலாந்து சரித்திரத்தைக் கற்றுவிட்டதாக நாமும் இறுமாந்து நிற்கின்றோம்! என்னே அறியாமை! ஸ்பானியரை வெற்றி கொண்டதற்கு எலிசபெத்து அடைந்த மகிழ்ச்சி பற்றி நமக்குக் கவலையில்ல. ஆனால், இலண்டன் போன்ற நகரத்தில் வாழ்நத மனிதனும் கிராமத்தில் வாழ்ந்த மனிதனும், ஏழையும் பணக்காரனும், நிலச்சுவான் தாரும் அவன் பண்ணையாளும் இவ்வெற்றி பற்றி யாது நினைத்தனர் என்பதை அறிய விரும்பினால், இச் சரித்திரப் புத்தகம் அதுபற்றி யாதொன்றுங் கூறாது. இப்படி ‘ராஜா மந்திரி’ கதையைத் தேதி வாரி கூறும் சரித்தரதம் தமிழர்கட்கு இல்லை என்பது மெய்மை்மைதான். ஆனால், தமிழ் மக்களுடைய வாழ்வைப் படம் பிடிக்கும் சரித்திரம் நிரம்ப உண்டு. இச் சரித்திரம் ஏனைய சரித்தரங்கள் போல உரை நடையில் இல்லாமல், கவிதையில் இருலுப்பது ஒரு வேறுபாடு. அதிகமாக மன்னர்களைப் பற்றி மட்டும் வுறாமல், பொது மக்களைப் பற்றியும் பேசுவது இரண்டாவது வேறுபாடு. யாரும் பிறந்த தேதியையோ இறந்த தேதரியையோ பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருந்தது மூன்றாவது வேறுபாடு.

தனிப்பட்டவர் வரலாறு இல்லை
--------------------------------------------------------------------
வருடம், மாதம், தேதி என்ற இம்மெய்ம்மை பற்றித் தமிழர் அதிகம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. தமிழர் தம்முடைய நாகரிகமும் பண்பாடும் ஒரு சங்கிலித் தொடர் போன்றவை என்று நினைத்தார்கள் போலும்! தனிப்பட்ட மனிதர் எத்துணைச் சிறப்புடையவராயினும், அவரைப் பற்றிக் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. அவர்கள் செய்த நற்செயல்களைக்கொண்டே அவர்கள் பெருமையைக் கணக்கிட்டனர். திருக்குறன் என்ற நூல் தமிழன் வாழ்வு, நாகரிகம், பண்பாடு, சமுதாயம், என்பவற்றோடு தனி மனிதனும் சிறப்படைய உதவிற்று என்ற உண்மையை அவர்கள் மறக்கவுமில்லை; மறுக்கவும் இல்லை. ஆனால், திருக்குறளை இயற்றிய ஆசிரியர் இந்நூலை இயற்றியருளியது தவிர வேறு சமுதாயத்திற்கு என்ன உதவியைச் செய்திருத்தல் கூடும்? எனவே, திருவள்ளுவருடைய பிறப்பு வளர்ப்பு முதலியன பற்றி அப்பழந்தமிழன் ஒன்றுமே குறித்து வைக்கவில்லை. திருக்குறள் செய்த உதவிக்கு நன்றி பாராட்டிய தமிழர்கள், அதற்காக அதனைப் பெருமைப்படுத்திப் பேசிய தமிழர்கள், அதன் ஆசிரியருடைய இயற்பெயரைக்கூட அறிந்துகொள்ளாமலும், குறித்து வைக்காமலும் இருந்ததற்கு இதுவே காரணம் போலும்! நெடுஞ்செழியன் போன்ற வெற்றி வீரர்களையும், கரிகாலன் போன்ற பேரரசர்களையும் பற்றிப் பாடிய பாடல் களிற்கூட அவர்கள் வெற்றியைப் பராட்டினார்கள். ஆனால், இக்காலச் சரித்திரம் போன்றவை அல்ல இப்பாடல்கள்.

உண்மைச் சரித்திரம்
----------------------------------------------------------------
இன்ன நாளில் இன்ன இடத்தில் இவ்விருவரின் இடையே போர் நடைபெற்றது என்று கவிஞர் குறிப்பதில்லை. அதன் மறுதலையாக, இப் போரினால் இப்பயன். அதன் மறுதலையாக, இப் போரினால் இப்பயன் ஏற்பட்டது என்பதை மறைமுகமாகவும், குறிப்பாகவும் வெளியிட்டனர். எனவே, தனிப்பட்டவருடையவும், சமுதாயத்தினுடையவுமான வாழ்வு, தாழ்வு, போராட்டம், எண்ணம், குறிக்கோள் முதலியவை பற்றி அறிய வேண்டுமானால், எண்ணற்ற சரித்திரக் குறிப்புக்கள் உண்டு. தமிழ்ப் பாடல்களில் பத்துப்பாட்டு எட்டுத்தொகை போன்ற நூல்களில் இத்தகைய குறிப்புக்களைப் பரக்கக் காணலாம். இவற்றை அடிப்படையாகக்கொண்டு தமிழருடைய சரித்திரத்தை எழுதுவது பெரிதும் பயனுடைய செயலாக இருக்கும்.

தகவலுக்கு நன்றி - @சீனுவாசன்

நாணயங்களும் தமிழும்


ஈழத்தில்/இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது, இலங்கை , பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்து விடுபட முன்பு வெளியிடப்பட்ட நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்லாது தமிழ் எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

தமிழில் :௫௦ சதம், சிங்களத்தில்: ශත පණග (சத=சதம், பணஹ =50)).

ஆனால் சுதந்திரத்தின் (1949), பின்பு தமிழ் எண்கள் நீக்கப்ப்ட்டு தமிழ் எழுத்துக்கள் மட்டும் பொறிக்கப்படுகின்றன.

தற்போது மொரீசியசு , சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நான்கு நாடுகளின் நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்படுகின்றன.

இலங்கையில் அன்றிலிருந்து இன்றுவரை வெளியிட்ட நாணயத்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.


முத்தமிழ்



முத்தமிழ் என்ற வழக்கு நம் தமிழ் மரபாகும். ‘தெரிமாண்டமிழ் மும்மைத் தென்னம் பொருப்பான்’ என்பது பரிபாடல். முத்தமிழ்க்கும் இலக்கணம் கூறும் மூவுறுப்பு அடங்கிய பிண்டமே அகத்தியம் எனப் பண்டைத் தமிழ் உரையாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். சிலப்பதிகாரம் முத்தமிழ் இலக்கணத்திற்கு இலக்கியமாக விளங்குகிறது என அடியார்க்கு நல்லார் உரைவழியே அறிகின்றோம். திருக்கச்சூர்க் கல்வெட்டு ஒன்று (M.E.R. 377 of 1906) முத்தமிழாசிரியர் பெருநம்பி என்பவரைப் பற்றிப் பேசுகின்றது. இன்றும் நம் பள்ளிச் சிறுவர்கள் ஒளவையார் வாயால் “சங்கத்தமிழ் மூன்றும் தா” எனக்கடவுளை வேண்டி நிற்கின்றனர்.

முத்தமிழாவன இயல், இசை, கூத்து என யாவரும் அறிவர். கூத்து என்பது ‘நாடகக் காப்பியம்’ அன்று. பரதநாட்டியம் என்றும் ‘Dance’ என்றும் வழங்குவனவற்றோடு ஒத்ததொன்று; இவற்றை ஆங்கிலத்தில் ‘Fine arts’ என வழங்கும் இன்னியற் கல்வித்துறைகளோ என ஐயுறலாம். ஆனால் ஓவியம் முதலியன முத்தமிழில் பிரித்தெண்ணப்படவில்லை. வடமொழியாளர் 64 கலைகள் எனக் கல்வித்துறைகளை வகுத்த முறையும் இதற்குப் பொருந்துவதில்லை. ஆகவே இவ்வாறு மூன்று எனத் தமிழர் வகுத்ததன் உண்மை நோக்கம் யாது? என்ற கேள்வி பிறக்கிறது.

இயற்றமிழானது சொற்களாலாயது சொல்லோ ஒலிவடிவம்; இசையும் ஒலிவடிவே. இவ்விரண்டிற்கும் வேற்றுமை என்னை? சொல்லோ நம் எண்ணத்தைச் சுட்டும் அறிகுறி; அஃது ஒலியாகவும் எழலாம்; எழுதும் எழுத்தாகவம் அமையலாம்; ஒவியமாகவும் முடியலாம். ஆனால் இவற்றால் குறிக்கப்படுவது மனத்தெழும் கருத்துக்களேயாம். நம் எண்ணம் எல்லாம் சொல் வடிவே என்பர் சிவஞானபோதப் பேருரையாளர். பேசும் போது எழும் ஒலி வானிற் பிறக்கும் அசுத்தமாயாகாரியமாயினும், அது குறிப்பது எண்ணமே யாதலின் சொற்கள் அவ்வகையில் சுத்தமாயகாரியமே என்பர். பெனிடெட்டோ க்ரோசே (Benedetto Croce) என்ற இத்தாலியப் பேராசிரியரும் சொல்லில்லையேல் எண்ணமில்லை என்பர். ஆனால் இசையோ நம் உணர்ச்சிக்குப் போக்கு வீடாக எழும் இயற்கை ஒலியாகும். அஃது அறிகுறியல்ல; அஃதே பொருள், இன்ப ஒலியும் துன்ப ஒலியுமாக இசை வெளி வருகின்றது நோதிறம் எனத் தமிழர் ஓர் இசைக்குப் பெயரிட்டனர் அன்றோ? ஆகவே மனக்கருத்தின் அமைதியே இயற்றமிழ். இயற்கை வாய்ஒலியின் அமைதியே இசைத்தமிழ். மெய்யின் இயக்க விளக்கமே கூத்துத்தமிழ். இவ்வாறு உயிர் முத்திறத்தாலும் தன்னியல்பை வெளிப்படுத்து நிலையில் சிறப்பாக விளங்குவன முத்தமிழாம்.
மேல்நாட்டு உள்ளத்தியற்கை நூலாசிரியர்கள் மனமானது அறிவு நிலை, உணர்ச்சி நிலை, செயனிலை என முத்திறப்பட்டது எனக் கூறி வந்தனர்; இவை வெவ்வேறு நிலைகளாகாது. நெருப்பில் சூடும் ஒளியும் வடிவும் ஒன்றாய் விளங்குதல்போல் ஒற்றித்து நிற்பன என இதுபோது கூறுகின்றனர். நம்நாட்டு அறிஞர்களும் விருப்பாற்றல் ஒறிவாற்றல், செயலாற்றல் என்றும், இச்சாஞானக்கிரியா சத்திகள் என்றும் பேசி வந்தனர். இசை, இன்ப ஒலியும் துன்ப ஒலியுமாக எழக் காண்கின்றோமாதலின் உணர்ச்சி நிலை அல்லது விருப்பாற்றலின் இயக்கம் எனலாம். மனக்கருத்தை விளக்கும் இயற்றமிழ் அறிவு நிலை அல்லது அறிவாற்றலின் இயக்கம் எனலாம். செயல்நிலை அல்லது செயலாற்றலின் இயக்கமே கூத்துத் தமிழாம். எனவே மனதின் இயக்கமாக எழுகின்றவை அனைத்தும் இவற்றிலடங்கவே வேண்டும். இப்பாகுபாடு இவ்வகையில் இயற்கைக்கும் இலக்கணத்திற்கும் பொருத்தமாகும்.
வீட்டு நெறியெனும் மெய்யுணர்வே அறத்துப்பாலின் முடிபாதலின் அறம் அறிவு நிலையின் பயன் எனலாம். உலகில் மக்கள் அரசும் குடிகளுமாய் வாழும் வாழ்க்கையைக் கூறும் பொருட்பால் செயல்நிலையின் பயன் எனலாம். முடிந்த முடிபாம் இன்பத்துப்பால் உணர்ச்சி நிலையின் பயன் எனலாம். “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடுபுணர்ந்த ஐந்திணை” எனத் தொல்காப்பியனார் தமிழ் ஒழுக்கம் கூறினார். எனவே முப்பாலும் முத்தமிழாக முடிகின்றன. காதலை வீணைச்செல்வம் எனச் சிந்தாமணி கூறுவதினின்றும் இசையும் இன்பமும் ஒன்றாதல் விளங்கும்; எனவே இயற்றமிழ் அறமாம்; கூத்துத் தமிழ் பொருளாம்.
உலகப் பொருள்களின் இயல்பாகச் சத்துவ இராசததமோ கணங்களையும் காத்தல் படைத்தல் அழித்தல் என்ற செயல்களையும் கூறுவர் அன்றோ? இவை கீழ்நிலையிற்றோன்றும் அறிவுநிலை விளக்கமாகவும் செயல்நிலை விளக்கமாகவும் விருப்புநிலை விளக்கமாகவும் முறையே கொள்ளத்தக்கன என்பர். திரு. பகவான் தாசர் தாம் எழுதிய ‘அமைதி நூல்’ என்பதனுள், வீடு பெற்று நின்ற மேனிலையில் இறைவனியல்பாக விளங்கும் அறிவும் உண்மையும் இன்பமும் [சச்சிதானந்தம்] மேனிலையிற்றோன்றும் அறிவு நிலையும் செயல்நிலையும் விரும்பு நிலையுமாக முறையே அமைகின்றன என்றும், இயங்காதிருக்கும்போது ஒரு பொருளுண்மையினை உற்று நோக்கியறியாத நாம் அஃது இயங்கும்போது எளிதின் அறிதலின் உண்மைத்தன்மையைச் செயனிலை விளக்கமாகக் கொள்வது பொருத்தமே என்றும், அறிவு அறிவுநிலையின் விளக்கமாதலிலும் இன்பம் விருப்புநிலை விளக்கமாதலிலும் ஐயம் ஒன்றும் எழுதற்கிடமில்லை என்றும் கூறுகின்றார். அறியும் ஆன்ம அறிவு குறை நீங்கி நிறைவாம் வீட்டு நிலையில் மெய்யறிவு நிலையாக விளங்க எங்கும் நிறை்நத இறைவன் அடிப்படையான உண்மை நிலையாக விளங்க மயக்கிநின்ற இருளுலகம் முற்றும் மாறி இன்ப நிலையாக விளங்க இவ்வாறு இவை மூன்றும் ஒற்றித்து முதிர்ந்து பழுத்து முற்றி நிற்கும் முத்தி நிலையும் முத்தமிழ் நிலைதானே.
“முத்திதனின் மூன்று முதலும் மொழியக்கேள்
சுத்தஅநு போகத்தைத் துய்த்தலணூமெத்தவே
இன்பங் கொடுத்தலிறை இத்தைவிளை வித்தல்மலம்
அன்புடனே கண்டுகொளப்பா”
என்பது காண்க.

இவ்வாறு உயரப்பறப்பதைவிட்டு மண்ணிற்றவழ்ந்து வரும் போதும் முத்தமிழ்க் கொள்கையின் பெரும் விளங்குகிறது. இக்காலத்துக்கல்வி அறிவுநிலை ஒன்றையே வளர்க்கின்றது. இதன் பயனாகத் தலை கொழுத்து உள்ளம் வற்றி உடல் வாடி நிற்கின்ற மக்களையே காண்கின்றோம். போரும் மூண்டெரின்றது. முத்தமிழ் நெறியே கல்வி கற்றிருந்தால் முழு மனமலர்ச்சி பெற்ற சான்றோர்களாய் தமக்கெனவாழாப் பிறர்க்குரியாளராய் விளங்கி யிருப்பர் அன்றோ? “சங்கத்தமிழ் மூன்றுந்தா” என எல்லோரும் வேண்டுதல் இன்றியமையாததன்றோ?

மற்றுமொரு வகையால் முத்தமிழ்க் கொள்கையை ஆராயலாம். நமக்கு அமைந்தன மூன்று கருவிகள்; மனம் மொழி மெய் என்பன. இவை பண்பட்ட நிலையைத் திரிகரண சுத்தி, என்பர் வடமொழியாளர். தமிழர் இதனைத் தம்மொழியில் மிக அழகாக விளக்கி வைத்துள்ளனர். உள்ளத்தின் இயற்கை நிலையே அதன் தூய நிலையாகும். ஓர்த்து உள்ளது உணர்வதே அந்நிலையாம். அதனை உண்மை என்றனர். (மை என்பது மெய் என்பதன் திரிபாக விளங்குவதை மொழி நூலாராய்ச்சியாளர் எடுத்துரைபர். ஆகவே உண்மை என்பது உள்ளத்தின் இயல்பு அல்லது வடிவம் எனப் பொருள் படும்; மெய்ம்மை என்பது அங்ஙனமே உடலின் இயற்கை என்றும் வாய்மை என்பது வாயின் இயற்கை என்றும் பொருள் படுமாறு காண்க.) வாயின் இயல்பு தீதின்றி நன்று பயக்கும் வாய்மையேயாம். மெய்யின் இயல்பு பொய்படாதொழுகும் ஒழுக்கமாம் மெய்ம்மையே யாம். உண்மை. வாய்மை, மெய்ம்மை என்ற தனித் தமிழ்ச் சிறப்புச் சொற்கள் முத்தமிழின் இயல்பை விளக்க எழுந்தன போன்றமைந்துள்ளன. இன்பமாய்ப் பொங்கி அறிவாய் விளங்கும் உள்பொருளை உள்ளத்தாலும்வாயாலும் மெய்யாலும் வழிபட்டு அதுவாய் நிற்கும் முறை இதுவேயாகும். தூய மனத்தில் பொங்கி எழுந்ததுஇயற்றமிழ். தூய வாயின் முழக்கமே இசைத்தமிழ். தூய மெய்யின் இயக்கமே கூத்துத் தமிழ். இவை மூன்றும் உண்மைக்கு மாறாக இருத்தலாகாது என்பது தமிழர் கண்டபடிபு. இவற்றின் ஒற்றித்தவடிவமே முருகு எனும் அழகாம். உணர்ச்சி நிலையின் அழகை யாரும் அறிவர். ‘கல்வியழகேயழகு’ என அறிவு நிலையையும் அழகாகக் கண்டனர் நாலடி பாடிய தமிழர். ‘ஒழுக்கத்தழகு் எனச் செயல்நிலை அழகினையும் அழகாக்ககண்டார் தமிழ் வில்லியர். கிரேக்கர்கள் உண்மை, அழகு, நன்மை என்பவற்றைப் பொன்னாலான முக்கோணமாகப் பாராட்டி வந்தனர். உண்மைஎன்பது அறிவையும், அழகு உணர்ச்சியையும், நன்மை ஒழுக்கத்தையும் குறிப்பன வாகலின் அவையும் முத்தமிழ்க கொள்கையை விளக்குதல் காண்க. ஆனால் கிரேக்கர்க்கு அவை குறிக்கோளாக விளங்கத் தமிழர்க்கு இவை கல்வி முறையாகி அன்றாட வாழ்க்கையாய் விளங்கின. முத்தமிழ் எனக் கொண்டதால் எல்லாவற்றையும் அழகு என முடிப்பது எளிதாயிற்று. பரத நாட்டியத்திலும் பாவம் எனும் மனக்குறிப்பும் ராகம் எனும் இசையும் தாளம் என்பதும் ஒத்தியைதல் வேண்டும் என்றனர் வடமொழியாளர். முத்தமிழை வெவ்வேறாகப் பிரித்துப் பேசினாலும் பிரிக்கமுடியாதபடி ஒன்றாய் மனக்கருத்தாய் அரும்பி, இசையாய்ப் பூத்துக், கூத்தாய்ப் பழுத்து முற்றிய போதுதான் உயரிய வாழ்க்கையாய் இனிக்கக் காண்கிறோம். கண்ணன் மறைமுடிபோதிப் புல்லாங்குழலூதிக் குடக் கூத்தாடுகின்றான். சிவபெருமான் ஆலின் கீழ் அறமுரைத்துச் சாமகீதனாய் மிக நல்ல வீணை தடவி இன்பக் கூத்தாடிக் கூத்தா செனச் சிறப்படைகின்றான். பேரறிவு நிலைபெற்ற பெரியோர்களும் ‘அயரா அன்பின் அரன் கழல் செலுமே’ என்றபடி உண்மை நிலை மறவாத அறிவாற்றலும், அன்பாய் விளங்கும் விருப்பாற்றலும், அரன் கழல் செலும் செயலாற்றும் பெற்று விளங்குகின்றனர். அவர்கள் இயலும் இசையும் மூத்தும் இருந்தபடி அது ‘ஆடுகின்றறிலை கூத்துடையான் கழற்கன்பிலை என் புருகிப் பாடுகின்றிலை’ என்பது திருவாசம். கடவுளையடையும் வழிகள் அன்பு நெறி, செயல் நெறி, செறிவு நெறி என்றெல்லாம் பெயர்பெற்றுள்ளமை அறிவோம். முத்தமிழ் வழியே கடவுளையடைதலும் கூடும் எனக் கண்ட நற்றமிழ் ஞானசம்பந்தர் ‘ஆடல் நெறி,’ ‘பாடல் நெறி’ எனப் புதிதாகக் கூறியுள்ளார். பாடல் நெறி இயல் இசை என்ற இரண்டையும் குறிப்பதால் முத்தமிழும் இங்கே குறிக்கப் பட்டமை காண்க. திருமூலர் “தமிழ் மண்டலம் ஐந்தும் பரவிய ஞானம்” கூறுவது ஈதேயாம். இவற்றை எல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டன்றே.

“முத்தமிழே கற்று முழங்கு மெய்ஞ்ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி”
எனக் குதம்பைச் சித்தர் பாடுகின்றார்.

(இது சென்னை, சிந்தாதிரிப்பேட்டை வித்தாவன் T.P. மீனாட்சி சுந்தரம் பிள்ளை M.A., B.L., M.O.L., அவர்களின் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை)

வடசொல் - தமிழ்ச்சொல்


-------------------------------------------
அகங்காரம் - செருக்கு
அகதி - ஆதரவற்றவர்
அகிம்சை - ஊறு செய்யாமை
அங்கத்தினர் - உறுப்பினர்
அங்கீகாரம் - ஒப்புதல்
அசுத்தம் - துப்புரவின்மை
அதிகாரி - உயர் அலுவலர்
அநீதி - முறையற்றது
அபயம் - அடைக்கலம்
அபிவிருத்தி - பெருவளர்ச்சி
அபிஷேகம் - திருமுழுக்கு
அபிப்பிராயம் - உட்கருத்து
அனுக்கிரகம் - அருள் செய்தல்
ஆராதனை - வழிபாடு
உற்சவம் - விழா
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
கோத்திரம் - குடி
சந்தியாவந்தனம் - வேளை வழிபாடு
சரணம் - அடைக்கலம்
சிவமதம் - சிவநெறி
பஜனை - கூட்டுப்பாடல் வழிபாடு
பிரசாதம் - திருப்பொருள்
பிரகாரம் - திருச்சுற்று
(அங்கப்) பிரதட்சனம் - வலம் வருதல்
பிரார்த்தனை - நேர்த்திக்கடன்
மந்திரம் - மறைமொழி
மார்க்கம் - நெறி, வழி
விக்கிரகம் - திருவுருவம்
யாத்திரை - திருச்செலவு.
க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள்

அரசர்களின் சிறப்புப் பெயர்கள்


---------------------------------------------------------------
சேர வம்சம்
---------------------------------------------------------------
சேரன் செங்குட்டுவன் - கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்
உதியஞ்சேரல் - பெருஞ்சோற்றுதியன் (பாரதப்போரில் உணவு அளித்தல்)
நெடுஞ்சேரலாதன் - இமயவரம்பன், ஆதிராஜன்

சோழ வம்சம்
---------------------------------------------------------------
முதலாம் பராந்தகன் - மதுரை கொண்டான், மதுரையும் ஈழமும் கொண்டான், பொன் வேய்ந்த பராந்தகன்

இராஜாதித்தியன் (பட்டத்து இளவரசன்) - யானை மேல் துஞ்சிய சோழன்
இரண்டாம் பராந்தகன் - சுந்தரச் சோழன்
முதலாம் இராஜராஜன் - மும்முடிச்சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி,இராஜகேசரி
முதலாம் இராஜேந்திரன் - கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டிதசோழன், உத்தமசோழன்.
முதலாம் குலோத்துங்கன் - சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன்
இரண்டாம் குலோத்துங்கன் - கிருமிகந்த சோழன்
மூன்றாம் குலோத்துங்கன் - சோழ பாண்டியன்

பாண்டிய வம்சம்
---------------------------------------------------------------
மாறவர்மன் அவனிசூளாமணி - மறாவர்மன், சடயவர்மன்
செழியன் சேந்தன் - வானவன்
முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - சோழநாடு கொண்டருளிய
முதலாம் சைடயவர்மன் சுந்தர பாண்டியன் - கோயில் பொன்வேய்ந்த பெருமான்
முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் - கொல்லம் கொண்டான்
நெடுஞ்செழியன் - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன்

வேத கணிதம்


எண்ணென்ப ஏனை எழுதென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருக்குறள் -திருவள்ளுவர் அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கணிதத்தின் முக்கியதுவத்தை பறைசாற்றியுள்ளார்.

வேதம்" என்ற சொல்லுக்கு "அறிவு" என்று பொருள். வேத கணிதமானது மிக வேகமான கணக்கீட்டு முறையாகும். இதன் மூலமாக வழக்கமான முறையைவிட பத்து மடங்கு வேகமாக கணக்கீடு செய்ய முடியும்.பழையகால சிந்தியா, எண்களை எழுதுவதில் இடமதிப்புத் திட்டத்தையும், பூச்சியம்/சுழியம் என்ற கருத்தையும் உருவாக்கி வருங்காலக்கணிதக்குறியீட்டு முறைக்கு அடிகோலிட்டது.

வேத கணிதத்தின் தந்தை என்று போற்றப்படும் ஸ்ரீ பாரதி கிருஷ்ணா தீர்த்த சுவாமியால்(Swami Bharati Krishna Tirthaji) 16 முதன்மை சூத்திரங்களும், 13 துணை சூத்திரங்களும் உருவாக்கப்பட்டது. இந்த சூத்திரங்கள் மூலமாக கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், வர்கம், வர்கமூலம், கணம், கணமூலம், சிக்கலெண்கள், வகுபடுந்தன்மை, இயற்கணிதம், நுண்கணிதம், வகையீட்டு நுண்கணிதம், இருபடி சமன்பாடு, திரிகோணமிதி, பிதாகரஸ் தேற்றம், அப்போலோனியஸ் தேற்றம் போன்றவற்றை மிகக் குறைந்த நேரத்தில் விரைவாக விடை காண முடியும்.

நேரடியாக, மிக எளிமையாக, துல்லியமாக, மனதாலேயே மிகப்பெரிய கணக்குகளை இந்த சூத்திரங்களும் மூலமாக விடைக்காண முடியும்.

ஸ்ரீ பாரதி கிருஷ்ணா தீர்த்த சுவாமி அவர்களின் இயற்பெயர் வெங்கடராம சாஸ்திரியாகும். இவர் 1884 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி, "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு" என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி" என்று கம்பரும் பாடிய பூமியாகிய தமிழ் நாட்டிலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருநெல்வேலியில் பிறந்தார்.

ஸ்ரீ பாரதி கிருஷ்ணா தீர்தாஜியின் குடும்பத்தில் அனைவரும் மிகவும் படித்தவர்களாகவும், அரசு உயர்பதவிகள் வகித்தவர்களாகவும் இருந்துள்ளனர். இவர் தந்தை பி.நரசிம்ம சாஸ்திரி தாசில்தாராகவும் பின்னர் துணை வட்டாட்சியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

ஸ்ரீ பாரதி கிருஷ்ணா தீர்த்த சுவாமி அவர்கள் இளமையிலேயே மிகவும் புத்தி கூர்மையாகவும் படிப்பில் மெச்சும்படியாகவும் விளங்கினார். இவருடைய படிப்பு காலம் முழுவதும் எல்லா பாடத்திலும் முதல் மாணவனாகவே இருந்தார். சமஸ்கிருதத்தில் இவருடைய அசாதாரண திறமையைப் பாராட்டி ஜுலை 1899 ஆம் ஆண்டு சென்னை சமஸ்கிருத கூட்டமைப்பு (Madras Sanskrit Association) "சரஸ்வதி" என்ற பட்டத்தை கொடுத்து கவுரவித்தது, அப்போது அவருடைய வயது பதினாறுதான்.

சுவாமி அவர்கள் முதுநிலை படிப்பை முடித்ததும் சிறிதுகாலம் கணித பேராசிரியராகவும் பின்னர் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார். பிறகு ஸ்ரீ சச்சிதானந்த நரசிம்ம பாரதி சுவாமி அவர்களிடம் சுமார் எட்டு வருடங்கள் உடனிருந்து வேதாந்ததை பற்றிய ஆழமான அறிவைப் பெற்றார். 1911- 1918 இடைப்பட்ட காலத்தில்தான் இவரால் வேத கணிதம் மறு-உருவாக்கம் பெற்றது.
மேலும் அறிய
http://sanjaysathiya.wordpress.com/tag/வேதகணிதம்/


http://www.vedicmaths.org/introduction/tutorial/tutorial.asp
http://www.vedic-maths.in

நாவலர்


ஒருமுறை வழக்கொன்றில் சாட்சியமளிக்க நாவலர் அழைக்கப்பட்டார். நீதிபதி, வெள்ளைக்காரர் என அறிந்து ஆங்கிலத்தில் பேசினார். வெண்ணீறு அணிந்தவரிடம் ஆங்கிலம் தங்கு தடையின்றி வந்ததைக்கண்ட நீதிபதி பொறாமைப்பட்டுக் கொதித்தார். இந்த வழக்கைப்பற்றி உமக்கு என்ன தெரியும்! தமிழில் பேசு என்றார். நாவலர் தூய தமிழில் செய்யுளாக சாட்சி சொன்னார் இப்படியாக
“அஞ்ஞான்று எல்லியெழ நானாளிப் போதின் வாய் ஆழிவரம் பணித்தே காதேற்றுப் காலோட்டப் புக்குழி”
மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்க முடியவில்லை. தடுமாறினார். நீதிபதி மொழிபெயர்ப்பாளரை பார்த்து ஏன் மொழிபெயர்க்க முடியவில்லை என் கேட்டார். அவ்ர் சொன்னர், இவர் பேசும் தமிழோமிகவும் ஆழ்மானது நானறியாதது என்றார். அப்போது அங்கே வந்த பொது வழக்கறிஞர் மயில்வாகனம்(நாவலரிடம் தமிழ் கற்றவர்) வந்தார். அவரைப்பார்த்து அடே மயில்வாகம் இங்கே வா! நான் சொல்வதை மொழி பெயர்த்துச்சொல் என்றார். அவரும் பணிவன்போடு மொழிபெயர்த்தார். அப்போது, நீதிபதி நாவலர் யாரென்பதை அறிந்து அவரை ஆங்கிலத்தில் பேச சொல்ல, மறுத்த அவர், தமிழிலேயே சொல்ல மயில் வாகனம் மொழிபெயர்த்தார்.

நல்ல ஊராகிய நல்லூரில் 18-12-1822ஆம் ஆண்டு அவதரித்த உத்தம புருஷர் நாவலர், தலைசிறந்தவரென்றால் அது புகழ்ச்சிப் பேச்சல்ல.

அன்று அன்னிய ஆதிக்கம் ஈழ நாட்டில் வேரூன்றத் தொடங்கியபோது மக்கள் விரும்பாமலே மேலைத் தேச நாகரிகங்கள் திணிக்கப்பட்டன. வியாபாரம் செய்யவென்று கூறி வந்தவர்கள் கலை, கலாச்சாரம், தேசியப்பற்று அனைத்தையும் அகற்றி வந்தனர். மேல் நாட்டிலிருந்து வந்த அனைத்தையும் ஆராயாமல் கைகொட்டி நம்மவரும் வரவேற்றனர். மேல்நாட்டு மோகம் ஏற ஏற தாய்நாட்டுப் பற்று சீர்குலைந்து தமிழ்மொழிமீது வெறுப்பு ஏற்பட்டது. சைவமும் தமிழும் அழிந்து விடுமோ என்று அஞ்சியவேளை, தம் நிலை மறந்து பரிதவித்டு நின்ற ஈழநாட்டு மக்களைத் தலைதூக்க அந்தக் காலத்தில் வந்தவரே எங்கள் நாவலர். அஞ்சிக் கொண்டிருந்த காலத்தில் அவதரித்ததனால் போலும் ஆறுமுகம் எனப் பெயரிட்டனர் பெற்றோர். அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றாதா?

விளையும் பயிரை முளையிலேயே தெரியும். மிகச் சிறுவயதிலேயே பெரிய பல நூல்களையெல்லாம் மகாவித்துவான் சேனாதிராசா, சரவணமுத்துப் புலவர் முதலியோரிடம் கற்றுத் தெளிந்த எங்கள் ஆறுமுக நாவலர், பீற்றர் பேர்சிவல் பாதிரியார் பாடசாலையில் ஆங்கிலம் கற்றார். இப்பாடசாலைதான் இக்காலத்து யாழ்ப்பாண மத்திய கல்லூரி எனச் சொல்கிறார்கள். இவரது 9 ஆம் வயதிலே தந்தையார் விட்டுச் சென்ற பாடலைப் பூர்த்தி செய்தாரென்றால் அன்னாரின் விவேகம்தான் என்னே!

ஆங்கில அறிவைச் சொல்லிக் கொடுத்த பேர்சிவல் பாதிரியார் இவரின் கல்வி அறிவைக் கண்டு வியந்து போனார். இவரின் அறிவின் அபாரசக்தியைக் கண்டு மெச்சினார். அதுமட்டுமா? எங்கள் நாவலரிடமே தமிழ் கற்க வேண்டும் என ஆசைப்பட்டார். வெள்ளைக்கார பாதிரிக்கு - தன் குருவுக்கு - தமிழ் மொழி கற்பிக்கும் ஆசான் ஆகினார் என்றால் அவரின் ஆற்றலை என்னென்று சொல்வது? அவரின் கல்வித் திறனைக் கண்ட பாதிரி தமது பாடசாலையில் நாவலரை ஆசிரியராக அமர்த்திக் கொண்டார். அதுமட்டுமல்ல. விவிலிய நூலைத் தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பையும் நாவலரிடம் ஒப்படைத்தார். முதன்முதலில் விவிலிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் நாவலர்தான் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.

நாவலர் மதப்பற்று கொண்டவர். ஆனால் ஏனைய மதங்களிடம் குறை காணவில்லை. ஒரு மதத்தை நிந்தனை செய்து மற்ற மதத்தை வளர்ப்போரை மட்டும் காரணம் காட்டி குற்றம் சுமத்தினார். மதமாற்றத்தை வன்மையாகக் கண்டித்தார். அதற்குத் தூண்டுகோலாக இருந்தவர்களைத் தனது சொல்லமுகளால் சவுக்கடி கொடுக்க மறக்கவில்லை. மதமாற்றத்தை வெறுத்தாரே தவிர - மதங்களை அவர் வெறுக்கவில்லை. இந்து மதம் போலவே ஏனைய மதங்களையும் மதித்தார். விவிலிய நூல் மொழிபெயர்ப்பே இதற்கு உதாரணமாகும். தன் கடன் பணி செய்வதே எனத் தொண்டாற்றியவர் நாவலர் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அவராற்றிய அரும்பெரும் சேவைகளையெல்லாம் நாவலர் காலக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் தான் நமக்குப் புரியும். தான் பிறந்த மதம், தாய்மொழி, தேசியத் தொண்டு அனைத்துக்கும் தன்னைத் தியாகம் செய்த அவதார புருஷர் ஈழநாட்டில் இருந்தார் என்றால் அது நிச்சயம் நாவலர்தான்.

பாடசாலையில் ஆசிரியராக இருந்தபோதும் மதத்தின் பேரால் ஈழநாடும் மொழியும் சுரண்டப்படுவதைக் கண்டு கொதித்தவர் நாவலர். நாடும் மொழியும் எக்கேடும் கெடட்டும். நாங்கள் சம்பளத்துக்கே வேலை செய்வோம் என எண்ணும் இக்காலத்தவர்க்கு அக்கால நாவலர் சரித்திரம் ஒரு நல்ல பாடம்தான்.

தேசியப் பாடசாலைகள் நிறுவுவது, பத்திரிகைகள் நடத்த அடிகோலுவது, இனிய தமிழ் நூல்களை வெளியிடுவது, செய்யுள் நூல்களை வசன நூலாக்குவது, பிரசங்கம் செய்வது எனப் பல பணிகளைத் தாமே மேற்கொண்டார். தாமெ அரும்பாடுபட்டு நைட்டிகப் பிரமச்சாரி விரதம் பூண்டு பெரும் பணியாற்ற முயற்சித்தார். யாழ்ப்பாணத்திலும், சென்னையிலும் அச்சகங்களை நிறுவி நூல்கள் பல வெளியிட்டார். தமிழ் வசன நடையில் ஒரு மறுமலர்ச்சியை உண்டு பண்ணியதால் அறிஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் 'வசன நடை கைவந்த வள்ளலார்' எனப் பாராட்டப்பட்டார். சைவப் பிள்ளைகள் சைவப் பாடசாலைகளிலே படிக்க வேண்டும் என்ற விருப்புக்கொண்டு செயலாற்றியவர். யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்திலும் இரு கலாசாலைகளை நிறுவினார். நாவலரின் பாலபாடங்களுக்கும், வசன நடைக்கும் ஒரு தனி மதிப்பு இன்றும் இருக்கிறது. என்றும் இருக்கும்!

ஈழத்து சைவ ஆலயங்கள் சீர்பெற அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் எனத் துணிவுடன் கூறி உழைத்தார். கேதீஸ்வரமும், கோணேஸ்வரமும் எமது தேசியச் சொத்து என எடுத்தியம்பியவர் ஆறுமுகநாவலர். ஆங்கிலப் புலமை பெற்றிருந்தும், தமிழில் தன் பணிகளைத் திரிகரண சுத்தியோடு செய்தவர் நாவலர். இவர் ஆங்கில மொழியில் பணியாற்றியிருந்தால் ஆங்கில உலகமும் இவரைப் போற்றியிருக்கும். தமிழ் மீதிருந்த பற்றினால் - சைவத்துக்கும் தமிழுக்குமாகவே வாழ்ந்தார்.

இலங்கைச் சுதந்திரத்துக்கு வித்திட்ட அரசியல்வாதிகளில் முதலிடத்தை வகிக்கும் இராமநாத வள்ளலுக்குச் சட்டசபை செல்ல ஆதரவளித்து மேடை மேடையாகப் பேசியவர் நாவலர். இதன் மூலம் ஈழநாட்டின் சுதந்திரத்துக்கு அடிகோலியவர்களுள் நாவலரும் ஒருவரென்றால் வெறும் பேச்சல்ல. சேர் இராமநாதன் சட்டசபையில் என்ன கூறினார் தெரியுமா? "The Champion Reformer of Hindus Arumuganavalar" (வீறுகொண்டு வெற்றிக்கொடி நாட்டிய இந்து சீர்திருத்தக்காரர் ஆறுமுகநாவலர்). என்னே இப்பெரியாரின் தீர்க்கதரிசனமும் சொல்லும் செயலும்!

நாவலரின் சேவைகளையும், நாவன்மையையும் கண்டு திருவாவடுதுறை ஆதீனம் நாவலர் என்னும் பொருத்தமான பட்டப்பெயர் கொடுத்து கௌரவித்து மகிழ்ந்தது. நாவலரின் வாழ்க்கை எப்போதும் சேவை, சேவை என்றே சென்றது. என் கடன் பணி செய்து கிடப்பதே. நாமார்க்கும் குடியெல்லோம் என முழங்கிய நாவுக்கரசர் வழிவந்தவரல்லவா?

இறுதியாக எங்கள் நாவலர் ஒரு சீர்திருத்தவாதி பெரும் அறிஞர். அறிவுக் களஞ்சியம், ஆண்மையின் பொக்கிஷம், அன்னியரின் அட்டூழியங்களை அடக்க வந்த அவதார புருஷர். சித்தாந்தச் சொற்கண்ட பிரசங்க பேரறிஞர். நூல்கள் பதிப்பதில் திறமை கண்டவர். தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் திறவுகோல். தீர்க்கதரிசனத்துடன் தொண்டாற்றிய தீரர்.

நாவலர் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால்...

பல அரிய சேவைகளைச் செய்திருப்பார். நாவலர் வாழ்க்கை வரலாறு வெரும் கட்டுக் கதையல்ல. ஈழத்து யாழ்ப்பணத்தில் தோன்றிய ஒரு பெருமகனாரின் உண்மைச்சரித்திரம். இன்று கலங்கி நிற்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் நாவலர் வாழ்க்கை தன்மானமுடன் வாழ வழிகாட்ட வேண்டும்.

"நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறந்தில ரேற்

சொல்லு தமிழெங்கே"