தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான "எழுத்துச் சிற்பி" பாலகுமாரன் காலமானார்.
பாலகுமாரன் தமிழ்நாட்டில் வாழும் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் தமிழாசிரியர் சுலோசனா என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர். தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் டிராக்டர் கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி உள்ளார்.
'மெர்க்குரிப்பூக்கள்' மூலம் ஏராளமான வாசகர்களைக் கட்டிப் போட்டவர் எழுத்தாளர் பாலகுமாரன். 'மெர்க்குரிப்பூக்கள்', 'தலையணைப்பூக்கள்', 'கரையோர முதலைகள்', 'பயணிகள் கவனிக்கவும்', 'இரும்பு குதிரைகள்' என 300க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதிய பாலகுமாரன், எண்பதுகளில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்து தன் எழுத்துக்களால் வாசகர்களைக் கட்டிப்போட்டார்.
ஆரம்ப கட்டத்தில் 'சாவி' பத்திரிகையில் பணிபுரிந்தார். ஆடிப்பெருக்கு பற்றி இவர் எழுதிய கட்டுரையும் நடிகை ஷோபா மரணம் குறித்த கட்டுரையும் எல்லோராலும் பாராட்டப்பட்டது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்தார். அதையடுத்து 'குணா', 'செண்பகத்தோட்டம்', 'மாதங்கள் ஏழு', 'கிழக்கு மலை', 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'ஜீன்ஸ்', 'பாட்ஷா', 'முகவரி', 'சிட்டிசன்' முதலான ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதினார் பாலகுமாரன்.
'அன்பு. இதுவே என் கதையின் பிரதானம். இதுவே எல்லோருக்க்கும் தேவையாயும் போதுமானதாகவும் இருக்கிறது. இது இருந்தாலே, கிடைத்துவிட்டாலே சமூகம் அழகாகிவிடும். மனிதர்கள் நிம்மதியாய் வாழ்வார்கள்' என்பதையே தொடர்ந்து தன் எழுத்துக்களிலும் நாவல்களிலும் பேட்டிகளிலும் வலியுறுத்தி வந்தார்.
ராஜராஜ சோழன் குறித்தும் தஞ்சை தேசம் குறித்தும் இவர் பல வருடங்களாக ஆய்வு செய்து எழுதிய 'உடையார்' எனும் மிகப்பிரமாண்டமான நாவல், வாசகர்களால் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. எல்லோரும் உடையார் படித்துவிட்டு கொண்டாடினார்கள்.
திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமாரை தன் குருநாதராக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தார். இரண்டு முறை பைபாஸ் செய்யப்பட்டும் கூட, சோழ தேசம் முழுவதும் பயணித்து நிறைய கதைகளை, படைப்புகளை வழங்கிக் கொண்டே இருந்தார்.
நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆனால், எழுத்தையை தவமாகக் கொண்ட பாலகுமாரன், தவமிருந்து எழுத்துக்களைப் படைத்த பாலகுமாரன் தன் எழுத்துக்களால் சூரிய சந்திரர்கள் உள்ளவரை வாழ்ந்துகொண்டே இருப்பார்.
பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும்கே. பாக்யராஜ்குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.