Search This Blog

Monday, February 3, 2020

சைக்கோ திரைப்படம் இயக்குநர் மிஸ்கின்


நீண்ட நாட்களுக்குப் பின் திரையரங்கத்திற்கு சென்று பார்த்த படம்.
வழக்கம் போல் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம் தான்.
ஒழுக்கத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் தண்டனைக் கொடுத்ததற்காக மாணவன் கொலை செய்து பழி வாங்குகிறான்.

மாணவப் பருவத்தில் சுய இன்பம் அனுபவித்ததற்காக, வில்லனுக்கு கிறித்துவ ஆசிரியைத் தினம் 60 பிரம்படிகள் என்று தண்டனைக் கொடுக்கிறார்.
பெண்கள் ஒழுக்கத்தை வற்புறுத்துபவர்களாகவும், ஆசிரியைகளாகவும் மட்டுமே வில்லனுக்குத் தெரிகிறது. பல மாணவர்களுக்கு முன் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை சிறையில் வைத்துவிட்டு அவருக்குப் பதிலாக அவரையே கொல்வது போல் பல பெண்களைக் கொல்கிறான் வில்லன். சிகரெட் பிடிக்கும் ஆசிரியை ஒழுக்க சீலியாக முன் வைக்கப்படுவதைக் கேள்வி கேட்க முடியாமல் தண்டனை வழங்குவதுதான் மனப்பிறழ்வு. சைக்கோத்தனம். நன்மைக்குள் ஒளிந்திருக்கும் தீமையைக் கொல்லல்தான் சைக்கோத்தனம்.
இந்தப் பொருள் சைக்கோ திரைப்படத்தில் ஓர் அடுக்கு. மற்றொர் அடுக்கு பௌத்த மதத்தின் பொருள். வில்லனின் பெயர் அங்குலிமால். கதையின் நாயகனின் பெயர் கௌதம். நாயகனிடம் தான் தோல்வி அடைந்துவிட்டதாகக் கதறுகிறான். ஆனால் இயக்குநர் மிஸ்கின் புத்தராகக் கற்பனை செய்திருப்பது நாயகியைத்தான் என்கிறார்.
நன்மையின் உலகம் பெரியது. அது குருட்டுத் தனமாகவும் நன்மையைச் செய்யும். அதற்கு ஒளி தேவை இல்லை. தீமையின் உலகம் சிறியது. இருளானது. குருட்டுத்தனமானது என்று நம்பப்பட்டது. அதில் ஒளியாக வரக்கூடியது தாயின் அன்பும் கருணையும் அரவணைப்பும். வெறும் வெற்று உடல் ஒழுக்கத்தை வற்புறுத்தும் பெண்களிடம் இதைக் காணமுடியாது. நன்மையின் உலகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் மட்டுமே நல்லவர்களாகிவிட முடியாது. நன்மைக்குள் தீமையின் பங்கையும் உள்ளிணைக்கவேண்டும். அதனைக் காணத்தான் கண்கள் வேண்டும்.
அதனால்தான் நாயகி தாயின் அன்பை நல்குவதாகக் கண்ட பின் தற்கொலை செய்துகொள்கிறான் வில்லன். தீமை விலகியது நன்மையாக மாறியது.

Mubeen Sadhika
https://mubeen-sadhika.blogspot.com/2020/02/blog-post.html

No comments:

Post a Comment