Search This Blog

Sunday, January 5, 2020

தமிழ்த்தேசியம் (பாமரத்தனமாக எதிர்பார்ப்பு)

எல்லாத் தரப்பும் எல்லா மனிதர்களும் தாம் சரியானவர்கள் என்றே நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால், நாம் மட்டுமே சரி என்று முறுக்கிக் கொண்டு நிற்பது ஒருபோதும் பிரச்சினை தீரப் போதுமானதில்லை. மற்றவர்களின் சரி என்ன என்பது பற்றிய கவனிப்பும் கணிப்பும் நமக்கு வேண்டியிருக்கிறது.
அநியாயங்கள், அடங்காப் போர்கள், பஞ்சங்கள், பாதகங்களினாலும் மனித உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உலகில், எவரும் நாம் முழுக்க முழுக்கச் சரியாக இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ள முடியாது. அப்படி நெஞ்சை நிமிர்த்திக் கொள்பவர்களையே மேலும் ஆபத்தானவர்களாய்க் கருத வேண்டியிருக்கிறது.
எதிர்த்தரப்பின் சந்தேகங்களைப் புறக்கணித்துவிட்டு எமது தீர்வை நாம் கோர முடியாது, பெற்றுவிடவும் முடியாது. மக்களிடமும் மனிதத்திடமும் நாம் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் எவரிடமும் பேச நமக்குத் தடை இல்லை. எல்லாத் தரப்புடனும் எல்லாச் சமூகங்களுடனும் நாம் பேச முடியும். நம்மிடம் மட்டுமே முழுச் சரியும் இருப்பதாக நினைத்துக் கொள்வதால்தான் இணக்கத்தைப் புறந்தள்ளும் இறுமாப்பு வெல்கிறது. வாழ்வு தோற்றுப் போகிறது.
இந்த நாட்டில் நமது தமிழ்த்தேசியம் போலவே, மறுதரப்பான சிங்கள தேசியத்தையும் கடந்த கால நடவடிக்கைகள் மூலம் வெகு தீவிரத்தன்மையுடன் வளர அனுமதித்து விட்டிருக்கின்றோம்.

அந்தச் சிங்கள தேசியத்தை மறந்துவிட்டு அல்லது அதை இல்லாதது போல் முற்றாக விலக்கி வைத்துக்கொண்டு நமது தமிழ்த் தேசிய கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருந்தால், எந்த வெளி சக்திகளாலும் அதற்கு உதவ முடியாது என்ற உண்மையைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம்.

எங்களுக்குத்தான் பிரச்சினை. எனவே சிங்கள மக்களைப் பொருட்படுத்தாது இலங்கை அரசைச் சர்வதேசம் அழுத்தவேண்டும் - அழுத்தும் என்று பாமரத்தனமாக எதிர்பார்க்கின்றோம். இதை அவர்கள் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மற்றபடி நம்முடைய தீர்வுக்கு, நாம் அரசாங்கத்துடன் பேசவேண்டும் என்பதையே பாந்தமாகவும் பலபடியாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை நாம் புரிந்துகொள்ள - ஒப்புக்கொள்ள விரும்பாததுதான் பிரச்சினையாகத் தெரிகிறது.
இலங்கை அரசுடனான பேச்சில் வெற்றி என்பது, சிங்கள மக்களிடமும் நம் கோரிக்கைகளின் நியாயத்தன்மை உணரப்படுவதனூடாகவே சாத்தியம். மோதல் போக்குடனான பேச்சுக்கள் மூலம் சிங்கள தேசியத்தை உசுப்பித் தீவிரப்படுத்தி விட்டுக்கொண்டு, இந்த நாட்டிற்குள் ஒரு தீர்வை நாம் கண்டுவிட முடியாது என்பதே யதார்த்தம்.
தமிழ்த் தேசிய உணர்வில் மட்டுமே நியாயம் இருக்கிறது என்று கருதிக்கொண்டு சிங்கள தேசியத்தைப் புறக்கணித்துப் பொங்குவது என்பது தனிநாட்டுக்கான பொருதலாகத்தான் இருக்கும். அது சாத்தியம் என்று நம்மில் எத்தனை பேர் இன்னும் கருதுகின்றார்கள் என்று கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.
சிங்கள தேசியத்துடன் உரையாடி அதை விரோதமற்ற நிலையில் வைத்திருக்கவேண்டும் என்பது எதிரிகளிடம் போய் கெஞ்சுவதா என்ற ரோசத்தையே நமக்கு உண்டாக்கும் என்றால், நாம் மனிதர்களாக வாழும் நம்பிக்கை அற்றவர்கள் என்பதே பொருள்!
ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் அரசொன்றை எப்படி எதிர்கொள்வது என்பதைக் குறித்து தமிழ் அரசியல் தரப்பினரிடத்திலே எந்த விதமான சிந்தனையும் செயற்திட்டமும் இல்லை. 1960, 70 களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் முறைமைகளையே இவை இன்று கைக்கொள்கின்றன. அதாவது நாற்பதாண்டுகளுக்கு முந்திய அரசியல் சிந்தனையையும் வழிமுறையையும்.
அந்தக் கால வழிமுறைகள் தவறு. தீர்வுக்குப் போதாது என்று இதற்குப் பிறகு எவ்வளவோ மாற்றங்கள் வெளிப்பரப்பில் நிகழ்ந்துள்ளன. ஆனால், நாம் இதையெல்லாம் புறக்கணித்து விட்டு நாற்பதாண்டுகள் பின்னோக்கிச் சென்று சக்குப் பிடித்த, காலாவதியாகிப்போன அரசியலை எடுத்து மேசையில் வைத்திருக்கிறோம். இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?


இன்று எந்தத் தமிழ்க் கட்சியும் நிகழ்கால - எதிர்காலத்துக்கான அரசியற் கொள்கை, செயற்திட்டங்கள், வழிமுறை, அணுகுமுறை எவற்றையும் கொண்டிருக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிகழ்காலத் தேவைகளை நிறைவேற்றக் கூடிய அரசியற் செயற்றிட்டங்கள் எதுவும் எந்தக் கட்சியின் இதயத்திலும் இல்லை. மூளையிலும் இல்லை.
இதனால்தான் இந்தக் கட்சிகளுக்கு இதயமும் இல்லை. மூளையும் இல்லை என்கிறேன். அப்படி இருந்திருந்தால் நிகழ்காலத்தை இப்படிச் சீரழிய விட்டிருக்க முடியாதல்லவா!
ஆகவே இதற்கான அரசியற் திடசித்தம் எந்தக் கட்சியிடத்திலுமில்லை. அரசியற் தரப்பினரிடத்தில் மட்டுமல்ல, தமிழ்ச்சமூகத்தின் இயங்கு சக்திகளாக இருக்கின்ற புத்திஜீவிகள், அரசியல் அறிஞர்கள், ஊடகத்துறையினர், பொது அமைப்புகளைச் சேர்ந்தோர் எனப் பிற தரப்பினரிடத்திலும் இவை இல்லை.
வேண்டுமென்றால் நாற்பதாண்டுகளுக்கு முன்பு வந்த பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளையும் இன்று வருகின்ற பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளையும் ஒரு தடவை எடுத்து ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது புரியும் இந்தச் சமூகம் எவ்வளவு தூரம் பின்னடைந்திருக்கிறது, மாற்றங்களைக் காணாதிருக்கிறது, அப்படியே இருக்கிறது என்று.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த அரசியலமைப்புத் தொடர்பான உண்மை நிலவரத்தை மனோ கணேசன் வெளிப்படுத்தியபோது கூட்டமைப்புக்குச் சங்கடம் ஏற்பட்டது. அரசியலமைப்புத் தொடர்பாக தமிழ்ச்சமூகத்துக்கு பல விதமான கற்பனைகளை உருவாக்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மனோ கணேசனின் உள்வீட்டுத் தகவல்கள் நெருக்கடியை உண்டாக்கி, உண்மையை அம்பலப்படுத்தின. இதனையடுத்து கூட்டமைப்புக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான மனோ கணேசனுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.
பின்னர் இது தொடர் விவாதங்களாக மாறியது. மனோ கணேசன் தன்னியல்பான அவருடைய வெளிப்படுத்தல்களின் மூலம் அரசாங்கத்தின் போக்கையும் தமிழ்ச்சமூகத்தின் நிலையையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார். இதுவும் கூட்டமைப்புக்கு நெருக்கடியைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எல்லாவற்றுக்கும் மௌனம் காப்பதும் எந்தக் கேள்வியும் இல்லாமல் எல்லாவற்றையும் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதும் தவறு என்று நேரடியாகவே விமர்சித்தார். இது நேரடியான மோதல் என்ற நிலையைத் தோற்றுவித்தது.
இதற்கெல்லாம் இன்னுமொரு உட்காரணமும் இருந்தது. கடந்த அரசாங்கத்தில் ரணிலுக்கு நெருக்கமாக யார் நிற்பது, யார் செல்வாக்கைப் பெறுவது என்ற போட்டி கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரனுக்கும் மனோ கணேசனுக்குமிடையில் நிலவியது. இது ஒரு பெரும் பனிப்போராகவே தொடர்ந்து கொண்டிருந்தது. மகிந்த – மைத்திரி கூட்டணி 2018 இல் ஆட்சிக்கவிழ்ப்பைச் செய்தபோது அதற்கெதிராக இந்த இருவரும் முன்னணிப்போராளிகளாக நின்று சமராடியது காட்சிகள் இந்தக் கணத்தில் உங்களுக்கு நினைவில் எழும்.
சுமந்திரன் நீதிமன்றத்தின் மூலம் போராடினார். மனோ கணேசன் கட்சிகளை ஒருங்கிணைத்து, எதிர்த்தரப்பின் முயற்சிகளை எல்லாம் முறியடிப்பதில் முன்னின்றுழைத்தார்.
ஆக மொத்தத்தில் தமக்குச் சாத்தியமான வழிகளில் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தனர். இது வெளிப்பரப்பில் செல்வாக்குப் பெறுவது வரையில் போட்டி நிலையை உருவாக்கியது. முக்கியமான வெளிநாட்டுத்தூதுவரங்கள் வரையில். மனோ கணேசன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற வகையிலும் சுமந்திரன், கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற வகையிலும் இந்த முக்கியத்துவப் போட்டி நிலவியது. ஆகவே பல முனைகளில் இந்த இருவரும் தம்மை நிறுவுவதற்கும் மேலெழுவதற்கும் முயற்சித்தனர். இதனால் கூட்டமைப்புக்கும் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் உரசல்கள் தீவிரமடைந்தன.
இதன் விளைவாக ஒரு கட்டத்தில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி வடக்குக் கிழக்கிலும் போட்டியிடும் என்ற அறிவிப்பை விடுத்தது. முற்போக்குக் கூட்டணியின் அறிவிப்பு கூட்டமைப்புக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. இதற்குப் பதிலடியாக உடனே “அப்படியென்றால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடக்குக் கிழக்குக்கு வெளியேயும் போட்டியிடும் என்று தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்தார்.
இருந்தாலும் முற்போக்குக் கூட்டணியின் அறிவிப்பு உண்டாக்கிய கலக்கம் கூட்டமைப்பை நிம்மதியாக இருக்க விடவில்லை. ஏற்கனவே வன்னி – கிளிநொச்சிக் களத்தில் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு மற்றும் வவுனியாவில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஆகியவற்றின் நெருக்கடிகள் ஒருபுறமிருக்கிறது.
இந்த நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வன்னியில் களமிறங்கினால் அது பெரிய நெருக்கடியாகி விடும் என்று பதறுகிறது கூட்டமைப்பு. இதன் விளைவாகவே வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மலையக மக்களுக்கான பிரதிநிதித்துவத்துக்கு ஒரு ஆசனத்தை ஒதுக்குவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Thanks 
Karunakaran Sivarasa,Tharunyan Ravi

No comments:

Post a Comment