Search This Blog

Friday, May 25, 2018

மட்டக்களப்பு வேடுவர் ஆய்வின் முன்னோடி செலிக்மன்

-என்.சரவணன்-
இலங்கையின் இனவரைவியல் பற்றிய ஆய்வுகளில் வேடுவர் பற்றி ஆய்வு செய்த செலிக்மன் தம்பதிகளின் ஆய்வு இன்று வரை மானுடவியலாளர்கள், இனவியலாளர்கள் போன்றோரால் போற்றப்பட்டு வருகிறது.
செலிக்மன் (Charles Gabriel Seligman) தனது ஆய்வை மேற்கொள்வதற்காக 16.12.1907 அன்று தனது துணைவியுடன் (Brenda Zara Salaman) இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்தடைந்தார். மொத்தம் மூன்று ஆண்டுகள் மட்டுமே அவர் தங்கியிருந்து நாடு முழுவதும் அலைந்து திரிந்து தனது ஆய்வை முடித்துக் கொண்டார். அவர் மேற்கொண்ட ஆய்வு 1911 ஆம் ஆண்டு “The Veddas” (வேடுவர்) என்கிற தலைப்பில் 623 பக்கங்களில் நூலாக வெளிவந்தது. அதை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் லண்டனில் வெளியிட்டது. இந்த நூல் உலகளவில் பிரசித்தம் பெற்றது.
இந்த நூலுக்காக செலிக்மன் தம்பதிகள் பல மாதங்கள் வேடுவர்களுடனேயே வாழ்ந்திருக்கிறார்கள். காடுகளிலும், குகைகளிலும் அவர்கள் கண்டவை, கேட்டவை என்பவற்றை விஞ்ஞானபூர்வமான ஆய்வுக்குட்படுத்தினார்கள். வேடுவர்களின் இசையை பதிவு செய்திருக்கிறார்கள். செலிக்மன் எடுத்த புகைப்படங்களும், ஓவியங்களும், விளக்கப் படங்களும் அந்த நூலில் பல இடங்களில் காணக் கிடைக்கிறன.
செலிக்மனும் அவரது துணைவி பிரண்டா சாராவும் அந்தப் பெரு நூலின் ஆசிரியர்கள். 98 ஆண்டுகள் கழித்து 2009 இல் இந்த நூலை இலங்கையில் சிங்களத்திற்கு மொழிபெயர்த்து (மொழிபெயர்ப்பு: நிஸ்ஸங்க பெரேரா) கொடகே பதிப்பகம் வெளியிட்டது. அதே ஆண்டு சிங்களத்தில் “பாஸ்ட் பப்ளிஷன்” (மொழிபெயர்ப்பு: சந்திரசிறி ரணசிங்க) என்கிற நிறுவனமும் வெளியிட்டது. தமிழில் செலிக்மன் பற்றி எங்கு தேடினாலும் சிறு தகவல் கூட கிடைப்பதில்லை.
ஆனால், அவரது ஆய்வை சிங்கள பேரினவாதிகள் போற்றுவதில்லை. அதற்கான காரணமும் இலங்கை சிங்கள நாடு என்கிற ஐதீகத்தை உடைக்கும் பல சான்றுகளும் அவரது ஆய்வில் புதைந்து கிடக்கின்றன. உதாரணத்திற்கு புத்தர் இலங்கைக்கு வந்திறங்கியது யாழ்ப்பாணத்திலிருக்கும் நாகதீபத்தில் என்கிற வரலாற்றுப் புரட்டை இன்றைய ஆய்வாளர்கள் பலர் மறுக்கிறார்கள். சமீபத்தில் கூட பௌத்த மதத் தலைவர்களில் ஒருவரான வல்பொல கல்யாணதிஸ்ஸ மஹா தேரோ ஆற்றிய ஒரு உரையில் “மகாவம்சத்தில் குறிப்படப்படும் நாகதீபம் என்பது யாழ்ப்பாணத்தில் இருப்பதல்ல. அது மகியங்கனைக்கு அருகில் இருக்கிறது என்றும். சில அரசியல் வரலாற்றுக் காரணங்களினால் அந்த உண்மை மறைக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.” என்று கூறியிருந்தார்.
செலிக்மன் தனது நூலில் நாகதீப என்கிற இடத்தைத் தான் மதவாச்சி என்று அழைத்து வந்திருக்கிறார்கள் என்று ஹென்றி பார்க்கரை ஆதாரம் காட்டுகிறார். ஹென்றி பார்க்கர் (Henry Parker) கிட்டத்தட்ட செலிக்மன் காலத்திலேயே “சிங்கள பழங்குடிகளின் வாய்மொழி நாட்டுப்புற கதைகளை ஆய்வு செய்து 1910இல் “Village folk-tales of Ceylon” என்கிற நூலை எழுதியவர். செலிக்மன் ஹென்றியை அவரின் நூலில் 122 இடங்களில் ஆதாரம் காட்டுகிறார். அதுபோல ஹென்றி பார்க்கர் 1909 இல் வெளியிட்ட முக்கிய நூலான புராதன இலங்கை (Ancient Ceylon) என்கிற நூலில் செலிக்மனின் ஆய்வை பல இடங்களில் பிரஸ்தாபிக்கிறார்.
செலிக்மன் தனது ஆய்வின் விபரங்களை (வரைபடத்துடன்) 23.05.1908 அன்று “இலங்கை றோயல் ஆசிய கழகத்தின்” கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார்.[i] கூட்டத்தின் போது நிகழ்ந்த கலந்துரையாடலும் அவரின் பரிந்துரைகளும் அக்கழகத்தின் சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன. அப்போது அந்தக் கழகத்தின் தலைவராக இருந்தவர் ஜோன் பெர்கியுசன். அவர் தான் செலிக்மனை தேசாபதியின் வேண்டுகோளின் பேரில் இலங்கைக்கு வரவழைத்தவர். இலங்கையின் தேசாதிபதி ஹென்றி மக்கலம் (Sir Heney McCallum) அந்த அவைக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். அக்கூட்டத்தை ஆரம்பித்து அவர் உரையாற்றும் போது “இலங்கையில் வேடுவர் இனம் மிகவும் வேகமாக அழிந்துவந்திருக்கிறது. இதப் பற்றிய விரிவான ஒரு சமூக ஆய்வொன்றின் அவசியம் கருதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹட்டன் (Haddon) அவர்களைக் கொட்டுக்கொண்டேன் அவர் இந்த விடயத்துக்கு பொருத்தமானவராக பேராசிரியர் செலிக்மனை எமக்கு பரிந்துரைத்தார்” என்றார். அப்போது அந்தக் கூட்டத்தின் இறுதியில் அக்கழகத்தின் உபதலைவராக இருந்த சேர் பொன் அருணாச்சலம் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து ஆமோதித்தார்.[ii]
செலிக்மன் தனது ஆய்வை முடித்து விட்டுத் திரும்பியதன் பின்னர் பல உலக நாடுகளில் இலங்கையின் வேடுவர் குறித்தும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் விரிவுரைகளை நிகழ்த்தியிருப்பதை அறிய முடிகிறது. [iii]
பின்வந்த ஆய்வாளர்கள் பலருக்கும் கைகொடுத்த நூல் அது. இனவரைவியல் மாத்திரமல்ல, தொல்லியல், சாதியம் பற்றிய ஆய்வுகளுக்கு கூட அவரது இந்த நூலை கையாண்டிருப்பதை பல இடங்களிலும் காண முடிகிறது.
இந்த ஆய்வைத் தூண்டிய காரணிகள் பற்றி அவரது முன்னுரையில் காணக் கிடைக்கிறது.
வேடர்களுக்கும் தமிழ் சிங்கள மக்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றிய ஆழமான ஆய்வு விபரங்களை அவர் முன்வைத்தார். அவரது நூலைப் பார்த்தால் அவருக்கு இது தொடர்பில் உசாத்துணையாக பயன்படுத்துமளவுக்கு அவருக்கு முந்திய நூல்கள கிடைக்கவில்லை என்பதை அறிய முடியும். ஆனால் அவருக்கு பின்வந்தோர் பலர் செலிக்மனின் ஆய்வைக் கொண்டாடுவதைக் காண முடியும்.
அவர் ஆய்வு செய்தது ஒட்டுமொத்த இலங்கையின் ஆதிவாசிகளை பற்றித்தான் என்றாலும் ஒரு தனியான அத்தியாயம் (12வது) கிழக்கிலங்கை கடல் வேடுவர் பற்றியது. இலங்கையின் கராவ (சிங்கள சமூகத்தில்), கரையார் (தமிழ் சமூகத்தில்) ஆகிய சாதிகளை ஆராய்ந்தவர்களும் இந்த ஆய்வை உன்னிப்பாக கையாண்டுள்ளனர்.
இலங்கையின் பழங்குடிகளை ஆராய்பவர்கள் நூற்றாண்டுக்கு முன்னரேயே அது பற்றிய குறிப்புகளை எழுதிய Robert knox,John Davy, D.Pridham, Sir Emerson Tennent, B.F.Hartshorne, John Bailey, C.S.V.Stevens போன்றோரின் குறிப்புகளையும் கையாள்வார்கள். இலங்கையின் பழங்குடிகள் பற்றி இவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் பற்றிய விபரங்களைப் பற்றி 1899 இலேயே பேராசிரியர் W.M.TURNER, எழுதிய“Contributions to the Craniology of the people of the Empire of India” என்கிற நூலில் நிறையவே எழுதியிருக்கிறார். செலிக்மன் போல அதை ஒரு ஆழமான, விஞ்ஞானபூர்வமான விடயதானமாக எடுத்து கள ஆய்வுகள் செய்து பன்முக கோணத்தில் விரிவான விஞ்ஞானபூர்வமான ஆய்வாக முன்வைத்தது இல்லை.
அவர் மட்டக்களப்பு வேடுவர் குறித்து குறிப்பாக கடல் வேடுவர் குறித்து எழுதியவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.

No comments:

Post a Comment