Search This Blog

Wednesday, February 21, 2018

இளையராஜாவும் மலேசியா வாசுதேவனும். ...


இளையராஜா "அன்னக்கிளி" படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற நண்பரான மலேசியா வசுதேவனுக்கு தனது "16 வயதினிலே" படத்தில் ஒரு வாய்ப்புத்தர அவரால் முடிந்தது. அதுவும்கூட தற்செயலாக நடந்ததுதான் என்றாலும் பொருத்தமாக நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடுவதாக இருந்த பாடலை அவருக்குத் தொண்டை சரியில்லாமல் போகவே மலேசியா வாசுதேவனைப் பாடவைத்தார் இளையராஜா. "ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு" என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் முட்டி எதிரொலித்தது அந்தப் பாடல். மலேசியா வாசுதேவன் என்றொரு பாடகரை அழுத்தமாகத் தமிழ் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்ட பாடல் அதுதான். அந்தப் பாடல் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது என்றே சொல்லவேண்டும். முன்னெப்போதும் கேட்டிராத முற்றிலும் ஒரு புதிய அழுத்தமான குரலை அவர்கள் கேட்டார்கள். தங்களது கிராமிய இசை வடிவிலேயே கேட்டார்கள். தமிழ் ரசிகர்களின் மனங்களில் இந்தப் பாடல் வாயிலாக அழுத்தமாக அமர்ந்துகொண்டார் மலேசியா வாசுதேவன்.
நாற்பத்தாண்டுகள் ஓடிவிட்டன. மலேசியா வாசுதேவன் 8 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாகப் பாடிவிட்டார். அதிலும் குறிப்பாக இளையராஜாவின் இசையமைப்பில் அதிகபட்சமான பாடல்கள். எல்லா வகையான பாடல்களையும், எல்லா தரப்பினருக்காகவும் அவர் பாடியிருக்கிறார். வாசுதேவனின் முழு ஆளுமையையும் வெளிக்கொணர்ந்த பெருமை இளையராஜாவையே சாரும், அவர் பல இசையமைப்பாளரிடமும் பணியாற்றியிருந்த போதிலும். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பாடிப் பெருமை சேர்த்திருக்கிறார் மலேசியா வாசுதேவன்.
இளையராஜா அவருக்கு மென்மையான காதல் மெலடியில் நிறைய வாய்ப்பளித்திருக்கிறார். "இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது..." (சிகப்பு ரோஜாக்கள்), "வான் மேகங்களே வாழ்த்துங்கள், பாடுங்கள்..." (புதிய வார்ப்புகள்), "கோடைக் காலக் காற்றே..." (பன்னீர்ப் புஷ்பங்கள்), "பூவே இளைய பூவே... வரம் தரும் வசந்தமே... மடிமீது தேங்கும் தேனே... எனக்குத்தானே..."(கோழி கூவுது), "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ..."(தூரல் நின்னு போச்சு) இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். பட்டியல் முடியாது. அத்தனையும் அழகுப் பாடல்கள், அத்தனையும் தேனாக இனிக்கும் பாடல்கள்.
இவற்றுக்கு இணையாக எம்.எஸ்.விஸ்வநாதனும் பல பாடல்களை அவருக்குத் தந்திருக்கிறார். "எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை"(சரணாலயம்), "எண்ணியிருந்தது ஈடேற..."(அந்த ஏழு நாட்கள்) போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகள்.
முரட்டுக்காளையில் அவர் பாடிய "பொதுவாக எம்மனசு தங்கம்" பாடல் இன்று வரையில் வரும் எல்லாக் குத்துப் பாடல்களையும் வென்றுகொண்டேயிருக்கிற அதிசயத்தைப் பார்க்கமுடிகிறது. உணர்ச்சி ததும்ப பாசம் இசைக்கும் "ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு"(தர்ம யுத்தம்) பாடல் தங்கைகளுக்காக அண்ணன்களின் அன்புக்குரல். "பட்டு வண்ண ரோசா வாம்..."(கன்னிப்பருவத்திலே), "பொன் மானத் தேடி நானும் பூவோடு வந்தேன்..."(எங்க ஊரு ராசாத்தி) போன்ற பாடல்கள் நாட்டுப்புற இசையின் நளினத்தோடு அன்பையும் சோகத்தையும் அள்ளி அள்ளி வழங்கும் பாடல்கள்.
மலேசியா வாசுதேவனுக்கு 16 வயதினிலேயில் வாய்ப்பளித்த அதே இயக்குநர் பாரதிராஜாதான் தனது "ஒரு கைதியின் டைரி" படத்தில் வில்லன் வேடம் தந்து நடிக்கவும் வைத்தார். தமிழ் சினிமாவின் மிக நல்ல குணச்சித்திர நடிகராக அவர் இன்னொரு அவதாரமெடுத்தார். 85 படங்களில் பல்வேறு பாத்திரங்களில் அவர் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். "எண்ணம் தோன்றியது எழுதத் தூண்டியது" என்பது அவர் எழுதி 2010 வெளிவந்த கவிதை நூல். ஆமாம், கவிஞராகவும் அவர் வெளிப்பட்டிருக்கிறார். படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக் கிறார். அவருடன் நெருக்கமாக இருந்த சகாக்களுக்கு அவரது இன்னொரு முகமும் தெரியும். விளம்பரமின்றி பிறருக்கு உதவும் முகம்தான் அது.
சாதாரணப் பின்னணியிலிருந்து வந்தவர்தான் அவர். தன்னை உயர்த்திக்கொள்ள அவர் தனது திறமை ஒன்றையே நம்பியிருந்தார். தனது குரலால் அவர் தமிழ் ரசிகர்களை பலகாலம் கட்டிப்போட்டிருக்கிறார். கலைக்கும், இப்படிப்பட்ட கலைஞனுக்கும் எங்காவது மரணம் உண்டா?
மலேசியா வாசுதேவன் பாடவந்த காலம் குறித்துக் கொஞ்சம் பரிசீலித்தால் அவரது பங்களிப்பு எத்தகைய மகத்தானது என்பதையும் நாம் உணரமுடியும். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசை மேதை கே.வி.மகாதேவன் கோலோச்சிய காலத்தில் டி.எம்.சௌந்தரராஜன் கொடிகட்டிப் பறந்தார். மெல்லிசைக்கு செவ்வியல் இசையே அடிப்படையாக இருந்தது. சினிமாவுக்குக் காவியத் தன்மை வழங்குவதில் போட்டி நிலவிய காலம் அது. அதற்கேற்ப செவ்வியல் தன்மைகொண்ட கவித்துவமான பாடல்கள் உருவாகின. அவற்றுக்கு இசை வடிவம் தந்தபோது டி.எம்.எஸ்.ஸின் குரல் அதில் பெரும் பங்காற்றியதை மறுப்பதற்கில்லை. ஏனைய பிரபலப் பாடகர்கள் பெண்தன்மை கலந்த குரலில் பாடிக் கொண்டிருக்க, சௌந்தரராஜன்தான் முழு ஆணின் குரலை முன்வைத்தார். காலம் மாறியது. இசைஞானி இளையராஜா முன்னணிக்கு வந்த காலம் சினிமாவின் உள்ளடக்கமும் மாறத் தொடங்கிய காலம். கிராமங்களை நோக்கி காமிராக்களைத் தூக்கிக்கொண்டு போகத் தொடங்கியபோது சினிமாவின் உள்ளடக்கமும் மாறத் தொடங்கியது.
செவ்வியல் மரபிலிருந்து வந்த பழைய இசையமைப்பாளர்களுக்கு மாற்றாக நாட்டுப்புற மரபிலிருந்து வந்துசேர்ந்த இளையராஜாவின் இசையில் மண் மணம் தூக்கலாக இருந்தது இந்த மாற்றத்தைக் கட்டியம் கூறியது. இந்தப் புதிய நிலைமைக்கு ஏற்ற குரலுடன் இளையராஜாவின் தேவைக்கேற்ப வந்துசேர்ந்தவர் மலேசியா வாசுதேவன் மட்டுமே. அதாவது, காலத்தின் தேவையாக வந்தவர் மலேசியா வாசுதேவன் என்றே சொல்வேன். எத்தனை பாடகர்களைப் பாடவைத்த போதிலும் இளையராஜாவின் புதிய சூழலின், புதிய அணுகுமுறையின் தேவையை நிறைவுசெய்த ஒரே பாடகர் மலேசியா வாசுதேவன்தான்.
முன்னமே குறிப்பிட்டதுபோல, டி.எம்.சௌந்தரராஜனை ரசித்துப் பழகியிருந்த ரசிகர்களின் ஏக்கத்தைப் பூர்த்திசெய்யும் விதமாக அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடியவராகவும் மலேசியா வாசுதேவன் ஒருவரே இருந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எவருடைய இசையமைப்பில் பாடினாலும் அது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலாக மட்டுமே தோன்றும். இசையமைப் பாளரை இனங்காண்பது கொஞ்சம் சிரமமானதாக இருக்கும். மாறாக, மலேசியா வாசுதேவன் பாடுகிறபோதுதான் அது இளையராஜா இசையமைத்த பாடல், எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல் என்று இனம் காணஇயலும்.
அதே நேரம் அந்தப் பாடலில் மலேசியா வாசுதேவனின் முகமும் தெரியாமல் போகாது. தான் பாடும் பாடலின் இசையமைப்பாளரின் அடையாளத்தை மறைக்காமலேயே தன்னையும் வெளிக்காட்டிக்கொள்ளக்கூடிய நுட்பமான இயல்பு மலேசியா வாசுதேவனின் குரலின் தனிச் சிறப்பாக இருந்தது. இதுவே அவர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நிலைத்து நின்றதற்கான பிரதான காரணமாகப் படுகிறது. இந்தத் தனித்துவக் குரல் வளத்தோடு அவரது நல்ல தமிழ் உச்சரிப்பும் அவருக்குக் கூடுதல் பலம் தந்தது.
பின்னாளில் மலேசியா வாசுதேவனுக்கு இணையான தனித்திறன் கொண்ட இன்னொரு பாடகர் தனக்குக் கிடைக்காத நிலைமையில்தான், தானே நாயகர்களுக்கு டூயட் பாட இளையராஜா துணிந்தாரோ என்னவோ. இதற்கு முன்பெல்லாம் இசையமைப்பாளர்கள் காட்சிப் பின்னணியில் தத்துவம் ததும்பும் சோக கீதம் இசைப்பதுதானே வழக்கம்? அப்படித்தானே எம்.எஸ்.விஸ்வநாதன் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். .
இந்தப் பின்னணியில்தான் மலேசியா வாசுதேவன் நமக்கெல்லாம் வியப்பளிக்கிறார். தமிழ் சினிமாவின் வரலாற்றுத் தேவையெனவே அவர் இங்கு வந்துசேர்ந்தார். அந்தத் தேவையைத் தன்னால் இயன்றளவு நிறைவேற்றினார். இளையராஜா எனும் இசைஞானியின் உள்ளத்துக்கு நெருக்கமாக அமைந்திருந்தது அவரது குரல் வலிமை. தமிழில் எல்லா நாயகர்களுக்காகவும் அவர் பின்னணி பாடியிருக்கிறார். எல்லா வகையான கதை அமைப்புகளிலும் அவரது தெளிந்த கணீர்க் குரல் கச்சிதமாகவே பொருந்திப்போயிருக்கிறது. முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அவர் பாடியவை இவை எல்லாவற்றின் உச்சமாக உயர்ந்து நின்று இசையின் பேரின்பப் பிரவாகமாகவே பெருக்கெடுக்கிறது.
அதிலும் குறிப்பாக "பூங்காற்று திரும்புமா" பாடல் கேட்கிற ஒவ்வொரு பொழுதிலும் மனசைப் பிழிந்து ஏதேதோ செய்கிறது. இனம் தெரியாத உணர்வொன்று அப்பிக்கொள்ள நாம் செய்வதறியாது தவிக்கிறோம். உள்ளே அழுது, வெளியே சிரிக்கிற ரசவித்தையை இந்தப் பாடல் தனக்கேயுரிய வீரிய ஆற்றலின் துணைகொண்டு நிறைவேற்றிக் களிப்புறுகிறது. டி.எம்.எஸ். இல்லாத இடம் வெற்றிடமாகி விடவில்லை என்பதைச் சொல்லாமல் உணர்த்தி நிற்கிறது இந்தப் பாடல். இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் தூண்டிவிட்ட நெருப்பைக் கொளுந்துவிட்டு எரியச் செய்து கேட்போரைச் சூடேற்றி, அவர்களது எண்ண ஓட்டங்களைச் சாம்பலாக்கிப் போடுகிறது பாடுகிற இந்தப் பாட்டுக்காரனின் கிறங்கடிக்கும் குரல் இனிமை.
எத்தனைக் காலமானாலும் இறவா வரமல்லவா அந்தப் பாடல்கள் வாங்கி வந்திருக்கின்றன? பாடிவிட்டுச் சென்றவரை காலம் தின்று, ஏப்பமிட்டபோதிலும், அவர் விட்டுச்சென்ற அவரது குரலை காற்றும், காதுகளும் எப்படி மறுதலிக்கும் சொல்லுங்கள்? கலைஞன் எப்படிக் காலமாவான்? ஆமாம், காற்றிருக்கும் காலம் வரையில் மலேசியா வாசுதேவனுக்கும் மரணம் என்பது இல்லவே இல்லைதானே?.!!
நெகிழ்ச்சியுடன்...கிறிஸ்டினா......!


No comments:

Post a Comment