Search This Blog

Tuesday, June 17, 2014

ஸமாதி என்பது தியானத்தின் இறுதி நிலைப்பாடு

ஸமாதி என்பது தியானத்தின் இறுதி நிலைப்பாடு. இராஜயோகமான அஷ்டாங்க யோகத்தின் எட்டாவது நிலை. சிலருக்கு தியானம் என்றாலே பயம் வந்து விடுகிறது. ஏனென்றால் அதில் ஸமாதி என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒருவேளை அப்படியே ஸமாதியாகி விடுவோமோ என்று பயப்படுகிறார்கள். பாவம் என்ன செய்ய ? ஆதிக்கு சமமான நிலையை அடைவதையே சமாதி என்பார்கள். அதையும் தாண்டி ஆதியாகவே ஆகி விடுவது என்கிற நிலை ஒன்று இருக்கிறது. ஆதிக்கு சமமாக என்றால் தூய்மைப்படுத்தப்படுதல் என்பதைக் குறிப்பதற்கேயாகும். ஆதியைப் போல பரிசுத்தம் ஆனவராக, களங்கமற்ற, வினைகளற்ற, மலங்கள் அற்றவராக ஆக்கப்படும் நிலையே சமாதி நிலை.
மனம், வாக்கு கடந்த தெய்வீக அனுபவம். அது ஒருவர் சொல்லி நாம் உணர முடியாது. அனுபவத்தால் விளையும் அமைதி, ஆனந்தம், இன்பம்.
பரமாத்மா,ஜீவாத்மா என்ற பேதம் கிடையாது. அனைத்து மனச் செயல்களும் அங்கே ஒடுங்கி நிற்கும்.
புறத்தொடர்பு அனைத்திற்கும் அப்பாற் பட்டது. அதனால் அது செயலற்றது என்று ஆகிவிடாது. அதுவே பூரண விழிப்பு நிலையாகும். ஸமாதி நிலையை அடைய ஒருவருக்கு கண்டிப்பான பிரம்மச்சரியம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு, மனத்தூய்மை அவசியம் என்று சொல்லப்படுகிறது.

மனத்தூய்மையற்றவர்களால் ஸமாதி நிலையில் புக முடியாது. தூய்மையான மனமே பேறாற்றலின் திடீர் அழுத்தத்தை தாங்கும் வல்லமை பெற்றுத் திகழும்.
ஸமாதியினாலேதான் ஒருவன் அறியாததை அறிய முடியும். காணாததைக் காண முடியும். புகமுடியாத வற்றில் எல்லாம் புக முடியும். ஸமாதி என்பது கல்லைப் போன்ற ஜட நிலையல்ல.அது மனமானது பூரணமாக தியானத்தில் மூழ்கிய நிலை. ஜட நிலையில் உழலும் உயிரை ஆன்மீக நிலைக்கு, அதாவது தன் யதார்த்த நிலைக்கு உயர்த்தும் நிலை. முற்றிலுமாக சுத்திகரிக்கப்படும் நிலை. புற வாழ்வை விடுத்து உள்முகமான நிறை வாழ்வை அடைவது. மனமானது தியானிக்கப்படும் பொருளுடன் ஒன்றி தன் உணர்வை இழந்துவிடும். ஸமாதியின் உச்ச கட்டமான நிர்விகல்ப ஸமாதியை அனுபவித்த ஒருவன் பிறப்பு, இறப்பை கடந்தவனாவான். குரு வழிகாட்டுவார், துவக்கி வைப்பார் நாம் நம முயற்சியினாலேயே ஸமாதி நிலையை அடைய முடியும்.
பூரண யோகியாகி அற்புத சமாதியை அனுபவிக்க விரும்பும் ஒருவர் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். மனதைக் கட்டுப்படுத்துதலே ஞானத்திற்கு வழி வகுக்கிறது. இதையே நிரோதம் என்பார்கள். இந்த நிரோதம்தான் ஆன்மீக மற்றும் அனைத்து சாதனைகளின் அடிப்படையாக இருக்கிறது. எல்லா வழிபாடுகளின் சாரமும் மன அடக்கமே. அதுவே தியானமும், ஞானமுமாகும். பொருள்களில் இருந்து மனமானது பூரணமாக விலக்கப்பட வேண்டும். இதயத்தில் இருந்து மனமானது கரைந்து போகிற அளவு மனதை அடக்க வேண்டும்.அப்பொழுதுதான் பூரண உணர்வை, பூரண சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். உண்மையான சமாதி என்பது புலன் கடந்த அறிவேயாகும். அதுவே ஞானமுமாகும். சமாதி நிலையில் ஞானாக்கினியால் நமது எல்லா சந்தேகங்களும், மயக்கங்களும் மற்ற அவித்தை, காமம், கர்மம் என்ற மும்முடிச்சுகளும் அழிக்கப்படுகின்றன. எல்லா சம்ஸ்காரங்களும், வாசனைகளும் வறுக்கப்படுகின்றன. எனவே அது பூரண பயமின்மையையும், அசையாத திட நிலையையும் அளிக்கின்றது. ராமர், கிருஷணர், ஆதி சங்கரர் போன்ற மகான்கள் அனைவரும் சமாதி நிலையிலேயே இருந்து கொண்டு உடல் வாழ்வை நடத்திக் காட்டியவர்கள். சமாதியில் நிலை பெற்ற மகான் தன் மனதையும், உடலையும் பூரண நடுநிலையில் வைத்துக் கொண்டு சமூகத் தொண்டாற்றினார்கள். ஆனால், பரமாத்மாவை ஒருவன் உணர்ந்து விட்டால் அங்கே தியானமோ, ஸமாதியோ கிடையாது. அதுதான் விடுதலை.

No comments:

Post a Comment