Search This Blog

Monday, January 9, 2012

அழுக்கின் அழகு



 
கண்ணாடிகளே சுவராகப் பதிக்கப்பட்டு, பிரமாண்டமாக எழுந்து நின்றது அந்தப் பத்து மாடிக் கட்டடம். முகப்பில் இருந்த ஆங்கிலப் பெயர்ப் பலகை, அது ஒரு மென்பொருள் நிறுவனம் என்பதைக் கூறியது. அதன் இடப்புற வாசலில், இன்னும் கட்டட வேலைகள் நிறைவு பெறாமல் தொடர்ந்து கொண்டு இருந்தன. ஆண்களும் பெண்களுமாக செங்கல்லையும், சிமென்ட்டையும் கட்டடமாக உருமாற்றிக்கொண்டு இருந்தனர்.

இந்தப் பக்கம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணி நேரம் துவங்கியிருந்தது. பிரதான வாசலில் கார்களும் பைக்குகளுமாகக் கடந்துகொண்டு இருந்தன. அடையாள அட்டைகள் ஊசலாட, காதுகளில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பொருத்திய அழகிய யுவன்களும் யுவதிகளும் பரபரப்பாக நடை பயின்றுகொண்டு இருந்தனர்.

ஸ்வப்னா இறுக்கமான ப்ளூ ஜீன்ஸ் அணிந்திருந்தாள். அதைக் காட்டிலும் இறுக்கமான வெள்ளை நிற டாப்ஸ் அவளது அழகை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. ஜீன்சுக்கும் டாப்சுக்கும் இடையே இரண்டு விரற்கடை அகலத்தில் அழகு 'இடை'வெளி. காலில் கறுப்பு நிற ஹைஹீல்ஸ். சுருள் தலைமுடியை பாண்ட் செய்திருந்தது அவளுக்குக் கூடுதல் கவர்ச்சியைத் தந்தது. ஸ்லீவ்லெஸ் என்பதால் வழவழப்பான கைகளும், பளபளப்பான முகமும், 'ஒன்ஸ்மோர் பார்க்கலாமா மச்சான்?' என்று இளசுகளைச் சுண்டி இழுத்தன. ஸ்வப்னாவுக்கு எந்தக் குறையும் இல்லாத அழகில், அருகில் ஜீன்ஸ் குர்தா வர்ஷா.

“என்ன ஸ்வப்ஸ், இன்னிக்கு ஜொலிக்கிறே... என்ன விசேஷம். டாப்ஸ் புதுசா?”

“நத்திங் ஸ்பெஷல். டாப்ஸ் ஓ.கே-வா?" சிரித்தாள்.

“கிளாஸ்! நெக் ரொம்ப நெருக்கமா இருக்குது. இன்னும் கொஞ்சம் இறக்கமா இருந்தா, சூபர்ப். பசங்க தெறிச்சு ஓடிடுவாங்க!"

"அப்படியா சொல்ற... பண்ணிடலாம்!" - கண்ணடித்தாள். இருவரும் பேசிக்கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.

அதே நேரம் இடதுபுறம் கட்டட வேலை நடந்துகொண்டு இருந்த தலத்தில்... நைந்து அழுக்கான சேலையில் இருந்தாள் சாந்தி. அவள் தலையில் கிழிந்த சாக்குத் துணி சும்மாடும், கைகளில் செங்கல் சட்டியும், கால்களில் பிய்ந்த ரப்பர் செருப்புகளும்... உடம்பு முழுக்க சிமென்ட்டும், செங்கற்தூளும் அப்பியிருந்தன!

"அண்ணே... செங்கல் சட்டியைத் தலைக்கு மேலே வெச்சுக்கிட்டு, ரெண்டு கையாலயும் பிடிச்சுத் தூக்கிட்டுப் போவ ஒரு மாதிரியா இருக்குது. சுத்தியும் ஆம்பளைங்களா இருக்காங்க. நாளைக்கு வீட்லேர்ந்து நானே எடுத்துட்டுவந்திடுறேன். இன்னிக்கு ஒருநாள் மட்டும் மேல போட்டுக்கிடறதுக்கு ஒங்க பழைய சட்டை எதுனா இருந்தா குடுங்கண்ணே" - மேஸ்திரியிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தாள் சாந்தி.
 

No comments:

Post a Comment