Search This Blog

Tuesday, September 13, 2011

முப்பது செகண்ட் யுத்தம்


முப்பது செகண்ட் யுத்தம்

Posted by: என். சொக்கன் 
பிரதான சாலையிலிருந்து எங்கள் வீடு முன்னூறு மீட்டர் தொலைவில் உள்ளது.
இதில் முதல் நூறு மீட்டர் பிரமாதமான தார்ச் சாலை. பின்னர் ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கினால் அதைவிடப் பிரமாதமான சிமென்ட் சாலை.
இந்த சிமென்ட் பாதையில் சுமார் ஐம்பது மீட்டர் நடந்தபிறகுதான், பிரச்னை தொடங்கும்.
பிரச்னை இல்லை, பிரச்னைகள்.
எங்கள் ஏரியாவில் குறைந்தபட்சம் நூற்றைம்பது நாய்கள் இருப்பதாக நான் ஒரு மனக் கணக்கு வைத்திருக்கிறேன். அநேகமாக எல்லா நிறத்திலும், எல்லா உயரத்திலும், எல்லா வகையிலும், எல்லா இடங்களிலும் இவற்றைப் பார்க்கமுடியும்.
பகல் நேரங்களில் இந்த நாய்கள் எங்கே போய் ஒளிந்துகொள்கின்றன என்று தெரியவில்லை. ராத்திரி ஒன்பதே முக்கால் மணிக்குமேல்தான் இவை பகிரங்கமாகத் தெருக்களில் திரியத் தொடங்கும்.
வெறுமனே திரிந்தால் ‘பருவாயில்லே’. போகிற, வருகிறவர்களைப் பார்த்துக் கோரப் பல் தெரிய உறுமினால்?
எனக்கு நாய் என்றால் ரொம்பப் பயம். சின்ன வயதிலிருந்து ஒரு நாய்க் குட்டியைக்கூட நான் தொட்டுப் பார்த்தது கிடையாது. நடுங்கிப்போய் ஓரமாக நின்றுவிடுவேன்.
ஹைதராபாதில் நான் வேலை செய்யத் தொடங்கிய காலத்தில், தெருநாய்ப் பிரச்னை அளவுக்கு அதிகமாக இருந்தது. நாங்கள் அங்கே போய்ச் சேர்ந்த மூன்றாவது வாரம், ஒரு ஏழு வயதுப் பையனை முப்பது வெறிநாய்கள் சூழ்ந்து கடித்துக் கொன்று தின்றுவிட்டன என்று பத்திரிகையில் செய்தி படித்துப் பதறினோம்.
அதன்பிறகு, நாங்கள் தெருவில் கவனமாக நடக்கத் தொடங்கினோம். ’நாயைக் கண்டால் தூர விலகு’ எனும் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தோம்.
ஹைதராபாதில் நாங்கள் குடியிருந்த ஏரியாவின் மிகப் பெரிய குப்பைத் தொட்டி எங்கள் தெருவில்தான் இருந்தது. அதைக் கிளறி அகப்படுவதைத் தின்பதற்காகவே ஏகப்பட்ட நாய்கள் அங்கே சுற்றிக்கொண்டிருந்தன.
நல்லவேளையாக, அந்த நாய்களுக்குக் குப்பைத் தொட்டியிலேயே நல்ல தீனி தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆகவே அவை எங்களைப் பெரிதாக லட்சியம் செய்யவில்லை.
பின்னர் பெங்களூர் வந்தபிறகு, நண்பர்களுடன் ஓர் அடுக்ககத்தில் தங்கியிருந்தேன். அங்கே கீழ் வீட்டில் ஒரு முரட்டு நாய் இருந்தது.
அந்த நாய் பார்ப்பதற்கு ஒரு பெரிய சைஸ் கன்றுக்குட்டிபோல் ஆஜானுபாகுவாக இருக்கும். எந்நேரமும் வாயைத் திறந்து, நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதால் அதன் பற்கள் ஒவ்வொன்றும் குட்டிக் குட்டிக் கத்திகள்போல பயமுறுத்தும்.
இத்தனைக்கும், அந்த நாயை அவர்கள் எப்போதும் பாதுகாப்பாகக் கட்டிப்போட்டுதான் வைத்திருப்பார்கள். ஆனாலும், மனோகரா படத்தில் வருவதுபோல் சங்கிலியை அறுத்துக்கொண்டு வந்து கடித்துவிடுமோ என்று எனக்குப் பயம்.
சரி, அந்த நாய் இருக்கும் திசைக்கே போகவேண்டாம் என்று ஒதுங்கவும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், எங்கள் அடுக்ககத்தில் தபால் பெட்டி அந்த நாய் கட்டப்பட்டிருந்த தூணுக்கு மிக அருகே இருந்தது.
அப்போதுதான் நான் பத்திரிகைகளுக்கு நிறைய எழுதத் தொடங்கியிருந்த நேரம். தினந்தோறும் ஏதாவது ஒரு கதை நிராகரிக்கப்பட்டுத் திரும்பி வரும், பதினைந்து நாளைக்கு ஒருமுறை ஏதாவது கதை ஏற்கப்பட்டு இலவசப் பிரதி வரும், அதையெல்லாம் பார்த்து மனம் உடைவதற்கு அல்லது மகிழ்ச்சி அடைவதற்கு அந்தத் தபால் பெட்டிதான் எனக்கு ஆதாரம்.
இதனால், வேறு வழியில்லாமல் தினந்தோறும் பயந்து பயந்து அந்தப் பெட்டியை நெருங்குவேன். சத்தம் போடாமல் அதனைத் திறக்க முயற்சி செய்வேன்.
உங்களுக்கே தெரியும். உலகத்தில் எந்தத் தகரப் பெட்டியும் சத்தம் போடாமல் திறக்காது. நீங்கள் அதை எண்ணெயிலேயே குளிப்பாட்டினாலும் ஒரு சின்ன ‘க்ரீச்’சாவது வந்தே தீரும்.
ஆகவே ஒவ்வொருமுறையும் நான் அந்த நாயிடம் தவறாமல் மாட்டிக்கொள்வேன். அது தூணருகே நின்றபடி என்னைப் பார்த்துக் கண்டபடி குரைக்கும், பயமுறுத்தும்.
அப்போது நான் பயந்து நடுங்குவதை யாரேனும் பார்த்தால், அந்த அபார்ட்மென்டில் திருட வந்தவன், நாயிடம் மாட்டிக்கொண்டுவிட்டேன் என்றுதான் நினைப்பார்கள். அந்த அளவுக்கு அந்த நாய் என்னைப் பயமுறுத்தி வைத்திருந்தது.
ஏதோ என்னால் முடிந்தது, வேறு வீட்டுக்கு மாறியபிறகு அந்த நாயைப்பற்றி ஒரு சிறுகதை எழுதினேன். அதைக் குங்குமத்தில் ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியத்துடன் அழகாகப் பிரசுரித்தார்கள்.
பெங்களூரில் நான் இரண்டாவதாகக் குடியேறிய வீட்டுப் பக்கம் நாய்த் தொந்தரவு இல்லை. மூன்றாவதாகச் சொந்த வீடு வாங்கிக்கொண்டு இடம் மாறியபோது, மறுபடியும் நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன.
வழக்கமாக நான் அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரம் இரவு ஏழு, ஏழே கால். அதற்குமேல் ஏதாவது முக்கிய வேலை வந்தால் பிரச்னையில்லை. வீட்டில் இணையம் இருக்கிறது, பார்த்துக்கொள்ளலாம்.
என்றைக்காவது அபூர்வமாக, ஒன்பதரை, பத்து மணிவரை அலுவலகத்தில் தங்க நேர்ந்துவிடும். அப்போதுதான் இந்த நாய்களின் பிரச்னை பூதாகரமாகிவிடும்.
ஒன்பதே முக்கால் மணியளவில் எங்கள் தெருவை ஆக்கிரமிக்கத் தொடங்கும் நாய்கள், அதன்பிறகு இரு திசைகளிலும் யாரும் அவைகளைக் கடந்து செல்வதை விரும்புவதில்லை. ஒரு முரட்டுத்தனமான உறுமலின்மூலம் அவை தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும்.
அதுபோன்ற தருணங்களில் நான் சற்றுத் தொலைவிலேயே தயங்கி நின்றுவிடுவேன். மேற்கொண்டு நடக்கலாமா, வேண்டாமா?
குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்வார்கள். அது நிஜமா, அல்லது சும்மா புருடாவா? எனக்கு இதுவரை நிச்சயமாகத் தெரியவில்லை. ஆகவே தைரியமாகத் தொடர்ந்து நடக்கும் துணிச்சல் வரவே வராது.
ஒருவேளை ஏதேனும் ஒரு நாய் என்னைக் கடிக்க வந்தால்? என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது? சிமென்ட் ரோட்டில் கல்கூட இருக்காதே? எதை எடுத்து அந்த நாயை அடிப்பது?
என் தோளில் லாப்டாப் பை இருக்கிறது. லாப்டாப் 3 கிலோ, மற்ற புத்தகங்கள், நோட்டுகள் எல்லாம் சேர்ந்து இன்னொரு 2 கிலோ, ஆக மொத்தம் 5 கிலோ கனம் கொண்ட பையினால் நாயைத் தாக்கினால்? அது சுருண்டு விழுந்துவிடாதா?
விழும் என்று ஒரு மனது சொல்லும், இன்னொரு மனது, ‘நாய் கடிக்க வரும்போது நீ தோளில் இருந்து பையை எடுக்கக்கூட நேரம் இருக்காது’ என்று சிரிக்கும். அல்லது, ‘நீயாவது நாயைத் தாக்குவதாவது? போடா சர்த்தான்’ என்று கேலி செய்யும்.
இப்படியாக, நான் எனது தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டு வேறு வழிகளில் யோசிக்கத் தொடங்குவேன். வீட்டுக்கு ஃபோன் செய்து, எங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனைக் கையில் தடியுடன் வரச் சொல்லலாமா?
இதைவிட அபத்தமான ஒரு யோசனை இருக்கவே முடியாது. ஏனெனில், நான் நாய்க்குப் பயப்படுகிறேன் என்று தெரிந்தால் என் மனைவி விழுந்து விழுந்து சிரிப்பாரேதவிர வாட்ச்மேனையெல்லாம் அனுப்பிவைக்கவே மாட்டார்.
சரி, இந்த வம்பே வேண்டாம், திரும்பி நடந்து ரோட்டுக்குச் சென்று ஓர் ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய்விடலாமா?
இதுவும் சொதப்பல் யோசனைதான். கால் கிலோ மீட்டர் தூரத்துக்கு எந்த ஆட்டோக்காரர் வருவார்? அப்படியே வந்தாலும் ஐம்பது, நூறு என்று பிடுங்கிவிடமாட்டாரா?
இவ்வளவு வம்பு எதற்கு? தினமும் அலுவலகத்துக்கு பைக்கில் போய்விட்டால் என்ன?
அதுவும் சரிப்படாது. எங்கள் அலுவலகம் வீட்டிலிருந்து சரியாக ஒரு கிலோ மீட்டர் தூரம். நடந்து சென்றால் ஐந்து அல்லது ஆறு நிமிடம், பைக்கில் சென்றால், போக்குவரத்து நெரிசலைத் தாண்டி எங்கேயோ யு டர்ன் எடுத்துத் திரும்பி வருவதற்குக் குறைந்தபட்சம் இருபது நிமிடம் ஆகும்.
சரி, தினமும் வேண்டாம். மாலை வீடு திரும்பத் தாமதமாகும் என்று தெரிந்தால், அன்றைக்குமட்டும் பைக் எடுத்துச் செல்லலாம் இல்லையா?
என்ன விளையாடுகிறீர்களா? இந்தத் துறையில் எப்போது திடீர் வேலை வரும், எப்போது வேலையில்லாமல் உட்கார்ந்து ப்ளாக் எழுதிக்கொண்டிருப்போம் என்று யாரால் சொல்லமுடியும்?
ஆக, என்னுடைய நாய்ப் பிரச்னைக்கு என்னதான் வழி?
ஜஸ்ட் நூற்றுச் சொச்ச மீட்டர்கள்தானே? மிரட்டும் நாய்களைக் கண்டுகொள்ளாமல் வீடு நோக்கி ஓடலாமா?
சுஜாதாவின் ஒரு நாவல் தலைப்பு: ‘பத்து செகண்ட் முத்தம்’. நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தைப் பத்து விநாடிகளில் முடிக்கும் வெறியைப்பற்றிய கதை அது.
பத்து செகண்டில் முடியாவிட்டாலும், இந்த தூரத்தை என்னால் முப்பது அல்லது நாற்பது செகண்டில் ஓடிக் கடந்துவிடமுடியாதா? ஒரு முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன?
நான் சந்தேகமாக அந்த நாயை(அல்லது நாய்களை)ப் பார்க்கிறேன். இது என்னைத் துரத்துமா? நூறு மீட்டரை இந்த நாய் எத்தனை விநாடிகளில் கடக்கும்? மறுபடியும் பயம் தொற்றிக்கொள்கிறது.
இப்படி யோசித்து யோசித்தே பத்து நிமிடம் கடந்துவிட்டது. இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே நின்றுகொண்டிருப்பது? இந்த நாய்கள் தூங்கும்வரையா? பொதுவாக நாய்கள் ராத்திரி எத்தனை மணிக்குத் தூங்கும்? தேடுவதற்கு இங்கே கூகுள், விக்கிபீடியாகூட இல்லையே!
நான் முன்னே, பின்னே திரும்பிப் பார்க்கிறேன். தெரு முழுக்க வெறிச்சோடிக் கிடக்கிறது. துணிந்து நடக்கலாமா, வேண்டாமா? நாய்களுடன் யுத்தம் நடத்துவதைவிட, திரும்பிப் போய் ஆஃபீசிலேயே ராத்தூக்கத்தை முடித்துக்கொள்வது உத்தமம் என்று தோன்றுகிறது.
ஐந்து நிமிடம் கழித்து, இரண்டு பேர் பீடி வலித்தபடி நடந்து வருகிறார்கள். எனக்கு நிம்மதி திரும்புகிறது.
அவர்களும் நான் நடந்த அதே ரோட்டில்தான் நடக்கிறார்கள். ஆனால் நாய்களின் உறுமலைப் பொருட்படுத்துவதில்லை. பேசிக்கொண்டே அவற்றைச் சாதாரணமாகக் கடந்து செல்கிறார்கள். அந்தத் தைரியமான வீரர்களின் நிழல்போல ஒட்டியபடி நான் பின்னாலேயே போகிறேன்.
ஒருவழியாக, நேற்றைய பிரச்னை முடிந்தது. இனி அடுத்தமுறை அலுவலகத்தில் தாமதமாக வேலை செய்ய நேரும்வரை கவலை இல்லை.
அப்போதும், என்னை நாய்களிடமிருந்து காப்பாற்ற யாராவது வருவார்கள். கடவுள் கருணையுள்ளவன்!
  • **
என். சொக்கன் …

No comments:

Post a Comment