Search This Blog

Tuesday, September 13, 2011

ஆடை விளையாட்டு


ஆடை விளையாட்டு

Posted by: என். சொக்கன்

    ’அலை பாயுதே’வில் எல்லோருக்கும் பிடித்த ‘ரகசிய சிநேகிதனே’ பாட்டில் வைரமுத்து எழுதிய ஒரு வரி:
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
இந்தப் படம் வந்த அதே நேரத்தில் (அல்லது சில மாதங்கள் முன் பின்னாக) ‘மின்னலே’ என்ற  படத்தின் ஒலிநாடா வெளியானது. அதில் ஹாரிஸ் ஜெயராஜ் என்ற புதுமுகம் ‘தாமரை’யின் பாடல் வரிகளுக்கு இசையமைத்திருந்தார். அதிலும் ‘ரகசிய சிநேகிதனே’போல் ஒரு female-solo பாட்டு, ‘வசீகரா’ என்று தொடங்கிய அந்தப் பாடலிலும் இதேமாதிரி ஒரு வரி:
சில சமயம்,
விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
இதைக் கேட்டபோது ’வைரமுத்து, தாமரை இருவரில் யார் யாரைப்  பார்த்துக் காப்பி அடித்தார்கள்?’ என்று நாங்கள் பேசிக்கொண்டோம். விளையாட்டாகதான்.
பல வருடம் கழித்து, இன்றைய #365paa வரிசைப் பாடலுக்காகப் ‘பத்துப் பாட்டு’ தொகுப்பில் உள்ள ‘பட்டினப் பாலை’யை முழுமையாகப் படித்துக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு பகுதி:
துணைப் புணர்ந்த மடமங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்து,
மட்டு நீக்கி மது மகிழ்ந்து,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,
மகளிர் கோதை மைந்தர் மலையவும்…
’பாலை’த் திணையின் இலக்கணம், பிரிதலும் பிரிதல் நிமித்தமும். ஆனால் தலைப்பிலேயே ‘பாலை’யை வைத்திருக்கும் ஒரு புத்தகத்தில் இப்படி ஒரு ‘குறிஞ்சி’க் காட்சியா என்று ஆச்சர்யமானேன். இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று என்னிடம் உள்ள உரைகளைப் புரட்டிப் பார்த்தபோது பல சுவாரஸ்யமான அலசல்கள் கிடைத்தன.
முதலில், கடைசி 2 வரிகள். மைந்தர் கண்ணி, அதாவது ஆண் கழுத்தில் உள்ள மாலையை, மகளிர் சூடவும், மகளிர் கோதை, அதாவது பெண் கழுத்தில் உள்ள மாலையை மைந்தர் சூடவும்… பள்ளியறைக்குள் மாலை மாற்றிக்கொள்ளும் விளையாட்டு. ஓகே.
அதற்கு முந்தைய வரி, ‘மட்டு நீக்கி மது மகிழ்ந்து’, இந்த வரிக்கும் பலவிதமான விளக்கங்கள் கிடைத்தன, அதில் மிகச் சுவாரஸ்யமானது என்று பார்த்தால் ‘கள் அருந்துவதை விடுத்து, காதல் இன்பத்தைச் சுவைத்தார்கள்’. இதுவும் ஓகே.
இப்போது முக்கியமான வரி, ‘பட்டு நீக்கித் துகில் உடுத்து’. இதற்கும் இரண்டுவிதமான விளக்கங்களைச் சொல்கிறார்கள்:
  • பெண்கள் பகலெல்லாம் அணிந்த பட்டாடையைக் கழற்றிவிட்டு, துகில் – மென்மையான பருத்தி ஆடையை அணிகிறார்கள் – சங்க கால Lingerie? Smile
  • பெண்கள் தங்களுடைய பட்டாடையைக் கழற்றிவிட்டு, விளையாட்டாகத் தங்களுடைய கணவரின் ஆடை (துகில்) அணிகிறார்கள் – அணிந்திருந்த மாலைகளை மாற்றிக்கொண்டதைப்போலவே
ஆக, ரகசிய சிநேகிதனையும் வசீகரனையும் பாடிய பெண்களுக்கு முன்னோடிகள் சங்க காலத்தில் இருக்கிறார்கள்!
இதைப் படித்தபோது கவிஞர் வாலி தனது சுயசரிதையாகிய ‘நானும் இந்த நூற்றாண்டும்’ புத்தகத்தில் குறிப்பிட்ட ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. இணையத்தில் அதைத் தேடிப் பிடித்தேன் (fromhttp://www.tfmpage.com/ppp/)
ஒரு சமயம், தாதாமிராசி இயக்கி எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையமைத்த ஒரு படத்தில் நான் ஒரு பாடலின் பல்லவியை நான் இப்படி எழுதினேன்:
    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்
சாந்தம் உன் மனதில் நிலவட்டும்
தூக்கமும் சாந்தமும் – நானாவேன்!
நான் எழுதிய இந்தப் பாடலுக்கு திரு. எஸ்.எம்.எஸ் அவர்கள் மிகச் சிறப்பாக இசையமைத்து விட்டார்கள். பாடல் ஓரிரு நாளில் ஒலிப்பதிவாக இருந்தது. அப்போது தாதாமிராசியின் உதவி டைரக்டர் ஒருவர் வந்து, எங்களிடம் -
    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே! – அந்தத்
தூக்கமும் அமைதியும் – நானானால்..
என்று ஒரு பாடல் கண்ணதாசன் எழுதி “ஆலயமணி” படத்திற்காகப் போன வாரம் ஒலிப்பதிவாயிருக்கிறது என்று சொன்னார்.
இந்தச் செய்தியைக் கேட்டு நான் வியக்கவில்லை. ஆனால் தாதாமிராசி வியந்து போய் என்னிடம் “மிஸ்டர் வாலி! Great men think alike!.. உங்களுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரே மாதிரி கற்பனை உருவாகியிருக்கு. அவர் சொன்ன நினைத்ததை நீங்களும் நென்ச்ச்சிருக்கீங்க..இதுக்குப் பேர்தான் டெலிபதி!” என்றார்.
உடனே நான் அவரிடம் “சார்! இதுக்குக் காரணம் டெலிபதி இல்ல..அம்பிகாபதி” என்றேன். அவருக்குப் புரியும் படியாக விளக்கினேன்.
எம்.கே.தியாகராஜ பாகவதர் அம்பிகாபதியாக நடித்த படத்தில், நிலவொளியில் அமராவதியின் உப்பரிகைக்குக் கீழே நின்று கொண்டு அமராவதி
    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்!
சாந்தம் உன் மனதில் நிலவட்டும்!…ஆஹா!
அந்தத் தூக்கமும் சாந்தமும் – நானானால்!
என்று தனக்குத் தானே விரகதாபத்தோடு பேசி பெருமூச்சு விடுவான். இது அந்தப் படத்திற்காக திரு. இளங்கோவன் எழுதிய வசனம். இந்த வசனம் கூட இளங்கோவனின் மொழிபெயர்ப்புத்தான். ரோமியோ-ஜூலியட் நாடகத்தில் வருகின்ற வசனத்தின் தமிழாக்கமே இது.
நானும் கண்ணதாசனும் சந்தர்ப்பம் வரும் போது இந்த வசனத்தை உபயோகிக்க முயற்சித்திருக்கோம்; அவ்வளவுதான்! மற்றபடி நாங்கள் இருவரும் எழுத நேர்ந்ததுக்குக் காரணம், டெலிபதி அல்ல; அம்பிகாபதிதான்.
***
என். சொக்கன் …

No comments:

Post a Comment