Search This Blog

Showing posts with label short story. Show all posts
Showing posts with label short story. Show all posts

Wednesday, August 3, 2016

சிதறல்கள்-பாமா



மரத்தூர்  சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒவ்வொரு நாள் மாலையிலும் வாத்தியக்குழுவினர் முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.  காட்டுப்பட்டி பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அவர்களது குழுவினரை அழைத்திருந்தார்கள். அதனால் கடந்த ஒரு வாரமாக சிறுவர்கள் மாலை நேரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.கீரனூருக்கும் கொளத்தூருக்கும் இடையில் பிரதான சாலையில் bam4 மாத்தூர் அமைந்திருந்தது. கீரனூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் செயலில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்ட சிறுவர்கள், அந்தப் பள்ளியில் இருந்தார்கள். சந்திரனும் அவர்களில் ஒருவன். எடையபட்டிதான் அவனது சொந்த ஊர். சீர்திருத்த பள்ளிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. அவனது ஊரைவிட மாத்தூர் கொஞ்சம் பெரிய கிராமமாக இருந்தது. சீர்திருத்தப் பள்ளி ஊரைவிட்டுத் தள்ளி காட்டுப் பகுதியில் இருந்தது. அவனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவி;ல்டலை. அடிக்கழ அவனது ஊரையும், அவனது அம்மாவையும், அவனது ஒரேயொரு குட்டித் தங்கையையும், அவன் படித்த பள்ளியையும், அவனது நண்பர்களையும் நினைத்துப் பார்ப்பான். அப்படி நினைக்கும் பொழுதெல்லாம் அவனுக்குக் கண்கள் கலங்கும். அங்கு வந்த புதிதில் அடிக்கடி அழுதுகொண்டிருப்பான். இப்போது மௌனமாக வேதனையைச்  சுமந்து திரியப் பழகிக் கொண்டான்.சந்திரனின் வயது பதிமூன்று. சீர்திருத்தப்பள்ளிக்கு வருதற்கு முன்பு, ஊரில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவன் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது அவனது அப்பா கோதண்டம் இறந்துபோனார்.
வயலில் நெற்பயிருக்குப் பூச்சி மருந்து அடிக்கச் சென்றவர் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டதாகச் சொல்லி, வீ;ட்டுக்குத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். சந்திரனின் அம்மா ரஞ்சிதம் கூலி வேலை செய்து சந்திரனைப் படிக்க வைத்துக்கொண்டிருந்தாள்.  சந்திரனும் நன்றாகப் படித்துக்கொண்டிருந்தான். படிப்பில் இருந்தது போல மற்ற எல்ல விசயத்திலும் கெட்டிக்காரனாக இருந்தான். அவனை எப்படியாவது படிக்க வைத்து ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டு வரவேண்டுமென்று ரஞ்சிதம் கனவு கண்டாள். ஆனால் இடையிலேயே அவனது வாழ்க்கை இப்படியாகிப் போனதை எண்ணி அவள் நொறுங்கிப் போனாள். சந்திரனுக்கும் அம்மாவை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கும். மறுபடியும் ஊருக்குப் போயி நண்பர்களோடு சேர்ந்து படிக்க வேண்டும் தங்கையோடு விளையாட வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தான்.
ஊரில் படிக்கும்போது நண்பர்களோடு சேர்ந்து செய்த சேட்டைகளை யெல்லாம் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வான்.அவன் படித்த பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு வட்டமான பெரிய கிணறு இருந்தது. அந்தக் கிணற்றுச் சுவரையொட்டிய மஞ்சணத்தி மரத்தில் ஒரு குருவிக்கூடு இருந்தது. அந்தக் கூட்டில் இருந்த குருவிக்குஞ்சை எடுப்பதற்கு, நண்பர்கள் சந்திரனை மரத்தில் ஏறச் சொன்னார்கள். சந்திரனும் ஏறினான். கூடு இருந்த கிளை கிணற்றின் உட்புறமாக சாய்ந்து தொங்கிக்கொண்ழருந்தது. அந்தக் கிளையில் கால் வைக்க வேண்டாமென்று நண்பர்கள் சொன்னார்கள். அது மிகச் சிறியதாக இருந்ததால் ஒடிந்து விடுமென்று பயந்தார்கள். அப்படி ஒடிந்தால் சந்திரன் கிணற்றுக்குள்தான் விழ வேண்டும். சந்திரனும் அந்தக்கிளைக்கு அருகே இருந்த பெரிய கிளையில் காலூன்றிக் கொண்டு கையை நீட்டி கூட்டைத் தொட முயன்றான். தொட முடியவில்லை. அந்தக் கிளை கிணற்றுக்குள் தொங்கிக் கொண்டிருந்ததால் கூட்டை நெருங்குவது அவ்வளவு சுலபமாக இல்லை. நண்பர்களுடைய ஆலோசனைப்படி சந்திரனின் சட்டையைக் கழற்றி அதை அவன் இடுப்பில் கட்டியிருந்த அரை  ஜாண் கயிற்றில் கட்டி, சட்டையின் மறுமுனையை நண்பர்கள் பிடித்துக்கொள்ள, சந்திரன் தாவி அந்தக்கிளையை இழுக்க முயன்றான்.
ஆனால் அடுத்த நிமிடத்தில் இடுப்பில் கட்டியிருந்த கயிறு அறுந்துவிட சந்திரன் தாவி தடாலெனக் கீழே விழுந்தான். நல்லவேளையாக கிணற்றுக்குள் விழாமல் வெளியில் விழுந்ததால் கை ஒடிந்ததோடு தப்பித்துக்கொண்டான். அந்தத தோளைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். அதனால் ஒருமாதம் பள்ளிக்கே செல்லாமல் சுற்றிக்கொண்ழருந்ததை நினைத்துக்கொண்டான்.அப்போது பயிற்சிக்கு மாஸ்டர் அழைப்பதாக மணிகண்டன் வந்து சொல்லவும், சந்திரன் எழுந்து சென்றான். அந்தப் பள்ளியில் அவனுக்குப் பிடித்தது அந்த வாத்தியக் கருவிகளைக் கையாளுவதுதான். அனைத்துக் கருவிகளையும் இசைக்கப் பழகியிருந்தான். ஊரில் இருக்கும்போதே பறையடிப்பதில் அவனை யாரும் வெல்லமுடியாது. நாக்கைக் கடித்துக்கொண்டு ஆவேசத்தோடு ஆடிக்கொண்டே அவன் அடிப்பதைப் பார்க்கும் போது பார்ப்பவர்களுக்கே ஆட்டம் வந்துவிடும். அவ்வளவு ஈடுபாட்டோடு பறையடிப்பான்.
இப்போது இங்கு பறை இல்லாததால் டிரம்ஸ் அடிப்பான். ஆனாலும் பறை அடிப்பதில் இருக்கும் ஊக்கமும், உற்சாகமும் டிரம்ஸ் அடிப்பதில் இல்லை என்று அவனுக்குச் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. புல்லாங்குழலில் வாசிப்பான். தபேலா அடிப்பான். வாசிக்கப்படும் இசைக்கு ஏற்ப மொராக்கசை வைத்து அருமையாக உள்ளங்கையில் உருட்டுவான். அந்த மொராக்கசை உருட்டுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதற்கு முன் அதை ஊரில் பார்த்திராததால் அவன் அப்பொழுதும் அதை எடுத்து உருட்ட விரும்புவான். அவன் தாளம் தவறாமல் உருட்டுவதால் மாஸ்டரும் அவனை அதையே உருட்டச் சொல்லிவிட்டார். இதற்காக மட்டும்தான் அந்த மாஸ்டரை அவனுக்குக் கொஞ்சம் பிடிக்கும். மற்றபடி அவரைக்கண்டால் இவனுக்குக் கோபம் கொப்பளிக்கும். அதற்குக் காரணமும் இருந்தது.
நான்கைந்து மாதங்களுக்கு முன்பு ஓரிடத்திற்கு வாத்தியக்குழு சென்றிருந்தபோது, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சந்திரன் தப்பியோட முயன்றான். அப்போது இந்த மாஸ்டர்தான் அவனைப் பிடித்துக்கொண்டுவந்து மீண்டும் இந்த பள்ளியில் போட்டுவிட்டார். அதிலிருந்து மாஸ்டருக்கு இவன்மேல் ஒரு கண். எங்கு சென்றாலும் இவனைக் கண்காணித்துக்கொண்டே இருப்பார். அதை அவன் வெறுத்தான். அவரையும் வெறுத்தான். இப்போது காட்டுப்பாட்டிக்குச் செல்ல பயிற்சி எடுக்கும்போதே சொல்லிவிட்டார்.“என்ன சந்திரன், நம்ம போறது ஒரு சின்ன கிராமம். அங்கயெல்லாம் தப்பிச்சு கிப்பிச்சு ஓடலாம்னு நெனைக்காதே. அப்பிடி எதுவும் செஞ்சீனா ஈசியா மாட்டிக்கிடுவெ.சந்திரன் பதிலுக்கு அவரை ஒரு பார்வை பார்த்தான். அவ்வளவுதான் அவனால் செய்ய முடிந்தது.காட்டுப்பட்டி பள்ளியைத் திறந்து வைக்க வந்த அதிகாரியை, காட்டுப்பட்டி பேருந்து நிலையத்தி லிருந்து வாத்தியக்குழுவினரின் இசையோடு ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதன்படி மாஸ்டரும், மற்றும் வாத்தியக் குழுவில் இடம்பெற்றிருந்த பத்துச் சிறுவர்களும் தூய வெண்ணிறச் சீருடை அணிந்து, வெள்ளைத் தொப்பி வைத்து, அவரவரின் வாத்தியக் கருவிகளுடன் மாலை ஐந்து மணிக்கெல்லாம் காட்டுப்பட்டி பேருந்து நிலையத்தில் வரிசையாக நின்றுகொண்டிருந்தனர்.
காட்டுப்பட்டி ஊர்த்தலைவரும், ஊர்மக்களோடு அங்கு வந்து காத்திருந்தார். பேருந்துநிலையத்திலிருந்து பள்ளிக்கூடம் வரையுள்ள தெருக்களில் ஆங்காங்கே மின்விளக்குகள் கட்டி அலங்கரித்திருந்தனர். ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பேருந்துநிலையம் மிகவும் சிறியதாக இருந்தது. ஒன்றிரெண்டு தேநீர்க் கடைகள் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்பழ எதுவுமில்லை. ஒரு பெரிய வேப்பமரம் இருந்தது. அதில் சினிமா போஸ்டர் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. என்ன படமென்று சரியாகத் தெரியவில்லை.
ஊரில் இருக்கும்போது அக்கம்பக்கத்து பையன்களோடு சினிமாப் பார்க்கப் போனது சந்திரனின் நினைவுக்கு வந்தது.ஊரில் இருந்த சினிமாக் கொட்டகையில் ரஐனிகாந்து படம் வந்தபோது அம்மாவிடம்  சினிமாவுக்குக் காசு கேட்டு தொந்தரவு செய்தது ஞாபகத்துக்கு வந்தது. அம்மாவிடம் அப்போது பணமில்லை. படம் ஆரம்பமாவதற்கு முன்பே அங்கு சென்ற சந்திரன், டிக்கெட் கவுண்டரில் வைக்கப்பட்டிருந்த ஒரு கட்டு டிக்கெட்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான். கவுண்டரில் டிக்கெட் கட்டைக் காணாமல் அலைமோதிக் கொண்டிருந் தார்கள். காணாமல் போன டிக்கெட்டுகளின் எண்கள் தெரியுமாதலால் அந்த எண்கள் கொண்ட டிக்கெட்டுகளை எடுத்து வருபவர்களைப் பிடிப்பதற்கு உஷாராக இருந்தார்கள்.இதைப்பற்றியெல்லாம் யோசிக்காத சந்திரன் தன் நண்பர்களுக்கும் டிக்கெட் கொடுத்து, அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றான். மாட்டிக்கொண்டதும் நண்பர்கள் சந்திரன்தான் தங்களுக்கு டிக்கெட் கொடுத்தான் என்று சொல்லிவிட சந்திரனைப் பிடித்து விசாரித்தார்கள் ஊர்ப்பெரியவர்களிடம் சொல்லி அவனைக் கண்டித்து வைக்கச் சொன்னார்கள். ஊரில் அனைவரும் ~டிக்கெட்டு எடுத்த பெயலுக்கு அதக்கொண்டுக்கிட்டு போனா புடிபட்டுக்கிருவம்னுகூடத் தெரியல பாருன்னு"சொல்லி அவனைக் கிண்டல் செய்து சிரித்தனர்.
தலைவர் வந்துவிட்டாரென மக்கள் பரபரப்பாகவும் சந்திரனின் சிந்தனை தடைப்பட்டது. மாஸ்டர் உத்தரவுப்படி அவரவர் வைத்திருந்த வாத்தியக்கருவிகளை வாசிக்க ஆரம்பித்தனர். சந்திரனும் தன் கையிலிருந்த மொராக்கஸை வலது கையில் பிடித்துக்கொண்டு பல வண்ண மணிகளைச் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த அந்த மணிகளை இடது உள்ளங்கையில் வைத்து தாளத்துக்கு ஏற்றபடி உரசி உரசி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தான். மற்ற சிறுவர்களும் ஒருமித்த வாசித்ததைக் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. மாஸ்;டர் அவர்களை வழி நடத்திக் கொண்டிருந்தார்.அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தலைவர் ஏறிக்கொள்ள ஊர்வலம் தொடங்கியது. வாத்தியக்குழு ஊர்வலத்துக்கு முன்னே வாசித்தபடி மெதுவாகச் சென்றது.
சிறுவர்களின் வாசிப்பு மிகவும் பிரமாதமாக இருப்பதாக மக்கள் ஒருமனதாகச் சொன்னார்கள். அந்தச் சிறுவர்களைப் பார்ப்பதற்கே கூட்டம் அலைமோதியது. ஆனால் அந்தச் சிறுவர்கள் முகத்தில் எந்தவித உணர்வும் இல்லை. ஏதோ தங்களுக்குக் குறிக்கப்பட்ட ஒரு கடமையைச் செய்வது போல எவ்விதச் சலனமுமின்றி அவர்கள் வாசித்துக் கொண்டே முன்னோக்கி நகர்ந்தார்கள். இடையிடையே பட்டாசுகளை வெடித்தார்கள். சிறுவர்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அவர்களது முழுக் கவனமும் வாசிப்பில்தான் இருந்தது. அவர்களைச் சுற்றி இளைஞர்கள் ஓர் அரண்போல பாதுகாப்பாக வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து மாஸ்டரின் ஏற்பாட்டின்படி ஒரு பாதுகாப்புக்காகத்தான் அவர்கள் அப்படி புடைசூழ்ந்து வருகிறார்கள் என்பதை சந்திரன் புரிந்து கொண்டான். அவனுக்கு அது எரிச்சலை உண்டாக்கியது. அவன் மனது பலவிதமான உணர்வுகளால்; அலைக்கழிக்கப்பட்டது. அவன் கையில் அகப்பட்டுக்கொண்ட அந்த மொராக்கஸை அவன் ஆக்ரோசமாக உருட்டி, உருட்டி மனசை ஆசுவாசப்படுத்த முயற்சி செய்தான். கைகளிரண்டும் சூடாகின. மனது கொதித்துக்கொண்டிருந்தது.
தங்களைச் சுற்றி பெருந்திரளாக மக்கள் கூடி வந்தது தங்களது வாசிப்புத் திறனைப் பார்த்து, கேட்டு மகிழத்தான் என்றெண்ணியிருந்த சந்திரன், அவர்கள் தங்களது பந்தோபஸ்துக்காகத்தான் வருகிறார்கள் என்பதை அறிந்தபின் ஆத்திரமும், வெறுப்பும் அடைந்தான். மாஸ்டரைப்  பார்க்கும்போது அவனுக்கு வெறித்தனமான கோபம் வந்தது. அவர் தன்னைமட்டும் குறிப்பிட்டு கவனிப்பது போல் தெரிந்தது. இந்த ஊர் மக்களிடம்கூட அவர் தன்னைப் பற்றிச் சொல்லி வைத்திருப்பார் என்று எண்ணினான். அனைவரும் அவனையே கூர்ந்து கவனிப்பதுபோல   அவனுக்குத் தெரிந்தது.
சீர்திருத்தப் பள்ளிக்கு வருவதற்கு முன்பு தனது ஊரில் எவ்வளவு மகிழ்ச்சியாக விழாக்கள் கொண்டாடினோம் என்று நினைத்தான். தன்வயதுப் பையன்கள் ஓடியாடித் திரிவதைப் பார்க்கும்போது அவனது மனது வேதனையில் கனத்தது. அவனது மனச்சஞ்சலத்தை அவன் கையில் வைத்திருந்த மொராக்கஸ் பட்டபாட்டிலிருந்து அறிய முடிந்தது. அவன் மனதிலிருந்த ஆத்திரத்தையும், வலியையும் அவன் கையில் வைத்து உருட்டிய மொராக்கஸின் மணிகள் எழுப்பிக் கொண்டிருந்தன. அவனது முகத்திலிருந்து வியர்வை தாரை தாரையாக வழிந்தது. அவனது கைகள் சூடானது போலவே அவனது முகமும் சூடானது. அவனது நெஞ்சின் வேட்கை, வெக்கையாக வெளியேறியது. அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பேசிய பேச்சுக்கள் அவன் காதுகளில் தெளிவாகக் கேட்டது.
“யே... இந்தப் பையனப் பாருங்கடா... இந்த மணிய எப்பிடி உருட்டுறாம்னு பாருங்க... இதுமாதிரி உருட்டுற மணிய நம்ம இது வரைல பாக்கவே இல்லைலடா... இவெ உருட்டுற உருட்டுல மணியே அந்து போகும் போலடா..."“இதெப்பிடிடா செஞ்சுருக்காக? "“அதுக்குள்ள இருக்குறது என்னனு தெரியுமா? தேங்காச் செரட்ட"“செரட்டையா? இம்புட்டுப் பெரிய செரட்டையா?"“ஆமாடா.
இது கேரளா தேங்காயில இருக்குற செரட்ட. இதுக்குப்  பேரு கொப்பரத் தேங்காடா. அங்கயெல்லாம் ரொம்பா பெருசாத்தான் இருக்குமாம். எங்கண்ணஞ் சொன்னான். நீயி வேணும்னா அத உருட்டுற பெயல்ட கேட்டுப் பாரேன்."“ஐயய்யோ.... அவங்கிட்டயெல்லாங் கேக்கக் கூடாதுடா. அந்தா வாராருல அவுங்க வாத்தியார்டத்தான் கேக்கனும்".“போடா போ... அவருட்ட கேக்கக் கூடாதுடா. எனக்கு அவரப்பாத்தா புடிக்கவே இல்லடா. அவருதாண்டா இந்தப்பெயல்களை புடுச்சு அடச்சு வச்சுருக்காரு."“இல்லடா... இவனுங்க என்னமோ தப்பு செஞ்சாங்களாம்டா. அதுக்குத்தான் இவனுங்கள செயில்ல புடுச்சு வச்சுருக்காங்களாம். எங்கம்மெ சொன்னா."“போடா  போ... அதெல்லமில்லடா. பாவம்டா இவனுங்க. இவுங்க செயில்ல இல்லடா. அதன்னமோ சீர்திருத்தப்பள்ளிக்கூடத்துல இருக்காங்களாம். ஆஸ்டலுமாதிரி. இல்லடா? "
இதைக்கேட்டுக்கொண்டே  நடந்த சந்திரனுக்கு, ~ஆஸ்டலு இல்லடான்னு" கத்த வேண்டும்போல இருந்தது. அவர்களுடன் பேசவேண்டும் போல இருந்தது. அந்த மாஸ்டரைப் பற்றியும் அந்த சீர்திருத்தப் பள்ளிக்கூடத்தைப் பற்றியும் அவர்களிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது. அத்துடன் அவன் கையில் வைத்து உருட்டிக்கொண்டிருக்கும் அந்த மொராக்கசைப் பற்றியும் அதை  அவன்  எவ்வாறு தாளத்துக்கு ஏற்றாற் போல உருட்டுகிறான் என்பது பற்றியும் அவர்களுக்கு உருட்டிக்காட்டவும் அவனுக்கு ஆசை ஆசையாக இருந்தது. இப்படி எத்தனையெத்தனை ஆசைகளை அவன் அழித்துக்கொள்ள வேண்டியுள்ளது என்றெண்ணினான்.
இவர்களைப் போல தானும் தனது நண்பர்களும் பேசித் திரிந்த நாட்கள் நினைவுக்கு வர, துக்கம் தொண்டையை அடைத்தது. அழவேண்டும் போல இருந்தது. ஆனால் இந்தக் கூட்டத்தில் எப்பழ அழமுடியும்? அழுகையை அடக்கிக் கொண்டு ஆனந்தமாக வாசிப்பது போல பாவனை செய்ய பழகியிருந்தான்.“பாவம்டா... சின்னப்பெயலா இருக்கான். ஆனா எம்புட்டு அழகா தாளம் தப்பாமெ உருட்டுறாம்னு பாரு. எப்பிடி வேர்த்து ஊத்துதுன்னு பாரு. இவம்மேல கருப்பசாமி எறங்குனது மாதிரி இருக்குதுடா".“இவனத்தாம்டா குறிப்பா கவனிக்கச் சொல்லி அந்த மாஸ்டரு சொல்லியிருக்காராம். ஏம்னா இன்னொரு எடத்துல இப்பிடி வாசிக்கப் போனப்ப இந்தப் பெய தப்புச்சு ஓடப்பாத்தானாம். ஆனா மாட்டிக் கிட்டானாம்.
இதைக்கேட்டதும், அடக்கி வைக்கப்பட்டிருந்த சந்திரனின் அழுகை ஆங்காரமாக மாறியது. மனது இறுக்கமானது. மொராக்கசில் கட்டப்பட்டிருந்த கம்பிகளின் இறுக்கத்தை அவன் மனமும் அனுபவித்தது. ஊர்வலம் பள்ளியை நெருங்கிக் கொண்டிருந்தது. சந்திரனின் மன உளைச்சல் உச்சத்தை அடைந்தது. அது அந்த மணிகளின் ஆங்கார ஓசையில் வெளிப்பட்டது. அவனது மனதைப் போலவே கைகளும் சூடாகின. அவன் ஆக்ரோசமாக உருட்ட, உருட்ட மணிகளை இணைத்துக் கட்டியிருந்த கம்பிகள் அறுந்தன. மணிகள் சிதறின. விடுதலையாகிப்போன மணிகளை ஏக்கத்தோடு பார்த்தான் சந்திரன்.
http://azhiyasudargal.blogspot.com.au

Saturday, July 30, 2016

தீண்டத்தகாதவன்..


ஈழத்து தலித் சிறுகதைகள்
தொகுப்ப சுகன்..
நேற்றைக்கு படிக்க தொடங்கினேன்..
முன்னுரை படித்து முடித்து வெளியே
செல்ல நேர்ந்தது..
புத்தகத்தையும் எடுத்துகொண்டு வெளியே நடந்தேன்..
கதவைப் பூட்டும் சமயம் என்கண்ணில்
பட்ட காட்சி இது..
நான்கு காக்கைகள் ஒரு ஓணானை கடித்து
காலை இரையாக்கி கொண்டிருந்தது..
சில தூரத்தில் அருகிலே இன்னொரு ஓணான்
அதைப் பார்த்து கொண்டிருந்ததை
நானும்பார்த்துக்கொண்டேன்..
இடம்போய் சேர்ந்தபின்பு வாசிப்பை தொடர்ந்தேன்..
17கதைகள்..
வலிகள் கொடுக்கும் வார்த்தைகள்
பத்திகளாய்..
ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள்
ஓங்கி ஒலிப்பதில்லை..
குரல்வளைகள் நெரிக்கப்பட்டு ஊமையாக்கப்படும்..
முதல் கதையான தீண்டத்தகாதவன்
காலம் முழுவதும் ஒடுக்கப்பட்டவனாக வாழ்ந்தவன்
பொருளாதார நிலையில்உயர்ந்தவுடன் எப்படி நடத்தப்படுகிறான் அவன் மனநிலை எப்படிஇருக்கும் எனவலியோடு பதிவிடுகிறது..
நிலவிலே பேசுவோம் சிறுகதை எளியவர்களின்
குரலை பதிவிடுகிறது..
ஆற்றல் மிகுகரத்தால் சிறுகதை எப்போதும்மிதிபடுபவன் மீளும் கதைசொல்லி பயணப்படுகிறது..
களம் சிறுகதை நின்று சாதிக்கும் எளிய மனிதரின் கதையை சொல்கிறது..
காலத்தால் சாகாதது..
முடியும்போது சுருக்கென்று குத்தும்..
தாழ்த்தப்பட்டவனாக வாழ்தலை விடஅதைதிரும்ப திரும்ப சொல்லி காட்டி வாழ்தல் அசிங்கமானது எனஉணர்த்தும்..
தப்புக்கணக்கு..
மண்குடமாகினும் எளியவர் உடைத்தால் பொன்குடம் என்பதற்கிணங்க அவமானங்கள் அவர்களுக்கு எப்படியெல்லாம் வெகுமதியாய் கிடைக்கும் என்பதை பேசுகிறது..
கவரிமான்கள் சிறுகதை காதல் என்பது ஏந்தசாதிக்கு சொந்தம் என்றார் போல் கேள்வி கேட்கிறது..
நெல்லிமரப்பள்ளிக்கூடம் தொலைந்து போன ஒரு
பள்ளியை கண்ணில் தெரியவைக்கிறது..
வெளியில் எல்லாம்பேசலாம் சிறுகதை
நம்வெளியில் விரித்தாடும் சாதிக்கொடுமைகளை சாடுகிறது..
சாவிலும்சாதியை பற்றி இருக்கும் கதையைசொல்கிறது கோடாரிக்காம்புகதை..
அசல் சிறுகதை சாதியால் வேலை இழந்த ஓர் நல்ல வேலையாளனின் கதைபேசுகிறது..
கேள்விகள் சிறுகதை சாதிக்கு முன்னும் சாதிக்கு பின்னுமாக ஓர் உள்ளத்தின் மனநிலை..
ஊசி இருக்கும்இடம் கூட.. கதையில்
ஊசி இருக்கும் இடம் கூட உயர்வு தாழ்வென்று உண்டு எனமனதை குத்துகிறது..
கண்ணி கதை முடியும்போது கண்ணீர் வரவழைக்கும்..
ஒரு பனஞ்சோலை கிராமத்தின்எழுச்சி எனும் தன்
வரலாற்று நாவலிலிருந்து ஒருபாகம் இந்தபகுதி பெயரில் தொற்றி கொண்டிருக்கும் சாத்தியப்பாடுகள் பேசுகிறது..
பஞ்சமர் நாவலில் ஒரு பகுதி குடுமபத்தில் சாதி புகுந்தவலியை இறப்பில் சொல்லும்..
கடைசியாக வல்லமைதாராயோ.. பகுதி சிறுதெய்வத்தை சாதியால் பார்ப்பதும் அவன் கதறி அழுவதும் பாடலாய் நம்காதுகளில்..
புத்தகம் முடிந்தது.. வலிகளும் வேதனைகளும் எப்போது முடியும் அவர்களுக்கு என்ற கேள்வியை முன்வைக்கிறது..
முழுவதும் சிலோன் தமிழில் இந்நூல்.. வாசிக்கவாசிக்க நாம் அவர்களாக இருந்தால் இப்படித்தான் இருந்திருப்போம் என்றநினைப்பே மனதை பதைபதைக்கிறது..
முன்னாடிநான் பார்த்த காட்சியை இதோடு ஒப்பிடுகிறேன்.. காக்கைகள் உயர்சாதி ஓணான்கள் எளியவர்கள் கொன்று போட்டாலும் வெட்டிஎறிந்தாலும் பக்கத்தில் உள்ள ஓணான்களாகிய நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்..
ஈழம் என்பது வெறும் ஈரம் நிறைந்ததல்ல அது நம்சகோதரர்கள் கண்ணீர்.. சாதியும் தீண்டாமையும் வேர் பற்றி அழித்தி கொண்டிருக்கும் அவர்கள் நிலை நம்மை அடைய வெகுதூரமில்லை..
முழுவதும் சாதியம்காற்றில் கலப்பதற்குள் என்சரீரம் மடிய விரும்புகிறேன்.. அதுவரை போராடும் வல்லமைதாராயோ தமிழ் அன்னையே....
-அபிஜீ

Wednesday, July 20, 2016

தாயார் பாதம்.......ஜெயமோகன்


ராமன் எதையோ முணுமுணுத்தது போல் இருந்தது, அனேகமாக ’ஹிமகிரிதனயே ஹேமலதே’. பாலசுப்ரமணியன் புன்னகை புரிந்தார். ராமன் நிறுத்திவிட்டு ‘சரி, விடுங்க’ என்று சிரித்தார். ’இல்ல, நான் சிலசமயம் நினைக்கறதுண்டு, உங்க விரலை சும்மா ஒரு கிராமபோனிலே கனெக்ட் பண்ணி விட்டா அது நல்ல சுத்த சங்கீதமா கொட்டுமேன்னு…’. ‘தெரியறது. வெரலிலே சங்கீதம் ...இருக்கு, நாக்கிலே இல்லேங்கிறீங்க’ பாலசுப்ரமணியன் மீண்டும் புன்னகை செய்தார்.
’நான் சாந்திமுகூர்த்தம் அன்னிக்கு சாரதா கிட்டே முதல்ல என்ன கேட்டேன் தெரியுமோ’ என்றார் ராமன். ‘ஒரு பாட்டு பாடறேன், கேக்கறியான்னு. சரின்னா. அதோட சரி. அதுக்குமேலே பாடறேன்னு சொன்னா ஒருமாதிரி முகத்தைக் காட்டுவா பாருங்க. எவ்ளோ பெரிய மேதைக்கும் தொண்டை அடைச்சுண்டுரும்’ ராமன் சிரிக்க பாலசுப்ரமணியன் சேர்ந்துகொண்டார்.
‘ஆனா நான் சின்ன வயசிலே பாடுவேன்’ என்றார் ராமன் ‘மறுபடியும் ஸ்மைல் பண்றேள். பாடத்தெரியாதவ எல்லாரும் அப்டித்தான் சொல்லுவா,என்ன?’ என்றார். ‘என்னதான் சிரிப்போ அப்டி…அதைப்பாக்கறச்ச பயம்மா இருக்கு. எங்க அரசியல் கிரசியலுக்கு போயி டெல்லிக்குவந்து ஒக்காந்துண்டுவீங்களோன்னு…’ பாலசுப்ரமணியன் அதற்கு வாய்விட்டு சிரித்தார். கடல்காற்றில் அவரது முன்மயிர் பறந்தது. அவரது நீளமான கல்கத்தா ஜிப்பாவும் வேட்டியும் படபடக்க அவர் பறக்கத்துடிப்பதுபோல தோன்றியது. ராமன் பின்னால் எழுந்து பறந்த தன் மேல்துண்டை இழுத்து அக்குளில் செருகிக்கொண்டார்.
மதியநேரம் காந்திமண்டபத்தில் சில வடநாட்டு காதல் ஜோடிகளைத்தவிர எவருமில்லை. ராமன் சற்று எம்பி கைப்பிடிச்சுவரில் கடலுக்கு பக்கவாட்டை காட்டியதுபோல அமர்ந்து சுவரில் சாய்ந்து காலை மேலே தூக்கி வைத்துக்கொண்டார். பாலசுப்ரமணியன் சுவரைப்பற்றியபடி நின்று கீழே பார்த்தார். கடல் கண்கூசும் வெளிச்சமாக அலையடித்துக்கொண்டிருந்தது. சூரிய பரப்பில் தெரியும் புள்ளிகள் போல நாலைந்து பெரிய மீன்பிடிப்படகுகள் சென்றுகொண்டிருந்தன.
‘அந்த பாறையிலயா விவேகானந்த மண்டபம் வரப்போறது?’ என்றார் ராமன் கைகளை நெற்றிமேல் வைத்து ஒளியில் மிதந்து அலைபாய்வதுபோல தெரிந்த இரட்டைப்பாறைகளை நோக்கியபடி. ‘ஆமா… அந்தப்பக்கம் இருக்கிற உயரமான பாறையிலே.. சாங்ஷன் ஆயிட்டுதுன்னு கேள்விப்பட்டேன். இங்க காந்தி மண்டபம் வந்ததே நேக்கு பிடிக்கலை. கட்டிண்டே இருக்காங்க. கடற்கரைன்னா அது ஏன் கடற்கரையா இருக்கக்கூடாது? ஏன் அதை யாருமே யோசிக்கிறதில்லை’
‘ஏன் நல்லாத்தானே கட்டியிருக்கா?’ என்றார் ராமன். ’அங்க ஒரு கோயில் இருந்தா நல்லாத்தான் இருக்கும். நீங்க கல்கத்தா போகணும். பேலூர் மடத்திலே விவேகானந்தர் இருந்த ரூமுக்குபோறச்ச நான் கண்ணுலே தண்ணி விட்டுட்டேன். என்ன ஒரு மனுஷர். அந்த மொகமிருக்கே…. அதிலே தெரியற கம்பீரத்துக்கு அவரு உலகத்துக்கே ராஜாவா இருந்தாலும் பத்தாது..’ ராமன் சொன்னார். ‘இப்ப அந்தப் பாறையிலே என்ன இருக்கு?’
’அங்கயா? அதில ஒரு சின்ன கோயில் மாதிரி ஒண்ணு இருக்கு. வருஷத்துக்கு நாலுவாட்டி அம்மன் கோயிலிலே இருந்து போயி பூஜைசெய்வாங்க’ ‘என்ன மூர்த்தி?’ ‘மூர்த்தின்னு ஒண்ணும் இல்லே. பாறையிலே காலடித்தடம் மாதிரி ஒண்ணு இருக்கு. சும்மா ஓவல் சைஸிலே ஒண்ணரைசாண் நீளத்திலே ஒரு சின்ன பள்ளம். அது கன்யாகுமரி தேவி சுசீந்திரம் தாணுமாலயனை கல்யாணம்பண்ணிக்கணும்னு ஒத்தைக்காலிலே நின்னதோட தடம்னு நம்பறாங்க. அங்க போயி பொங்கல் போட்டு படைச்சு கும்பிட்டுட்டு வருவாங்க. பௌர்ணமி தோறும் படகிலே போயி வெளக்கு வைக்கிறதுண்டு’
’அப்டியா?’ என்றார் ராமன் ஆவலாக ‘போய்ப்பாக்க முடியுமா? ‘போகலாம்’ என்று பாலசுப்ரமணியன் இழுத்தார்.’கட்டுமரத்திலே போகணும். உங்களுக்கு அதெல்லாம் சரிப்படாது’ . ’கொமட்டும் இல்ல?’ என்று உடனே அந்த யோசனையை கைவிட்டார் ராமன் ’கேக்கவே நல்லா இருக்கு. ஒரு கன்னிப்பொண்ணு ஒத்தக்காலிலே யுகயுகமா தபஸ் பண்றா… அவளோட தபஸோட சின்னமா அந்த காலடித்தடம் மட்டும் அங்கியே பதிஞ்சிருக்கு’ ’அதுமாதிரி எல்லா பாறைகளிலேயும் விதவிதமா தடங்கள் இருக்கு. பாறையிலே உள்ள சாஃப்டான மெட்டீரியல்ஸ் மழையிலயும் காத்திலயும் கரைஞ்சு போறதனால வர்ர தடம்..’என்றார் பாலசுப்ரமணியன்
ராமன் அதைக் கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. பின்னர் ‘எதுக்கு அப்டி ஒரு தவம் பண்ணினா? வெறும் ஒரு புருஷனுக்காகவா? காலாகாலமா அவன் பொறந்து வந்து அவளை கட்டிண்டுதானே இருக்கான். அப்றம் எதுக்கு தவம்?’ அவர் உள்ளூர சமன் குலைந்து விட்டதை பாலசுப்ரமணியன் உணர்ந்தார். ‘ஏன் பாலு, எதுக்கு ஒத்தைக்காலிலே நிக்கணும்?’ பாலசுப்ரமணியன் சிரித்து ‘அதானே கஷ்டம்…’ என்றார். ‘இல்ல அவளோட மத்தக்காலு அந்தரத்திலே நின்னுட்டிருந்தது. நடராஜனோட எடுத்த பொற்பாதத்தை விட இதுதான் உக்கிரமா இருக்கு. காத்தில தூக்கி நிக்கிற ஒத்தைக்கால். எங்கியும் அதை வைக்க எடமில்லாதது மாதிரி…அத எங்கியாவது செலையா செஞ்சிருக்காங்களா?’
‘இல்லேன்னு நினைக்கறேன்’ என்றார் பாலசுப்ரமணியன். ராமன்‘நடராஜரோட ஒத்தைக்கால் திரும்ப தரையிலே பட்டுதுன்னா ஒரு ஊழி முடிஞ்சு அண்டசராசரங்களும் அழிஞ்சிரும்னு கதை…. அம்பாளோட எடுத்தபாதம் பட்டா என்ன ஆகும்?’ என்றார். பாலசுப்ரமணியன் ஒன்றும் சொல்லவில்லை. ‘ஒண்ணும் ஆகாது. அவ தாயார் இல்ல? ‘ என்றார் ராமன். தனக்குள் ஆழ்ந்து கடலையும் பாறையையும் பார்த்துக்கொண்டிருந்தார். தன்னையறியாமலேயே ‘ஹிமகிரி தனயே’ என்று முனகி தன்னுணர்வு கொண்டு ‘மன்னிச்சுக்கங்கோ. தெரியாம வந்துடுத்து’ என்றார். பின்பு ‘நேரா கழுகுமலைக்கு போலாமா, வரேளா? சுப்பு அண்ணா அங்க பாடறார். வர்ரியாடான்னு காயிதம் போட்டிருக்கர்’ என்றார். ‘பாத்துட்டு சொல்றேன்’ என்றார் பாலசுப்ரமணியன்
‘சுப்பு அண்ணா எனக்கு குருவழியிலே நெருக்கம் தெரியுமோ? நெருக்கம்னா ஒண்ணுவிட்டு ரெண்டுவிட்டு அப்டி பலது விட்டு ஒரு சொந்தம்னு வைங்கோ. அதாவது அவரோட குருவோட குரு என்னோட தாத்தாவுக்கு குரு. அவரு பேரு விளாக்குடி கிட்டாவய்யர். மகாஞானின்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அவரு தியாகையர் கிட்டயே சங்கீதம் கத்துண்டவர்னு சொல்வா. அதைப்பத்தி தெரியலை. மன்னார்குடி திருவையாறு திருவாரூர் பக்கம் எல்லா குருபரம்ரையையும் நேரா கொண்டுபோயி அங்க இணைச்சுக்கிடறதுண்டு’
‘அப்டியா?’என்றார் பாலசுப்ரமணியன் பொதுவாக. பேச்சை இசையை நோக்கிக் கொண்டுசெல்வது அவருக்கு அப்போது உகக்கவில்லை. ஆனால் பிறரது பேச்சை தடுக்கவோ திருப்பவோ கூடியவர் அல்ல அவர். ‘தாத்தாபேரு சேஷய்யர். அவர்தான் எனக்கு முதல் குருன்னு சொல்லணும். அவரு பெரிய கடல். சங்கீதஞானசாகரம்னே அவருக்கு பட்டப்பேரு இருந்தது. அப்பல்லாம் சங்கீதவித்வான்களுக்கு பெரிசா ஒண்ணும் பணம் கெடைக்காது. மடத்திலே கூப்பிட்டு இந்தாடான்னு ஏதவது குடுத்தா உண்டு. ஆனா சிருங்கேரி வரை போய்வர்ர செலவே டபுள் ஆயிடும். மத்தபடி எங்கயும் கதாகாலட்சேபம்தான். அதுல இருக்கிறவாளுக்குத்தான் துட்டு. வருஷத்திலே எரநூறு கதை வரை நடத்தறவா உண்டு. தெரியுமே எங்கப்பாகூட கதாகாலட்சேபம்தான் பண்ணிண்டிருந்தர்…’
‘ஆனா எங்க தாத்தா சங்கீத வித்வானா மட்டும்தான் இருந்தர். கையிலே கொஞ்சம் நெலமிருந்தது. குடியானவங்க ஒழுங்கா குத்தகை அளந்தகாலம்ங்கிறதனால பஞ்சமில்லை. ஒண்ணையும்பத்தி கவலைப்படாம காவேரியிலே மூணுவேளை குளிச்சுட்டு சந்தியாவந்தனம் சாதகம்னு பண்றது, கோயிலிலே கொஞ்சநேரம் சாயங்காலம் அவருகேக்க அவரே பாடிக்கறதுன்னு நெறைவா இருந்தார். எப்பவாச்சும் தஞ்சாவூர் கும்மோணம்னு கச்சேரிக்கு கூப்பிடுவா. வில்வண்டியிலே கூட்டிண்டுபோய்ட்டு கொண்டாந்து விட்டிருவா. பெரும்பாலும் ஒரு சால்வை. ரொம்ப பெரிய எடம்னா ஒருபவுன்ல ஒரு தங்கக் காசு… அடுத்த கச்சேரி வரை அதைப்பத்தியே பேசிண்டிருப்பர். அங்க இப்டி பாடினேன் , இப்டி எடுத்தேன்னு திருப்பித்திருப்பி பாடிக்காட்டுவர்.
’அவர நான் பாக்கறச்ச அவருக்கு எழுபது தாண்டியிருக்கும். அவரோட ஏழு குழந்தைகளிலே எங்கப்பாதான் கடைக்குட்டி. அப்பா பொறக்கறச்ச தாத்தாவுக்கு நாப்பத்தெட்டு வயசாம். என்னோட ஞாபகத்திலே எப்பவும் அவரு திண்ணையிலே ஜமக்காளத்தை போட்டு சாய்ஞ்சு ஒக்காந்திண்டிருப்பர். பக்கத்திலே கூஜாலே ஜலம், பெரிய தாம்பாளத்திலே தளிர்வெத்தலை, இன்னொரு சம்புடத்திலே சீவல். கிளிமாதரி ஒரு பச்சைநெறமான மரச்செப்புலே கலர் சுண்ணாம்பு. புகையில வைக்கறதுக்கு ஒரு தகரடப்பா. பக்கத்திலே எப்பவும் தம்பூரா வச்சிருப்பர். எந்நேரமும் அவர் பக்கத்திலே ஒத்தர் ஒக்காந்திண்டிருக்கிற மாதிரி தம்புரா இருக்கும். சின்னவயசிலே மாநிறமா ஒரு சின்னப்பொண்ணு அவர் பக்கத்திலே இருந்துண்டிருக்கிற மாதிரின்னு நினைச்சுக்குவேன்
பாலசுப்ரமணியன் புன்னகை பூத்தார். ‘சிரிக்கவேணாம். நெஜம்மாவே தம்புரா வெக்கப்பட்டுண்டு அதிகம் பேசாத பொண்ணு மாதிரித்தான் இருக்கும். அவரு எந்நேரமும் அதிலே சுதிபாத்தூண்டே இருப்பர். சரியா அமைஞ்சதும் அதோட சேந்து மெல்ல பாடுவார். பாட்டு எப்பவுமே அவருக்காகத்தான். இப்ப சொன்னேளே, சங்கீதம் உடம்பிலே இருக்கு, கனெக்‌ஷன் குடுத்திடலாம்னு. அது அவருதான். அப்பல்லாம் கிராமத்து அக்ரஹாரம் சத்தமே இல்லாம இருக்கும். ரேடியோ பிளேட்டு ஒண்ணும் வரலை. அக்ரஹாரதுக்குக்கு நடுவிலேயே ஒரு ஓடை போகும். காவேரித்தண்ணி. அந்த சத்தம் எப்பவும் கேட்டுண்டே இருக்கும். அந்த சுருதிய தம்புராவிலே பிடிப்பர். அதிலே சேந்து பாடுவர். மத்தியான்னம் மாமரத்திலே குயில் வந்து ஒக்காந்துண்டு பாடும். அந்த நாதத்தோட சுருதிய பிடிப்பார். வெளியே கேக்கிற எல்லா சத்தமும் அவருக்கு சங்கீதம்தான். அவருக்குள்ள ஓடீண்டே இருக்கிற சங்கீதத்தோட எல்லாமே இணைஞ்சிரும், ஊர்த்தண்ணியெல்லாம் காவேரியா போய்சேந்துக்கற மாதிரி. சரி, காவேரிதானே ஊருக்குள்ளே தண்ணியாகவும் வந்துண்டிருக்கு…’
‘ஊருக்குள்ளே அவருக்கு புண்ணியாத்மான்னுதான் பேரு. குழந்தை பிறந்தா தூக்கிண்டு வந்திருவா. ‘அண்ணா உங்க கையாலே தொட்டு ஆசீர்வாதம் பண்ணுங்கோ’ன்னு நிப்பாங்க. அவரும் குழந்தையை மடியிலே வாங்கி வச்சுண்டு ’ராரா தேவாதி தேவா’ன்னு ஒரு நாலுவரி பாடி திருப்பி குடுப்பர். குழந்தையோட தாயார்காரி நின்னாள்னா கண்ணிலே ஜலம் விட்டு முந்தானையாலே முகத்த பொத்திண்டுடுவா. போன ஜென்மத்திலே சரஸ்வதிக்கு குடம்குடமா தேனபிஷேகம் பண்ணியிருக்கார்னு சொல்லுவா. ஆனா இந்த ஜென்மத்திலே தொடர்ச்சியா அறுபது எழுபது வருஷம் சரஸ்வதிக்கு தேனபிஷேகம் பண்ணியிருக்கார். கும்மோணத்திலே வேதநாராயணப்பெருமாள் கோயில்னு ஒண்ணு இருக்கு. அங்க பிரம்மனுக்கு சரஸ்வதி காயத்ரியோட தனி சன்னிதி உண்டு. வருஷா வருஷம் ஆவணி மாசம் அவரோட பொறந்தநாள் அன்னிக்கு வண்டிகட்டிண்டு அங்கபோய் தேவிக்கு தேனபிஷேகம் பண்ணிண்டு வருவார். அவருக்கு ரொம்ப முடியாமப் போனப்ப எங்க அப்பா போய் செஞ்சார். பாட்டி தவறின வருஷம் மட்டும்தான் செய்யலை
’எண்பதுவயசு வரை இருந்தர். ஒரு நோய்நொடி ஈளை இளைப்பு கெடையாது. குரலிலே கொஞ்சம் கார்வையும் நடுக்கமும் வந்ததேஒழிய அழகு குறையலை. கூன் கெடையாது. ஒத்தைநாடி ஒடம்பு. முடியில்லாத மார்பிலயும் விலாவிலயும் எலும்பு தெரியும். வயத்திலே நரம்பு சுருண்டு கெடக்கும். கடைசி வரைக்கும் சட்டை போட்டது கெடையாது. மாநிறமா இருப்பார். கண்ணு ரெண்டும் பெரிசா கோபுரச்செலைகளிலே இருக்குமே அது மாதிரி பிதுங்கி வெளியே விழுறாப்ல இருக்கும். பேசற வழக்கமே கெடையாதுன்னாலும் அவரோட மனசு கண்ணுலே தெரிஞ்சுண்டே இருக்கும். கடைசியிலே தூக்கம் ரொம்ப கம்மியாயிடுத்து. நடு ராத்திரியிலே எழுந்து ஒக்காந்துண்டு மெதுவா தம்புராவ சுதிசேத்து பாடுவார். கேட்டுதா கேக்கலையான்னு ஒரு சங்கீதம். எங்கேயோ கொண்டுபோயிடும். சும்மா தேனீமேலே ஏறி ஒக்காந்து ரீ….ம்னு நந்தவனமெல்லாம் சுத்தி, நந்தியாவட்டை மல்லிகை ரோஜான்னு பூப்பூவா உக்காந்து மண்ட மண்ட தேன்குடிச்சுட்டு வந்து எறங்கின மாதிரி ஒரு அனுபவம். அந்தபாட்டைக் கேக்கறதுக்குன்னே பக்கத்தாத்திலே எல்லாம் ராத்திரி கண்முழிச்சு தூங்காம கிடப்பாங்களாம்
‘அவருக்கு கடைசியிலே கொஞ்சம் கண் தடுமாற்றமாயிடுத்து. காவேரிக்கு நானே காலம்பற கைபுடிச்சு கூட்டிட்டு போகணும். மத்தியான்னமும் சாயங்காலமும் வீட்டு முன்னாடியிலே ஓடையிலே குளிச்சுக்குவர். ஆனால் நியமநிஷ்டைகள் ஆசாரங்கள் ஒண்ணிலேயும் ஒரு குறையும் இல்லை. எல்லாம் அவருக்கு நினைச்ச மாதிரி நடக்கணும். நடக்காட்டி ஒண்ணும் சொல்ல மாட்டார். பேச்சை நிப்பாட்டிட்டு தம்பூராவ தூக்கிண்டுடுவர். அப்றம் அப்பா அம்மா எல்லாரும் வந்து கன்னத்திலே போட்டுண்டு கண்ணீர்விட்டு கெஞ்சின பிறகுதான் இறங்கி வருவர். எங்க அம்மாதான் எல்லாம் பாத்து செய்யணும். அம்மாவும் தெய்வத்துக்கு பண்றமாதிரி செய்வா.
’ஆமா, பாட்டி இருந்தள்’ என்றார் ராமன். ‘அவளை நான் சரியா பாத்த ஞாபகமே இல்லை. தாத்தாவ விட பதிமூணு வயசு கம்மி அவளுக்கு. ஆனா பாத்தா எம்பது தொண்ணூறு அதுக்கும் மேலேன்னு தோணிடும். என் சின்னவயசு ஞாபகத்திலே வத்திப்போன பசு மாதரி அவ சித்திரம் இருக்கு. முதுகு நல்லா ஒடிஞ்சு வளைஞ்சு இடுப்புக்கு மேலே உடம்பு பூமிக்கு சமாந்தரமா இருக்கும். பசுவேதான். கைய முன்னங்கால்னு வச்சுக்கிட்டோம்னா அவ நடக்கிறது பசு நடக்கிறது மாதிரியே இருக்கும். கண்ணும் மொகமும் தரையப்பாத்துண்டிருக்கும். தலயிலே கொஞ்சம் வெள்ள முடி. அத கொட்டைப்பாக்கு சைசுக்கு கட்டி வச்சிருப்பள். ஜாக்கெட் போடறதில்லை. எப்பவும் ஏதாவது ஒரு மொலை வெளியே தொங்கி கிழட்டு மாடோட அகிடு மாதரி ஆடிண்டிருக்கும். மெலிஞ்சு வத்தி ஒரு பத்துவயசு குட்டி அளவுக்குத்தான் இருப்பா. சாப்பிடுறது ரொம்ப குறைவு. காலம்பற ஒரு இட்லி. மத்தியான்னம் இன்னொரு இட்லி. சாயங்காலம் ஒரு பிடி சோறு. அதையும் உக்காந்து சாப்பிட மாட்டா. சின்ன சம்புடத்திலே போட்டு கையிலே குடுத்திடணும். அத அங்க இங்க வச்சிடுவா. எடுத்து எடுத்து குடுக்கணும். அதுக்கு நல்லது பொரி வாங்கி அவ மடியிலேயெ கட்டி விட்டுடறதுன்னு பிறகு எங்கம்மா கண்டுபிடிச்சள். அதான் சாப்பாடு…
’அவ ஒக்காந்து நான் பாத்ததே கெடையாது. எப்பவும் வீடு முழுக்க அலைஞ்சுகிட்டேதான் இருப்பள். வீட்டை விட்டு வெளியே போகமாட்டா. முற்றத்துக்கும் திண்ணைக்கும்கூட வரமாட்டா. கடைசி இருபது வருஷத்திலே புத்தி பேதலிச்சு போச்சு. எங்கப்பாவுக்கு கல்யாணமாகி மாட்டுப்பொண்ணு வர்ரப்பல்லாம்கூட நல்லாத்தான் இருந்திருக்கா. பொதுவா பேசறவ இல்ல. எல்லாத்துக்கும் ஒரு மௌனம். எங்கப்பா ஞாபகத்திலேயே அவங்கம்மா பேசி கேட்டது ரொம்ப கம்மி. வீட்டுக்குள்ள பல்லிப்பேச்சு கேட்டாத்தான் உண்டுன்னு அப்பா சொல்வர். வெறிபுடிச்சாப்ல வீட்டுவேலை செய்றதுதான் அவளோட ஒலகம். வெடிகாலைலே எந்திரிச்சு கைவெளிச்சம் வர்ரதுக்குள்ள அத்தனை பாத்திரங்களையும் கழுவி வீட்ட கூட்டிப்பெருக்கி கழுவி குளிச்சிட்டு தாத்தாவோட பூஜைக்கான ஏற்பாடுகளை செஞ்சு முடிக்கணும்.. வேலைதவிர ஒண்ணுமே தெரியாது
’எங்கம்மா வந்ததும் அதே சிக்கல்தான். வீட்டுலே ஒரு வேலை மிச்சமிருக்காது. மாட்டுப்பொண்ணு வேலைபாத்தாத்தானே நல்லா இருக்கும். ஆனா பாட்டிக்கு செஞ்சு தீக்கறதுக்கே வேலை பத்தாது.அம்மா பாட்டி பின்னாடியே அலையறதுதான் மிச்சம். அம்மாவுக்கு மூத்த அக்கா பிறந்தப்ப எல்லாத்தையும் பாத்து செஞ்சதே பாட்டிதான். அம்மா சும்மா படுத்திருந்தா போரும். ஆனா அப்பதான் சிக்கல் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சுது. குழந்தையோட அழுக்குத்துணிகளை போட்டு கழுவு கழுவுன்னு கழுவ ஆரம்பிச்சா. அப்றம் வீட்டுக்குள்ள குழந்தையோட அழுக்கு கெடந்தா ஒடனே மொத்த வீட்டையும் துடைச்சு கழுவறது. என்ன இதுன்னு ஆரம்பத்திலே தோணியிருக்கு. அவ்ளவொண்ணும் ஆசாரமான ஆளும் இல்லை. கேட்டா சரியான பதில் இல்லை. கொஞ்சம் கொஞ்சமா கூடிட்டே போச்சு.
’ஆறுமாசத்திலே தெரிஞ்சுடுத்து என்னவோ பிரச்சினைன்னு. அப்ப வீட்டிலே இன்னும் ஒரு தங்கச்சி கல்யாணத்துக்கு இருந்தா. இதைப்பத்தி பேசப்போய் அதுவேற வம்பாயிடும்னு அப்டியே விட்டாச்சு. அப்றம் அப்டியே பழகிப்போச்சு. மடத்துக்கு காரியஸ்தரா அப்ப நாணாவய்யர்னு ஒருத்தர் இருந்தார். தாத்தாவோட லௌகீகமெல்லாம் அவருதான் பாத்துக்கறது. ‘சரிடா, எல்லாரும் மண்ணுல ரெண்டுகாலையும் வச்சுண்டிருக்கா. அவ ஒரு கால தூக்கிட்டா. விடு.வயசு வேற ஆயாச்சு. இனிமே கொண்டுபோய் என்ன பண்றது. வேற ஒரு பிரச்சினையும் இல்லையே. அவபாட்டுக்கு இருக்கா’ன்னு சொல்லிட்டர்.
’அவ சித்தம்போக்குல இருப்பா. வெடிகாலை நாலுநாலரைக்கே எந்திரிச்சு குளிக்க ஆரம்பிப்பா. மூணுமணிநேரமாகும் குளிச்சு துவைச்சு வர்ரதுக்கு. வந்ததும் வீட்ட கூட்டி பெருக்கி துடைக்கிறது. ஒரு இண்டு இடுக்கு விடமாட்டா. சன்னல்கம்பி கதவுமூலை எல்லாம் துடைச்சுகிட்டே இருப்பா. நடுவிலே மறுபடியும் குளியல். மறுபடியும் சுத்தப்படுத்தறது. ஒருநாளைக்கு எட்டுவாட்டியாவது குளிக்கிறது. ராத்திரி வீட்டுக்குள்ள சுத்தி வர்ரான்னு காமிரா உள்ளிலேயே படுக்கைய போட்டு அடைச்சிடறது. உள்ளயும் சுத்தம் பண்ற சத்தம் கேட்டுண்டே இருக்கும்…
‘தாத்தா அப்டி ஒரு ஜென்மம் வீட்டுக்குள்ள இருக்கிறதே தெரியாதேங்கிற மாதிரி இருப்பர். ஒரே ஒருவாட்டி அக்காவுக்கு ஒரு வரன் வந்து அதைப்பத்தி பேசறப்ப இப்டி பாட்டியப்பத்தி பேச்சு வந்தது. ‘ஒவ்வொருத்தரும் அவஅவா வாழ்க்கைய கட்டுச்சோறு மாதரி கட்டிண்டுதாண்டா வர்ரா…ஒண்ணும் பண்ணமுடியாது. பிராப்தம்’ னு மட்டும் சொன்னார். பாட்டியும் ரேழி தாண்டறதில்லை. அவங்க ரெண்டுபேரும் கடைசியா எப்ப சந்திச்சுகிட்டாங்கன்னே தெரியலை. ஒருநாளைக்கு காலம்பற அம்மா காமிரா உள்ள திறந்தா சுவர் மூலையிலே சுவரோட ஒட்டி முதுகைகாட்டிண்டு ஒக்காந்திருக்கா. உள்ள போய் என்ன அத்தைன்னு தொட்டதுமே தெரிஞ்சுடுத்து. நானும் ஓடிப்போய் பாத்தேன். அப்டி ஒத்தர் செத்துப்போய் ஒக்காந்திட்டிருக்கிறதைப்பத்தி கேள்விப்பட்டதே இல்லை. சப்பரத்துக்கு வளைச்ச மூங்கில் மாதரி கூன்முதுகு மட்டும்தான் தெரியறது. கைகால் தலை எல்லாமே முன்பக்கம் சுவர் மூலைக்குள்ள இருக்கு.
’அப்பா போய் சோழியன கூட்டிண்டு வந்தார். அவனும் தொணைக்கு இன்னொருத்தனுமா வந்து தூக்கி போட்டாங்க. பொணத்த மல்லாக்க போட முடியலை. கூனும் வளைவும் அப்டியே இருக்கு. பக்கவாட்டிலே போட்டப்ப ஏதோ கைக்குழந்தை வெரல் சூப்பிண்டு தூங்கற மாதிரித்தான் இருந்தது. குளிப்பாட்டறப்ப அம்மா பாத்திருக்காள். கை வெரலிலே தேள்கொட்டிருக்கு. குழிக்குள்ள கைய விட்டுண்டிருக்கா. நல்ல பெரிய கருந்தேள். சின்ன ஒடம்பானதனால வெஷத்தை தாங்கலை. ஜன்னி மாதரி வந்து ஒதட்டை கடிச்சு கிழிச்சுண்டிருக்கா..
’தாத்தாகிட்ட விஷயத்தைச் சொன்னப்ப தம்புராவ கீழ வச்சார். புரியாத மாதிரி கொஞ்சநேரம் பாத்தார். ‘தாசரதே’ன்னு முனகிண்டு மறுபடியும் தம்பூராவ எடுத்துண்டார். வாசலிலெ கீத்துப்பந்தல் போட்டு ஊரெல்லாம் கூடி அழுது ஒரே ரகளை. அந்த சத்தம் எதுக்கும் சம்பந்தமில்லாதவர் மாதரி அவர் தம்பூராவ மீட்டி கண்ணமூடி அவருக்குள்ள இருக்கிற சங்கீதத்த கேட்டுண்டு லயிச்சுபோய் ஒககந்திருந்தர். எடுக்கிறச்ச மூத்த அத்தை வந்து ‘அப்பா வந்து ஒரு பார்வை பாத்துடுங்கோ’ன்னார். ஒண்ணும் பேசாம தம்பூராவ வச்சுட்டு எந்திரிச்சு வந்தர். வாசலை தாண்டி கூடத்துக்கு வந்து கீழே கிடக்கிறவளை ஒரு வாட்டி பாத்துட்டு அப்டியே திரும்பி போய்ட்டர். நேரா போய் தம்பூராவ எடுத்துண்டு ஒக்காந்துட்டர். அப்றம் காவேரிக்கரைக்கு கெளம்பறச்சதான் அவர எழுப்பினாங்க’
‘பாட்டிக்கு சங்கீதம் தெரியும்னு கேள்விப்பட்டிருக்கேன். எங்க தாத்தோவோட அப்பா சுப்பையர் , அவரும் பெரிய வித்வான். வர்ணம் பாடுறதிலே அவர் காலத்திலே அவர்தான் பெரிய ஆள்னு கெட்டிருக்கேன். அவருக்கு தஞ்சாவூர் அரண்மனையிலே இருந்து தானமா குடுத்ததுதான் கையிலே இருந்த நெலமெல்லாம். அவர்தான் எங்க தாத்தாவோட மொதல் குரு. அவர் ஒருதடவை ஒரு நெல விஷயமா பத்தூர் போயிருக்கார். பத்தூர்னா கொரடாச்சேரி பக்கத்திலே இருக்கு. அங்க ஒரு பழைய கோயில் ஒண்ணு இருந்து அழிஞ்சு போச்சு. கோயில் அழிஞ்ச்சாலும் அக்ரஹாரம் அழியலை. ஆனா தரித்திரம்புடிச்ச அக்ரஹாரம். தாத்தா அக்ரஹாரம் வழியா வண்டியிலே வர்ரச்ச ஒரு பாட்டு கேட்டிருக்கு. அந்த வீட்டு முன்னாடி வண்டிய நிப்பாட்டி விசாரிச்சிருக்கார். அது எங்க பாட்டியோட வீடு. பாட்டிக்கு அப்ப ஆறு வயசு. அவதான் பாடிண்டிருந்தது.
‘மத்த விஷயங்களை எல்லாம் கேட்டுண்டு அங்கியே இவதான் என் மாட்டுப்பொண்ணுன்னு வாக்கு குடுத்திட்டார். பொண்ணையே பாக்கலை. ’பொண்ணை பாருங்கோ’ன்னதுக்கு ’இந்த குரலுக்கும் இந்த வித்யைக்கும் இவ எப்டி இருந்தா என்னய்யா? சாட்சாத் சரஸ்வதியைன்னா நான் என் வீட்டுக்கு கூட்டிண்டு போகப்போறேன்’ன்னு சொல்லியிருக்கார். அஞ்சுபவுன் எதிர்ஜாமீன் பண்றதா அவரும் வாக்கு குடுத்தர். கல்யாணம் அவராத்திலேயே நடந்திருக்கு. ஆனா பொண்ணுக்கு ஏழு எட்டு வயசானதுக்கு அப்றமும் சொன்ன பவுனைபோட்டு புக்காத்துக்கு அனுப்ப அவாளாலே முடியலை. அப்பல்லாம் பஞ்ச காலம். வயத்தக் கழுவறதே பெரிய விஷயம். ஏதோ நம்பிக்கையிலே சொல்லிட்டார். முடியலை. அப்டியே வீட்டுலேயே வச்சிருந்தர்.
’தாத்தாவோட அப்பா நாலஞ்சுவாட்டி ஆளு சொல்லி அனுப்பியிருக்கார். சரியா பதில் இல்லை. ‘சரிடா, உனக்கு இந்த பொண்ணு இல்லை. உன் ஜாதகத்திலே வேற எழுதியிருக்குபோல’ன்னு சொல்லிட்டு வண்டி கட்டி நேரா பத்தூர் போய் எறங்கியிருக்கார். சம்பந்தி அய்யர் எங்கியோ வாழை எலை நறுக்க போனவர் ஓடிவந்து கைய கூப்பிண்டு பேசாம நிக்கிறார். இவரு ‘அவ்ளவுதான் ஓய். அதை சொல்லிண்டு போகத்தான் வந்தேன்’ன்னு சொல்லிட்டு திருப்பி வண்டியிலே ஏறி ஒக்காந்துட்டர். அப்ப பாத்தா பின்னாடியே கையிலே ஒரு சின்ன மூட்டையோட பாட்டி வந்து நிக்கிறா. ஒண்ணுமே சொல்லலை, கண்ணு ரெண்டும் வரைஞ்சு வச்சதுமாதிரி இருக்கு. இவரு பாத்தார். ‘சரி ஏறுடீ கோந்தே’னு தூக்கி ஒக்கார வச்சு கொண்டாந்துட்டர்
’ஆனா கடைசி வரைக்கும் பத்தூர் ஆட்கள வீட்டுப்பக்கமே வர விடலை. சீர் செனத்தி ஒண்ணையுமே வாங்கிக்க மாட்டேன்னுட்டர். பிரசவத்துக்கும் சாவுக்கும் ஒண்ணுக்கும் வரப்படாதுன்னுன்னு பிடிவாதமா சொல்லிட்டர். பலபேரு வந்து சமரசம் பேசியிருக்கா. ‘போனா போகட்டும், திரும்பி வரவேணாம்’னு திட்டவட்டமா சொல்லிட்டர். பாட்டியோட அப்பா வந்து தெருவிலே தென்னை மரத்தடியிலே நிக்கிறார். ‘கூட்டிண்டு போனா அப்டியே போயிரும் ஓய்’ நு தாத்தாவோட அப்பா சொல்லிட்டார். ‘இல்லே, எங்க இருந்தாலும் புள்ளைகுட்டிகளோட நெறைஞ்சு இருக்கட்டும். ஏழையோட ஆசீர்வாதம் எப்பவும் அவ பின்னாலே நெழலு மாதிரி இருக்கும்’னு சொல்லிட்டு அழுதிண்டே போனார். அதோட சரி. பிறகு பாட்டிக்கும் பத்தூருக்கும் சம்பந்தமே இல்லாம ஆச்சு. முப்பது வருசத்திலே பத்தூர் அக்ரஹாரமே அழிஞ்சுபோச்சு
’பாட்டி பாடி கேட்டதே இல்லைன்னு எங்கப்பா சொல்வார். ஏன்னு தெரியலை. எங்க தாத்தாவுக்கு ஒரு கொணம் உண்டு. அவர் மத்தவா பாடி கேக்கமாட்டார். அவரே பாடிக்குவர். ’நெறைஞ்ச குளம்டா, அதுக்கு எதுக்கு ஓடைத்தண்ணி’ன்னு எங்கப்பா சொல்வர். அதனாலகூட இருக்கலாம். எனக்கு எங்க தாத்தா ரெண்டுவயசிலே பாட்டு சொல்லி வைக்க ஆரம்பிச்சார். அவருக்கு சிஷ்யர்களுன்னு எங்கப்பா உட்பட எம்பது தொண்ணூறு பேரு உண்டு. ஒத்தர்கூட வீணாப்போகலை. சிலர் பெரிய வித்வான்களா ஆகி வைரக்கடுக்கனும் தோடாவுமா வந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கி போவா. சங்கீதமே வராம போனது நான் மட்டும்தான். சங்கீதம் மனசு முழுக்க இருக்கு. சொன்னேளே, கைவெரல் நுனி வரை வழியறது…ஆனா நாக்கிலே வராது. ‘தேவீ, என்னம்மா இது’ன்னு தாத்தா மார்பிலே கைய வச்சுண்டு ஏங்குவார். சரின்னு வயலின் கத்துக்க வச்சார். புல்லாங்குழல் கத்துக்க வச்சார். ஒண்ணுமே சரியா வரலை. அப்றம் கைவிட்டுட்டர்.
’எனக்கு என்ன ஆச்சுன்னு இப்பவும் சொல்ல தெரியலை. ரொம்பநாளைக்கு அப்றம் ஒண்ணு தோணித்து, தாத்தா கத்துக்குடுக்காம இருந்தா வந்திருக்குமோன்னு. அவர் சொல்லிக்குடுக்கிறப்ப உள்ளுக்குள்ள ஒரு நாக்கு மடங்கிடுது. வெளிநாக்கை பேச வைக்கிற மனசோட நாக்கு அது. வெளிநாக்கு கிடந்து அலைபாயும். மனநாக்கு மடங்கி ஒட்டி நடுங்கிண்டிருக்கும். அதான். இப்பகூட நான் பாடிடுவேன். ஆனா ரெண்டு நாக்கும் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்துக்காது.
ஏன்னே தெரியலை. ஆனா ஒரு சம்பவம். அப்பா சொல்லி அம்மா எங்கிட்ட ஒருவாட்டி ரகசியமா சொன்னது. அதையெல்லாம் பிள்ளைகள்ட்ட சொல்லக்கூடாதுன்னுதான் நேக்கு இப்ப படறது. அந்த நெனைப்பு எங்கியோ உறுத்திட்டிருக்கலாம், தெரியலை. எங்க தாத்தாவோட அப்பா மூணுவருஷம் பக்கம் தளர்ந்து படுக்கையிலே கிடந்துதான் செத்தார். கடைசியிலே மலமூத்திரமெல்லாம் படுக்கையிலேதான். தாத்தாவுக்கு அவர் அப்பா மட்டுமில்ல குருவும் கூட. அதனால அவர் அப்டி பாத்துக்கிட்டார். பாட்டியும் கைக்குழந்தைய பாத்துக்கிடற மாதிரி கவனிச்சுகிட்டா.
ஒருநாள் தாத்தாவோட அப்பா என்னமோ முனகறது மாதிரி சத்தம் கேட்டிருக்கு. தாத்தா உள்ள போய் பாத்திருக்கார். படுக்கையிலேயே கமுகுப்பாளைய வளைச்சு தெச்சு பெட்பான் மாதிரி வச்சிருந்தாங்க. அதிலேயே ரெண்டும் போய் அதிலேயே படுத்திருக்கார். கண்ணு நிறைஞ்சு ரெண்டு மைக்குப்பி மாதிரி இருக்கு.தாத்தா ‘அடியே’ன்னு ஒரு சத்தம் போட்டிருக்கார். சமையல் உள்ளிலே வேலையா இருந்த பாட்டி ஓடி வந்திருக்கா. அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்.
ரொம்ப பின்னாடிதான் எழுத வந்தேன் பாலு. சங்கீதம் உசத்திதான். பரிசுத்தமானதுதான். இலக்கியம் அந்த அளவுக்கு சுத்தம் இல்லை. இதிலே அழுக்கும் குப்பையும் எல்லாம் இருக்கு. பிடுங்கி எடுத்த நாத்து மாதரி வேரில சேறோட இருக்கு. ஆடிக்காவேரி மாதரி குப்பையும் கூளமுமா இருக்கு…அதனால இது இன்னும்கொஞ்சம் கடவுள்கிட்ட போய்டறது…தெரியலை. உளறுறேனா என்னன்னு உன்னைமாதிரி மூளை உள்ளவங்கதான் சொல்லணும். நான் எழுதின முதல்கதையெ பாட்டியப்பத்தித்தான்.
‘வாசிச்சமாதிரி இருக்கு..’ என்றார் பாலு. ‘இல்லே, நீங்க வாசிச்சது ரொம்ப பின்னாடி விகடன்ல எழுதினது. இந்தக்கதை அந்தக்காலத்திலே திரிலோகசீதாராம் நடத்தின பத்திரிகையிலே வந்தது. குபராகூட அதிலே நெறைய எழுதியிருக்கார்’ ராமன் புன்னகை செய்தார். ‘அந்தக்கதையிலே வர்ர பாட்டி வேறமாதிரி இருப்பா. தலைநெறைய பூ வச்சுண்டு அட்டிகை போட்டு பட்டுபுடவை கட்டிண்டு சதஸிலே உருகி உருகி பாடுவள்’ என்றார்.

அண்ணாச்சி - பாமா

ரொம்பாக் கிசும்புக்காரனா இருப்பாம் பொறுக்கோ இந்தப்பெய. அவுகய்யனும் அம்மையும் அப்பிராணிக கெணக்கா இருக்கைல அவுகளுக்குப் பெறந்த இந்தக் கழுத இப்பிடித் தறுதலையா வந்து வாச்சிருக்கே, ' கோவமும் சலிப்புமாச் சொல்லிக்கிட்டு இருந்த மாடத்தியத் தடுத்துட்டு முத்து ரத்துனம் மேல சொன்னா. 'அதானடி... அந்த வீட்டுப் பிள்ளைக பூராம் இப்பிடித்தான் இருக்குதுக மித்ததுகளையாவது ஒரு வழில சேத்துரலாம். ஆனா இவெ இருக்கானே.. அதான் இந்த அம்மாசிப் பெய, இவன எட்டுலயுஞ் சேக்க முடியாது. எழவுலயுஞ் சேக்க முடியாது. ரொம்பா ரப்புக்காரன். '
'யாரு--அந்தத்த இருளாயி பேரனத்தான சொல்றீக ? எம்மா.. அவெ வெலாவுல வெடுச்ச பெயல்ல, ' பக்கத்துல ஒக்காந்து பாசி நெத்து அடுச்சுக்கிட்டுருந்த தாயம்மா சொன்னா.
அம்மாசிக்கு இருவது வயசு இருக்கும். தெருவுல பொம்பளைக சொன்னது கெணக்கா இவெ ஒரு சைசான பெயதான், ஊர்ப் பெரியவுகளுக்கு இவன வள்ளுசாப் புடிக்காது. ஆனா எளவட்ட பெயல்களுக்கு இவம்னா உசுரு.
Bama (1) வயசுக்குத் தக்கன வளத்தியும், கருத்த மீசையும் அதுவுமா பாக்குதுக்கு அம்மாசி நல்லா இருப்பான். நல்ல தேகக்கட்டு. அவெஞ் சிருச்சாம்னா வெயிலுக்குள்ள துள்ளுற கெண்ட மீனுக கெணக்கா பளீர் பளீர்னு பல்லு ஒளியடிக்கும். பெய என்னத்தத்தாம் போட்டு பல்லு தேப்பானோ தெரியல. எப்பயும் நையாண்டியாப் பேசுனாலும் ஒரு நாயத்தோட பேசுவான். என்னமோ விட்டேத்தியாத் திரிரவங் கெணக்காத்தான் தெரிவான். ஆனா ரொம்ப வெவரமான பெய.
பொழுதெனிக்கும் அவனப்பத்தி ஆவலாதிதான் வரும். அந்தப் பெயலச் சரியாப் புருஞ்சுக்கிராமத்தாஞ் சனங்க இப்பிடி அவனப் பத்திக் கூடக்கொறயாப் பேசுதுன்னு நெனப்பேன். இப்பக்கூட அவெஞ் செஞ்சது எனக்கு நாயமாத்தான் தெரிது, அவன நேராப் பாத்து பூராத்தையும் கேட்டுட்டேனே நானு.
வெள்ளங்காட்டி, கம்மாப்பக்கம் வெளிக்குப் போகையில அவனப் பாத்தேன். அப்பத்தான் அவனும் நானும் பேசிக்கிட்டோம், என்னடா வெசயமுன்னு கேட்டதுக்கு, எடுத்த எடுப்புல பூஞ்சிரிப்பா ஒரு சிரிப்புச் சிருச்சான். சிருச்சுக்கிட்டே நடந்த வெவரத்தச் சொன்னான்.
'ஏ மச்சான், இதுல என்ன தப்புஇருக்குன்னு சொல்லு. நேத்து அவரு பரசுராமரு வயக்காட்ல வரப்பு வெட்டிட்டு வெள்ளனத்துல வீட்டுக்கு வந்துட்டேன். வந்து கூழக் குடுச்சுப் போட்டு அப்படியே நெட்டியக்கல்லு வரைக்கும் ஒரு நடபோயிட்டு வருவமின்னு வண்டி ஏறுவேன் '.
'நெட்டியக்கல்லுக்கு என்ன சோலியாப் போன ? ' நாங்கேட்டேன்.
'சொல்றதக் கேளு மச்சான். அங்க கெணத்துவேல கெடைக்குமுன்னு இந்தக் கடக்காரப் பொண்டுகப் பெய சொன்னாமுன்னு வேல வெசாரிக்கப் போனேன். நம்மூரு பஸ்டாண்டுல வண்டி ஏறமின்னப் பெரும்பாடாப் போச்சு அம்புட்டுக் கூட்டம். '
'வண்டில ஏறயில யாரோடயும் சண்ட போட்டிட்டியா ? '
'நீ ஒரு திக்கம் மச்சான். முழுசுங் கேக்காமெ, ஒம் பாட்டுக்கு என்னத்தயாவது சொல்வ. ஊடால பேசாமக் கேளு. '
அவெங் கொணந் தெருஞ்சதுனால நானும் அவசரப் படாமெ, 'சரி சொல்லு; நானு குறுக்கே பேசல, ' சொல்லிட்டு அவெ என்ன சொல்லப் போறாமுன்னு அவனையே பாத்தேன்.
'அம்புட்டுக் கூட்டத்துல அடுச்சுப்புடுச்சு ஏறி எடம்பாத்து ஒக்காந்துட்டேன். அதே வண்டில அவரு சந்துர சேகரும் ஏறுனாரு. சந்துரசேகர்னா யாருங்ர ? அதான் எங்கய்யம் பண்ண வேல செய்ராம்ல. அந்த மேச்சாதி மொதலாளிதான். வந்தவரு எனியப்பாத்ததும் என்ன சொன்னாருங்க ? இப்பப்பாரு. எங்க ரெண்டு பேத்துக்கும் எடைல உழுந்த டயலாக்க அப்பிடியே பாத்துக்கோ. '
'ஏலேய்.. நீ அந்த மாடசாமியோட மகந்தானடா ? '
'நானு மாடசாமியோட மகனேதான். '
'ஏலேய்... எனிய யாருன்னு தெரியலயாடா ? '
'ஏந் தெரியல. நல்லாத் தெரிமே. நீரு சந்திரசேகருதான ? '
சொல்லிக்கிட்டே இருந்தவன் வேட்டியத் தூக்கிட்டு டவுசரு பையில இருந்து ஒரு பீடிய எடுத்து பத்த வச்சுக்கிட்டான்.
'இந்தப் பீடி எதுக்குங்க மச்சான். அந்நியாரம் பீடிய எடுத்துப் பத்த வச்சிக்கிட்டு பொகய உட்டுக்கிட்டே பேசுனம் பாத்துக்கோ. அதான் அது கெணக்காவே இருக்கனும்னு தான் இப்பப் பத்த வச்சேன். '
'சரி சொல்லுடா. பெரிய ஆக்டிங்காரந்தான். பொறுமய சோதுச்சுப் போடுவ, ' நானும் கொஞ்சம் எருச்சலா கேட்டேன்.
'சர்த்தான், இப்பப் பாரு மச்சான். '
'தெருஞ்சுக்கிட்டுமாடா ஒக்காந்துருக்க ? எந்திரிடா நா ஒக்காந்துக்குரேன். '
'நானு இம்புட்டுக் கூட்டத்துல நசுங்கி பிதுங்கி இந்த எடத்தப் புடுச்சு ஒக்காந்துருக்கேன். இங்ன நெட்டியக்கல்லுல எறங்குவேன் அதுவரைக்கும் நா ஒக்காந்துக்கிட்டு வாரேன். அதுக்குப் பெறகு நீங்க ஒக்காந்துக்கொங்க. '
'ஏலேய்... இந்தாருக்க நெட்டியக்கல்லுதானல.. எந்திரிடா. தள்ளிக்கோ ஐயா நின்னுக்கிட்டு வரைல நீயி மருவாத இல்லாமெ ஒக்காரலாமாடா ? '
'ஐயாவா ?.. எங்கய்யா உம்ம பிஞ்சைலதான இப்ப உழுதுக்கிட்டுக்கிருக்காரு நீரு எப்ப எனக்கு ஐயாவானீரு ? நீரு தலைகீழா நின்னாலும் நானு எந்திரிக்க மாட்டேன். '
இதுக்குள்ள பீடியுங் கட்டப் பீடியாப் போக தூக்கிக் கெடாசிட்டு கெக்கருச்சுக்கிட்டு சிருச்சான். அவெ மொகத்துல இருந்த குசும்பையும், சிரிப்பையும் பாத்துட்டு எனக்குஞ் சிரிப்பு வந்துச்சு.
'கடேசி வரைக்கும் நீயி எந்திரிக்கவே இல்லியாக்கும் ? ' நானு ஆத்தாமெக் கேட்டேன்.
'அடி சக்கே, நானாவது எந்திரிக்கிரதாவது. இத்தோடய நின்னுச்சுன்னு நெனைக்க ? இன்னியும் பாரு, ' சொல்லிக்கிட்டே கொரல மாத்திப் பேச ஆரம்புச்சான்.
'ஏலேய்.. ஒனக்குப் படி அளக்குர சம்சாரிக்கிட்டப் போயி வம்பு பண்றியேடா. ஒங்கய்யனுக்கு இருக்குர நன்றி விசுவாசம் ஒனக்குக் கடுகளவு கூட இல்லியே. மொதலாளி வாராருன்னா பள்ளு பறச்சாதி பூராம் அம்புட்டுப் பணிவா எந்துருச்சு நிக்கும். இவெம் பொடிப்பெயலுக்கு எங்க அதெல்லாந் தெரியப் போகுது '
'யோவ்... எந்திரிக்க முடியாதுன்னா முடியாது. இதுக்கு மேல பேசுனீர்னா மரியாத கெட்டுப் போகும். '
'நெட்டியக்கல்லு வரவும் எறங்கிட்டேன். அவரு தரப்புரத்தரப்புரன்னு மொணங்கிக்கிட்டே இருந்தாரு. நா மேல ஒன்னும் பேசல. இதுதான் நடந்தது மச்சான். இங்க நம்ம தெருப்பெயமக்க எனிய மென்னு துப்புராளுக. '
'அதுக்குள்ள எப்பிடி ஊருக்குள்ள தெருஞ்சுச்சு ? ' நாங் கேட்டேன்.
'அந்தக் கண்ராவிய ஏங் கேக்குர ? சாயந்தரமே சந்துரசேகரு எங்கய்யங்கிட்ட வெசயத்தச் சொல்லி எனிய கண்டுச்சு வைக்கச் சொன்னாராம். எங்கய்யா எங்க வீட்ல போட்ட கூப்பாட்டுலதான் இப்ப தெருப்பூராம் இதே பேச்சா இருக்கு. '
'நம்மூருப் பொட்டச்சிக சும்மான்னு இருக்க மாட்டேங்காளுக. அவா ஊமச்சிறுக்கி, என்ன இருந்தாலும் ஒரு சம்சாரி நிக்கைல ஒரு பறப்பெய ஒக்காத்துக்கிட்டு வரலாமா ? அம்புட்டுச் சவுடாலு என்ன கேக்குது இவனுக்கு ? ரொம்பா மணியம் புடுச்ச பெய. இவனுக்குப் போங்காலம் நெருங்கிருச்சுங்கா, ' நாஞ் சொல்லவும் அம்மாசி சிருச்சான்.
'இது தேவல மச்சான். அந்தக் கெழவபணியாரமுத்து என்ன சொல்ராம்ங்ற ? ' சம்சாரி நம்மளுக்குத் தெய்வங்க மாதிரி. அவுக இல்லினா நம்ம பொழைக்க முடிமா ? சுத்த வெவரங் கெட்ட நீசப் பெயல்களாவுல இருக்கானுக. நக்குன நாய்க்கு நா எழும்பாதும்பாங்க. இந்த நாயி மேல உழுந்தே புடுங்கப் பாக்குது. சம்சாரிக மனசு வச்சா அம்புட்டுப் பல்லையும் பேத்துருவாக பேத்து. '
'கெழவஞ் சொல்லச் சொல்ல எனக்குச் சிரிப்புத்தான் வந்துச்சு. சிரிக்கதப் பாத்துட்டு கெழவ இன்ன ரெண்டு வசவு வஞ்சான். ' அம்மாசி சொல்லிக்கிட்டே சிரிச்சான். நானும் சிருச்சுக்கிட்டே வந்துட்டேன். '
அம்மாசியப் பத்தி பேச்சு அடங்குன ஒரு வாரத்துக்குள்ள திரும்பியும் அவனோட நட்னத்தனத்தப் பத்தி தெருவுலப் பேசுனாக. ஆனா அவெம் மட்டும் ஒன்னுமே நடக்காதது மாதிரி செவனேன்னு போறதும் வாரதுமா இருந்தான். நாந்தான் அவனக் கூப்டு.
'ஏப்பா, இப்ப என்ன செஞ்ச ? ' ன்னு வெசாருச்சேன். நானு வெசாரிக்கவும் அவெ ரொம்பா எடக்காச் சொன்னான், 'மச்சா, இன்னைக்கு ரவைக்கு ஊர்க்கூட்டம் இருக்கு. வந்துரு பெரிய கொலயாளிய வெசாரிச்சுத் தூக்குல போடப் போறாக. '
'ஊர்க்கூட்டம் இருக்கட்டுமப்பா, நீயி என்ன செஞ்சன்னு சொல்லு. '
'எனியத்தான் மச்சான் வெசாரிக்கப் போறாக. கட்டாயம் வந்துரு என்ன, ' அம்மாசி சொன்னான்.
'இப்ப என்ன ஆவலாதி ஓம்மேல ? சொல்லுப்பா--கேப்போம், ' நானு திரும்பியும் கேட்டேன்.
'அதாவது மச்சான், ரெண்டு நாளைக்கு முன்னால அந்தச் சின்னையா முத்துக் கருப்பன் எனியக் கூப்டு, அந்த ஜெயசங்கரு மொதலாளியோட பிஞ்சைல தண்ணிபாச்சப் போனாரு. '
'ஆமா.. ஒனியப் பாத்தேனே வெள்ளையுஞ் சொள்ளையுமா மம்பிட்டியத் தூக்கிட்டு போனீயே. நீ போன சோக்கப் பாத்து, நீ மம்பிட்டிக்கு கணகின போடப் போறீயாக்கும்னு நெனச்சேன், ' நாஞ் சொன்னேன்.
'இந்த லக்கலுதான வேண்டா மச்சான். ஏ, வெள்ளையுஞ் சொள்ளையுமா வேலவெட்டிக்குப் போக்கூடாதா ? நானு அன்னைக்குன்னு பாத்து இந்த முத்திருளங்கிட்ட ஒரு ரூவா குடுத்து சட்டைக்குப் பெட்டி போட்டுல போட்டுட்டுப் போனேன். '
'ஆமாமா..., மடிப்புக்கலையாத சட்டையாத்தான் இருந்துச்சு. சரி என்ன வெசயமுன்னு சொல்லு, '
'ஜெயசங்கரு பிஞ்சைக்குப் போனனா. அங்க அவரு பம்பு செட்டுக்கிட்ட நின்னுக்கிட்டு இருந்தாரு. நானு மம்பிட்டியோட போயி நிக்கவும் அவரே பேச்சே எடுத்து உட்டாரு. ' சொல்லிக்கிட்டுருந்தவெ அவரு பேசுன தோரணைல பேச ஆரம்புச்சான்.
'ஏலேய் ஒங்க தெரு முத்துக்கருப்பங்கிட்ட தண்ணி பாச்சரதுக்கு ஒரு ஆளப்பாத்து அனுப்பச் சொன்னேன். நேரமாச்சு. இன்னும் ஒரு பெயலயுங் காணோம். '
'முத்துக்கருப்பஞ் சின்னையா எனியத்தான் அமத்திப் போச் சொன்னாரு. அதான் வந்துருக்கேன். '
'ஒனியப் பாத்தா வேலைக்கு வந்துருக்காப்லயா தெரியுது. எங்கயே ஆபிசுக்குப் போறவங் கெணக்கா வந்து நிக்க. நீயி ரொம்பாச் சள்ள புடுச்ச பெயல்ல. வேற ஆளே கெடைக்கலன்னா அந்தப் பெய ஒனியப் போச் சொன்னான் ? '
'இப்ப என்னங்றீரு ? ஒமக்குத் தண்ணிதான பாச்சனும். நானு எப்பிடி வந்தா ஒமக்கு என்ன ? '
'ஏலேய், இப்ப மணி என்னன்னு தெரியுமாலே ? வந்துருக்காம்பாரு, எங்கயோ ஊரு தேசம் போறவ மாதிரி. '
'அண்ணாச்சி ஒங்ககிட்டதான் ரெஸ்ட் வாச்சி. இருக்குது. ஏங்கிட்ட இல்லியே அண்ணாச்சி. நீங்கதான் மணி என்னன்னு சொல்லனும் அண்ணாச்சி. கூடிய சீக்கிரம் வாச்சு ஒன்னு வாங்கனும் அண்ணாச்சி வாங்கிக் கெட்னாப் பெறகு மணி பாத்து சொல்றேன் அண்ணாச்சி. '
அம்மாசி இப்பிடிச் சொல்லிக்கிட்டிருக்கைல அவெம் மொகத்தப் பாத்து எனக்குச் சிரிப்ப அடக்க முடியல. நானு சத்தமாச் சிரிக்கவும், 'பொறு மச்சான், கொறையவுங் கேளு. நானு அண்ணாச்சின்னு கூப்டவும் அவரு மொகம் போன போக்கப் பாக்கனுமே. ரொம்பாக் கடுப்பாயிட்டாரு. கடுப்போடயே திலும்பியும் பேசுராரு.
'என்னலே சொன்ன ? அண்ணாச்சியா ? வாய்க்கு வாயி அண்ணாச்சின்னா சொல்ற ? யாருடா அண்ணாச்சி ? யாருக்குடா அண்ணாச்சி. ஒருப் பறத் தாயளியாடா எனிய அண்ணாச்சின்னு சொல்றது ? '
'கண்டமாணிக்கப் பேசாதீரும். பெறகு நானும் பேசுனா ஒமக்கு மரியாத கெட்டுப் போகும். வேண்டாம்னா போச்சொல்லுரத உட்டுட்டு.. மயிரு பேசுரதப்பாரு. ' சொல்லிக்கிட்டே விருட்டுன்னு வீட்டுக்கு வந்துட்டேன். ஊருக்குள்ள வந்து என்னத்தப் புளுகிட்டுப் போனானோ இவனுக கூட்டம் போட்டுருக்கானுக. '
'அப்ப ஒனக்கு தெண்டந்தான் இன்னைக்கு. சம்சாரியப் பாத்து மயிருதயிருன்னு பேசிட்டு வந்துருக்கில. '
'அட நீ ஒன்னு மச்சான், எனிய அதுக்கா வெசாரிக்கப்போறாகன்னு பாத்த ? நானு அந்த ஆள அண்ணாச்சின்னு கூப்டதுதான் பெருங் குத்தமாப் போச்சு இப்ப. அதுக்குத்தான் கூட்டம். '
அம்மாசி சொன்னது கெணக்கா ராத்திரி கூட்டங் கூடிட்டாக நாட்டமெ அம்மாசிட்ட கேட்டாரு. 'ஏலேய் அம்மாசி, நம்ம சாதி என்ன, மொதலாளியோட சாதி என்ன ? யாரு போயி யாரப் பாத்து அண்ணாச்சிங்றது ? சுத்த வெவரங்கெட்ட பெயலா இருக்கியே. '
அம்மாசியும் பதுலுக்கு, 'நம்ம பறையரு அவரு நாய்க்கரு நாந்தான் போயி அவரப் பாத்து அண்ணாச்சின்னேன். இதக் கேக்குதுக்கு ஒரு கூட்டம், ' சொல்லிக்கிட்டுத் தலயச் சொருஞ்சிக்கிட்டான்.
அம்மாசியோட பதுலக் கேட்டு எளவட்ட பெயல்கள்ளாம் கொல்லுன்னு சிருச்சானுக.
நாட்டாமெ வந்த வெளத்த அடக்கிக்கிட்டுச் சொன்னாரு, 'சரி ஓங்கிட்டப் போயி எனக்கு அது இதுன்னு பேசிக்கிட்டு சட்டுன்னு சொல்லுலே. எதுக்கு மொதலாளிய அண்ணாச்சின்னு சொன்ன. '
அம்மாசியும் பட்டுன்னு சொன்னான், 'அவரு எனிய விட வயசுல மூத்தவரு. அதான் அண்ணாச்சினே. எளையவரா இருந்துருந்தா தம்பின்ருப்பேன். '
இந்தப் பதுலக் கேட்டுட்டு இன்னுஞ் சத்தமாப் பெயல்க சிரிச்சானுக.
'இந்தப்பெய லேசுக்குள்ள மசியமாட்டான். பதுலப்பாரு ரொம்ப வில்லங்கம் புடுச்ச பெய, ' சின்ன நாட்டாமெ சொன்னாரு.
ஒடனே நாட்டாமெ சீரியஸா பேச ஆரம்புச்சாரு 'ஏலேய் ஒனிய யாரும் டமாசு பண்றதுக்கு இங்க கூப்டல. இம்புட்டுக் காலமா யாராச்சும் பள்ளுபறையனுக, நாய்க்கமார ஒறமொற சொல்லிக் கூப்டுருப்பமா ? நீ நேத்துப் பெறந்த பெய இப்பிடி வெதண்டா வாதஞ் செய்றீயே. அண்ணாச்சின்னு சொன்னது தப்புத்தானலே. '
ஒடனே அம்மாசியும் சீரியசா பேச ஆரம்புச்சான். 'நாஞ்சொன்னதுல ஒன்னும் தப்பில்ல. நானென்ன மாமெமச்சாமின்னு ஒறவு வச்சு பொண்ணு பிள்ளயா கேட்டுட்டேன் ? சாதாரணமாக அண்ணாச்சின்னு மருவாதையாக் கூப்டதுக்கே இம்புட்டு ரகள செய்றீக. போன வாரத்துல சாக்கட அள்ளுற இருளப்பன அண்ணாச்சினு கூப்டதுக்கு அம்புட்டுப் பேரும் சேய்.. கொறப்பெயலப் போயி அண்ணாச்சிங்கான்னு எளக்காரமாப் பேசுனீக. இப்ப என்னடா எப்படிடா நாய்க்கரப் போயி அண்ணாச்சிங்கலாம்னு எடங்கலுக்கு மொடங்கலா கேக்குறீக. அந்த பூவதிக் கெழவி சொல்றது கெணக்கா 'கழுத விட்டைல முன் விட்ட வேற பின்விட்ட வேறயா ? விட்டன்னா எல்லாம் விட்டதான். மனுசம்னா எல்லாம் மனுசந்தான் ' சொல்லிட்டு விருட்டுன்னு வீட்டுக்குப் போயிட்டான் அம்மாசி.
அம்புட்டுப் பேரும் அவனயே அருவசமா பாத்தாக.

Thursday, April 28, 2016

உனக்கும் எனக்கும்…. (சிறுகதை)


"ம் ...சொல்லு"
 
"என் பேர் கூட ஞாபகமில்லையா?"
 
"இதை கேக்கதான் இப்ப போன் பண்ணினயா?"
 
"போன் பண்ணினது தப்பு தான்... வெச்சுடறேன்" என்றவளின் குரலில் இருந்த ஏதோ ஒன்று மனதை வருத்த
 
"சுமித்ரா..." என அவளை நிறுத்தினான்
 
தூக்கத்துல கூட சுமி மித்து மித்ரானு சொன்னதெல்லாம் மறந்தாச்சு, சுமித்ரானு நீட்டி மொழக்கணுமா என எரிச்சலில் குமைந்தாள்
 
"சொல்ல வந்தத சீக்கரம் சொல்லு. எனக்கு நெறைய வேலை இருக்கு"
 
"ஒரு நிமிஷம் எனக்காக ஒதுக்க முடியாத அளவுக்கு பிசியா?"
 
"இப்ப சண்டை போடத்தான் போன் பண்ணினயா? அதைதான் தினமும் வீட்ல செஞ்சுட்டு இருக்கமே" என்றான் எரிச்சலாய்
 
"என்கிட்டே பேசவே புடிக்கல, இல்லையா ராகவ்"
 
"நான் அப்படி சொல்லல"
 
"வார்த்தையா சொல்லணும்னு அவசியம் இல்ல"
 
"இப்ப எதுக்கு போன் பண்ணின...கெட் டு தி பாயிண்ட்" என்றான் பொறுமை இழந்தவனாய்
 
"எங்க ஆபீஸ்ல நாளைக்கி தீபாவளிக்கு ஏதோ பார்ட்டியாம்"
 
"ம்..."
 
"அதுல ஜோடி பொருத்தம் ப்ரோக்ராம் வெக்கராங்களாம்"
 
"அதை எதுக்கு என்கிட்டே சொல்ற" என்றான் எரிச்சலாய்
 
"நமக்கு கல்யாணம் ஆனதாச்சும் ஞாபகம் இருக்கா?" என்றாள் கோபமாய்
 
"நல்லாவே ஞாபகம் இருக்கு. அதோட, ரெண்டு மாசம் முன்னாடி டைவர்ஸ் அப்ளை பண்றது விசியமா லாயரை போய் பாத்தது கூட நல்லாவே ஞாபகம் இருக்கு"
 
"அது இன்னும் ஊருக்கு தெரியாதே"
 
"அதுக்காக...."
 
"நாமளும் அந்த ப்ரோக்ராம்ல..."
 
"உனக்கென்ன பைத்தியமா சுமித்ரா" என இடைமறித்தான்
 
"நீங்க தானே டைவர்ஸ் பைனல் ஆகற வரை யாருக்கும் சொல்ல வேண்டாம்னு..."
 
"அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்"
 
"எல்லா கபில்சும் கண்டிப்பா பார்டிசிபேட் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க"
 
"இங்க பாரு..."
 
"எனக்கும் ஒண்ணும் நாம ஜோடியா கொஞ்சிட்டு நிக்கணும்னு ஆசையில்ல, வேற வழி இல்லாம தான், எல்லாரும் கேக்கற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது. ப்ளீஸ் ராகவ்...இந்த ஒரு வாட்டி எனக்காக ப்ளீஸ். "
 
ஒரு கணம் மௌனம் காத்தவன், அதற்கு மேல் மறுக்க மனமின்றி "ஒகே" என அழைப்பை துண்டித்தான்
________________________________
 
அலுவலக சகாக்கள் எல்லாரும் தங்கள் கணவன் அல்லது மனைவியுடன் அமர்ந்து கேள்வி பதில் ரிகர்சலில் மூழ்கி இருக்க, சுமித்ராவும் ராகவ்'ம் மட்டும் மௌனமாய் இறுகிய முகத்துடன் அமர்ந்து இருந்தனர்
 
"ஹெலோ மிஸ்டர் ராகவ், எப்படி இருக்கீங்க?" என கை குலுக்கினார் சுமித்ராவின் மேனேஜர் சத்யன்
 
"பைன் சார், நீங்க எப்படி இருக்கீங்க?" என சம்பிரதாயமாய் வினவினான் ராகவ்
 
"பைன் பைன்... என்ன சுமித்ரா ஆல் ப்ரிபேர்ட் போல இருக்கே. டென்ஷன் இல்லாம அமைதியா இருக்கீங்க ரெண்டு பேரும்" என கேலியாய் வினவ, ஒன்றும் பேசாமல் சிரித்து மழுப்பினாள் சுமித்ரா
 
"குட் ஈவினிங் எவ்ரிபடி. வெல்கம் டு அவர் திவாளி செலப்ரேசன்" என ரிசப்சனிஸ்ட் ராதிகா மேடையேறி வரவேற்பை துவங்க
 
"ஏன் ராதிகா உனக்கு தமிழ் தெரியாதா?" என கூட்டத்தில் சக ஊழியர் ஒருவர் கேலி செய்ய
 
"ஒகே கார்த்திக் டமில்லேயே கண்டினியு பண்றேன்"
 
"அம்மா தாயே இப்படி தமிழை கொல்றதுக்கு பதிலா நீ ஆங்கிலத்துலையே சொல்லு" என அதற்கும் கேலி தொடர்ந்தது
 
ஒருவழியாய் ஆரம்ப சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி தொடங்கியது. முதல் இரண்டு சுற்றில் ஜெய்த்து இரண்டு தம்பதிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில் சுமித்ரா ராகவ் தம்பதியும் இருந்தனர்
 
சக ஊழியர்களின் கேலியும் ஆர்ப்பட்டமும் சுமித்ராவை நெளியச் செய்தது. இன்னும் சில மாதங்களில் விவாகரத்து செய்தியை சொல்லும் போது என்ன நினைப்பார்கள் என யோசித்தாள்
 
அவளே ஆச்சிர்யப்படும் விதமாய் இருவரும் ஒரே போன்ற பதிலை கூறி இருந்தனர். இத்தனை புரிதல் இருந்தும் ஏன் இன்று விவாகரத்து வரை சென்றது என வருந்தினாள். ஒருவேளை அதீத புரிதல் தான் தங்களுக்குள்ளான பிரச்சனைக்கு காரணமோ என தோன்றியது சுமித்ராவுக்கு
 
திருமணமான இந்த இரண்டு வருடத்தில் சந்தோசமாய் இருந்த நாட்களை விட இருவரும் சண்டை போட்ட நாட்கள் தானே அதிகம் என வேதனை தோன்றியது. தினம் தினம் இப்படி வேண்டாமல் சேர்ந்து வாழ்வதை விட பிரிவதே மேல் என முதல் கூறியது சுமித்ரா தான்
 
அவள் சொன்னதற்கு ராகவ் மறுப்பேதும் கூறவில்லை. அவள் சொல்லவே காத்திருந்தது போல் மறுநாளே வக்கீலை பார்க்க அழைத்து சென்றான். அதன் பின் ஒரே வீட்டில் இரு துருவங்களாய் இருந்தனர் இருவரும்
 
அவன் கேட்டு கொண்ட ஒரே விசியம், பெற்றோர் உட்பட யாருக்கும் எல்லாம் முடியும் வரை இதை பற்றி சொல்ல வேண்டாம் என்பது மட்டும் தான். இப்போதிருந்தே எல்லோருக்கும் விளக்கம் சொல்ல விருப்பமில்லை என அதற்கு காரணமும் சொன்னான்
 
"மிஸ்டர் அண்ட் மிசஸ் கார்த்திக் பைனல் ரௌன்ட்ல ரெண்டு கேள்வில ஒரு கேள்விக்கு சரியான பதில் சொல்லி பத்துக்கு அஞ்சு மார்க் வாங்கி இருக்காங்க. கன்க்ராட்ஸ் உங்களுக்கு" என்ற நிகழ்ச்சி நடத்தும் பெண்ணின் வாணியின் அறிவிப்பில் தன் நினைவில் இருந்து மீண்டாள் சுமித்ரா
 
"இனி, மிஸ்டர் அண்ட் மிசஸ் ராகவ். ராகவ் சார், சுமித்ராகிட்ட ரெண்டு கேள்விக்கு பதில் வாங்கி வெச்சு இருக்கோம். ரெண்டு கேள்விக்கும் சுமித்ரா சொன்ன அதே பதில நீங்களும் சொன்னா கார்த்திக் ஜோடிய பீட் பண்ணிடலாம். அதோட.... இன்னைக்கு சூப்பர் ஜோடி பட்டமும் உங்களுக்கு தான். வாங்கிடுவீங்களா?" என கேள்வியாய் நிறுத்த, ராகவ் மௌனமாய் சுமித்ராவை பார்த்தான்
 
அவனின் குற்றம் சாட்டும் பார்வையை சந்தித்தவளுக்கு கண்ணில் நீர் கோர்த்தது. அதை மறைக்க குனிந்து கொண்டாள்
 
அதை வேறு விதமாய் புரிந்து கொண்ட வாணி "ஆஹா...இத்தன கூட்டத்துல பத்தடி தள்ளி உக்காந்துட்டு இருக்கும் போதே கண்ணுலேயே ரொமேன்ஸ் நடக்குதா...ஹே" என கேலி செய்ய, மற்றவர்களும் ஆரவாரம் செய்தனர்
 
உண்மை காரணம் புரிந்த ராகவ் மட்டும் மௌன புன்னகையில் வேதனையை மறைத்தான்
 
"ஒகே மிஸ்டர் ராகவ், உங்களுக்கான முதல் கேள்வி. சுமித்ராவுக்கு ரெம்ப பிடிச்ச அப்புறம் பிடிக்காத ஒருத்தர் பேர் சொல்லுங்க. உங்களுக்கு டென் செகண்ட்ஸ் டைம்"
 
ஒரு கணம் கூட யோசிக்காமல் "ரெண்டுமே நான் தான்" என்றான்
 
"ஆர் யு ஸூர் மிஸ்டர் ராகவ். அதெப்படி உங்க மனைவிக்கு பிடிக்காத லிஸ்ட்ல நீங்க இருக்க முடியும். சுமித்ரா இந்த பதில் தான் சொல்லி இருப்பாங்கனு நினைக்கறீங்களா?"
 
"விருப்பு வெறுப்பு ரெண்டுமே நமக்கு புடிச்சவங்க மேல தானே காட்ட முடியும். சோ, ரெண்டுமே அவளுக்கு நான் தான். இதான் அவளோட பதிலா இருந்துருக்கும்" என்றான் சர்வநிச்சியமாய். அவன் முகத்தை பார்க்கும் தைரியம் இன்றி குனிந்தே இருந்தாள் சுமித்ரா
 
"ஆடியன்ஸ்... இந்த ஏன்சர் சரியா தப்பானு ஒரு பிரேக் முடிஞ்சு பாக்கலாமா?" என வேண்டுமென்றே வாணி சீண்ட
 
"ஏய்..." என மற்றவர்கள் மிரட்ட "கரெக்ட் ஏன்சர்" என அறிவித்தாள் வாணி. கூட்டத்தில் கை தட்டல் எழுந்தது
 
"ஒகே பைனல் கொஸ்டின். சூப்பர் ஜோடி நீங்களா இல்ல கார்த்திக் ஜோடியானு தீர்மானிக்க போற கேள்வி. கேக்கலாமா?" என வாணி நிறுத்த
 
"இந்த கொசு தொல்ல தாங்க முடியல சாமி. கேள்வியை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா?" என சக ஊழியர் ஒருவர் பொங்கி எழ
 
"கூல் மிஸ்டர் மூர்த்தி. இதோ நானே கேட்டுடறேன். மிஸ்டர் ராகவ், சும்மா ஜாலிக்கு தான், தப்பா எடுத்துக்க வேண்டாம். சுமித்ராகிட்ட தீவாளிக்கு நீ என்ன கேட்டாலும் வாங்கி தரேனு நீங்க சொல்றீங்கனு வெச்சுப்போம், அதுக்கு அவங்க மௌன ராகம் ரேவதி மாதிரி, எனக்கு விவாகரத்து வேணும்னு கேட்டா என்ன செய்வீங்க? டென் செகண்ட்ஸ் கவுன்ட் டௌன் ஸ்டார்ட்ஸ் நொவ்"
 
ஒரு கணம் மௌனமாய் சுமித்ராவை பார்த்தவன் "வாங்கி தருவேன். அவ கேட்ட விவாகரத்த வாங்கி தருவேன்" என்றான் உணர்ச்சியற்ற குரலில்
 
இந்த பதிலை எதிர்பாராத அதிர்ச்சி கூட்டத்தில் இருந்தவர்கள் முகத்தில் தெரிந்தது. சுமித்ரா "உன் புத்தி தெரிந்தது தானே" என்பது போல் கோபமாய் கணவனை பார்த்தாள். நிகழ்ச்சியை நடத்திய வாணி கூட ஒரு கணம் பேச மறந்து விழித்தாள்
 
"ராகவ் சார், சுமித்ரா என்ன பதில் சொல்லி இருக்காங்கனு எனக்கும் இன்னும் தெரியாது. இந்த கவர்ல தான் அந்த பதில் இருக்கு. ஆனா, என்னால இதை கேக்காம இருக்க முடியல. உங்க பதில் சினிமாத்தனமா இருக்குனு உங்களுக்கே தோணலையா?" என்றாள் வாணி
 
அவன் என்ன விளக்கம் சொல்ல போகிறான் என்பதை கேட்க அங்கு நிசப்தம் நிலவியது
 
"சினிமாத்தனமா இருக்கா இல்லையானு எனக்கு தெரியாதுங்க. என்னோட இருக்க புடிக்காம தான என் மனைவி விவாகரத்து கேக்கறா. நான் அவள அவ்ளோ கஷ்டபடுத்தி இருக்கேன்னு தானே அர்த்தம். நாம நேசிக்கறவங்க கஷ்டப்படரத பாக்கறது ரெம்ப வேதனை, நாமளே அதுக்கு காரணமா இருக்கறது இன்னும் கொடுமைங்க. அதான் விருப்பமில்லாத வாழ்க்கைல இருந்து அவள விடுவிக்க தயார்னு சொன்னேன், அது எனக்கு உயிர் போற வேதனைனே தெரிஞ்சும்" என ராகவ் கூறி முடித்ததும், கார்த்திக் ஜோடி உட்பட எல்லாரும் எழுந்து நின்று கை தட்டினர்
 
"வாவ்... உங்க சுமித்ராவும் நீங்க விவாகரத்து குடுக்க சம்மதிப்பீங்கனு தான் பதில சொல்லி இருக்காங்க. இன்னைக்கி சூப்பர் ஜோடி பட்டம் வாங்கி இருக்கறது மிஸ்டர் அண்ட் மிசஸ் ராகவ். கிவ் தெம் எ பிக் ரவுண்டு ஆப் அப்ளாஸ்" என வாணி கூறவும் "ஹே..." என கூக்குரலுடன் மகிழ்ந்தனர் அனைவரும்
 
ஆனால் சம்மந்தப்பட்ட இருவர் மட்டும் மனதிற்குள் அழுதனர். ராகவ் சொன்ன பதிலில் உடைந்து போய் இருந்தாள் சுமித்ரா. அவன் விவாகரத்துக்கு சரி என்றதும் கோபம் கொண்டேனே, அவன் மனம் எப்படி வேதனைபட்டிருக்கும் என உணர்ந்ததும் அவன் கண்களை சந்திக்கும் தைரியம் இன்றி வாழ்த்து சொன்ன தோழிகளை எதிர்கொள்ளும் சாக்கில் அவனை தவிர்த்தாள் சுமித்ரா
 
போட்டியில் ஜெய்த்து இருந்தாலும் வாழ்வில் தோற்றுவிட்டோமே என வேதனையில் இருந்தான் ராகவ்
 
"ஒகே ஒகே... சைலன்ஸ்" என எல்லாரையும் அமைதிபடுத்திய வாணி
 
"எல்லாருக்கும் ஹேப்பி தீபாவளி. ராகவ் அண்ட் சுமித்ராவுக்கு சூப்பர் தீபாவளி, ஏன்னா நீங்க இந்த போட்டில ஜெய்ச்சதுக்கு உங்களுக்கு கொடைக்கானல் ரிசார்ட்ல நாலு நாள் தங்கரதுக்கான கிப்ட் வவுச்சர். ரெண்டு பெரும் ஜோடியா வந்து நம்ம மேனேஜர் சார்கிட்ட உங்க பரிசை வாங்கிக்கோங்க"
 
இருவரும் பரிசை பெற்றுகொண்டு மேடையை விட்டு இறங்க செல்ல "வெயிட் வெயிட்...அதுக்குள்ள ஓடினா எப்படி?" என பிடித்து நிறுத்தினாள் வாணி
 
"ஒகே மிஸ்டர் ராகவ். இப்ப உங்க சுமித்ராகிட்ட என்ன என்னமோ சொல்லணும்னு உங்க மனசுல ஓடிட்டு இருக்கும். அது எல்லாத்தையும் சொல்லணும்னு நாங்க எதிர்பாக்க முடியாது. ஆனா ஒரு ரெண்டு டயலாக் ஆச்சும் சொன்னாதான் நீங்க இங்கிருந்து போக முடியும். நான் சொல்றது சரி தானே?" என மற்றவர்களை பார்த்து வாணி கேட்க "ஆமா ஆமா" என பதில் வந்தது
 
காதலுடன் மனைவியை கண்ணோடு கண் பார்த்தவன் "ஐ லவ் யு மித்து" என்றான் ராகவ், வேறு எந்த வார்த்தையும் இப்போதைய தன் மனநிலையை உணர்த்தி விடாது என்பதை உணர்ந்தவன் போல்
 
அதை கேட்டதும் இத்தனை பேர் மத்தியில் இருக்கிறோம் என்பதை கூட மறந்தவளாய் கண்ணீருக்கு அணை போட இயலாமல் திணறினாள். வேகமாய் அவள் அருகே சென்ற ராகவ் அவளை தன் அணைப்பில் சேர்த்து கொண்டான். "அயம் சாரி அயம் சாரி" என அரற்றினாள் சுமித்ரா
 
"தப்பு என் மேலயும் தான் மித்து. வேலை வேலைனு உன்கூட சரியா டைம் ஸ்பென்ட் பண்ணாம அதான் நமக்குள்ள பெரிய கேப்பை உருவாக்கிடுச்சு... சாரி'ம்மா" என்றவனின் அணைப்பு மேலும் இறுகியது
 
அவனின் இறுகிய அணைப்பில் அவள் அழுகை மேலும் கூடியது. "ஹ்ம்ம்... அழுதா இந்த மூஞ்சிய பாக்க சகிக்கலயே. அப்ப மறுபடி டைவர்ஸ் பத்தி யோசிக்க வேண்டியது தான்" என்றவன் சீண்ட, அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் அழுகையை நிறுத்தி அவனை முறைத்தாள் சுமித்ரா
 
"ம்... இந்த மூஞ்சி ஒகே... அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்" என மேலும் சீண்ட, மீண்டும் அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் சிரித்தாள்
 
நல்ல வேளையாய் மற்றவர்களின் கேலியான ரகளையில் யாருக்கும் இவர்களின் பேச்சு கேட்கவில்லை. கேலி பேச்சு தொடர அப்போது தான் சுற்றுபுறத்தை உணர்ந்தவர்களாய் வேகமாய் மேடையை விட்டு இறங்கினர் இருவரும்
 
"ஹேப்பி தீபாவளி" என்ற குரல் மட்டுமே எங்கும் ஒலித்தது
 
(முற்றும்)
புவனா கோவிந்த் 

Thursday, April 14, 2016

ஆறில் ஒரு பங்கு- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

முகவுரை
ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகாது.
இந்த உணர்வே நமக்கு ஸ்வதந்திரமும் அமரத்தன்மையும் கொடுக்கும். “நாந்ய பந்தா bharathiar1வர்த்ததே அயநாய” வேறு வழியில்லை.
இந்நூலை, பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.
- ஆசிரியன்.
அத்தியாயம் 1
மீனாம்பாள் வீணை வாசிப்பதிலே ஸரஸ்வதிக்கு நிகரானவள். புரசைவாக்கத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு அவள் வரும் சமயங்களிலெல்லாம் மேல மாடத்து அறையை அவளுடைய உபயோகத்துக்காகக் காலி செய்து விட்டு விடுவது வழக்கம். நிலாக் காலங்களில் இரவு எட்டு மணிக்கெல்லாம் போஜனம் முடிந்துவிடும். ஒன்பது மணி முதல் நடுநிசி வரையில், அவள் தனது அறையில் இருந்து வீணை வாசித்துக் கொண்டிருப்பாள். அறைக்கு அடுத்த வெளிப்புறத்திலே பந்தலில், அவளுடைய தகப்பனார் ராவ்பகதூர் சுந்தரராஜுலு நாயுடு கட்டிலின்மீது படுத்துக் கொண்டு சிறிது நேரம் வீணையைக் கேட்டுக் கொண்டிருந்து, சீக்கிரத்தில் குறட்டைவிட்டு நித்திரை செய்யத் தொடங்கிவிடுவார். ஆனால், மகாராஜன் குறட்டைச் சத்தத்தால் வீணை சத்தம் கேளாதபடி செய்து விடமாட்டார்; இலேசான குறட்டைதான். வெளிமுற்றத்தின் ஒரு ஓரத்திலே நான் மட்டும் எனது ‘பிரம்மசாரி’ப் படுக்கையைப் போட்டுக் கொண்டு படுத்திருப்பேன். வீணை நாதம் முடிவுறும் வரை, என் கண்ணிமைகளைப் புளியம் பசை போட்டு ஒட்டினாலும் ஒட்ட மாட்டா. மீனாம்பாளுடன் அறையிலே படுத்துக் கொள்ளூம் வழக்கமுடைய எனது தங்கை இரத்தினமும் சீக்கிரம் தூங்கிப் போய்விடுவாள். கீழே எனது தாயார், தமையனார், அவரது மனைவி முதலிய அனைவரும் தூங்கி விடுவார்கள். எனது தமையனார் மனைவி, வயிற்றிலே சோற்றைப் போட்டுக் கைகழுவிக் கொண்டிருக்கும்போதே, குறட்டை விட்டுக் கொண்டிருப்பாள். இடையிடையே குழந்தைகளின் அழுகைச் சத்தம் மட்டிலும் கேட்கும். தமையனாருக்குக் கோட்டையில் ரெவினியூ போர்டு ஆபீஸிலே உத்தியோகம். அவருக்கு நான்கு வருடங்களுக்கொரு முறை ஆபீஸில் பத்து ரூபாயும், வீட்டில் இரண்டு குழந்தைகளும் ‘ப்ரமோஷன்’.
வஸந்த காலம், நிலாப் பொழுது, நள்ளிரவு நேரம், புரசைவாக்கம் முழுதும் நித்திரையிலிருந்தது. இரண்டு ஜீவன்கள்தான் விழித்து இருந்தன. நான் ஒன்று, மற்றொன்று அவள்.
கந்தர்வ ஸ்திரீகள் ‘வீணை’ வாசிப்பதுபோல மீனாம்பாள் வாசிப்பாள். பார்ப்பதற்கும் கந்தர்வ ஸ்திரீயைப் போலவே இருப்பாள். அவளுக்கு வயது பதினாறு இருக்கும். கதையை வளர்த்துக் கொண்டு ஏன் போக வேண்டும்? மன்மதன் தனது அம்பொன்றின் முனையிலே என் பிராணனைக் குத்தி எடுத்துக் கொண்டு போய் அவள் வசம ஒப்புவித்து விட்டான். அடடா! அவளது இசை, எவ்வளவு நேரம் கேட்டபோதிலும் தெவிட்டாது. தினந்தோறும் புதுமை தோன்றும், அவள் முகத்தில். அவளுடைய தந்தையாகிய ராவ்பகதூர் சுந்தரராஜுலு நாயுடு எனது தாயாருக்கு ஒன்றுவிட்ட அண்ணன். தஞ்சாவூர் முதலிய பல ஜில்லாக்களில் நெடுங்காலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உத்தியோகம் பார்த்து ஸர்க்காருக்கு நன்றாக உழைத்ததினால் ‘ராவ் பகதூர்’ என்ற பட்டம் பெற்றவர். சுதேசியம் தொடங்கும் முன்பாகவே இவர் வேலையிலிருந்து விலகிவிட்டார். இதை எதன் பொருட்டாகச் சொல்லுகிறேன் என்றால் அவருக்குக் கிடைத்த பட்டம் வெறுமே சில சுதேசியத் தலைவர்கள்மீது ‘ரிப்போர்ட்’ எழுதிக் கொடுத்துச் சுலபமாகச் சம்பாதித்த பட்டமன்று. யதார்த்தத்திலேயே திறமையுடன் உழைத்ததினாற் கிடைத்த பட்டம். குழந்தை முதலாகவே மீனாம்பாளை எனக்கு விவாகம் செய்து கொடுக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து. அந்தக் கருத்து நிறைவேறுவதற்கு நேர்ந்த விக்கினங்கள் பல. அவ்விக்கினங்களில் பெரும்பானமையானவை என்னாலேயே உண்டாயின.
நான் சுமார் பதினாறு பிராயம் வரை சென்னைக் கிறிஸ்தியன் காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன். “வேத கால முதலாக இன்றுவரை பாரத தேசத்திலுள்ள ரிஷிகள் எல்லாரும் ஒன்றும் தெரியாத மூடர்கள். அர்ஜுனனும், காளிதாஸனும், சக்ராசாரியரும், சிவாஜியும், ராமதாஸரும், கபீர்தாஸரும், அதற்கு முன்னும் பின்னும் நேற்று வரையில் இருந்த பாரத தேசத்தார் அனவைரும் நெஞ்சில் வளர்த்து வந்த பக்திகளெல்லாம் இழிந்த அநாகரிகமான மூடபக்திகள்” என்பது முதலான ஆங்கிலேயே ‘சத்தியங்கள்’ எல்லாம் என் உள்ளத்திலே குடிபுகுந்து விட்டன. ஆனால் கிறிஸ்துவ பாதிரி ஒரு வினோதமான ஜந்து. ஹிந்து மார்க்கத்திலும், ஹிந்து நாகரிகத்திலும் பக்தி செலுத்துவது பேதைமை என்று ருஜுப்படுத்திக் கொண்டு வரும்போதே, அவர் கொண்டாடும் கிறிஸ்து மார்க்கமும் மூடபக்தி என்று வாலிபர் மனதில் படும்படி ஏற்பாடு செய்து விடுகிறார். மத விஷயங்களைப் பற்றி விஸ்தாரமான விஷயங்கள் எழுதி, படிப்பவர்களுக்கு நான் தலைநோவு உண்டாக்கப் போவதில்லை. சுருக்கம் : நான் எனது பூர்வ மதாசாரங்களில் பற்று நீங்கி ‘ஞானஸ்நானம்’ பெறவில்லை. பிரம்மா ஸமாஜத்திலே சேர்ந்து கொண்டேன்.
சிறிது காலத்திற்கு அப்பால், பட்டணத்தில் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் பொய், அங்கே பிரம ஸமாஜத்தாரின் மார்க்க போதனை கற்பிக்கும் பாடசாலையொன்றில் சேர்ந்து சில மாதங்கள் படித்தேன். பிரம ஸமாஜத்தாரின் ‘உபதேசி’களில் ஒருவனாக வெளியேற வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். அப்பால் அங்கிருந்து பஞ்சாப் ஹிந்துஸ்தானம் முதலிய பல பிரதேசங்களில் யாத்திரை செய்து கொண்டு கடைசியாக சென்னப் பட்டணம் வந்து சேர்ந்தேன். நான் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கியதாக எண்ணி, எனது ஜாதியார் என்னைப் பலவிதங்களில் இம்சை செய்தார்கள். இந்த இம்சைகளினால் எனது சித்த உறுதி நாளுக்கு நாள் பலம் அடைந்ததேயல்லாமல், எனக்கு மனச்சோர்வு உண்டாகவில்லை. எனது தகப்பனார் - இவர் பெயர் துபாஷ் ராமச்சந்திர நாயுடு - வெளிவேஷ மாத்திரத்தில் சாதாரண ஜனங்களின் ஆசார விவகாரங்களை வைத்துக் கொண்டிருந்தார்; எனினும், உள்ளத்தில் பிரம்ம ஸமாஜப் பற்று உடையவர். ஆதலால், நான் வாஸ்தவமான பரமாத்ம பக்தியும், ஆத்ம விசுவாஸமும, எப்போதும் உபநிஷத்துக்கள் படிப்பதில் சிரத்தைக் கொண்டிருப்பது கண்டு, அவருக்கு அந்தரங்கத்தில் மிகுந்த உவகையுண்டாயிற்று. வெளி நடப்பில் என் மீது கோபம் பாராட்டுவது போலிருந்தாரேயன்றி, எனது பந்துக்கள் சொற்படி கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தவில்லை. ஸகல ஸௌகரியங்களும் எனக்கு முன்னைக் காட்டிலும் அதிகமாக நடக்கும்படி வீட்டில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார். ஆனால், எனது தமையன் மாத்திரம் என்னிடம் எக்காரணம் பற்றியோ மிகுந்த வெறுப்பு பாராட்டினான். நான் தலையிலே பஞ்சாபிகளைப் போலப் பாகை கட்டிக் கொள்வது வழக்கம். ‘15 ரூபாய்’க் குமாஸ்தாக்களுக்கென்று பிரத்தியேகமாக அழகு, அந்தம், ஆண்மை எதுவுமின்றி ஏற்பட்டிருக்கும் கும்பகோணத்துப் பாகை நான் கட்டிக் கொள்ளுவதில்லை. இது கூடத் தமையனுக்குக் கோபம உண்டாகும். “ராஜ புத்ருடு வீடு, தொங்க விதவா! தலலோ மகா ஆடம்பரமுக பகடி வீடிகி!” என்று ஏதெல்லாமோ சொல்லி ஓயாமல் திட்டிக் கொண்டிருப்பான். இப்படியிருக்க ஒரு நாள் எனது தகப்பனார் திடீரென்று வாயுக் குத்தி இறந்து போய்விட்டார். அவருக்குப் பிரம ஸமாஜ விதிப்படி கிரியைகள் நடத்த வேண்டும் என்று நான் சொன்னேன். எனது தமையன் சாதாரண ஆசாரங்களின்படிதான் நடத்த வேண்டும் என்றான். பிரமாத கலகங்கள் விளைந்து, நானூறு மத்தியஸ்தங்கள் நடந்த பிறகு மசானத்தில் அவன் தனதிஷ்டப்படி கிரியைகள் முடித்த பின்பு நான் எனது கொள்கைப்படி பிரம்மா ஸமாஜ குரு ஒருவரை வைத்துக் கொண்டு கிரியைகள் செய்தேன். இதுவெல்லாம் எனது மாமா ராவ் பகதூர் சுந்தரராஜுலு நாயுடுக்கு என் மீது மிகுந்த கெட்ட எண்ணம் உண்டாகும்படி செய்து விட்டது. ஆதலால் விவாகம் தடைபட்டுக் கொண்டே வந்தது. ஆனால், இறுதிவரை என்னை எப்படியேனும் சீர்திருத்தி, எனக்கே தனது மகளைப் பாணிக்கிரஹணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது அவருடைய இச்சை.
வஸந்த காலம், நிலாப்பொழுது, நள்ளிரவு நேரம். புரசைவாக்கம் முழுமையும் நித்திரையிலிருந்தது. விழித்திருந்த ஜீவன்கள் இரண்டே. ஒன்று நான்; மற்றொன்று அவள். இன்பமான காற்று வீசிக் கொண்டிருந்தது. மேல் மாடத்தில் மீனாம்பாளுடைய அறையிலிருந்து, முறைப்படி வீணைத் தொனி கேட்டது. ஆனால் வழக்கப்படி குறட்டை கேட்கவில்லை. ராவ்பகதூர் குறட்டை மாமா ஊரிலில்லை. வெளியே ஒரு கிராமத்துக்குப் போயிருந்தார். நான் நிலா முற்றத்தில் எனது கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தேன். என் உள்ளத்திலோ, இரண்டு எரிமலைகள் ஒன்றையொன்று சீரியெதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்தன. இவற்றுள்ளே, ஒன்று காதல், மற்றோன்று - பின்பு தெரிய வரும். வீணைத்தொனி திடீரென்று நின்றது. சிறிது நேரத்தில், எனது பின்புறத்தில் ஒரு ஆள் வந்து நிற்பது உணர்ந்து, திரும்பிப் பார்த்தேன், மீனாம்பாள்!
இப்பொழுதுதான் நாங்கள் புதிதாகத் தனியிடத்திலே சந்தித்திருக்கிறோமென்றும், அதனால் இங்கு நீண்டதோர் காதல் வர்ணனை எழுதப்படுமேன்ரும் படிப்பவர்கள் எதிர்பார்க்க வேண்டாம். இவ்விதமாக நாங்களிருவரும் பலமுறை சந்தித்திருக்கிறோம். மீனாம்பாள் மஞ்சத்தின் மீது உட்கார்ந்தாள்.
“மீனா! இன்று உன்னிடத்திலே ஒரு விசேஷம் சொல்லப் போகிறேன்’ என்றேன். ‘எனக்கு அது இன்னதென்று ஏற்கனவே தெரியும்’ என்றாள்.
‘என்னது? சொல்லு.”
‘நீ பிரம்மச்சரிய சங்கற்பம் செய்து கொள்ளப் போகிறாய் என்ற விசேஷம்.’
‘ஏன்? எதற்கு? எப்படி? உனக்கு யார் சொன்னார்கள்?” என்று கேட்டேன்.
‘வந்தே மாதரம்’ என்றாள்.
மீனாம்பாளுடைய அறிவுக் கூர்மை எனக்கு முன்னமே தெரியுமாதலால், அவள் சொல்லியதிலிருந்து அதிக வியப்பு உண்டாகவில்லை.
அதன்பின், நான் அவளிடம் பின்வருமாறு கூறலாயினேன்: “ஆம், பாரத தேசத்தை இப்போது பிரம்மசாரிகளே ரக்ஷிக்க வேண்டும். மிக உயர்ந்திருந்த நாடு மிகவும் இழிந்து போய்விட்டது. இமயமலை இருந்த இடத்தில் முட்செடிகளும் விஷப்பூச்சிகளும் நிறைய ஒரு பாழுங்காடு இருப்பது போலாகிவிட்டது. அர்ஜுனன் வாழ்ந்த மாளிகையில் வௌவால்கள் தொங்குவது போலிருக்கிறது. இதை பிரமச்சாரிகளே காப்பாற்ற வேண்டும். பொப்பிலி ராஜாவின் மகனாகவேனும், ராஜா ஸர் ஸவலை ராமசாமி முதலியார் மகனாகவேனும் பிறவாமல் நம் போன்ற சாதாரண குடும்பங்களிலே பிறந்தவர்கள் விவாகம் செய்து கொண்டால், இந்தப் பஞ்ச நாட்டில் அவர்களுக்கு மூச்சு முட்டிக் போகிறது. குருவியின் தலையிலே பனங்காயை வைப்பது போல, இந்த நரிக் கூட்டத்திலுள்ள ஒரு வாலிபன் தலையிலே ஒரு குடும்ப பாரத்தைச் சுமத்தும்போது, அவனுக்குக் கண் பிதுங்கிப் போய்விடுகிறது. அவனவனுடைய அற்ப காரியங்கள் முடிவு பெறுவதே பகீரத ப்ரயத்தனம் ஆய்விடுகிறது. தேச காரியங்களை இவர்கள் எப்படிக் கருதுவார்கள்? பிரம்மச்சாரிகள் வேண்டும்; ஆத்ம ஞானிகள் வேண்டும்; தம பொருட்டு உலக சுகங்களை விரும்பாத தீரர்கள் வேண்டும். இந்தச் சுதேசியம் கேவலம் ஒரு லௌகீக காரியமன்று. இது ஒரு கர்மம். இதில் பிரவேசிப்பவர்களுக்கு வீர்யம், தேஜஸ், கர்மதியாகித் தன்மை முதலிய அரிய குணங்கள் வேண்டும். நான் பிரம்மசரிய விரதத்தை கைக்கொள்ளலாமென்று நினைத்திருக்கிறேன். ஆனால்”
மீனா: “ஆனால், நான் அதற்கு ஒரு சனியாக வந்து குறுக்கிட்டிருக்கிறேன் என்று சொல்லுகிறாய்!”
‘பார்த்தாயா, பார்த்தாயா! என்ன வார்த்தை பேசுகிறாய்? நான் சொல்ல வந்ததைக் கேள். எனது புதிய சங்கற்பம் ஏற்படு முன்னதாகவே என் உயிரை உனக்கு அர்ப்பணம் செய்து விட்டேன். இப்போது எனது உயிருக்கு வேறொரு கடமை ஏற்பட்டிருக்கிறது. அவ்விஷயத்தில் உனது கட்டளையை எதிர்பார்த்திருக்கிறேன்” என்றேன். அவள் ஏதோ மறுமொழி சொல்லப் போனாள். அதற்குள் வாயிற்புறத்தில் ஒரு வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டது.
‘நாயன்னா வந்து விட்டார். நான் போகிறேன்’ என்று சொல்லி ஒரு முத்தத்துடன் பிரிந்தாள்.
குறட்டை நாயுடு கதவை உடைத்து, உள்ளிருக்கும் குறட்டைகளையெல்லாம் எழுப்பி, மேலே வந்து படுத்து அரை நாழிகைக்கெல்லாம் தமது தொழிலை ஆரம்பித்து விட்டார். இரண்டு ஜீவன்கள் அன்றிரவு முழுதும் விழித்திருந்தன. ஒன்று நான்; மற்றொன்று அவள்.
அத்தியாயம் - 2
மேல் அத்தியாயத்தின் இறுதியில் குறிக்கப்பட்ட செய்தி வந்ததற்கு அப்பால், சில மாதங்கள் கழிந்து போயின. இதற்கிடையே எங்களுடைய விவகாரத்திற் பல மாறுபாடுகள் உண்டாயிருந்தன. ‘வந்தே மாதரம்’ மார்க்கத்தில் நான் பற்றுடையவன் என்பதை அறிந்த ராவ் பகதூர் எனக்குத் தமது கன்னிகையை மணஞ் செய்து கொடுப்பது என்ற சிந்தனையை அறவே ஒழித்துவிட்டார். சில மாதங்களில் அவர் தமது சாஸ்வத வாஸஸ்தானமாகிய தஞ்சாவூரிலிருந்து புரசைவாக்கத்துக்கு வருவதை முழுவதும் நிறுத்தி விட்டார். இதனிடையே மீனாம்பாளுக்கு வேறு வரன்கள் தேடிக் கொண்டிருந்ததாகவும் பிரஸ்தாபம் ஏற்பட்டது. அவளிடமிருந்தும் யாதொரு கடிதமும் வரவில்லை. ஒருவேளை முழுதும் மறந்து போய்விட்டாளோ? பெண்களே வஞ்சனையின் வடிவம் என்று சொல்லுகிறார்களோ, அது மெய்தானா? “பெண்ணெனப்படுவகேண்மோ உள நிறைவுடைய வல்ல, ஓராயிர மனத்தவாகும்” என்று நான் சீவக சிந்தாமணியிலே படித்தபோது, அதை எழுதியவர் மீனாம்பாளைப் போன்ற ஸ்திரீயைக் கண்டு அவளுடைய காதலுக்குப் பாத்திரமாகும் பாக்கியம் பெறவில்லை போலும் என்று நினைத்தேனே. இப்போது, அந்த ஆசிரியருடைய கொள்கைதான் மெய்யாகி விட்டதா? நான் இளமைக்குரிய அறிவின்மையால், அத்தனை பெருமை வாய்ந்த ஆசிரியரது கொள்கையைப் பிழையென்று கருதினேன் போலும்!
‘அடா மூடா! எனக்கு ஏன் இதில் இவ்வளவு வருத்தம்? நீயோ பிரம்மசரிய விரதத்திலே ஆயுளைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாள்தோறும் மேன்மேலும் வளர்த்து வளர்த்து வருகின்றாய். மீனா மற்றொருவனை மணஞ் செய்து கொண்டால் உனக்கு எளிதுதானே? நீயோ வேறொரு பெண் மீது இவ்வாழ்க்கையில் மையல் கொள்ளப் போவதில்லை. இவளொருத்திதான் உனது விரதத்திற்கு இடையூறாக இருந்தாள். இவளும் வேறொருவனை மணஞ் செய்து கொண்டு அவன் மனைவியை விடுவாளாயின் உனது விரதம் நிர்விக்கினமாக நிறைவேறும். ஈசனன்றோ உனக்கு இங்ஙனம் நன்மையைக் கொண்டு விடுகிறான்? இதில் ஏன் வருத்தமடைய வேண்டும்?’ என்று சில சமயங்களில் என்னுள்ளம் தனக்குத்தானே நன்மதி புகட்டும்.
மீண்டும், வேறொரு விதமான சிந்தை தோன்றும்: “அவள் நம்மை மறந்திருக்கவே மாட்டாள். மாமா சொற்படி கேட்டு அவள் வேறொருவனை மணஞ் செய்து கொள்ளவே மாட்டாள். எனது பிராணனோடு ஒன்றுபட்டவளாதலால், எனது நெஞ்சத்திலே ஜ்வலிக்கும் தர்மத்தில் தானும் ஈடுபட்டவளாகி அந்தத் தர்மத்திற்கு இடையூறு உண்டாகும் என்று அஞ்சி எனக்கு ஒன்றும் எழுதாமலிருக்கிறாள். ஆமடி, மீனா! உன்னை நான் அறியேனா? எது வரினும் நீ என்னை மறப்பாயா? அந்தக் கண்கள் ‘உன்னை மறக்கவே மாட்டேன்’ என்று எத்தனை முறை என்னிடம் பிரமாணம் செய்து கொடுத்திருக்கின்றன! அந்தக் கண்கள்! அந்தக் கண்கள்! ஐயோ, இப்பொழுதுகூட என் முன்னே நிற்கின்றனவே! அவை பொய் சொல்லுமா?”
அப்பால் ஒரு உள்ளம்… “அடா! நல்ல துறவடா உன் துறவு! நல்ல பக்தியடா உன் பக்தி! நல்ல தர்மம்! நல்ல சிரத்தை! ஆரிய நாட்டை உத்தாரணம் செய்வதற்கு இப்படியன்றோ பிள்ளைகள் வேண்டும்? பீஷ்மர் வாழ்ந்திருந்த தேசமல்லவா? இப்பொழுது அதற்கு உன்னைப் போன்றவர்கள் இருந்து ஒளி கொடுக்கிறார்கள்! சீச்சீ! நாய் மனமே! அமிருத வெல்லத்தை விட்டு வெறும் எலும்பைத் தேடிப் போகிறாயா? லோகோத்தாரணம் பெரிதா, உனது புலனின்பம் பெரிதா? தர்ம சேவை பெரிதா, ஸ்திரீ சேவை பெரிதா? எதனைக் கைக்கொள்ளப் போகிறாய்? சொல்லடா சொல்!”
பிறகு வேறொரு சிந்தனை: “எப்படியும் அவளிடமிருந்து ஓர் உறுதி கிடைத்தால், அதுவே நமக்குப் பெரியதோர் பலமாயிருக்கும். ‘நீ தர்ம பரிபாலனம் செய். என் பொருட்டாகத் தர்மத்தைக் கைவிடாதே. நான் மரணம் வரை உன்னையே மானஸீகத் தலைவனாகக் கொண்டு நோன்புகள் இழைத்துக் காலம் கழிப்பேன். ஸ்வர்க்கத்திலே நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்’ என்று அவள் உறுதி தருவாளானால், இந்த் ஜன்மத்தில் ஜீவியம் வெகு சுலபமாய் இருக்கும்.”
அப்பால்: “ஒரேயடியாக, இவளுக்கு இன்னொருவனுடன் விவாகம் நடந்து முடிந்துவிட்டது என்ற செய்தி வருமானால், கவலை விட்டிருக்கும். பிறகு, இகத்தொடர் ஒன்றுமேயில்லாமல், தர்ம சேவையே தொழிலாக நின்று விடலாம்.”
பின் மற்றொரு சிந்தை: - “ஆ! அப்படி ஒரு செய்தி வருமானால் பின்பு உயிர் தரித்திருப்பதே அரியதாய்விடும். அவளுடைய அன்பு மாறிவிட்டது என்று தெரிந்தபின் இவ்வுலக வாழ்க்கையுண்டா?”
அப்பால் பிறிதொரு சிந்தை: “அவள் அன்பு! மாதர்களுக்கு அன்பு என்றதோர் நிலையும் உண்டா? வஞ்சனை கோபம் இரண்டையும் திரட்டிப் பிரமன் ஸ்திரீகளைப் படைத்தான்.’
இப்படி ஆயிரவிதமான சிந்தனைகள் மாறி மாறித் தோன்றி எனது அறிவைக் கலக்கின. ஆன்ம உறுதியில்லாதவனுடைய உள்ளம் குழம்பியதோர் கடலுக்கு ஒப்பாகும். இதனைப் படிக்கின்றவர், ஒரு கணம் சாக்ஷி போல் நின்று தமது உள்ளத்தினிடையே நிகழும் புரட்சிகளையும் கலக்கங்களையும் பார்ப்பாராயின், மிகுந்த வியப்பு உண்டாகும். மனித வாழ்க்கையிலே இத்தனை திகைப்புகள் ஏன் உண்டாகின்றன?
“மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி”
இவ்வாறிருக்கையில் ஒரு நாள் திடீரென்று எனது கையில் மீனாம்பாளின் கடிதமொன்று கிடைத்தது. அதனை இங்குத் தருகின்றேன். அஹ்டைப் படித்துப் பார்த்த பொழுது என்னுள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.
ஓம்.
தஞ்சாவூர் 
உடையாய்,
இக்கடிதம் எழுதத் தொடங்கும்போதே எனது நெஞ்சு பதறுகிறது. எனக்கு எப்படி எழுதுகிறது என்று தெரியவில்லை. ஐயோ, இது என்னுடைய கடைசிக் கடிதம்! உன் முகத்தை நான் இனி இவ்வுலகத்தில் பார்க்கப் போவதில்லை.
‘நாயன்னா’ வருகிற தை மாதம் என்னை இவ்வூரில் புதிய இன்ஸ்பெக்டராக வந்திருக்கும் மன்னார் என்பவனுக்குப் பலியிட வேண்டுமென்று நிச்சயம் செய்து விட்டார். கலியாணத்துக்கு வேண்டிய சாமக்கிரியைகளெல்லாம் தயாராகின்றன. உனது பெயரைக் கேட்டால் வேட்டை நாய் விழுவதுபோல விழுந்து, காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் சொல்லி நிந்திக்கிறார். நான் தப்பியோடி விடுவேன் என்று நினைத்து என்னை வெளியேறாதபடி காவல் செய்து விட்டிருக்கிறார். நீ ஒருவேளை இச்செய்தி கேட்டு இங்கு வருவாய் என்று கருதி, நீ வந்தால் வீட்டுக்கு வர முடியாமல் செய்ய, இவரும் மன்னாரென்பவனும் சேர்ந்து நீசத்தனமான ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிறார்கள். அவன் ‘நாயன்னா’வின் பணத்தின்மீது கண் வைத்து, இந்த விவாகத்தில் ஆசை மூண்டிருக்கிறான். எனது உள்ளத்திலே அவனிடம் மிகுந்த பகைமையும், அருவருப்பும் உள்ளனவென்றும், இப்படிப்பட்ட பெண்ணைப் பலவந்தமாகத் தாலி கட்டினால் அவனுக்கு வாழ்நாள் முழுதும் துக்கமிருக்குமேயல்லாது சுகமிருக்காது என்றும் சொல்லியனுப்பினேன். அதற்கு அந்த மிருகம், “எனக்கு அவளுடைய உள்ளத்தைப் பற்றி லக்ஷ்யமில்லை. அதைப் பின்னிட்டு சரிப்படுத்திக் கொள்வேன். முதலாவது, பணம் என் கையில் வந்து சேர்ந்தால், பிறகு அவள் ஓடிப்போய் அந்த ஜெயிலுக்குப் போகிற பயலுடன் சேர்ந்து கேட்டுத் திரிந்துவிட்டுப் பிறகு சமுத்திரத்தில் விழுந்து சாகட்டும்” என்று மறுமொழி கொடுத்தனுப்பி விட்டது.
அநேக தினங்களாக எனக்கு இரவில் நித்திரை என்பதே கிடையாது. நேற்றிரவு படுக்கையின்மீது கண் மூடாமல் படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன். அப்போது கனவு போன்ற ஒரு தோற்றமுண்டாயிற்று. தூக்கமில்லாதபோது, கனவு எப்படி வரும்? அஃது காணவுமில்லை, நினைவுமில்லை; ஏதோ ஒரு வகையான காட்சி. அதில் அதிபயங்கரமான ரூபத்துடன், இரத்தம் போன்ற சிவந்த விழிகளும் கரிய மேகம் போன்ற மேனியும், வெட்டுண்ட தலைகளின் மாலையும் கையில் சூலமுமாகக் காளிதேவி வந்து தோன்றினாள். நான் நடுங்கிப் போய், ‘மாதா என்னைக் காத்தருள் செய்ய வேண்டும்’ என்று கூறி வணங்கினேன். உடனே திடீரென்று அவளுடைய உருவம் மிக அழகியதாக மாறுபட்டது. அந்த ஸௌந்தர்யத்தை என்னால் வருணிக்க முடியாது. அவளுடைய திருமுடியைச் சூழ்ந்து கோடி சூரியப் பிரகாசம் போன்ற தேஜோ மண்டலம் காணப்பட்டது. கண்கள் அருள் மழை பொழிந்தன. அப்போது தேவி எனக்கு அபயப்பிரதானம் புரிந்து பின்வருமாறு சொல்லலாயினள்: “குழந்தாய் உனது அத்தான் கோவிந்தராஜனை எனது சேவையின் பொருட்டாக எடுத்துக் கொள்ளப் போகிறேன். உனக்கு இம்மையில் அவனைப் பெற முடியாது. நீ பிறனுக்கு மனைவியாகவும் மாட்டாய். உனக்கு இவ்வுலகத்தில் இனி எவ்வித வாழ்வுமில்லை. உங்கள் வீட்டுக் கொல்லையில், வடமேற்கு மூலையில், தனியாக ஒரு பச்சிலை படர்ந்திருக்கக் காண்பாய். நாளைக் காலை ஸ்நானம் செய்து பூஜை முடிந்தவுடனே அதில் இரண்டு இலைகளை எடுத்துத் தின்றுவிடு. தவறாதே!” மேற்கண்டவாறு கட்டளை கொடுத்துவிட்டுப் பராசக்தி மறைந்து போயினாள்.
காலையில் எழுந்து அந்தப் பச்சிலையைப் பார்க்கப் போனேன். வானத்தில் இருந்து ஒரு காகம் இறங்கிற்று. அது அந்தப் பச்சிலையைக் கொத்தி உடனே தரையில் மாண்டுவிழக் கண்டேன். தேவியின் கருத்தை அறிந்து கொண்டேன். இன்று பகல் பத்து நாழிகைக்கு அந்த இலைகளை நான் தின்று பரலோகம் சென்று விடுவேன். நின் வரவை எதிர்பார்த்து அங்கும் கன்னிகையாகவே இருப்பேன். நீ உனது தர்மங்களை நேரே நிறைவேற்றி மாதாவுக்கு திருப்தி செய்வித்த பிறகு அவள் உன்னை நான் இருக்குமிடம் கொண்டு சேர்ப்பாள். போய் வருகிறேன். ராஜா! ராஜா! என்னை மறக்காதே. வந்தே மாதரம்.”
இக்கடிதத்தைப் படித்துப் பார்த்தவுடன் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டேன்.
அத்தியாயம் 3
மீனாம்பாளுடைய ‘மரண ஓலை’ கிடைத்ததின் பிறகு இரண்டு வருஷங்கள் கழிந்துவிட்டன. இதனிடையே எனக்கு நிகழ்ந்த அனுபவங்களையெல்லாம் விஸ்தாரப்படுத்திக் கொண்டு போனால் பெரிய புராணமாக வளரும். சுருக்கமாகச் சொல்லுகிறேன். அந்த ஆற்றாமையால் வெளியேறிய நான் அப்படியே காஷாயம் தரித்துக் கொண்டு துறவியாக வடநாட்டிலே ஸஞ்சாரம் செய்து வந்தேன். ‘வந்தே மாதரம்’ தர்மத்தை மட்டிலும் மறக்கவில்லை. ஆனால் என்னை சர்க்கார் அதிகாரிகள் பிடித்துச் சிறையிலிடும்படியான முயற்சிகளிலே நான் கலங்கவுமில்லை; ஜனங்களுக்குள் ஒற்றுமையும் பலமும் ஏற்படுத்தினால், ஸ்வதந்திரம் தானே சித்தியாகும் என்பது என்னுடைய கொள்கை. காரணத்தை விட்டுப் பயனைச் சீறுவதில் என் மனங் குவியவில்லை. அங்கங்கே சில சில பிரசாரங்கள் செய்ததுண்டு. இது பற்றிச் சில இடங்களில் என்னைப் போலீஸார் தொடரத் தலைப்பட்டார்கள். இதனால், நான் ஜனங்களிடையே நன்றாகக் கலந்து நன்மைகள் செய்து கொண்டு போக முடியாதபடி பல தடைகள் ஏற்பட்டன. ஆகவே, எனது பிரசங்கங்களிலிருந்து எனது நோக்கத்திற்கு அனுகூலத்திலும் பிரதிகூலமே அதிகமாக விளங்கலாயிற்று. இதையும் தவிர எனது பிரசங்கங்களைக் கேட்டு ஜனங்கள் மிகவும் வியப்படைவதையும் மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு அதிக உபசாரங்கள் செய்வதையும் கண்டு உள்ளத்திலே கர்வம் உண்டாகத் தலைப்பட்டது.
“இயற்கையின் குணங்களிலிருந்து செய்கைகள் பிறக்கின்றன, மூடன் ‘நான் செய்கின்றேன்’ என்று கருதுகின்றான்” என்ற பகவத்கீதை வாக்கியத்தை அடிக்கடி மனனஞ் செய்து கொண்டேன். இந்த வீண் கர்வம், நாளுக்கு நாள் மிகுதியடைந்து என்னை விழுங்கி, யாதொரு காரியத்திற்கும் பயன்படாமற் செய்துவிடுமோ என்ற அச்சம் உண்டாயிற்று. வெளிக்குத் தெரியாமல் எவருடைய மதிப்பையும் ஸன்மானத்தையும் எதிர்பார்க்காமல் ஸாதாரணத் தொண்டு இழைப்பதற்கு என்னை மாயா வைத்திருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டேன்.
எனவே பிரசங்கக் கூட்டங்களில் சேர்வதை நிறுத்திவிட்டேன். சில தினங்களுக்கு அப்பால் எனக்குப் போலீஸ் சேவகர்கள் செய்யும் உபசாரங்களும் நின்று போய் விட்டன. பாதசாரியாகவே பல இடங்களில் சுற்றி விட்டு, பாதசாரியாகவே லாஹூர் நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.
அங்கே லாலா லஜபதி ராய் போன்ற பலரைப் பார்க்கவேண்டும் என்ற இச்சை ஜனித்தது. அவரைப் போய் கண்டதில், அவர் என்னிடம் நம்பிக்கை கொண்டவராகிக் கோசல நாட்டுப் பிரதேசங்களில் கொடிய பஞ்சம் பரவியிருக்கிறதென்றும், பஞ்சத்தில் கஷ்டப்படும் மக்களுக்குச் சோறு, துணி கொடுக்கவேண்டுமமென்ற கருத்துடன் தான் நிதிகள் சேர்த்து வருவதாகவும், பல வாலிபர்கள் தம்மிடமிருந்து திரவியங் கொண்டுபோய் பஞ்சமுள்ள ஸ்தலங்களில் இருந்து உழைத்து வருவதாகவும் தெரிவித்துவிட்டு ‘நீரும் போய் இவ்விஷயத்தில் வேலை செய்யக் கூடாத?’ என்று கேட்டார்.
ஆ! ராமச்சந்திரன் அரசு செலுத்திய நாடு! வால்மீகி முனிவர் புகழ்ந்து போற்றிய நாடு! அங்கு, ஜனங்கள் துணியும் சோறுமில்லாமல்,, பதினாயிரக் கணக்காகத் தவிக்கிறார்கள்! அவர்களுக்கு உதவி செய்யப் போவாயா என்று என்னைக் கேட்கவும் வேண்டுமா? அவர்களெல்லோரும் எனக்குத் தெய்வங்களல்லவா? அவர்களுக்கு வேண்டியன செய்ய முடியாவிட்டால் இந்தச் சதையுடம்பை எதன் பொருட்டாகச் சுமக்கிறேன்? லாலா விடம் அனுமதி பெற்றுக்கொண்டு போய் சிறிது காலம் அந்தக் கடமையைச் செய்துகொண்டு வந்தேன். அங்கு கண்ட காட்சிகளைப் பற்றி எழுதவேண்டுமா? எழுதுகிறேன். கவனி. தேவலோகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறாயா? சரி. நரகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறாயா? சரி. தேவலோகம் நரகலோகமாக மாறியிருந்தால் எப்படித் தோன்றுமோ, அப்படித் தோன்றியது. பகவான் ராமச்சந்திரன் ஆண்ட பூமி, நான் அங்கிருந்த கோரங்களையெல்லாம் உங்களிடம் விவரித்துச் சொல்ல வேண்டும். புண்ணிய பூமியைப் பற்றி இழிவுகள் சொல்வதினால் ஒருவேளை ஒரு சிறிது பாவம் உண்டாகக் கூடும். அந்தப் பாவத்தைத் தவிர வேறென்ன பயன் கிடைக்கப் போகிறது? உன்னால் எனது தாய் நாட்டிற்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? எழுந்திருந்து வா, பார்ப்போம், எத்தனை நாள் உறங்கி இப்படி அழியப் போகிறீர்களோ? அட பாப ஜாதியே, பாப ஜாதியே! இது நிற்க. ஓரிரண்டு மாதங்களுக்கு அப்பால், லாலா லஜபதிராய் எங்களுக்குக் கடிதம் எழுதி, இனி அந்த வேலை போதும் என்று கட்டளை பிறப்பித்து விட்டார்.
கோசல நாட்டுப் பிரதேசங்களில் பஞ்சத்தின் சம்பந்தமாக நான் வேலை செய்த சில மாதங்களில், ஏற்கனவே என் மனதில் நெடுங்காலமாய் வேரூன்றியிருந்த ஒரு சிந்தனை பலங்கொண்டு வளரலாயிற்று. தணிந்த வகுப்பினரின், நன்மை தீமைகளிலே, நமது நாட்டில் உயர்ந்த வகுப்பினர் என்று கூறப்படுவோர் எவ்வளவு தூரம் அசிரத்தையும், அன்னியத் தன்மையும் பாராட்டுகிறார்கள் என்பதை நோக்குமிடத்து எனது உள்ளத்திலே மிகுந்த தளர்ச்சி உண்டாயிற்று. தென்னாட்டைப் போலவே வட நாட்டிலும், கடைசி வகுப்பினர் என்பதாகச் சிலர் கருதப்படுகின்றனர். தென்நாட்டைப் போலவே, வட நாட்டிலும், இந்த வகுப்பினர் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே கைக்கொண்டிருக்கிறார்கள். உழவுத் தொழில் உடைய இவர்கள் சாஸ்திரப்படி வைசியர்கள் ஆக வேண்டும். ஆனால் இவர்களிலேயே பலர் மாட்டிறைச்சி தின்பது போன்ற அனாசாரங்கள் வைத்துக் கொண்டிருபதால், ஹிந்து ஜாதி இவர்களைத் தாழ்வாகக் கருதுகின்றது. ஹிந்து நாகரிகத்திலே பசுமாடு பிரதானமான வஸ்துக்களிலே ஒன்று. ஹிந்துக்களின் நாகரிகம் விவசாயத் தொழிலைப் பொறுத்து நிற்கின்றது. விவசாயத் தொழிலுக்குப் பசுவே ஜீவன். ஆதலால் ஹிந்துக்கள் புராதனகால முதலாகவே கோ மாம்ஸத்தை வர்ஜனம் செய்துவிட்டார்கள். ஒரு சிறு பகுதி மட்டும் வர்ஜனம் செய்யாதிருப்பது கண்டு, ஜாதிபொதுமை அப்பகுதியைத் தாழ்வாகக் கருதுகின்றது. இது முற்றிலும் நியாயம். ஆனால் பஞ்சம், நோய் முதலியப் பொதுப்பகைவருக்கு முன்பு, நமது உயர்வு தாழ்வுகளை விரித்துக் கொண்டு நிற்பது மடமை. தாழ்ந்த ஜாதியாரை நாம் மிதமிஞ்சித் தாழ்த்தி விட்டோம். அதன் பயன்களை நாம் அனுபவிக்கிறோம். “ஹிருதயமறிந்திடச் செய்திடுங் கர்மங்கள் இகழ்ந்து பிரிந்து போமே!”
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” நாம் பள்ளர் பறையருக்குச் செய்வதையெல்லாம், நமக்கு அந்நிய நாடுகளில் பிறர் செய்கிறார்கள். நமது சிருங்ககிரிச் சங்கராச்சாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நெட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும். ஸாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் நடக்கக் கூடாது. பிரத்தியேகமாக விலகி நடக்க வேண்டும். பல்லக்குகள், வண்டிகள் இவற்றைப் பற்றி யோசனையே வேண்டியதில்லை. சுருக்கம்: நாம் நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை நீசர்களென்று பாவித்தோம். இப்போது நம்மெல்லோரையுமே உலகத்தார் மற்றெல்லா ஆட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக் கருதுகிறார்கள். நம்முள் ஒரு வகுப்பினரை நாம் தீண்டாத வகுப்பினர் என்று விலக்கினோம். இப்போது வேத மார்க்கஸ்தர் மகம்மதியர் என்ற இரு பகுதி கொண்ட நமது ஹிந்து ஜாதி முழுதையுமே உலகம் தீண்டாத ஜாதி என்று கருதுகிறது. உலகத்தில் எல்லா ஜாதியாரிலும் வகுப்புகள் உண்டு. ஆனால் தீராத பிரிவுகள் ஏற்பட்டு ஜாதியை துர்லபப்படுத்திவிடுமானால், அதிலிருந்து நம்மைக் குறைவாக நடத்துதல் அன்னியர்களுக்கு எளிதாகிறது. “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.”
1200 வருஷங்களுக்கு முன்பு வடநாட்டிலிருந்து மகம்மதியர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்தபோது நம்மவர்களின் இம்ஸை பொறுக்க முடியாமல் வருந்திக் கொண்டிருந்த பள்ளர் பறையர் பேரிகை கொட்டி, மணிகள் அடித்துக் கொண்டு போய் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிஹாஸம் சொல்லுகின்றது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது. பஞ்சத்தில் பெரும்பாலும் பள் பறை வகுப்பினரே மடிந்து போகிறார்கள். இதைப் பற்றி மேற்குலத்தார்கள் வேண்டிய அளவு சிரத்தை செலுத்தாமலிருக்கின்றனர். எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து, நூற்றுக்கணக்கான மனிதர்களையும் முக்கியமாக – திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்து மதத்திலே சேர்த்துக் கொள்ளுகிறார்கள். ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. மடாதிபதிகளும், ஸன்னிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கொண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள்! ஹிந்து ஜனங்கள்! நமது இரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர் – ஹிந்துஸ்தானத்து ஜனங்கள் _ ஏனென்று கேட்பாரில்லாமல் பசிப்பிணியால் மாய்ந்து போகின்றனர்.
கோ மாமிசம் உண்ணாதபடி அவர்களைப் பரிசுத்தப்படுத்தி, அவர்களை நமது ஸமூகத்திலே சேர்த்து அவர்களுக்குக் கல்வியும், தர்மமும், தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களெல்லாரும் நமக்குப் பரிபூர்ண விரோதிகளாக மாறி விடுகிறார்கள். இந்த விஷயத்திலே எனது சிறிய சக்திக்கு இயன்றவரை முயற்சிகள் செய்யவேண்டும் என்ற அவா எனது உள்ளத்தில் வளரலாயிற்று. வங்க நாட்டில் அசுவினி குமார தத்தர் என்ற தேசபக்தர் ஒருவர் இருப்பதாகவும், அவர் இந்த பிரதேசங்களில் ‘நாம் சூத்திரர்’ (பெயர் மட்டில் சூத்திரர்) என்று கூறப்படும் பள்ளர்களை ஸமூக வரம்பினுள்ளே சேர்த்து உயர்வுபடுத்த முயற்சிகள் செய்வதாகவும் கேள்விப்பட்டேன். அவரைப் பார்க்க ஆசை உண்டாயிற்று.
அத்தியாயம் 4
கலகத்தாவுக்கு வந்து சில தினங்கள் இருந்துவிட்டு பாரிஸாலுக்கு போய்ச் ஏர்ந்தேன். அங்குப் போய் வழி விசாரணை செய்துகொண்டு அசுவினி குமார தத்தருடைய வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். வீட்டு வாசலில் ஒரு தக்காளி பாபு நின்று கொண்டிருந்தார். அவரிடம் ‘அசுவினி பாபு இருக்கிறாரா?’ என்று கேட்டேன். “இல்லை, நேற்றுத்தான் புறப்பட்டுக் காசிக்குப் போயிருக்கிறார்” என்றார். ‘அடடா’ என்று சொல்லித் திகைத்து நின்றேன். காஷாய உடைகளைக் கண்ட அந்தப் பாபு உபசார மொழிகள் கூறி உள்ளே அழைத்துப் போய் தாகசாந்தி செய்வித்து விட்டு, ‘யார், எவ்விடம்’ என்பதையெல்லாம் விசாரணை செய்தார்.
நான் எனது விருத்தமெல்லாம் தெரிவித்துவிட்டு என் மனதிலிருந்த நோக்கத்தையும் சொன்னேன். “பாரும் பாபு, நம்மில் ஆரில் ஒரு பங்கு ஜனக்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமேயானால் நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?” என்று என் வாயிலிருந்து வாக்கியம் கேட்டவுடனே அவர் முகத்தில் வருத்தம் புலப்பட்டது. முகத்தைப் பார்த்தால் கண்ணீர் ததும்பிவிடும் போலிருந்தது. தீண்டாத வகுப்பினரின் நிலையைக் கருதித்தான் இவ்வளவு பரிதாபமடைகிறார் போலும் என்று நான் நினைத்து “ஐயா உம்முடைய நெஞ்சு போல் இன்னும் நூறு பேருடைய நெஞ்சு இருக்குமானால் நமது நாடு செம்மைப்பட்டு விடும்” என்றேன்.
“ஸ்வாமி, தாங்கள் நினைக்கிறபடி அத்தனை கருணையுடைய நெஞ்சம் எனக்கு இன்னும் மாதா அருள் புரியவில்லை. ஹீன ஜாதியாரைக் காக்க வேண்டும் என்கிற விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் சிரத்தை உண்டு என்பது மெய்யே., அசுவினி பாபுவுடன் நானும் மேற்படி வகுப்பினருக்கு நன்மை செய்வதில் சிறிது உழைத்திருக்கிறென். ஆயினும், என் முகத்தில் தாங்கள் கவனித்த துக்கக் குறி நம்மில் ஆறிலொரு பங்கு ஜனங்கள் இப்படி அவலமாய் விட்டார்களே என்பதைக் கருதி ஏற்பட்டதன்று. தாங்கள் சொன்ன வாக்கியம் சில தினங்களுக்கு முன் இங்கு வந்திருந்த ஒரு மந்த்ராஜி * அம்மாளின் வாயிலிருந்து அடிக்கடி வெளிவரக் கேட்டிருக்கிறேன். தாம் அது சொன்னவுடனே எனக்கு அந்த அம்மாளின் நிலை ஞாபகம் வந்தது. அவளுடைய தற்கால ஸ்திதியை நினைத்து வருத்தமுண்டாயிற்று. அடடா! என்ன குணம்! என்ன வடிவம்! இவ்வளவு பாலியத்திலே நமது தேசத்தினிடம் என்ன அபரிமிதமான பக்தி!” என்று சொல்லி திடுக்கென்று பேச்சை நிறுத்தி விட்டார். அப்பால் என் முகத்தை ஓரிரண்டு தடவை நன்றாய் உற்று நோக்கினார். அவருடைய பெயர் ஸதீச சந்திர பாபு என்பதாக ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.
“ஸதீச பாபு, ஏன் இப்படிப் பார்க்கிறீர்?” என்று கேட்டேன்.
“ஸ்வாமிஜீ, க்ஷமித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஸந்யாசி. எந்த தேசத்தில் பிறந்தவரென்பதைக்கூட நான் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. ஆயினும், உங்கள் முகத்தைப் பார்க்கும்பொழுது, அதில் எனக்கு அந்த யுவதியின் உருவம் கலந்திருப்பது போலத் தோன்றுகிறது.. உங்களிருவருடைய முகமும் ஒன்று போலிருப்பதாக நான் சொல்லவில்லை. உங்கள் முகத்தில் எப்படியோ அவளுடைய சாயல் ஏறியிருப்பது போலத் தோன்றுகிறது” என்றார்.
மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒரு விதமான பதைபதைப்பு உண்டாயிற்று. அதன் பின்னிட்டு, அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டவுடன், அந்தப் பதைபதைப்பு மிகுதியுற்றது. ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடுநாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது கோவிந்தா! வேஷத்தில் என்ன இருக்கிறது?
“மீனாம்பா – அட, போ! மீனாம்பாள் இறந்து போய் இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே! ஐயோ, எனது கண்மணி என்ன கஷ்டத்துடன் இருந்தாள்!” என்பதாக மனப்பேய் ஆயிரம் விதமாகக் கூத்தாடியது.
“ஸதீச பாபு! நானும் மதராஸ் பக்கத்திலே ஜனித்தவன்தான். நீர் சொல்லிய யுவதியைப் பற்றிக் கேட்கும்போது, எனக்குத் தெரிந்த மற்றொரு பந்துவைப் பற்றி ஞாபகம் வருகிறது. நீர் சொல்லிய பெண் யார்? அவள் பெயரென்ன? அவள் இப்போது எங்கே இருக்கிறாள்? அவள் இங்கே என்ன நோக்கத்துடன் வந்திருந்தாள்? அவளுடைய தற்கால ஸ்திதியை குறித்து உமக்கு வருத்தமுண்டாவதேன்? அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? எனக்கு எல்லாவற்றையும் விவரமாகத் தெரிவிக்க வேண்டும்” என்றேன்.
கதையை விரிக்கத் தொடங்கினார் ஸதீச சந்திர பாபு. ஒவ்வொரு வாக்கியமும் என் உள்ளத்திலே செந்தீக் கனலும் இரும்புத் துண்டுகளை எறிவது போல விழுந்தது. அவர் சொல்லிய கதையினிடையே என்னுள்ளத்தில் நிகழ்ந்தனவற்ரையெல்லாம் இடையீட்டுக் கொண்டு போனால் படிப்பவர்களுக்கு விர்ஸமாயிருக்கும் என்று அஞ்சி, இங்கு அவர் சொல்லிய விஷயங்களை மட்டிலும் குறிப்பிடுகிறேன். என் மனத் ததும்புதல்களைப் படிப்பவர்கள் தாமே ஊகத்தாற் கண்டுகொள்ள வேண்டும், ஸதீச பாபு சொல்லலானார்:
“அந்த யுவதிக்குத் ‘தாஞ்சோர்’. அவள் பெயர் எனக்குத் தெரியாது. நாங்கள் எல்லோரும் அவளைத் ‘தீன மாதா’ என்று பெயர் சொல்லி அழைப்போம். அவளுடைய உண்மைப் பெயர் அசுவினி பாபுவுக்கு மாத்திரந்தான் தெரியும். ஆனால் அந்தத் தேவியின் சரித்திரத்தை எங்களுக்கு அசுவினி பாபு அடிக்கடி சொல்லியிருக்கிறார். அவ்ள் ஒரு போளீஸ் பென்ஷன் உத்தியோகஸ்தருடைய குமாரியாம். அவளது அத்தை மகனாகிய ஒரு மந்த்ராஜ் நகரத்து வாலிபனுக்கு அவளை விவாகம் செய்து கொடுக்கவேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டிருந்ததாம். அவ்வாலிபன் ’வந்தே மாதரம்’ கூட்டத்திலே சேர்ந்து விட்டான். அதிலிருந்து அவள் தகப்பன் அவளை வேறொரு போலீஸ் உத்தியோகஸ்தனுக்கு மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தான். கடைசித் தருணத்தில் அவள் கனவில் ஏதோ தெய்வத்தின் கட்டளை பெற்று ஒரு பச்சிலையைத் தின்று விடவே, அவளுக்கு பயங்கரமான ஜ்வர நோய் கண்டு விவாகம் தடைப்பட்டுப் போய்விட்டது. அப்பால் தகப்பனாரும் இறந்து போய்விட்டார். இதனிடையே அவளுடைய காதலனாகிய மந்த்ராஜ் வாலிபன், என்ன காரணத்தாலோ, அவள் இறந்து விட்டதாக எண்ணி, ஸன்யாஸம் வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டானாம்.
“ஏழை மனமே, வெடித்துப் போய் விடாதே. சற்றுப் பொறு ” என்று என்னால் கூடியவரை அடக்கிப் பார்த்தேன். பொறுக்க முடியவில்லை. “ஐயோ, மீனா, மீனா!” என்று கூவினேன். பிறகு ’ஸதீச பாபு, அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? சொல்லும், சொல்லும்’ என்று நெரித்தேன்.
ஸதீச சந்திரனுக்கு உளவு ஒருவாறு துலங்கி விட்டது. “இப்போது ஒன்றுமில்லை. சௌக்கியமாகத்தானிருக்கிறாள்” என்றார். 
“இல்லையில்லை. என்னிடம் நீர் உண்மை பேசத் தயங்குகிறீர். உண்மை தெரிந்தால் நான் மிகத் துன்பப்படுவேன் என்று எண்ணி நீர் மறைக்கிறீர். இதுவே என்னை நரக வேதனைக்கு உட்படுத்துகிறது. சொல்லிவிடும்” என்று வற்புறுத்தினேன்.
மறுபடியும் ஸதீச பாபு ஏதோ பொருளற்ற வார்த்தைகளைப் போட்டுக் குழப்பி எனக்கு ஸமாதான வசனம் சொல்லத் தலைப்பட்டார். 
“பாரத தேவியின் ஹிருதயத்தின் மீதும், பகவத்கீதையின் மீதும் ஆணையிட்டிருக்கிறேன். என்னிடம் உண்மையை ஒளீயாமல் சொல்லும்” என்றேன். இந்த ஸத்தியம் நவீன வங்காளத்தினரை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்தும் எனொஅது எனக்குத் தெரியும். இங்ஙனம் நான் ஆணையிட்டதிலிருந்து அவருக்குக் கொஞ்சம் கோபம் உண்டாயிற்று.
“போமையா, மூட ஸந்யாஸி, என்ன வார்த்தை சொல்லி விட்டீர்! இதோ, உண்மை தெரிவிக்கிறேன். கேட்டுக் கொள்ளும். அந்தப் பெண், இங்கு நாம சூத்திரர்களைப் பஞ்சத்திலிருந்து மீட்கப் பாடுபட்டதில், தீராத குளிர் ஜ்வரங் கண்டு, வைத்தியர்கள் சமீபத்தில் இறந்து விடுவாள் என்று சொல்லி விட்டனர். அதற்கு மேல் அவள் காசியில் போய் இறக்க விரும்பியது பற்றி, அசுவினி பாபு அவளைக் காசிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார், உண்மை சொல்லி விட்டேன், போம்” என்றார்.
“காசிக்கா?” 
“ஆம்.” 
“காசியில் எங்கே?” 
“அஸீ கட்டத்தில்.” 
“அஸீ கட்டத்தில் எந்த இடம்?” 
“அஸீக்குத் தெற்கே ‘நர்வா’ என்ற இடம் இருக்கிறது. அதில் பல தோட்டங்களும் பங்களாக்களும் உண்டு. அதில் தைப்பூர் மஹாராஜா பங்களாவில் அசுவினி பாபு இறங்கியிருக்கிறார்.” 
“ரயில் செலவுக்குப் பணம் கொடும்” என்றேன். ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து வீசியெறிந்தார். மானத்தைக் கண்டதார், மரியாதையைக் கண்டதார்?அங்கிருந்து அந்த க்ஷணமே வெளியேறிவிட்டேன். வழியெல்லாம் தின்பதற்கு நெஞ்சத்தையும், அருந்துவதற்குக் கண்ணீரையுமே கொண்டவனாய் காசிக்குப் போய்ச் சேர்ந்தேன்.
அத்தியாயம் – 5
காசியில் ஹனுமந்த கட்டத்திலே எனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். எனது நன்பர் ஒருவருடைய பந்துக்கள் அங்கு வாசஞ் செய்கின்றனர். இதைப் படிக்கும் தமிழர்கள் காசிக்குப் போயிருப்பதுண்டானால், நான் சொல்லப் போகிற இடம் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். தமிழர்கள் எல்லோரும் பெரும்பாலும் ஹனுமந்த கட்டத்திற்கே போய் இறங்குவதுண்டு. அங்குக் கீழ்மேற் சந்து ஒன்றிருக்கிறதல்லவா? அங்கு கீழ் மேற்கு மூலையிலிருந்து மூன்றாம் வீடு. அந்த வீட்டிற்கு சிவமடம் என்று பெயர். யாத்திரைக்காரர்கள் போய் இறங்கக்கூடிய வீடுகளைக் காசியிலே மடங்கள் என்கிறார்கள். சிவமடத்தில் போய் இறங்கி ஸ்நானம் செய்துவிட்டு, மடத்தார் கொடுத்த ஆகாரத்தை உண்டபிறகு, அப்பொழுதே அந்த மடத்துப் பிள்ளைகளில் ஒருவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு நர்வா கட்டத்திற்குப் போனேன். அங்கே தைப்பூர் ராஜா பங்களா எது என்று விசாரித்து, பங்களாவிற்குப் போய்ச் சேரும்போது இரவு ஏழு மணியாகிவிட்டது. வாயிலில் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. அந்த வண்டி புறப்படுந்தறுவாயில் இருந்தது. வண்டியின் மேல் ஆங்கிலேய உடை தரித்த ஒரு வங்காளி உட்கார்ந்து கோண்டிருந்தார். வண்டிப் பக்கத்திலே ஒரு கிழவரும் வேறு சிலரும் நின்று கொண்டிருந்தார்கள். அசுவினி குமார தத்தரின் படத்தை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறபடியால், அந்தக் கிழவர்தான் அசுவினி பாபு என்று தெரிந்து கொண்டேன். நான் போனவுடனே அசுவினி பாபு பக்கத்திலிருந்த மனிதரை நோக்கி, “யாரோ ஒரு ஸன்யாஸி வந்திருக்கிறார். அவரைத் தாழ்வாரத்தில் வரச்சொல். நான் இதோ வருகிறேன்” என்றார். தாழ்வாரத்தில் போட்டிருந்த நாற்காலியில் நானும் என்னுடன் வந்திருந்த வாலிபனும் போய் உட்கார்ந்தோம். அசுவினி பாபுவும் வண்டிக்குள் இருந்தவரும் பேசியது என் செவியில் நன்றாக விழுந்தது.
அசுவினி பாபு: “டாக்டர் ஸாஹப்! நேற்றைக் காட்டிலும் இன்று சிறிது குணப்பட்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. தமது கருத்தென்ன?” 
டாக்டர்: ‘மிகவும் துர்ப்பல நிலையிலேதான் இருக்கிறாள். இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் இருப்பது கஷ்டம். அந்த நேரம் தப்பினால் பிறகு விபத்தில்லை” என்றார்.
காதில் விஷந்தடவிய தீயம்பு போல இந்த வார்த்தை கேட்டது. “மீனா! மீனா! மீனா!” என்று அலறினேன். வண்டி புறப்பட்டுவிட்டது. அதற்குள் நான் என்னை மீறி அலறிய சத்தம் கேட்டு, அசுவினி பாபுவும் அவரைச் சேர்ந்தவர்களும் நான் இருந்த பாரிசமாக விரைந்து வந்தார்கள். அவர் வருதல் கண்டு, நான் மனதை ஒருவாறூ தேற்றிக் கொண்டு எழுந்து நின்று வணங்கினேன். அவர், ஸ்வாமிக்கு எவ்விடம்? இங்கு வந்த கருத்தென்ன? ஏன் சத்தம் போட்டீர்கள்?” என்று ஹிந்துஸ்தானி பாஷையிலே கேட்டார். 
“பாபு, நான் ஸன்யாஸியல்ல. நான் திருடன். மஹா நிர்ப்பாக்கியமுள்ள பாவி. மீனாம்பாள் தம்மிடம் கோவிந்தராஜன் என்ற பெயர் சொல்லியிருப்பாளல்லவா? அந்தப் பாவி நான்தான்” என்றேன்.
உடனே அவர் என்னை மேன்மாடத்திலுள்ள ஒரு அறைக்குத் தனியாக அழைத்துச் சென்றார். அங்கு என்னை நோக்கி, “நேற்றெல்லாம் உம்மை அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தேன். நீர் இங்கு வரக்கூடும் என்ற சிந்தனை எனக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது” என்றார்.
பிறகு என்னிடம் ‘கிழக்கு முகமாகத் திரும்பி உட்காரும்’ என்றார். அப்படியே உட்கார்ந்தேன். ‘கண்ணை மூடிக் கொள்ளும்’ என்றார். இரண்டு கண்களையும் மூடிக் கொண்டேன். பிறகு எனது நெற்றியைக் கையாலே தடவி ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். எனக்கு உறக்கம் வருவது போல் இருந்தது. ‘அடடா! இன்னும் மீனாம்பாளைப் பார்க்கவில்லை. எனது உயிரினுமினியாள் மரணாவஸ்தையிலிருக்கிறாள். அவளைப் பார்க்கும் முன்பாக உறக்கம் வருகிறதே! இவர் என்னை ஏதோ மாயமந்திரத்துக்கு உட்படுத்துகிறார். எனது பிராண ரத்தினத்தைப் பார்க்காதபடி கெடுத்துவிட முயலுகிறார். இந்த மாயைக்கு உட்படலாகாது. கண் விழித்து எழுந்து நின்றுவிட வேண்டும்’ என்று சங்கற்பம் செய்துகொண்டு, எழுந்து நிற்க முயன்றேன். ‘ஹும்’ என்றொரு சத்தம் கேட்டது. விழித்து விழித்துப் பார்க்கிறேன். கண்ணைத் திறக்க முடியவில்லை. மயக்கம் மேன்மேலும் அதிகப்பட்டது. அப்படியே உறங்கி விழுந்துவிட்டேன்.
விழித்த பிறகு நான் இரண்டு நாள் உறங்கிக் கிடந்ததாகத் தெரிந்தது. பக்கத்திலிருந்த ஒரு சேவகன் சொன்னான். “மீனா எங்கே? மீனா சௌக்கியமாயிருக்கிறளா?” என்று அந்தச் சேவகனிடம் கேட்டேன். ‘எனக்கு ஒன்றுமே தெரியாது’ என்று மறுமொழி கூறினான். சாதாரணமாக எப்போதும்போல் இருந்தேனாயின், அந்தச் சேவகனை உதைத்துத் தள்ளி, இடையே வந்தவர்களையெல்லாம் வீழ்த்திவிட்டு மீனா இருக்குமிடம் ஓடிப்போய் பார்த்திருப்பேன். ஆனால் இந்த நேரம் என்னுடலில் மிகுந்த அயர்வும், உள்ளத்தில் மிகுந்த தெளிவும், அமைதியும் ஏற்பட்டிருந்தன. மனதிலிருந்த ஜ்வரமும் நீங்கிப் போயிருந்தது. ‘பாரிஸால் கிழவன்’ செய்த சூது என்று தெரிந்து கொண்டேன். அரை நாழிகைக்கெல்லாம் அசுவினி பாபு, தாமே நானிருந்த அறைக்குள் வந்து, என் எதிரே ஒரு நாற்காலியின் மீது வீற்றிருந்தார். அன்னை அறியாமல், எனது இரண்டு கைகளும் அவருக்கு அஞ்சலி புரிந்தன.
’ஓம்’ என்று கூறி ஆசீர்வாதம் செய்தார். “பால ஸந்நியாசி, கபட ஸந்நியாசி, அர்ஜுன ஸந்நியாசி, உன் பக்கம் சீட்டு விழுந்தது” என்றார். மீனா பிழைத்துவிட்டாள் என்று தெரிந்து கொண்டேன்.
“முற்றிலும் சௌக்கியமாய் விட்டதா?” என்று கேட்டேன்.
“பூரணமாக சௌக்கியமாய் விட்டது. இன்னும் ஓரைம்பது வருஷத்திற்குச் சமுத்திரத்திலே தள்ளினாலும் அவளுக்கு எவ்விதமான தீங்கும் வரமாட்டாது” என்றார்.
அப்படியானால் நான் போகிறென். அவள் இறந்து போகப் போகிறாள் என்ற எண்ணத்திலேதான் என் விரதத்தைக்கூட மறந்து, அவளைப் பார்ப்பதற்காகப் பறந்தோடி வந்தேன். இனி, அவளைப் பார்த்து அவளுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நான் போய் வருகிறென்” என்று சொன்னேன்.
அசுவினி பாபு கடகடவென்று சிரித்து விட்டு,பக்கத்திலிருந்த சேவகனை நோக்கி, “இவருக்குக் கொஞ்சம் பால் கொணர்ந்து கொடு” என்று ஏவினார். அவன் முகம் கழுவ நீரும் அருந்துவதற்குப் பாலும் கொணர்ந்து கொடுத்தான். அந்தப் பாலை உட்கொண்டவுடனே, திருக்குற்றாலத்து அருவியில் ஸ்நானம் செய்து முடிந்ததுபோல, எனது உடலிலிருந்து அயர்வெல்லாம் நீங்கிப் போய் மிகுந்த தெளிவும் சௌக்கியமும் அமைந்திருக்கக் கண்டேன்.
“இப்பொழுது என்ன சொல்லுகிறாய்? புறப்பட்டுப் போகிறாயா?” என்று அசுவினி பாபு புன்னகையுடன் கேட்டார்.
“அவளை ஒரு முறை பார்த்துவிட்டு அவளிடம் விடை பெற்றுக் கொண்டு செல்கிறேன்” என்றேன்.
திடீரென்று அசுவினி பாபுவின் முகத்தில் இருந்த புன்னகை மாறி சிரத்தா ரூபம் தோன்றியது. அப்பால் என்னிடம், “மகனே, நீ மீனாம்பாளை மணஞ் செய்து கொள்வாய். நீங்களிருவரும் சேர்ந்து வாழ்ந்து, முற்காலத்தில் ரிஷியும் ரிஷிபத்தினியுமாக வேத யக்ஞம் செய்தது போல, உங்கள் வாழ்நாள் முழுதும் மாதாவின் ப்ரீத்யர்த்தமாக ஜீவயக்ஞம் புரியக் கடவீர்கள்” என்றார்.
”காளிதேவியின் கட்டளை என்னாகிறது?” என்று கேட்டேன். இந்த ஜன்மத்தில் நீ கோவிந்தராஜனை மணஞ் செய்து கொள்ளலாகாது என்று காளீ தேவி மீனாளுக்குக் கூறி அவளை விஷம் தின்னும்படியாகக் கட்டளையிட்ட செய்தியை அவருக்கு நினைப்புறுத்தினேன்.
அதற்கு அவர், ‘அந்த செய்தியையெல்லாம் நான் அறிவேன். மஹாஸக்தியின் கட்டளையை மீனாம்பாள் நன்கு தெரிந்து கொள்ளாமல் உனக்குக் கடிதம் எழுதிவிட்டாள். மீனாம்பாளுடைய ஜன்மம் மாறுபட வேண்டுமென்று அம்மை சொல்லியதன் பொருள் வேறு. அவள் பச்சிலை தின்னும்படி கட்டளையிட்டது மீனாம்பாளுக்கு ஜ்வரமுண்டாய் தந்தை எண்ணிய விவாகம் தடைப்படும் பொருட்டாகவே. அதற்கு முன்பு அவளுடைய ஜன்மம் வேறு. மாதா தெளிவாகத்தான் சொல்லினாள். ஆனால், மீனாம்பாள் தனக்கு வேண்டாத ஒருவனுடன் விவாகம் நடக்கப் போகிறது என்ற தாபத்தால் படபடப்புண்டாகி உனக்கு ஏதெல்லாமோ எழுதி விட்டாள். நீயும் அவசரப்பட்டு, காஷாயம் தரித்துக் கொண்டு விட்டாய். உனக்கு ஸன்னியாஸம் குருவினால் கொடுக்கப்படவில்லை. ஆயினும் இதுவெல்லாம் உங்களிருவருடைய நலத்தின் பொருட்டாகவே ஏற்பட்டது. உங்களிருவருக்கும், பரிபூரணமான ஹிருதய சுத்தி உண்டாவதற்கு இப்பிரிவு அவசியமாயிருந்தது. இப்போது நான் போகிறேன்.இன்று மாலை நான்கு மணிக்கு பூஞ்சோலையிலுள்ள லதா மண்டபத்தில் மீனாம்பாள் இருப்பாள். உன் வரவிற்குக் காத்திருப்பாள்” என்று சொல்லிப் போய் விட்டார்.
மாலைப் பொழுதாயிற்று. நான் ஸன்யாசி வேஷத்தை மாற்றி, எனது தகுதிக்கு உரிய ஆடை தரித்துக் கொண்டிருந்தேன். பூஞ்சோலையிலே லதா மண்டபத்தில் தனியாக நானும் எனது உயிர், ஸ்த்ரீ ரூபங் கொண்டு பக்கத்தில் வந்து வீற்றிருப்பது போலத் தோன்றியவளுமாக இருந்தோம். நான்கு இதழ்கள் கூடின. இரண்டு ஜீவன்கள் மாதாவின் ஸேவைக்காக லயப்பட்டன. பிரகிருதி வடிவமாகத் தோன்றிய மாதாவின் முகத்திலே புன்னகை காணப்பட்டது.
வந்தே மாதரம்
*மந்த்ராஜியம்மாள் என்பது மதராஸ் பிரதேசத்து ஸ்த்ரீ என்று பொருள்படும். ’மதராஸ்’ என்பதற்கு வடநாட்டார் ’மந்த்ராஜ்’ என்பார்கள்.
நன்றி: சொல்வனம்