Search This Blog

Thursday, May 3, 2012

ஒட்டகக்கூத்தர் - (க)விதை


பட்டினி முகில்கள்
மழையைப் பாலையில்
பன்னீராய்த் தெளிக்கும்.
அனலிடைக் காற்றில்
அள்ளுண்ட மணற்புழுதி
ஆங்காங்கு தரைமீது
கொங்கைகள் செய்து
குலைத்து விளையாடும்.
அந்திப் பொழுதுகளில்
முந்தானை இழந்தவளாய்ப்
பூமிமங்கை நிலவின்
ஒளிபோர்த்துக் களிப்பில்
நித்திரை கொள்வாள்
ஆடையில்லாப் பெண்
மானத்தைக் காக்க
முதுகு காட்டுகின்ற
மேடுபள்ளத் தேகமாக
மேவிக்கிடக்கும் மணற்காடு.
இச்சை மனிதர்வாழும்
பச்சையில்லாப் புவி.
ஈரமில்லா மனங்கள்போல
நீரில்லா நெடும்பரப்பில்
காதல் மழைபொழிந்து
காமத்தீ அணைக்க
நேற்றுவரை காத்திருந்து
கூட்டி வந்தவளைக்
கூட அழைத்திட்டான்.
பெருவிரல் கோலமிட்டு
நாணத்து வேலிதன்னைத்
தலைவனையே மேயச்சொல்லி
தலைசாய்ந்தாள் தலைவி.
பொன் காட்டும் நிறத்தில்
பூக்காட்டும் இடையில்
இச்சை தீரும் பார்வையில்
மிச்சம் கேட்டது மேனி.
செந்தூரக் கன்னத்தாள்
தேன்குடிக்கும் எண்ணத்தாள்
அரிவாள் இதழ்கொண்டாள்
அரிந்தாள் அவன் உயிரை.
தேகங்கள் வேகத்தில்
உலையது அரிசியாகக்
கொதித்திட்ட உள்ளங்கள்
மழையது விட்டதுபோல்
காதலின எல்லை காணக்
கலவியின் ஆழம் சென்றார்.
களவையும் கற்றார் ஆகிக்
கற்றது கைமண் என்றார்.
ஒட்டகம் எழுந்தபோதும்
ஒத்திகை முடியவில்லை.

No comments:

Post a Comment