Search This Blog

Wednesday, May 2, 2012

ஈ.வெ.ரா ஈ.வெ. ராமசாமி நாயக்கர், பெரியார்



பெரியார் என்றாலே நாத்திகம் என்று பொருள். அந்த பெரியார் "அவை நாகரிகம்" என்பதை எப்படி காத்துள்ளார் என்று தெரியுமா?

ஒருமுறை கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் கூட்டத்திக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் பெரியாரும் கலந்து பேசுவதால் ஒரு ஏற்பாடு. பெரியார் கூட்டத்திக்கு வருவதற்கு முன்னமே கடவுள் வாழ்த்துப் பாடலை ஒலிக்க செய்துவிடலாம் என்று திட்டமிட்டனர். ஆனால், பெரியார் அரை மணி நேரம் முன்னதாகவே வந்து விட்டதால் அது சாதியமிலாமல் போனது. இருந்தும் கடவுள் வாழ்த்துப் பாடலை ஒலிக்க செய்தார்கள். ஏனையோரை போல், பெரியாரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். "அவை நாகரிகம்" என்பதன் பொருள் இதுவன்றோ?

தந்தைப்பெரியார் (தோற்றம் - 17-9-1879மறைவு-24-12-1973)

ஈ.வெ. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஈ.வெ.ரா ஈ.வெ. ராமசாமி நாயக்கர், பெரியார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ஈ.வெ.ரா சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாக கருதப்படும் திராவிடர் கழக்கத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாக்க் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம விழுமியத்தை கடைப்பிடிக்கும் பார்பனியம், பெண்களைத்தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை, சமயம் என்பவை மூடநம்பிக்கைகளை வளர்ப்பதாக்க் கருதிய ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார். இவருடைய விழுமியங்களும், கொள்களைகளும், தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் (சுயமரியாதை இயக்கம், நாத்திகம்), அரசியல் பரப்பிலும் (திராவிடர் கழகம்) ஆழ்ந்த சலனங்களும், தாக்கங்களும் ஏற்படுத்தியவை.

இயற்கையிலேயே சுதந்திர உணர்வு
செல்வச் சிறப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவராதலால், பிறர் தயவில், ஆதரவில் வாழவேண்டிய நிலைக்கு என்றும் ஆளாகாதவர் பெரியார். சிறு வயது முதலே எதையும் – தமது அறிவுக்குட்பட்ட வகையில் ஆராயும் மனப்பான்மை கொண்டவர். ஒருவகையில் இயற்கையிலேயே ‘சுதந்திர’ உணர்வு கொண்டவர். மற்றவர்கட்கு அஞ்சுவதும், அடங்குவதும், கட்டுத் திட்டங்களை ஏற்பதும் அவருக்கு இயல்பல்ல.

உலகத்தார் நம்பிக்கைகளையும், செயல்களையும் தாம் கண்டறியும்போதேல்லாம் அவற்றைக் கூர்ந்து நோக்கி, அவை ஏன்? எப்படி? எதனால்? என்னும் முறையில் ஆராய்ச்சியில் ஈடுபடுவார். தமக்குத் தோன்றும் உண்மையை மற்றவர்களிடம் உரைத்து அவர்தம் பதிலையும் ஆராய முற்படுவார்.

முறையான பளிளிப்படிப்பு முக்கியத்துவம் பெறாத காலமாகையால், அவருக்குப் பள்ளிப் படிப்பில் ஆர்வமில்லை அதைக் கண்ட பெற்றோர்கள் அவரைத் தமது வாணிகத் தொழிலிலேயே ஈடுபடுத்தினர். அதுவும் ஒருவகையில் நாட்டுக்கே நன்மையாயிற்று எனலாம். முறையான பள்ளிப் படிப்பும் ஆசிரியரிடம் பாடம் கேட்கும் முறையும் ஒருவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிடக்கூடிய ஒரு பழமைச் சுவடு அவருள்ளத்தில் பதியாமல் தப்பினார் எனலாம்.

பகுத்தறிவால் மாற்றியவர்
 நீண்ட பல ஆண்டுகளாக மனிதன் உள்ளத்தில் தொடர்ந்து பதிந்துள்ள, பழக்கமாகிவிட்ட நம்பிக்கைகள்- நினைப்புகள், சமயவழி எண்ணங்கள், சாத்திர புராணக் கருத்துகள் அனைத்தும் ஒரு மனிதனைச் சிலந்தி வலையில் சிக்கிய சிறுபூச்சியின் நிலையிலேயே சிக்கிச் செயலற வைத்திருக்கும் என்பதும், அதிலிருந்து அவனை மீட்பது எளிதன்று என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரியும். இதுகாறும் ஒருவகைச் சமய நம்பிக்கையை – இன்னொரு வகைச் சமய நம்பிக்கையால், மதப்பற்றால் மாற்றியவர்களை சிலர் உண்டு என்தன்றி, மத நம்பிக்கை அடிப்படையில் வளர்ந்திட்ட சமுதாய வாழ்வை, பகுத்தறிவு அடிப்படையில் – மூட நம்பிக்கையின் சாயலின்றி மாற்றியமைத்தவர்களை இல்லை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

மத நம்பிக்கைகள் – நல்லறிவுக்கும் – தெளிவுக்கும் முட்டுக்கட்டை ஆவதை எண்ணி அவற்றை அடியுடன் நகர்த்திடும் நெறியில் தமது அறிவைப் பயன்படுத்தினார்.

இந்த முயற்சி – கா வெள்ளத்தால் ஏற்பட்ட பழமைப் பிடிப்பிலிருந்து, மனித உள்ளத்தை – அறிவின் துணைகொண்டு விடுவிப்பதாகும். அது எளிதன்று. பனிமலையில் ஏறுவது போன்றும் கடுமையான சோர்வினைத்தரும் அறிவுப் பணியாகும். எனினும், பெரியார் தம்மை அந்த எதிர்நீச்சல் பணிக்கே ஒப்படைத்துக்கொண்டார்.

அதன் இயல்பை அறிந்திருந்த காரணத்தாலேயே – அவர் எதிர்ப்பைக் கண்டு அஞ்சவில்லை. கண்டனம் கண்டு மயங்கவில்லை, தடைகள் கண்டு துவளவில்லை, பயன்குறைவு கண்டு வெகுளவில்லை.

கல்லாமையால் விளையும் இழப்பு பலவென்றாலும் அதனால் வாய்த்ததொரு தனிப்பெரும் நன்மை, பெரியாரின் இயற்கை மதி நுடபம், பயிற்சி முறைக் கல்வியால் மழுங்கிடும் நிலைக்கு ஆளாகாத்தும், த்த்தம் அறிவையும், அதன் தெளிவையும் நம்பாது, ஏட்டில் கற்றதை மட்டுமே நம்பி ஏற்று, அதை உரைப்பதிலேயே பெருமை தேடும் மனப்பான்மைக்கு அவர் ஆளாகாத்தும் ஆகும்.

ஆம்! கற்ற்றிந்த மேதைகள் எடுத்தியம்பவும், பரப்பவும் முன்வராத, முன்வரத் துணியாத கொள்கைகளுக்காக, வாதாடவும், போராடவும், பரப்பவும் பெரியார் முன்வந்தார். அதையும் பாமர மக்களுக்கு விளங்கும்படிப் பரப்ப முன் வந்தார். அதுவும் அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு வளையம் கட்டிய போதும் தொடர்ந்து அஞ்சாது பணிசெய்ய முன்வந்தார்.
எதிர்ப்பு- கண்டனம் – தாக்குதல் – கல்வீச்சு – செருப்பு வீச்சு – முதலியவற்றைச் சந்திப்பது அவருக்குப் பழக்கமாயிற்று. அதனால் மக்களின் அறியாமையே அவருக்குகப் புலனாயிற்று. அதுவே அவருக்கு, அவரது பகுத்தறிவுப் பணி எவ்வளுவு முக்கியமானது என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி, அவரை மேலும் ஊக்கப்படுத்தியது. எதர்ப்பு – பால் பாயசம் பருகுவது போன்று அவரது ஆர்வத்தை வளர்த்தது.

மனித வாழ்வும் அறிவும்
துள்ளிக் குதிக்கும் இளமைப் பருவம் முதல் எழுந்து நடக்கவே தள்ளாடும் முதுமை வரை, தாம் கண்டதையும் கேட்டதையும் கருத்தில்கொண்டு, ஆராய்ந்து நோக்கி அவற்றின் நியாய – அநிநாயங்களைப் பகுத்தறிந்து உணர்ந்து, உண்மை கண்டு, அதனை உலகோர்க்கு உணர்த்துவதையே தமது கடமையாகக் கொண்டார்.

அவர் இளமையில் பயின்ற ஏட்டுக் கல்வி குறைவுதான் எனினும் – தாமாகப் படிக்கக்கூடிய ஏடுகள் பலவற்றையும் படித்து, அவற்றையும் தமது அறிவுகொண்டு ஆராய்ந்து, அவற்றின் நன்மையும் தீமையும் தெளிந்து மக்களுக்கு விளக்கி உரைத்தார்.

எப்படிப்பட்ட பெருமைக்குரியவர் கூறியதாயினும்- எவ்வளவு போற்றப்படும் ஏட்டில் கண்டதாயினும்- தமது அறிவுக்குச் சரியென்று தோன்றாத எதனையும் ஏற்க மறுத்தார் என்பது மட்டுமன்றி, எதிர்க்கவும் – கண்டிக்கவும் பின்வாங்கவில்லை.

எதுவானாலும் – அது ஏன்? எதற்காக? எப்படி? என்ன பயன்? என்னும் கேள்விக்கு அவற்றை இலக்காக்கினார்.

மனித வாழ்வு – அறிவை அடிப்படையாக்க்கொண்டே நாளும் வளர்ச்சி பெறுவது. ஆதி நாள்களில் மனிதன் எத்தனையோ துன்பங்களுக்கிடையில், உயர்க் கேடுகளுக்கிடையில், தனது அறிவைப் பயன்படுத்தி, உயிரைக் காத்துக்கொண்டு முன்னேற்றம் கண்டான். அந்த அறிவு வளர்ந்து – விரிந்து பல துறைகளில் பயின்று, ஆழ்ந்து நுணுகி ஆராயும் திறம் பெற்று, மனித வாழ்வை மேலும் மேலும் மேம்பாடு அடையச் செய்து வந்துள்ளது.

தன்மான உணர்வூட்டியவர்
தந்தை பெரியார் அவர்கள் தோன்றியிராவிட்டால், அவரது சுயமரியாதை முழக்கம் கேட்காமலிருந்தால், பேரறிஞர் அண்ணா அவர்கள் இல்லை; அவரது வழிகாட்டுதலும், அறிவுத் தொண்டும், அரசியல் பணியும் நமக்குக் கிடைத்திருக்காது.

அறிஞர் அண்ணாவே இல்லை என்றால், அவரது தொண்டுக்கு வாய்ப்பு இல்லை என்றால், நான் ஏது? கலைஞர் கருணாநிதி ஏது? நண்பர் வீரமணிதான் ஏது?

பெரியார் தோன்றியிராமலிருந்தால், பெருந்தலைவர் காமராசரும், பச்சைத் தமிழர் என்னும் பாராட்டைப் பெற்றிருக்க மாட்டார். அவரது தலைமையும் நெடுநாள் நிலைத்திருக்க முடிந்திருக்காது.

பெரியாரின் பகுத்தறிவு எண்ணங்கள் தமிழகத்தில் பரப்பப்படாமலிருந்தால், சமயங்களிடையே சமரசம் கண்டு, சீர்திருத்தம் பேசிய தமிழ்ப்பெரியார் திரு.வி.க. அவர்கட்கு உரிய மதிப்பு வழங்கப்படும் நிலை உருவாகியிருக்காது. காவியுடை அணிந்து, சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பும் தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் வலம்வரும் நிலை இருக்காது.
மறைமலை அடிகளாரை – அவரது தனித் தமிழ் உணர்வைப் போற்றி மதிக்கவும், நாவலர் சோமசுந்தர பாரதியாரை – அவரது சிந்தனையை எண்ணிப் போற்றவும் – தமிழ் வளர்த்த சான்றோரை ஏத்தவும் காரணமான தமிழ் உணர்வு மக்களிடம் வளர்ந்திருக்காது.
தேசிய கவி பாரதியார் கவிதையில் இடம்பெற்ற சமுதாய மாற்றக் கொள்கைகளும் வெளிபட்டிருக்காது. பாரதி வழியில் தோன்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் – தமிழியக்கக் கவிஞராகவும், பகுத்தறிவுப் பாவலராகவும் புரட்சிப் பண்பாடும் நிலை வடிவு பெற்றிருக்காது. தமிழ் உணர்வே வளர்ந்திருக்காது. ஏன்? தமிழனே இல்லை; தமிழகமே இல்லை என்னும் இருண்ட நிலைதான் இன்றுங்கூடத் தொடர்ந்திருக்கும்.

சுயமரியாதைக் கொள்கையோ, பகுத்தறிவு விளக்கமோ உருவாகி இருக்காது. தெளிவும் துணிவும் பிறந்திருக்காது. திராவிடர் கழகமோ – திராவிட முன்னேற்றக் கழகமோ இல்லாத நிலைதான்.

பெரியார் பிறந்தார் – வாழ்ந்தார் – வழிகாட்டினார். இந்த மண்ணில் பிறந்த நாமெல்லாம் வாழ்வு பெற்றோம். தன்மான உணர்வுடையவர்களானோம். தமிழர்களாகத் தலை நிமிர்ந்தோம்.

வேற்றுமையை மதித்தவர்
மக்கள் பலர் தமது கருத்தினைக் காது கொடுத்துக் கேட்கிறார்கள் என்பதே அவரது களைப்புக்கு மருந்து. அவர்கள் தமது கொள்கையைச் சிந்திக்கின்றார்கள் – ஏற்க முற்படுகிறார்கள் என்பதே அவருக்குத தேன். அதுவே அவரது முதுமையில் அவர் பருகிய இளமையின் பால்.

பெரியார் அவர்களிடம் பழகியவர்கள் அறிந்தது இது. தம்முடன் உரையாடுவோரைக் கூர்ந்து கவனிப்பார். அவர்தம் உரையையும் காதுகொடுத்துக் கேட்பார். அவரது சிந்தனை தம்முடன் பேசுவோரையும் அவரது எண்ணத்தையும் ஆராயும். ஒருவர் ஏன் அப்படிப்பட்ட கருத்தைக் கூறுகிறார் என்பதை அவர் ஆழ்ந்து சிந்திப்பதை அவரது துருவிப்பார்க்கும் கண்கள் புலப்படுத்தும்.

தம்மிடம் உரையாடுவோர், ஏதேனும் ஒரு முடிவான கொள்கையில் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் என்று தோன்றுமானால், அவருக்குள்ள இலட்சியம் அவருக்கு – நமக்குள்ள இலட்சியம் நமக்கு என்று உள்ளங்கொண்டு, அவரிடம் அதிகம் வாதாடத் தலைபடமாட்டார். அவர்கள் மாறுபட்ட கொள்கையுடையவாராயினும், ஏதேனும் ஒருவகையில் சமுதாயத்துக்குப் பயன்படுவர்களானால், அவர்கட்கு உரிய மதிப்பினை வழங்கிப் பாராட்டுதல் செய்து, தனிப்பட்ட முறையில் அவர்களுடன் மாறுபாடு இல்லை, கொள்கையிலேதான் மாறுபாடு என்பதை அவர்கள் உணருமாறு செய்திடுவது அவரது இயல்பு.

அவர்களையெல்லாம் தம்முடைய பண்பாட்டினாலேயே பெரிதும் கவர்ந்தவர் தந்தைப் பெரியார்.

பெரியார் அவர்கள் எதையும் சாத்திரம் சம்பிரதாயம் என்றோ, முன்னோர் உரைத்தது என்றோ, மக்கள் நம்பிக்கை என்றோ ஏற்பதில்லை. உண்மை, நியாயம், தேவை, மக்களுக்குப் பயன்தருவது என்று உறுதியாகத் தெரிந்தால்தான் ஏற்பார். அதுவே, அவரது தனித் தன்மை வாய்ந்த சிந்தைனையாக வளர்ந்து, உரையாகி, எழுத்தாகி, அவரது குறிக்கோள் ஆகவே வடிவு கொண்டது.

மக்கள் உள்ளத்தில் பதிந்துள்ள பழமையான எண்ணங்களை எல்லாம், பழைய பொன் நகையை உருக்கித் தூய பொன்னாக்கிப் புது அணி செய்ய முற்படுவதுபோன்று, ஆராய்ந்து புதய மதிப்பீடு செய்யலானார்.

மனிதன் – மனித்த் தன்மை பெற, பகுத்தறியும் ஆற்றல் பெற, சமத்துவ சகோதரத்துவ சுதந்திரத் தகுதிபெற, தன்மானம் இழக்காது வாழ, எவை எவை எப்படி எப்படித் தடையாயினும் அவற்றைத் தகர்த்து எறிவதே அவருடைய குறிக்கோள்.

சாதி, குலம், உயர்வு, தாழ்வு, பார்ப்பனியம், புரோகிதம், சடங்குகள், மத நம்பிக்கை, தலைவிதி த்த்துவம், கோயில் வழிபாடு – கடவுள் நம்பிக்கை, மறுபிறவு, மோட்சம் – நரகம் முதலான அனைத்தும் அவரது பகுத்தறிவுக் கேள்விக் கணைகளால் தூளாக்கப்பட்டன.

அனுபவ அறிவு
 செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போன்று, எண்ணங்களும் மனப்பழக்கமாவதால், அந்த எண்ணங்களினின்றும் புதிய எண்ணங்களைச் சிந்திப்பது என்பது இயற்கையில் எளிதல்ல. பாடங்கேட்டுப் பழகாத அவரது மனம் புதிதாகத் தோன்றக் கூடிய எண்ணங்களைப் பழைய எண்ணங்கட்கு அடிமைப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆட்படவில்லை.

ஏட்க் கல்வியை முறையாகப் பயில்வதில் நாட்டம் செலுத்தாவிடினும், அவரது இயல்பான அறிவுக் கூர்மையால், உலகம் என்னும் விரிந்த ஏட்டினைக் கண்டு, கேட்டு, உரையாடி, சிந்தித்து, தனிவழியில் தமது கருத்துகளை – காரண காரிய விளக்க அடிப்படையிலான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளலானார்.

பின்னர் மக்கள் ஏன், பல்வேறு மூட நம்பிக்கைகட்கு ஆளாகின்றனர்? சாதி, சமய வேற்றுமைகளை ஏற்கின்றனர்? என்றெல்லாம் சிந்திக்கத் தலைப்பட்டு, அவர்கள் அப்படிப்பட்ட நம்பிக்கைகொள்ள ஏதுவாக உள்ள இதிகாச புராண, சாத்திர ஏடுகளையும் அவராகவே படித்து அவற்றை ஆராயலானார். அவற்றில் அறிவுக்கு ஒவ்வாத, உண்மைக்கு மாறான கற்பனையும் பொய்யும் கலந்து மயக்க உணர்வு வளர்க்கும் பலப்பல செய்திகள் – கருத்துகள், இருப்பதைக் கண்டார். இந்தக் கற்பனைக் கதைகளும் – பொய்மைகளும் பாமர மக்களை மட்டுமின்றிப் படித்த மக்களையுங்கூட உண்மையைத் தெளியவிடாமல் தடுக்கின்றன என்பதையும் உணர்ந்தார். தாம் உணர்ந்த உண்மையை உலகத்திற்கு உணர்த்துவதே தமது வாழ்நாள் குறிக்கோளாக்க் கொண்டார்.

சாதி ஒரு சூழ்ச்சிப் பொறி
”மனிதனை மனிதன் நெருங்க்க் கூடாது – காணக்கூடாது – தீண்டக்கூடாது” – என்கிறார்களே. யார் அவர்கள்? என்றார் பெரியார்.

”மேல்சாதிக்கார்ர்கள்’ என்ற பதில் வந்தது.

அப்படி மனிதனை மனிதன் இழிவுபடுத்த ஒரு மேல்சாதியா? அந்த மேல்சாதிக்கார்ன் வளர்க்கும் மாடுகளிலும் கீழோ மனிதன்? நாயினும் இழிந்தவனோ மனிதன்? அந்த மேல்சாதி ஒழிக என்றார். அவர்கள் மற்ற மனிதர்களை இழிவுபடுத்தும் அநீதியைக் கண்டித்தார்.
இது வருணாசிரம தருமம் அல்லவோ? நால்வகைச் சாதி முறையைத்தானே நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்? அதுவும் தவறா? என்றனர், வருணாசிரம மனப்பான்மையினர்.
அது எப்படி உண்மையாகும்? பிறப்பிலே உயர்வும் தாழ்வும் இயற்கையில் எப்படி இருக்க முடியும்? அது செயற்கைகயாக்க் கற்பிக்கப்பட்டதுதானே! சாதிப்பாகுபாடே ஒரு சூழ்ச்சிப்பொறி, முறைகேடு, அநீதி என்றார் பெரியார்.

அதுவே, வேதமும் ஆகமங்களும் கீதையும் உணர்த்திடும் உண்மை, – கண்ணன் படைப்பு நால்வகைச் சாதி என்றனர்.

அந்த வேதமும் கீதையும் அறிவுக்கு ஒத்தனவல்லவே? அவை உரைக்கும் கருத்து ஆரியத்தைக் காக்க வகுக்கப்பட்ட சதித்திட்டம் அதை ஏற்பது மடமை – எதிர்ப்பதே என் கடமை என்றார் பெரியார்.

இதிகாசங்கள் முதற்கொண்டு மனுநீதி சாத்திர்ம வரையில் வற்புறுத்தும் முறையாயிற்றே வருணாசிரம்ம் என்றனர். அதனால்தானே தமிழர்கள் அடிமைகளாக, தாசர்களாக ஆக்கப்பட்டனர். எனவே, அவற்றை ஒழித்தால்தான் – தமிழன் தலைநிமிர முடியும் என்றார் பெரியார்.

இவையெல்லாம் கடவுளின் ஏற்பாடு செய்தவன் கடவுளாகமாட்டான். இப்படிப்பட்ட கட்டளை இடுவது தெய்வம் ஆகாது. இதை மீறுவது பாவம் என்றால் நான் அதனை ஏற்கத் தயார்! என்றார் பெரியார்.

இதுதான் நாத்திகம், கடவுளை நம்பாதவர் பேச்சு என்றனர், ஆத்திகர்.

இப்படிப்பட்ட பேதங்களை வளர்க்கும் கடவுளை நம்பிவதைவிட, நாத்திகனாக இருப்பதே மேல்; நான் நயவஞ்சக ஆத்திகனாக இருக்க விரும்பவில்லை – என்றார் பெரியார்.
இப்படியெல்லாம் கடவுள் நிந்தனை செய்பவர்கட்கு இரவுரவாதி நரகந்தான் சம்பவிக்கும் என்றனர் வைதிகர்கள்.

சாதி வேற்றுமையை ஒப்புக்கொண்டு, பிறப்பிலே இழிவை ஏற்றுக்கொண்டு கண்ணுக்குத் தெரிந்த இவ்வுலகில் கருத்தறிந்தும் அநீதியை ஏற்றுக்கொண்டு, தலைமுறை தலைமுறையாக அழிவதைவிடக் கண்ணுக்குத் தெரியாத – யாருங்காட்டாத இரவுரவாதி நரகம் எவ்வளவோ மேல் என்று சுடச்சுடப் பதில் அளித்தார் பெரியார்.

அடிமைத்தனம் அழித்தல்
ஆரிய சூழ்ச்சி வலையினின்று விடுவிக்கத் தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்கள். இங்கிலாந்து நாட்டிலே தோன்றிய புரட்சிக் கவிஞன் ஷெல்லி இங்கிலாந்து நாட்டு அடித்தட்டு உழைப்பாளி மக்களைக் கூவி அழைத்துக் கூறியது இது;

”உரத்த குரலில் முழங்குங்கள்!ஊழல் கொடுமை வளர்க்கும் அரியாசன்த்தின் கீழ்ச்சிக்குண்டு நலியும் அடிமை ஒவ்வொருவனும்மனிதனாகத் தலை நிமிரட்டும்!

பூட்டப்பட்டுள்ள தளைகளையும் விலங்குகளையும்துன்பத்தின் முனகல் ஒலி இன்றியேதுணிச்சலுடன் உடைத்தெறியட்டும்!”

மேலும் ஷெல்லி சொன்னான்.

”சுதந்திரம் எதுவென்பதும் அறியீர்!அடிமை நிலை பற்றியே அறிவீர்!அந்நிலையிலேயே நெடுநாள் ஊறினீர் அன்றோ!அடிமைப் பெயரே உந்தம் பெயரோடுஒன்றாக உறவாடி எதிரொலிப் பதன்றோ!”

ஆம், இவ்வாறுதான் கேட்டான்!

இங்கிலாந்து நாட்டு குடிமகனே!

உன் பெற்றோர்களும் -பிள்ளைகளும், நாளும் வறுமையில் வாடிச் செத்திட விட்டு ஏங்கித் தவிப்பதா உரிமை வாழ்வு? அடிமைத்தளையை உடைத்தெறிய நீ தலைநிமிர மாட்டாயா? என்றான் அவன்.

வறுமைநிலை கண்டே கொதித்தான் அவன். ஆனால், சமுதாய நிலையே – அடிமை நிலையாக ஆக்கப்பட்டுள்ள இங்கோ – பெரியார் அவர்கள் அந்த அளவு ஆத்திர்ப்படவில்லை. நியாயத்தை உணர்த்துவதற்குத்தான் வாழ்நாளெல்லாம் வாதாடினார்.

அதைப்போலவே, பிரஞ்சுநாட்டு ரூசோ கூறினான். மனிதன் பிற்கின்றபோது, சுதந்திரமாகத்தான் பிறக்கிறான் ஆனால், உலகில் எங்கெங்குக் காணினும் அவன் கைகள் விலங்கு பூட்டப்பட்டுக் கிடக்கிறான் என்று.

மனிதன் பிறக்கின்றபோது, சுதந்தரமாகத்தான் பிறந்தான். எண்ணங்களாலே விலங்கு பூட்டப்பட்டான். அந்த எண்ணங்களைப் பற்றியெல்லாம் தந்தை பெரியாரவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தார். எனவே பருவம் பார்ப்பதும், மடி செய்வதும் தமிழன் குடிசெய்வதற்கு இடையூறு என்று வள்ளுவர் கூறிய குறள் கருத்து அடிப்படையில் – தமிழர்கள் முன்னேற மூடநம்பிக்கைகளைத் தகர்க்க வேண்டும் என்று தந்தை பெரியாரவர்கள் பருவம் பாராது, காலம் நோக்காது, கருமமே கண்ணாகப் பணியாற்றினார்கள்.

சமய வெறுப்பு ஏன்?
இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிருபர்கள் ஆர்வத்துடன் அகோபில மடாதிபதி ஜீயரைப் போய்ப பார்த்திருக்கிறார்கள். அவரைப் பார்த்துப் பேசியுள்ளனர், ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணிக்காகப் பலதரப்பட்டவர்களிடத்திலேயிருந்து நன்கொடை பெற்றிருக்கின்றீர்கள். அதிலே சைவர்கள், சைவ மடாதிபதிகள், பெரிய இலட்சாதிபதிகள் எல்லாம்கூட நிதி வழங்கியிருக்கின்றார்கள். நிதியைக்கொண்டு அரங்கநாதருடைய திருப்பணிக்கு – கோபுரப்பணிக்கு அந்தப் பணத்தை எல்லாம் செலவு செய்திருக்கின்றீர்கள் என்று கூறிய பின்னர்ச் சிவன் கோயிலுக்குக் கோபுரம் கட்டப்படுமானால், வைணவர்களாக இருக்கின்ற ‘பிராமணர்கள்’ அதற்கு நிதி உதவி கொடுக்கும்படி நீங்கள் சொல்வீர்களா? அதற்கெல்லாம் ஆதராவாகச் சொல்வீர்களா என்று கேட்டிருக்கின்றனர்.

அதற்கு ஜீயர் நான் சொல்லமாட்டேன் என்றிருக்கின்றார்.

மேலும் விடாமல் கேட்டார்கள்.

நீங்களாவது சிவன் கோயிலுக்கு நன்கொடை தருவீர்களா? என்று கேட்டிருக்கின்றார்கள். அவர் சொல்லி இருக்கின்றார் – சிவபெருமானை வழிபடுகின்ற அந்தக் கோயில்களுக்கு வைணவர்கள் பணம் தரக்கூடாது. நானும் தரமாட்டேன். ஏனென்றால், எங்களுடைய ஆண்டவர்களிலே வெங்கடாசல பதியோ, ஸ்ரீரங்கநாதரோதான் உயர்ந்தவர்கள். சிவன் இருக்கிறானே; சுடலையைக் காக்கும் பேர்வழி. அந்தச் சிவபெருமானுக்காக்க் கட்டப்படும் கோயிலுக்காக்க் பணம் கொடுப்பது என்பது ஸ்ரீமத் நாராயணமூர்த்தியிடம் நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதிப்பதாகும். அது பாவமான காரியம் என்றாராம். இங்கே ‘பிராமணர்’களின் மாநாட்டிலே ஐயர் ஐயங்கார்களெல்லாம் ஒன்றாக வேண்டும் என்பது ஒரு கருத்து. வைணவர்கள் சிவன் கோயிலுக்குப் பணம் தரக்கூடாது என்பது இன்னொரு நிலை.

நியாயம் கேட்டவர் பெரியார்
 கணவன், மனைவியை அடிமையாக நடத்தக்கூடாது என்று கூறிய பெரியார், ‘பிராமணர்’களுக்கு மற்றவர்கள் அடிமையாக இருக்க ஒத்துக்கொள்வார் என்று கருத இடமேது?

அதனால்தான் என்றைக்கும் பிராமணர்கள் மற்ற வகுப்பார் மீது குதிரை ஏறலாம்; அதற்குத் தமிழன் தோள் என்றைக்கும் தயாராக இருக்கும் என்று எண்ணிவிடவேண்டாம் என்றார்.
அப்படிப்பட்ட தந்தைப் பெரியாரவர்களைவிட நியாயப் புத்தி படைத்தவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்? வேறு யார் இருந்தார்கள்?

கலப்பு மணம் செய்யலாம் என்று சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் அவர்களே எழுதவில்லையா? கலப்பு மணம்; காதல் மணத்தைப்பற்றி ஒரு கட்டுரையிலே அவர் சொல்கிறார்;-கலப்பு மணம் என்பது ஓர் இளைஞனும், ஓர் இளம் பெண்மணியும் ஏதோ ஓர் இடத்தில் தடீர் என்று சந்தித்து, சந்தித்த காரணத்தினாலே இயற்கை உணர்ச்சியால் காதல் தூண்டப்பட்டுக் காதலிலே அவர்கள் ஈடுபட்டு, பின்னர் ஒருவரை ஒருவர் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிற நிலைமை ஏற்பட்டு, மன உறுதி இல்லாமல் ஒருவரை ஒருவர் கைவிட்டுப் போய்விடக் கூடாது. ஒருவரை ஒருவர் பார்த்துப் பழகிப் புரிந்துகொண்டு, வருகிற கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டால், எந்த சாதிப் பெண் எந்த சாதி ஆணைத் திருமணம் செய்து கொண்டாலும் வரவேற்க்க்கூடியதுதான் என்று இராசாசி அவர்களே எழுதியுள்ளார்.

இராசாசி அவர்கள் குடும்பத்தில் கலப்பு மணமும் நடைப்பெற்று இருக்கிறது.இராசாசி அவர்கள் சொன்னதைப் பெரியார் சொன்னால் கசக்கிறதா? இராசாசி சொன்னதை நாங்கள் ஒப்புக்கொண்டோமா என்று பார்ப்பன நண்பர்கள் கேட்க்கூடும்.

அவர்கள் ஒப்புக்கொண்டார்களோ இல்லையோ – அவர்களுடைய சமுதாயத்திலே 100 க்கு – 5 சதவீதம் கலப்பு திருமணம் நடைபெறாமலா இருக்கிறது?

எனவே, காலத்தை உணர்ந்து முற்போக்காகத் தங்களுடைய சமுதாயத்தை பாதுகாத்துக்கொள்ள நினைக்ககூடிய ‘பிராமண’ நண்பர்கள் மற்றவர்ள் முன்னேறுவதற்கு வழிவிடவேண்டாமா? அவர்கள் வழி கூட விடவேண்டா; சிவன்கோயில் ந்ந்தியாக இருக்கலாமா?

அவர்கள் நந்தியாக இருந்தால் இந்த ந்ந்தன்கள் என்றைக்குமே திருக்கோயிலுக்குள் போய்ச் சேரமாட்டார்கள் என்ற நினைப்பா? அந்தக் காலத்து நந்தன், ‘நந்தியே வழிவிடு வழிவிடு என்றான்.

இந்தக்காலத்து நந்தன் நந்திமீது ஏறிக்கொண்டு அதையே ஓட்டிக்கொண்டு போய்விடுவான்? நிலைமை மாறியுள்ளது!

காலம் மாறுகிறதல்லவா? மாறுகிற காலத்தை உணருகின்ற ஆற்றல் பெற்றிருந்த காரணத்தினால்தானே பிராமணர்களை எல்லாம் அறிவாளிகள் என்று பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருந்தனர். இன்றைக்ககு அதை ஏற்பார் இல்லையெனினும் இந்தக் காலத்தின் மாற்றத்தை ஏற்க மறுப்பது பயன்தருமா?

பார்ப்பனர்களுக்குள்ளேயாவது முதலில் சாதி வித்தியாசம் தொலையட்டும்.

அவர்களுக்கிடையிலேயாவது அர்த்தமில்லாத மூடநம்பிக்கைகள் ஒழியட்டும். அவர்களாவது ஒன்றாக ஆகித் தொலையட்டும். அவரகளைப் பார்த்தாவது மற்றவர்களுக்குப் புத்தி வரட்டும் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது எனக்கு.

இங்கே முக்குலத்தோர் என்பவருள் முப்பத்து மூன்று சாதிகள் இருக்கின்றன.

முத்தரையர் என்று நாற்பத்தெட்டு முத்தரையர் இருக்கின்றனர்.

முதலியாரிலே எழுபத்தெட்டு முதலியார் இருக்கின்றனர். பிள்ளைமாரிலே ஐம்பத்திரண்டு பிள்ளைமார்கள் இருக்கின்றனர்.

பள்ளர், பறையர், அருந்ததியரிலே – அறுபத்தெட்டு வகை இருக்கிறார்கள்.

ஆக, இந்த நாடு நலம்பெற வேண்டுமானால், பார்ப்பனர்களாக இருக்கின்ற அவர்களாவது சாதிப்பெயர் வேற்றுமையின்றி ஒன்றுபட்ட்டும்.

உங்களிடையே உள்ள வேற்றுமையை முதலில் ஒழியுங்கள் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.

ஆதிக்க வெறுப்பு
பார்ப்பன ஆதிக்கத்தை மட்டுமே பெரியார் கண்டிக்கவில்லை. சைவ சமய ஆதிக்கத்தையோ, வைணவ சமய ஆதிக்கத்தையோ தமிழர்களான மடாதிபதிகளின் ஆதிக்கத்தையோ பெரியாரவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

திருக்கோயில் பெயரால் உருவாக்கப்பட்டு நடைபெறும் ஆண்டவன் ஆதிக்கத்தைக்கூட கொள்கை நோக்கிப் பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை.

தொழில், வாணிக, ஆலை முதலாளித்துவ முறையின் ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஜமீன்தார், இனாம்தார், மிட்டா மிராசுகளின் பரம்பரை ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தெளிவாக்க் கூறுவதானால், எந்த ஓர் அரசாங்கத்தினுடைய ஆதிக்கத்தையுங்கூடப் பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை.

பின் பிராமணர்களுக்கு மட்டும் பெரியாரவர்கள் எப்படிப்பட்ட நியாயயம் வழங்குமுடியும் என்று நினைக்கிறீர்கள்? எதிர்பார்க்கிறீர்கள்?

சமுதாய அடிப்படை மாற்றம்
பெண்ண்டிமை நிலை மாறவும், கலப்புத் திருமணமும் – விதவை மணமும் ஏற்கப்படவும் அவர் ஆற்றிய தொண்டு பெண்ணினத்தின் விடுதலைக்கு வழிகோலின.

உழைப்பவர்கள் உருக்குலையவும் வறுமையில் வாடவும், உழைக்கதவர்கள் உண்டு கொழுத்து ஆதிக்கம் செலுத்தவுமான நிலையை எதிர்ப்பதற்கான மனத்துணிவை மக்களிடம் தந்தை பெரியார் உருவாக்கினார்.

சமுதாய அமைப்பே ஒரு நீதி, நியாயமற்ற அடிப்படையில் அமைந்துள்ளதால், அதன் மூலமே , அறிவையும், உழைப்பையும் மதித்து வாழும் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று தெளிந்து அதற்குக் கால்கோள் நடத்தினார் பெரியார். எண்ணங்களில் புரட்சியும், செயலில், முயற்சியில் நம்பிக்கையும் ஏற்படச்செய்து, அதன்மூலம் இந்தச் சமுதாய அமைப்பிலேயே ஒரு தலைகீழ் மாற்றத்தை ஏற்கவைத்திடப் பாடுபட்டார் பெரியார்.

ஆம், சமுதாயத்தின் எண்ணமெனும் நீரோட்டத்தை எதிர்த்துத் தமது வல்லமை மிகுந்த அறிவுத் துணை கொண்டு எதிர்நீச்சல் போட்டவர் பெரியார், தமது ஓய்வற்ற உழைப்பாலும், உறங்காத அறிவாலும், தோல்வி அறியாத மனத்தாலும், ஒரு புதிய சமுதாயத்திற்கான சிந்தைன் அடித்தளத்தை அமைப்பதில் வெற்றிக் கண்டவர் பெரியார்.

தந்தை பெரியாரின் எண்ணமும் – கருத்தும், ஏதேனும் ஒருவகையில் மாற்றம் செய்திடாத மனிதனே தமிழகத்தில் இல்லை. இன்று வாழ்பவர் எல்லோருமே – தமது எண்ணப்போக்கில், ஏற்றுள்ள கருத்துகளில் சிறிய அளவிலேனும் அவருக்குக் கடமைப்பட்டவர்களாகவே இருப்பர் என்பதில் ஐயமில்லை.

வாழ்க பெரியார் வளர்த்த சிந்தனை!வெல்க சுயமரியாதை!
A letter to Periyar E.V.Ramasamy.....a kid who had no chance towrite while he is alive

Dear Affectionate Periyar Grandpa,Thank you for your sacrifices, time and dedication.

It is astonishing how you have done so many revolutions not only for the previous generation and my generation, but also for every future generation to come. You did not go to college . . . yet because of you many colleges were built. Many have graduated and have a brighter future for themselves and their families. Those who have gone to college to study and teach can learn a lot from your managerial, financial and logical skills.

Thank you for abolishing child marriages. Otherwise I could not declare my education and my independent thought as my right, instead of something that was given to me. It is because of you I have a Tamil name. It is because of your efforts I am proud to be a Tamil girl. It is your hard work that has enabled me to say I do not believe in caste. I have the right to go into any temple, if I want (regardless of the caste I was thrust into.) I can choose to be an atheist, agnostic, etc.

It is amazing how you have done so much with very little formal education and even more limited communication – no email, no internet, no cell phones, minimal phone access, and with limited availability to prints (books, magazines etc.)

Your accomplishments are beyond comprehension. How have you (with health problems) been able to eat, sleep, read, learn, write, speak, see the perspective that others don’t , think of so many solutions to the problems faced by the Dravidian people, travel overseas, travel on  land, go to jail, and have a sense of humor till the end!

Many of your ideas are yet to be implemented, they are too modern even for today. You wanted women to have rights and we have started exercising our rights but unfortunately it is our counterparts (men) who cannot handle our success. The boys of today will grow up to be confident self-respecting men of tomorrow. The future generation men will realize that a woman’s success is not a threat to their success.

My generation of women thank you.        Ponmalar K.Velayutham

No comments:

Post a Comment