Search This Blog

Friday, September 9, 2011

கலைடாஸ்கோப்-37



லைடாஸ்கோப்-37 உங்களை வரவேற்கிறது


=
போன வாரம் ஆபீசில் (வீட்டில் ப்ளாக் எழுதும் கெட்ட பழக்கம் நமக்கு இல்லை) http://samudrasukhi.blogspot.com/என்று டைப் செய்த போது 'This blog has been removed' if you are the owner of this blog..(இதற்கு அப்புறம் படிக்க முடியாமல் கண்ணீர் தடுத்து விட்டது!) என்று ஒரு செய்தி வந்தது. (நமக்கே தெரியாம 'அம்மாவைப்' பற்றி ஏதாவது தப்பா எழுதிட்டமா ? இல்லையே!) இது முதலிலேயே எதிர்பார்த்தது தான் என்ற போதிலும் ஒரு இரண்டு புள்ளி ஐந்து ரிக்டர் அளவுக்கு மனதில் அதிர்ச்சி உண்டானது. ஐயோ? இது நாள் வரைக்கும் நாள் எழுதிய அரிய இலக்கியப் பொக்கிஷங்கள்(?) என்ன ஆவது?என்னை வெறித்தனமாக பின்தொடரும் ஆயிரக்கணக்கான வாசகர்களின் (மறுபடியும் ஒரு கேள்விக்குறி) நிலை என்ன ஆவது? என்று கொஞ்ச நேரம் வருத்தப்பட்டாலும் , ஒரு அரைமணிநேரம் கழித்து ப்ளாக் Open ஆனது.(sometimes waiting is the greatest solution) சரி நாமெல்லாம் என்ன காசுகொடுத்தா ப்ளாக் வாங்கி இருக்கிறோம்? எனவே இந்த ப்ளாக் நிரந்தரமாக காணாமல் போய் விட வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். (ப்ளாக் காணோம் என்று வடிவேலு போல போலீசில் கம்ப்ளயன்ட் கொடுக்க முடியுமா?!) உங்களுக்கு இந்த ப்ளாக்கில் ஏதாவது ஒரு பதிவு பிடித்துப் போய் இருந்தால் அதை காபி-பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ளவும். ப்ளாக் இல்லை என்று பின் தொடர்பவர்கள் யாராவது தற்கொலை செய்து கொண்டால் அதற்கு இந்த ப்ளாக் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது!


==
காதுவலி என்றதும் நிறைய பேர் பழனி சித்தர் பாம்பாட்டி சித்தர் போன் நம்பர் எல்லாம் தந்தார்கள். (உங்கள் அன்புக்கு நன்றி!) அந்த அளவுக்கு மோசமாக காதில் சீழ், ரத்தம் எல்லாம் வடியவில்லை. ஏதோ முக்கூடல் எக்ஸ்ப்ரஸில் பிரச்சனை அவ்வளவு தான். சில சமயம் மருந்து உதவாவிட்டால் எதிர் மருந்து உதவும் என்பார்கள் (தொண்டை வலித்தால் ஐஸ் க்ரீம் சாப்பிடுவது மாதிரி) எனவே கொடைக்கானல் போகலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. கொ.கா மிக மிக மிக மிக மிக COMMERCIALIZED ஆக இருக்கிறது. பஸ்ஸை விட்டு இறங்கியதும் காஷ்மீர் லெவலுக்கு சார், சைட் சீயிங் போகலாமா என்று டாக்சி டிரைவர்கள் நச்சரிக்க ஆரம்பிக்கிறார்கள். (அடப்பாவிகளா? பஸ்ஸில் இரவு முழுதும் உட்கார்ந்து வந்தவர்கள் ஒன், டூ, இம்போர்ட் எக்ஸ்போர்ட் எதுவுமே பண்ண வேண்டாமா?) கொ.கா வில் பார்ப்பதற்கு அவ்வளவு ஒன்றும் நிறைய இடங்கள் இல்லை. ஆனால் வானிலை ரம்மியமாக இருக்கிறது. லேசான (இரவில் பயங்கரமான!) குளிர்! தூறல் மழை..ஆனால் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளில் வாகனங்கள் அடைத்துக் கொண்டு ஏதோ மினிஸ்டர் வீட்டு திருமணம் போல் காட்சி தருவது எரிச்சலாக இருக்கின்றது. காலேஜ் மாணவர்கள் தேவையில்லாமல் ஊ ஆ ஊ ஆ , பனை மரத்துல வவ்வாலா என்றெல்லாம் கத்துவதும் எரிச்சலாக இருக்கிறது (நமக்கு வயசு ஆயிருச்சோ)

சூசைட் பாயன்ட்டில் போகும் வழியில் இரண்டு பக்கமும் கோலாகலமாக கடைகள்! அம்மாவைத் தவிர வேறு எல்லாம் கிடைக்கும் என்று தோன்றுகிறது. சூசைட் செய்யப் போகிறவனைக் கூட இழுத்து நிறுத்தி ' சார் சாக்லேட் வாங்கிட்டு போங்க.. ஹோம் மேடு, சாப்பிட்டுக்கிட்டே குதிங்க ' என்று சொல்வார்கள் போலிருக்கிறது. சும்மா சொன்னேன்...சூ.பா வில் குதிக்க முடியாதபடி உயரமான கம்பி வேலி போட்டிருக்கிறார்கள்.அதைத்தாண்டி குரங்குகள் மட்டுமே அனாயாசமாக போகின்றன. மனிதப் பயல்கள் ஒரு லேசான பயத்துடன் கீழே எட்டிப் பார்க்கிறார்கள்.குணா பாறை என்ற ஒன்று இருக்கிறது. ஆம்..கமல் 'மனிதர் உணர்ந்து கொள்ள' என்று கத்திய அதே பாறை தான்! அங்கேயும் பாறைகளுக்குள் போக முடியாத படி வேலி போட்டிருக்கிறார்கள்! அப்படி இருந்தாலும் சில பேர் சித்தர்கள் போல உடலை சுருக்கிக் கொண்டு இரண்டு கம்பிகளுக்கு இடையே நுழைந்து உள்ளே போய் பார்க்கிறார்கள்!குணா பாறை என்றதும் உள்ளே கமல் இருப்பாரோ என்று நினைக்கும் அல்ப சினிமா புத்தி!

இரண்டாயிரம் மீட்டர் உயரத்தில் இருந்து பார்த்தால் வைகை அணை தெரிகிறது;பிறகு பெரிய பூங்கா; ஏரி; படகு சவாரி; ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகள்;சுற்றுலாப்பயணிகள்; ஒரு காபிக்கு இருபது ரூபாய் வாங்கும் ஹோட்டல்கள் ; இது தான் கொடைக்கானல். சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லாமல் இயற்கையை, பனி மலையை,பாறைகளை, கடலை, நதியை , அருவியை ரசிக்கும் கொடுப்பினை சினிமா ஹீரோ ஹீரோயின்களுக்கு(சில சமயங்களில் அரசியல் வாதிகளுக்கு) மட்டுமே இருக்கிறது. நாமெல்லாம் எங்கே போனாலும் கூட்டத்தோடு கோவிந்தா போட வேண்டி இருக்கிறது. கூட்டம் அலை மோதுகிற, வியாபார மயமாக்கப்பட்ட சுற்றுலாத்தலங்கள் அவ்வளவு அழகாக இருப்பதில்லை.


==
நீங்கள் இரவு எத்தனை மணிக்கு தூங்குவீர்கள்? ஒன்பது ?(என்ன பாஸ் விளையாடுறீங்களா?) பத்து? பதினொன்று (அவ்வளவு சீக்கிரம்?) எனக்குத் தெரிந்து சில பேர் டான் என்று எட்டரை மணி ஆனதும் தூங்கப் போய் விடுவார்கள். எட்டு முப்பத்தி இரண்டுக்கு குறட்டை சத்தம் கேட்கும். சில பேருக்கு இரவு பத்து மணிக்கு மேல் தான் வாழ்க்கையே ஆரம்பிக்கும். நாகரீகங்கள் வளர வளர நம் இரவுகள் சுருங்குகின்றன.தூங்கா நகரம் என்று மதுரையை சொல்வார்கள். இன்று எந்த நரகங்களும் சாரி நகரங்களும் தூங்குவதே இல்லை. மறுநாள் ராமன் பட்டாபிஷேகம் என்று முந்தாநாள் அயோத்தி தூங்காமல் விழித்திருந்தது என்கிறார் கம்பர். (அந்த காலத்தில் நைட் ஷிப்டா , ராத்திரி ஷோவா, இரவு நேர சொகுசு பஸ்ஸா, மிட் நைட் மசாலாவா,பத்து மணி சீரியலா ஒன்றும் இல்லை; எல்லாரும் சூரிய அஸ்தமனம் ஆனதும் சோமபானம் அருந்தி விட்டு குறட்டை விட்டிருப்பார்கள்) ஆனால் இன்று சேலம் போன்ற பெருநகர பஸ் நிலையங்களைப் பார்த்தால் ஒவ்வொரு மறுநாள் காலையிலும் யாருக்கோ பட்டாபிஷேகம் நடப்பது போலவே இருக்கிறது. ராத்திரி இரண்டு மணிக்கு பஸ் பிடிக்கும் ஏதோ ஒரு தேவை ஒவ்வொரு நாளும் யாருக்கோ இருக்கிறது. பஸ் கண்டக்டர்கள் டீ குடித்து விட்டு பெங்களூர் ஈரோடு திருப்பூர் என்று கூவிக் கொண்டிருக்கிறார்கள். உலகம் எப்போதுமே உறங்குவதில்லை என்று சொல்வார்கள் (ஒரு பக்கம் பகலாக இருப்பதால்) ஆனால் உலகம் வரை போகவேண்டாம். ஒரு நகரம் எப்போதும் முழுவதுமாக உறங்குவதில்லை. பகலுக்கும் இரவுக்கும் வேறுபாடுகள் குறைவாகவே இருக்கின்றன. சில துறைகளில் இரவுகளை விட பகல்கள் தான் மந்தமாக இருக்கின்றன. பெங்களூருவில் ராத்திரி பன்னிரண்டு மணிக்குப் பிறகும் ஹோட்டல்களில் டின்னர் கிடைக்கிறது. அத்தனை நேரம் ஆன பிறகும் சலிப்பின்றி என்ன இருக்கிறது என்று கேட்டால் 'ரொட்டி கறிநான்,ஃபிரைடு ரைஸ்' என்று ஆரம்பிக்கும் சர்வர்களை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

என்ன தான் சொன்னாலும் எனக்கு இரவு தூங்காமல் இருப்பவர்களைப் பிடிக்காது. மனிதன் பகலில் நடமாடவும் இரவில் தூங்கவும் அமைக்கப்பட்ட பிராணிகளில் ஒருவன்.நம்முடைய செயல்கள் சூரியனுடைய இயக்கத்தை ஒட்டியே இருக்க வேண்டும் என்று நம்புபவன் நான். வெளிச்சமும் வெப்பமும் இருக்கும் போது இயல்பாகவே நமக்கு வேலை செய்யும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். இரவு முழுவதும் வேலை செய்து விட்டு பகலில் தூங்குபவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் உடம்பும் மனமும் மூளையும் அதற்குப் பழகி விடுகிறது. மெல்ல மெல்ல இரவுகள் பகல்களாகவும் பகல்கள் இரவுகளாகவும் அவர்களுக்கு ஆகி விடுகின்றன. டி.வி இயங்கும் சத்தம், மிக்சி ஓடும் சத்தம்,வாகனங்களின் சத்தம், குழந்தைகளின் சத்தம் என்று எதுவுமே அவர்களை தொந்தரவு செய்யாது! அடித்துப் போட்டது போல தூங்குவார்கள். என்ன தான் இருந்தாலும் இயல்பாக நம்முடைய இளைர்களை இரவில் தூங்க அனுமதிக்காத சமுதாயத்தை நினைத்தால் சிலவேளைகளில் கோபம் வருகிறது.



==
ஆண்கள் ஒரு அறுபத்தைந்து வயதுக்கு மேல் தங்கள் ஞாபக சக்தியை மெல்ல மெல்ல இழக்கிறார்கள். சொந்த அண்ணனின் மகன் பேர் கூட மறந்து போய் விடுகிறது. ஆனால் பெண்கள் எண்பது வயதிலும் 'நீ நம்ம வத்சலாவோட நாத்தனார் புருஷனோட ஒண்ணு விட்ட சித்தப்பா பொண்ணு சுமதி தானே' என்று அசுத்துவார்கள். இந்த அபார ஞாபக சக்திக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் பெண்கள் சீரியல் பார்ப்பதும் ஒரு காரணம். காலை பதினொரு மணியில் இருந்து இரவு பதினொரு மணி வரை எத்தனை சீரியல்கள் , எத்தனை கதைகள், எத்தனை பெயர்கள்,எத்தனை சம்பவங்கள்! எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக் கொள்வது பெரிய விஷயம் அல்லவா? மகாவுக்கு கோபி புருஷன் இல்லைன்னு உண்மை தெரிஞ்சு போச்சே இனி என்ன ஆகும்? செல்வம் புது வீடு கட்டி விட்டானே, ராஜசேகர் ஏதாவது தொந்தரவு செய்வானா? வந்தனா மிளகாய் அரைத்து அம்மனுக்கு பூசி விடுவாளா? இந்த வாரமாவது துளசியின் பிரச்சனை தீருமா என்று பெண்களுக்கு தான் எத்தனை பிரச்சனைகள்?ஞாபக மறதி அதிகம் உள்ள ஆண்கள் வாரம் ஒரு முறை ஆபீசுக்கு லீவு போட்டு விட்டு அன்று முழுவதும் டி.வி சீரியல் பார்ப்பது மிகவும் நல்லது. அந்த வாரம் முழுவதும் உங்கள் ஞாபக சக்தி அபாரமாக இருக்கும் போங்கள். மானேஜரிடம் நல்ல பேர் கூட கிடைக்கும்.

பெண்களே உங்கள் பக்கம் சாதகமாகப் பேசி விட்டேன். இப்போது உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். ஃபெயில் ஆகி மானத்தை வாங்கி விடாதீர்கள்.

பொருத்துக
------------------
சீரியல்@ ஸ்பான்சர்

முந்தானை முடிச்சு@ HAMAM 
நாதஸ்வரம்@ VIVEL ACTIVE FAIR 
திருமதி செல்வம்@ FAIR N LOVELY 
தங்கம்@ LIFEBUOY 
தென்றல்@ CLOSEUP 



==
ஒரு கவிதை:-

இந்த சமுதாயம் விசித்திரமானது

பழம் பறிக்க வந்த
சிறுவர்களை சுடுகிறது
குண்டு வைப்பவர்களை
விட்டுவிடுகிறது-

கங்கைக்காக
உண்ணாவிரதம் இருப்பவர்களை சாகவிடுகிறது
காந்திக் குல்லாய் அணிந்து
உண்ணாவிரதம் இருப்பவர்களை வீடியோ எடுக்கிறது! -

நூறு ரூபாய் ப்ளேடு போட்டவனை
இரவெல்லாம் காவலில் வைத்து அடிக்கிறது
நூறு பேரை கொன்றவனை
ஏ. சி. அறைகளில் ஒருவருடம் விசாரணை செய்து விடுவிக்கிறது-

ஐநூறு ரூபாய் லஞ்சம் கேட்டவனை
ஆறுமாதம் சஸ்பென்ட் செய்கிறது
ஐநூறு கோடி ஊழல் செய்தவனை
தானைத் தலைவன் வாழ்க என்று புகழ்கிறது-

கழிவறை கழுவுகிறேன் என்று கையேந்திய
கிழவிக்கு இலவச கழிப்பறை என்ற போர்டைக் காட்டுகிறது
க்ளப்புகளில் பதினைந்து ரூபாய் தண்ணீரை
ஐம்பது ரூபாய்க்கு வாங்கி விட்டு 'தாங்
க் யூ' என்கிறது -

'அந்த' மாதிரி படம் ஒன்றில்
ஹீரோயின் எப்போது உடைகளைவாள் என்று நகம் கடிக்கிறது
தங்கை ஜீன்ஸ் அணிந்து வெளியே சென்றால்
கடிந்து கொண்டு உபதேசம் செய்கிறது-

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு -என்று
உரக்கக் கத்துகிறது
பேரப் பிள்ளைகளுக்கு மெட்ரிகுலேஷனில்
அட்மிஷன் தேடுகிறது-
பகுத்தறிவை
ப் பற்றி
பலமணிநேரம் மேடைகளில் பேசுகிறது
நல்ல நாள் பார்க்க
ஜோசியர் வீட்டுக்கு முக்காடு போட்டுக் கொண்டு போகிறது-

சொற்பமாக கள்ளநோட்டு
அடித்தவனை ஆயுள் கைதியாக்குகிறது
சுவிஸ் பேங்கில் கருப்பு பணம் பதுக்குபவர்களை
மந்திரிகள் ஆக்குகிறது
இந்த சமுதாயம் விசித்திரமானது


===
ஒரு வரைபடம்



==
ஓஷோ ஜோக்

முல்லா நசுருதீனும் அவர் மனைவியும் ஒரு நாள் ஒரு சினிமாவுக்கு சென்றிருந்தார்கள். அவர்களுக்கு கல்யாணம் ஆகி இருபது வருடங்கள் ஆகி விட்டிருந்தன.அது ஒரு வெளிநாட்டு காதல் திரைப்படம். சினிமாவை விட்டு வெளியே வரும் போது அவர் மனைவி 'என்னங்க , சினிமாவுல அவங்க ரெண்டு பேரும் எப்படி காதலிக்கிறாங்க , எப்படி ரொமான்ஸ் பண்ணறாங்க என்னவெல்லாம் பண்றாங்க அது மாதிரி நீங்க இதுவரைக்கும் பண்ணதே இல்லையே' என்றாள்

அதற்கு முல்லா 'லூசு , அப்படி பண்ணறதுக்கு அவங்களுக்கு எத்தனை பணம் கொடுக்கறாங்க தெரியுமா' என்றார்

No comments:

Post a Comment