Search This Blog

Thursday, June 23, 2011

இந்துமத வரலாற்று தொடர்-13: சாமவேதம்(பகுதி-I) சோமபானத்தைஇன்றுதயாரிக்க முடியுமா?

இந்துமத வரலாற்று தொடர்-13: சாமவேதம்(பகுதி-I) சோமபானத்தைஇன்றுதயாரிக்க முடியுமா?

by Keyem Dharmalingam
குருஜியின் அருளாசியுடன்...

இந்துமத வரலாற்று தொடர்-13 
சாம வேதம் (பகுதி-I)
சோம பானத்தை இன்று தயாரிக்க முடியுமா?

சைக்கு மயங்கி வருபவனாக இறைவனை சொல்லுவார்கள்.  இறைவனே இசை வடிவம் தான் என்றும் கூறுவார்களும் உண்டு.  இசைக்கு இத்தகைய முக்கியத்துவம் கொடுக்கின்ற பாங்கு இன்று நேற்று வந்தது அல்ல.  வேத காலம் தொடங்கிய வருகின்ற மரபாகும்.  அதனால் தான் நான்கு வேதங்களில் மூன்றாவதாக கருதப்படும் சாம வேதம் இசை வடிவமாகவே இருக்கிறது.  இறைவனான திருமால் பகவத் கீதையில் தன்னை சாம கீதமாக இருப்பவனாக குறிப்பிடுகிறான்.  சிவ பெருமானும் சாமகீதப் பிரியன் என்று போற்றப் படுகிறார்.  சாம வேதத்தின் நாத அலைகள் மனதை மட்டுமல்ல  உடலையும்  உறுக்கும் சக்கி வாய்ந்தது.  எங்கெல்லலாம் சாம வேதம் முறைப்படி ஓதப்படுகிறதோ அங்கெல்லாம் பயிர் பச்சைகள் செழிப்புடன் வளர்வதை அனுபவத்தில் காணலாம்.  இதனால் தான் சாம வேதத்தை சாமகானம், சாமகீதம், சாமபாடல் என்று இசையின் பெயரிட்டே அழைக்கிறார்கள்.


இந்த வேதத்தில் சம்ஹிதை பகுதிகளில் இருக்கும் பாடல்களில் எண்ணிக்கையை  பற்றிய கருத்து பேதங்கள் இன்று வரை நீடித்து வருகிறது.  சில சாமவேத உரையாசியர்கள் 1575 பாடல்கள் தான் உள்ளது என்று சொல்கிறார்கள்.  வேறு சிலரோ 1603 பாடல்கள் என்று சொல்லுகிறார்கள்.  பாடல்களின் எண்ணிக்கை கூடுவதாகவோ குறைவதாகவோ இருந்தாலும் அனைவரும் ஒரு பொது முடிவை ஒப்புக் கொள்கிறார்கள்.  அந்த பொது முடிவு என்னவென்றால் சாம வேதம் என்பது தனி ஒரு பிரிவாக இருந்தாலும் இதிலுள்ள பெருவாரியான பாடல்கள் ரிக் வேதத்திலிருந்தே எடுக்கபட்டிருக்கிறது என்பதாகும்சாம வேதத்திற்கென்று தனியாக கண்டெடுக்கப்பட்ட பாடல்கள் 99 பாடல்கள் தான் என்பது எல்லோரும் ஒத்துக் கொள்ளும் முடிவாகும்.

சாம வேதத்தை ஆறு வகையான சந்த வகைகளில் பாராயணம் செய்கிறார்கள்.   அந்த ஆறு வித ஒலி அமைப்பிற்கு ரதந்தரா, பிரகத், வைரூபா, வைராஜா, ஷிக்வாரா, ரைவாதா என்று பெயரிடப்பட்டுள்ளது.  பாடும் போது ஒலிகளை ஏற்றியும் சமப்படுத்தியும் இறக்கியும் பாடுவதை பொருத்து இந்த ஆறு முறைகளும் பயன்படுத்த படுகிறது.  சாமகானத்தை பாடுவதற்கு வேத காலத்தில் ஒரு நெறி பின்பற்றப்பட்டது.  அதாவது சோமரசத்தை தயாரிக்கும் போது தான் இந்த வேதத்தை ஓத வேண்டும் என்பது அந்த நெறியாகும்.

சோமபானம் என்றால் என்ன?  வேதங்களைப் பற்றியும் வேதகால மக்களைப் பற்றியும் பேச்சு எழும்பொழு தெல்லாம் சோம பானத்தை பற்றிய பேச்சு தானாக வந்துவிடுகிறது.  நம்மில் நிறைய பேர் சோம பானம் என்பது ஆதிகால சாராயம் என்றே நம்புகிறோம்.  உண்மையில் சோமபானம் போதை தருகின்ற சாராய வகையை சார்ந்தது தானா அல்லது உடலுக்கு  தெம்பூட்டக்கூடிய சக்தி மிக்க பானங்களின் ஒன்றோ என்பது பற்றி ஆராய்ச்சி  செய்யவும் விடைகானவும் அனைவருக்கும் ஆவல் எழும்புவது இயற்கைதான்.  அந்த ஆவலை நிவர்த்தி செய்து கொள்ள வேதங்களை நுண்ணியமாக ஆராய்ந்த போது அது போதை தரும் பானம் தான் என்ற அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது.  இதில் என்ன அதிர்ச்சி இருக்கிறதுசோம பானம் என்றாலே போதை வஸ்து என்று தானே நம்பிக் கொண்டிருக்கிறோம் அது அப்படி அல்ல என்று தெரிய வந்தால் அதிர்ச்சி ஏற்படலாம் இதில் ஒன்றுமே வியப்பு இல்லையே என்று சிலர் எண்ணக்கூடும்.

பொதுவாக நாம் பூஜைகள் போன்ற புனிதமான காரியங்களுக்கு மது மாமிசங்களை படையல் செய்வதையோ பயன்படுத்துவதையோ கீழ்தரமானதாகவே கருதி வருகிறோம்.  கிராம புற தேவதைகளான ஐயனார், வீரன் போன்றவர்களுக்கு சாராயம், சுருட்டு படைத்து வழிபடுவதை அனாகரீகம் என்றே கருதுகிறோம்.  நாம் இன்று கீழ்தரமாக எண்ணுவதும் அனாகரீகம் என்று கருதுவதும் ஒரு காலத்தில் வழிபாட்டின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது.  காலம் செல்ல  செல்ல மக்களின் மனதும் அறிவும் வளர வளர வழிபாட்டு முறைகளில் பல வித மாறுபாடுகள் ஏற்பட்டு இருக்கிறது.  இந்த உண்மையை சுலபமாக நாம் மறந்து விடுகிறோம்.  இன்று நாம் செய்கின்ற வழிபாடுதான் நாகரீகமானது வேதங்களின் அங்கிகாரம் பெற்றது என்று கருதிக் கொண்டு மாறுபட்ட வழிபாட்டு முறைகளை கேலி செய்து வருவது விந்தையிலும் விந்தை அல்லவா,

சோமன் என்ற வார்த்தை சந்திரனை குறிக்கும்.  அதே போன்றே சோமபானம் என்ற வார்த்தையும் சந்திரனின் ரசம் என்ற அர்த்தத்திலேயே அழைக்கப்படுகிறது.  இதனால் இப்பானம் நேரிடையாக சந்திர கிரகணங்களை கிரகித்து உருவாக்கப்பட்டது என்ற பொருளை ஏற்றுக் கொள்ள முடியாது.  சந்திரன் உதயமாகி நடுவானத்திற்கு வருகின்ற பொழுது இந்த பானம் தயாரிக்கப் படுவதினாலும் சோமக் கொடி என்ற மூலிகையின் வேர் பகுதியை பயன்படுத்த உருவாக்கப்படுவதினாலும் இதற்கு சோமபானம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.  வேதங்களில் சோமபானம் தயாரிக்கும் முறை மிக அழகுடன் விவரிக்கப்பட்டுள்ளது.  

சோமக் கொடிகள் செழித்து வளர்ந்திருக்கும் மலையடிவாரத்திற்கு சென்று அதன் வேர்பகுதிகள் சேகரிக்கப்படும். அப்படி சேகரிக்கப்பட்ட வேர்கள் ஆடுகள்  இழுக்ககூடிய அழகிய சிறு வண்டிகளில் வைத்து ஊர் புறத்திற்கு  கொண்டு வரப்பட்டு நேர்த்தியான முறையில் குறிப்பிட்ட பகுதியில் அடுக்கி வைக்கப்படும்.  சோம பானத்தை சுலபமாக எல்லோரும் தயாரித்து விட முடியாது.  அதை தயாரிப்பதற்கு 20-லிருந்து 25-வயது நிரம்பிய இளைஞர்கள் 12-பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  அவர்கள் 12-நாள் கடுமையான விரதம் இருக்கவேண்டும்.  முதல் மூன்று நாட்கள் ஒரு வேளை உணவு மட்டுமே அருந்த வேண்டும்.  அதை தொடர்ந்து வரும் ஆறு நாட்கள் ஒரு வேளை  உணவையும் சமைக்காமல்  பிச்சை எடுத்து உண்ண வேண்டும்.  கடைசி மூன்று நாட்கள் உணவு எதுவும் உட்கொள்ளாமல் சோமபானம் தயாரிக்க ஆரம்பிக்க வேண்டும்.  சோமச் செடிகளின்  தண்டுகளையும் இலைகளையும் விறகுகளாக்கி மண்பான்டத்தில் சுத்தமான நீரை நிரப்பி சோம வேர்களை அதில் வைத்து காய்ச்ச வேண்டும்.  இப்படி காய்ச்சும் பொழுது தேர்ந்தெடுக்கப் பட்ட வேத விற்பன்னர்கள் சூழ்ந்து நின்று சாம வேதத்தை கானம் செய்வார்கள்.  வேத கானத்துடன் தயாரிக்கப்படும் சோமரசம் யாகங்களில் படைக்கப்பட்டு பங்கு பெற்ற அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.


சோமபானத்தை வேதகால மக்கள் யாகங்களின் போது மட்டுமே பயன்படுத்தினர்.  போதை  தருகிறது என்பதற்காக மற்ற நேரங்களில் அது பயன்படுத்தப் படவில்லை.  காரணம் என்னவென்றால் சோமபானம் தெய்வங்களுக்குய புனிதப் பொருளாக கருதப்பட்டது.  சோமன் என்ற சந்திர தேவன் பிரளயம் ஏற்பட்டு உலகமெல்லாம் அழிந்த பிறகும் நீடித்து நிலைத்திருப்பவனாக கருதப்பட்டான் அப்படி நிலையான சந்திர தேவன் தருகின்ற சோமபானம் அதை அருந்துபவர்களையும் நிலையாக ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும் என்ற நம்பிக்கை அக்கால மக்களிடத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தது.  அந்த நம்பிக்கையின் அடிப் படையிலேயே ஆரோக்கியம் தரும் சோமத்தை தயாரிக்கும் பொழுது ஆனந்தத்தை தரும் சாமவேதம் ஓதவேண்டும் என்ற நெறி நடைமுறையில் இருந்தது.

இனி சாம வேத கருத்துகளை சிறிது சிந்திப்போம்.  இந்த வேதத்தின் முதல் பாடல் அக்னி தேவனை ஆராதனை செய்கிறது.  சோமரசம் உற்பத்தியாக அக்னி பெரும்பங்கு ஆற்றுகிற தல்லவா.  அதனால் அவனுக்கு அர்ப்பணம் செய்யும் முறையிலேயே இப்பாடல் அமைந்திருக்கிறது.  இந்த முதல் பாடல் 10 பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளது.  பரத்வாஜ மகரிஷி 5 பகுதி களையும் மேதாதிதி, உசானா, புருமீதா, வத்ச, வாமதேவர் ஆகியோர்கள் ஒவ்வொரு பகுதியையும் பாடி இருக்கிறார்கள்.

இனி அந்த பாடலின் முழுக்கருத்தையும் பார்ப்போம்.
அக்னியே இங்கே வா.  உனக்காக ஆடம்பரமான விருந்தொன்று காத்திருக்கிறது.  உனது பெருமைகளை ஒன்றன் பின் ஒன்றாக நாங்கள் அடிக்கி கொண்டே போகிறோம்.  எல்லா தெய்வங்களுக்கும் நீனே தூதுவனாக செயல்படுகிறாய்.  உன் மூலமாகத்தான் தெய்வங்கள் எல்லா விதமான ஆகுதிகளையும் எடுத்துக் கொள்கிறது.  இத்தகைய தகுதி வாய்ந்த நீ எங்களை காக்க வேண்டும்.  புனிதமான தர்பை புல் மூலம் உனக்கு இருக்கை செய்யப்பட்டுள்ளது.  அதில் வந்து நீ கம்பீரத்துடன் அமர்ந்துக் கொள். மனிதர்கள் வாழுகின்ற பூமியெங்கும் சடங்குகள் நடத்தப்படுகின்றன.  அந்த சடங்குகளில் புனிதமான நெருப்பே எப்பொழுதும் மூட்டப்படுகிறது.  அந்த நெருப்பு அக்னி தேவனான உனது அழகிய வடிவமென்றோ உனது திவ்யமான நெருப்பு சரீரத்தில் தான் நாங்கள் எல்லா தேவர்களையும் தரிசனம் செய்கின்றோம். அக்னியே நீ தெய்வங்கள் அனைத்திற்கும் பிரதிநிதியாகிறாய்.  அதனால் செல்வங்கள் அனைத்திற்கும் நீயே அதிபதி.  இந்த தெய்வீக திருச்சடங்கு குற்றமின்றி அமைய எங்களுக்கு துணை செய். எங்களை நோக்கி வரும் எல்லாவிதமான துன்பங்களையும் பகைவர்களையும் வதம் செய்வது நீதான்.  நாங்கள் பெற்றிருக்கும் செல்வங்களெல்லாம் உன்னுடையது தான்.  இப்படி அனைத்தையும் தரும் உன்னை துதிக்கவும் வணங்கவும் இந்த ஒரு பாடல் போதுமா போதாது அதனால் உன்னை வணங்கும் பாடல்கள் பெருகி கொண்டே போகிறது.  ஒளிமயமான தேகத்துடன் வருகின்ற தேவா எங்களது துதிகள் அனைத்தும் உனக்கே அர்ப்பணம்.

அக்னியே புகழுக்கு தகுதியானவனே நீயே எங்களது  இனிய விருந்தினர்.  நம்பிக்கைக்குரிய நண்பன்.  அறிவை நாங்கள் அடையும்  பாதையை எங்களுக்கு காட்டும் வழிகாட்டி நீ.  அறிவுப் பாதையில் நாங்கள் சுகமாக பயணம் செய்ய  குதிரைகள் பூட்டிய தேர்போல் நீ உதவுகிறாய் எங்களை சுற்றி கொடிய பகைவர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் கண்களிலிருந்து வெறுப்பும் பொறாமையும நிரம்பி வழிகிறது.  அவர்களின் தாக்குதலிலிருந்து எங்களை பாதுகாவல் செய்.  உன்னை போற்றுவதில் உண்மையான சொற்களே பயன்படுகிறது.  அவற்றில் எதற்காக வாய்மை இல்லாததை சேர்க்க வேண்டும்.

உனை போற்றும் உண்மைகள் எங்கள் இதய ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கிறது.  அந்த ஊற்றின் உருவகமாக சோமபானம் இருக்கிறது.  சோமரசத்தை அள்ளி குடித்து எங்களுக்கு துணை செய்ய துள்ளி குதித்துவா. உனக்கு பிரியமானவர்கள் நாங்கள் தான்.  உன்னை புகழ்வதால் எங்களது இதய மாசுகள் அகன்று புனிதத்தை அடைகின்றன.  எங்களது விருப்பங்களும் நிறைவேறுகின்றன.  எங்கே நீ தூரத்திலிருந்தாலும் உன்னை அழைக்கும் எங்கள் குரல் அங்கேயும் செவிகளில் வந்து விழும்.  நீ தொலைவில் இருந்தாலும் சொர்க்கத்தில் இருந்தாலும் எங்கள் குரலுக்காக ஒரே பாய்ச்சலில் அருகில் வந்து விடுவாய்.

அக்னியே உலக மக்களின் நலன் கருதி அதர்வ முனிவர் யாக  நெருப்பை முதல் முதலில் மூட்டினார்.  உயர்ந்ததும் மேன்மை யானதுமான சாயக் கிரிகைகளை பயன்படுத்தி  அவர் உன்னை எழுப்பினார்.  அந்த நேரம் முதல் இந்த நேரம் வரை நீ எங்களுடன் இருக்கிறாய். அக்னியே நீ இருட்டை மட்டும் விலக்குபவன் அல்ல.  அந்த இருட்டை அழிப்பவனும் இல்லாது செய்பவனும் நீயே ஆகும்.  உனது அழகிய வடிவத்தை தரிசனம் செய்ய நாங்கள் அனைவரும் கூடி இருக்கின்றோம்.  உனது தெய்வீக திவ்ய மங்கள திரு உருவை எங்களுக்கு காட்டு.  எல்லாத் துன்பங்களிலிருந்தும் எங்களை பாதுகாக்கும் அக்னி தேவனே! எங்கள் முன் நாங்கள் பார்க்கும் படி அன்புடன் வந்து காட்சி தா.  எங்களுக்கு அறிவை கொடுத்து ஞானத்தை வளர்க்கும் பேராசான் நீ.  எனவே எங்கள் அறிவுக்கனல் மூண்டெறிய எங்கள் முன் தோன்று.

இந்த பாடல் வரிகள் மூலம் வேதகால மக்கள் அழிந்து போகக் கூடிய உலக பொருட்களை மட்டும் தெய்வங்கள் தராது அதையும் தாண்டிய நிலையிலுள்ள அழியாத சந்தோஷத் தையும் மன சாந்தியையும் தரவல்ல அறிவையும் ஞானத்தையும் தேவதைகள் தரும் என்று நம்பியது தெளிவாகிறது.  இனி சாம வேதத்தின் இரண்டாவது சம்ஹிதையிலுள்ள இந்திரனை துதிக்கும் ஒரு பாடலை பார்ப்போம்.

உலகிலுள்ள அனைத்து உயிர்களும் இந்திரனை வணங்குகின்றன, வாழ்த்துகின்றன.  நமக்கு கிடைத்திருக்கும் பசுகளும் செல்வங்களும் அவன் தந்ததே ஆகும்.  பலம் மிகுந்த காளையை போல் காட்சி தரும் இந்திரன் ஒருவனே நமக்கெல்லாம் தலைவன் ஆவான்.  சோமபானத்தைக் கொண்டு நடத்தப்படும் தெய்வீகம் சடங்குகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.  இந்த நேரத்தில் நமக்கெல்லாம் வழிகாட்டும் தலைவனாகவும், அரவணைக்கும் தாயாகவும், அனுக்கிரகம் செய்யும் தெய்வமாகவும் திகழும் தன்னிகரற்ற இந்திரனை போற்றி பாடுவோம்.  அவனைப் பாடுவதற்காக அடிவயிற்றிலிருந்து பெருங்குரலை எழுப்புங்கள்.  இந்த குரல் ஓசைகள் நமது ஆத்மாவோடு இணையட்டும். நூறு யாகங்களை செய்து பெரும் ஆற்றல் பெற்ற இந்திரன் என்ற தேவாதி தேவா உன்னை தவிர இத்தகைய ஆற்றலை வேறு யார் பெறமுடியும்.  அதனால் தான் எல்லா தெய்வங்களும் உன் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன.  நீ அவர்களின் தன்னிகரற்ற தலைவன் அல்லவா.  உன்னை புகழ்ந்து பாடும் சொற்களால் நீ மட்டுமா சந்தோஷப்படுகிறாய் அந்த சொற்களை பயன்படுத்தும் நாங்களும் தான் மகிழ்வென்னும் பால் குடத்தில் மூழ்கி ஆனந்தக் களிப்படைகிறோம்.  உனது கருணை என்னும் பெரிய கவசங்கள் எங்களை பாதுகாக்கும் போது நாங்கள் யாரை பார்த்து பயப்பட போகிறோம்.  யார் தான் எங்களுக்கு துன்பம் தர இயலும்.  உனது அருள் பார்வை ஒன்றே எங்களது துயரங்களை தூர விலக்கி விடும். தேவர்களை தலைவனாக இருக்கும் இந்திரன் மழையின் அதிபதி.  ஆகாயத்திலுள்ள வண்ண முகில்களை தேர்களாக்கி பவனி வந்துகொண்டிருக்கும் ஆற்றல் மிகுந்த அந்த தெய்வத்தின் பெருமைகளை எடுத்துரைத்த நமது குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்.  அந்த தேவனின் காதுகளில் மின்னல்கள் குண்டலங்களாக ஒளி வீசுகின்றன.  அவன் விரல் அசைவுகளில் இடி முழக்கங்கள் கட்டுப்பட்டு கர்ஜனை செய்கின்றன.

அவனது அருளால் இந்த பூமி நனைந்து குளிர்கிறது.  பச்சை பசுஞ் செடிகள் அவன் அருளுக்கு தலை சாய்த்து வணக்கம் செலுத்துகிறது. உயர் தகுதி உடைய ரிஷிகளின் புதல்வர்களே நீங்கள் தெய்வங்களின் புகழைப் பாடி கொண்டாடுங்கள்.  உங்கள் கொண்டாட்ட கோலாகலத்தில் நெருப்பின் நாக்குகள் ஜொலிக்கட்டும்.  உங்கள் ஆத்மாக்கள்  அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணையட்டும்.  இந்த தெய்வம் நாம் விரைந்து செல்வதற்கு தேர்களையும், குதிரைகளையும் கொடுத்திருக்கிறது.  நமது சரீரம் ஊட்டம் பெறுவதற்காக ஏராளமான பால் பசுக்களை தந்திருக்கிறது.  நமது வாழ்வு முடிவு பெற்று மரணத்தின் வாசலை நாம் தொடுகின்ற பொழுது சொர்க்கத்தையும் நமக்காக தருகிறது.

விராடன் என்ற கொடிய அசுரனை அழித்து நம்மையும் தேவர்களையும் காத்தவன் இந்திரனே ஆவான்.  அப்படி காத்த அவனை பாராட்டுவது நமது கடமை அன்றோ புனிதமான சடங்குகளின் போது தேவர் தலைவனை பாரட்ட புதிது புதிதான பாடல்களை அமைத்து அவனுக்கு பரிசாகக் கொடுப்போம். வல்லமை படைத்த இந்திரனே! நீ மழையை கொடுத்து மண்ணை வளப்படுத்தி நாங்கள் கணக்கில் அடங்காத செல்வங்களை பெற காரணமாக அமைகிறாய்.  இத்தகைய செயல்களை தனி ஒருவனாக செய்கின்ற ஆற்றல் உனக்கு உண்டு என்றாலும் பல தேவதைகளுக்கு புகழ் வந்து சேரவேண்டும் என்பதற்காக பணிகளை பங்கிட்டும் கொடுக்கிறாய். நாம் புனிதமான முறையில் சடங்குகளை செய்தால் இந்திரன் இன்பம் அடைகிறான்.  ஏனென்றால் இந்தப் புனித சடங்குகள் இந்திரனை வளரச் செய்கிறது.  வளம் பெறச் செய்கிறது.  புயல் காற்றாக இந்த உலகத்தை அவன் வலம் வருகிறான்.  தனது புன்னகை என்னும் இடி முழுக்கங்களால் தேவர்கள் வாழும் சொர்க்கத்தையும் அதிரச் செய்கிறான்.

இந்திரனே! அனைத்து செல்வங்களுக்கும், அனைத்து வளங்களுக்கும் நீயே தலைவன்.  உன்னை போல நாங்களும் அந்த நிலையை அடைய எங்களுக்கு உதவுவாயாக.  உன்னை துதித்துப்பாடும் அனைவரின் இல்லங்களிலும் பசுக் கூட்டம் நிறையட்டும்.  நமது சடங்குகளில் வளர்கின்ற நெருப்பு இந்திரனின் இதயத்தை குளிர்விக்கிறது.  சோமபானத்தின் தலைவனான அவன் அதை தயாரிக்கும் உங்களுக்கு அன்பு மிகுதியால் பல நன்மைகளை குவித்து தருவான்.  தேவர்களின் தலைவா!  இது உனது பானம் உயர்ந்த முறையில் தயாராகி விட்டது.  கோவைப் பழம் போல் சிவந்திருந்தாலும் உறுதி மிக்க உனது உதடுகள் சோம ரசத்தை ருசி பார்க்கட்டும்.  இதன் இனிமை உன்னை பரவசப்படுத்தும்.  உன் மூலமாக சோமபானத்தை பெற்றுக் கொள்ளும் மற்ற தேவதைகளும் எங்களை ஆசிர்வதிக்கட்டும்.  உனது கட்டளையை பெற்று அந்த தேவர்கள் எல்லா உதவிகளையும் எங்களுக்கு செய்யட்டும்.  எங்களை பயம் என்ற உணர்விலிருந்து காப்பாற்றும் இந்திரனே உன்னுடன் சேர்ந்து நாங்களும் இந்த ரசத்தை அருந்துகிறோம்.

வருணன் நமக்கு அறிவாற்றலை வாரிவழங்கிறான்.  நமது ஞானத்தையும் வளர செய்கிறான்.  நாம் இன்று பெற்றிருக்கும் அறிவு எல்லாமே அவனிடமிருந்து வந்தவைகள் தான்.  அவனே தான் நமது ஞான குரு.  அவன் நமது அருகாமையில் இருக்கும் பொழுது அறியாமை என்ற அரக்கன் நம்மை தொட்டு விட முடியுமா.  தமது ஆசை விரல்களால் நம்மை சுட்டு விட முடியுமா.  மித்திரன், ஆரியமன் என்கின்ற தேவதைகளும் நம்மை பாதுகாக்கின்றன.  இவர்கள் நம்மை காக்கும் பொழுது வேறு எந்த சக்தி நம்மை சாகடிக்க முடியும்.  வெற்றி கொள்ள முடியும். வாகை சூடுதல் என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் நம்மை அனுகாது. நம் ஆசை என்னும் அம்பு எதன் மீது அடிக்கடி பாய்கிறதோ குதிரைகள் மீதும், தேர்களின் மீதும் தானே இவைகள் ஏராளமாக நமக்கு வேண்டும் என்று ஆசைபடுகிறோம்.  அந்த ஆசைகள் நியாயமானவைகளாகும்.  நாம் இந்த பூமி எங்கும் பறந்து விரிவதற்கு இந்த ஆசைகளே நிலக்கலங்கள் ஆகும்.  எனவே அந்த ஆசைகள் நிச்சயம் நிறைவேரும்.  இதை நிறைவேற்றி கொடுக்கும் தெய்வங்கள் அனைத்துமே நமது அருகில் உள்ளன.  அவர்களுக்கு அக்னியின் மூலமாக நாம் கொடுக்கும் ஆகுதிகள் அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்கிறது.

இந்த பாடலை ஊன்றி கவனிக்கும் பொழுது ஒரு உண்மை நமக்கு தெரிகிறது.  இந்திரன் என்பவன் தேவர்களுக்கு தலைவனாகவும், செல்வங்களுக்கு அதிபதியாகவும், வெற்றிகளின் பிறப்பிடமாகவும், தன்னிகரற்ற ஆற்றல் பொருந்தியவனாகவும் இருந்தாலும் கூட அவன் மனிதர்களோடு சரி சமமாக எளிய நிலையில் வரக் கூடியவனாகவே கருதப்பட்டிருக்கிறான்.  உன்னுடன் சேர்ந்து நாங்களும் சோமரசம் அருந்துகிறோம் என்ற பாடலின் கருத்து நமக்கு இதை தெளிவாகப்புலப்படுத்துகிறது.  அதாவது கடவுள் உயரிய நிலையில் இருந்தாலும் அன்பினால் தனது நிலையிலிருந்து கீழிறங்கி வந்து நம்மோடு பழகுவான் என்ற வேதகால மக்களின் நம்பிக்கை ஆத்ம வளர்ச்சிக்கு முட்டு கட்டையாக அமையும்.  இறை அச்சமாக இல்லாமல் இறை பக்தியாக வளர்ச்சி அடைந்திருப்பதை கவனத்துடன் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment