Search This Blog

Sunday, April 19, 2020

ஜி.நாகராஜன் ஒரு மானுட கலைஞன்




நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் புதிய திசைகளில் விஸ்தரித்தவர் ஜி. நாகராஜன். அதுவரையான, தமிழ் எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம்! வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான  சகல நியாயங்களோடும் கௌரவங்களோடும் வாழும் உலகமது” – 
சி. மோகன்

ஜி.நாகராஜன் மதுரையில் செப்டெம்பர் 1, 1929 ஆம் தேதியில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஏழாவது குழந்தை. தந்தை கணேச அய்யர் வழக்கறிஞர். பழனியில் வழக்கறிஞர் தொழிலை செய்துவந்தார். இவருக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள் உண்டு. இவர் மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் இருந்த தாய்மாமன் வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு வரை திருமங்கலம் பி.கே.என். பள்ளியில் படித்தார். பின் பழனியில் 10 மற்றும் 11 வகுப்புகளை முடித்தார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியில் படித்து பல்கலைகழக முதல் மாணவராக வெற்றி பெற்றார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அதற்கான தங்கப்பதக்கத்தை அறிவியல் மேதை சி.வி.ராமிடமிருந்து வாங்கினார். மதுரைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் முதுகலைப் படிப்பையும் அங்கு படித்துத் தேர்ச்சி பெற்றார்.காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அதன் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.1959 ஆம் ஆண்டு இவரும் ஆனந்தா என்பவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனந்தா தீ விபத்து ஒன்றில் இறந்து போனார். பின்னர் 1962ல் நாகலட்சுமி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
அரசியல் ஈடுபாடு
இவர் சென்னையில் பணியாற்றிய காலகட்டத்தில் அவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. இடதுசாரிக் கொள்கைகளில் கவரப்பட்ட இவர் மதுரையில் கல்லூரியில் பணியாற்றிய போது இடதுசாரி கட்சிக்கான அரசியலில் முழுநேர ஈடுபாடு ஏற்பட்டது. கம்யூனிச சிந்தனையாளர்கள் பலருடனும் தொடர்பு வைத்துக் கொண்டார். கல்லூரியில் மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கிய இவரை ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்காவிற்கு அனுப்ப கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் அவர் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து வேலையை துறந்து முழுநேர கட்சி ஊழியராக ஆனார். தனியார் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபடி அவர் கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
1952 முதல் இவர் திருநெல்வேலிக்கு சென்று பேராசிரியர் நா.வானமாமலையின் தனிப்பயிற்சிக் கல்லூரியில் வேலை செய்யத் தொடங்கினார். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் முதலிய எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டார். 1956ல் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் கட்சிப் பொறுப்பை விலக்கிக் கொண்டார்.
அதன் பிறகு மதுரைக்கு திரும்பி தனிப்பயிற்சிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். கடைசிக் காலத்தில் மார்க்ஸிய கோட்பாட்டில் முற்றிலும் நம்பிக்கை இழந்த இவர், மார்க்ஸிய எதிர்ப்பாளராக மாறினார். மார்க்ஸியம் மானுட எதிர்ப்புத்தன்மை கொண்டது என்று எண்ண ஆரம்பித்தார்.
படைப்புகள்
இவர் முறையாக எழுதியவர் அல்ல. ஆங்காங்கே எழுதி எவரிடமாவது கொடுத்துவிட்டுச் செல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது. 1950 முதலே சிறுகதைகள் எழுதியிருக்கிறார். 1957ல் ஜனசக்தி மாத இதழில்அணுயுகம்என்ற கதையை எழுதியதும் புகழ் பெற்றார்.பித்தன் பட்டறை என்ற பதிப்பகம் வழியாககுறத்திமுடுக்குஎன்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளேஇவரது புகழ் பெற்ற நூல். “கண்டதும் கேட்டதும்என்ற சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் “With fate conspires” என்ற ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். மாணவர்களுக்காக காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறார்
நாவல்கள்[தொகு]
•             நாளை மற்றும் ஒரு நாளே,
•             குறத்தி முடுக்கு.
சிறுகதைகள்[தொகு]
•             எங்கள் ஊர்
•             டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
•             யாரோ முட்டாள் சொன்ன கதை
•             தீராக் குறை
•             சம்பாத்தியம்
•             பூர்வாசிரமம்
•             அக்கினிப் பிரவேசம்
•             நான் புரிந்த நற்செயல்கள்
•             கிழவனின் வருகை
•             பூவும் சந்தனமும்
•             ஜீரம்
•             போலியும் அசலும்
•             துக்க விசாரனை
•             மனிதன்
•             இலட்சியம்
•             ஓடிய கால்கள்
•             நிமிஷக் கதைகள்
இறுதி
கம்யூனிசக் கொள்கைகளில் ஏமாற்றம் அடைந்த காலகட்டத்தில் இவருக்குப் போதைப் பழக்கம் ஏற்பட்டது. கடைசியில் நோயுற்று பிப்ரவரி 19, 1981 ஆம் தேதியில் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார்.
ஜி.நாகராஜன்-விளிம்புகளை வரைந்த வாத்தியார்


இன்று எழுத்தாளர் ஜி.நாகராஜன் அவர்களின் பிறந்தநாள். வரலாற்றின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களை அவர்களின் மறைவுக்கு நெடுங்காலத்தின் பின்னே கொண்டாடுவது தமிழ் மரபாகிவிட்டது. அந்த மரபின் படி மறைந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் மறுவாசிப்பு செய்யப்பட்டு அவரின் எழுத்துக்கள் மீது வாசக வெளிச்சம் பட்டது.
இதே நாள், செப் 1 (1929) அன்று பழநியில் வழக்கறிஞர் கணேசனின் மகனாக பிறந்த நாகராஜன் அவருக்கு ஏழாவது பிள்ளை. மதுரையில் உள்ள தாய்மாமன் வீட்டில் தங்கி முதுகலை வரை படித்த நாகராஜன் காரைக்குடி கல்லூரியில் பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின் பல்வேறு வேலைகள் செய்த அவர் இறுதியில் டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். நாகராஜன் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தால் அப்படியே மனதுக்குள் பதிந்துவிடும் என்ற பெயருண்டு. அந்தக்கால மதுரை மாணவர்களின் ஹீரோவாக இருந்தார்.
ஜி.நாகராஜன் எழுத்திலும் இயல்பிலும் சண்டமாருதனாகத்தான் இருந்தார்.காற்றைக் கட்டிப்போட முடியாது என்கிற அறிவியல் உண்மை தெரிந்தே கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர பணியாளராக அவரை நியமித்தார்கள். எழுத்தாளர்கள், எழுத்திலும் கூட தொடத்தயங்கிய பாத்திரங்களை யதார்த்தத்துடன் படைத்தளித்தவர் நாகராஜன். விலைமாது, பிட்பாக்கெட்கள்,திருடர்கள்  என அவரின் படைப்புலகம் உலக வாழ்வின் இருண்ட முகங்களை அவைகளின் அறங்களுடன் காட்சிப்படுத்தியது.
அவர் 'குறத்தி முடுக்கு' மற்றும் 'நாளை மற்றும் ஒரு நாளே' ஆகிய குறு நாவல்களும் 17 சிறுகதைகளுமே எழுதியுள்ளார். அதே போல ஆங்கிலத்தில் கட்டுரைகளும், ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்.
 அவரின் படைப்புகளில் ரசிக்கப்பெற்ற சில வாசகங்கள்.
"உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் சம ஆயுள்."

"மனிதனைப் பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால்மனிதன் மகத்தான சல்லிப்பயல்என்றுதான் சொல்வேன்." 

"தனது கலைப் படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு, பனம்பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள்."

"‘மனிதாபிமானஉணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை. மனிதத் துவேஷ உணர்வும் சிறந்த இலக்கியத்தைப் படைக்க வல்லது. இல்லையெனில்மேக்பெத்என்ற நாடகமோகலிவரின் யாத்திரைஎன்ற நாவலோ உருவாகியிருக்க முடியாது."

"மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்று குறையும்."

" தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்." 

"மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்து கிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய் குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன." 

"எந்தச் சமுதாய அமைப்பிலும் சிறப்புச் சலுகைகள் அனுபவிக்கும் ஒரு சிறு கூட்டம் இருந்தே தீரும். இல்லையெனில் அவ்வமைப்பு சிதைந்துவிடும்." 

1963-ல் தனது 'பித்தன் பட்டறை' வெளியீட்டகம் மூலம் குறத்தி முடுக்கு நாவலை வெளியிட்ட நாகராஜன் அதன் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"நாட்டில் நடப்பைதை சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால் "இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது" என்று வேண்டுமானால் கேளுங்கள்; "இவையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?" என்று கேட்டு தப்பித்து கொள்ளப்பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவு சொல்ல முடியவில்லையே என்றுதான் வருத்தம்."
இதுதான் ஜி.நாகராஜன்!
சிதையில் படுத்தால்தான் குளிர் அடங்கும்’ – ஜி. நாகராஜன்
ஜி.நாகராஜன் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்

ஜி.நாகராஜன் நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். அவரைப்பற்றிய என் முழுமையான மதிப்பீட்டை எழுதியிருக்கிறேன். அது நான் நவீனத்தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை என்ற பேரில் இருபது எழுத்தாளர்களைப்பற்றி எழுதிய ஏழு நூல்களில் ‘நவீனத்துவத்தின் முகங்கள்’ என்ற நூலில் உள்ளது
நாகராஜனின் கசந்த அங்கதம் பற்றியும் எதிர்மறை வாழ்க்கைநோக்கு பற்றியும் விரிவாக இங்கே பேசவில்லை. நீங்கள் கோரியபடி அவரது பாலியல்சித்தரிப்பு ஏன் முக்கியமானது என்று சொல்கிறேன். அவர் பாலுறவை சித்தரிக்கிறார். ஆனால் அந்தச் சித்தரிப்பு மேலோட்டமான பரபரப்பை அல்லது ஈர்ப்பை மட்டும் உருவாக்குவதில்லை. அதை வாசகன் கடந்தானென்றால் நுட்பமான கண்டடைதல்கள் வழியாகச் செல்லமுடியும்
’நாளை மற்றும் ஒரு நாளே’ நாவலில் மீனாவை கந்தன் ஒரு விபச்சார விடுதியில்தான் கண்டுகொள்கிறான். விலைகொடுத்து வாங்குகிறான். அவளை விபச்சாரத்துக்கு அனுப்பிச் சம்பாதிப்பதுதான் அவன் நோக்கம். அவள் சம்பாத்தியத்தில்தான் வாழ்கிறான். அவளை இன்னொருவருக்கு விற்றுவிடவும் எண்ணம் கொண்டிருக்கிறான், அவளுக்கு நல்ல ஒரு ஏற்பாட்டைச் செய்வதற்காக.
ஆனால் அவன் அவளுடன் உடலுறவு கொள்ளும் சித்தரிப்பிலுள்ள உரையாடலைக் கவனியுங்கள். ’அக்கா வீட்டுக்கு கண்டவனும் வருவானே , இப்பிடித்தான் ரொங்கிப் படுத்திருப்பியா?” என்கிறான். அவளுடன் பிற ஆண்கள் உறவுகொள்கிறார்கள் என்பதுதான் அவனுக்கு அப்போது முக்கியமாகப் படுகிறது. அது அவனை உள்ளூர அரிக்கிறது. பெண்ணை தன் உடைமை எனக் கருதும் ஆதி மிருகம்.
அவள் எத்தனை நுட்பமாக அதைப்புரிந்துகொள்கிறாள். ‘அக்கா வீட்டுக்கு கண்டவனும் வரமாட்டான். ஒருமாதிரி டீசண்டானவங்கதான் வருவாங்க’ என்கிறாள். ஆண் மிருகத்திற்கு ஒரு துண்டு மாமிசம்.
உடலுறவு நடக்கிறது. ‘தலையணை வச்சுக்கவா?’ ‘வேண்டாம். சரியா இருக்கு’ கூடவே உள்ளங்களும் உரையாடிக்கொள்கின்றன. ‘எப்டிப்பட்டவங்க வருவாங்க?’ என்கிறான். அவள் நுணுக்கமாகச் சொல்கிறாள். ‘காலேஜ் பசங்க வருவாங்க’. அதாவது அவள் அவனுக்குச் சமானமாகப் பொருட்படுத்தக்கூடியவர்கள் வருவதில்லை. இரண்டு விளையாட்டுக்கள்!
மொத்த நாவலையும் இப்படியே வாசித்துக்கொண்டே செல்லலாம். மீனா தன்னம்பிக்கை கொண்ட உற்சாகமான அடாவடியான பெண். ஆனால் உடலுறவு முடிந்து கந்தன் திரும்பிப்படுத்தால் அவள் அழுதுகொண்டிருக்கிறாள். அது மனஅழுத்தம் கொண்ட பெண்களின் இயல்பு. [ஹென்றி மில்லர் அற்புதமாக அந்த பின்மனநிலையை எழுதியிருக்கிறார். நெக்ஸஸ் நாவலில்] உண்மையில் மீனா உள்ளூர துயரமான மனச்சோர்வு கொண்ட இன்னொரு பெண்.
’குறத்திமுடுக்’கில் ‘ஏன் உதட்டிலே முத்தமிடக்கூடாதுன்னு சொல்றாங்க?” என்று தங்கம் அவனிடம் கேட்கிறாள். ‘தெரியலை’ என்கிறான். அவளுடைய நோய் தனக்குத் தொற்றிவிடுமெனும் அவநம்பிக்கை அது என்று சொல்லவில்லை. பெண்ணை புணர்கையிலேயே அவளை வெறுக்கும் விபச்சார மனநிலையின் வெளிப்பாடு அது
அவன் அவளை அள்ளி உதட்டில் முத்தமிடுகிறான். தங்கமும் அவனும் காதல்கொள்ளும் தருணம் அது. மறைந்த நண்பர் குவளைக்கண்ணன் அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி ‘வச்சாண்டா பாரு… அவன் அறிஞ்சவண்டா’ என்று குதூகலித்ததை நினைவுகூர்கிறேன்.
தங்கம் மாதாமாதம் போலீஸில் கைதாகி கோர்ட்டில் அபராதம் கட்டி வருபவள். ஆனாலும் அவளுக்கு ஒருமுறை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அபராதம் கட்டாமல் வாதாடவேண்டும் என அடம்பிடிக்கிறாள். அந்த வேகம் எவருக்கும் புரியவில்லை. அவனுக்கும்தான். ‘ஏன்?’ என்கிறான். ‘காலிப்பய சேதுவ நான் கூப்பிட்டதா கேஸ போட்டிருக்கானே. அதை ஏத்துக்கவே முடியாது’ என்கிறாள். ஏன்? அவன் ஒருவனை மட்டும் அவள் ஏன் வெறுக்கிறாள். அவனைக் கூப்பிட்டாள் என்று சொன்னால் ஏன் அவள் சுயமரியாதை புண்படுகிறது? சேது யாரென்றே நாவலில் இல்லை. ஆனால் வாசகன் அந்த மனநிலையை தொட்டு அறியமுடியும்.
இந்த நுட்பங்களை வாசிக்கத்தெரிந்த வாசகர்களுக்கு ஜி.என். அசலான புனைவுக்கலைஞன். தமிழின் இலக்கியசாதனையாளர்களில் ஒருவர். வெறுமே உடல்விவரணைகளை மட்டும் வாசிக்கத்தெரிந்தவர்களுக்குத்தான் அவர் போதாதவர். துரதிருஷ்டவசமாக பாலியல்சார்ந்த எழுத்துக்கு மொண்ணை வாசகர்களே அதிகமும் வருகிறார்கள். ஜி.என் ஐ அவர்கள் மேல்மட்டம் வழியாகக் கடந்துசெல்கிறார்கள்.
Thanks https://www.jeyamohan.in

Ms.Nirmala (முதல்வர் நிர்மலா ஒரு சிறுகதை: ஒருகுறும்படம்)


தமிழ் இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி, தமிழ் இலக்கிய எல்லைகளைப் புதிய திசையில் விரிவடையச் செய்த படைப்பாளி ஜி.நாகராஜன், 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 52-வது வயதில் மறைந்தார்

ஜி. நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 - பிப்ரவரி 19, 1981 ) மதுரை, இந்தியா) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.


அ. ராமசாமி

ஒரு சிறுகதை: ஒருகுறும்படம்

=============================


ஜி.நாகராஜனின் எல்லாக்கதைகளையும் வாசித்திருக்கிறேன். ஆனால் இந்தக் கதையைப் பற்றி எழுதவும் செய்துள்ளேன். நான் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றிருந்த குறிப்பு இது:
---------------------------------------------------------------------------------
கல்லூரி முதல்வர் நிர்மலா கதையை ஜி.நாகராஜன் எழுதியுள்ள விதம் திரும்பத் திரும்பப் படித்துப் படைப்பாளிகள் பின்பற்றத் தக்கதாக இருக்கிறது. மனிதர்களுக்குள் உறையும் காமத்தின் இயல்புக்கு முன்னால் வயது, பதவி, கட்டிக்காத்த பிம்பம் என எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்பதை வாசகர்களுக்கு உணர்த்தும் விதம் அற்புதமானது. கல்லூரி முதல்வரின் அலுவலக அறையைக் கதை நிகழும் இடமாகக் கொண்டிருந்தாலும், கதையின் ஒவ்வொரு நிகழ்வும் நினைவுகளிலும், கடித வரிகளின் விரிவா கவும் தரப்பட்டுள்ள லாவகம் சிறப்பான ஒன்று. எழுதப் போகும் விசயத்தின் கூர்மையைக் கவனத்தில் கொண்டு இந்த உத்திகளைப் பின்பற்றியுள்ள ஜி.நாகராஜன் தமிழ்ச் சிறுகதையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் என்பதற்கு இந்த ஒரு கதையே போதும்.
===================================
இந்தக் கதையைக் குறும்படமாகத் தந்துள்ளார் தயாரிப்பாளர்&இயக்குநர் ஸ்ரீராம் . கதையைத் திரைக்கதையாக்கிய செந்தில் ஜெகந்நாதன் கதையிலிருந்து விலகவில்லை. அதில் நிர்மலாவாக நடித்துள்ள பொற்கொடியும் மாணவியாக நடித்துள்ள ஜனனியும் எழுதப்பெற்ற கதாபாத்திரங்களுக்குள் இருந்த உணர்வுகளை நடித்துக்காட்டியுள்ளனர். மறைந்துவிட்ட நண்பர் அருண்மொழியை அப்பாவாகப் பார்க்கமுடிந்தது. ஆனால் அவரது பெருங்குரல் அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்தவில்லை.

கதை எழுதப்பெற்ற காலத்தையே படத்திற்கான ‘நிகழும் காலமாக (1980)’ வைத்திருக்கிறார்கள். அக்காலத்தைக் கொண்டுவரச் சினிமாப் பாடல்களும் இளமைத் தோற்றத்தோடிருக்கும் கமல்ஹாசனின் படமும் பயன்பட்டுள்ளது. அதே கவனத்தைக் கொலுசில் காட்டாமல் விட்டுள்ளனர்;புத்தம் புதிதாக இருக்கின்றது. படத்தைப் பாருங்கள். பிறகுகூடக் கதையை வாசிக்கலாம். அதன் பிறகு நான் எழுதிய கட்டுரையையும் வாசிக்கலாம்.


மன(த்)தி - வடிவரசு

''மன(த்)தி!”
**
'பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப்பாரும் உம்முளே!'
- சிவவாக்கியர்
**
மனிதரின் மலமானது கீழ்மையிலும் கீழ்மையாகப் பார்க்கப்படுகிறது. அதனால் தான், அதனை அள்ளும் மனிதர்களை மனிதர் என்றுக் கூடப் பாராமல் தொடர்ந்து ஒதுக்கி வருகிறோம். இது கீழ்மையிலும் கீழ்மையாகப் பார்க்கப்படும் மனித மலத்தை விட படுக் கீழ்மையான செயல் என்பதை நம்மில் அதிகமானோர் உணர்வதில்லை. காரணம், நம் சமூகச் சூழல் நம்மை அப்படி காலங்காலமாக பழக்கி வந்திருக்கிறது.
உண்மையில் மனித மலம் என்பது கீழ்மையான ஒன்றுதானா? எனில் இல்லை என்பதுதான் பதில். அப்படி ஆமாம் என இருப்பின், அதை உற்பத்தி செய்யும் மனித உடலும் கீழ்மையிலும் கீழ்மையானது என்பது தானே பொருள்?
இயற்கையின் படைப்பில் அனைத்து சீவராசிகளும் பசிக்காக எதையேனும் உண்ணக்கூடியது. அப்படி உண்ணும் உணவானது உடலுக்குள் சென்று செரிமானமாகி மலமாக வெளியேறும். இது இயல்பான, இயற்கையான ஒன்றுதான் என்றபோதும், அதனை நாம் இந்தளவுக்கு இழிவான ஒன்றாகப் பார்க்க வேண்டியதும், நினைக்கவேண்டியதும் அவசியம் தானா என்றக் கேள்விதான் எழுகிறது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் மனிதன் மட்டும்தான், தன் மலத்தை இத்தனைக் கேவலமாகப் பார்க்கிறான். ஆடு, மாடு, கோழி போன்ற சீவராசிகள் அப்படிப் பார்ப்பதில்லை. கேட்டால், மனிதன் ஆறறிவு படைத்தவன், அது இது என பெருமையாகச் சொல்லலாம். ஆனால், அதே ஆறறிவு படைத்தவன் எப்படி இன்னொரு சக மனிதனை கீழ்மையாக நடத்தலாம் என்றால் பதில் வராது.
இது ஏதோ இன்றைக்கு மட்டும் அரங்கேறும் ஒன்றல்ல. காலங்காலமாக தொடர்ந்துவரும் மாறாத அவலம். இதோ, இன்றைய தொழில்நுட்ப உலகம் வரைக்கும் அப்படியே தொடர்ந்து வந்திருக்கிறது.
ஒரு மனிதன் சக மனிதனை அவன் செய்யும் தொழில் காரணமாக ஒதுக்குவதும், ஏற்றத்தாழ்வுகள் வகுத்து குறிப்பிட்டவர்கள் தான் இந்தத் தொழிலை செய்ய வேண்டும் என நிர்பந்திப்பதும் எவ்விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
இன்னொரு பக்கம் எதையும் பிரித்துப் பார்க்கும் சுயநல புத்தியின் பிடியில் ஏன் இந்த மனிதர்கள் காலந்தோறும் சிக்கி சீரழிந்துவருகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
அதிலும், தன் வீடும், தன் இடமும் மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென நினைத்து, குப்பையை வாரி தெருவில் கொட்டுவதும், தன் வீட்டுக் கழிவறையை அக்கறையோடு பயன்படுத்திவிட்டு, பொது இடமென வரும்போது கடமைக்கு பயன்படுத்திவிட்டு வருவதும் என்ன வகையான மனநிலை எனத் தெரியவில்லை.
மனிதர்களில் மட்டும் ஏன் இத்தனைப் பிரிவுகளும், ஏற்றத்தாழ்வுகளும் உள்ளதென்றும், ஏன் ஒரு சாரார் மட்டும் குப்பையை விட, மலத்தை விட கேவலமாக நடத்தப்பட வேண்டும் என்றும் யோசிக்க யோசிக்க கோவமாக வரும்.
அதிலும் எங்காவது குப்பை வாருபவர்களையும், மலம் அள்ளுபவர்களையும் பார்க்க நேரும்போது, இக்கேள்விகள் இன்னும் அதிகமாக எழுவதை பலதடவை வேதனையோடும் கோவத்தோடும் உணர்ந்திருக்கிறேன். ஆம்!
அன்றைய தினம் அதிகாலை சீக்கிரமாக எழுந்து, நான் தங்கியிருந்த போரூர் கார்டன் அறையிலிருந்து போரூர் சிக்னல் வரைக்கும் நடந்து சென்று, அங்குள்ள தேனீர்க்கடை ஒன்றில் தேனீர் பருகிவிட்டு, அங்கிருந்து திருவான்மியூர் செல்லும் பேருந்திலேறி சன்னலோரம் உட்கார்ந்து பாடல்கள் கேட்டவாறு, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிறுத்தத்தில் போய் இறங்கினேன்.
பின் அங்கிருந்து தோழி ஒருவருடன் நகர்பேசியில் பேசியபடி எதிரில் வருபவர்கள் முகங்களையும், சாலையோரம் உள்ள மரங்களையும், அவ்வழியாக இறங்கும் விமானங்களையும் பார்த்து ரசித்தவாறு அண்ணா நூற்றாண்டு நூலகம் முன்பு சென்றடைந்தேன்.
அங்கிருக்கும் உணவகம் ஒன்றில் காலை உணவு சாப்பிட்டுவிட்டு, நூலகத்தின் பின்னால் உள்ள மரத்தடியில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் நகர்பேசியில் எதையோப் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒன்பது மணி வாக்கில் நூலகம் திறந்ததும் இரண்டாவது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவுக்குப் போய் உட்கார்ந்து கவிதை நூல் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரிடமிருந்தோ அழைப்பு வர, உடனே எழுந்து வேகமாக வெளியில் சென்று, கழிவறை அருகில் உள்ள காலி இடத்தின் ஓரமாக கண்ணாடி சுவரருகில் நின்று பேசிக்கொண்டிருந்தேன்.
அவ்விடம் எனக்கு மிகப் பிடித்த இடம். ஞாயிறுதோறும் நூலகம் செல்லும்போதெல்லாம் அங்கு நின்றுதான் பெரும்பாலும் போன் பேசுவேன். அத்தோடு நடுவில் சிறுநீர் கழிக்கப் போகும்போதும், அங்கு சென்று சில நிமிடங்களாவது நின்று வெளியில் தெரியும் மரங்களையும், அருகிலிருக்கும் அரங்கத்தின் முகப்புக் காட்சியையும் பார்த்து ரசிப்பேன்.
சரியாக நான் பேசி முடிக்க யாரோ ஒருவர் முனகும் சத்தம் கேட்டது. யாராக இருக்கும் என கொஞ்சம் முன்னால் வந்துத் திரும்பிப் பார்க்க, ஆண்கள் கழிவறையில் 50 வயதான அம்மா ஒருவர் முடியாமல் உட்கார்ந்து கண்களை மூடியவாறு,
“ஆ.. ஹா.. ‘’ என முனகிக் கொண்டிருந்தார்.
அவர் சொல்லாமலேயே, கழிவறை சுத்தம் செய்ய வந்தவர் என்பதை, ஆண்கள் கழிவறைக்குள் இருப்பதை வைத்தும், கழிவறை சுத்தம் செய்யும்போது யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக வெளியில் வைத்திருக்கும் அறிவிப்புப் பலகை வைத்தும் எளிதில் தெரிந்துகொண்டேன்.
அவர் உட்கார்ந்திருந்தக் காட்சியும், அவரது முனகல் சத்தமும், என்னை ஒருவாறு உலுக்கியது என்று தான் சொல்லவேண்டும்.
உடனே அவரருகில் சென்று, ''அம்மா... அம்மா..’’ என்றழைத்தேன்.
நான் அழைப்பது கேட்டும் பதில் சொல்ல முடியாதவராய் இருந்தார்.
திரும்பவும், ''அம்மா.. என்னாச்சுமா..? என்றேன், அவர் தோள்மீது லேசாகத் தொட்டு.
லேசாக கண் திறந்து, ''தண்ணி… தண்ணி..'' என்றார்.
உடனே அவரது கையைப் பிடித்து, ''அம்மா.. எந்திரிங்கம்மா. அங்க வந்து வெளில ஒக்காருங்க. நான் போய் தண்ணி எடுத்துட்டு வர்றன்..’’
எனச் சொல்லி அவரைப் பிடித்து எழுந்து நடக்க வைத்து, கழிவறைக்கு வெளியிலுள்ள இடத்தில் சுவரில் சாய்த்து உட்காரவைத்துவிட்டு ஓடிப்போய் நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் குடிதண்ணீரை அங்குள்ள கிளாஸில் பிடித்துக்கொண்டு வந்து தந்தேன்.
வேகவேகமாக மேலெல்லாம் சிந்தியவாறு குடித்தார். அவர் அப்படிக் குடித்ததைப் பார்த்ததுமே, சாப்பிடாமல் பசியோடு இருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். உடனே அவரிடம்,
''காலயில சாப்டீங்களாம்மா?’’ என்றேன்.
இல்லை என்பதுபோல் தலையாட்டினார்.
’’என்ன சாப்பட்றீங்கன்னு சொல்லுங்கம்மா. நான் வேணாப் போய்ட்டு வாங்கிட்டு வர்றன்..’’ என்றேன்.
எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
''நீங்க இங்கயே இருங்க. நான் வெளிலப் போய்ட்டு வாங்கிட்டு வர்றன்..’’ எனச் சொல்லிவிட்டு, இறங்கி வெளியில் சென்று நான்கு இட்லியும், ஒரு வடையும் வாங்கி வந்தேன்.
நூலகத்தின் உள்ளே உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதால், விடவில்லை. பின் அவர்களிடம் எவ்வளவோக் கேட்டு, இதுபோல் மேலே வேலை செய்யும் அம்மாவுக்கு எனச் சொல்லி ஒருவழியாக எடுத்துவந்தேன்.
வந்து பார்த்ததும் அவரங்கே இல்லை. எங்கே போயிருப்பார் என்று உணவை அங்குள்ள கண்ணாடிச் சுவரருகிலுள்ள திட்டின் மீது வைத்துவிட்டுப் போய்ப் பார்க்க, அவர் கழிவறைக்குள் சுத்தம் செய்துகொண்டிருந்தார்.
''அம்மா..'' என்றழைத்ததும் எட்டிப் பார்த்தவர்,
''தோ வர்றன்யா..’’ என்றார்.
சரியாக பத்து நிமிடம் கழித்து, கை காலெல்லாம் நன்கு கழுவிவிட்டு வந்தவரிடம், வாங்கி வந்த உணவைக் கொடுத்து சாப்பிடச் சொன்னேன்.
அங்கேயே ஓரமாக கீழே உட்கார்ந்து, பிரித்து சாப்பிட ஆரம்பித்தார். நானும் அவர் அருகில் உள்ள திட்டின் மீது உட்கார்ந்துகொண்டு,
''இப்போ ஒடம்பு பரவால்லயாம்மா?’’ என்றேன்.
எதுவும் சொல்லாமல் என்னைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தார். அப்புன்னகை, புன்னகை தாண்டிய வலி என்பதை மட்டும் அப்போது சொல்லாமல் சொன்னது.
சில நிமிடம் அமைதியாக சாப்பிட்டவர்,
''பத்துப் பேரு வேல செய்யற எடத்துல ரெண்டுப் பேர செய்ய சொல்றனுவ. படிக்கிறப் பசவ தானன்னுப் பாத்தா, நாய விடக் கேவலம் பண்ணிட்டுப் போறானுவ..’’ என்றார்.
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
”பெர்ய ஆபீசர்க்குப் படிக்கறானுவலாம். பீப் பேன்ட்டு, தண்ணி ஊத்தாதவன்லாம் என்ன ஆபீசராயிப் புடுங்கப் போறானுவத் தெர்ல..’’
தினந்தோறும் நூலகத்திற்கு வந்து போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்களைத் தான் அவர் சொல்கிறார் என்பது புரிந்தது.
அதற்குள் சாப்பிட்டு முடித்தவர், சாப்பிட்டக் காகிதத்தை கையில் மடித்து வைத்துக்கொண்டு,
''அவன்அவன் பேல்ரத அவன்அவன் என்னிக்கி வாரிக்கொட்றானுவளோ அன்னிக்கிதான் அத்தோட வலிய ஒனருவானுவ.
”நாமதான இங்கனப் படிக்க வர்றம், நாமதானப் பேல்ரம், நாமதான மூத்தரம் வுட்ரோன்னு ஒரு நாயாது யோசிக்கிதுவலா. எவளோ வந்து வாருவா தொடப்பான்னு அததுங்க இஷ்டத்துக்கு பீப் பேன்ட்டு, மூத்தரம் வுட்டுப் போறதுவ.
”ஒருத்தனாவது அத சுத்தம் பண்றவெங்களும் மனுசன்தாம்னு நெனக்கிறானுவலா.
”இந்தக் கையால (தன் இரு கைகளைக் காட்டினார்) எவ்ளோக் குப்பய வாரிக்கொட்டிருப்பன். எவ்ளோப் பீ மூத்தரத்த கய்விருப்பன். இங்கன வந்து கெய்வர்துனா மட்டும் ஒவ்வ மாட்டுது.
”என்ன செய்யறது, வவுத்துப் பொய்ப்புக்கு எங்கனக் கூப்டாலும் போய் பீ மூத்தரத்த வாரித்தான ஆவணும்.
"ஆயிரஆயிரமா வந்து சும்மாக்குனு ஒக்காந்து பென்ச்ச தேச்சிட்டு ஊர்க்கதப் பேசிட்டுப் போறவனுவலுக்கு கொடுக்குறானுவ. உசர கய்லபுடிச்சி எவன் எவனோப் பேனப் பீ மூத்தரத்த கய்வித் தொடச்சிட்டுப் போற எங்குளுக்கு பத்து ரூவாத் தர்ற மேலக்கிம் கீலக்கிம் நாலுவாட்டிப் பாப்பானுவ.
"கேட்டா ஆபீசர்ரு மயிரானுவலாம்..’’
அவர் சொல்லச் சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
”கக்கூஸ்ல தண்ணி வர்ல, அது இதுன்னு எது சொன்னாலும் காதுல வாங்க மாட்டானுவ. ஆனா ஈ’ன்னு இளிக்கியிற மாரி கய்வித் தர்னும்பானுவ.
"பெனாயிலுப் பத்தல பிலிசீங்கிப் பவுடரு இல்லன்னு சொன்னா, வாய்கிய்ய நோனாவட்டுப் பேசுறனுவ வாயயும் சூத்தயும் மூடிட்டி இருப்பானுவ..’’
என்றவர் மெல்ல தரையில் கையூன்றி எழுந்து நின்றார். எதையோ யோசித்தவராய்,
''அவனுவ செய்ற வேலய தெர்ல போற நாய்ங்க கூட செய்யும். அந்த நாய்ங்கள ஒர்நா வந்து நான்ங்க செய்ற வேலயவ செய்ய சொல்லுன்ங்க பாப்பம்..’’ என்றார்.
அவரது ஆதங்கத்தையும் மனவேதனையையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
"பளப்பளன்னு கய்வி வக்கறம். வர்றவன்லாம் அவன்அவன் ஒலுங்கா தண்ணி ஊத்திட்டுப் போனானுவன்னா, பேனப் பீயும் மூத்தரமும் அப்டியே நிக்குமா?
”எவன் பேன்டா நமுக்கென்ன, யார் வாரிக் கொட்னா நமுக்கென்னன்னு நெனுச்சா யாருவதான் என்னப் பண்ணமுடியும்?
”தலயெழ்த்து எங்கப் பொய்ப்புன்னு சகிசிட்டு எல்லாத்தியும் வாரிக்கொடிட்ருக்கம். எவ்ளோ நாளிக்கி கொட்டுவம்?
”வவுருலாம் எரிது, எவனோப் பேன்டப் பீ மூத்தரத்த வாரி ஏன்டா சாவனும் நெனச்சியாக்கா. என்னிக்கிதான் இதுக்கிலாம் ஒரு தீர்வ்வு வர்மோ, அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்யம்.”
இன்னும் பேசினார். அங்கே பலபேர் செய்யும் வேலையை ஒருவரையே செய்யச்சொல்லும் அவலம் குறித்தும், அதற்கெனத் தரும் சொற்பச் சம்பளம் குறித்தும், படிக்க வருபவர்கள் கழிவறையில் செய்துவிட்டுப் போகும் அநியாயங்கள் குறித்தும் எவ்வளவோப் பேசினார்.
ஒருபக்கம் ஏன் இப்படி இருக்கிறோம்? என கோபமாக வந்தது. இன்னொரு பக்கம் அவர் மீது பரிதாபமாக இருந்தது.
இத்தனைக்கும் அவரிடம் நான் எதையும் கேட்கவில்லை. எல்லாம் அவராகவே சொன்னார். அவரது பலநாள் ஆதங்கம், சொல்ல ஒருவரும் கிடைக்காத ஏக்கம், விரக்தி, கோபம், இயலாமை, இன்னும் இன்னும்.
''என் புருசன் அன்னிக்கே சொன்னாவ. இந்த சாவுபுடிச்ச வேல நமக்கு வேணாம்டின்னு. அவன் போயி சேந்தும் வுட முடில.
”புள்ளயும் கைல ஒரு பச்ச ரிச்வக் கொர்த்துட்டுப் போயி சேந்துட்டா. அதயும், இந்த வவுத்தயும் வச்சிட்டு என்னப் பண்ணுவன்?
”எங்கன போனாவும் சுத்தினு சுத்தினு அடிக்கிற சனியக்கார வேல இது. விட்டாப்போதுன்னு ஒதுங்கனாலும் விடுமாட்றானுவ. வேற வக்கில்ல. அதான் பீ மூத்தரத்தோடவே தெனந்தெனம் செத்துவுட்ருக்கன்..’’
திடீரெனப் பேச்சை நிறுத்தினார். சில நொடிகள் எதுவும் பேசாமல் வழிப்பக்கம் யாராவது வருகிறார்களா என்று திரும்பிப் பார்த்தார்.
உடனே நான், ‘’வேற யாரும் இப்ப ஒங்களுக்குன்னு இல்லயாம்மா..’’ என்றேன்.
‘’பேத்தி இப்பன எட்டாவதுப் படிக்கிறா. அவளும் நானுந்தன். தெனக்கியும் தெருக் குப்பய வாருவன். வாரத்துக்கு ரண்டு நாளிக்கி இங்கன கூப்டுவானுவ வருவன். இந்த ஈனக்கெட்ட பொயப்புலாம் என்னோட முடின்ஞ்சி போவுனுன்னு என் பேத்திய பீ நாத்தம் காட்டாம வளக்கிறன்..’’ என்றவர்,
நான் சாப்பாடு வாங்கி வந்து கொடுத்ததுக்கு நன்றி சொன்னார்.
‘’மேலப் போய்க் கய்வனும். நான் வர்றன்யா, ஒனக்குப் புண்ணியம்..’’ எனச் சொல்லி புறப்பட்டவரிடம், பாக்கெட்டிலிருந்து 50 ரூபாயை எடுத்து,
“இந்தாங்கம்மா, இத வச்சிக்கோங்க..’’ என்றேன்.
''அய்யே, அது எதுக்கு எனுக்கு?’’ என்றார்.
என்ன சொன்னால் வாங்கிக் கொள்வார் என யோசித்து,
“ஒங்கப் பேத்திக்கு ஒரு நல்லப் பேனா வாங்கித் தாங்கம்மா..’’ என்றேன்.
புன்னகைத்துவிட்டு வாங்கிப் போனார்.
குப்பை தானே என கண்ட இடத்தில் கண்டபடி வீசுகிறோம். அதை இன்னொருவர் கூட்டுகிறார், பொறுக்குகிறார் என யோசிப்பதில்லை.
அதேபோல், கழிவறை தானே என இஷ்டத்துக்கு சிறுநீர் கழிக்கிறோம், மலம் கழிக்கிறோம். அதை இன்னொரு மனிதர்தான் கழுவுகிறார் என சிந்திப்பதில்லை.
ஒருவேளை யோசித்திருந்தால் குப்பையை சரியாக குப்பைத்தொட்டியில் கொண்டுபோய் போட்டுவிட்டு வருவோம். கழிவறையில் சிறுநீரும், மலமும் கழித்தப்பின் சரிவர தண்ணீர் ஊற்றி, கழிப்பதற்கு முன்பிருந்ததுபோல் சுத்தமாக வைத்துவிட்டு வருவோம்.
ஆனால், நம்மில் பாதிக்கும் அதிகமானோர் அப்படி செய்வதில்லை.
காரணம், நம் மனம். இன்னொரு மனிதர் அதையெல்லாம் வாருகிறார், கூட்டுகிறார், கழுவுகிறார என்று சிந்திக்காத கீழ்மை மனம். ஆம்!
தெருவுக்கு நான்கு குப்பைத் தொட்டிகள் வைத்தும், அதில் குப்பையை கொட்டாமல் ஆங்கங்கே இஷ்டத்துக்குக் கொட்டும் கோர புத்தி.
அதிலும் உச்சமாக, வீட்டிலுள்ள கழிவறையை அக்கறையோடு பயன்படுத்தும் பலர், பொது இடங்களில் உள்ள கழிவறையை ஏனோதானோவென்று பயன்படுத்திவிட்டுவரும் நடத்தைக் கோளாறு.
இப்படி இன்னும் இன்னும் இன்னும்.
ஐம்பது வயதான அம்மா, பார்க்கவே பாவமாக இருப்பவர், கடந்த 30 வருடத்துக்கும் மேலாக குப்பைகள் வாரியும் கழிவறைகள் சுத்தம் செய்தும் வருபவர், லட்சக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரும் நூலகத்தில், தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து படித்துவிட்டு செல்லுமிடத்தில், உள்ள கழிவறையின் அவலநிலை தாங்காமல் மயங்கி விழுகிறார் என்றால்,
லட்சக்கணக்கான நூல்கள் அங்கிருந்தும், எத்தனைப் பெரிய கட்டிடம் கட்டிப் பெருமை பேசியும், அத்தனைப் பேர்கள் வந்து படித்துச் சென்றும் என்ன பயன்?
நானே பல தடவை பார்த்திருக்கிறேன். மலம் கழித்துவிட்டும், சிறுநீர் கழித்துவிட்டும் தண்ணீர் ஊற்றாமல் பலர் சென்றிருப்பதை. அதிலும் சிலர், மென்று தின்ற மெல்கோந்தை சரியாகக் கொண்டு வந்து சிறுநீர் கழிக்குமிடத்திலும், முகம் கைகள் கழுவுமிடத்திலும் துப்பிவிட்டுப் போயிருப்பார்கள். அதனால் அடைத்துக்கொண்டு சிறுநீரும், தண்ணீரும் செல்லாமல் நிறைந்து வழியும்.
படிக்க வருபவர்கள் இப்படியென்றால், நூலக நிர்வாகம் அதற்கும் பல படி மேல். வருடக்கணக்காக திறக்காமல் பூட்டிக்கிடக்கும் சில கழிவறைகள், உடைந்துபோன பழுப்புகள், தண்ணீர் வராத குழாய்கள் எதைப்பற்றியும் சிறு அக்கறையும் கொள்ளமாட்டார்கள்.
இந்த லட்சனத்தில் இந்தியாவின் மிகப்பெரிய, பிரமாண்ட, அனைத்து வசதிகலும் கொண்ட நூலகம் என்ற பெருமை வேறு.
அவர் சென்று வெகு நேரமாகியும், சொல்லிப்போன ஒன்று மட்டும் திரும்பத் திரும்பக் காதில் கேட்டது.
"அவன்அவன் பேனப் பீயயும், பெஞ்ச மூத்தரத்தயும், துப்பன எச்சியயும், அவனுவளே என்னிக்கி கய்வி வாரி சுத்தம் பண்றானுவளோ அன்னிக்கிதான் இந்தக் கொடுமிக்கிலாம் ஒரு முடுவு வரும்..’’
ஆம்! அவர் கேள்விகள் நியாயமானது. அவரது ஆதங்கமும், கோபமும் நியாயமானது. அத்தோடவர் சொல்லிப்போன இவ்வார்த்தைகளும் மிகச் சரியானது என்றேப் பட்டது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தின் அழகு மட்டுமல்ல… அவரகத்திலுள்ள கேள்விகள், கோபங்கள், ஆதங்கம், இயலாமை, வலிகள், போராட்டங்கள் என அனைத்தும் எனக்கவர் முகத்தில் தெரிந்தது.
ஆம்! ஆம்! ஆம்!
- வடிவரசு,
18.04.2020

கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன்

20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)
போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...
இது எப்படி சாத்தியம்..???
ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???
அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..
ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்...
யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ...
வேறு யாருமில்லை..
கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்...
வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார்.
சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்...
அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...
""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""
இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...
சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..
நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்..செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....
அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க
அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...
உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என வியட்நாம் அமைச்சர் கூற ...படைதஞ்சாவூருக்கு பறந்தது..
அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்...வாஞ்சையுடனும்...தன் பையில் சேமித்து கொண்டார்...
இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...
இந்த மண்..வீரமும்.. வெற்றியும்..நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..
வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...
இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..
இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது .இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...
என்னாவது...???
ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்..
நம் சந்ததிக்கு.... ....
*படித்ததில் பிடித்தது*


வாழ்க எம்ஜியார் புகழ்

1987 டிசம்பர் மாதம் தன் மகள் திருமண உதவி கேட்டு நன்கு அறிமுகம் ஆன கழக தொண்டர் கணபதி என்பவர் தன் மகள் திருமண உதவி கேட்டு தலைவரிடம் அவர் இல்லத்தில் மனு ஒன்றை கொடுக்க.
தலைவர் அதை படித்து பரிசீலித்து அவரை மீண்டும் அழைத்து உன் மகள் திருமணத்தை 1988 ஜனவரி மாதம் பொங்கல் முடிந்து 18 ஆம் தேதி வைத்துக்கொள்...நானே வந்து நடத்தி வைக்கிறேன் என்று சொல்ல...
கணபதியின் கெட்ட நேரம் தலைவர் அந்த மாத இறுதியில் நம்மை விட்டு மறைய கணபதி நொறுங்கி போகிறார் மனதளவில். தலைவர் மறைவு ஒரு புறம் தன் மகள் நிலை குறித்து மறுபுறம்.
அடுத்த சிலநாட்கள் செல்ல முதல்வர் அன்னை ஜானகி எம்ஜியார் அவர்களிடம் இருந்து தொண்டன் கணபதிக்கு அழைப்பு வர.
அங்கே வீட்டுக்கு போன கணபதிக்கு.....நீங்கள் குறித்த படி உங்கள் மகள் திருமணம் ஜனவரி 18 இல் நடக்கட்டும் நான் அல்லது நம் குடும்பத்தில் ஒருவர் வந்து நடத்தி வைக்கிறோம் என்று சொல்ல.
தன் மகன் ராஜ ராஜன் உடன் தோட்டத்துக்கு வந்த கணபதிக்கு நடப்பது கனவா அல்லது நிஜமா என்று புரியாமல் அம்மா நீங்கள் எப்படி வர முடியும் தலைவர் இறந்து நாட்கள் ஆக வில்லையே என்று கேட்க...
அதை பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் உங்கள் ஏற்பாடுகள் நடக்கட்டும்.....அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் அவர் தன் கைப்பட எழுதிய ப்ரோக்ராம் டைரியில் .
ஜனவரி 1988....18 அன்று கணபதி வீட்டு திருமணம்....அவருக்கு செய்யவேண்டிய உதவிகள் பணம்..பட்டு புடவை..நகைகள் எல்லாம் பற்றியும் எழுதி வைத்து இருக்கிறார்...அதன் படி உங்கள் மகள் திருமணம் நடக்கும் என்று சொல்ல.
அதன் படி அவர் மகள் திருமணம் அருமையாக தலைவர் கொடுத்த சீதனங்கள் உடன் நடந்து முடிந்தது.
அன்னை ஜானகி அம்மா அவர்கள் கலந்து கொள்ள இயலாமல் தலைவர் குடும்பத்தில் ஒருவர் முன் நின்று அந்த திருமணம் நடந்து முடிந்தது.
இருக்கும் போது தொண்டனுக்கு உதவாத அரசியல்வாதிகள் கொட்டி கிடக்கும் இந்த நாட்டில் இறந்தும் அவருக்கு உதவ உயில் போல எழுதி வைத்து விட்டு சென்ற தலைவரை நினைத்து மகிழ்வதா....அதை மறைக்காமல் மறுக்காமல் அந்த சோக சூழலில் கூட அந்த தொண்டனுக்கு உதவிய அன்னை ஜானகி அவர்களை நினைத்து மகிழ்வதா. முடிவை உங்கள் வசமே விட்டு விடும்....
வாழ்க எம்ஜியார் புகழ்
நன்றி...தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி