Search This Blog

Saturday, April 18, 2020

கடவுள் அவதாரமான சாய் பாபாவின் பிறப்பின் பின்னால் இருக்கும் கதை

சாய் பாபா இந்தியாவில் வாழ்ந்த ஒரு புனித துறவிஆவர் . இவர் வாழ்ந்த காலத்தில் இவரிடம் வந்து பலர் ஆசிபெற்றனர். அவரிடம் வரும் பக்தர்களின் உடல்நலக்குறைவு மற்றும் நோயினை நீக்கும் வல்லமையும் இவரிடம் இருந்ததாக கருதப்படுகிறது. இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் அவரை கடவுளின் அவதாரமாகவே கருதினர்.
கடவுளின் அவதாரமாக சாய் பாபாவை பார்த்த முஸ்லீம் மக்கள் அவரை பிர் [அ] குதுப் ஆக நம்புகின்றனர் . அவர் இறந்தும் இன்றுவரை அவரது வாழ்விடத்தை பார்க்க மக்கள் சீரடிக்கு வந்து தரிசித்து செல்கின்றனர். அவரின் வாழ்க்கை குறிப்புகளை இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.
சீரடி சாய் பாபா பிறப்பு 
சீரடி சாய் பாபா அவர்கள் மராட்டிய மாநிலத்தில் பாத்ரி கிராமத்தில் வசித்த தம்பதியான கங்கா பாவத்யா – தேவகிரியம்மா என்பவர்களுக்கு பிறந்தவராக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி சாய்பாபா செப்டம்பர் 28 ஆம் தேதி 1838ஆம் ஆண்டு பிறந்தார். மராட்டிய மாநிலம் அகமது மாவட்டத்தில் உள்ள “சீரடி” எனுமிடத்தில் பிறந்தார்.
பெயர் – சாய் பாபா
பெற்றோர் – கங்கா பாவத்யா – தேவகிரியம்மா
பிறந்த தேதி மற்றும் ஆண்டு – செப்டம்பர் 28, 1838
பிறந்த இடம் – சீரடி
சாய் பாபா பிறப்பின் பின்னால் இருக்கும் கதை :
கங்கா பாவத்யா – தேவகிரியம்மா என்கிற தம்பதி பாத்ரி கிராமத்தில் வசித்துவந்தனர் அவர்கள் இருவரும் தீவிர சிவபக்தர்களாக திகழ்ந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் ஒருநாள் இரவு பலத்த மழை பொழிந்தது. அப்போது படகோட்டியான கங்கா பாவத்ய தனது படகினை பாதுகாக்க ஆற்றங்கரைக்கு சென்றுவிட்டார்.
அப்போது அவரது மனைவி தேவகிரியம்மா மட்டும் இல்லத்தில் தனியாக இருந்தார் . அப்போது அவர்களது வீட்டிற்கு வந்த ஒரு முதியவர் வெளியே பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது அதனால் நான் இன்று இரவு மட்டும் உங்களது வீட்டில் தங்கிக்கொள்கிறேன் என்றார். அதற்கு தேவகிரியம்மா சரி என்று கூறி திண்ணையில் படுத்துக்கொள்ள சொன்னார். பிறகு கதவினை தட்டிய அந்த முதியவர் தனக்கு பசி எடுப்பதாக கூறினார் . அதன்பின் தேவகிரியம்மா அவருக்கு உணவு அளித்தார். அதன் பிறகு தனக்கு கால் வலிப்பதாக கூறினார். அதனால் அவருக்கு கால் பிடித்து விடுவதற்காக ஒரு பெண்ணை அழைத்து வந்தார். வெளியில் இருந்த அந்த இருவர் கடவுள்களான பரமசிவனும், பார்வதியும் ஆவர். அவர்கள் இருவரும் சேர்ந்து கதவினை தட்டி தேவகிரியம்மாவிற்கு காட்சியளித்தனர். பிறகு உனக்கு 3 குழந்தைகள் பிறக்கும் அதில் கடைசியாக நானே பிறப்பேன் என்று ஈஸ்வரன் கூறினார் பிறகு இருவரும் அங்கிருந்து மறைந்தனர்.
அதன்பிறகு வீட்டிற்கு வந்த அவரது கணவரிடம் நடந்ததை கூறினார். இதனை அவர் நம்பவில்லை. பிறகு கடவுள் கூறியபடி அடுத்தடுத்து குழந்தை பிறக்க ஆரம்பித்தது இதன் மூலம் கங்கா பாவத்யா கடவுளின் வருகையை நம்பினார். பிறகு ஈஸ்வரனின் தரிசனம் தனக்கும் வேண்டும் என்று அவர் காட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அப்போது தேவகிரியம்மாவிற்கு மூன்றாவது ஆன் குழந்தை பிறந்தது. அதனை அவர் இலைகளில் சுற்றிவைத்து விட்டு தனது கணவரை பின்தொடர்ந்து சென்றார். பிறகு அந்த குழந்தையை ஒரு முஸ்லீம் கண்டு எடுத்ததாகவும் அவரே 4 ஆண்டுகள் வரை அவரை வளர்த்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. அந்த குழந்தை தான் சாய் பாபா என்று கருதப்படுகிறது.
மகானாக மாறிய சாய் பாபா :
சாய் பாபா அவர்கள் தனது 16ஆவது வயதிலிருந்து துறவு வாழ்க்கையினை மேற்கொண்டார். அப்போது ஒரு நாள் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து இருக்கும்போது மகானாக காட்சியளித்தார். இதனால் அவரிடம் பலர் வந்து தங்களது கஷ்டங்களை கூறி அதற்கான ஆலோசனைகளை பெற்றனர். பிறகு தன்னிடம் வரும் அனைவருக்கும் அவர் தனது ஆலோசனைகளை வழங்கினார். அதன்பின் அவரிடம் வரும் பக்தர்களின் நோய்கள் மற்றும் உடல் சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி அவர்களுக்கு ஆசிவழங்கினார். இதனை கண்ட மக்கள் அவரை கடவுளின் அவதாரமாக தரிசிக்க ஆரம்பித்தனர்.
சாய் பாபா இறப்பு 
சாய் பாபா அவர்கள் 20ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் அனைவரும் அறியும் மகனாக விளங்கினார். பிறகு அக்டோபர் 15ஆம் தேதி , 1918 தேதி இறந்தார். இன்று அவரது சமாதி இருக்கும் சீரடிக்கு இந்தியா முழுவதும் இருந்து மக்கள் வந்து சரிசெய்து செல்கின்றனர். மேலும் பல முஸ்லீம் பக்தர்களும் அவரை தரிசித்து செல்கின்றனர்.–Source: dinakaran

Friday, April 17, 2020

Qualitative Analysis - Group 1 - Inorganic Chemistry


Qualitative Inorganic Analysis  

Objective To identify ions that are present in unknown solutions and solids using "wet chemical" separation methods.  These methods are based on the behavior of different ions when they react with certain reagents.  Reagents are substances chosen because of their chemical activity with the ions being analyzed.  Learning the chemistry that governs the identifications is an important part of this experiment.

Principles All measurements are all comparisons against references.  We normally talk about quantitative measurements of meters, kilograms, and second.  But qualitative measurements are no different.  In this experiment, you compare the chemical changes you observe in a known sample with observations on your unknown sample to determine the identity of the anions and cations in the unknown.  You’ll start with a sample known to contain all 9 cations and an unknown with 4-6 cations.

In the classical analytical scheme the chemical properties of the different ions, both positive ions (cations) and negative ions (anions), are used to separate a mixture of them into successively smaller groups of ions, until some characteristic reaction may be used to confirm the presence or absence of each specific ion.  In addition to analyzing the unknown for its component ions, the qualitative analysis scheme highlights some of the important chemical behavior of these metal salts in aqueous solution.  The concepts of chemical equilibrium are emphasized, as illustrated by precipitation reactions, acid-base reactions, complex-ion formation, and oxidation-reduction reactions.  Each experiment presents a puzzle that is solved "detective fashion" by assembling a collection of chemical clues into an airtight case for the correct identifications.  As a bonus, the clues often take the form of colorful solutions and precipitates.

The qualitative analytical scheme is divided into three parts: 

1. Separation and identification of cations.
2. Identification of anions.  
3. Identification of an unknown in which both a cation and anion are present.

Overview of cation separation process: 
1.  Separate cations that form insoluble chlorides (Ag+, Pb2+) 
2.  Separate cations that t have highly insoluble hydroxides that precipitate when the hydroxide ion          concentration is small, approximately 10-5 M.  (Fe3+, Cr3+, Al3+) 
3.  The remaining 4 cations (Ba2+, Mg2+, Cu2+, Ni2+) cations all precipitate at when the hydroxide        ion concentration increases to 0.01 M so we add SO42- to remove the Ba2+ as BaSO4.  Next add        ammonia to form complex ions (Cu(NH3)22+ and Ni(NH3)22+.  These complex ions are more          stable than are the hydroxides so we can add hydroxide ion to precipitate Mg2+ 
4.  We have a mixture of Cu2+, which we detect by adding iodide and Ni2+, which is detected by     
      adding a reagent called dimethylglyoxime.

 
In qualitative analysis, the ions in a mixture are separated by selective precipitation. Selective precipitation involves the addition of a carefully selected reagent to an aqueous mixture of ions, resulting in the precipitation of one or more of the ions, while leaving the rest in solution. Once each ion is isolated, its identity can be confirmed by using a chemical reaction specific to that ion.
Cations are typically divided into Groups, where each group shares a common reagent that can be used for selective precipitation. The classic qualitative analysis scheme used to separate various groups of cations is shown in the flow chart below.

அர்த்தம் நிறைந்த ஒரு குட்டிக் கதை!

ஒரு முகாம் ஒன்றில் புதிய தளபதி நியமிக்கப்பட்டார்.
அவர் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது , 2 காவலாளிகள் ஒரு பெஞ்சை காவல் காத்து கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர் அருகில் சென்று
அவர்கள் ஏன் அதைக் காவல் காக்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு அவர்கள்...
"எங்களுக்குத் தெரியாது சார். முன்னாள் தளபதி அவ்வாறு செய்யச் சொன்னார், அதனால் நாங்கள் செய்கிறோம்!"
அவர் உடனே
அந்த முன்னாள் தளபதியின் தொலைபேசி எண்ணைத் தேடி அழைத்து பேசினார். மேலும் இந்த குறிப்பிட்ட பெஞ்சை ஏன் காவலர்களை கொண்டு காத்தார் என்று அவரிடமே கேட்டார்.
"எனக்குத் தெரியாது. முந்தைய தளபதியிடம் இரண்டு காவலர்கள் இருந்தனர். அவர்கள் மிகவும் அதை சிரத்தையாக பாதுகாத்தனர். அதனால், நான் பாரம்பரியத்தை உடைக்காமல் வைத்திருந்தேன்" என கூறினார்.
ஏன் என்று தெரியாமல் போனால் ஆர்வத்தில் மண்டை வெடித்துவிடும் போல இருந்தது , புதிய தளபதிக்கு.
அதனால்...மேலும் 3 முன்னாள் தளபதிகளை சந்தித்து பேசினார்.
அவர்களுக்கும் ஒன்றும் தெரியாமல் போக.... ஆனால் ,
அவர்கள் சொன்ன விவரங்களை வைத்து...
ஒரு 100 வயதான ஓய்வுபெற்ற முன்னாள் தளபதியைக் கண்டுபிடித்தார்.
அவர்தான்
இந்த பழக்கத்தை தோற்றுவித்தார்
என கூறியதன் பேரில்,
அவரிடம் சென்று...
"மன்னிக்கவும் ஐயா....
நான் உங்கள் முகாமின்
இப்போதைய தளபதி.
ஒரு சாதரணப் பெஞ்சை காக்க
இரண்டு காவலர்கள் இன்னமும் நியமிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.
நீங்கள் தான் அதற்கு தொடக்கம் என அறிந்தேன்.அவர்களை ஏன் அவ்வாறு செய்ய வைத்தீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?"
என்று தயக்கத்துடன் கேட்டார்.
"என்ன...? அந்த பெயின்ட் இன்னுமா காயவில்லை..... ?!?"

மோகமுள் - நாவல் பிறந்த கதை தி.ஜானகிராமன்



- தி.ஜானகிராமன்

கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றப்பா அது, ஜானகியாடா?” என்று கண்ணாடியை இரண்டு விரல்களால் தூக்கி விட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.
“ஆமாம் பாட்டி. சௌக்கியம்தானே?”
“சௌக்கியமா இருக்கறதுக்குத்தான் வழி பண்ணிக்க வந்திருக்கேன். பேப்பர்லே கதை போட்டுண்டு வறியே. அதுக்கெல்லாம் பணம் தருவாளோ! இல்லே, ராமையா பாகவதரைக் கூப்பிட்டுக் கதை பண்ணச் சொல்றாப்பலே தேங்காய் மூடியோ?…” என்று கூறி நிறுத்தினாள் பாட்டி.
“தேங்காய் விலைதான் ஏறிக்கிடக்கே, இப்போ! பணமாகவே கொடுத்துவிடுகிறார்கள்.”
“அது என்னமோப்பா! பாதிப் பணம் அப்பப்ப எனக்கு வரணுமே, வரலையேன்னு கேட்கிறேன். நான் கேட்கிறது நியாயம்தானே?” என்றாள் பாட்டி.
“எல்லாம் உங்க ஆசீர்வாதம்தானே!”
“அப்படிச் சொல்லிண்டே கிளம்பிப் போயிடலாம்னு பார்க்கறியா? என் பேச்சு, மூனாச்சி கதை, யோகாம்பா கதை, ரங்கு கதை - அவாளுக்குக் கொடுத்தாலும் கொடு. கொடுக்கப்பட்டாலும் போ - எனக்காவது கொடுக்கலாமோல்லியோ நீ?”
பாட்டி கேட்டது வேடிக்கையாகத்தான். சொன்னது அவ்வளவும் உண்மை. எழுதத் தூண்டிய, வழி காட்டிய பல குருமார்களில் கண்ணாடிப் பாட்டிக்கு நான் தனி ஸ்தானம் கொடுத்திருக்கிறேன்.
காவேரி வண்டலில் செழித்தபயிர் கண்ணாடிப் பாட்டி. பேச்சில் அசாதாரணமான நயம், நகைச்சுவை, ‘சுருக்சுருக்’கென்று தைக்கிற கூர்மை, சில சமயம் என்ன அர்த்தத்தில் சொல்லுகிறாள் என்று இலேசில் கண்டுபிடிக்க முடியாத பூடகம், சொல்லாமல் சொல்லுகிற தொனி, அதிர்வேட்டு மாதிரியும், சிற்றிலை போலவும் பல தினுசுச் சிரிப்புகளை எழுப்பக் கூடிய ஹாஸ்யவகைகள், எதைச் சொன்னாலும் தனக்கென்று ஒரு தனிப்பார்வை - பாட்டி ரொம்பப் பெரியவள்.
“மோக முள்” நாவலில் வருகிற பல பாத்திரங்களும் சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு ரசித்தவைதான். அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத் தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக் கொண்டதனால்தான்.
பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரிந்த கதைகளும், மன விசித்திரங்களும், சொல் ஜாலங்களும் இந்த உலகத்திலேயே சிலருக்குத்தான் கைவரும். பாட்டியின் கலைக்கண்ணில் ஒரு திவலை கூட நமக்கு லபிக்கவில்லையே என்று எனக்குத் தீராத குறை.
“மோக முள்”ளில் சில அத்தியாயங்களைக் கிடைத்தபொழுது வாசிக்கச் சொல்லிக் கேட்டாளாம் பாட்டி. ஓரிரண்டு இடங்களை நன்றாக இருப்பதாக அவள் ஒப்புக்கொண்டு கூடவிட்டாள். ஆகவே மற்ற விமர்சகர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
பள்ளிக்கூடத்தில் படித்த பத்து வருஷங்களில் ஞாபகம் இருக்கக் கூடியதாக ஒன்றுமில்லை. எப்பொழுது இச்சிறையிலிருந்து விடுபடப் போகிறோம் என்று ஆத்திரப்பட்டது ஞாபகம் இருக்கிறது. “உனக்குக் கணக்கு வராது. நீ கதை பண்ணத்தான் லாயக்கு. தொலை” என்று என் முகத்தில் பிரம்பை விட்டெறிந்த நாமமும், அம்மை வடு முகமும் கொண்ட மூன்றாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் ரங்காச்சாரியார், எனக்கு ஆசீர்வாதம் செய்தார். அந்த ஆசீர்வாதம்-
வகுப்புக் கட்டுரைகளில் சொந்தக் கை வரிசையைக் காட்டி அதிகப்பிரசங்கித்தனமாக அசடு வழிந்ததற்கு, சில வாத்தியார்கள் மற்றப் பையன்களுக்கு நடுவில் பரிஹாசம் செய்து மனத்தைக் கிழித்துப் போட்டதில் ஏற்பட்ட புண்கள்-
தஞ்சாவூரில் அப்பொழுதெல்லாம் மூலைக்கு முலை சங்கீதக் கச்சேரிகள் அமர்க்களப்படும். சிவகங்கை அனுமார், வெங்கடேசப்பெருமாள் சன்னிதி அனுமார், மேலவீதி விசுவநாதர், மேலவீதிப்பிள்ளையார், தெற்குவீதிக் காளி அம்மன், வரகப்பையர் சந்தில் தியாகையர் பூஜித்த ராம விக்கிரகங்கள், நாணயக்காரச் செட்டித்தெரு ராமலிங்க மடம், பக்கத்தில் திருவையாறு - இத்தனை தெய்வங்களுக்கும் நடக்கிற உற்சவ சங்கீதக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் ஐந்து வயதிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்த பழக்கம்-
நாலைந்து பேரிடம் சிறுவயதிலிருந்தே சங்கீதம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. கலைஞர்களுக்கு உரிய பேச்சின் அழகில் மயங்கினது -
உமையாள்புரம் சுவாமிநாதய்யரிடம் சில நாட்கள் சங்கீதம் சொல்லிக் கொள்ளப் போய்க்கொண்டிருந்தேன். மற்றவர்களைவிட சங்கீதத்தை உபாசணையாக, தியான மார்க்கமாக, அவர் கையாண்ட ஒரு தனிப்பண்பு, உலகத்தின் ஒலிகளையெல்லாம் நாதக் கடவுளின் பற்பல சைகைகளாகவும் விவகாரங்களாகவும் அவர் கண்ட விந்தையைத் துளியாவது பார்க்கக் கிடைத்த வாய்ப்பு-
கும்பகோணத்தில் கல்லூரியில் படித்த நாலு வருடங்களும் பள்ளி வாழ்க்கைக்கு நேர்மாறாக இருந்தன. அவ்வளவு உற்சாகம். அவ்வளவு அமைதி. இலக்கியங்களைப் பரவலாகப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பரம ரசிகர்களாக இருந்த இரண்டு மூன்று ஆசிரியர்களின் தோழமை இந்த வாய்ப்பைப் பெருக்கிற்று. அந்தப் பூரிப்பு-
கல்லூரியில் எனக்கு இணைபிரியாத நண்பன் ஒருவன் உண்டு. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தெய்வமாக வணங்குவான். அதை ஒரு தனி மதமாக வளர்த்திருந்தான் அவன். அவனோடு நெருங்கிப் பழகப் பழக என் உள்ளத்தில் சபலத்துக்கும் தூய்மைக்கும் மூண்ட ஓயாத சண்டைகள்-
நான் குடியிருந்த தெருவில் ஒரு கிழவர் ஐம்பத்தைந்து வயதில் ஒரு பதினாறு வயதுக் கட்டழகியை (அழகான பெண்கள் யார் யாருக்கோ போய்ச் சேர்வதைப் பாருங்கள்)க் கலியாணம் செய்து கொண்டு வந்து முப்பத்திரண்டு வயதுப் பிள்ளையை அவன் மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு விரட்டி, சரியாக ஒரு வருஷம் புது மனைவியோடு தனிக்குடுத்தனம் செய்துவிட்டு, திடீரென்று ஒருநாள் சிவபதம் அடைந்து விட்டார். அதை ஒரு வருஷம் பார்த்துக் கொண்டிருந்த ஆற்றாமை-
தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். அங்கே ஒரு மிராசுதார் . சிறு பையனாக இருக்கும் பொழுதே முப்பது வேலிநிலத்துக்கு வாரிசாகிவிட்டான். தகப்பனார் இறந்து, நிலம் கைக்கு வந்ததுமே, பண்ணை முறையை உதறி எல்லா நிலங்களையும் குத்தகைக்குவிட்டு விட்டுச் சுகவாசியாக வாழத் தொடங்கினான்.
சுகவாசியென்றால் வேறொன்றுமில்லை. திண்ணையில் பெரிய கலியாண ஜமக்காளத்தை விரித்து, ஊரில் உள்ள சின்னவர் பெரியவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு சீட்டாட்டம். ஓயாத ஒழியாத சீட்டாட்டம். அரையில் வேட்டி நழுவியதைக் கூட உணராத சீட்டாட்டம். மற்ற நேரங்களில் திண்ணையில் மரச்சாய்வு நாற்காலியைப் போட்டு, சட்டத்தை நீட்டி அதன்மேல் காலைப்போட்டு, எப்பேர்ப்பட்ட பெரியவர்கள் வந்தாலும் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசீல்தாரைத் தவிர) அந்தக் காலை மடக்காமல், எழுந்து கொண்டுவிடாமல் படுத்திருப்பான். வம்பளப்பான்.
இந்த மாதிரி எத்தனையோ ஜன்மங்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் இருக்கின்றன. (மற்ற ஜில்லாக்கள் அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லை). இந்த ஜன்மங்கள் ஒன்றிரண்டைப் பார்த்த குழப்பம் -
தஞ்சாவூரில் நான் படிக்கும்பொழுது ஒரு நாள் நாலைந்து வடக்கத்தியர்கள் தம்புராவைத் தூக்கிக் கொண்டு வாசலோடு போனார்கள். என் தகப்பனாரும் நானும் திண்ணையில் நின்று கொண்டிருந்தோம். எங்கள் வாசலண்டை வந்த அவர்கள் என் தகப்பனாருக்குக் கும்பிடு போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள். ஹாலில் உட்கார்ந்தார்கள்.
தம்புராவை மீட்டினான் ஒருவன். பெரியவர் ஒருவர் பாட ஆரம்பித்துவிட்டார். ஒரு மணி நேரம் உலகப் பிரக்ஞை அழிய அழியப் பாடினார் அவர். அவர் மகனும் சேர்ந்து கொண்டான். அந்தமாதிரி சாரீரங்களை நான் இதுவரையில் கேட்டதில்லை. அவ்வளவு கனம், அவ்வளவு இனிமை, அவ்வளவு சுருதி உணர்வு, விண்ணுக்கும் பாதாளத்துக்கும் அனாயாசமாக ஓடி, ஓடிப் பாய்கிற ஆற்றல்! கட்டி விழுந்த குழந்தையின் முனகல் போன்ற சில கர்நாடக வித்வான்களின் குரல்களும் நினைவில் வந்தன.
பல வருஷங்கள் கழித்து, பிழை பொறுக்காமல் வடக்கத்தியர்களின் குரல்வளத்தைப் பற்றி ஒரு பிரபல கர்நாடக வித்வானுடன் தர்க்கம் செய்ய நேர்ந்தது. ‘குரல் இருந்தால் மட்டும் போதுமா’ என்று ஒரே வார்த்தையில் அலட்சியப் புன்னகையோடு அவ்வளவையும் ‘பைசல்’ செய்துவிட்டார் அவர்! ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி அடைத்திருக்கிறார் பகவான் என்று அப்போது ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது. அந்த ஆச்சரியம் -
என்னைவிட எட்டு வயது அதிகமான ஒரு பெண். நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு. அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எதையும் கண்டு வியந்துவிடாத அழுத்தமும் நிறைந்த அவளை மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில் அது மோகமாக மாறி, அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட செய்தியைக் கேட்டது -
இந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து “மோகமுள்” என்ற நாவலாக ஆகிவிட்டது. முக்கியமானவற்றைச் சொல்லியாயிற்று.
எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒருநாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின.

மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு ஒரு வரிகூட எழுதமுடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே! நாலு நாட்கள் வந்து நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக, படுத்து விடுகிறது.
காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் ‘குக்’கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி, எல்லாச் சிரமங்களும் விடிந்து, தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக, பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.
தொடர்கதை எழுதுவதைப் பற்றி விமர்சகர்கள் நல்ல அபிப்பிராயம் சொல்வதில்லை. எனக்குக்கூட அந்த அபிப்பிராயத்தில் சிறிது சார்பு உண்டு. ஆனால் நான் எழுதின மூன்று நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவைகள்தான். பாத்திரத்தில் பச்சைத் தண்ணீரில் கிடக்கிற காய்கறிகளை வேக வைக்க, தொடர்கதை எழுதச் சொல்லும் பத்திரிகாசிரியரின் தூண்டுதல் நல்ல தீயாக வந்து உதவிச் சமைத்துக் கொடுக்கிறது. நெருப்பை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவது நம் பொறுப்பு.
என்ன, சமையல் உபமானமாகவே இருக்கிறதே என்று நீங்கள் கேட்கிறீர்களா? முன் ஜன்மத்தில் தவசிப் பிள்ளையாக இருந்தேனே, என்னவோ, யார் கண்டார்கள்?
*
நன்றி:
கல்கி (27.08.1961)
&
சொல்வனம் இணைய இதழ்.



Wednesday, April 15, 2020

ஊரடங்கின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மை.


1. அமெரிக்கா முன்னணி நாடு அல்ல.
2. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது.
3. ஐரோப்பியர்கள் படித்தவர்கள்.ஆனால்
அவர்கள் நாம் நினைக்கும் அளவுக்கு அல்ல.
4. ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல் நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.
5. தமிழர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களை விட மிக அதிகம்.
6. பாதிரியார், மௌலவி, மதகுருமார்கள், சாமியார்களால் ஒரு நோயாளியையும் காப்பாற்ற முடியாது.
7. அரசு சார்ந்த சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், நிர்வாகப் பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் ,
கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் அல்ல.
8. தங்கம் மற்றும் எரிபொருளுக்கு நுகர்வோர் இல்லாமல் உலகில் எந்த முக்கியத்துவமும் இல்லை.
9. இந்த உலகமும் தங்களுக்கு சொந்தமானது என்று விலங்குகளும் பறவைகளும் முதல்முறையாக உணர்ந்தன.
10. நட்சத்திரங்கள் உண்மையில் மின்னும், இந்த நம்பிக்கை முதலில் பெருநகரங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டது.
11. உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலையை வீட்டிலிருந்தும் செய்யலாம்.
12. நாமும் நம் குழந்தைகளும் 'பாஸ்ட் பூட் ' இல்லாமல் கூட வாழலாம்.
13. தூய்மையான வாழ்க்கை வாழ்வது கடினமான காரியம் அல்ல.
14. பெண்கள் மட்டுமே உணவு சமைக்க வேண்டும் என்று கிடையாது.
15. பெரும்பாலான ஊடகங்கள் பொய்கள் மற்றும் முட்டாள்களின் ஒரு கூடாரம் மட்டுமே.
16. நடிகர்கள் பொழுதுபோக்குக் கலைஞர்கள் மட்டுமே,
வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள் அல்ல.
17 தூய்மையாக இருப்பதன் காரணமாக வீடு கோயிலாக மாறும்.
18. பணத்திற்கு மதிப்புக் குறைவே.

இரவுப் பாடகன் P .B .ஸ்ரீநிவாஸ்

P .B .ஸ்ரீநிவாஸ் 1947இல் மிஸ்.மாலினியில் தன் முதல் பாடலைப் பாடிய போது நான் பிறந்திருக்கவில்லை. சிறு வயதில் அவர் என் விருப்பத்துக்குரிய பாடகருமல்ல.
அந்தப் பருவத்தில் என் ஆர்வம் வீர, தீர,சாகஸப் படங்களில் மையம் கொண்டிருந்தது. குறிப்பிட்ட வயது வரை எம்.ஜி.ஆர்.தான் என் ஆதர்ஸ நாயகன். டி .எம் .சௌந்தரராஜனை மிஞ்சிய பாடகன் எவருமில்லை .1961 இல் நான் பார்த்த முதலாவது எம்.ஜி.ஆர். படமான 'அரசிளங்குமரி'யில் வரும் 'சின்னப் பயலே,சின்னப் பயலே சேதி கேளடா !' என்ற பாடல் மூலம் மனதில் அழுத்தமாகப் பதிந்து விட்டவர் அவர்.
'நான் ஆணையிட்டால்' என்று சவுக்கை சொடுக்கிய போதும், 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' எனக் கப்பல் கம்பத்தில் தொங்கிய படி கை வீசிய போதும் கதாநாயகனையும் பாடகனையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. 'குரல் வழி நடிகனான ' சொந்தரராஜனின் உரத்த தொனியும், தெளிவான உச்சரிப்பும் ,பாவமும் உற்சாகத்தைத் தூண்டிய காலம் அது. மீசை அரும்பி ,எம்.ஜி.ஆரின். 'குகை'யிலிருந்து நான் வெளியேறத் தொடங்கிய காலத்தில் இரண்டு குரல்களைப் 'புற்கள் மறைத்த பூக்கள் ' போல் கண்டு கொண்டேன் .
இனிமையும்,குளிர்மையும்,மென்மையும் ,குழைவும் கொண்ட ஏ.எம்.ராஜா, P .B .ஸ்ரீநிவாஸ் ஆகியோரின் அந்த இரண்டு குரல்களும் ஒரு காலத்து என் ஆதர்ஸ நாயகன் எம்.ஜி.ஆருக்கு அவ்வளவு பொருந்தி வராதவை . நடிப்பில் உரத்த தொனியை வெளிப் படுத்திக் கொண்டிருந்த சிவாஜிக்கும் கூட இந்த இருவரும் சரிவரப் பொருந்தவில்லை.
இந்த இருவருடைய குரல்களும் பெரும்பாலும் ஜெமினிக்கு அளவெடுத்துத் தைத்த சட்டைகள் போன்ற பிரமையைத் தந்தன .
இரைச்சல் என்பதைத் தன்னியல்பாகக் கொண்ட தமிழ்த் திரையுலகில் மிகையுணர்ச்சி நடிப்பை மட்டுப் படுத்தி ,தணிவான நடிப்பை வெளிப்படுத்திய ஜெமினி கணேசனும் , மென்மையான குரல்களைக் கொண்ட ஏ.எம்.ராஜாவும் , P .B .ஸ்ரீநிவாசும் ஒரு கோட்டில் இணைந்து கொண்டமையில் வியப்பில்லை. ரசிகர்களும் அதை வரவேற்றார்கள் .
டி.ஏ.மோதி (காணா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா / 'இதை யாரோடும் எவரோடும் நீ சொல்லக் கூடாது -அம்மா / 'ஓ மோஹனச் செந்தாமரை-மகுடம் காத்த மங்கை' ) ,ரகுநாத் பாணிக்ரஹி ('நான் தேடும்போது நீ ஓடலாமோ'-அவள் யார் ) ,புருஷோத்தமன் (தென்றலே நீ செல்வாய் -மந்திரவாதி ) போன்றே பி.பி.ஶ்ரீனிவாஸுடையதும் மிகவும் மிருதுவான குரல் . ரசிகனை அவர் பட்டுப் பாதையின் வழியாக அழைத்துச் செல்கிறார். ‘டிங்கிரி டிங்காலே’, ‘அடி என்னடி ராக்கம்மா ‘ போன்ற உரத்த துள்ளல்களை அவரிடம் எதிர் பார்க்க முடியாது . ஆனால் அவரிடமிருந்து அபூர்வமாக வெளிப்பட்ட ‘பதுமைதானா’ , ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே’ ,’நல்லவன் எனக்கு நானே நல்லவன் ‘ போன்ற உற்சாகப் பாடல்களிலும் நிதானம் கெடாத ஓர் அழகிருக்கும். அவருடைய சோகப் பாடல்களும் மாரிலடித்துக் கொண்டு எழும் ஒப்பாரி ரகங்கள் அல்ல. ரசிகனின் மனதில் மெல்லெனப் பரவும் மௌனமான சோகம் அது. அந்த நுட்பத்தை அறிய ‘நிலவே என்னிடம் நெருங்காதே ‘ ,‘உடலுக்கு உயிர் காவல்’ , ‘மயக்கமா கலக்கமா’ ,’நெஞ்சம் மறப்பதில்லை ‘, போன்ற பாடல்களைக் கேட்க வேண்டும்.
P .B .ஸ்ரீநிவாஸ் அவர்கள் பல வகைப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால் என் கணிப்பில் அவர் தன் குரலில் காதலைக் கசிய விட்ட ஓர் 'இரவுப் பாடகர்'. காதல்தான் அவருடைய பெரும் பாலான பாடல்களின் மையம். சோகம் ,ஆற்றாமை, தன்னம்பிக்கை , உயிர்த்தெழல் என்ற கிளை நதிகள் அங்கிருந்து ஊற்றெடுத்துத்தான் அவருடைய பாடல்களில் பரவிச் செல்லுகின்றன.
மென்மையான சோகத்தைப் பரவ விடும் அவருடைய பாடல்கள் பலவற்றைக் கேட்ட படி நான் தூங்கிய நாட்கள் இருக்கின்றன.
ஊரடங்கிய இந்த நாட்களிலும் அவர்தான் இரவென்ற ஆற்றைக் கடக்க வைக்கும் படகோட்டி. அவர் பாட ஆரம்பித்ததும் நான் ஆகாயத்தை அண்ணாந்து பார்க்க ஆரம்பிக்கிறேன் . மேகங்களுக்குள் ஒளிந்த நிலவை அவர் மீட்டெடுக்கிறார் . நட்சத்திரங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன .இரவு ஆற்றில் படகு நகர்ந்து கொண்டிருக்கிறது . .
(எனக்குப் பிடித்த அவருடைய பாடல்கள் சிலவற்றைக் கீழே தருகின்றேன்.)
1958- நெஞ்சம் அலை மோதுதே (மணமாலை )
1959- மலரோடு விளையாடும் (தெய்வபலம்)
1959- பதுமைதானா (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை)
1959- கனிந்த காதல் இன்பம் (அழகர் மலைக் கள்ளன்)
1959- அழகே...அமுதே – (ராஜா மலையசிம்மன்)
1960- பண்ணோடு பிறந்தது (விடிவெள்ளி)
1960- மாலையில் மலர் (அடுத்த வீட்டுப் பெண் )
1960- சிட்டுக் குருவி பாடுது (பாதை தெரியுது பார் )
1960- இன்ப எல்லை காணும் (இவன் அவனேதான்)
1960- கண்ணாலே பேசிக் (அடுத்த வீட்டுப் பெண் )
1960- தேடிடுதே (உத்தமி பெற்ற ரத்தினம்)
1960- அன்பு மனம் கனிந்த (ஆளுக்கொரு வீடு )
1960- ஏன் சிரித்தாய் ( பொன்னித் திருநாள் )
1960- நீயா நானா (மன்னாதி மன்னன்)
1961- என்றும் சொந்தமில்லை (புனர் ஜென்மம்)
1961- காற்று வெளியிடை (கப்பலோட்டிய தமிழன்)
1961- ஒரே கேள்வி – (பனித்திரை )
1961- என்னருகே நீ இருந்தால் (திருடாதே )
1961- காலங்களில் அவள் வசந்தம் (பாவமன்னிப்பு)
1961- பார்த்துப் பார்த்து நின்றதிலே- (மணப்பந்தல்)
1961- உடலுக்கு உயிர் காவல் (மணப்பந்தல் )
1981- யார் யார் யார் (பாசமலர்)
1962- சின்னச் சின்ன ரோஜா(அழகு நிலா )
1962- என்னைப் பார்த்தா (செங்கமலத் தீவு)
1962- ஒருத்தி ஒருவனை (சாரதா)
1962- அழகிய மிதிலை (அன்னை )
1962- நினைப்பதெல்லாம் (நெஞ்சில் ஓர் ஆலயம்)
1962- இந்த மன்றத்தில் (போலீஸ் காரன் மகள் )
1962- பொன்னென்பேன் (போலீஸ் காரன் மகள் )
1962- நிலவுக்கு என் மேல் (போலீஸ் காரன் மகள் )
1962- ஆண்டொன்று போனால் (போலீஸ் காரன் மகள் )
1962- ஆதி மனிதன் (பலே பாண்டியா )
1962- அத்திக்காய் காய் (பலே பாண்டியா
1962- அழகான மலரே (தென்றல் வீசும்)
1962- காற்று வந்தால் (காத்திருந்த கண்கள்)
1962- துள்ளித் திரிந்த (காத்திருந்த கண்கள் )
1962- வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
1962- கண் படுமே பிறர் (காத்திருந்த கண்கள்)
1962- கவலைகள் கிடக்கட்டும் (பந்த பாசம்)
1962- மாலையும் இரவும் (பாசம்)
1962- பால் வண்ணம் (பாசம்)
1962- மயக்கமா ,கலக்கமா (சுமைதாங்கி)
1962- மனிதன் என்பவன் (சுமைதாங்கி)
1962- எந்தன் பருவத்தின் கேள்விக்கு (சுமைதாங்கி)
1962- நினைப்பதெல்லாம் (நெஞ்சில் ஓர் ஆலயம் )
1962- ரோஜா மலரே (வீரத்திருமகன் )
1962- பாடாத பாட்டெல்லாம் ( வீரத்திருமகன் )
1962- பொன்னொன்று (படித்தால் மட்டும் போதுமா)
1962- பூஜைக்கு வந்த (பாத காணிக்கை]
1963- எந்த ஊர் என்றவளே (காட்டு ரோஜா)
1963- நினைப்பதற்கு - (நினைப்பதற்கு நேரமில்லை )
1963- அவள் பறந்து (பார் மகளே பார்)
1963- மதுரா நகரில் (பார் மகளே பார்)
1963- என்னைத் தொட்டு (பார் மகளே பார் )
1963- நெஞ்சம் மறப்பதில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
1963- அழகுக்கும் மலருக்கும் (நெஞ்சம் மறப்பதில்லை )
1963- பூ வரையும் பூங் கொடியே (இதயத்தில் நீ )
1963- யார் சிரித்தால் என்ன (இதயத்தில் நீ )
1964- நாளாம் நாளாம் (காதலிக்க நேரமில்லை )
1964- அனுபவம் புதுமை (காதலிக்க நேரமில்லை )
1964- போகப் போகத் தெரியும்- ( சர்வர் சுந்தரம் )
1964- கண்ணிரண்டும் மின்ன (பச்சை விளக்கு )
1964- நான் பாடிய பாடலை (வாழ்க்கை வாழ்வதற்கே )
1965- நீ போகுமிடமெல்லாம் (இதயக்கமலம்)
1965- தோள் கண்டேன். (இதயக்கமலம்)
1965- இரவு முடிந்து விடும் (அன்புக்கரங்கள்)
1965- செந்தூர் முருகன் கோயிலிலே (சாந்தி)
1965- சித்திரமே சொல்லடி – (வெண்ணிற ஆடை)
1965- காதல் நிலவே ( ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் )
1965- இளமைக் கொலுவிருக்கும் (ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் )
1965- ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் ( ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் )
1965- மையேந்தும் விழியாட [பூஜைக்கு வந்த மலர்]
1965- நேற்று வரை நீ யாரோ- [வாழ்க்கைப் படகு]
1965- சின்னச் சின்னக் கண்ணனுக்கு- (வாழ்க்கைப் படகு)
1965- பூத்திருக்கும் விழி எடுத்து(கல்யாண மண்டபம்)
1965- பார்த்தேன் சிரித்தேன் (வீர அபிமன்யூ )
1965- போவோம் புது உலகம் (வீர அபிமன்யூ )
1965- இரவின் மடியில் (சரசா B A )
1966- நீயே சொல்லு [குமரிப்பெண் ]
1966- காத்திருந்த கண்களே (மோட்டோர் சுந்தரம்பிள்ளை )
1966- மௌனமே பார்வையால் ( கொடிமலர் )
1966- நிலவே என்னிடம் [ராமு]
1967- கனவில் நடந்ததோ (அனுபவம் புதுமை )
1968- உன் அழகை கண்டு கொண்டால் (பூவும் பொட்டும்)
1968- தாமரைக் கன்னங்கள் ( எதிர் நீச்சல் )
1969- எங்கேயோ பார்த்த முகம் (நில் கவனி காதலி)
1969- ஆசை வைத்தால் அது மோசம்
1969- தேவி ஸ்ரீதேவி (தேவி)
-உமா வரதராஜன்


Tuesday, April 14, 2020

ஆசியாவின் முதலாவது வானொலி இலங்கை வானொலி


இலங்கை வானொலி சேவையை தொடங்கிய நாள் டிசம்பர் 16 ,1925
இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. 1922 இல், தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப்பட்ட சேவை.



ஆரம்பம்
1921 ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராவார்.
இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.
கொழும்பின் முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒலிபரப்பியைப் பயன்படுத்தி கிராமபோன் இசை ஒலிபரப்பப்பட்டது.
சோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது.
இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி அன்றைய பிரித்தானிய இலங்கை ஆளுனர் சேர் இயூ கிளிஃபர்டு என்பவரால் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோ வாற்று வலுக்கொண்ட பரப்பியை கொண்டு மத்திய அலை அலைவரிசையில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
மாணவர்களுக்கான கல்விச் சேவை நிகழ்ச்சிகள் 1931,மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டாம் உலக போரின் போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் நேச நாட்டு படைகளால் பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேசப படைகளுக்கு செய்திகள் ஒலிபரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் 1949 ஆம் ஆண்டு இலங்கை வானொலி என மாற்றப்பட்டது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
1967ம் ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது. 1966 இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37ம் இலக்க கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.
1972 மே 22 ஆம் நாள் இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்றது. இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக, தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.
புகழ்பெற்ற ஒலிபரப்பாளர்கள்
இலங்கை வானொலி தெற்காசியாவிலேயே பல சிறப்பான ஒலிபரப்பு வல்லுனர்களை உருவாக்கியுள்ளது எனலாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: லிவி விஜேமான, வேணன் கொரெயா, பேர்ள் ஒண்டாட்ஜி, டிம் ஹோர்ஷிங்டன், கிறெக் ரொஸ்கோவ்ஸ்கி, ஜிம்மி பாருச்சா, மில் சன்சோனி, கிளோட் செல்வரட்னம், அமீன் சயானி, எஸ். பி. மயில்வாகனம், தேவிஸ் குருகே, விஜயா கொரெயா இன்னும் பலர்.
இலங்கை வானொலியின் வர்த்தக சேவை
1950 செப்டம்பர் 30இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலியின் வர்த்தக சேவை இந்தியத் துணைக் கண்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இமயமலையில் உச்சியில் கால் பதித்த ஹிலறியும் ரென்சிங்கும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைத்தான் முதலில் கேட்டார்கள். கிளிஃபோர்டு டோட் (Clifford Dodd) எனும் ஆஸ்திரேலியர் இவ்வர்த்தக சேவையின் இயக்குநராக இருந்தார்.
அகில இந்திய வானொலியில் சினிமா பாடல்களுக்கு 1952 இல் இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சராக இருந்த பி.வி.கேசகர் (B.V.Kesakar) விதித்திருந்த தடை தமிழ் சினிமாத் துறையினர் தங்கள் திரைப்படம் வெளியாகும் சமயம் இலங்கை வானொலியை விளம்பரத்திற்கு முற்றாகச் சார்ந்திருக்க வைத்தது. இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு ஏற்படுத்திய தாக்கத்தைத் தணிக்க அகில இந்திய வானொலி ’விவித் பாரதி’ வர்த்தக ஒலிபரப்பை 1957 ஆம் வருடம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பித்தது.
பின்னர் அரசியல் நிலைமையாலும் தகவல் தொடர்பு சாதனங்களில் ஏற்பட்ட உலகளாவிய மாற்றங்களாலும் இலங்கை வானொலி செலுத்திய ஆட்சி இந்திய துணைக்கண்டத்தில் இழந்தது.
இசைத் தட்டுகள்
உலகில் எந்த ஒரு வானொலி நிலையத்திலும் இல்லாத அளவு ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிங்கள, தமிழ், ஆங்கிலப் பாடல்களின் இசைத்தட்டுகள் இலங்கை வானொலி கொண்டுள்ளது. 1920-30 ஆண்டுகளில் வெளிவந்த மிக அரிதான 78RPM இசைத் தட்டுகளும் (அசல்) உள்ளன.

சிற்றி எப்எம், தென்றல், ஆங்கில சேவை என்பன 2009ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் செய்திமதி தொழில்நுட்பத்தில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

Thanks Batti Express

டாக்டர்.ஆபிரகாம் கோவூரின் சவால்கள்:

ஏப்ரல் 10, 1898 -ஆபிரகாம் கோவூர் என அழைக்கப்பட்ட பகுத்தறிவாளர், உளவியலாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல பரிமாணங்கள் கொண்ட டாக்டர் கோவூர் பிறந்த நாள்.
ஆழ் மனதில் பதியப்படும் நம்பிக்கைகள் ஒரு மனிதனை அவற்றின் பால் கட்டிப் போட்டு ஆட்டிப் படைக்கவல்லவை!
பேய் பிசாசு பில்லி சூனியம் என சில மனிதர்கள் நம்பும் மூட நம்பிக்கைகளால் அவர்களின் தன்னம்பிக்கை தகர்க்கப்பட பலவீனமான சிந்தனைகளுக்கு மனிதன் அடிமையாகி மடமைச் சிந்தனை, சொல் செயல் வடிவம் கொள்கின்றான்!
எதை நம்புகிறோமோ அதுவாகவே நாம் மாற எம் ஆழ் மனதின் ஆற்றல்கள் காரணமாகின்றன!
இதையே அறிவியலில் வைத்தியர் கோவூர் நிரூபித்தார்.
பலரை மூட நம்பிக்கைகளில் இருந்து மீட்டுக் காத்தார்!

இவர், கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 1898ஆம் ஆண்டு ஏப்பிரல் 10ஆம் நாள், மார் தொம்மா சிரியன் திருச்சபையின் தலைவரான கோவூர் ஈய்ப்பெ தொம்மா காத்தனாரின் மகனாகப் பிறந்தார்.
கொல்கத்தாவில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரிவுரையாளராக இருந்த கோவூர், தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைக் கொழும்பில் கழித்தார்.
இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து 1959 இல் பணி ஓய்வு பெற்றார்.
கல்லூரிப் பணி ஓய்வு பெற்ற பின்னரே, ஆவிகள் அவற்றின் விந்தை நிகழ்வுகள் தொடர்பான தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கி இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார்.

தான் கடவுளின் அவதாரம், அல்லது தெய்வீக ஆற்றல் உள்ள மகான் என்று சொல்லும் அனைவருமே பொய்யர்கள், ஏமாற்றுவாதிகள் என்பதை நிறுவுவதே கோவூரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.
Rationalist Association of Sri Lanka என்னும் சங்கத்தைத் தோற்றுவித்து, வெகு காலம் அதன் தலைவராக இருந்தார்.
அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்டவர் கோவூர்.
ஆவி, பேய் ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்று ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவரின் உறுதியான கருத்தாகும்.
அவை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டாருள், அத்துறைப் பணிக்காக மின்னசோட்டா மெய்யறிவு நிலையம் (இப்போது இந்நிறுவனம் செயல்பாட்டில் இல்லை) கவுரவ முனைவர் பட்டம் வழங்கியது -- இத்தகைய பட்டங்களை முதலில் இருந்தே எதிர்த்து வந்த கோவூர், முனைவர் பட்டத்தைத் திருப்பி அனுப்பினார்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்முறைகள் மூலம், அவர்கள் திறமைகளை மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலட்ச சிறீலங்க ரூபாய் பரிசளிக்க அவர் தயாராக இருப்பதாக அறைகூவினார்.
தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். இறுதி வரையில் எவருமே அப்பரிசை வெல்லவில்லை.
டாக்டர்.கோவூரின் சவால்கள்:
முத்திரையிடப்பட்டுள்ள உறையின் உள்ளே ஒரு கரன்சி நோட்டின் வரிசை எண்ணைப் படித்துக் காட்டுக.
ஒரு கரன்சி நோட்டினைப் போன்று மற்றொரு கரன்சி நோட்டினை உண்டாக்கிக் காட்டுக.
கடவுள் துணையால் பாதத்தில் எவ்விதப் புண்ணோ, கொப்பளமோ ஏற்படாமல் அரை நிமிட நேரம் எரியும் தணலில் அசையாமல் நின்று காட்டுக.
நான் கேட்கும் ஒரு பொருளை ஒன்றுமில்லாமல் (சூனியத்தில்-வெற்றிடத்தில்) இருந்து உண்டாக்கிக் காட்டுக.
மனோபலத்தைப் பயன்படுத்தி ஒரு திடப் பொருளை அசைத்தோ, வளைத்தோ காட்டுக.
தொலைவில் உணர்தல் ஆற்றலைப் பயன்படுத்தி மற்றொருவன் நினைப்பதை வெளியில் எடுத்துக்கூறுக.
பிரார்த்தனை, ஆத்மபலம், புனித தீர்த்தம், விபூதி, ஆசீர் வாதம் இவை போன்றவற்றின் மூலம் துண்டிக்கப்பட்ட ஒர் உடல் உறுப்பை ஓர் அங்குல நீளம் வளரச் செய்து காட்டுக.
யோக சக்தியால் ஆகாயத்தில் எழுப்பிக் காட்டுதல் அல்லது மிதப்பது போல் செய்து காட்டுக.
யோக சக்தியால் ஐந்தே மணித்துளி ஐந்து நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுக.
நீரில் நடந்து காட்டுக.
உன் உடலை ஓர் இடத்தில் இருக்க வைத்துவிட்டு வேறு ஓர் இடத்தில் இவ்வுடலை உருவாக்கிக் காட்டுக.
யோக சக்தியால் அரை மணி நேரம் சுவாசிப்பதை நிறுத்திக் காட்டுக.
ஆழ்நிலை தியானத்தாலோ, வேறு எவ்வகை தியானத்தாலே
படைப்பாற்றல் மிக்க நுண்ணறிவையோ, பேரறிவையோ பெருக்கிக் காட்டுக.
நிழற்படம் பிடிப்பதற்காக ஓர் ஆவி அல்லது ஒர் பேயினை நேரில் தோன்றச் செய்க.
நிழற்படம் பிடிக்கும்போது படத்தாளில் பதிவாகாதவாறு உன்னை மறைத்துக் காட்டுக.
மறுபிறவியின் விளைவாலோ, நல்ல அல்லது கெட்ட ஆவிபிடித்து இருப்பதாலோ உனக்குத் தெரியாத மொழியினைப் பேசிக்காட்டுக.
பூட்டப்பட்ட அறையிலிருந்து தெய்வீக ஆற்றலால் வெளியே வந்து காட்டுக.
மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளைக் கண்டுபிடித்துக் காட்டுக.
வெறும் நீரை பெட்ரோலாகவோ, ஒயினாகவோ மாற்றிக் காட்டுக.
ஒயினை ரத்தமாக மாற்றிக் காட்டுக.
எனக்கு சாவைக் கண்டு அச்சமில்லை; எனவே, என்னை புதைக்க வேண்டாம்” என்று தன் உயிலில் எழுதி வைத்த கோவூர், தன் கண்களை ஒரு கண் வங்கிக்குத் தானமாக அளித்தார்; தன் உடலை மருத்துவக்கல்லூரிக்கு ஆய்வுக்காகவும் தன் எலும்புக்கூடு தற்சுட்டன் கல்லூரியின் அறிவியல் ஆய்வகத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்.
கோவூரின் நூல்களிலுள்ள நிகழ்வாய்வு (case study) உண்மை நிகழ்ச்சிகளை பல்வேறு நாடுகளில் பல பத்திரிகைகளும், செய்தித் தாள்களும் தொடர்ச்சியாக வெளியிட்டன.
அக்கதைகளுள் ஒன்று, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அவருடைய நூலின் மற்றொரு உண்மைக்கதை, 'நம்பிக்கை' என்ற பெயரில் தமிழ் நாடகமாகப் பலமுறை அரங்கு நிறைந்த அவையோர் முன் நடித்துக் காட்டப் பட்டது.

Saturday, April 11, 2020

சங்கடஹர சதுர்த்தி.


விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். வருடம் முழுவதும் வரும் சங்கடஹர சதுர்த்தியை விட, மஹா சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானது.
விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடியது மஹா சங்கடஹர சதுர்த்தி. இந்த விரதம் இருந்தால் ஆனந்தத்தை அடைவதோடு சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.

விரதம் இருக்கும் முறை

மஹா சங்கடஹர சதுர்த்தியன்று நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப் பெருமானின் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.
ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்துப் பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து சந்திரனை தரிசித்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். பிறகு இரவு உணவு எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் மாலையில் விநாயகப் பெருமானின் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். விநாயகர் துதி பாடல்கள், விநாயகர் அகவலை சொல்லி வழிபடலாம். 

விரதத்தின் பலன்கள்

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நோய்கள் குணமடைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் துன்பங்கள் விலகி மகிழ்ச்சியான நிலையை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் சனியின் தாக்கம் குறையும். நினைத்ததை நிறைவேற்றும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை மனமுருகி வழிபட்டு கணபதியின் அருளைப் பெற்றிடுங்கள்.