தேசியமென்பது சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை புறமொதுக்கி ஆதிக்க வர்க்க நலன்களை முதனிலைப்படுத்துவது அல்ல. மேட்டுக்குடிகளின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதற்கு பெயர் தேசியமல்ல. மாறாக பரந்துபட்டு பெரும்பான்மையாக வாழும் அடித்தள மக்களிடமிருந்து அவர்களின் பிரச்சனைகளில் மையம்கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியவாத குரலாகும். தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல. அது குறிக்கின்ற எல்லைக்குள் வாழும் முழு சமுதாயங்களினதும் வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்கவேண்டும். ஒரு தேசியவாதத்தின் தொடக்கத்தில் அந்த இனத்தின் சிந்தனை மட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் பிரச்சனைகளே முன்னிறுத்தப்படுவது சிலவேளைகளில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களது குறைபாடுகளையும் உள்வாங்கி தன்னை முற்போக்கான தேசியமாக வளர்த்துக்கொள்வதுண்டு. ஆனால் தமிழ் தேசியத்தில் அது இம்மியளவும் சாத்தியமாகவில்லை. ஒரு தேசிய இனத்தின் முதன்நிலை பண்பு கூறுகளான மொழி, நிலம், பண்பாடு, பொருளாதாரம் என்பவற்றை வெறும் சடத்துவ நோக்கில் அணுகுவதால் மட்டும் தேசிய கூட்டுணர்வை உருவாக்கி விட முடியாது.
உண்மையில் தமிழ் தேசிய கொள்கை சார்ந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் எத்தனை சிவில் அமைப்புக்கள் செயலாற்றுகின்றன?
எத்தனை தன்னுரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வேலை செய்கின்றனர்? என்று கேட்டால் என்ன பதில்?
ஆனால் தேசியவாதமென்பது இதுவல்ல. பொங்கு தமிழ் ஆரவாரம் பண்ணி மக்களை அணிதிரட்டுவதாலோ பொங்காத தமிழ் ஆர்ப்பரிப்போ செய்து தென்னிலங்கைக்கு சவால் விடுவதாலோ தமிழ் தேசியம் தழைத்தோங்க முடியாது. பூர்வீகம் பற்றிய புல்லரிக்கும் வீர வசனங்களாலோ முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுக்கின்ற ஆசாமிகளாலோ தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது.
தேசியம் என்பது பற்றி ரஷ்ய புரட்சியாளன் லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக் ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் நமக்கு புதியவையல்ல. இவையனைத்தையும் எமது முன்னோர்களே சொல்லிச்சென்றுள்ளனர்.
'துடியன்,பாணன் கடம்பன்,பறையன் என இந்நான்கல்லது குடியும் இலவே' என்கின்றது புறநானுற்று அறம்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பான் கணியன் பூங்குன்றனார் என்னும் சங்ககால தமிழ் புலவன்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பார் திருவள்ளுவர்.
இவைதான் அனைவரையும் உள்ளீர்க்கின்ற தேசிய தர்மம் ஆகும். தமிழர்தம் தேசியத்தின் போற்றத்தக்க முதிசங்கள் இவையே ஆகும். இத்தகைய அரவணைப்பிலும் அகன்று விரிந்த மனப்பான்மையிலும் உருவாகின்ற தமிழுணர்வுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும்.
தேசியவாதமென்பது இன வெறி, மதவெறி, சாதிய ஆதிக்கம், தனவந்தரதிகாரம், பிரதேச வெறி, ஆணாதிக்கம், பரம்பரையதிகாரம், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சுரண்டல், ஏகாதிபத்தியம் போன்ற அனைத்துவித அதிகாரங்களுக்கும் எதிரான ஒருமித்த குரல்களின் சங்கமமாக உருப்பெறவேண்டியதாகும். அதனுடாக சுயநிர்ணயம் கொண்ட வன்முறையற்ற சமூகநீதியுடன் கூடிய சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்பும் இலட்சிய வேட்கை கொண்டதே தேசியவாதமாகும்.
ஆனால் நமது தமிழ் தேசியமோ யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் மையத்தில் நின்றுகொண்டு இவன் பள்ளன், இவன் பறையன் அவன் வன்னிக்காட்டான், அடுத்தவன் மட்டக்களப்பு மடையன், அதற்கப்பால் சோனி, தொலைவில் இருப்பவன் தோட்டக்காட்டான் என்று வக்கணம் சொல்லி சொல்லியே தன்னை உருவாக்கியது.
பன்மைத்துவ தன்னிலைகளையும் தனித்துவங்களையும் அங்கீகரித்து உள்ளீர்ப்பதற்கு பதிலாக அனைவரையும் நிராகரித்து தனிமையப்படுத்தி வெளித்தள்ளியது.
நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும், நீர்நிலைகளையும் பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும் உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே அதன் தாற்பரியமாகும்.
அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும் மனதளவிலும் செயலளவிலும் திரளாகின்ற உணர்வே தேசிய உணர்வாகும்.
No comments:
Post a Comment