Saturday, October 28, 2017

சீசரின் சத்திரசிகிச்சை மட்டக்களப்பு_தனியார் வைத்திய கொட்டகைகளும் சில்லறை மற்றும் மொத்த வியாபார வைத்தியர்களும்

1. சீசரின் சத்திரசிகிச்சை என்பது தாய் மற்றும் சேய் இரு உயிர்கள் சம்பந்தப்பட்ட மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டிய ஆபரேஷன் ஆகும். இது செய்யப்படும் வைத்தியசாலையில் ஆபரேஷன் சிக்கலானால் தாயையும் சேயையும் பராமரிப்பதற்கு தேவையான தீவிர கவனிப்பு பிரிவு (ICU ) மற்றும் neonatal resuscitation unit அதை தொடர்ந்து குழந்தையை பராமரிக்கும் வசதிகள் காணப்பட வேண்டும். இத்தகைய வசதிகள் மட்டக்களப்பு தனியார் வைத்தியசாலைகளில் காணப்படாத நிலையில் சீசரின் சத்திரசிகிச்சை செய்வது மகப்பேற்று நிபுணர் எத்தகைய திறமைசாலியாக இருந்தாலும் உயிரிழப்பு ஆபத்தை ஏற்படுத்தும். உயிரிழப்பு ஏற்படுத்தும் காரணிகள் குறிப்பாக சேய்க்கு சில நிமிடங்களிலேயே உயிராபத்து ஏற்படலாம் என்பதால் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சிறிது நேரத்தில் எடுத்துச் செல்லலாம் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
குறிப்பிட்ட தனியார் வைத்தியசாலையில் தீவிர கவனிப்பு பிரிவு காணப்படவில்லையென்றால் இந்த வைத்தியசாலையின் நிர்வாகி தனது பொறுப்பின்மை காரணமாக ஒரு தாயைக் கொலை செய்திருக்கிறார் என்று கருதப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும். அதே நேரத்தில் இத்தகைய வசதியற்ற இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சீசரின் சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்திய நிபுணரும் அவரது குழுவினரும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நட்டஈடை செலுத்த வேண்டும்.
2. பிராந்தியத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் உரிய வசதிகள் இன்றி சத்திரசிகிச்சை மேற்கொள்வதை தடுக்கும் அதிகாரம் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளருக்கும் சுகாதார அமைச்சுக்கும் உள்ளது. எனவே இது தொடர்பான முறைப்பாடுகள் உரிய அதிகாரிகளிடம் செய்யப்படவேண்டும்
3. காலையில் அரசாங்க வைத்தியசாலையில் 1 மணி நேரம் கடமை அதன்பின் 10 மணிக்கு ஓட்டமாவடி 12 மணிக்கு ஏறாவூர் சுற்றிவந்து 5 மணிக்கு மறுபடியும் மட்டக்களப்பில் தனியார் வைத்தியசாலை இப்படியாக சுழன்றுகொண்டு தினந்தோறும் மேலதிக கடமை 4 மணி நேரம் என்று எழுதி மாதம் 75000 சம்பாதிக்கும் காசுப்பிசாசுகள் பெரிய மனிதர்கள் போல உலா வருவதை தடுப்பதற்கு உரிய முறைப்பாடுகள் வைத்தியசாலை அத்தியட்சகர் பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் திடீர் முற்றுகைப் பிரிவிடம் மேற்கொள்ளப்படவேண்டும். flying squad division தொலைபேசி இலக்கம் 011-2693610 மற்றும் 0773572891
4. இத்தகைய ஒருசிலரின் பொறுப்பற்ற செயலினால் ஏற்படும் இறப்புகள் ஒட்டுமொத்த மருத்துவர்களையும் பாதிக்கும் என்பதால் மட்டக்களப்பு மருத்துவச் சங்கம் மற்றும் வடிசாலை நலன்காக்கும் மட்டக்களப்பு தொழில்சார் வல்லுநர் மன்ற உறுப்பினர்களும் இதை வெளிப்படையாக கண்டிப்பதற்கும் மேலும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக தங்களுடைய திட்டங்களை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். மேலும் மருத்துவச் சங்கத்தில் முக்கியமான பதவிகளை வகிப்பவர்கள் மற்றும் வகிக்க துடிப்பவர்கள் ஏனைய வைத்தியர்களுக்கு முன்மாதிரியாக 8-4 மணி வரை தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளை பார்வையிடுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். தவிர்த்துக் கொள்வார்களா ?
(எனது கருத்துக்களை பிரதி செய்து முகநூலிலும் ஏனைய ஊடகங்களிலும் வெளியிடுவதற்கு இத்தால் அனைவருக்கும் அனுமதி அளிக்கிறேன்.
Dr முரளி வல்லிபுரநாதன்
சமுதாய மருத்துவ நிபுணர்

No comments:

Post a Comment