Saturday, August 5, 2017

பிறப்பதற்கு காரணம் கர்மா (பிரம்ம சூத்திரம் 3.1.8-11)


செய்த பாவ புண்ணியங்களின் பலன்களை
அனுபவிப்பதற்காகவே நாம் பிறவி எடுக்கிறோம்
ஒரு செயல் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறதா அல்லது தீமையை தருகிறதா என்பதை பொறுத்து அதன் பலனை நாம் அனுபவிப்போம். நமது அனைத்து செயல்களும் சுற்றுப்புற சூழல், தாவரம், விலங்குகள், மற்ற மனிதர்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கிறது. அந்த பாதிப்பு நன்மையாக இருந்தால் நமக்கு புண்ணியமும் தீமையாக இருந்தால் நமக்கு பாவமும் ஏற்படும்.
பாவமும் புண்ணியமும் ஒன்றை ஒன்று நீக்கிவிடாது. நாலு பேருக்கு நல்லது செய்வதற்காக அதர்மமான செயலில் ஈடுபட்டால் அது சரியாகிவிடாது. செய்த தவறுக்கு தண்டனையும் அடுத்தவர்களுக்கு செய்த உதவிக்கு உண்டான நற்பலனும் தனித்தனியே நம்மை வந்து சேரும். நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் பாவ புண்ணியங்கள் கலந்தே இருக்கும். பாவ காரியங்கள் மட்டுமே செய்து நல்ல செயல்கள் எதுவும் செய்யாத மனிதனோ அல்லது பாவத்தை முழுதாக தவிர்த்து புண்ணியகாரியங்கள் மட்டுமே செய்யும் மனிதனோ உலகில் கிடையாது. எனவே ஒரு அயோக்கியன் சுகமாக இருக்கிறானே என்று கேள்வி கேட்பதில் அர்த்தம் இல்லை. அவன் சுகமாக இருப்பதற்கு காரணம் அவன் செய்த புண்ணியம். அவன் செய்யும் கெட்ட காரியங்களுக்கு நிச்சயம் அவன் தண்டனை அனுபவிப்பான். அதே போல் நான் எப்பொழுதும் எல்லோருக்கும் நன்மை மட்டும் தான் செய்கிறேன், கடவுள் ஏன் என்னை இப்படி தண்டிக்கிறார் என்ற கேள்வியும் தவறு. பாவ புண்ணியங்களின் பலனை தனித்தனியாக அவரவருக்கு சேரவைப்பதில் இறைவன் எந்த தவறும் செய்வதில்லை.

No comments:

Post a Comment