Sunday, June 18, 2017

காலித் பின் வலீத் (ரழி)(சைபுல்லாஹ்)


இஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம், மற்றும் பரந்த மார்புகள், குறிப்பிட்டுச் சொல்லும் தகுதிகளான கழுகு போன்ற கூர்ந்த பார்வை, தொலை நோக்குச் சிந்தனைத் திறன், சிறந்த அறிவாற்றல், நல்ல நினைவாற்றல் மற்றும் உயர்ந்த சிந்தனைகள், உறுதியான கொள்கைப் பிடிப்பு ஆகிய குணநலன்களை ஒருங்கே பெற்றவர் தான் காலித் பின் வலீத் (ரழி). இஸ்லாமிய போர் வரலாற்றில் இவருக்கென தனி இடம் உண்டு. இவருக்கு நிகரான குதிரை ஏற்ற வீரரும், வாள் வீச்சு மற்றும் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகிக்கும் திறமை படைத்தவர்கள் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்தார்.



உஹதுப் போர்க்களத்தில் எதிரிகளின் தரப்பில் இருந்து கொண்டு, முஸ்லிம்களை கதிகலங்கச் செய்த காலித் பின் வலீத் அவர்கள், அல் முஃதா போரிலே முஸ்லிம்கள் தரப்பில் கலந்து கொண்டு, இஸ்லாமிய எதிரிகளைக் கதிகலங்க வைத்த பெருமைக்குரியவர்.

தன்னுடைய தனித் திறமை மற்றும் போர்த்திட்டத்தின் காரணமாக ரோமர்களைப் புறமுதுகிட்டோடச் செய்து, முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த மாவீரர். ரோமும், பாரசீகமும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் படை நடத்தி வருகின்றார் என்ற செய்தி கேட்டவுடன், அவர்களின் கைகளில் இருந்த வாள் ஆட்டம் காணும் அளவுக்கு எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை ஊட்டிய வீரத்தின் விளைநிலம் காலித் பின் வலீத் (ரழி) ஆவார்கள்.





இறைநிராகரிப்பாளர்களின் முன்பு காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பெயர் உச்சரிக்கப்படுமானால், அவர்கள் கதிகலங்கினார்கள், அவரது வலிமை மிக்க தாக்குதல்கள் அவர்களை நிலைகுலையச் செய்தன. அதன் மூலம் மிகப் பெரிய வெற்றியை இஸ்லாமியப் போர் வரலாற்றில் ஈட்டிக் கொடுத்த பெருமை காலித் பின் வலீத் (ரழி) அவர்களைச் சாரும்.

இதன் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் வாள்" என்றழைக்கக் கூடிய சைபுல்லாஹ் என்ற பட்டப் பெயரைச் சூட்டி காலித் பின் வலீத் (ரழி) அவர்களைப் பெருமைப்படுத்தினார்கள். இஸ்லாமிய வரலாற்றிலும் சரி.., இன்னும் வரக் கூடிய நாட்களின் போர் வரலாற்றிலும் சரி.., காலித் பின் வலீத் (ரழி), என்ற மாபெரும் வீரருக்கு தனிச் சிறப்பிடம் என்றென்றும் உண்டு.

வெற்றிகள் அவரது காலை வந்து முத்தமிட்டன, அவரது எதிரிகள் கூட அவரது வீரத்தை மெச்சும் அளவுக்கு அவர் தன்னிகரற்ற வீரராகத் திகழ்ந்தார்.

பிறப்பும் வளர்ப்பு;பும் மக்காவின் பனூ மக்சூம் என்ற குலத்தில் வலீத் பின் முகீரா என்பவருக்கு மகனாகப் பிறந்த காரணத்தால், அவரது பெருமைமிக்க குலப் பெருமையின் காரணமாக, இளமையிலேயே  எல்லோராலும் அறியப்படக் கூடிய மனிதராகக் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். அவரது இளமைக் காலத்திலேயே தூர நோக்கு, திட்டமிட்டு செயலாற்றுதல், எடுத்த காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றுதல் ஆகியவற்றின் காரணமாக பனூ மக்சூம் கோத்திரத்து வாலிபர்களில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தார்கள்.

உஹதுப் போர் முதல் ஹுதைபிய்யா வரைக்கும் இஸ்லாமிய எதிரிகளின் தரப்பில் இருந்த காலித் பின் வலீத் அவர்கள், இஸ்லாமிய எதிரிகளின் இராணுவத்தின் துணைப் பிரிவுக்குத் தலைவராகவும், குதிரைப் படைக்குத் தலைவராகவும் இருந்து பணியாற்றிய அனுபவமிக்க இவர், அதற்குப் பின் இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் அவரது வாழ்வை வெளிச்சமேற்றியதன் காரணமாக, பின்னாளில் இஸ்லாமியப் போர்ப்படைத்தளபதியாகப் பரிணமித்தார். இஸ்லாத்தின் எதிரிகளை நிலைகுலையச் செய்து, இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரபுப் பிரதேசத்தை விட்டும் பரவத் துணை புரிந்தார்.



தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல் இராணுவத் தந்திரங்கள் மூலமாக எதிரிகளை அச்சுறுத்தக் கூடிய தலைவர் ஒருவர் தான் இப்பொழுது நமது வீரர்களுக்கு தேவைப்படுகின்றார். எதிரிகளைத் துவம்சம் செய்யும் திட்டங்களுடன் நமது வீரர்களை வழிநடத்திச் சென்று, எதிரிகளை நிலைகுலையச் செய்வதன் மூலம் நமது வீரர்கள் சற்று மனவலிமை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். பின் படையினரின் பக்கம் திரும்பிய அவர், என்னருமைத் தோழர்களே! காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நமது தலைவராக நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று கேட்டார். அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் எங்களுக்கு தளபதியாகப் பொறுப்பேற்பதில் சந்தோஷமே என்று கூறினார்கள். இப்பொழுது, கொடியைக் கைகளில் ஏந்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், முஸ்லிம் படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

மிகவும் உக்கிரமாக நடந்த அந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக இன்னொரு வாளை மாற்றி மாற்றி, இவ்வாறாக அந்தப் போரில் ஒன்பது வாள்களைப் பயன்படுத்தி எதிரிகளைத் துவம்சம் செய்தார்.

எதிரிகளுடன் ஒப்பிடும் பொழுது, முஸ்லிம் படைவீரர்கள் மிகக் குறைந்த அளவே இருந்தனர்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தந்திரமும், போர் திட்டங்களும் எதிரிகளின் திட்டங்களை தவிடுபொடியாக்கின. ஒரு சில முஸ்லிம் வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மறைந்திருக்கச் செய்து, திடீரென போர்க்களத்திற்குள் நுழையுமாறு பணித்தார்கள். திடீரென ஏற்பட்ட இந்த போர்க்களச் சூழலில், ஏற்பட்ட புழுதிப் படலம் மற்றும் ஆரவாரம் எதிரிகளை நிலைகுலையச் செய்தது. திடீர் திடீர் என வந்து போர்க்களத்திற்குள் குதித்த முஸ்லிம்களைப் பார்த்த ரோமப் படைகள், புதிய படைப் பிரிவு வந்து கலந்து கொண்டிருக்கின்றது என்று நினைத்து, அச்சத்திற்குள்ளாயினர்.

ரோமப் படைவீரர்களின் இந்த மனநிலைத் தடுமாற்றத்தைத் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், எதிரிகளின் வளையத்திலிருந்து தனது படைவீரர்களை பாதுகாப்பான பகுதிக்கு அனைவரையும் அப்படியே, ஒதுக்கி அழைத்துச் சென்று விட்டார்கள். இதற்கு முன்பு ரோமர்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதையில் இருந்தார்கள். ஆனால், முஸ்லிம்களோ அவர்களின் ஒருவரையும் உயிருடன் போர்க்களத்திலிருந்து திருப்பி அனுப்பவில்லை. அவர்களது நம்பிக்கைக்கும் காரணமிருந்தது.

அதுவென்னவெனில், சற்று சில காலங்களுக்கு முன்பு தான் பாரசீகத்தை அவர்கள் வெற்றி கொண்டிருந்தார்கள். அந்த வெற்றிப் போதையானது, எண்ணி விடக் கூடிய அளவிற்கு இருந்த முஸ்லிம்களையும், வெகு எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற போதையை ஏற்றி இருந்தது.

இறைவன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு வழங்கியிருந்த அந்த ஆற்றல்களும், திட்டமிடல்கள், வீரம், நிலைகுலையாத தன்மை ஆகியவற்றின் காரணமாக, எதிரிகளை வென்றெடுக்கக் கூடிய ஆற்றலைத் தந்திருந்தான்.

முதல் நாள் போரிலேயே காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக மறுவாள் என்று, ஒன்பது வாள்களை அவர் மாற்றி மாற்றி போர் செய்தததைப் பார்த்து விட்ட, ரோமர்கள் இனி நாம் ஒருக்காலும் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டனர். இரண்டாவது நாள் போரில், எதிரிகளுக்கு அச்சத்தை ஊட்டி, அந்த அச்சத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதோடல்லாது, தனது படைவீரர்களை மீண்டும் ஒருங்கிணைத்து, எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதையும் அவர்கள் கண்டு விட்டு, இனி வெற்றி என்பது இல்லை என்ற முடிவுக்கே வந்து விட்டனர். மோசமான, மிகவும் ஆபத்தான இந்தச் சூழ்நிலையில் தனது படைவீரர்களை ஒருங்கிணைத்து அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதோடல்லாமல், எதிரிகளையும் நிலைகுலையச் செய்த காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திட்டம், இன்றைக்கும் உலகப் போர் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

No comments:

Post a Comment