Tuesday, October 4, 2016

கல்யாண்ஜி யின் கவிதை

அடிக்கடி
பார்க்க முடிகிறது யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண் புழுவைப் பார்த்து


காக்காய் கத்தி
இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.
காதில் விழவே காணோம்
உப்பு விற்கிறவரின் குரல்,
கோலப்பொடி விற்கிறவரின் குரல்.
என்னவோ ஆகத்தான் போகிறது
இந்த உலகத்துக்கு
இன்றைக்கு.



" உருண்டுகிடக்கிற
ஒரு பாறையின் முன்பக்கத்தை
எப்படித் தீர்மானிப்பது?
கம்பிக் கூடையில்
கடைக்காரர் வைத்திருக்கிற
முட்டைகளில் ஒன்றுக்கு
முன்பக்கம் எதுவென்று
சொல்கிறீர்களா யாராவது.
நாலாபக்கமும் பூத்திருக்கிற
நந்தியா வட்டைக்கு
எது முன்பக்கம்.
சூரியனுக்குப் பின்பக்கம்
என்று சொன்னவன்
சொல்லியிருக்கிறானா
முன்பக்கத்தைப்பற்றி.
கரையில் நிற்கும் நாம்
கடலின் எந்தப்பக்கம் பார்த்துக் கால்களை நனைக்கிறோம்.
பூவரசம்பூவின் பம்பரக்காய்
எந்தப்பக்கத்துத் தரையில்
விழுகிறது.
காற்றின் முன்பக்கம் எது.
இந்த கவிதைக்கு உண்டா
முன்பக்கம் பின்பக்கம்? "
__________________________________________
" மழை உங்களிடம்
இதுவரை ஏதேனும் புகார்
சொல்லியிருக்கிறதா
ஒரு பச்சை புழுவைக் காணோம் வெகு நாட்களாக.
ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய்விட்டதாக.
ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டதாக.
நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை
நனையக் கூடாது என்று தடுத்துவிட்டதாக.
வெளியே வந்து எதையும் பாராமல்
முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக.
இல்லை அல்லவா
அப்புறம் நீங்கள் ஏன்
மழை குறித்து
இவ்வளவு புகார்களை எல்லோரிடமும்
வீட்டுக்குள் தேநீர் அருந்திக்கொண்டே
சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.
__________________________________________
"எந்தச் சத்தமும் கேட்காமல் ஒரு கருப்பு இசைத்தட்டு சுழல்கிற  காட்சி இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது.
இரண்டு சிறகுகள் மாதிரி வெளிச்சம் பிரதிபலிக்க, வழவழப்பான
அரக்குக் கருப்பில், அவ்வப்போது ஒரு அலையில் ஏறி இறங்குகிற படகின் அசைவுடன் அது சுற்றுவது அழகுதான்.
ஒத்துக்கொள்கிறேன்.
ஆனால்
அதன் சத்தமற்ற,
ஒளிபரபப்படாத  மௌனம்
எத்தனை வதை."
__________________________________________
"தனி என்றால்,
நாங்கள் இங்கே இருக்கிறோம்
நீங்கள் அங்கே இருங்கள்.
குறுக்கே வரக்கூடாது
என்பது மாதிரி கூட இல்லை.
அது வேறு மாதிரி.
வெளியே தள்ளிக் கதவைப் பூட்டி,
சாவியையும் கடலுக்குள்
எறிந்தது போல இருக்கும்"
__________________________________________
"இந்த உலகம்
ண்ணத்துப்பூச்சி மயமானது
என்று யாரும் சொல்லவில்லை;
வண்ணத்துப்பூச்சிகளே அற்றது இவ்வுலகு என்று யாரும் சொல்ல முடியாது,
முழுக்க முழுக்க அன்பு அற்றவர்களாகி விட்டோமோ என்ன;
இன்னும் இல்லையே.
இந்த இன்னும் என்ற
வார்த்தைகளின் கீழே
வருபவைகள்தான்
என் கதைகள்"
_________________________________________
"சீட்டுக்கட்டுப்போல
இருளில் தெருவே
கலைந்து கிடக்க,
என் பாதையை நானே பொறுக்கிக்கொள்ள
வேண்டியதாகி விட்டது."
__________________________________________
"...தேவையற்ற இலைகளை உதிரும்படியாக மரமும், தேவையற்ற இறகுகள் உதிரும்படியாகப் பறவைகளும் இருக்கையில்,
-தேவையற்றதெல்லாம் உதிரும் படியாகவே வாழ்வும் இருக்கும்.
நாம் துளிர்க்க அனுமதித்தது போல, உதிர அனுமதிப்போம்.
தாவரமாக இருங்கள்.
விதை முதல் விதை வரை.
சின்னு முதல் சின்னு வரை, எல்லாம் அவ்வளவுதான்.
உங்கள் உள்ளங்கைக்குள் இருட்டு நுழைந்ததுபோல, ஒளியும் நிரம்பியிருக்கிறது என்பது எளிய உண்மை"
__________________________________________
எதிர்பார்க்கவே இல்லை
அந்தக் கவிஞரின் புதியவீட்டுச்
சுற்றுச் சுவர்களில்
எந்தப்  பறவைகளும்
பூனைக்குட்டிகளும்
அமர முடியாதபடி
கண்ணாடிச்சில்லுகள்
பதிக்க பட்டிருக்கும் என.
__________________________________________
நெடும்பொழுது
அனைத்தையும்  அணிந்து
நடக்கிறோம்.
சிறுபொழுது
எல்லாவற்றையும் களைந்து
கிடக்கிறோம்.
உயர உயரப் பறக்கிற பறவை
ஓரோர்கணம்
பறக்காமல் மிதக்கிறது.
இப்படிதான் இருக்கிறது
எல்லாமும் .

1 comment:

  1. பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete