Sunday, March 13, 2016

மட்டு-அம்பாறை மாவட்டங்களின் ஊர்ப்பெயரும் காரணமும்!



மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பழைமையான பல ஊர்கள், இயற்கைக் காரணிகளான தாவரங்கள், புவியியல் அமைப்புக்களை வைத்தே பெயரிடப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பு மான்மியம்(ம.மா) மக்கட்பெயரால் அமைந்த ஊர்களைப் பற்றியும் கூறுகிறது. சுவாரசியமான இந்தப் ஊர்ப்பெயர்களுக்கான காரணங்கள் கீழே! smile emoticon
1. அக்கரைப்பற்று –பழைய மட்டக்களப்பின் (சம்மாந்துறை) எல்லையான களியோடை ஆற்றின் அக்கரையில் இருந்த பற்று (நிர்வாகப்பிரிவு) ஆதலால் அக்கரைப்பற்று! இந்தப் பற்றின் தலைமைநகரே இன்றைய அக்கரைப்பற்று நகர். அதன் பழைய பெயர் கருங்கொடித்தீவு. கருங்கொட்டித்(ஓர் தாவரம்) தீவு என்பர்.
2. அட்டாளைச்சேனை – அட்டாளை – சேனைக்காவலில் பயன்படும் உயரமான புரண்/காவலரண்.
"முல்லைத்தீவு" என்பது அட்டாளைச்சேனையின் பழைய பெயர்.
3. ஆரையம்பதி – முன்பு ஆரப்பற்றை; இயற்கையாக நீரோடும் ஓடையை “ஆரப்பற்றை” என்னும் மட்டக்களப்புத் தமிழ்.
4. சம்மாந்துறை – சம்பான்+துறை; சம்பான்= சிறுபடகுகள். பழைய மட்டக்களப்பு நகர் சம்மாந்துறையில் அமைந்திருந்தபோது, வாவிவழியே வாணிகம், போக்குவரத்தில் ஈடுபட்ட சம்பான்கள் தரித்த துறை, சம்பாந்துறை.
(அம்பாந்தோட்டையும் இதேதான்; சம்பான்+தோட்டம்= ஹம்பாந்தோட்ட என்று சிங்களத் தோற்றம் காட்டும்.)
5. அம்பாறைவில் (அம்பாறை-அழகியபாறை; இன்று அம்பாரை),
வில் – ஈழத் தமிழில் “சிறுகுளம்” எனப் பொருள்.
மேலும் சில விற்கள்:
6. ஒலுவில்(ஒல்லிவில் – ஒல்லி;நீர்த்தாவரம்),
7. கோளாவில் - குளவில்
8. தம்பிலுவில் (தம்பதிவில் – தம்பதி நல்லாள், மட்டக்களப்புச் சிற்றரசி; தெம்பிலிவில்/தம்பல்வில் என்பாரும் உண்டு - தெம்பிலி செவ்விளநீர்/ தம்பல் வயற்சேறு.)
9. பொத்துவில்(பொதுவில்),
வடக்கே கொக்குவில், மட்டுவில் உண்டு.
10. கல்லாறு – பாறைகள் நிறைந்த ஆறு; மட்டு.வாவி அக்காலத்தில் ஆறென்றும் கூறப்பட்டிருக்கிறது. ஒல்லாந்தர் குறிப்புகள் அதை “பொலிகம்ம ஆறு”(பழுகாம ஆறு) என்கின்றன.
11. திருக்கோவில் - மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக்கோவில் என்பதால் கோயில் "திருக்கோவில்", அது அமைந்த தலமும் அதே பெயர் பெற்றது.
12. மடம் – நெடுந்தூரப்பயணத்தில் தங்கி ஓய்வெடுக்கும் இடம்.. குருக்கள்மடம்,
13. ஓந்தாச்சிமடம், ஓந்தாச்சி – ஒரு ஒல்லாந்து அதிகாரி; அவன் பணிமனை இங்கிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
14. துரைவந்தியமேடு – துரைவந்தேறிய மேடு. ஒல்லாந்தர் (அ.ஆங்கிலேயர்?) பண்டைய மட்டு.நகருக்கு முதன்முதலாக வந்து ஏறிய இடம்.
15. பிட்டி – பருத்திருப்பது, மண்மேடுகள் இன்றும் புட்டி எனப்படுவதுண்டு. மன்னன்பிட்டி(மன்னம்பிட்டி), மலுக்கம்பிட்டி(மண்கல்பிட்டி என்கிறது ம.மா)
16. மட்டக்களப்பு – மட்டமான களப்பு. மட்டுக்(சேற்று) களப்பு என்பாரும் உண்டு.
17. நிந்தவூர் – இதன் பழைய பெயர் வம்மிமடு. கண்டி மன்னர் காலத்தில் அரசபணியாளர்க்கும் பொதுமக்களுக்கும் நிலங்கள் நிந்தகம், கபாடகம் என்ற பெயர்களில் மானியமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்படி யாரேனும் தனிநபர்க்கு அல்லது மக்களுக்கு வழங்கப்பட்ட ஊர். நிந்தம் தமிழில் தனியுரிமை.
18. முனை – களப்பு அல்லது கடலுள் நீண்டிருந்த நிலப்பகுதிகள்.
கல்முனை, மண்முனை, (முறையே கல்லும் மண்ணும் மண்டிக்கிடந்த முனைகள்)
19. சொறிக்கல்முனை (சொறிக்கல் – சுண்ணக்கல் (Lime-stone), தவளக்கல் ( Laterite), மஞ்சட்கல் (Saffron-stone) கனிமப்பாறைகள்)
20. பாலமுனை, குறிஞ்சாமுனை நொச்சிமுனை, வீரமுனை, மருதமுனை
(முறையே பாலை, குறிஞ்சா, நொச்சி, வீரை, மருது மரங்கள் நிறைந்த முனைகள்; வீரமுனை - மட்டு.அரண்மனையின் காவல்வீரர்கள் நின்ற முனை எனும் ம.மா)
21. கமம் – வயல்; வயல்சார்ந்த கிராமங்கள் காமம் என்ற பெயர்பெற்றன.
இறக்காமம் – இறக்கம் – பள்ளம்.
22. சாகாமம், (சா – காய்ந்த, வறண்ட; சோழர்களின் தென்கீழ் படையரண்; பார்க்க:சூளவம்சம்.)
23. பழுகாமம் – பழகாமம் – பழச்சோலைகள் நிறைந்த ஊர். பண்டைய மட்டு.அரசிருக்கைகளுள் ஒன்று.
24. பட்டிருப்பு- மாட்டுப்பட்டிகள் இருந்த பகுதி.
25. களுதாவளை –களுதேவாலயம் (பிள்ளையார் கோயில்) அமைந்த ஊர்.
26. நற்பிட்டிமுனை – நாய்ப்பட்டிமுனை என்பர். நாப்பிட்டி(நா-நடு)முனை ஆகலாம்.
27. காரைதீவு – காரைமரத் தீவு. கடலுக்கும் வாவிக்கும் இடையே நீராற் சூழப்பட்டிருந்ததால், தீவு எனப்பட்டது.
28. சங்கமன்கண்டி – செங்கல்மண் கண்டி ஆகலாம். சங்கமரின் (வீரசைவக் குருமார்) கண்டி என்பதும் உண்டு. கண்டி – ஈழத்தமிழில் தலைநகர்.
##‪#‎மக்கட்பெயர்‬ – முதற்குடியேறிகள் அல்லது வேறு காரணங்களால் தனிநபரின் பெயரில் அழைக்கப்படும் ஊர்கள்.
29. களுவாஞ்சிக்குடி – கலைவஞ்சி என்பாள் குடியிருந்த ஊர்.
30. நீலாவணை – நீலவண்ணனின் ஊர். நீலனின் அணையும் அமைந்திருக்கலாம்.
31. பாண்டிருப்பு – பாண்டு இருந்த இடம். பாஞ்சாலி கோயிலுடன் தொடர்புறுத்துவதுண்டு
32. ஆறுமுகத்தான் குடியிருப்பு
33. காத்தான்குடி
34. கரடியன் ஆறுgen
35. சித்தாண்டி – சித்தன்+ஆண்டி இருந்த இடம்.
36. பாணமை - பாணகை என்னும் ம.மா. “பாலநகை” என்று விரித்து, ஆடகசௌந்தரியின் கதையுடன் தொடர்புறுத்தும்.
37. வந்தாறுமூலை- "பண்டாரமூலை" என்கின்றன ஒல்லாந்தர் குறிப்புக்கள். பண்டாரம் - கோயில் திருத்தொண்டர்கள், தவசிகளைக் குறிக்கும்.
38. ஏறாவூர் – பகைவர் தடைப்பட்டு ஏறாது (தாண்டிவராது) நின்றவூர் எனும் ம.மா. ஏரகாவில் என்னும் ஒல்லாந்துக் குறிப்புகள்.
39. கிரான் – ஒருவகைப்புல், கிரான்குளம், கிரான் என்று இரு ஊர்கள் உண்டு.
40. செட்டிபாளையம் – பாளையம் – தமிழ்நாட்டு ஆட்சி நிர்வாகப் பிரிவு. தமிழ்நாட்டுச் செட்டிமாரின் தொடர்பைக் காட்டும்.
41. சவளக்கடை – பண்டைய மட்டு.நகரின் அருகிருந்த வர்த்தகக் குடியிருப்பு. ஜவுளிக்கடை?
42.குருமண்வெளி - குறு(கிய) மணல் கொண்ட வெளி
43. தேத்தாத்தீவு - தேற்றா மரங்கள் நிறைந்த தீவு.

No comments:

Post a Comment