Wednesday, March 9, 2016

ஒரு பாம்பின் முட்டையை அடைக்காக்கும் சூட்டுடன்

கிள்ளிய தடம் முத்தமிடப் படும்
செந்நிறத்தில் நெய்கிறது மழை

அவ்வளவு அபத்தமாக உணர வேண்டிய
அவசியமில்லை
சிலர் அப்படித்தான் தம்மை முடித்துக்
கொள்கிறார்கள்
அதற்கு மேல் ஒன்றுமில்லை
அது அத்துணை தற்செயலானது
உங்களின் காதலுக்காக யாரோ தற்கொலைத்த
நாளும் நீண்ட காத்திருப்புக்குப் பின்னான
கரு அலசிப் போனதும்
நிச்சயம் யதேச்சையானது
அதற்கு மேல் ஒன்றும் இல்லை
இப்படி அழுவது மேலும் குற்றவுணர்வுக்கு
உள்ளாக்கும்
இனி வாழவே இயலாதென்று விஷம் அருந்திய
அதே கிழமையில் பிறிதொரு வருடம்
ஓர் மலையுச்சியில் புணர்ந்து கிடந்தேன்
இலட்சம் பேர் இறந்த அதே நாளில்தான்
யாரோ ஆயிரம் பேர் பிறக்கிறார்கள்
மேலும்
நீங்கள் உங்கள் துயரத்தில் பெருமிதம் கொள்ள
ஏதும் இல்லை
கழிவிரக்கத்தின் முள்கிரீடம்
இலட்சம் சிலுவைகளுக்குச் சமம்
நீங்கள் மனந்தேறுவீர்களாக
ஒரு பாம்பின் முட்டையை
அடைக்காக்கும் சூட்டுடன்
அந்த கண்ணீரை நீங்கள்
வழிய விட வேண்டாம்
தப்புகிறவனுடன் நீந்தும்
டால்பின்களை உங்கள்
ஸ்பரிசம் உணரட்டும்


நேச மித்ரன்

No comments:

Post a Comment