Saturday, June 7, 2014

ஏரிகளின் காவலன் பியூஷ் மனுஷ்


பியூஷ் மனுஷ் ராஜாஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்,ஆனால் தாத்தா காலத்திலேயே தமிழகத்தின் சேலம் நகருக்கு குடிபெயர்ந்த வியாபார குடும்பத்தை சேர்ந்தவர்.
இவர் பிறந்தது,வளர்ந்தது,படித்தது எல்லாமே சேலத்தில்தான்.
முற்போக்கு சிந்தனை கொண்ட இவர் கல்வி காசாக்கப்படுவதை கண்டித்து நடந்த போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இவர் படித்த கல்லூரி நிர்வாகம் இவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டது.
அதன் பிறகு சேலம் மண்ணையும்,மக்களையும் பற்றி படிக்க ஆரம்பித்தார்.
குடிக்க தண்ணீர் இல்லை என்று புலம்பும் சேலம் மக்களின் கண்ணீருக்கு காரணம்தான் என்ன? என்பதை அறிய முற்பட்டார்.
அப்போதுதான் மழைக்காலத்தில் ஒன்று நிரம்பினால் இன்னொறுக்கு என்று சங்கிலித்தொடர் போல நீர் நிரம்பிகாணப்பட்டதும்,சேலத்தின் நீர்வளத்தை பாதுகாத்து வந்ததுமான முப்பதிற்கும் மேற்பட்ட ஏரிகள் தனியாரால் வாங்கப்பட்டும்,வளைக்கப்பட்டும் நாசமானது தெரியவந்தது.
இப்போது அந்த ஏரிகள் இருந்த இடமெல்லாம் தூர்ந்து போய் பாலைவனமாகி விட்டது. கிரானைட் மற்றும் பாக்சைட் நிறுவனங்களின் கழிவுகள் கொட்டிவைக்கப்படும் ரசாயன தொட்டியாகிவிட்டது.
10 ஆண்டு போராட்டம்:
இப்படி இழந்த குடிநீர் ஆதாரங்களை மீட்டெடுக்கவேண்டும் என்று முடிவுசெய்து சேலம் மக்கள் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி கடந்த பத்து வருடங்களாக போராடிவருகிறார்.மூங்கில் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்துவரும் இவர் இதற்காக செலவு செய்யும் நேரத்தை விட சேலம் மக்கள் குழுவிற்காக செலவிடும் நேரமே அதிகம்.
போராட்டம் மட்டுமே தீர்வாகாது ஒரு ஏரியின் அருமையை இந்த சேலத்தின் மக்களுக்கும், அதிகாரத்தில் இருப்பர்களுக்கும் உணர்த்தவேண்டும் என்று முடிவு செய்தார்.
அப்போதுதான் படு மோசமான நிலையில் இருந்த மூக்கனேரியை பாரமரிக்கும் பொறுப்பு இவருக்கு வந்தது.சேலம் மக்கள் குழுவின் சார்பாக நிதி திரட்டி இந்த ஏரியிலேயே இரவு பகலாக தனது நேரத்தை செலவழித்தார்.
முதலில் பள்ளி கல்லூரி மாணவர்களை அழைத்து ஏரியின் பெருமைகளை சொல்லி தூர் வார வைத்தார், ஏரிக்கு நடுவே 48 திட்டுக்களை ஏற்படுத்தி ஒவ்வொரு திட்டிலும் 300 மரங்களை நட்டார்.
பறவைகள் சரணாலயம்:
சில மாதங்கள் சென்ற பிறகு திட்டுக்களில் மரங்கள் வளர்ந்து பலன்கள் தந்தது,வளர்ந்த மரங்களுக்கு பறவைகள் வந்து தங்கியது, இப்போது மூக்கனேரி சோலைவனமாகவும், பறவைகள் சரணாலயமாகவும் மாறி நிற்கிறது.கரைகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளோடு சேலம் குடும்பத்தினர் வந்து மகிழ்ந்து ல்கின்றனர்.எல்லாவற்றுக்கும் மேலாக ஏரியில் தேக்கப்பட்ட நீரால் இந்த பகுதியின் நீர் மட்டம் உயர்ந்து இந்த பகுதியில் தண்ணீர் பிரச்னை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதன் பிறகுதான் ஏரியின் அருமையை அனைவருமே உணர ஆரம்பித்தனர்.
இப்போது இந்த பகுதி மக்கள் ஏரியில் யாரையும் குப்பை கொட்டவிடுவது இல்லை,பிளாஸ்டிக் ,பழைய துணிகள் போன்ற கழிவுகளை விட்டெறிவது இல்லை,ஏரியை புனிதமாக கருதி கரையோரங்களில் நான்தான் மாரி (தெய்வம்) என்னை மதியுங்கள், நான் உங்களை மதிப்பேன் என்று எழுதிவைத்து ஏரியை மாரியாக வழிபட்டு வருகின்றனர்.இன்னும் இரண்டு ஆண்டுகளில் மூக்கனேரி சேலத்தின் பெருமைமிக்க இடங்களில் ஒன்றாக திகழப்போவது உறுதி.
இதற்கு பிறகு மாவட்ட நிர்வாகமே சேலம் மக்கள் குழுவை அழைத்து சுகாதார சீர்கேட்டின் மொத்த உருவமாய் காணப்பட்ட அம்மாபேட்டை ஏரியையும்,இஸ்மாயில்கான் ஏரியையும் சுத்தம் செய்து மூக்கனேரி ஏரி போல மாற்றித்தர கேட்டுக்கொண்டுள்ளது.
நல்லது செய்ய முயன்றால்:
சமூகத்திற்கு நல்லது செய்யப்போனால் எத்தனை போட்டி பொறாமை எதிர்ப்புகள் வசவுகள் வரும் என்பதை ஒவ்வொரு நாளும் நான் உணர்கின்றேன், ஆனாலும் என்னையும், என் குடும்பத்தாரையும் வாழவைக்கும் சேலத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறேன். வெறுமனே சேட்டு வீட்டு பிள்ளையாக இருந்து வியாபாரத்தில் வரும் லாபம் நட்டத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பதில் எனக்கு மனமும் இல்லை விருப்பமும் இல்லை.
தண்ணீரை மையப்படுத்தி மூன்றாம் உலகப்போர் வருவதற்கு முன்பாக நம்நாட்டில் உள்நாட்டு போரே வந்துவிடும் அபாயம் உள்ளது,இதை உணர்ந்து நீர் நிலைகளை மதித்தால் நீர்நிலைகள் நம்மை மதிக்கும், அதற்கு உதாரணம்தான் மூக்கனேரி.
சேலம் மக்கள் குழுவில் நான் ஒரு சாதாரணமானவன்தான் ஏரியை சுத்தப்படுத்த முதலில் தரப்படும் பணம் என் பணம்தான், ஏரியை சுத்தப்படுத்த முதலில் சேறு வார இறங்கும் கால்கள் என்னுடைய கால்கள்தான், ஏரியை வலுப்படுத்த முதலில் கல் சுமப்பது என் கைகள்தான்.
மூக்கனேரி, அம்மாபேட்டை ஏரி, இஸ்மாயில்கான் ஏரி போல நம்நாட்டில் ஆயிரமாயிரம் ஏரிகள் இருக்கின்றன இந்த ஏரிகளை காப்பாற்றுவதுதான் நாம் நமது அடுத்த தலைமுறைக்கு தரும் நிஜமான செல்வம் நீர் நிலைகள்தான். ஆகவே கொஞ்சம் முயன்றால் என்னைவிட சிறப்பாக செயல்பட உங்களாலும் முடியும், உங்கள் ஊர் ஏரிகளை சிறப்பான நிலைக்கு கொண்டு வர முடியும்,தேவை எல்லாம் கொஞ்சம் முயற்சியே,உங்கள் முயற்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க எப்போதும் தயராக இருக்கிறேன் என்று சொல்லும் பியுஷ் மனுஷ்டன் தொடர்பு கொள்ள: 9443248582.
via தினமலர்
by
V Nadarajan

No comments:

Post a Comment