Wednesday, April 16, 2014

நானற்ற கணங்கள்


அவன் குரல் மடிந்து என் முன் தொங்குகிறது

மின்விசிறியில் கழுத்து இறுகித் தொங்கும்

ஓர் உடலினைப்போல

தொண்டை புடைக்கக் கத்தினேன்

சொற்களால் உயிர்ப்பினைக் கீறினேன்

செத்த உடல் செத்த உடல்தான்



என்ன வாழ்க்கை என்பதில் என் மீதான அவதூறுகளை

எனக்கு நானே கூறிக்கொள்கிறேன்

பயனற்றுப்போகும் இந்தச் சரீரம்

குளிகைகளில் வெறுப்புற்று நிர்பந்திக்கும் வாழ்வில்

உயிர் நீக்க வழியற்று திகைத்திருக்கின்றது



அனுதாபமும் இரக்கமும் கவியும் பொழுதுகளில்

நானென்பதின் அவமானத்தை துடைக்கத் திசைகளற்று

மனம் செத்து சுருள்கின்றேன் பெருகும் கூச்சங்கள்

மூச்சுக்குழலை நெருக்குகின்றபோழ்தில்



நினைவு நரம்பை அறுக்கும் பார்க்காத அவன் பிம்பத்தின்

ஆழ்ந்த வேண்டுதலில் மரணம் சுவைக்கத் திளைக்கும்

ஆழ்மனதை சற்று தூரமாய் வைத்துள்ளேன் அதுவரை

நானொரு கேலிப்பொருள் உங்களின் பற்களுக்கிடையில்

நகைப்புக்குரியவனும்கூட…



விசாலமாய் விரிந்திருக்கும் மிகப் பெரிய பூமியின் முன்

ஒரு நீர்த்துளியைவிடவும் சிறிய நானை

தொலைத்துவிடுவேன் அறியாக் கணமொன்றில்..

பின் நானற்ற கணங்கள் உங்களுக்கு…
Iyyappa Madhavan



No comments:

Post a Comment