Monday, September 10, 2012

வலி திருக்கோவில் கவியுவன்




நினைவு கூரத்தக்க நாள்வரை  
வாழ்வை மீட்டிப் பார்க்கின்றேன்  
வேலிக்கம்பியில் மாட்டித் தவிக்கும்  
சொப்பிங் வேக்காய் தவிக்கிறது மனசு.
கோழியின் சிறகிடுக்கின் கதகதப்பில்  
குளிரும் வெயிலுமற்று சுகம் காணும் குஞ்சுகளாய்  
உறவுகளின் அரவணைப்பில் கடைசிப் பிள்ளை என்ற செல்ல மமதையுடன்
உலா வந்த நாட்கள்----------------
அறுத்த வயற்பரப்புத் தரும் ஏக்கத்தைப்போல்  
அவர்கள் விடுத்துச் சென்ற நினைவுகளின் தாக்கங்கள்  
உறக்கத்தின் முன்னான கடைசி நிமிடங்களில் ஒவ்வொரு நாளுமே  
ஏக்கப் பெருமூச்சாய் எனக்குள்ளே------
நத்தார் அடைமழையின் பின்  
இறுகிப்போன முற்றத்து மண்ணில்
குச்சி கொண்டு பூ வரைவேன் நான்  
கூரிய நகத்துடன் கொடும் மிருகமொன்று வரைவான் 
என் நண்பன்
அப்பா சொல்வார்
'உன்னை மிதித்துச் செல்வார்கள்
உன் நண்பன் மற்றவரை மிதித்துச் செல்வான்'  
மூன்று தசாப்தங்கள் முழுதாய்க் கடந்தது  
அப்பா சொன்னதன் அர்த்தத்தைப் புரிய.
சிறு வெள்மணலை கூட துள்ளியெழா  
கோரக்களப்பாற்றின் பேரமைதியையொத்த  
மகோன்னத தருணங்கள் நிறைந்த என் வாழ்வுக்குளத்தில்  
வந்து விழுந்த முதற்கல்லாய் அப்பாவின் மரணம்.
நீருக்குள் அணையாமல் நெருப்புக் கொண்டு செல்லும்  
தந்திரங்கள் நிறைந்த மானுடக் கூட்டத்தினுள்ளே  
நேர்கோட்டில் வாழ்வதன் கடினத்தைப்  
புரிய வைக்காமலே அப்பா சென்று விட்டார்.
அதன் பின்
ஒலிம்பிக் போட்டி நடப்பது போல  
நான்காண்டுக்கொரு முறை  
ஒவ்வொரு உறவு ஒவ்வொரு காரணமாய்  
ஒவ்வொரு பாடத்தையும் ஒவ்வொரு 
வலியையும் எனக்குள்
நிரந்தரமாய் இறக்கிவிட்டு.........




ஒரு காலத்தில்
என் வலிகளையும் மறந்து விட்டு,
இருப்பு கேள்வியாகிப்போன வாழ்வின்  
அவலத்தை வெளிப்படுத்த
என் பேனா குனிந்தபோதெல்லாம்
நான் நிமிர்ந்து நின்றேன்
அப்பாவின் தெளிவுடனும்  
அண்ணாவின் உறுதியுடனும்------
இன்றோ,
ஊழித்தாண்டவம் ஆடிய  
ஆழிப்பேரலையை விஞ்சும் வகையில்  
மானுடம் நசுக்கப்பட்டபோதும்  
உள்ளிருந்தே அரிக்கும் கறையான்போல  
கொஞ்சம் கொஞ்சமாய் சுயம் மறுக்கப்பட்ட போதும்  
ஏழு கடல்களுக்கப்பால் 
ஏதோ ஒரு சிறு மீனின் உடலில்  
உயிரைத்தங்க விட்டு 
வேறெங்கோ வாழும் அரக்கன் போல  
உணர்வைத் தோண்டிப் புதைத்தது விட்டு  
ஊமையாய் வாழும் இந்த வாழ்வின் வலி  
எல்லா வலியையும் விட மிகக் கொடுமையானது.
மன்னியுங்கள்
நானும் பழகிக் கொணடேன்  
வலியுடன் வாழ்வதற்கு.
திருக்கோவில் கவியுவன்

No comments:

Post a Comment