Monday, September 10, 2012

பின் பாதி. திருக்கோவில் கவியுவன்




நாளாக நாளாக
மனதின் உரம்மீறி
தளர்ந்து கொண்டே வருகிறது
உடம்பு
கால் குளிர்ந்து நெற்றி வியர்க்கும்  
ஒவ்வொரு கணத்துளியிலும்
செய்தாக வேண்டியவைகளின்  
பட்டியல்கள்
பயம் காட்டுகின்றன.
வெயிலைச் சட்டை செய்யாது
தார் வீதியில் கனைத்துக் குதித்துச் செல்லும்  
வெள்ளாட்டுக் குட்டியின் வேகம்  
எனக்குள் இருந்த நாட்களைத் தேடுகின்றேன்.  
மிருகங்கள் தொட்டதற்கெல்லாம்
மாத்திரை எடுப்பதில்லை என்கிறது அறிவு.
எல்லாத் தளைகளையும் அறுத்துக் கொண்டு  
நெடுங்கடல் மணல் பரப்பில் ஓடிச்சென்று  
தன்னந்தனியனாய் திரும்பிப் பார்க்க அலைகிறது  
மனசு.
வாழ்வுப் பரப்பில்
தனித்தலையும் பறவையொன்றின் துயரை  
அனுபவித்து உணரும்
மகத்தான முதிர்வு
மனசுக்குள் எப்போது வந்தது?
கற்பனை மலிந்த ஜீவிதத்தில்
சொந்த மரணத்தின் பின்னாண நிகழ்வுகளையும்  
பலமுறை திரையிட்டுப் பார்த்தாயிற்று.
பால்யத்தின்
ஆறாவடுவாய்
அப்பாவின் மரணம் துருத்திக் கொண்டே வருவதுபோல்  
இளையவனுக்கும் வந்துவிடக்கூடாதே என்ற வேண்டுதலாய் அவன் கை பற்றியே தினப்படிக்குத் தூங்குகின்றேன்.
மயக்கும் மாலைப்பொழுதையெல்லாம்  
இப்போது என்னால் ரசிக்க முடியவில்லை  
அதுவும் பகலொன்றின் பின்பாதி என்னும்  
எண்ணம் வந்து அலைக்கழிப்பதனால்.  
--திருக்கோவில் கவியுவன் (2012.08.27)

No comments:

Post a Comment