Tuesday, July 12, 2011

பக்கவாத நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்



பக்கவாதம் வந்த பின் பழைய நிலைக்கு திரும்புவது சாதாரண விடயம் கிடையாது. பெரும்பாலும் நடுத்தர வயதினரைத் தான் பக்கவாதம் தாக்கும்.
இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் பக்கவாதம் தாக்குகிறது. உடல் பருமன், அதிகக் கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்சனை உள்ளவர்களை வாதம் எளிதில் தாக்கும்.
நடுத்தர வயதினரின் உடலில் ஏற்படும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இந்த இரண்டும் தான் வாதம் ஏற்படக் காரணம் ஆகிறது. ரத்த அழுத்தத்தின் காரணமாக மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு வாத நோய் வரலாம்.
ரத்த அழுத்தத்தின் அடுத்த கட்டமாக மூளைக்கு செல்லும் சிறிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. ரத்த ஓட்டம் தடைபட்ட மூளைப் பகுதியுடன் தொடர்புடைய உடல் உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளையில் உண்டாகும் பாதிப்புக்கு ஏற்ப முகம், கை, கால் அல்லது முழு பக்கவாதம் ஏற்படலாம்.
இத்துடன் தலையில் அடிபட்டு உண்டாகும் மூளை பாதிப்பின் காரணமாக வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நாள்பட்ட நோய்களான இதய நோய், சிறுநீரகப் பழுது, அறுவை சிகிச்சையில் ஏற்படும் சிக்கல்கள், ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் ரத்தக் கட்டிகள் ஆகியவற்றாலும் வாத நோய் வரலாம்.
ரத்த சம்பந்தப்பட்ட வியாதிகளாலும் பக்கவாதம் தாக்கலாம். ரத்த ஓட்டம் தடைபட்டு சிவப்பு அணுக்கள் பிளேட் ஒன்றன் மீது ஒன்றாக படிந்து பிளேட் திரம்டஸ் ஏற்பட்டு ரத்த நாளங்கள் அடைபட்டும் பக்கவாதம் வரலாம்.
பொதுவாக பக்கவாதத்துக்கு முன்பே உடலில் சில அறிகுறிகள் தென்படும். தலைவலி, வாந்தி மற்றும் சுயநினைவை இழத்தல், கை கால் மரத்துப் போதல், பேச்சு குளறுதல், நடுக்கம், தலைசுற்றல், கை கால் வலு இழத்தல் போன்ற பிரச்னைகள் வரும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இந்த அறிகுறி தென்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, ரத்த ஓட்டம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதையும் சோதனை மூலம் தெரிந்து கொண்டு தக்க சிகிச்சை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
உடலில் உள்ள நோயுடன் எப்போதும் பரபரப்பாக மன அமைதியின்றி இருத்தல், சரியான நேரத்துக்கு தூங்காமல் இருத்தல், தொடர் மன அழுத்தம் ஆகியவை பக்கவாதம் வர வழியமைத்துக் கொடுக்கிறது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை முறையை அமைதியானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
சரியான நேரத்துக்கு தூங்குவதும், குறிப்பிட்ட நேரம் தூங்கி எழுவதும் அவசியம். சரிவிகித சத்துணவை எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் கொழுப்பு கட்டிகள் ரத்த ஓட்டத்தை தடுப்பதாலும் வாதநோய் தாக்கும். சீரான உடற்பயிற்சியும் வாதநோய் ஏற்படுவதை தடுக்கும். இதேபோல் வாதநோய்க்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பெரிய அளவிலான உடல் பாதிப்புகளை தடுக்க முடியும். வாதத்தின் அடுத்த கட்டமாக உடல் செயலிழத்தல், நினைவிழத்தல் போன்ற பிரச்னைகளை தடுக்கலாம்.

No comments:

Post a Comment