Wednesday, June 8, 2011

360 ஆண்டுகள் பிரிந்திருந்த ஓவியம் ஒன்று சேர்ந்த அதிசயம்

360 ஆண்டுகள் பிரிந்திருந்த ஓவியம் ஒன்று சேர்ந்த அதிசயம்

சீனாவில் 360 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து இரண்டாக பிரிந்த ஓவியம் தற்போது ஒன்று சேர்ந்திருக்கிறது.
சீனாவில் யுவான் மன்னர்கள் ஆட்சிக் காலத்தின்போது புகழ்பெற்ற ஓவியராக இருந்தவர் ஹுவாங் காங்வாங்(கி.பி.1269&1354). இலையுதிர் காலத்தில் சீனாவின் சேஜியாங் மாகாணத்தில் உள்ள புகுன் ஆற்றின் அழகை பிரமாண்ட ஓவியமாக வரைந்தார்.
ஓவியத்தின் மொத்த நீளம் 691.3 செ.மீ(சுமார் 23 அடி). 1348ம் ஆண்டு வாக்கில் ஹுவாங் தனது 82வது வயதில் வரைந்த ஓவியம் இது. அவரது மறைவுக்கு பிறகும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. 1650ல் தீ விபத்தில் ஓவியத்தில் தீப்பிடித்தது.
அழியாமல் காப்பாற்றப்பட்டாலும் இரு பகுதிகளாக ஓவியம் கிழிந்துவிட்டது. சினிமாவில் இரட்டையர்கள் பிரிவது போல ஓவியத்தின் இரு பகுதிகளும் பிரிந்தன. வெவ்வேறு இடங்களுக்கு சென்றன.
பின்னர் பல கைகள் மாறின. ஓவியத்தின் இடது பகுதி தைவான் தலைநகர் தைபேயில் உள்ள அரண்மனை அருங்காட்சியகத்திலும், வலது பகுதி சீனாவின் சேஜியாங் அருங்காட்சியகத்திலும் இருந்தன.
ஓவியத்தின் இரு பகுதிகளும் இணைய வேண்டும் என்று சீன பிரதமர் வென் ஜியாபோ கடந்த ஆண்டு விருப்பம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தன.
இரு அருங்காட்சியகங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டதை அடுத்து தற்போது ஓவியத்தின் இரு பகுதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு தைபே தேசிய அரண்மனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 52 அடி நீள கண்ணாடி பெட்டிக்குள் ஓவியம் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான மக்கள் பார்த்த வண்ணம் உள்ளனர்.

No comments:

Post a Comment