Saturday, April 16, 2011

நல்லவனாக இருப்பது

அருவியில் இறங்கி
ஆண் பெண் பேதம் தொலைப்பதற்கு
நண்பர்கள் அழைத்தார்கள்
போயிருக்கலாம் தான்
கால வெள்ளத்தில்
மீண்டும் நினைவு கூர்வதர்கேனும்...

வீட்டுக்குத் தெரியாமல்
போகும் திரைப்படம் ஒன்றுக்கு
நண்பன் அழைத்தான்
ஒருவேளை போயிருக்கலாம்
கடவுள் தன் நோட்டுப்புத்தகத்தில்
குறித்துக் கொண்டிருக்க மாட்டார் தான்..

வகுப்பைப் புறக்கணித்து
சினிமாவுக்கு வரும்படி
நண்பர்கள் அழைத்தனர்..
போயிருக்கலாம் தான்..
அந்த அரை நாள் பாடங்கள்
எனக்கு நோபல் பரிசை ஒன்றும் பெற்றுத் தரவில்லை ...

வெளிநாடு ஒன்றில்
நண்பர்கள் 'ஒருமாதிரியான'
'கிளப்' ஒன்றிற்கு அழைத்தனர்..
ஒருவேளை போயிருக்கலாமோ?
சில சமயங்களில் நினைத்துப் பார்த்து
புன்னகைக்கவாவது பயன்பட்டிருக்கும்..

ஒரே ஒரு வாய்
'டேஸ்ட் ' பண்ணு என்று
பார்ட்டி ஒன்றில் அழைத்தார்கள்
ஒரு வேளை பண்ணியிருக்கலாம்
காலங்கள் உருண்டோடி
தனியாக அமர்ந்திருக்கும் ஒரு
மத்தியான நாளில் அதன்
சுவை வாயில் வந்து போவதற்கேனும்..

ஒரு குத்துப் பாட்டுக்கு
நடனம் ஆடும்போது என்னையும்
உள்ளே இழுத்தார்கள்..
தப்பாகவேனும் ஆடியிருக்கலாம் தான்
மாடியில் உலாவும் போது
அந்த வேடிக்கை நடனத்தை
எண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பாய் இருந்திருக்கும்..

நாணம் தவிர்த்துக்
கேட்டு விட்ட போது ஒரு
முத்தம் தந்திருக்கலாம் தான்...
நாட்கள் நகர்ந்தாலும்
நாக்கில் அதன் அனுபவம்
சிலசமயம் வந்து போயிருக்கும்..

ஆம்
நல்லவனாக இருப்பது
நல்லது தான்..
ஆனால் என்ன
உங்கள் வாழ்வில்
சில பல அனுபவங்கள்
இழக்கப்பட்டிருக்கும் அவ்வளவே...

சமுத்ரா

No comments:

Post a Comment