Monday, January 23, 2023

இடிபஸுக்கு எதிராக டெல்யூஜ்

 டெல்யூஜும் கத்தாரியும் இணைந்து எழுதிய இடிபஸுக்கு எதிராக இந்த நூலின் தலைப்பின் விளக்கமாக முதலாளித்துவமும் மனப்பிறழ்வும் என்ற ஒரு சொற்றொடர் இருக்கிறது.

டெல்யூஜும் கத்தாரியும் ப்ராய்டின் இடிபஸ் சிக்கல் என்ற உளவியல் கோட்பாட்டை முழுமையாகத் தலைகீழாக மாற்றும் நோக்கத்தில் எழுதிய இந்த நூலில் இடிபஸ் சிக்கல் என ப்ராய்ட் சொன்னது முதலாளித்துவ நிறுவனங்களால் எதிர்வினையாற்றுகின்ற, குற்றவுணர்வை உருவாக்குகின்ற ஓர் உற்பத்தி என்கிறார்கள். ப்ராய்ட், மார்க்ஸ், நீட்ஷே என்ற மூன்று தத்துவக் கோட்பாட்டாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நூலாக இடிபஸுக்கு எதிராக எனும் இந்த நூலைக் கருதலாம். இந்த நூலில் டெல்யூஜும் கத்தாரியும் மனச்சிதைவு ஆய்வு என்ற பதத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
உளவியலின் ஆய்வை நீட்ஷே, ஸ்பைனோஜா, பெர்க்சன் போன்ற தத்துவவியலாளர்களின் கோட்பாட்டை வைத்து டெல்யூஜும் கத்தாரியும் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் ப்ளேட்டோ, தெகார்த், ஹெகலின் கோட்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும்.
டெல்யூஜும் கத்தாரியும் இணைந்து இடிபஸுக்கு எதிராக என்ற நூலின் இரண்டாம் பாகத்தையும் எழுதியிருக்கிறார்கள். ஆயிரம் பீடபூமிகள் என்ற அந்த நூலில் இருக்கும் இயல்களில் எதை வேண்டுமானாலும் முதலில் படிக்கலாம். எல்லாவற்றையும் ஒரே ஒழுங்கில் படிக்கவேண்டும் என்ற அவசியமின்றி எழுதப்பட்ட நூலாக அந்த நூல் இருக்கிறது.
மேலும் ஆயிரம் பீடபூமிகள் நூலில் ‘உருவாகுதல்,’ ‘எல்லையாக்கம்,’ ‘தவிர்த்தல்,’ ‘நாடோடித்தனம்’ உட்பட பல கோட்பாடுகளை அறிமுகப்படுத்துகிறார்கள்.

இடிபஸுக்கு எதிராக நூலிலிருந்து ஒரு மொழிபெயர்க்கப்பட்ட பத்தி:

ஒரு மன நோயாளியின் வெளி நடமாட்டத்தை நாம் கண்ணுற்ற பின்னால், சாமுவேல் பெக்கட்டின் பாத்திரங்கள் வெளியே நடைபோடும்போது என்ன ஆகிறது என்பதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
அவர்களுடைய இயக்கத்தின் வேறுபட்ட நடையும் உத்தியும் அவர்களில், அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தேர்ந்த எந்திரத்தை படைக்கின்றன. பிறகு, பெக்கட்டின் படைப்புகளில் ஒரு மிதிவண்டியின் பங்கும் இருக்கிறது: மிதிவண்டி-ஒலியெழுப்பான் எந்திரத்திற்கு, தாய்-ஆசனவாய் எந்திரத்துடன் என்ன உறவு இருக்கிறது? 'மிதிவண்டிகளைப் பற்றியும், ஒலியெழுப்பான் பற்றியும் பேச எத்தனை அமைதியாக இருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, நான் அவற்றைப் பற்றிப் பேச முனையவில்லை. ஆனால் என் நினைவு சரியாக இருக்கும் என்றால், குதத்தில் இருக்கும் துளை மூலம் என்னை இந்த உலகில் கொண்டுவந்தவளைப் பற்றிப் பேச வேண்டும்.'
இடிபஸ் என்ற பொருள் பயன்படுத்த எளிதானது, மிகவும் வெளிப்படையானது, அது துவக்கத்திலிருந்தே இருப்பது என்றுதான் கருதப்படுகிறது. அது அப்படிப்பட்டதல்ல: இடிபஸ் என்பது, விருப்ப எந்திரங்களின் அதீத அடக்குதலைக் குறிப்பிடுகிறது.
அவை ஏன் அடக்கப்படுகின்றன. எதுவரை? உண்மையில், அது போன்ற அடக்குதலுக்கு பணிந்து போவது அவசியமா, விரும்பத்தக்கதா? இதை அடைய எந்தச் செயல்முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும்? இடிபல் முக்கோணத்திற்குள் எது போக வேண்டும், அதைக் கட்டமைக்க எது தேவை? ஒரு மிதிவண்டியின் ஒலிப்பானும் என் தாயின் குதமும் அந்த வேலையைச் செய்துவிடுமா?
எனினும் இதைவிட முக்கியமான கேள்விகள் இருக்கத்தானே செய்கின்றன? குறிப்பிட்ட விளைவுகளுக்குட்பட்டு எந்த எந்திரம் அதை உற்பத்தி செய்ய முடியும்? ஒரு குறிப்பிட்ட எந்திரத்தை எடுத்துக்கொண்டால் எதற்கு அது பயன்படுத்த முடியும்?
ஜியோமிதி விவரணையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு கத்தி எதற்குப் பயன்படுகிறது என்பதை நாம் ஊகிக்க முடியுமா?
இன்னொரு உதாரணம்: என் கோட்டின் வலது பாக்கெட்டில் இருக்கும் ஆறு கற்களாலான (இந்த பாக்கெட்தான் கற்களின் மூலாதாரமாக விளங்குகிறது) ஒரு முழுமையான எந்திரத்தை எதிர்கொள்வது பற்றிப் பேசலாம். ஐந்து கற்கள் என்னுடைய கால்சட்டையின் வலது பாக்கெட்டில் இருக்கின்றன. அதன் இடது பாக்கெட்டில் (இவைக் கடத்தும் பாக்கெட்டுகள்) ஐந்து கற்கள் இருக்கின்றன. என் கோட்டின் மற்ற பாக்கெட் ஏற்கனவே கையாளப்பட்ட கற்களை ஏற்கிறது. ஒவ்வொரு கல்லும் ஒரு பாக்கெட்டை முன்னேற்றுகிறது. இந்த நிலையில், வாயும் கல்-உறிஞ்சும் எந்திரமாக இருக்கும்போது, இந்தச் சுற்றின் தாக்கத்தை எப்படி நாம் கணிக்க முடியும்? இந்த முழுச் சுற்றில் நாம் பாலியல் மகிழ்வின் உற்பத்தியை எங்குக் காண முடியும்?
மேலோன் டைஸ்(மாலோன் இறக்கிறான்)-புதினத்தின் இறுதியில் பெடல் சீமாட்டி மனநோயாளிகளை வேனிலும் படகுகளிலும் இயற்கைச் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்: ஒரு நரக எந்திரம் கட்டமைக்கப்படுகிறது. 'தோலுக்கு அடியில் உடல் என்பது ஓர் அதி சூடான தொழிற்சாலை. வெளியே, உடையும் ஒவ்வொரு துளையிலிருந்தும், நோயாளி ஒளிர்கிறான், மிளிர்கிறான்.'
Thanks

Mubeen Sadhika

No comments:

Post a Comment