ஒரு கட்டில். அதைத் தொடுவது போல மேலிருந்து தொங்கும் ஒரு கயிறு. கால்களில் அசைவு வராத ஐம்பது வயதைக் கடந்த ஒரு மனிதன் படுத்திருக்கிறான். அவன் தான் இட்டியச்சன். கயிற்றைப் பிடித்து கொஞ்சம் நிமிர்ந்து, தலையணையில் சாய்ந்து உட்கார்ந்து கொள்ள முடியும். அவ்வளவுதான் அவனது இயக்கமும் உலகமும். மலை சார்ந்த பகுதியில் சுற்றிலும் ரப்பர் மரங்கள் சூழ்ந்த அந்த வீட்டில் அவனது மனைவி, மகன், மருமகள், பேரன் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அவர்களை எதிர்பார்த்துத்தான் இருக்கிறான் இட்டியச்சன். அந்த வீட்டைத் தாண்டி காமிரா வேறெங்கும் செல்லவில்லை.
“நான் இட்டியச்சன் சாவது போல ஒரு நல்ல கனவு கண்டேன்.” என இட்டியச்சனின் மனைவி விழிப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. இட்டியச்சன் சாவதோடு கதை முடிகிறது. பார்வையாளர்களுக்கு படமே ஒரு கெட்ட கனவாக இருக்கிறது. ஆணாதிக்கத்தில் ஊறிப் போன உயிரும் உடலும் கொண்ட இட்டியச்சன் அந்த வீட்டில் உள்ள அனைவரையும் படுத்தும் பாடு இருக்கிறதே அதுதான் கதை. அந்த வீடும், தோட்டமும் இட்டியச்சனின் பேரில் இருக்கிறது. வன்மம், வக்கிரம், சுயநலத்தின் மொத்த வடிவாய் இருந்து ஆட்டிப் படைக்கிறான். அதைக் காட்சிப்படுத்தி சொல்லியிருக்கும் விதத்தில் மலையாளப்படம் ‘அப்பன்’ ( Appan ) முக்கியமானது.
சிக்கல் மிகுந்த மனித உறவுகளை நுட்பமாகச் சொல்கிறது. இட்டியச்சனின் மகன், மருமகள், பேரன் அனைவரும் நம் முன்னே வாழ்ந்திருக்கிறார்கள். “அப்பாவை நீ நல்லா பார்த்துக் கொள்வாயா?’ என இட்டியச்சனின் மகன், தனது மகனிடம் கேட்கும்போது நெகிழ வைக்கிறது. ( சோனி லைவில் பார்க்கலாம்)
Thanks
No comments:
Post a Comment