Saturday, September 11, 2021

குயில் பாட்டு


Mubeen Sadhika

குயில் பாட்டு மற்ற இலக்கியங்களிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. மெடாபிக்ஷன் எனப்படும் பின்நவீனத்துவ பாணியைப் பின்பற்றி ஆசிரியரே கதை மாந்தராகும் உத்தி இதில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சுயவரலாறு போல் சொல்லப்பட்ட காவியமாக இது இருக்கிறது. இதனை நெட்டைக்கனவு என்று இந்த இலக்கியம் சொன்னாலும் இறுதியில் இதில் வேதாந்தம் இருப்பது போல் கோடி காட்டுவது கவிதை சொல்லியின் தன்னிலையிலிருந்து சொல்லப்பட்ட ஒரு வாசகமாக இருக்கிறது. கவிதைச் சொல்லி என்ற பாத்திரமேற்பு வேதாந்தம், தத்துவம் கொண்டு இதுவரைப் பார்க்கப்பட்டது. ஆனால் இதில் மற்றொரு பொருளுறைவும் இருக்கிறது. இந்த இலக்கியத்தின் உத்தி காப்பியங்களின் முற்பிறவி கூறும் உத்தி போல் ஒரு ப்ளாஷ்பேக் போல் பயன்படுத்தப்படுகிறது. குயில் என்ற பெண் பாத்திரம் தன் முற்பிறவியைக் கூறுவதிலிருந்துதான் கவிதைத் தன்னிலை வெறும் கவிதை சொல்லி மட்டுமல்ல சேர இளவரசனுடைய மறுபிறவி என்பது தெரிய வருகிறது. ஆனால் இதில் மற்றொரு புள்ளியைக் கவனிக்கவேண்டும். இந்த இலக்கியம் முழுவதுமே முரண் இரட்டைகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல்/சாதல், ஒளி/இருள், நாதம்/சேதம், பண்/மண், தாளம்/கூளம், புகழ்/இகழ் என்பதான இரட்டைகளால் வாழ்வு விளக்கப்படுகிறது. அதே போல் பாத்திரங்களும் முற்பிறவி/இப்பிறவி என்ற இரட்டைகளைக் கொண்டிருக்கின்றன. கவிதைச் சொல்லி/இளவரசன் என்பதாக இதனைப் பார்த்தால் இளவரசனின் கதை இது என்பதாக வாசித்துவிடலாம். அல்லது கவிஞரின் சுயசரிதை இது என்பதாகவும் வாசிக்கலாம். ஒரு வகையில் இது ‘உண்மை கதை’ என்பது போலவும் மற்றொரு வகையில் ‘வெறும் புனைவு’ என்பது போலவும் இரு வேறு பட்ட தளங்களில் வாசகரைப் பயணிக்க வைக்கிறது இந்த இலக்கியம். உண்மையா புனைவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பதுதான் இந்த வகைமையிலான இலக்கியங்களின் குணாம்சம்.
கவிதை சொல்லி தன் நண்பர்கள் நடந்ததை விளக்குமாறு கேட்கும் போது குயில் என்ற பாத்திரத்திடம் பேசாமல் அதைச் சொல்ல முடியாது என்று கூறுவதும், கதை முடிந்தவுடன் கவிதை சொல்லி தன் இடத்தில் இருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல், பழம் பாய் போன்ற பொருட்களின் மூலம் இது வரை நடந்த கதை வெறும் கனவு என்பது போல் காட்ட முனைவதும் புனைவுக்கும்/எதார்த்ததிற்கும் இடையில் கதை நகர்வதைக் காட்டுகிறது. கவிதை சொல்லிக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான உறவாக இந்த கதையாடலைக் கொண்டுவிடக்கூடாது என்பதற்காக இதனை நெட்டைக் கனவு என்று சொல்லி திசைமாற்றம் செய்வது போலவும் இதனை வாசித்துக் கொள்ளலாம். ஏனெனில் இலக்கியத்திற்குள் வந்த கவிதை சொல்லிக்கும் இதனை எழுதிக் கொண்டிருக்கும் கவிஞருக்கும் இடையில் உறவும்/உறவின்மையையும் வாசகர் உருவாக்குவதான இடுகுறித் தன்மையுடன் இருக்கிறது. இதுதான் மெடாஃபிக்ஷன் எனப்படும் பாணியாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment