Tuesday, June 8, 2021

கீழ்நாட்டு மருத்துமும்- மேல்நாட்டு மருத்துவமும் - ஆனந்தம் பண்டிதர்.



(1928 ஆம் ஆண்டு மருத்துவன் இதழில் அலோபதி மருத்துவம் குறித்து ஆனந்தம் பண்டிதர் எழுதிய கட்டுரை. பொறுமையாய் படித்து பாருங்கள்)
~ தோழர் காஞ்சிஅமுதன் யோகநாதன்
மேல்நாட்டாரின் மருத்துவ முறையின்படி இங்கிலீஷ் “டாக்டர்கள்” என்னும் அலோபதி மருத்துவர்கள் , நோயைக் கண்டு பிடித்தற்கு மக்களின் இரிகம் (நெஞ்சப்பை) நெகிழ்ந்து சுருங்குவதனால் உண்டாகும் ஓசையை ஸ்டெத்தஸ்கோப் (Stethoscope) என்னும் ஒலிக்குழலைக் கொண்டு காதால் கேட்டுப் பழகுகிறார்கள். உடம்பின் வெப்பத்தைத் தெர்மாமீட்டர் (சூடாறி கருவி) என்னும் இரசக்குழலால் ஒருவாறு அறிகின்றார்கள். அவர்கள் இக்கருவிகளையே நோய்களைக் கண்டு பிடித்தர்க்கு முதல் வழியாகக் கொண்டுள்ளார்கள்.; மேற்கண்ட கருவிகள் இல்லாவிடத்து அவர்களை நோய்களைக் கண்டுபிடித்தற்கு இயலாதவர்களாகின்றார்கள்.
ஆனால் , தமிழ் மருத்துவர்கள் தமக்கு வேறாக வேறொரு கருவியின் உதவியின்றத் தம் கைவிரல்களாலேயே நோயாளியின் கைநாடியின் துடிப்பைப் பார்த்தும், மற்ற குறிப்புகளைப் பார்த்தும், வாத, பித்த, ஐயமெனும்வளி, தீ, நீராகிய முப்பொருள்களின் நிலையையும் உணருகின்றார்கள். நெஞ்சப்பை, மூச்சுப்பை, ஈரல், குடல், பிருக்கம் (மூத்திரபிண்டம்) முதலிய உள்ளுறுப்புகளின் நிலைமையையும், அவைகளைப் பற்றிவரும் நோய்களையும் காண்கின்றார்கள். இவர்கள் அலோபதி மருத்துவர்களைக் காட்டிலும் மேலாக நோய்களை நிச்சயிக்கின்றார்கள். இதனை நாம் இன்றும் கண்கூடாகக் காண்கின்றோம்.
அலோபதி மருத்துவர்கள் உடம்பிலிருந்து இரத்தத்தை வெளிப்படுத்தி இரத்த சோதனை செய்கின்றார்கள். தமிழ் மருத்துவர்கள் இரத்தத்தின் நிலையையும், நோய்களையும்இரத்தத்தை எடுத்துப் பார்க்காமல் மேற்கண்ட சோதனைகளால் நிச்சயித்த நோய்களை நீக்குகிறார்கள். அலோபதி மருத்துவர்கள் கால் ஒடிந்தவர்களுக்கும், கை ஒடிந்தவர்களுக்கும்ஒடிந்த பகுதியை வெட்டி எடுத்துவிடுகிறார்கள்.. நாட்டு மருத்துவர் ஒடிந்த எலும்புகளையும், நொறுங்கிய எலும்புகளையும் ஒன்று சேர்த்து ஒட்டும்படி மேல்மருந்தாலும், உள்மருந்தாலும் வைத்தியம் செய்கின்றார்கள். அலோபதி மருத்துவர்கள் அறுத்து மருத்துவம் செய்ய வேண்டுமெனக்கூறும் நோயாளர்களில் பலருக்குத் தமிழ் வைத்தியர்கள் அறுக்காமலே வைத்தியம் செய்து நோய் நீக்குகின்றார்கள். ஆதலால், அலோபதி வைத்தியர்கள் சித்த வைத்தியத்தையும் கற்பது இன்றியமையாததாகும் . அதன்பிறகுதான் மேனாட்டுப் புதிய மருத்துவ நூலுக்கும், இந்திப் பழைய மருத்துவ நூலுக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை உலகம் அறியும்.
மேல்நாட்டாருடைய மருத்துவ நூல் பரு (ஸ்தூல)ப் பொருள்களைப் பற்றியே நிற்பது. ஆனால் நம் நாட்டு மருந்துவநூல் நுண்பொருளாகிய யோகஞானத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது.. அறிவின்மயமாகிய சித்த மருத்துவ நூலின் பெருமையை யாரே அறிதற்கு வல்லார்! அவ்வித்தகச் சித்தர்களல்லரோ நம்மருத்துவ நூலின் பெருமையை அறியவல்லவர்.? அவர்களே நாடியை முற்றும் அறிவர். இதனை , “நாடி முற்றும் அறிந்தவர் சித்தரே” என்ற பாடலாலும் நன்குணரலாம்.
எழுபத்ஈராயிர நாடியவற்றுள்
முழுபத்து நாடிமுதல்
எனவும்,
சொல்லிய உந்திதன்னில் கழித்த தோர் எழுத்தைப்பற்றி
எல்லையி லெழுந்தபடி எழுபத்தீரா யிரத்துள்
வல்லவர் புகலுநாடி பத்ததில் ஏழுநீக்கி
நல்லதோர் நாடி மூன்றும் நலமுடன் அறிந்துபாரே
எனவும் சித்தர் கூற்றுப்படி மக்கள் உடம்பில் எழுபத்தீராயிரம் நாடி நரம்புகளிருக்கின்றன. அந்நாடிகளெல்லாம் பத்துநாடிகளில் அடங்கும். அப் பத்துநாடிகளும் மூன்று நாடிகளில் அடங்கி ஒடுங்கும் என்பது நம் சித்தர்கள் கண்டறிந்த உண்மையாகும். இந்நாடி, உயிர்ப்புடன் (மூச்சுடன் ) கலந்து பிரியாமல் நடைபெறுகின்றன. நாளொன்றுக்கு ( இரவு பகல்) மூக்கின் வழியாக நடைபெறும் மூச்சு இருபத்தோராயிரத்து அறுநூறு அதில் ஒரு தடவை வெளிப்படும் மூச்சின் அளவு பன்னிரண்டு அங்குலமாகும். அதில் நான்கு அங்குலம் வெளியே கழிய எட்டங்குல மூச்சே உட்செல்கின்றது. இந்த நான்கு அங்குலத்தைப் பாழாக்காமல் உட்செலுத்தும் வழிகளையும், இதனால் பிணி, மூப்பு, சாக்காடு, இல்லாமல் நெடுநாள் இருக்கும் வழிகளையும், நமது தமிழ் மருத்துவ நூலே செவ்விதின் உரைக்கின்றது. மக்களுக்கு எலும்புகள் ஐந்நூற்றுப் பத்தெனவும், நோய்கள் நாலாயிரமெனவும், உடம்பில் மூன்றரைக்கோடி மயிர்க்கால்களிருக்கின்றனவென்றும், அவைகளின் வழியே வாயுவின் போக்குவரவு உண்டெனவும் நமது நூல் கூறுகின்றது.
மயிர்கால் வழியெல்லாம் மாய்கின்ற வாயு
உயிர்ப்பின்று உள்ளே பதி
என வாயுதாரணையில் கூறப்படுகிறது.
மயிர் குழலாக விருப்பதால் மயிருக்குக் குழல் என ஒரு பெயர் தமிழில் இருப்பதையும் நமது தமிழ் மருத்துவ நூல்களால் நாம் நன்கறியலாம்.
இவ்வளவு அருமையுள்ள சித்தர்களின் மருத்துவ நூல்களை நன்றாகக் கற்று அனுபவத்தறிய வேண்டுமேயன்றி, சாத்திரமுறைகளை அறியாத ஒருவருக்கு இதன் பொருள் விளங்குதல் இயலாத காரியமாகும்.
தமிழர்கள் பண்டைக்காலம் முதல் பழகி அனுபவித்து வரும் தமிழ் மருத்துவமானது தமிழ்நாடு மட்டுமேயல்லாது, அசோக சக்கரவர்த்தி காலத்தில் , இந்தியா முழுவதும், இலங்கைத்தீவு முழுவதும், மேற்கில் மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா வரையிலும், பினாங்கு, சிங்கப்பூர் முதலிய கிழக்கிந்தியத்தீவுகள் வரையிலும் பரவி வளர்ந்து இக்காலத்தும் உயிருடனிருந்து வருகிறது. நம்முடைய மொழியையும், நம்முடைய மருத்தவம், ஓவியம் முதலான தொழில்களையும் பாதுகாத்து வளர்க்க வேண்டியவர் அரசாங்கத்தினரே யாவர். நமது நூல்களிலுள்ள பெருமைகளை அரசினருக்கு எடுத்துச் சொல்வதும் நம்முடைய கடமையே யாகும். ஒவ்வொரு நாட்டுக்கலைகளிலும் ஒவ்வொர் உண்மையிருக்கிறதென்பதை எவரும் மறுக்கமுடியாது. கீழ்நாட்டுக் கலைகள் மேல்நாட்டுக் கலைகள் ஆகிய இவ்விரண்டும் இருநாட்டினருக்கும் இன்றியமையாது வேண்டப்படுவனவேயாம். ஒருவன் ஒரு கட்டடத்தின் வெளித்தோற்றங்களையே பார்த்துக் கொண்டு உள்ளே சென்று காணவேண்டியதைக் காணாமலிருக்கிறான். மற்றொருவன் உள்ளே நடைபுறும் அற்புதங்களைக் கவனித்துக் கொண்டு வெளியில் உள்ள சங்கதிகளையே மறந்துவிடுகிறான். ஆதலின், இவ்விருவரும் கலக்க வேண்டுவது அவசியமாகும். அதனால் உலகத்துக்கு நன்மை பெரிதும் உண்டாகும். நம்முடைய மருத்துவநூல், நீதிநூல், ஞானநூல், சமயநூல் முதலியவைகளை மேல் நாட்டார் கற்க வேண்டும்.நாம் நம்முடைய நூல்களோடு நில்லாமல், இவுவலக வாழ்க்கைக்கு இன்றியமையாம மேல் நாட்டார்களுடைய கலைகளையும் கற்கவேண்டும். அப்போது தான் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் முதலியன உலகமுழுவதும் பரவும். நம்முடைய தமிழ் மருத்துவ நூல்கள் உலகம் முழுவதும் பரவுவதற்கு, நாம் தாராளமாக இடம்கொடுக்க வேண்டும். நமக்கு தெரிந்ததை மற்றவர்கள் அறியக்கூடாதென்னும் குறுகிய குணத்தை அறவே விடவேண்டும். அப்போது தான் நம்முடைய நீதிநூல், யோகநூல் முதலியவைகளில் சில பகுதியைக் கண்டறிந்த அமெரிக்க நாட்டாரும், மற்ற மேல்நாட்டாரில் பலரும் அவற்றை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றார்கள். நீதிசாஸ்திரங்களான திருக்குறள், நாலடியார் முதலியவைகளையும், தோத்திரங்களில் திருவாசகம் முதலியவைகளையும் ஆங்கிலத் துரைமகனாராகிய ரெவரண்ட்போப் முதலானவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தமது நாட்டார் எல்லோரும் அதன் அருமையை அறியும்படி செய்துள்ளார்கள். மிகச் சிக்கலானதும், விரிவானதும், நுட்பமானதுமான தமிழ் மருத்துவ நூலை மேல்நாட்டு நன்மக்கள் நன்றாக அறிந்து மகிழும்படி நாம் செய்ய வேண்டும். இதனை இன்றுவரை நாம் செய்யவியலாமலிருக்கின்றோம். ஆதலால், நமது தமிழ் மருத்துவமும் உலகில் பெருமையடையவில்லை.
தமிழ் மருத்துவத்தில் மணி, மந்திரம், மருந்து என மூவகைச் செய்கையையும் நோயாளிகளுக்குச் செய்ய வேண்டும் எனக் கூறுகின்றது. சரநூல், ஐம்பறவை, (பஞ்சபட்சி) தூதிலக்கணம், நாள்கோள்நிலை, விடமருத்துவம், மருத்துவம் முதலியவைகளை அறிந்தவனையே பண்டிதன், மருத்துவன், பரிகாரி, நாவிதன் எனக் கூறுவது மரபு. இவைகளை மேல்நாட்டார்களுடைய நூல்களில் காணவியலாது. மேல்நாட்டார் புதிதாகக் கண்டுபிடிக்கும் விஷயங்களெல்லாம் நமது வைத்திய சாஸ்திரத்திலிருக்க வேண்டுமெனில் அது எப்படி இயலும்? அரசாங்கத்தார் நமது வைத்தியத்தை வளர்ப்பது என்பதற்கு அருத்தமென்ன? நந்தமிழ் மருத்துவ நூல்களிலுள்ள நுட்பமான பொருள்களெல்லாம் கற்போரின்றி நாளுக்கு நாள் மறைந்தொழிகின்றன. இப்போதுள்ள நமது நாட்டு மருத்துவர்களில் பலர் அப்பொருள்களை அறியாது வைத்தியம் செய்கின்றார்கள். அவர்கள் எப்படியாயினும் பணம் சம்பாதிப்பதற்கான முயற்சியையே மிகப் பெரிதும் செய்கின்றார்கள்.
சோதிடம் பஞ்சபட்சி துலங்கிய சர நூல்மார்க்கம்
கோதுறு உடம்பின்கூறும் கொடியதாம் நோயின்கூறும்
தீதிலாப் பொருளின்கூறும் செய்வகை மருந்தின்கூறும்
ஈதெல்லாம் கற்றுணர்ந்தோர் இவர்களே மருத்தராவார்.
என்று நமது மருத்துவ நூல்கள் மருத்துவரிலக்கணத்தைக் கூறுகின்றன.
நாள், கோளாகிய சோதிடம், ஐம்பறவை,சரம், மந்திரம் முதலிவைகள் நோயளர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டுவதில்லை.என மேல்நாட்டாரில் பலரும் நமது கீழ்நாட்டாரில் சிலரும் தற்போது சொல்கின்றனர். ஒரு நாட்டில் ஒரு காலத்தில் மக்களின் மனோநிலைக்குத் தக்கவிதமாக அக்காலத்துப் புலவர்கள் நூல்கள் எழுதி உள்ளார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. இஃது எந்த நாட்டிற்கும் பொதுவான விஷயமாகும். காலத்துக்கு காலம் மக்களின் கருத்து மாறுபட்டுக் கொண்டேவரும். சாத்திரங்களும் மாறும். நமது நாட்டில் மணி, மந்திரம், பஞ்சபட்சி, சரம்பார்த்தல் முதலியவைகளை பொதுமக்களின் மனதைவிட்டு நீங்கவில்லை. பெண்களைப் பேயோடவைப்பதும், கோணங்கி வைத்து உடுக்கை அடித்துக் குறி கேட்பதும், பல தேவதைகள் மக்கள் மீது ஊடுருவிப்பாய்ந்து கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லி மலையேறிப் போவதும் நடைபெறுகின்றன. கோழி, ஆடு முதலியவைகளைப் பலியிட்டு அத்தெய்வங்களை மகிழ்வித்தல் முதலிய இழிவான செய்கைகளை இன்றும் குறையாமல் நடைபெற்றுவரும் நம்நாட்டில் மக்களின் மனோநிலை எவ்வளவு கீழானநிலையிலிருகிறதென்பதை நாம் உணர வேண்டும். மணி, மந்திரம் முதலியவைகளை நாம் ஒழிக்க முயன்றாலும் உலகம் ஒழிக்கத் தயாரில்லை. ஆதலால் நமது நாட்டில் மக்களின் மனோபாவத்திற்குரிய பரிகார முறைகளை மோசம் போகாமல் ஜனங்கள், கல்வி அறவுள்ளவர்கள் மூலமாக அடையும்படி செய்ய வேண்டியது இன்றியமையாத்தாகும்.
பண்டைக்காலப் பரம்பரை மருத்துவர்களைப்போல் முறையாகக் கற்று, தக்க மருத்துவர்களிடத்தில் பழகி மருத்துவம் செய்வர்களை இக்காலத்தில் காண்பது மிகவும் அறிதாகிவிட்டது. ஆதலால் அரசாங்கத்தார் ஏற்படுத்தியுள்ள மருத்துப் பள்ளிக்கூடத்தில் மேல்நாட்டு நவீன சாஸ்திர முறையையே கற்றுக்கொடுக்கும் ஆங்கில மருத்துவப் பள்ளிக்கூடங்களைப்போல் நடத்தாமல், தமிழ் மருத்துவ நூல்களிலுள்ள நுண்பொருள்களையும், நோயணுகா விதிகளையும், பிராணாயாமம் என்னும் மூச்சுப் பழக்கத்தையும், மாணவர்களுக்குக் கற்பித்து உலகத்தில் மிகுந்துள்ள அகாலமரணம், கொள்ளைநோய்கள், மக்களுக்குப் பொதுவாக ஏற்பட்டுள்ள பலக்குறைவு முதலியவைகளை ஒழித்துத் துன்பத்தை நீக்கப்பெரிதும் கேட்டுக்கொள்கிறோம். – 1928 நவம்பர் மருத்துவன் இதழ் பக்கம் 29-34.
-பக்கம் 39 ஆனந்தம் பண்டிதர் சித்த மருத்துவரின் சமூக மருத்துவம். பதிப்பாசிரியர் கோ.இரகுபதி.-காலச்சுவடு பதிப்பகம்.வெளியீடு.
Thanks

Kutti Revathi

No comments:

Post a Comment