Thursday, December 31, 2020

ROOBHA கனேடியத் தமிழ்ச் சினிமா

Karunakaran Sivarasa
திரைஅழகியலின் உச்சத்தில் எரியும்
திருநங்கை வாழ்வின் பயணவெளி
----------------------------------------------
A GUN & A RING, 1999 என கவனத்திற்குரிய திரைப்படங்களைத் தந்த லெனின் M சிவத்தின் மற்றொரு படம் ROOBHA. அவருடைய வழமையைப்போல, சவால் மிக்க மேலும் கடினமான, கவனத்திற்குரியதொரு பரப்பைத் தேர்ந்திருக்கிறார் M சிவம்.
A GUN & A RING போல இதுவும் ஒருவகையில் கனேடியத் தமிழ்ச் சினிமாவே. கனேடியத் தமிழ்ச்சினிமா என்று ஏன் விசேடமாக குறிப்படுகிறதென்றால், கனடாவில் வாழ்கின்ற தமிழ்ச் சமூகப்பரப்பின் உள்ளடக்குகளைப் பெரும்பாலும் இந்தப்படமும் திறக்க முற்படுகிறது என்பதால். ஆனால், தனியே கனடாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ்ச்சமூகத்திற்குள் இது மட்டுப்படுவதில்லை. அப்படி மட்டுப்படுத்தப்படுவதுமில்லை. பதிலாக கனடியச் சூழலின் (Multicultural social environment) யதார்த்தத்தோடு தமிழ் வாழ்வின் உள்ளடக்குகள் காண்பிக்கப்படுகின்றன.
M சிவத்தின் பார்வையே அதுதான். தன்னுள் குறுகிக் கொள்ளாமல், விரிந்து நோக்குவது. அப்படி விரிந்து நோக்கும்போது அவருடைய படங்களில் தமிழ்ப்பரப்பையும் மேவிய கனேடிய அடையாளம் உருவாகிறது. A GUN & A RING, ROOBHA உள்ளிட்ட M சிவத்தின் படங்களின் பொதுக்குணம் இதுவே. இதனால் தமிழ்ப்பரப்பிற்கு வெளியே அல்லது அப்பால் அவருடைய படங்கள் (சினிமா) எழுந்து நிற்கின்றன. இதனால்தான் M சிவம் முக்கியமான கலை ஆளுமையாகவும் கவனத்திற்குரிய இயக்குநராகவும் கணிக்கப்படுகிறார். அவர் வெற்றி பெற்றுச் செல்லும் அடிப்படைகளில் இதுவும் ஒன்று.
ROOBHA வில் M சிவத்துடன் இணைந்து செயற்பட்டிருக்கிறார் எழுத்தாளர் ஷோபசக்தி. ஷோபாசக்தியின் பங்களிப்புகள் கதை, திரைக்கதை உருவாக்கத்திலும் மையப்பாத்திரமொன்றுக்கான நடிப்பிலுமாக உள்ளன. அதோடு இந்தப்படத்தின் தமிழ்ப்பாடலையும் ஷோபாசக்தியே எழுதியிருக்கிறார்.
புனைவெழுத்துகளின் வழியாகச் சாதனைப் பரப்புகளில் உலவிக் கொண்டிருக்கும் முதன்மை எழுத்தாளர் ஷோபாசக்தி. சமகால ஈழத் தமிழ் வாழ்வின், அதனுடைய போராட்டத்தின்  அல்லாடல்களின் உட்பரப்பையும் அது சந்திக்கும் நெருக்கடிகளையும் துணிச்சலோடும் அமர்க்களமான கேலிப்படுத்தலோடும் எழுதும் கலைஞர். அதேவேளை M சிவத்தைப்போல அவரும் தமிழ்ப்பரப்பிற்கு வெளியேயும் தன்னுடைய புனைவெல்லையை விரித்துச் செயற்படும்  ஆளுமை. தன்னடையாளத்தைப் புனைவுகளின் வழியாக வெளியுலகில் ஏற்றியிருப்பவர். கூடவே புனைவுகளோடு அண்மைய ஆண்டுகளில் சினிமாவிலும் ஷோபாசக்தியின் பங்கேற்பு வியப்பூட்டும் வகையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. THEEPAN ஐத் தொடர்ந்து ROOBHA இவற்றுக்கு இன்னொரு அடையாளம், ஆதாரம்.
ஆகவே லெனின் M சிவம், ஷோபாசக்தி என்ற இரு ஆளுமைகளின் கூட்டு விளைவே ROOBHA. கனடாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ்க் குடும்பமொன்றைச் சேர்ந்த இளம்பருவத் தமிழ்த் திருநங்கை ஒருவரின் வாழ்க்கைச்  சிக்கல்களையும் சவால்களையும் திரையில் வடிவமைத்து நம்மிடையே பரப்பி விடுகின்றனர் இருவரும்.
தமிழ்க் குடும்பங்களிலும் அதனுடைய சமூக வெளியிலும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ வாழும்போது எதிர்கொள்கிற சிக்கல்களும் சவால்களும் கூட ஏராளமானவை. இதில்  வளரிளம் பருவத்துச் சவால்களும் நெருக்கடிகளும் இன்னும் அழுத்தமானவை. இதற்கப்பால் Transgender (திருநங்கை) ஆக இருப்பதென்பதும் வாழ முற்படுதலென்பதும் நினைத்துப் பார்க்கவே முடியாத கடுமைகளைக் கொண்டது.  அந்தளவுக்கு கொடுமையும் ஆய்க்கினையும் நிரம்பிய ஆழத்துயர்குழி  அது. இது ஈழத்திலோ இந்தியாவிலோ என்றில்லை, தமிழ் மனதோடு புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழ்ந்தாலும் எந்த வேறுபாட்டையும் கொள்வதில்லை. இதையே பேசுகிறது ROOBHA.
கனடாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ்க்குடும்பத்தின் மூத்த மகன் கோகுல். (அப்படித்தான்  ROOBHA வின் அறிமுகம் நிகழ்கிறது). ஆனால், கோகுல் அப்படியிருக்கவில்லை. அப்படியிருக்க முடியாமல் தத்தளிக்கிறார். அவரோ  தன்னியல்பின்படி ROOBHA வாக, Transgender என்றாக  விரும்புகிறார். அதற்கு வீட்டில் (குடும்பத்தில்) இடமில்லை. முக்கியமாக அவருடைய தந்தையால் இது வலிமையாக மறுக்கப்படுகிறது. தந்தையை மீறி வேறு யாரும் குடும்பத்தில் எதையும் தீர்மானிக்க முடியாது. சராசரித் தமிழ்க்குடும்பங்களின் மனநிலையும் வழமைகளும் இப்படித்தான் மரபு அல்லது பாரம்பரியம் என்ற சமூகச் சூத்தரத்தில் கட்டுண்டு இறுகிக் கிடப்பது என்பதால், ரூபா என்ற புதிய முளைக்கு அங்கே இடமில்லாமல் போகிறது.
பிள்ளையின் விருப்பத்தையும் அதன் நிலைமையையும் விட ‘வெளியுலகம்’ என்ற தம்மைச் சுற்றிய “சமூக மனநிலை“யே குடும்பத்தினருக்கு, குறிப்பாகத் தந்தைக்கு  முக்கியமாகத் தோன்றுகிறது.
இதனால் வீட்டுக்கு அப்பாலான வெளியைக் கோகுல் - ROOBHA தெரிகிறார். ஆனால், வீட்டின், குடும்பத்தின் இறுக்கமில்லையே தவிர, வீட்டை விட்டு வெளியே வந்தாலும் வெளிச் சூழலும் அத்தனை எளிதாகவும் உவப்பாகவும் இருப்பதில்லை Transgender களுக்கு.  இந்த நிலையில் இந்த வெளிப்பரப்பில் ROOBHA எதிர்கொள்கின்ற நெருக்கடிகள், வாய்ப்புகள், சவால்கள் எப்படியாக இருக்கின்றன? என்று காணவும் காண்பிக்கவும் முயற்சிக்கிறது ROOBHA.
வெளிப்பரப்பில் ROOBHA  சந்திக்கும் பல்வேறு ஆண்களில் அன்ரனியுடன் கூடுதல் நெருக்கம் ஏற்படுகிறது. அன்ரனியும் ஒரு ஈழத்தமிழ்க் குடும்பத்தவரே. இரண்டு பெண் பிள்ளைகளின் மத்திய வயதை நெருங்கும் தந்தை. காதலித்து திருமணம் முடித்த மனைவி. அவருடைய குடும்பம்  இறுக்கமான மரபுச் சிக்கல்களுக்குள் அலைக்கழிந்து கொண்டிருப்பதில்லை என்றாலும் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையை அது நெகிழ்வுத் தன்மையுடன் அனுசரிப்பது.
அன்ரனிக்கும் ROOBHA வுக்கும் இடையில் அவருடைய Pub இல்  நிகழ்கின்ற அறிமுகம் ஈர்ப்பாகி, பால் வேட்கையாக பரிணமிக்கிறது. ஆனால், எதிர்பார்த்தமாதிரி ROOBHA பெண்ணாக இல்லை என்ற ஏமாற்றம், அன்ரனியைத் தடுமாற வைக்கிறது.  ROOBHA வைத் தாக்கி விட்டு அந்த உறவை மறுத்து வெளியேறுகிறார். ஆனாலும் பின்னர் அது ஏதென்றறியாத விதியைப்போல வேறுவிதமாகித் தொடர்கிறது.
இதனால் அன்ரனியின் குடும்பம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், ROOBHA க்கும் அன்ரனிக்கும் இடையிலான நெருக்கம், இருவருக்குமிடையிலான பாலுறவின் ஈடுபாடுகள், உருவாகும் அன்பு, அதன் வழியாக உருப்பெறும் மாறாத காதல், அன்ரனியின் மனைவிக்கும்  ROOBHA இடையில் நிகழும் நிலைமைகள் என படம் பலவிதமான கோலங்களாலும் இழைகளாலும் நிறைந்துள்ளது.
இரண்டு தமிழ்க்குடும்பங்களின் பிரதிநிதிகளே படத்தின் (கதையின்) மையப்பாத்திரங்கள். ஆனால் ROOBHA வே பிரதான மையம். ஏனைய பாத்திரங்கள் கனடிய பல்லினச் சூழலின் ஊடாட்டமாக நிகழ்வன.
படத்தில் பெண்களே முதற்கவனத்தை ஈர்க்கின்றனர். கோகுலின் (ROOBHA வின்) தங்கை, அவருடைய அம்மா, அன்ரனியின் மனைவி, ROOBHA வைச் சந்திக்கும் ஏனைய பெண்கள் மற்றும் அவருடைய சக Transgender கள் எல்லோரும் யதார்த்த நிலைகளைப் புரிந்து கொண்டவர்களாக இருக்கின்றனர். அன்பும் புரிந்துணர்வும் இரக்கமும் நேசிப்பும் இவர்களிடமே மேலோங்கித் தொழிற்படுகிறது. கோகுலை Transgender ஆக, ROOBHA வாக அனுசரிப்பதற்கு அவருடைய தாய் புரிந்துணர்வுடனிருக்கிறார். “ROOBHA  வாக மாற முடியாது. அப்படி மாறுவதாக இருந்தால் இந்த வீட்டில் இருக்க முடியாது” என்று தந்தை கூறும்போது “அப்பிடியென்றால், அவன்(?) எங்க போறது?” என்று தாய் கேட்குமிடம் தனியே தாய் என்பதற்கும் அப்பால், பெண்ணின் இயல்பான வெளிப்பாடே.  ஏனென்றால் இந்த மாதிரி (Transgender) நிலைமையில் உள்ளேயே (வீட்டிலேயே) இடமில்லாமல் போகும்போது வெளியே என்ன நடக்கும், எப்படியெல்லாம் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடம் என்பதை பெண் நிலையின் வழியாக அவர் அறிவார் என்பதன் வெளிப்பாடிது.
அப்படித்தான் தங்கையும். கோகுலுக்குப் பிரியமான சட்டையை கொடுப்பதும் நேசமுடன் அணுக்கமாக ஆறுதலாக இருப்பதும். இதே மாதிரியே தன்னுடைய கணவரை காதல் வயப்படுத்தியிருக்கிறார் ROOBHA என்று தெரிந்த பிறகும் – கணவர் அன்பையும் காதலையும் செக்ஸையும் வேறோரிடத்தில் பெறுகிறார் என்ற நிலையிலும் ஒரு  கட்டத்தில் ROOBHA வைப் புரிந்து கொண்டு இடமளிக்கிற – அதை மதிக்கிற அன்ரனியின் மனைவி.
ஆனால், குடும்பத்தில் ஆண்களின் தீர்மானமும் சமூகத்தில் ஆண்மையச் சிந்தனையும் இவற்றுக்கு நேர்மாறாக உள்ளன. இதையே கோகுலின் தந்தையும் அன்ரனியின் நண்பர்களும் மைத்துனரும் காண்பிக்கின்றனர். ஏன் தொடக்க நிலையில் அன்ரனியிடமும் இதுவே மேலோங்கியிருக்கிறது. அதனால்தான் அவர் தன்னுடைய ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ROOBHA வை அடித்து விடுகிறார்.
இலங்கை, இந்தியா போன்ற பின்னிலை எண்ணப் பண்பாட்டுளவியற் சூழலில் மட்டுமல்ல, வெவ்வேறு கலவைகளைக் கொண்ட  (Multicultural social environment) கனேடியச் சூழலிலும் ROOBHA போன்ற Transgender களின் வாழ்க்கை இலகுவானதாக இல்லை. அங்கும் பாலியல் சுரண்டலும் பாலியல் சார்ந்துமே இவர்களின் வாழ்க்கை இருப்பதாகச் சொல்கிறது ROOBHA.  லெனின் M சிவத்தின் அல்லது ROOBHA வின் இத்தகைய வாசிப்புக் குறித்து எதிர்வாசிப்புகள் இருக்கக் கூடும். ஆனாலும் தன் பார்வையில் செறிவையும் அழுத்தத்தையும் அதற்குரிய கலை நேர்த்தியையும் சிவம் கொடுத்திருக்கிறார்.
இந்தப்படம் தமிழ்ச் சூழலில் உண்டாக்கும் விளைவுகளைக் குறித்து ஒரு பார்வையையும் தமிழல்லாத பிற மொழிப் பண்பாட்டுச் சூழலில் இன்னொரு பார்வையையும் பெறும். அப்படி அது கொள்ளும் என்றே நினைக்கிறேன். இரண்டு சூழல்களும் இதை வெவ்வேறு விதமாகவே உணர்ந்து கொள்ளும். தமிழ்ச் சூழலிலும் திருநங்கைகளைக் குறித்த புரிதல்களோடிருப்போரின் பார்வைக்கும் ROOBHA மறுக்கும் தந்தை போன்றோரின் பார்வைக்குமிடையில் வேறுபாடுகளுண்டு. அவர்கள் இதனை வரவேற்பர். இன்று தமிழ்ப்பரப்பில் ஏற்பட்டு வரும் Transgender  குறித்த உரையாடல்களுக்கும் கவனத்துக்கும் இது உதவும், மேலும் வாய்ப்புகளை உருவாக்கும். Transgender  களுக்கு  இது மதிப்பை ஏற்படுத்தும் என்பது போன்ற காரணங்கள் இவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஏனையோர் சிலவேளை இதைக் கசந்த நிலையில் பார்க்கவும் வாய்ப்புண்டு. அவர்களுடைய பார்வையில் “இது பண்பாட்டு மீறல் அல்லது சிதைவு, வணிகக் கவர்ச்சிக்கான மிகைப்படுத்தல் அல்லது Transgender ஐப் பற்றிய மிகை மதிப்பீடு எனத் தோன்றலாம். ஆனாலும் சமூக வளர்ச்சியையும் அதற்கான மீறல்களையும் யாராலும் கட்டுப்படுத்தி வைத்திருக்கவே முடியாது. ROOBHA வும் அப்படித்தான். படத்தில் வீட்டை விட்டு வெளியேறுவதைப்போல அடக்கும் பண்பாட்டை விட்டும் மீறிச் சிறகை விரிப்பாள்.
படத்தின் ஒளிப்பதிவு, அதன் தரத்தை மேலும் உயர்த்துகிறது. மென்னிருளும் மங்கிய ஒளியும் மென்னிலையிலான கலப்பு வண்ணங்களுமாக திரை அழகொளிர் பரப்பாக விரிக்கப்படுகிறது. ROOBHA க்குக் கொடுக்கும் முத்தத்தில் பாதி ஒளிப்பதிவாளர் Arsenij Gusev க்கும். இதற்கிணையாக கலை இயக்குநரின் (Bettina Katya Lange) உணர்வும் பங்களிப்புமுள்ளது. இசையும் எடிற்றிங்கும் கூட அப்படித்தான், ஒன்றில் ஒன்று பொருந்திக் கலந்திணையும்போதே சிறப்பான சினிமாவொன்று உருவாகும் என்றவாறாக. ஆனால், எடிற்றிங்கில் இன்னும் சற்றுக் கவனமெடுத்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அல்லது சில காட்சிகளில் வேறு தன்மைகளை உருவாக்கியிருக்கலாம். படத்தின் தொடக்கமும் முடிவும் வேறு விதமாக அமைந்திருக்கலாமோ என்றும் படுகிறது.
பாத்திரங்களில்  Amrit Sandhu, ஷோபாசக்தி, தேனுகா கந்தராஜா மற்றும் வைரமுத்து சொர்ணலிங்கம் ஆகியோர் கவனத்தில் நிற்கின்றனர். இருந்தாலும் அம்ரித் சந்து கூடுதல் அழுத்தம் பெறுகிறார். எல்லா விதமான ரூபங்களிலும் அவர் தாவிச் செல்லும் அழகு வியப்பூட்டுவது. அவருடைய தோற்றமும் விரியும் ஆற்றலும் சிறப்பு. இணையாகச் சென்று கொண்டிருக்கிறார் ஷோபாசக்தியும்.
இந்தப் படத்தைத் துணிச்சலாகத் தயாரித்த Warren Sinnathambyக்கு பாராட்டுகளும் நன்றியும்.  இந்த மாதிரி சர்ச்சைக்குரிய - மாற்றான - விடயங்களைப் பற்றிப் பேசும் சினிமாவிற்குப் பங்களிக்க எல்லோரும் முன்வர மாட்டார்கள். அதுவும் நம்முடைய தமிழ்ச்சூழலில். Warren Sinnathamby மாற்றுச் சினிமாவையும் அதை முன்னெடுப்போரையும் ஆதரித்து ஊக்கமளிப்பதற்கே Next Productions, ஐ உருவாக்கியிருக்கிறார். அதனுடைய பங்களிப்பின் எல்லைகள் மேலும் விரியும் என எதிர்பார்க்கிறேன்.
காமத்தில் தொடங்கிக் காதலில் முடியும்  வாழ்வு என்று ROOBHA  வைச் சாராம்சப்படுத்திச் சொல்லலாம்.  வழமைகளை மீறிய Transgender லின் அழகும் அம்சமும் அச்சம் தவிர்க்கக் கோருவன.
ROOBHA நம் பிரியங்களிலும் நேசிப்பிலுமான ஒருத்தி.

No comments:

Post a Comment