Tuesday, December 29, 2020

கிராமபோன் மனிதர்! இ.சந்தானகிருஷ்ணன்

 


போனோகிராஃப் (phonograph), அல்லது கிராமபோன் (gramophone) என்பது 1877 இல் ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் தொமஸ் அல்வா எடிசன் கண்டுபிடித்த ஒரு கருவியாகும்.
அது பேப்பர் பண்டல் இல்ல... எல்லாமே கிராமபோன் இசைத்தட்டுகள். தமிழ், ஆங்கிலம், மராத்தி, தெலுங்கு, துளுனு 30 ஆயிரத்துக்கு மேல இருக்கு..!’’ சிரிக்கிறார் இ.சந்தானகிருஷ்ணன். சென்னை திருநின்றவூரில் வசித்து வரும் இவர், செக்ரட்டேரியட்டில் ஜாயிண்ட் செக்ரட்டரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தன் வீட்டு மாடி அறையை முழுவதுமாக தன் சேகரிப்புக்காகவே ஒதுக்கியிருக்கிறார். கிராமபோன் ரெக்கார்ட்ஸ், கேசட்ஸ், பழைய சினிமா பத்திரிகைகள்... என அனைத்தையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார்.‘‘பூர்வீகம் இதே ஊர்தான். மூணு வயசுல அப்பா தவறிட்டார். அம்மாதான் வளர்த்தாங்க. மூணாவது படிக்கிறப்பவே சினிமா பைத்தியமாகிட்டேன்! எங்களூர்ல அப்ப டூரிங் டாக்கீஸ் கிடையாது.


வானொலில சினிமா பாட்டு வாரத்துக்கு ஒருமுறை வரும். இந்தச் சூழல்ல எங்க பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு தெய்வமா தெரிஞ்சார்! தினமும் கிராமபோன்ல சினிமா பாடல்களை ஓடவிடுவார். சத்தம் கேட்டதுமே அவர் வீட்டு திண்ணைல போய் உட்கார்ந்துப்பேன். அம்மாவுக்கு பயம் வர ஆரம்பிச்சது. இப்படியே போனா நான் கெட்டுடுவேன்னு என்னை வடசென்னைல இருந்த எங்க மாமா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அவர் ரொம்பவே கண்டிப்பானவர். எப்பவும் பாடப்புத்தகமும் கையுமா இருக்கணும். இல்லைனா தோலை உரிச்சுடுவார். திருநின்றவூர்ல இருந்தப்பவே சினிமா பாடல்களை விரும்பிக் கேட்பேன். அப்படியிருக்கிறப்ப வடசென்னை வந்த பிறகு சும்மா இருப்பேனா? மாமா வீட்டுக்கு எதிர்லயே டூரிங் டாக்கீஸ் இருந்தது. அங்கதான் தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் வெளியாச்சு. போதாதா? சினிமா மோகமும் வந்தது...’’ என்று சொல்லும் சந்தானகிருஷ்ணன், இதன் பிறகே இந்தி, ஆங்கிலப் பாடல்களையும் கேட்க ஆரம்பித்திருக்கிறார். ‘‘மாமா வீட்டுக்குப் பக்கத்துல ஆங்கிலோ இந்தியர்கள் வசிச்சாங்க. அங்க என்னை மாதிரியே ஒரு பையன் ராக் அண்ட் ரோல் பாடலை கிராமபோன்ல கேட்பான்.

தினமும் அங்க போயிடுவேன். அதே மாதிரி ‘ஆவாரா’, ‘பர்சாத்’ இந்திப் படங்களை எல்லாம் டூரிங் டாக்கீஸ்ல திரையிடுவாங்க. ஒண்ணும் புரியாது. ஆனாலும் பாட்டுக்காகவே பார்ப்பேன். ஸ்கூல் முடிஞ்சதும் நேரா மார்க்கெட் போவேன். அது பழைய மார்க்கெட். ஒரு பெரிய கூடைல மொத்தமா ரெக்கார்ட்ஸை கொண்டு வந்து கடைகள்ல விநியோகம் செய்வாங்க. அதை வேடிக்கை பார்ப்பேன். அலுக்கவே அலுக்காது. இந்த பழைய மார்க்கெட் எரியற வரைக்கும் கிட்டத்தட்ட தினமும் அங்க போயிருக்கேன். புதுப்பிச்ச பிறகும் வேலைல இருந்து ஓய்வு பெறும் வரை மாலைல அங்க போயிடு வேன். கைல ஏதாவது ரெக்கார்ட் வாங்காம வீட்டுக்கு வந்ததே இல்ல! 1972 வரை கிராமபோன் ரெக்கார்ட்ஸ் புழக்கத்துல இருந்தது. அப்புறம் நிறுத்திட்டாங்க. ஆனா, எல்லா மாவட்டங்கள்லயும் புரோக்கர்ஸ் இருந்தாங்க. தூத்துக்குடி மணி, மதுரை பாலு, காரைக்குடி மகேஸ்வரன்னு பெரிய பட்டியலே உண்டு. அவங்க வழியா ரெக்கார்ட்ஸ் வாங்க ஆரம்பிச்சேன். வார இறுதியானா போதும்... ஏதாவது ஒரு மாவட்டத்துக்கு பஸ் ஏறிடுவேன். அங்க புரோக்கர்ஸ் எனக்காக கைல ரெக்கார்ட்ஸோட காத்திருப்பாங்க. தமிழ்ப் பாடல்களை இப்படி வாங்கினேன். இந்திப் பாடல்களை மும்பை, தில்லிக்கு பறந்தும்; தெலுங்குப் பாடல்களுக்கு ஆந்திரா போயும் வாங்குவேன்.

இப்படித்தான் ‘சுபோதயம்’ தெலுங்குப் பட ரெக்கார்ட் வாங்க திருப்பதி, விஜயவாடா, குண்டூர்னு அலைஞ்சேன். கே.வி.மகாதேவன் இசைல அந்தப் படத்துல எல்லா பாடல்களும் சூப்பரா இருக்கும். அதுவும் பி.சுசீலா பாடின ‘ஆசிந்த நீகேணடா...’வை நாளெல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கலாம். எங்க திரிஞ்சும் அந்தப் பட ரெக்கார்ட் கிடைக்கலை. ரொம்ப வெக்ஸ் ஆகிட்டேன். சரியா ஒரு மாசம் கழிச்சு பெங்களூர்ல இருந்து ராஜா என்கிற புரோக்கர் ஒரு பெட்டி நிறைய தெலுங்கு, கன்னட ரெக்கார்ட்ஸை கொண்டு வந்தார். அதை அப்படியே வாங்கி பிரிச்சுப் பார்க்காம வீட்ல வைச்சிருந்தேன்.

ஒரு மாசம் கழிச்சு பெட்டியைத் திறந்தா... முதல் கிராமபோன் ரெக்கார்டே ‘சுபோதயம்’! அந்த நொடில எனக்குள்ள பூத்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல! இப்படி நாம சின்சியரா தேடறது எதிர்பாராத வகைல கிடைக்கும்...’’ என்று சொல்லும் சந்தானகிருஷ்ணனிடம் திரைப்படப் பாடல்கள் தவிர பெருந்தலைவர்களின் பேச்சுக்கள் கொண்ட ரெக்கார்ட்ஸும் இருக்கின்றன. ‘‘மதன்மோகன் மாளவியா, ரவீந்திரநாத் தாகூர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, ஜான் எஃப். கென்னடி... இப்படி பல தலைவர்களோட பதிவு செய்யப்பட்ட ரெக்கார்ட்ஸ் என் சேகரிப்புல இருக்கு.இதுல என்ன சிறப்புன்னா... அண்ணல் அம்பேத்கர் ஆர்கெஸ்ட்ரா அமைச்சுப் பாடின பாடல்கள், மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தியின் ஜாஸ் இசை, எம்.எஸ்.விஸ்வநாதனின் ஆல்பம், இரண்டாம் உலகப் போர் காலத்துல பிரெஞ்சு டெலிகிராஃபிஸ்ட் பதிவு செஞ்ச அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பேச்சு, ஹிரோஷிமால வெடிகுண்டு போடப்பட்டதும் ஏற்பட்ட சத்தம், அடால்ஃப் ஹிட்லர் போரை அறிவிச்சு ஆற்றிய உரை... இப்படி பல பொக்கிஷங்கள் இருக்கு...’’ என்று கண்கள் விரிய விவரித்த சந்தானகிருஷ்ணன், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தன் சேகரிப்பையும் விரிவுபடுத்தியுள்ளார்.

‘‘கேசட்ஸ், விசிஆர், டிவிடினு என் தேடலும் சேகரிப்பும் நிற்கவே இல்ல. மவுனப்பட காலத்துல வெளியான படங்கள்ல சிலதும் என் சேகரிப்புல இருக்கு. அதேமாதிரி சினிமா பத்திரிகைகள். இப்ப பழைய புகைப்படங்களையும் ஃபிலிம் ரீல்ஸையும் டிஜிட்டலைஸ் செய்துட்டு வரேன். என்னை மாதிரியே என் சின்ன பெண்ணுக்கும் இதுல ஆர்வமிருக்கு. அதனால எனக்கு அப்புறம் அவங்க இதைப் பார்த்துப்பாங்க. இப்பவே ஆய்வுக்காக பலரும் என்னைத் தேடி வர்றாங்க. ஒரு டிரஸ்ட் அமைச்சு இதை எல்லாம் வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தற மாதிரி செய்யணும்... பார்க்கலாம்என்கிறார் சந்தானகிருஷ்ணன். கும்குமம் இதழில் இருந்து பெறப்பட்டவை .
http://kungumam.co.in/

No comments:

Post a Comment