Monday, November 2, 2020

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்


"ராஜகுரு சேனாதிபதி .''
நான் பிறந்தது சிலாபம் மருதங்குளத்தில். அப்பா பெயர் முத்தையா, அம்மா பொன்னம்மாள். அப்பா ராஜவம்சத்தை சேர்ந்தவர். தமிழ் நாட்டில் இருந்து வந்தவர். கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் எங்கள் வீட்டில் இருந்தது. ராஜகுரு சேனாதிபதி என்பது எங்கள் குடும்பத்தின் பரம்பரை பெயர்.

ராஜாவுக்கு குருவாகவும், சேணைக்கு அதிபதியாகவும் இருப்பவர்கள் என்பதுதான் அதன் பொருள். மதுரங்குளம் முழுவதும் என் தாத்தாவுக்கு சொந்தமான இடம் தான். ஆனால் தாத்தாவுக்கு போகும் இடமெல்லாம் மனைவிகள் இருந்திருக்கிறார்கள். அதனால் அவர் அங்கெல்லாம் ஒரு வீட்டை கட்டி அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். தாத்தாவின் அந்த வீடுகள் தாத்தாவுக்கு அந்தப்புரமாக இருந்திருக்கிறது. இப்போது அந்த இடங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் காணி தாத்தாவின் பெயரில் தான் இருக்கிறது.



“எங்கள் குடும்பத்தில் நான் ஏழாவது பிள்ளை. நான் பிறந்த வீட்டில் நாயக்கர் காலத்து தூண்கள் மாதிரி பெரிய பெரிய தூண்கள் இருக்கும். ஆனால் எனக்கு அந்த வீட்டில் தொடர்ந்து இருக்கக் கிடைக்கவில்லை. அப்பா அந்த வீட்டை அவரின் அண்ணணுக்கு எழுதி கொடுத்துவிட்டதால், நாங்கள் வேறு வீட்டிற்கு மாறி வந்து விட்டோம். ஆரம்பத்தில் என் பெயரை கனகரட்ணம் என்றுதான் எழுதி வந்தேன். ‘ராஜகுரு சேனாதிபதி என்று எழுதுவதை நான் விரும்பவில்லை.“எனக்கு சின்ன வயசிலேயே வானொலி என்றால் உயிர். அப்போ இப்போ மாதிரி வீட்டுக்கு வீடு வானொலி கிடையாது. எங்கேயோ ஒரு வீட்டில் தான் வானொலியைக் காண முடியும். ஒரு சில ஹோட்டல்களில் வானொலிகளை சத்தமாக போட்டிருப்பார்கள். நான் பாடசாலை செல்லும் நாட்களில் அந்த ஹோட்டல்களுக்கு அருகில் நின்று வானொலி ஒலிபரப்புகளை கேட்பேன். அப்போது என் குரலும் வானொலியில் ஒலிக்காதா என்ற ஆவல் எனக்குள் உருவாகி குதியாட்டம் போடும், நான் தனிமையில் இருக்கும்போது வானொலி அறிவிப்பாளர்கள் பேசுவது போல பேசி பயிற்சி எடுத்துக்கொள்வேன்.

இது இப்படி இருக்க அப்பாவுக்கும் எனக்கும் எப்போதும் கருத்து முரண்பாடு வந்து கொண்டே தான் இருந்தது. அப்பா எனக்கு எந்த உதவியையும் செய்ய முடியாது என்று கூறி 'வீட்டை விட்டு வெளியே போ' என்று விரட்டினார். அப்போது வேறு ஒருவரின் உதவியுடன் வானொலிக்குள் பிரவேசம் செய்ய முயற்சி செய்தேன். வர்த்தமானியில் வெளியான அறிவிப்பாளர்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து விட்டு விண்ணப்பம் போட்டு விட்டு காத்திருந்தேன். பிறகு வரச் சொன்னார்கள்.

அதற்குப் பிறகு நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். தேர்வானேன். முதல் நாள் ஒலிபரப்பிற்காக மைக் முன்னால் அமர்ந்தபோது எனக்கு நடுக்கமாக இருந்தது. எத்தனையோ ஆயிரக்கணக்கானோர் என் குரலைக் கேட்கப் போகிறார்களே என்ற பயமும் பரபரப்பும் தான் அந்த நடுக்கத்திற்குக் காரணம். அப்போது நமது வானொலி தமிழகத்திலும் தெளிவாக ஒலிபரப்பாகி வந்தது. அதனால் அவர்களும் கேட்க கோடிக்கணக்கான மக்களை எமது குரல் சென்றடைந்த காலம் அது. இலங்கை வானொலியில் நிறைய நிகழ்ச்சிகளை செய்திருக்கிறேன். பொதிகை தென்றல், காலைக்கதிர், பாட்டொன்று கேட்போம், இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு நானே பெயரும் சூட்டினேன்.”
பாடல்: திருமலை மேலொருநாள்
பாடகர்கள்: ரி. கிருஷ்ணன், ஜெகதேவி விக்னேஷ்வரன்
இசை: எம். மோகன்ராஜ்
பாடல் வரிகள்: ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்
தயாரிப்பு: இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - தமிழ்ச்சேவை


நீங்கள் வானொலி நட்சத்திரமானப் பின்னர் தங்களின் முதல் ரசிகை? முதல் காதல்?

“நான் வானொலி நட்சத்திரமானப் பிறகு எத்தனையோ பெண்களின் காதல் ரசம் சொட்டும் கடிதங்களைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அந்தக் காதல் கடிதங்களை மட்டும் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆனால் எந்தப் பெண்ணும் என் மனசிலும் பதியவில்லை.

வாழ்க்கையிலும் துணையாகவில்லை. அது ஏனோ தெரியவில்லை. எனக்கு எந்தப் பெண்ணிலும் பிடிப்பு ஏற்படவில்லை. என்னை எத்தனையோ பெண்கள் சுற்றி வந்திருக்கிறார்கள். என் மீது உள்ள காதலை நேரிடையாகவே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் என்னமோ தெரியவில்லை எனக்குதான் காதல் உணர்வே வரவில்லை. ஒரு முறை பெங்களூரிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தப் பெண் என்னைப் எப்படியோ தேடிக் கண்டுபிடித்து அவள் எனது தீவிர ரசிகை என்றும் அவள் என்னை விரும்புவதாகவும் சொல்லி கெஞ்சினாள்.

ஆனால் நான்தான் அவளோடு வந்த குடும்பத்தார்களிடம் கைகொடுத்து கும்பிட்டு அவளை அழைத்துச் செல்லும்படி சொன்னேன். இப்படியொரு மக்கனாக அந்தக் காலத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். அந்தப்பெண்களின் சாபம் தானோ என்னவோ நான் இன்று தனிமையில் கஷ்டப்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது போலும்.பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் இதழில் இவரது ராஜகுரு சேனதிபதி என்ற பெயரின் சிறப்பைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார்கள்
இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த இளையநிலா என்ற தமிழ்த் திரைப்படத்துக்கான பாடல்கள் அனைத்தையும் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் எழுதியிருந்தார்

“ஒருமுறை நேரடியோ சிலோனில் நான் அறிவிப்பாளராக கடமையாற்றி கொண்டிருந்தபோது மறுபக்கத்தில் நந்தசேன என்பவர் ஒலிபரப்பிற்கு உதவியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின் என்னை அழைத்த நந்தசேனை, மச்சான் உனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா? என்றார் நான் இல்லை என்றேன். தண்ணீ, பொண்ணு என்று கேட்க நான், இல்லவே இல்லை என்று மறுத்தேன்.

அப்போது நந்தசேன, நீயெல்லாம் ஏன்டா பூமியில பிறந்தாய்? என்று கேட்டார். நான் விக்கித்து நின்றேன்” என்று சொன்ன ராஜகுரு சேனாதிபதியிடம் அப்பாவிடம் அடிவாங்கி இருக்கிறீர்களா? என்று கேட்டோம்.

“அப்பாவிற்கு என்னை பிடிக்காது. அதனால் எப்போதும் என்னை அடிப்பார். சில நேரங்களில் என்னை அடித்து வீட்டை விட்டு துரத்திவிடுவார். நான் என் வீட்டுத் தோட்டத்திலுள்ள வாய்க்காலில் தென்னம் ஓலையை போட்டுப் படுத்து தூங்கிவிட்டு மறுநாள் காலையில் வருவேன். சில நாட்களில் மரத்தில் ஏறி அதன் உச்சியில் உள்ள கிளையில் அமர்ந்து அப்படியே தூங்கி விடுவேன்.

கீழே விழாமலிருக்க இடுப்பில் ஒரு கயிற்றை கட்டி மரத்தில் கட்டிவிட்டு தான் தூங்குவேன். ஒரு நாள் நானும் எனது நண்பர் பொன்னம்பலமும் மாலையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு சிலாபத்திற்கு சென்று நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பி வந்தோம். வரும்போது வழியில் நான் கீழே விழுந்து காலில் நல்ல அடிபட்டுவிட்டது. காயத்தோடு வீட்டுக்கு வந்தபோது அப்பா என்னை வீட்டிற்கு வெளியே நின்ற மரத்தில் கட்டி வைத்து அடித்தார். இன்றும் அந்த சம்பவம் என் மனதில் அப்படியே இருக்கிறது.”

தனிமை உங்களுக்கு கொடுமையாகத் தெரியவில்லையா?

“இல்லை. அது ஆண்டவன் கொடுத்த வரம். தனிமையை இனிமையானதாகவே கருதுகிறேன். நானே சமைத்து சாப்பிடுகிறேன். எனக்கு இதுவரையும் எந்த நோயும் வந்ததில்லை. கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. நான் வானொலி, தொலைக்காட்சி கேட்பதும் பார்ப்பதும் கிடையாது. உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள திருச்சி வானொலியை மட்டும் தினமும் கேட்கிறேன்.”மறக்க முடியாத நபர்கள்?

நண்பர் நமசிவாயம், பெர்ணான்டோ, நெவில் ஜயவீர உள்ளிட்டோரை மறக்கவே முடியாது.

ம்... அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது?

“எங்கள் வீட்டுக்கு முன்னாடி இருந்த மதுரங்குளம் குளத்தில கரனம் போட்டு குதித்து, நீந்தி விளையாடிய அந்த நாட்கள்... இன்று அந்தக் குளத்தைப் பார்க்கும்போது ரொம்பவும் ஏக்கமாக இருக்கும். என்ன செய் வது இப்போது என்னால் கரணம் போட்டு அந்த குளத்தில் குதிக்கவோ, நீந்தவோ முடியாது. வீட்டு குளியலறையில் தான் குளிக்கிறேன்.

கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி உங்கள் புரிதல் என்ன?

“நாம் கொண்டு வந்ததும் ஒன்றுமில்லை; கொண்டு போவதும் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட சில காலங்கள் இங்கே கொஞ்சம் தங்கியிருந்து விட்டு போகிறோம். அவ்வளவு தான். என்னைப் பொருத்தவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை இனிமையானது என்றுதான் சொல்வேன்” என்று முடித்தார் கனகரட்ணம்.சுவாரசியமான சம்பவங்கள். அவர் தனியாக வாழ்ந்தார் என்பது இப்போது தான் தெரிகிறது. தனிமை கொடுமை! முதுமையில் அதனினும் கொடுமை!!.அடக்கமான, ஆனால் கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரரான ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அரச வம்சத்தைச் சேர்ந்தவர் என்பது எனக்குப் புதிய செய்தி. யார் இப்படிப் பெயர் வைத்திருப்பார்கள் என்று என் சிறிய வயதில் நான் நினைத்ததுண்டு. என் இளமைக்காலத்தில் அபிமான அறிவிப்பாளர்களில் அவரும் ஒருவர். ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் 2014 சூலை 29 இல் தனது 79வது அகவையில் சிலாபம் மருத்துவமனையில் காலமானார். அவர் நினைவுகள் வாழ்க .நன்றி தமிழ் முரசு

No comments:

Post a Comment